பாசிசத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம்?

துரை. சண்முகம்

பாசிசத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம்?

பாசிசத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம்? 

நல்லது! கெட்டது! என்ற பொதுவான தத்துவப் பார்வையினால் அல்ல. 

இது நாள் வரை முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக உழைக்கும் வர்க்கம் போராடி பெற்ற அனைத்து ஜனநாயக உரிமைகளையும், வாய்ப்புகளையும் அது ரத்து செய்து; அப்பட்டமான நிதி மூலதன மற்றும் மக்களை பிளவுபடுத்தும் பிற்போக்கு வெறி கொண்ட ஆதிக்கத்தை செலுத்துகிறது! என்பதனால் குறிப்பாக பாட்டாளி வர்க்க அரசியல் நலன் கொண்டு எதிர்க்கிறோம்.

போராடி போராடி மனித குலத்தின் வெளிச்சப் பகுதிகளை உருவாக்கிய அரசியல் படிமலர்ச்சியின் மீது திடீரென ஒரு இருண்ட காலத்தை ஏற்படுத்துகிறது பாசிசம்.

ஆளும் வர்க்கம் இந்த வேலையை எந்தக் கட்சிகளின் முகம் கொண்டு செய்தாலும் எதிர்க்கிறோம்.

இந்தப் பொருளில் இதை எதிர்க்கும் பாசிச எதிர்ப்பு திட்ட வகைப்பட்ட உடன்பாட்டுக்கு வரும் எந்த முதலாளித்துவ கட்சி பிரிவுகளையும் கூட இணைத்துக் கொள்ளலாம்.

இங்கே அப்படி ஒரு திட்ட வகைப்பட்ட முறையில் இந்தியா கூட்டணி கட்சிகளோ தமிழகத்தில் திமுகவோ இணைக்கப்பட்டு இருக்கிறதா? 

வெறுமனே பாஜகவை அகற்றுவது! எனும் அடிப்படையில் தேர்தல் முன்னணியை அமைத்துக் கொண்டு அதை பாசிச எதிர்ப்பு முன்னணியாக திரிக்கின்ற வேலையைத்தான் பார்க்கின்றோம். 

ஏனென்றால் மேற்சொன்ன பாசிசத்தின் ஆதிக்கத்தை,

பல்வேறு வழிமுறைகளில் தமிழகத்தில் அமல்படுத்தும் கட்சியாகத்தான் திமுக அரசு இருக்கிறது. ஆகையால் அதை விமர்சிப்பது தேவையாக இருக்கிறது. 

100% பாஜகவோடு பொருத்தம் பார்த்து இது அந்த அளவுக்கு இல்லை என்று நிறைவடைய ஏதுமில்லை. படிப்படியாக இந்த அரசின் வளர்ச்சி போக்கு எதை நோக்கி செல்கிறது?

பொருளாதார விசயங்களில்:

பன்னாட்டு நிதி மூலதன ஆதிக்கத்திற்கு ஏற்ற வகையில் உள்நாட்டு தொழிலாளர்களின் சங்க உரிமைகள் உட்பட ஒடுக்குவது என்பதை மேற்கொள்கிறது.

அரசியல் அம்சத்தில்: தொழிலாளர்களுக்கும் கூட்டம் கூடும் உரிமை போராடும் உரிமை தங்கள் அரசியலுக்கான பிரச்சார உரிமை போன்றவற்றை அரசு நிர்வாக அமைப்புகளின் மூலமாகவே ஒடுக்குவதில் முன்னேறி செயல்படுகிறது.

இதெல்லாம் திமுக ஒரு தாராளமாக முதலாளித்துவ கட்சிங்க! ஆனா பார்ப்பன எதிர்ப்பு பாஜக எதிர்ப்பு என்பதிலும் அதன் போக்கு என்ன?

பண்பாட்டு அடிப்படையில்: 

இந்துத்துவ மேலாதிக்க பண்பாட்டிற்கு மாற்றாக இல்லாமல், தன் பங்குக்கு முத்தமிழ் முருகன் மாநாடு, 

இந்துத்துவ உளவியலை வானளாவிய உயர்த்தும் விதமாக வான் நோக்கிய பெரும் சிலைகளை எழுப்புவது,

கோயில் கும்பாபிஷேகம் என்பவற்றில் தாய் மொழியாம் தமிழை ஊறுகாயாக ஆக்கி பார்ப்பன வேத வேள்விகளுக்கு ஒளி பாய்ச்சுகிறது.

 அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது எனும் போராட்டத்தை சட்டப் போராட்டமாக தள்ளிவிட்டு நிற்பது என மக்களை இந்துத்துவ பாசிச பண்பாட்டில் இருந்து மீட்பதற்கான வாய்ப்புகளை விட்டுவிட்டு  பிற்போக்கு நிதி மூலதன சேவைக்கான விதி வழி கோட்பாட்டின் அரையர் சேவையாக அரசு சேவை செய்கிறது. 

இப்படி இந்துத்துவ கலாச்சாரங்களின் கூட்டாளியாக வேலை செய்கிறது. மத ஜனநாயக உரிமை எனும் விசயத்தில் கூட திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்கா வழிபாட்டு உரிமைகளை இந்துத்துவ வெறியர்களின் கட்டளைக்கு பயந்து காலி செய்வதில் சேர்ந்து கொண்டு வேலை செய்கிறது. தனக்கு கிடைத்த ஆட்சி அதிகாரத்தை பாசிச பாஜகவின் கொள்கைக்கு எதிராக பயன்படுத்துவதற்கு பதிலாக திருப்பரங்குன்றத்தில் இந்துத்துவ வெறியை அம்பலப்படுத்தும் ஜனநாயக சக்திகளை வாய் திறக்க விடாமல் ஒடுக்குகிறது.

இப்படியாக பல விசயங்கள் பாசிசத்தின் பல்வேறு கூறுகளை படிப்படியாக அமல்படுத்தும் சக்தியாக இருப்பதால், திமுக என்பது பாசிச எதிர்ப்பின் செயல் திட்டங்களுக்கு பொருத்தமற்ற ஆளும் வர்க்கப் பிரிவாக இருக்கிறது என்பதுதான் சோதித்தறியப்பட்ட உண்மை. 

ஆலையில்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை! என்பது போல, கம்யூனிஸ்டுகள் வலுவாக இல்லை என்ற ஒரு காரணத்திற்காக, திமுகவை பாசிச எதிர்ப்பு சக்தி என வரையறுப்பது நவீன குருச்சேவியவாதத்தின் தொடர்ச்சியாகும். பாசிசத்தில் பங்கு கேட்கும் பங்காளி கட்சி என்பதே சரியாகும்.

அரசியல் ரீதியாக இப்படிப்பட்ட நிலைமைகளை கேள்வி எழுப்பினால், அப்படியானால் பாசிசம் வந்தால் பரவாயில்லையா? பாஜக வந்தால் பரவாயில்லையா?

என்று கேட்பவர்களை கிடக்கிப்பிடி போடுகிறார்கள்.

அப்படியானால் இப்போது பாசிசம் இல்லையா? பாஜகவும் ஆட்சியில் இல்லையா? 

எதுதான் உண்மை?

ஒரு பக்கம் பாசிச ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். ஒரு பக்கம் பாசிசம் வந்தால் பரவாயில்லையா? என்கிறார்கள். அதாவது தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லை என்ற பொருளில் பேசுவதாக எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் பாசிச ஆட்சிக்கு மாற்றாக மாநில மக்களுக்கு நீங்கள் வழங்கியிருக்கும் அதிகப்படியான ஜனநாயக உரிமைகள் என்ன? தூய்மை பணியாளர் முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் வரை 

போராடும் உரிமையே மறுப்பது தானே நடக்கிறது. மாநில உரிமை  பேசிக்கொண்டு மாநிலத்துக்கு உள்ளே தொழிலாளர்களுக்கு உரிமை தருவதற்கு மட்டும் முரண்படுவது அல்லவா நடக்கிறது.

 இவர்களுக்குள்ளேயே அரசியல் தெளிவுடன் கூடிய ஐக்கிய முன்னணி இல்லாமல், இதையெல்லாம் திட்டமிட்ட வகையில் அரசியல் ரீதியான ஐக்கியம் வேண்டும் என்று சொல்பவர்களை பார்த்து, 

சுருக்கமாக பாஜகவின் ஆதரவாளர்கள் சங்கிகள் என்று சொல்வதன் மூலம் நம்மை அடக்குவதாக நினைத்து ஒரு மடக்கு தண்ணீர் குடித்து ஆத்ம சாந்தி அடைகிறார்கள்.

பாஜக ஒரு பாசிச கட்சி! 

அதை எதிர்க்க வேண்டும் என்பது சரி. ஆனால் அதை எதிர்க்கும் கட்சிகள் பாசிசத்தோடு சமரசம் ஆகாத கட்சிகளாக இருக்க வேண்டும் என்று வரையறுக்க சொல்வது என்ன தவறு? 

இதுவரை திமுக எனும் கட்சி மற்றும் அதன் அரசியல் செயல்பாடுகள் அப்படி இல்லை என்பதுதான் விமர்சனம். இந்த நோக்கில்அதை விமர்சிக்க வேண்டியுள்ளது. இந்தச் சூழலில் இதை செய்வதுதான் இந்த அரசியல அழுத்தத்தை கொடுப்பதுதான் பரிசீலனைக்கும் முடிவு செய்வதற்கும் கூட நேர்மையான வழிமுறை. 

இந்தச் சூழலிலும் இத்தகைய போராட்டமும் ஐக்கியமும் என்பதற்கான அரசியல்  அணுகுமுறையை கைவிட்டு, இந்தச் சூழலில் இப்படி எல்லாம் விமர்சிப்பது பாசிசம் புகுந்துவிட வழிவகுக்கும் என்று சொல்வது தான்! பாசிசத்திற்கு வழியை திறந்து விடும் வேலை. 

இன்னும் சொல்லப்போனால் பாசிசப் போக்கில் சாய்ந்து கொண்டிருக்கும் ஒரு கட்சியை முதலில் திட்டமிட்ட வகையில் ஒரு செயல் திட்டத்தின் கீழ் ஐக்கிய முன்னணியாக உறுதிப்படுத்திக் கொள்ளாமல், நாங்களும் சில போக்குகளை விமர்சிக்கிறோம்! என எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் பின்தொடர்ந்து கொண்டே ஆதரவாக சப்பை கட்டி கொண்டு போனால், இறுதியில் அது தடியை கொடுத்து அடியை வாங்கும் வேலையாக முடிந்துவிடும்! இறுதியில் மக்களிடம் இதுநாள் வரை போராட்டங்களின் மூலம் இடதுசாரி அமைப்புகள் பெற்ற நன்மதிப்பையும் இழப்பது மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும். 

இந்த ஐந்து ஆண்டு காலகட்ட திமுக ஆட்சியில் பாசிச எதிர்ப்பு அரசியல் பயனை என்ன வென்றெடுத்து கொடுத்திருக் கிறது? வெற்று அறிவிப்பு வாய்ச்சவடால்களைத் தவிர. 

எந்த அளவுக்கு தொழிலாளர் வர்க்கம் தனது ஜனநாயக உரிமைகளை பயன்படுத்திக் கொள்ளவும் அரசியலை விரிவுபடுத்திக் கொள்ளவும்

வாய்ப்பை பெற்றிருக்கிறது? 

அதற்கு இந்த அரசு அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது என்பதிலிருந்துதான் இதை மதிப்பிட முடியும்? 

உதாரணத்திற்கு இந்துத்துவ அமைப்பு இங்கே சந்துக்கு சந்து பிள்ளையார் சிலையும் திருப்பதி குடையும் வைத்துக் கொண்டு ஊரை அடைத்து ஆர்ப்பாட்டம் செய்ய முடியும்.

இடதுசாரி முற்போக்கு இயக்கங்கள் ஒரு சிறிய தெருமுனைப் போராட்டத்திற்கு கூட ஏகப்பட்ட நெருக்கடிகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. 

அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் என்றாலும் எவ்வளவு சீக்கிரம் மூட்டை கட்ட வேண்டுமோ கட்டுங்கள் என்கிறது.

சரியாகச் சொன்னால் எதிரியின் உடனான திமுகவின் முரண்பாடு வெறும் தேர்தல் நலன் முரண்பாடாக இருக்கிறது. 

உழைக்கும் வர்க்கத்தில் உடனான திமுகவின் முரண்பாடு கொள்கை முரண்பாடாக இருக்கிறது. 

பாஜகவின் பல நிதி ஆதிக்க கொள்கைகளை அமுல்படுத்தும் சக்தியாக இருப்பதோடு, தமிழகமே வெறுத்து ஒதுக்கும் பாசிச பாஜக அதிகாரத் தரப்பு பிரிவுகளுடன் நட்பாக இருப்பது, 

தனது தந்தையின் உருவ நாணய வெளியீட்டுக்காக அத்தகைய கொலைகார கைகளை குலுக்குவது என்பதெல்லாம் மக்கள் பார்த்து வெறுக்கிறார்கள். இவர்கள் எப்படி வேணாலும் நடந்து கொள்வார்கள்! என மக்களே சரியாக மதிப்பிடுகிறார்கள். 

அதனால்தான் வெறுத்து போய் புதிய அரசியல் சக்திகளை ஏராளமான இளைஞர்களும் மக்களும் தேடுகிறார்கள்.

இந்த இடத்தில் இடதுசாரிகள் தங்களை பொருத்திக் கொள்ள தலைமை தாங்க மக்களுடன் ஐக்கிய முன்னணி பற்றி அதிகம் கவலைப்படுவோம் தோழர்களே!

அவசரம் இல்லை தேர்தலில் பாசிசத்தை முறியடித்து விட்டு வந்து நிதானமாக பரிசீலியுங்கள். 

தேர்தலையே முறைகேடாக தனக்கு பயன்படுத்திக் கொள்ளும் பாஜக பின்னிருக்கும் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்க பின்னணியில், இந்தத் தேர்தலுக்கு வெளியே செய்யப்படும் வேலைகளின் அளவுதான் கூடி நிற்கிறது.

எனது கருத்துக்களை எதிரியின் கருத்தாக எதிர்பக்கம் தள்ளுவதை விட, உரியதை பரிசீலித்து மேலதிகமாக இடதுசாரிசக்திகள் முன்னேற வேண்டும் என்பதே எனது அரசியல் வெளிப்பாடு.

       - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/835516069155191/?rdid=N13GbU6Cu8NoKahf

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு