மாபெரும் திராவிட கனவில் ஐந்து நிமிடம்...
Bright singh Johnrose
ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெற பலநூறு கோடி தன் அப்பன் வீட்டு பணத்தை செலவு செய்து கட்டியது போன்றே ஆளும்கட்சி, எதிர்கட்சி என பல்வேறு கட்சிகள் போஸ்டர் அடித்தும், மேடைகள் தோறும் முழங்கியும், புகழ்ந்தும் வாக்குகள் பல வாரி குவித்த அப்பெரும் மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி வார்டினுள் நுழைந்தேன்.
வழக்கமாக மதியத்திற்கு மேல் அனைவரும் உணவு உண்டு ஓய்வு எடுக்கும் அல்லது பட்டினியில் மயக்கி கிடக்கும் நேரம் அமைதியாக சென்று பெரியையனை சந்தித்து வந்தேன். ஆனால் இன்றோ நான் வந்த நேரம் மிகவும் பரப்பரப்பான காலை நேரம். அனைவரும் இரண்டு நாள் கழித்து பெரிய டாக்டர் வருகிறார், அவர் வந்து என்ன சொல்ல போகிறார் என பயத்துடனான எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருந்தார்கள்.
பெரியையனை போன முறை சந்தித்த பெண்கள் பிரிவு படுக்கையில் தேடி பார்த்தேன். ஆனால் பெரியையனை அங்கு காணவில்லை. சுற்றுமுற்றி அனைத்து படுக்கையிலும் இருக்கும் நோயாளிகளை நோட்டம் விட்டேன், ஆனால் பெரியையனை மட்டும் காணவில்லை. பெண் செவிலியர் ஒருவர் நோயளிகளின் ரிப்போர்ட்டுகளை அவசரம் அவசரமாக புரட்டிக்கொண்டு இருந்தார். அவரிடம் சென்று பெரியையனை காணவில்லை எங்கு மாற்றப்பட்டுள்ளார் என்று கேட்டேன். அவரை நேற்று தான் ஆண்கள் பிரிவில் மாற்றினோம் என்று அவர் பதிலளித்தார்.
ஆண்கள் பிரிவில் சென்று எட்டி பார்த்தால் எட்டு படுக்கைகள் கொள்ளளவுள்ள இடத்தில் அடுக்கடுக்காக பதினெட்டு படுக்கைகள் போட்டு, படுக்கைக்கு படுக்கை ஒரு அடி அளவு கூட இடைவெளி இல்லாமல் நோயாளிகளும், உடன் இருப்பவர்களும் திக்குமுக்காடிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக அந்த மெலிந்த உடலை வைத்து பெரியையனை பார்த்துவிட்டேன். பெரியையனை ஓரமாக ஜன்னல் பக்க படுக்கையில் படுக்க வைத்திருந்தார்கள்.
பெரியையன் அருகில் சென்று காயம் ஏற்பட்ட கால்கள் எப்படி இருக்கிறது என்று விசாரிக்க தொடங்கிய போது முப்பது வயது மதிக்கத்தக்க ஆண் செவிலியர் கையில் சில பாட்டில்களுடன் வார்ட் உள்ளே நுழைந்தார். அவர் உள்ளே நுழைந்ததும் வார்ட் முழுவதும் எழுந்துக்கொண்டிருந்த சிறு சிறு சலசலப்புகள் நின்று அப்படியே அமைதி நிலவியது. ஏன் இந்த திடீர் அமைதி என்று திரும்பி ஒவ்வொரு நோயாளிகளின் படுக்கையை நோட்டம் விட்டால் எல்லாரின் முகத்திலும் ஒரு பெரும் அச்சம் திடீரென ஒப்பிக்கொண்டிருந்தது.
அந்த ஆண் செவிலியர் முதல் படுக்கையில் படுத்திருந்த முப்பது வயதிற்குள்ளான நோயாளியின் அடிப்பட்ட காலில் கையில் வைத்திருந்த தண்ணீர் போன்ற மருந்தை அழுத்தி பீச்சியடித்துக்கொண்டே மற்றொரு கையால் கட்டுகளை அவிழ்க்க தொடங்கினார்.
நோயாளியின் அருகில் இருந்த அவரின் தங்கை கண் முழுவதும் கண்ணீரை நிரப்பி சிந்துவதற்கு தயாராகி கொண்டு இருந்தார்.
அதனை பார்ப்பவர்கள் எவருக்கும் அது ஏதோ கொடும் காயம் கொண்ட நோயாளியின் காலில் கட்டப்பட்டுள்ள கட்டை செவிலியர் அவிழ்ப்பது போன்று தோற்றம் அளிக்காது. மாறாக இருவரும் சண்டையிட்டு கொண்டு உனக்கா எனக்கா என்று எதையோ பிடித்து இழுப்பது போன்றே காட்சியளிக்கும்.
நோயாளியும் எவ்வளவோ வலியை பொறுத்து, பல்லை கடித்து, வாயை இறுக்கமாக மூடி வைத்திருந்தாலும் செவிலியர் கை வைத்த பத்தாவது நொடி "சார் காலு வலிக்குது சார்...” என்று ஓ என ஓலம் எழுப்பி அழ தொடங்கி விட்டார்.
மற்ற நோயாளிகளும் அவர்களுடன் இருந்தவர்களும் தங்கள் முகங்களை திருப்பி வேறு எங்கோ பார்ப்பது போன்று தங்கள் கவனங்களை மாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்களால் பார்வையில் இருந்து தான் தப்ப முடிந்ததே தவிர அந்த நோயாளியின் கதறல் சத்தத்தில் இருந்து தப்ப முடியவில்லை. என் அருகில் இருந்து நோயாளியின் மனைவி அந்த கதறல் சத்தம் கேட்டே ஏங்கி ஏங்கி அழ தொடங்கி விட்டார். அவர் அந்த நோயாளியின் கதறலை கேட்டு அழுதுகொண்டு இருந்தாரா இல்லை அதன்பிறகு அவரின் கணவரின் காலில் இருக்கும் கட்டை அவிழ்ப்பது பற்றி நினைத்து அழுதாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
நானும் சில நொடிகள் முகத்தை திருப்பிக்கொண்டேன் ஆனால் மீண்டும் என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு அந்த நோயாளியை பார்க்க தொடங்கினேன்.
வலதுபுற குதிகாலின் மேல் புறம் கீழ் என முழுவதும் அடிப்பட்டு சிதைந்து போய் இருந்தது. அந்த காயத்தில் ஒட்டி இருந்த துணியை இடது கையில் வைத்திருந்த மருந்தை பீச்சியடித்துக்கொண்டே வலது கையால் ஏதோ வடம் இழுப்பு போட்டியில் சரசரவென இழுத்து தள்ளுவது போன்று காலின் கீழ் இருந்த பக்கெட்டில் இழுத்து தள்ளிக்கொண்டு இருந்தார் செவிலியர். அலறல் சத்தம் அதிகரித்து கொண்டே சென்றது. ஒரு வழியாக காயத்தின் மேல் ஒட்டியிருந்த துணிகள் அனைத்து வலித்து இழுத்து எடுத்தாகி விட்டது.
ஐந்தடி தள்ளி நின்று கவனித்துகொண்டிருந்த எனக்கே காலில் ஒரு பெரும் வீக்கம் இருப்பது தெரிந்தது.
அவ்வளவு தான் முடிந்தது என்று தன்னை அசுவாசப்படுத்தி வலியால் முனங்கியவாரே படுக்க தொடங்கினார் நோயாளி. காயத்தை தொடைத்துக்கொண்டிருந்த செவிலியர் தனது ஆள்காட்டி விரலை அந்த வீக்கத்தின் மீது வைத்து அழுத்த தொடங்கினார். அந்த நோயாளி வலியால் கதறியவாறே பிடைக்க தொடங்கினார். அருகில் இருந்த அவரின் தங்கை கண்ணீர் சிந்தி கொண்டே அண்ணனின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். சுற்றி இருந்த அனைத்து நோயாளிகளும் தாங்கள் மரணத்தை சந்திக்க தயாராவது போல் வெடவெடத்து போய் இருந்தார்கள்.
செவிலியர் தன் ஆள்காட்டி விரலை தனது பலத்தை பயன்படுத்தி மீண்டும் வலுவாக அழுத்த தொடங்கினார். திடீரென அந்த வீக்கம் வெடித்து அவர் படுத்திருந்த படுக்கை முழுவதும் ரத்தம் பீச்சென அடித்தது. செவிலியரின் ஆள்காட்டி விரல் கிட்டத்தட்ட முழுவதும் அந்த காயத்தினுள் மூழ்கி இருந்தது. அந்த நோயாளியின் அலறல் மரண வீட்டை மிஞ்சும் அளவுக்கு அந்த வார்ட் முழுவதும் எதிரொலித்தது.
செவிலியரின் முகபாவனையில் எவ்வித மாற்றமும் தென்படவில்லை. அவர் வந்தது போன்றே தனது கையுறையை கழட்டியவாறே குப்பை தொட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். நோயாளியின் தங்கை படுக்கையில் சிதறிய ரத்தத்தை துணியால் துடைத்துக்கொண்டிருந்தார்.
பக்கத்து படுக்கையில் வயற்றில் பெரும் காயத்துடன் படுத்திருந்த நோயாளி நண்பருடன் "இவன் கை வச்சா செத்துப்போவோம்ன்னு அந்தம்மாவே கழட்ட தொடங்கிட்டு” என்று சொல்வது என் காதில் விழுந்தது.
திரும்பி பார்த்தால் பக்கத்து படுக்கையில் இருந்த நோயாளியின் மனைவி அழுதவாறே தனது கணவரின் தொடையில் இருந்த பெரும் கட்டை அவிழ்த்துக்கொண்டிருந்தார். அதனையும் அந்த நோயாளியின் தொடர் அலறலை கேட்டுக்கொண்டிருந்த பிற நோயாளிகளும் தங்களுடைய கட்டுகளை தாங்களே மெல்ல மெல்ல படப்படப்புடன் அவிழ்க்க தொடங்கியிருந்தார்கள்.
மீண்டும் அந்த ஆண் செவிலியர் வார்டினுள் நுழைந்து உள்ளே வருவதை அனைவரும் மவுனமாக பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
நடுவயது கொண்ட அம்மா செவிலியரிடம் "சார் புண்ணுல துணி ஒட்டுது அந்த மருந்து கொஞ்சம் கொடுங்க சார்” என்று நடுக்கமான குரலில் கேட்டார்கள்.
செவிலியர் உடனே "அந்த கட்டில்ல இருக்க சின்ன பாட்டிலை எடுத்திட்டு போ” என்று கூறினார்.
செவிலியர் மீண்டும் தனது வடம் இழுப்பை அடுத்த படுக்கையில் இருந்த நோயாளியின் காலில் காட்ட தொடங்கினார். மீண்டும் ஒரு மரண ஓலம்.
"என்டா ************ அவனும் மனுசன் தானே, கொஞ்சம் மெதுவா கட்டை பிரித்தால் தான் என்ன” என்று எனது மனதில் நினைத்துக்கொண்டேன். ஆனால் இவற்றை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்த என்னால் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சூழல் அங்கு நிலவுவதாக தெரியவில்லை. ஏனெனில்..
"எழுபது எம்பது நோயாளிகள் இருக்கும் வார்டில் ஒருத்தனாக இருந்து, ஒரு மணிநேரத்தில் கட்டை பிரிந்து மீண்டும் மருந்து வைத்து கட்டி, அதன்பிறகு அறுவைசிகிச்சை பிரிவில் டாக்டர்களுக்கு உதவியாக நான் செல்ல வேண்டும். இப்போ நான் என்ன செய்ய ?” என்று அந்த செவிலியரின் பதில் அவரின் செயல்பாடு மூலம் என்னை உணர்த்தியது.
இரண்டு வகையான நிலை கொண்ட மக்களின் நடுவே என்ன செய்வது என யோசித்தப்பொழுது...
"ஐம்பது ஆண்டு கால திராவிட மாடல் சாதனை என்பது...” என தொலைவில் ஸ்பீக்கர் அலறும் சத்தம்...
தூக்கம் கலைந்தது, கனவு முடிந்தது.
- Bright singh Johnrose
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு