நல்ல வேளை இந்நேரம் நந்தன் இல்லை!

துரை. சண்முகம்

நல்ல வேளை   இந்நேரம் நந்தன் இல்லை!
ஓவியம்: முகிலன்

சூடு இருக்கா
சொரணை இருக்கா?
மானம் இருக்கா?”

தங்களுக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும்
பகுத்தறிவு
பண்ணையார்கள்
இளையராஜாவைப்
பார்த்து
இப்படி
கேட்கிறார்கள்!

இதுவெல்லாம் இல்லாத
அல்லது
எதுவுமே நடக்காத
ஒரு
ஜந்துவாகவே 
இளையராஜா 
இருந்து விட்டுப் போகட்டும்!

இப்படி ஒரு இழிவு நடக்கிறதே!
ஏன் நடக்கிறது?

கவிப்பாசிசத்தை ஒழிக்க
கழக ஆட்சியே மாற்று!
என்று ஒரு அரசு நடக்கிறதே..

அதைப் பற்றிய
உங்கள்
சூட்டையும் சுரணையையும்
கொஞ்சம் காட்டுங்களேன்!

வடக்கே இருந்து
பார்ப்பனர்களை அழைத்து வந்து
கோயில் கொட்டம் அடிக்க
தடக்கை உயர்த்தியவர்கள் 
தமிழ் மன்னர்கள் 
என்று சொல்கிறீர்களே!

தெற்கே திருவில்லிப்புத்தூரில்
குறுக்கே
நூல் போட்ட கும்பல்
கொட்டமடிப்பதை
அரசு அடக்கியதா?

இல்லையே!
முழங்கை நீளத்திற்கு 
இது பழக்க வழக்கம்
எனும் 
பார்ப்பன அறிக்கையை அல்லவா
எடுத்து விட்டது.

பார்ப்பனர்க்கல்லது
பணிவு அறிந்திடாதது
பழைய மன்னர்கள் மட்டுமா?

இந்த ஆட்சியை சொல்ல மட்டும்
எங்கேசூடுவந்து முட்டுமா!

இளையராஜா 
போனதால்தானே பிரச்சனை
இல்லையேல் இந்த அரசுக்கும் அதுதான் இலட்சினை!

இவ்வளவு இழிவு
நீடிக்கும் போதும்
இது இந்துக்களுக்கு 
எதிரான ஆட்சி அல்ல,
ராமன் வழி வந்த ஆட்சி!
என்று திருத் தொண்டர்கள்
ஒளிவட்டம் கட்டிய போது
உங்களுக்கு வராத சுரணை
இளையராஜா 
இழிவைத் தாங்கிக் கொண்டு பரிவட்டம் கட்டும்போது
பாய்ந்து வருகிறதே!

இழிவென்றால் 
இரண்டும்தானே!

அதுவும் 
அதிகாரம் படைத்த அரசே 
சமரசம் உலாவும் போது,
இளையராஜா எம்மாத்திரம்?

பாஜக, பார்ப்பன 
பக்தி மத உணர்வுடன்
இழையோடும் இளையராசா
வெளிப்படையாகவே 
தன்னை விருந்துக்கு கொடுத்தவர்.

கவிப்பாசிச ஒழிப்பு
சனாதன எதிர்ப்பு
என சண்டமாருதம் பேசிக்கொண்டே,
அண்டி வாழ்வதும்
எதிர்த்துப் போராடினால் 
அடக்கி ஒடுக்குவதும்
மக்களது போராட்ட உணர்வை
அரித்து தின்னும்
அரசுதான்
முதன்மையான
அபாயகரமானது.

சந்தேகம் எனில் 
சனாதனத்தை எதிர்த்துப்பார்!

அங்கே 
அரசைக் காண்பாய்!

எந்த அரசாக இருந்தாலும்
இதுதான் நிலைமை.
கொட்டமடிக்கும்
பார்ப்பன
மற்றும்
பார்ப்பனர் அல்லாத
கோயில் தீண்டாமையை;

தனி உரிமை
தனி உடைமையின் பெயரிலான
ஆதிக்கத்தை ஒழிக்கும்
அரசியலை அறிவதுதான்
முதன்மைக் கடமை!

அதை விட்டுவிட்டு
இளையராஜாவை
முதன்மை முரண்பாடாக்குவது
அரசியல் கயமை.

இது 
இளையராஜா மூலமாக வெளிப்பட்ட
நம் சமூகத்தின் இழிவு!

அடிமைத்தனத்தை 
நமது அம்மா அப்பாவே 
ஏற்றுக் கொண்டாலும்
மீறுவதுதான் 
அரசியல் துணிவு.

இடையில் 
இளையராஜா அல்ல 
நமது அளவு.

தி.மு..வின் தனிநபர்கள்
அர்த்த மண்டபத்தை அங்கீகரிக்காவிட்டாலும்,
அரசியல் சட்டப்படியே
மத உரிமையில்
கை வைக்க முடியாததுதான்
அரசின் உறவு.

அதிகாரத்திடம் போய் 
கேள்வி கேட்காமல்
அடிபணிந்தவரை திட்டுவதில் என்ன தீர்வு?

கோயில் தீண்டாமை
கருவறை சாதி ஆதிக்கம்
கடவுள் வழிபாட்டில் 
ஜனநாயக மறுப்பு

இதை 
தாங்கிப் பிடிக்கும் அரசமைப்பு
எனும்
முதன்மை முரண்பாடுகளை
அரசியல் ஆக்குவதுதான்
தீர்வை நோக்கிய தேவை.

இரண்டாம் பட்ச
இளையராஜாவை
தனிநபர் முரண்பாடாக்கி
திட்டித் தீர்த்துக் கொள்வது
தற்சுகம் காண
தற்சூடிறக்கும்
தற்குறித்தனமே.

கோயிலுக்குள் போகாமல்
முரண்களை சந்திக்காமல்
சுயமரியாதைக்கு பங்கம் வராமல்
சுகம் காண்பது எளிது.

மத்த சாமியாரைப் போல
சுத்த சாமியாராக
சோற்றுப் பிண்டமாக
வாழ விரும்பாத
சிதம்பரம் ஆறுமுகசாமி போல
பொன்னம்பல மேடையில் 
தேவாரத் தமிழ் பாட
கலகம் செய்தவரும் உண்டு,

வள்ளலாரைப் போல
தீட்சிதக் குடுமிகளின்
வாசற்படி மிதியேன்
என்று 
வடலூர் கண்டதும் உண்டு.

நந்தனைப் போல 
நயந்து பணிந்து
இறைஞ்சி குனிந்து
நாளை போகாமல் இருப்பேனோ!

என்று 
அவமதித்த வாசலை
அடிக்கடி மிதித்து
தொல்லை கொடுத்த
அவல வடிவிலான
அரசியல் சிதைக்கப்பட்ட
வடிவிலான கலகமும் உண்டு!

இளையராஜாவுக்காக 
பேசாமல் போகலாம்,

இந்த இழி நிலைக்காக 
பேச வேண்டும் நாம்!

பார்ப்பன சாதி கொழுப்பையும்
அதைப் 
பாதுகாக்கும் அரசின் இருப்பையும்
அரசியல் ஆக்குவதுதான்
மெய்யான பகுத்தறிவு.

அசலாகத் தன்னை
பக்திக்கு 
அடிமைப்படுத்திக் கொள்ளும்
இளையராஜாவா
இலக்கு?

கருவறை காலித்தனத்தை
காத்துக் கொண்டு நிற்கும்
போலி ஜனநாயகத்தை
அம்பலப்படுத்தி
அடுத்த கட்டத்துக்கு 
முன்னேறுவதுதான்
முற்போக்கின் திசைவழி.

கோயில் நுழைவு போராட்டம்
நடத்தியவர்களைப்பார்த்து
நாத்திகர்களுக்கு 
கோயிலில் என்ன வேலை?”
என்று மடக்குவாதத்தை,
கோயிலில் 
நுழைந்து காட்டியதன் மூலம்;
அரசு, சட்டம், போலீசு,நீதிமன்றம்
அனைத்தையும் அம்பலப்படுத்தியும் காட்டியதல்லவா
பெரியாரின் வேலை!

இளையராஜாவே 
ஒப்புக் கொண்டார்
என்று 
இது அவரோடு முடிகிற 
பிரச்சனை அல்ல,
முழு சமுதாயத்தோடும் சம்பந்தப்பட்டது.

இளையராஜாவும், அரசும் எதிர்பக்கம் நின்றாலும்
ஆகம சாத்திர கோயில் தீண்டாமை
பார்ப்பன- பார்ப்பனர் அல்லாத
சாதி ஆதிக்கத்தை
சமரசம் அற்று எதிர்க்கும்
அரசியலில்
மக்களை எழுந்து நிற்க
சூழலைப் பயன்படுத்தும் 
தருணம் இது.

ஆதிக்க பிற்போக்கையும்
அதை
தாங்கிப் பிடிக்கும் அரசையும்
அம்பலப்படுத்தி
முன்னோக்கி அரசியல் செய்யும்
ஒவ்வொரு தருணத்தையும்
கைப்பற்ற வேண்டிய 
காலம் இது.

இஸ்லாமியர்
வழிபாட்டு கோயில்களை இடித்து
எதிரிகள் என்று அவர்களை
காவிகள் சித்தரிக்கும் நேரத்தில்,
இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்ல

இந்துவே!
உன்னுடைய 
வழிபாட்டு சமத்துவ உரிமைக்கும்
இந்தக் காவியம் 
போலி ஜனநாயக ஆவியும்
எதிரிகள் என
அடையாளம் காட்ட வேண்டிய அரசியல் இது!

அந்த வகையில்
இளையராஜாவால்
வேறு வகையில்
அடிமைத்தளை அறுக்க
அரசியல் பேசக்கிடைத்த
பேறு இது.

களத்தில் இறங்குபவனுக்கே கால்கள் இடறுகிறது
சில கால்கள் அழுந்துகிறது
சில கால்கள் எத்தி எறிகிறது

எதார்த்தத்தில் 
எதிரிகளை எரிச்சல் ஊட்டிய
சில வடிவிலான கலகங்கள்
வரலாற்றில் எரிகிறது..

அந்த நந்தனைப் போல!

நல்ல வேளை 
இந்நேரம் நந்தன் இல்லை!

இல்லையேல் 
ஏன்டா கோயிலுக்கு போயி
எங்கள சிக்கலில் இழுத்து விடுற!”
என்று இவர்களே எரித்திருப்பார்கள்!

சிக்கல் தீரும் வரை
வெவ்வேறு வடிவங்களில்
இரு வேறு உலகத்தை 
உணரச் செய்ய
வந்து கொண்டுதான் 
இருப்பார்கள்..

நந்தனைப் போலவும்
இளையராஜாவைப் போலவும்
எண்ணற்றதொல்லைகள்’!

  - துரை. சண்முகம்