சென்னை தூய்மைப் பணியாளர் போராட்டமும் திமுக அரசின் பொய்யுரைகளும்
இரா. முருகவேள்

சென்னை தூய்மைப் பணியாளர் போராட்டத்துக்கு அடிப்படையான காரணம் தூய்மைப் பணியை தனியார்மயம் ஆக்குவது. இதன் காரணமாகவே தற்காலிக தூய்மை பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு தனியார் நிறுவனத்துடன் குறைந்த ஊதியத்தில் இணைந்து கொள்ள அரசு வற்புறுத்துகிறது.
திமுக அரசு மதவாதத்தை எதிர்த்தாலும் உலகமயத்தை முழுமையாக ஆதரிக்கும் அரசு. எனவே தூய்மைப் பணி, குடிநீர், போக்குவரத்து போன்றவற்றை தனியாரிடம் ஒப்படைப்பது என்பதை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்ட அரசு. இந்த விஷயத்தில் மத்திய அரசு பொருளாதார கொள்கையுடன் முழுமையாக ஒத்துழைக்கிறது.
இன்னொரு விஷயம் தனியார் மயத்தை பொருளாதார கொள்கையாக கொண்ட அரசுகள் பின் நவீனத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் செயல் படுகின்றன. அரசும் அதன் உறுப்புகளும் ஊடகங்களும், இது அந்த 2000 பேரின் போராட்டம் மட்டுமே என்று தனிமைப் படுத்துகின்றன. compartmentalise செய்வது, அதாவது தனித் தனியாக உடைப்பது, போராட்டங்களை குறிப்பிட்ட பகுதிக்குள் முடக்குவது, தனிமைப் படுத்தி சிதைப்பது என்பது பொருளாதார சீர்திருத்தத்திற்கு பிறகு வந்த பின் நவீனத்துவ அரசுகள் கடைப்பிடிக்கும் தந்திரம்.
தெரிந்தோ தெரியாமலோ தொழிற்சங்கங்களும் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே இயங்க முடியாமல் இருக்கின்றன. போராட்டங்கள் அந்த குறிப்பிட்ட பிரிவினரின் போராட்டமாக மட்டும் சுருங்குவதால் பொதுமக்கள் பங்கேற்பு, ஆதரவு இல்லாமல் போகிறது. இது அரசுக்கு வசதியாக அமைகிறது. பல்வேறு அரசு ஊழியர் போராட்டங்கள் தோல்வி அடைவதையும், பெரும்பாலான சுற்றுச் சூழல் போராட்டங்கள் வெற்றி அடைவதையும் இந்தப் பின்னணியில் ஆராய வேண்டி உள்ளது.
https://www.facebook.com/story.php?story_fbid=10214810686936806&id=1714910257&rdid=kzmdqWAx8jZWkQdi
=========================================================
தூய்மை பணியாளர் போராட்டம் குறித்து திமுகவினர் பொய் விவரங்களை பரப்பி வருகின்றனர். போராடும் தூய்மைப் பணியாளர்கள் ஏற்கெனவே தனியார் நிறுவனத்தில் தான் பணிபுரிந்து வருன்றனர் என்கின்றனர்.
இது முற்றிலும் தவறு, அல்லது தெரிந்தே சொல்லும் பொய் ஆகும்.
Chennai Chokes On Garbage As 3K Workers Strike Over Privatisation என்ற Times of India கட்டுரையில்
GCC has handed over Royapuram and Thiru Vi Ka Nagar zones to Chennai Enviro at a project cost of 2,300 crore. என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
இன்னொரு பேட்டியில்
மேயர் பிரியா
‘mistreated', mayor R Priya said 10 zones had been privatized under the previous AIADMK govt, and the GCC was just completing the task now. என்று கூறியுள்ளார்.
உண்மை என்னவெனில் ராயபுரம், திருவிக நகர் ஜோன்களில் இதுவரை தூய்மை தொழிலாளர்கள் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் National Urban Livelihoods Mission என்ற புராஜெக்ட் இன் கீழ் பணிபுரிந்து வருகின்றனர். சிலர் எட்டு ஆண்டுகளும் அதற்கு மேலும் பணிபுரிந்து வருகின்றனர். இது ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆனால் தனியார் நிறுவனம் நடத்தும் பணி அல்ல. மாநகராட்சி நடத்தும் பணி ஆகும். மாநகராட்சி இவர்களை நிரந்தர தொழிலாளர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஆதரித்து கடிதம் எழுதியுள்ளார்.
இப்போது சுமார் 2300 கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் பகுதிகளின் துய்மை பணிகள் Ramky குழுமத்தின் அங்கமான CESPL என்ற கம்பெனிக்கு அரசால் வழங்கப் பட்டுள்ளது.
மாநகராட்சியின் பத்து ஜோன்கள் அதிமுக ஆட்சியில் தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டன. நாங்கள் இரண்டை மட்டும் இப்போது தனியாரிடம் கொடுக்கிறோம் என்கிறார் மேயர் பிரியா. இது மற்றவர்கள் யோக்கியமா என்று சங்கிகள் கேட்பதை போல உள்ளது.
https://www.facebook.com/story.php?story_fbid=10214815985829275&id=1714910257&rdid=n3MATKN8KLo34I0b
==========================================================
தூய்மைப் பணியாளர் போராட்டம் மெல்ல மெல்ல மக்கள் ஆதரவைப் பெறத் தொடங்கியதும் அரசு, நீதிமன்ற உதவியுடன் அதைத் தற்காலிகமாக கலைத்து விட்டது. போராட்டங்கள் வெல்லலாம், தோற்கலாம் ஆனால் விலைமதிப்பற்ற அனுபவங்களை கொடுத்துச் செல்கின்றன.
முன்பெல்லாம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கொஞ்சநாள் ஒப்பந்தப் பணி செய்த பிறகு நிரந்தர ஊழியர்களாக மாற்றப் படுவார்கள்.
உலகமய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிறகு NULM போன்ற பல்வேறு திட்டங்களின் படி இவர்கள் ஒப்பந்தப் பணியாளர்களாக சேர்க்க படுகின்றனர். நிரந்தர பணியாளர்கள் ஆக்கப் படுவதே இல்லை. இந்த நடைமுறை குழப்பமானதாக உள்ளது.
இப்போது இந்தப் பணி
தனியார் நிறுவனங்களுக்கு பகுதி பகுதியாக ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
உலகமய பொருளாதார சீர்திருத்தங்களின் அடிப்படை பண்பு அவற்றின் ரகசிய தன்மை. இந்தத் தனியார்மயம், கோயமுத்தூர் சூயஸ், அதற்கு முன்பு செம்பரம்பாக்கம், அதற்கும் முன்பு திருப்பூர் குடிநீர் சுத்திகரிப்பு, விநியோகத்தில் தனியாரை அனுமதிக்கும் உத்தரவுகள் எதுவுமே சட்டசபை, மாநகர சபை, நகர சபை போன்றவற்றில் முழுமையாக விவாதிக்க படுவதில்லை. அதுவும் கோவையில் சூயஸ் வங்த போது மாநகர சபையே இல்லை.
எனவே பல்வேறு துறைகள், மக்கள் பங்கெடுக்கும் ஜனநாயக அமைப்புகளின் பார்வைக்கு வெளியே கொண்டு செல்லப் படுகின்றன. அரசாணைகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமே இவை ரகசியமாக நகர்த்தப் பட்டு தனியார் மயப் படுத்தப் படுகின்றன.
தனித் தனியாக உடைப்பது என்பது இதுதான். திமுக, அதிமுக, காங்கிரஸ், பிஜேபி அனைத்தும் ஏற்றுக் கொண்ட பொருளாதார கொள்கை இது.
https://www.facebook.com/story.php?story_fbid=10214836211974916&id=1714910257&rdid=2lQILcPvhrgNwYiP
============================================
தூய்மை பணியை தனியாருக்கு வழங்குவது, குடிநீர் சுத்திகரிப்பு, குடிநீர் விநியோகம் போன்றவற்றை தனியாரிடம் விடுவது, நகர்ப்புற குடிசை பகுதிகளை அப்புறப் படுத்துவது ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை. சொல்லப் போனால் ஒரே பொருளின் வெவ்வேறு பக்கங்கள்.
நமது நகரங்கள் நெரிசல் மிகுந்தவை ஆக உள்ளன, பெரு வணிகத்திற்கு ஏற்றவையாக இல்லை, இதை மாற்ற வேண்டும் என்பது இந்திய முதலாளித்துவ சிந்தனையாளர்கள், கார்ப்பரேட் அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கை.
அரசானது, கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தூய்மைப் பணி, குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை வழங்கும் பணியை செய்யக் கூடாது. இவற்றைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உலகவங்கி போன்றவை வலியுறுத்தும் பொருளாதார சீர்திருத்தங்களின் அடிப்படை.
இந்த இரண்டுக்கும் ஏற்ற விதத்திலேயே ஜவஹர் நகர் புனரமைப்பு, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் கீழ் ஒரு நகருக்கு பணம் வேண்டும் என்றால் இந்த தனியார் மய சீர்திருத்தங்களை செய்தே ஆக வேண்டும்.
இந்தப் பணியில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களை பல பகுதிகளாக பிரித்து கொண்டு சங்கம், நிரந்தர பணி ஆகியவற்றுக்கு இடம் கொடுக்காதவையாக மாறி விட்டன.
அரசு இந்தத் தூய்மை பணி, குடிநீர், மக்களை வெளியேற்றுவது போன்றவற்றை தனித் தனியாக பார்க்க வேண்டும் என்று நம்மை வலியுறுத்துகிறது. ஆனால் அரசு முழுமையாக திட்டமிட்டு பகுதி பகுதியாக நிறைவேறுகிறது.
https://www.facebook.com/1714910257/posts/10214848376839030/?rdid=HIzY9K4PsIXlmzXI
இரா. முருகவேள்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு