கம்யூனிசம் என்பது மூடநம்பிக்கையோ கற்பனையோ அல்ல! அது சமூகத்தின் புறவய இயங்கியல் விதி
தெய்வசுந்தரம் நயினார்
''அழிவுகரமான கம்யூனிஸ சித்தாந்தத்தில் இருந்து நாடு விரைந்து விடுபடவேண்டும்'' !!!
'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' 1848 - இல் வெளிவந்தது. 200-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது! காரல் மார்க்சும் பிரடரிக் எங்கல்சும் இணைந்து தயாரித்த ஒரு அறிக்கை அல்லது பிரகடனம். இது. சமூகவியல் , அரசியல் பொருளாதாரம், வரலாறு, அறிவியல் போன்ற பல துறைகளில் இவர்கள் இருவரும் மிகக் கடுமையாக உழைத்து . . . அந்த ஆய்வுகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட ஒரு அறிக்கை இது. இன்றுவரை 50 கோடி பிரதிகள் வாங்கப்பட்டுள்ளன.
அறிவியல் விதிகள் மனிதனின் கற்பனையில் ' உருவாக்கப்படும்' ஒன்று இல்லை! மாறாக, 'கண்டுபிடிப்புகளே' ஆகும். பிரபஞ்சம்பற்றியோ உயிர் தோற்றம் பற்றியோ எதுவாக இருந்தாலும் . . . அவற்றில் புறவயமாக நிலவுகிற பண்புகள், இயக்கங்கள், அவற்றிற்கான அடிப்படைகள் ஆகியவைபற்றி . . . முறையான ஆய்வுகளின் அடிப்படையில் அறிவியலாளர்கள் முன்வைக்கிறார்கள். நியூட்டனின் புவி ஈர்ப்புவிதிகளும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுகளும் மாக்ஸ் பிளாங்க், ஹைசன்பெர்க், ஸ்க்கோரடிஞ்சர் முன்வைத்த குவாண்டம் கோட்பாடுகளும் டார்வினின் உயிரியலும் அவர்களுடைய 'கற்பனையில்' 'கனவுகளில்' 'நல்ல எண்ணத்தில்' உருவாக்கப்பட்டவை இல்லை! இவர்களின் இந்தக் கோட்பாடுகள் மேலும் செழுமையடையலாம்; வளர்ச்சியடையலாம்; புதிய கூறுகள் இணைக்கப்படலாம். ஆனால் இவர்களின் அறிவியல் விதிகளை யாராலும் அழிக்கமுடியாது!
காரல் மார்க்சும் பிரடரிக் எங்கல்சும் அவர்கள் வழிவந்த லெனின், ஸ்டாலின், மாசேதுங் ஆகியோரும் 'கண்டுபிடித்த சமூக இயக்க விதிகளே' மார்க்சியம்! கம்யூனிசம்! இவர்களின் 'கற்பனையில் உதித்தது இல்லை . . .கனவுகள் இல்லை . . . கம்யூனிசம்! மேலும் தங்கள் 'கண்டுபிடிப்புக்கு ' அடிப்படையான ஆய்வுக் கண்ணோட்டத்தையும், முறைகளையும் தெளிவாக அவர்கள் முன்வைத்துத்தான் இக்கண்டுபிடிப்புகளை முன்வைத்தார்கள்!
மேலும் எந்தவொரு அறிவியல் விதியும் கண்டுபிடிக்கப்படுவதற்குக் குறிப்பிட்ட சூழலும் நீடிக்கவேண்டும்! கிபி 10 ஆம் நூற்றாண்டில் நியூட்டன், ஐன்ஸ்டீன் கோட்பாடுகள் தோன்றியிருக்கமுடியாது. இவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில்தான் அவ்விதிகளைக் கண்டறிவதற்கான தேவையும் சூழலும் அமைந்தன! அதுபோன்றுதான் 'கம்யூனிசம்' கோட்பாடுகள் 19 ஆம் நூற்றாண்டில் . . . மனித சமுதாயத்தின் தேவைகளை ஒட்டி தோன்றின! மார்க்சுக்கும் எங்கல்சுக்கும் சமூக விதிகளைக் கண்டுபிடிப்பதற்கான சமூகச் சூழலும் நீடித்தது!
இயற்பியல், வேதியியல், உயிரியல் விதிகளை ஒருவரால் 'இல்லாமல்' ஆக்கமுடியும் என்றால் . . . கம்யூனிசம் முன்வைக்கிற சமூக விதிகளை 'இல்லாமல் ஆக்கமுடியும்'! கம்யூனிசத் தத்துவம் தோன்றுவதற்கும் ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழல் தேவைப்பட்டது. அந்தச் சூழலில்தான் மார்க்சும் எங்கல்சும் வாழ்ந்தார்கள்! தொன்மைச் சமுதாயம் எந்த அடிப்படையில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு, இன்றைய முதலாளித்துவ சமுதாயமாக நீடிக்கிறது என்பதைப் புறவயமாக இவர்கள் ஆராய்ந்தனர். மேலும் இந்த முதலாளித்துவச் சமுதாயத்தின் அடுத்த கட்டம் என்ன (சோசலிசம்) , அதற்கும் அடுத்த கட்டம் என்ன (கம்யூனிசம்) என்பதைச் புறவயமான சமூக வளர்ச்சி விதிகளின் அடிப்படையில் விளக்கினர்.
எனவே, கம்யூனிசம் என்பது ஒரு ''மூட நம்பிக்கை'' இல்லை! ''கற்பனை'' இல்லை! அது சமூகத்தின் புறவய இயங்கியல் விதிகள்! நியூட்டன், ஐன்ஸ்டீன் முன்வைத்த இயற்கை அறிவியல் விதிகளை ஒருவரால் 'அழிக்கமுடியும்' என்றால், கம்யூனிசம் முன்வைக்கிற சமூக இயங்கியல் விதிகளையும் 'அழிக்கமுடியும்'!
கடந்த 175 ஆண்டுகளாகக் கம்யூனிசத்தைப் 'பொய்' 'வறட்டுவாதம்' 'மக்களுக்கு எதிரானது' 'காலாவதியாகிவிட்டது' என்றெல்லாம் முதலாளித்துவ வர்க்கமும் அவர்களின் 'அறிஞர்களும்' தொடர்ந்து முயன்றும் . . . அவர்களால் இயலவில்லை!
சிலர் கேட்கலாம் . . . 'ரசியாவில் , சீனாவில் இன்று கம்யூனிசம் தோற்றுவிட்டதே' என்று! அறிவியல் விதிகளின் அடிப்படையில் விண்வெளியில் ஏவுகணைகளையும் விண்கலங்களையும் அனுப்புகிறோம்! சில வேளைகளில் சில தொழில்நுட்பக் கோளாறுகளால் சிக்கல்கள் ஏற்பட்டு, பின்னடைவுகள் ஏற்படலாம்! ஆனால் அதை வைத்துக்கொண்டு, அறிவியல் விதிகள் 'பொய்த்துவிட்டன' என்று கூறுவோமா? அதுபோன்றதுதான் ரசியாவிலும் சீனாவிலும் ஏற்பட்டுள்ள தற்காலிகப் பின்னடைவுகள்! வரலாற்றுச் சக்கரங்கள் முன்னோக்கி நகர்வதை யாராலும் தடுத்துநிறுத்தமுடியாது!
உழைக்கும் வர்க்கங்கள், உழைப்பைச் சுரண்டும் வர்க்கங்கள் என்று மனித சமுதாயம் பிளவுபட்டு நீடிக்கிறவரை . . . வர்க்கப்போராட்டங்கள் தவிர்க்கமுடியாதவை! அவை நடந்தே தீரும்! இறுதியில் வர்க்கமற்ற மனித சமுதாயம் தோன்றியே தீரும்! இந்த வளர்ச்சி விதிகளைப்பற்றிய 'கம்யூனிசம்' என்றும் நீடிக்கவே செய்யும்!
150 ஆண்டுகளாக இட்லரும் முசோலினியும் அமெரிக்க ஏகாதிபத்தியம் உட்பட எல்லா ஏகாதிபத்தியங்களும் 'கம்யூனிசத்தை அழிக்க' எடுக்காத முயற்சிகள் ஏதும் உண்டா? கிடையாது! பிரபஞ்சத்தின் விதிகளை , பூமியின் புவி ஈர்ப்பு விதிகளை, உயிரியல் விதிகளை ஒருவரால் 'அழிக்க முடியும்' என்றால் . . . 'இல்லாமல் ஆக்கமுடியும் ' என்றால், 'கம்யூனிசத்தையும்' அழிக்கமுடியும்!
கற்பனைக்கும் கனவுக்கும் எல்லை கிடையாதோ?
தெய்வசுந்தரம் நயினார்
https://www.facebook.com/100004424580477/posts/3552134148277370/?rdid=PmAU8wqROwWDmgZK
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு