ஈரோட்டுப் பாதை சரியா? முழு நூலும் கட்டுரை மட்டும் Pdf வடிவில்
ப. ஜீவானந்தம்
இந்நூலின் முன்னுரையை படிக்க: ஈ.வே.ராவின் ஏகாதிபத்திய ஆதரவு அரசியல் வழி பற்றி... ஏஎம்கே
"கண் முன்னால் கிழக்கு வெளுத்துவிட்டது! கதிரவன்
எழுந்துவிட்டான்! புதிய ஒளி எங்கும் பரவிவிட்டது.
சுயமரியாதைக் கோட்டத்தில் மட்டும்தானா, இல்லை தமிழகம் முழுவதுமே புரட்சி மனப்பான்மை பொங்கித் ததும்புகிறது. நாடெங்கும் புதுநாதம் ஒலிக்கிறது. தென்றல் வீசுகிறது. ஒவ்வொரு துறையிலும் மறுமலர்ச்சி தேவை என்ற துடிதுடிப்பு காணப்படுகிறது. எப்படி ஏற்பட்டது இந்த புதிய நிலை? யாரால் விளைந்தது இது? இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் "ஈரோட்டுப் பாதை" ("ஈரோட்டுப் பாதை" என்ற சிறுநூலில் இருந்து)
"உண்மையான பொது உடைமைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு (நல்ல வைத்தியன் நோய்க்கு ஏற்றபடி, அவனவன், உடற்கூறுக்கு ஏற்றபடி மருந்து கொடுப்பது போல) திராவிட நாட்டிற்கு ஏற்றவிதமாக கம்யூனிஸம் என்ற உயர்மருந்தை நோயாளிக்குக் கொடுத்துவரும் இயக்கம் திராவிட கழகம் ஒன்றேதான் என்பதையும், மனப்பாடஞ் செய்த பாடல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு மருந்து கொடுக்கும் சில நாட்டு வைத்தியர்களைப் போலில்லாமல் நோயின் முதிர்ச்சியையும் கண்டறிந்து முதிர்ந்த அனுபவத்தை ஒட்டி, மருந்து கொடுத்துவரும் இயக்கம் இது ஒன்றேதான் என்பதையும் நன்றாக உணர்ந்துள்ள பொதுமக்கள் இந்தப் புதிய விஷமப் பிரச்சாரத்தினால் ஏமாந்துவிட மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும்." ("விடுதலை" தலையங்கம் 20-10-47)
"தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சிக்கு சுயபுத்தியில்லை." ("விடுதலை" தலையங்கம் 4 - 8 - 47)
"ஆம்! பெரியார் அவர்கள் கூறுவதே திராவிடர்களின் முடிவு" ("விடுதலை" தலையங்கம் 9 -8 - 47)
20 ஆண்டுகளுக்கு மேலாகவே, ஈரோட்டுப் பெரியார் ஈ.வெ. ரா. தமிழர்களுக்கும் "திராவிடர்களுக்கும்" காட்டிய, காட்டுகிற பாதைதான் ஈரோட்டுப் பாதை.
"நம்முடைய இருபது ஆண்டுப் பயணம் வீணாகவில்லை. நாம் தொடங்கிய காரியம் எதுவும் வெற்றி தராமல் போனதுமில்லை. பல போராட்டங்களில் எதிர்பார்த்ததற்குமேல் பலனடைந்தும் இருக்கிறோம். நம்முடைய பாதையோ ஆபத்துகள் செறிந்தது - ஆனால் இலட்சியத்தை நிறைவேற்றுவது" என்று "ஈரோட்டுப் பாதை" யின் ஆசிரியரான "இளைஞர்" கூறுகிறார்.
இவரைப் போன்று ஈரோட்டுப் பாதைதான் தமிழ் மக்களின் லட்சியபுரியை அடையச் சிறந்த பாதை என்று நம்பி, அதன் வழிச்செல்கிற இளைஞர்கள் தமிழ்நாட்டில் பலர். ஸ்தாபன ரீதியான தொழிலாளர்களிலும் ஒரு சிறு பகுதியார் மேற்படி கருத்தைத் தழுவி நிற்கிறார்கள். ஆரம்ப ஆசிரியர்களிடையிலும், தமிழாசிரியர்களிடையிலும் மாணவர்களிடையிலும் இந்தக் கருத்து குறிப்பிடத்தக்க அளவு காணப்படுகிறது.
ஈரோட்டுப் பாதையில் செல்வோரில் சிறுபாலோர் இந்தி - எதிர்ப்புக் கிளர்ச்சியின் மூலமும் பெரும்பாலோர் திராவிட கழகத்தின் மூலமும் வந்தவர்களே.
யுத்தகால முடிவிலும் அதன் பின்னாலும் நாடு முழுவதும் கரைபுரண்டோடிய புதிய சக்தி, திராவிட கழக வாய்க்காலிலும் பாய்ந்தது. விடுதலை ஆர்வம், தமிழ்ப்பற்று, இன எழுச்சி,
புதுவாழ்வு நாட்டம், புரட்சி உணர்ச்சி, பொதுவுடமைக் காதல் இவைகளுக்கு உள்ளத்தைப் பறிகொடுத்த இளைஞர்களில் அநேகர், பொதுவுடமைப் பேச்சு, சாதி - மத ஒழிப்புக் கிளர்ச்சி, திராவிட நாட்டுப் பிரிவினை, இவை குறித்து ஈ.வெ.ரா, அண்ணாதுரை, ஆகிய திராவிட கழகத் தலைவர்கள், ஆற்றிய சொற்பொழிவுகள், தீட்டிய கட்டுரைகள், ஆகியவற்றில் சொக்கி திராவிட கழகத்தில் குவிந்தார்கள். அவர்களுக்கு ஈரோட்டுப் பாதையைப் பற்றிய சரித்திர அனுபவமும் இல்லை. பல கோணங்களிலிருந்து அதனை ஆராய்ச்சி செய்ய முடிகிறதும் இல்லை.
ஈரோட்டுப் பாதையைப் பற்றி இதுவரையில் தமிழ்மக்களுக்கு மக்கள் கண்ணோட்டத்தோடு செய்யப்பட்ட விமர்சனம் கிடைத்ததில்லை. இன்றைய தமிழ்மக்களுக்கு ஈரோட்டுப் பாதையையும், இருபது ஆண்டு சரித்திரத்தையும் சுருக்கமாகக் கூறவும், ஈரோட்டுப் பாதைக்கும், கம்யூனிஸ்ட் பாதைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கிக் காட்டவும் இக்கட்டுரை முயற்சிக்கும்.
ஈரோட்டுப் பாதையின் இருபதாண்டுகள்: இன்று ஈரோட்டுப் பாதை திராவிட கழகம் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பித்த பொழுது அதற்கு இந்தப் பெயரில்லை கூடுவிட்டுக் கூடு பாய்வதுபோல் பல பெயர்களைத் தாங்கி ஈரோட்டுப் பாதை 20 ஆண்டுகளைக் கழித்திருக்கிறது.
பார்ப்பனரல்லாதார் இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கம், சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், சமதர்ம நாஸ்திக இயக்கம், தமிழர் இயக்கம், திராவிட இயக்கம் என்ற பல பெயர்களோடு பாதை காட்டி வந்திருக்கிறார், தன்னைப் பின்பற்றிய தமிழ் மக்களுக்கு ஈரோட்டுப் பெரியார்.
பார்ப்பனரல்லாதார் இயக்கம்: ஈ.வெ.ரா. காங்கிரஸ் தலைவராக காட்சியளித்த காலத்தில் பரம காந்திபக்தர். காந்தியக் குட்டையில் ஊறிய மட்டை. அந்த ஒத்துழையாமைக் காலத்திலும், காந்தியத் தலைமையில் நம்பிக்கையற்ற பலதீவிரவாதிகள் காங்கிரஸில் இருந்தனர். ஹஸரத் மோகினி, டாங்கே போன்றவர்களும், வங்காளம், பஞ்சாப் மாகாணங்களிலிருந்து அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில் இடம் பெற்றிருந்த புரட்சித் தலைவர்களும் தேசிய இயக்கத்தை முன்னேற்ற வேண்டி, காந்தியத் தலைமையைப் புரட்சிக் கண்ணோட்டத்தோடு குறை கூறினர். அப்பொழுது ஈ.வெ.ரா. முற்போக்கு வாதியல்ல. காந்தி பக்தராக இருந்து தீவிரவாதிகளை எதிர்த்து வந்தார்.
அன்று தமிழ்நாட்டில் ராஜாஜியின் பரமானந்த சிஷ்யர் நாயக்கர், "ஜஸ்டிஸ் கட்சி"யை அதன் ஆரம்பம் முதலே 'தேசியத்திற்கு விரோதமான வகுப்புவாத பிளேக்' என்று கடுமையாக அந்நாளில் எதிர்த்துவந்த முதலியார், நாயுடு, நாயக்கர் ஆகிய முப்பெரும் பார்ப்பனரல்லாத தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்களில் நாயக்கருக்கே முதல் தாம்பூலம் வைக்கலாம்.
அத்தகைய நாயக்கர் 1925-ல் காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ் மாகாண மகாநாட்டின் போது காங்கிரஸை விட்டு வெளியேறினார். வெளியேறும்போது "காங்கிரஸ் மகாசபையால் பார்ப்பனரல்லாதார் நன்மையடைய முடியாது, காங்கிரஸை ஒழிப்பதே இனி எனது வேலை" என்று ஒரு போடுபோட்டு வெளியேறினார்.
காங்கிரஸ், அரசியல் ஸ்தாபனம். காங்கிரஸ், ஜாதி, மத வகுப்புவாதமற்ற அரசியல் ஸ்தாபனம் - காங்கிரஸ், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஸ்தாபனம் - காங்கிரஸ், விடுதலை ஆர்வம் உள்ள பொதுமக்களை வரவர வசீகரிக்கும். முற்போக்கு தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்தாபனம் - இவ்வாறு காங்கிரஸ் ஸ்தாபனத்தை மதிப்பிட்டார்கள் அன்றைய அரசியல் தீவிரவாதிகள். காங்கிரஸிலிருந்த பிற்போக்கு தலைமையை, பிற்போக்குத் திட்டங்களைக் கண்டித்து அம்பலப்படுத்தினார்கள். காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்திய தேசிய இயக்கத்தைப் புரட்சிகரமாக வளர்க்க முழுமூச்சுடன் பாடுபட்டார்கள்.
காங்கிரஸில் படர்ந்த அரசியல் பிற்போக்கை தீவிரவாதிகள் திருத்த கச்சை கட்டினார்களே ஒழிய, காங்கிரஸ் ஸ்தாபனத்தையே வெறுத்து விலகிப்போக விரும்பினார்கள் இல்லை. ஆனால் ஈ.வெ.ரா.வோ வகுப்புவாதச் சகதியை அள்ளி காங்கிரஸின் முகத்தில் எறிந்துவிட்டு தேசிய ஸ்தாபனத்தைத் துறந்தார். அரசியலில் இருந்த பார்ப்பனர்களிடம் அவருக்கேற்பட்ட ஆத்திரத்தின் பலனை, அவரிடம் பொங்கி எழுந்த வெறுப்பின் வேகம், அவரைத் தேர்வடம் போட்டு இழுத்து, காங்கிரஸுக்கு வெளியே வெகுதூரம் கொண்டுபோயிற்று. காங்கிரஸின் மேல்தட்டில் கண்ட தேசியத்திற்கு விரோதமான ஜாதி ஆணவத்தைச் சம்மட்டி அடி கொடுத்து உடைத்தெறியும் நன்முயற்சியில் ஈடுபடுவதற்குப் பதிலாக காங்கிரஸையே அடியோடு அழித்து விடுவேன் என்ற அடாத துவேஷ மடுவில் தள்ளிற்று.
1924-ல் கான்பூர் கம்யூனிஸ்ட் சதிவழக்கு நடந்தது. தமிழ்நாட்டு சிங்காரவேலு செட்டியார் அதில் சம்பந்தப்பட்டவர். ஈ.வெ. ரா. அன்று மாறுதல் வேண்டாதார்.
குருகுலப் போராட்டம்
1926-ல் தமிழ்நாட்டையே குலுக்கி ஆட்டிய சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் ஏற்பட்டது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொண்டார் ஈ.வெ.ரா. பக்குவம் கெடுவதற்கு முன்னால், சந்தர்ப்பத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு காங்கிரஸ் - தமிழர் இளைஞர்களுக்கிடையே பிராமண எதிர்ப்பு விதையைத் தாராளமாக விதைக்கத் தொடங்கினார். தருணம் கிடைக்கும் பொழுதெல்லாம் காங்கிரஸைத் தாக்க தயங்கியதும் இல்லை. மயங்கியதும் இல்லை அவர்.
பிராமணிய எதிர்ப்பின் வேகம் ஏற ஏற, ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் ஈ.வெ.ரா.வுக்கு ஞானாசிரியர்களாகக் காட்சியளித்தார்கள். அரசியலில் பார்ப்பனர்களை ஒருபோதும் நம்பாதே என்ற சர்.பி.தியாகராஜ செட்டியாரின் வாக்கு, வேதவாக்காக ஒலித்தது ஈ.வெ.ரா.வுக்கு. "பார்ப்பனர்கள்தான் வகுப்புவாதிகள்" என்ற வகுப்புவாத மோகினி, ஈ.வெ.ரா.வின் இதய பீடத்தில் ஏறி செம்மையாக உட்கார்ந்து கொண்டது. அரசியலில் பார்ப்பனர்களை சாக்காக வைத்து காங்கிரஸ் ஸ்தாபனத்தின் மீது ஓய்வு ஒழிவு இன்றி சொல்லம்பு தொடுத்து வந்தார்.
1926-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி படுதோல்வியடைந்தது. மண் கவ்வி விழுந்த ஜஸ்டிஸ் கட்சி ஈ.வெ.ரா.வின் கைத்தாங்கலில் எழுந்து புத்துயிர் பெற்று மீண்டும் தேர்தலில் காங்கிரஸை முறியடிக்க விரும்பிற்று. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் ஈ.வெ.ரா.வை வளைத்துக் கொள்ள முயன்றனர். காங்கிரஸைப் பழிவாங்கும் வெறி ஈ.வெ. ரா.வை ஜஸ்டிஸ் கட்சிக்குத் தூணாக்கிற்று மதுரையில் 1926 டிசம்பரில் நடந்த பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் (ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில்) ஈ.வெ.ரா. பங்கெடுத்துக் கொண்டார். அம்மாநாட்டிற்கு வ.உ.சி., ஜார்ஜ் ஜோசப் போன்ற தேச பக்தர்கள் அழைக்கப்பட்டார்கள். கதர் ஆதரிப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசபக்தர்களையும் கதரையும் காட்டி தேசிய உணர்ச்சி கொண்ட பார்ப்பனரல்லாத இளைஞர்களை ஜஸ்டிஸ் கட்சியின் பக்கம் இழுத்துவிடலாமென்று சூழ்ச்சி செய்தனர். ஈ.வெ.ரா.வின் தூண்டுதலே இதற்கு காரணம். பதவி மோகிகளான ஜஸ்டிஸ் கட்சியின் ஜரிகைத் தலைப்பாகைகள் மக்களை ஏய்க்க கதர் வேஷம் போட்டன.
அப்பால் தமிழ்நாடு முழுவதும் பார்ப்பனரல்லாதார் மாநாடுகள் நடந்தன. அவைகளிலெல்லாம் ஈ.வெ.ரா.வின் சொற்பெருக்குகள் நிகழ்ந்தன.
இந்தக் காலத்தில்தான் ஏகாதிபத்திய அடிமை நாவலர் ஏ.ராமசாமி முதலியார் ஈ.வெ.ரா.வை தமிழ்நாட்டு ரூஸோ (பிரெஞ்சுப் புரட்சிக்கு முக்கியமான காரணஸ்தன்) என்று, வாயாரப் பாராட்டினார். இந்தப் பாராட்டு ஈ.வெ.ரா. ஜஸ்டிஸ் கட்சிக்குச் செய்த சேவைக்கு சன்மானம்.
சீர்திருத்த இயக்கம்: பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை வலுப்படுத்த, சமூக சீர்திருத்தப் பிரச்சாரம் மிக அவசியம் என்பதை உணர்ந்தார் ஈ.வெ.ரா.. ஜாதி எதிர்ப்பு, சடங்குகள் எதிர்ப்பு, புரோகித மறுப்புப், பிரச்சார சண்டமாருதம் தமிழ்நாடு பூராவும் நடைபெற்றது. தாழ்த்தப்பட்ட, பார்ப்பனரல்லாத ஜனத்திரளை தன்வழிக்குக் குறிப்பிடத்தக்க அளவுக்கு இழுக்க முடிந்தது ஈ.வெ.ரா.வால்.
சென்னையில் 'நால்வர் சந்திப்பு' நடந்தது (1-8- 1927). அடுத்த வார குடியரசில் வெளியான பிராமணியச் சடங்கை விலக்கியவர் பட்டியலில் ஈ.வெ.ரா., திரு.வி.க டாக்டர் நாயுடு, ஆர்.கே.ஷண்முகம் ஆகிய நால்வரின் பெயர்களும் முன்வரிசையில் இடம் பெற்றன. இவ்வாறு காங்கிரஸ்காரர்களோடு இணைந்து, சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவு தேடுவதாகக் காட்டி, காங்கிரஸ் ஒழிப்பு வேலைக்கு மறைமுகமாகப் பணம் திரட்ட முனைந்தார் ஈ.வெ.ரா.
1927-ல் கோவையில் நடந்த ஜஸ்டிஸ் கட்சியின் விசேஷ மகாநாட்டுக்கு ஈ.வெ.ரா.வின் தூண்டுதலினால், திரு.வி.க., டாக்டர் நாயுடு, ஷண்முகம் செட்டியார், சுரேந்திரநாத் ஆச்சாரியா ஆகியோர் அழைக்கப்பட்டார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரஸில் சேர்ந்து காங்கிரஸைக் கைப்பற்ற வேண்டுமென்று அவர்கள் யோசனை கூறினர். ஆனால், அந்த யோசனையை ஈ.வெ.ரா. பெரும் திரளான ஜஸ்டிஸ் கட்சியாரோடு சேர்ந்து எதிர்த்தார்.
1927-ல் காந்திஜியோடு வர்ணாஸ்ரம தர்மத்தைப் பற்றி, ஈ.வெ.ரா.வும் எஸ்.ராமனாதனும் விவாதித்தனர். விவாதத்திற்குப் பின்னால் 'மூன்று காரியங்கள் முடிவு பெறாமல் நமது நாட்டிற்கு விடுதலை இல்லை' என்று குடியரசில் எழுதினார். அவையாவன:
1. காங்கிரஸ் ஒழிப்பு
2. இந்துமத ஒழிப்பு
3. பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு.
மேற்படி நோக்கங்களுக்குத் தக்கபடி ஈ.வெ.ரா. தனது சித்தாந்தத்தை உருவாக்கினார். "நாம் முதலில்
சுயமரியாதை அடைந்தால்தான் அரசியல் உரிமை பெறத் தகுதியுடையவராவோம்" என்றார். 'சுயமரியாதை முதலில், அரசியல் விடுதலை பிறகே' என்பதுதான் அந்தச் சித்தாந்தம்.
சுயமரியாதை இயக்கம்
பார்ப்பனரல்லாத சமூக சீர்திருத்த இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்ற பேர் தாங்கிற்று. பார்ப்பணியம் - வர்ணாஸ்ரம தர்மம், மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவைகளையும் அவைகளுக்குக் காரணமான வேதசாஸ்திர புராணங்களையும்,
குறிப்பாக மனுஸ்மிருதியையும், இவைகளுக்கு அடிப்படையான இந்து தர்மத்தையும், பெண்ணடிமையையும் இடைவிடாமல் எதிர்த்து நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி, ஈ.வெ.ரா.வும் அவரைப் பின்பற்றியவர்களும் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.
பல காலமாக, பழிக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு கிடந்த மக்கள் உள்ளங்களில் தன்மான உணர்ச்சி கொழுந்துவிட்டு எரியவே அவர்களுடைய அனுதாபமும் ஆதரவும் சுயமரியாதை இயக்கத்திற்கு கிடைத்தன.
சைமன் கமிசன் வரவேற்பு: இந்தியாவுக்கு அரசியல் உரிமையைப் பற்றி ஆராய சைமனைத் தலைவராகக் கொண்டு 'ராயல் கமிஷன்' 1928-ல் வந்தது, காங்கிரஸ் கமிஷனை பகிஷ்கரிக்க முடிவுசெய்தது. இதர கட்சியினரும் பகிஷ்கார பாதைக்கே ஓட்டு அளித்தனர். ஈரோட்டுப் பாதை தனது தனிச் சிறப்பைக் காட்டிற்று. ஈ.வெ.ரா. ஒருவரே கமிஷனை வரவேற்கப் பிடிவாதம் காட்டினார்.
காங்கிரஸ் சுயராஜ்ய கட்சிக்கும், பொது ஜனங்களின் இயக்கத்திற்கும் தொடர்பில்லாது இருந்த காலம் அது. சோஷலிசத்தைக் குறிக்கோளாகக் கொண்ட தொழிலாளி வர்க்கம் சுயேச்சையான அரசியல் சக்தியாக உருவாகிவந்த காலம் அது. ஜவஹர்லால் நேருவும், சுபாஷ் சந்திர போசும் சர்வதேச ஏகாதிபத்திய எதிர்ப்புச் சங்கத்தின் காரியதரி- சிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அந்நாட்களில்தான். இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸில் இடதுசாரிகள் ஆதிக்கம் பெற்றிருந்தனர். நாடு முழுவதும் தேசிய வாலிபர் சங்கங்களும், மாணவர் கழகங்களும் தோன்றி கிளர்ச்சி செய்தன. சென்னையில் நடந்த காங்கிரஸ் பேரவையில் வலதுசாரித் தலைவர்களின் பலத்த எதிர்ப்புக்களிடையே பூர்ண சுதந்திரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழ்நிலையில்தான் சைமன் கமிஷன் வந்தது. எனவே இமயம் முதல் குமரிமுனைவரை பகிஷ்கார ஆர்ப்பாட்டம் அமர்க்களப்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. காங்கிரசின் பிற்போக்காளர்கள் கூட, காலவெள்ளத்தை எதிர்த்து நிற்க முடியாமல், பகிஷ்காரத்திற்கு இடம் கொடுத்தனர், தொழிலாளி வர்க்கம் முக்கியப் பங்கெடுத்து, வேலை நிறுத்த புயலைக் கிளப்பிவிட்டது. கமிஷன் போன ஒவ்வொரு நகரத்திலும் வாலிபர்களும், மாணவர்களும், பொதுமக்களும் பகிஷ்கார ஆர்ப்பாட்டங்களின் சிகரங்களைத் தொட்டனர். லாலா லஜபதிராய், தென்னாட்டில் சீனிவாச அய்யங்கார் போன்ற சிறந்த தேசியத் தலைவர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்திச் சென்றனர். என்றும் காணாதவாறு தேசிய மான உணர்ச்சி அடிபட்ட புலிபோல் சீறிற்று. மக்கள் எழுச்சியைக்கண்டு ஏகாதிபத்தியத்தின் பரமதாசர்களான ஜஸ்டிஸ் கட்சியார்கூட செய்வதறியாது தடுமாறினர்.
ஈ.வெ.ரா. மாத்திரம் சைமன் கமிஷனை வரவேற்கும்படி ஜஸ்டிஸ் கட்சிக்கு உபதேசம் செய்தார். "டாக்டர் நாயர், சர்.பி. தியாகராயர் ஆகிய தலைவர்களின் அடிச்சுவற்றைப் பின்பற்றி, வாய் இல்லாத பூச்சிகளாய் கிடக்கின்ற பாமர மக்களுக்கும், தொழிலாளிகளுக்கும், நாம் தான் பிரதிநி- திகள் என்பதை நினைவில் வைத்து கமிஷனை நமது கட்சி வரவேற்கவேண்டுமென்று ஈ.வெ.ரா. காரணம் காட்டினார். ஜஸ்டிஸ் கட்சியும் வரவேற்க முடிவு செய்தது.
காங்கிரஸும், நாட்டுப் பொதுமக்களும், தொழிலாளர், வாலிபர், மாணவர்களும் சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்தனர். ஈ.வெ.ரா வின் பேச்சைக் கேட்டு பாமர மக்களுக்கும், தொழிலாளி மக்களுக்கும் தன்னைத்தானே பிரதிநிதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சி சைமன் கமிஷனை வரவேற்கத் துணிந்தது.
1928 இறுதியில் சென்னையில் சீர்திருத்த மகாநாடு ஈ.வெ. ரா.வின் தலைமையில் நடந்தது. தான் சீர்திருத்தவாதி அல்லவென்றும், அழிவு வேலைக்காரனென்றும் அதிதீ- விரவாதம் பேசினார், ஈ.வெ.ரா அந்த மகாநாட்டில். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பனகல் அரசர் அந்த மகாநாட்டில் கலந்துக் கொண்டு ஈ.வெ.ரா வை இருபதாம் நூற்றாண்டின் புத்தர் என்று வானளாவப் பேசி ஜஸ்டிஸ் கட்சிக்கு ஈ.வெ.ரா செய்த சேவைக்கு நன்றியறிதல் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாநாடு: 1929 ம் வருஷ ஆரம்பத்தில் முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாடு நடந்தது. மகாநாட்டை நடத்தியவர்கள் ஜஸ்டிஸ் பிற்போக்கு கும்பலும், ஜமீன்தாரர்களுமான எம்.கே. ரெட்டியார், வேதாசலம் முதலியார், ஜெயராம் ரெட்டியார் போன்றவர்கள். ஜஸ்டிஸ் கட்சியோடு கூடிக்குலாவி மந்திரி பதவியில் அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டிருந்த சுப்பராயன் கூட்டத்தாரும் மகாநாட்டைச் சிறப்பித்தனர். ஏ.ராமசாமி முதலியார் போன்ற ஏகாதிபத்தியத்தின் நல்ல பிள்ளைகளும் அந்த விழாவை அலங்கரித்தனர்.
ஆயினும் சமூக, சாதி, மத விஷயங்களில் முற்போக்குக் கருத்துக்கொண்ட ஆயிரக்கணக்கான வாலிபர்கள் மகாநாட்டில் கலந்துக்கொண்டனர் என்பது மறக்க முடியாதது. மகாநாட்டின் தலைவர் சவுந்தரபாண்டியன் தனது தலைமையுரையில் "பார்ப்பனரல்லாதார் இயக்கம் மெதுவாக முன்னேற்றம் அடைந்து வருங்கால், அவ்வியக்கத்திற்கு திடீரென ஒரு நற்காலம் கிட்டியது. மக்களிடையே செல்வாக்குப் பெற ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அதுதான் இப்பொழுது தமிழ்நாட்டில் வீரகர்ஜனை புரிந்துவரும் சுயமரியாதை இயக்க ஆரம்பமாகும். மக்களுக்கு நலன் பல விளைவித்து வருபவரான, நமது மாபெரும் தலைவர் உயர்திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்களால் சுயமரியாதை வேதம் மக்களிடையே பரவிய புண்ணிய தினத்தையே யான் இங்கே குறிக்கின்றேன்" என்று சுயமரியாதை இயக்கத்திற்கும் ஜஸ்டிஸ் கட்சிக்குமுள்ள தொடர்பை தெளிவாகக் கூறினார்.
இதிலிருந்து ஆயிரக்கணக்கான வாலிபர்கள் கருதியதுபோல், சுயமரியாதை இயக்கம் தனி சமூகச் சீர்திருத்த இயக்கம் அல்ல என்பதும், ஜஸ்டிஸ் கட்சி. மக்களிடையில் செல்வாக்குப்பெற சந்தர்ப்பம் அளிக்கும் இயக்கம் என்பதும் தெளிவாகும். ஆயினும் "மகாநாட்டுத் தீர்மானங்கள் பல ஜஸ்டிஸ் கட்சி வைதீகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் சமுதாயச் சீர்திருத்தத்தில் மேம்போக்காகவே நடந்து கொண்டனர்." (தமிழர் தலைவர் 102 ம் பக்கம்) ஜஸ்டிஸ் கட்சிக்கு சமூகச் சீர்திருத்தத்தைவிட பதவி மோகமே பெரிது என்பதை உணர்ந்தவர்களுக்கு இதில் வியப்பு இராது.
ஈரோடு மகாநாடு: செங்கல்பட்டு மகாநாட்டுக்கும், ஈரோட்டு மாநாட்டுக்கும் இடையில் ராமாயண ஆராய்ச்சி, பெரிய புராண ஆராய்ச்சி, பாரத ஆராய்ச்சி மற்றும் பல புராண ஆராய்ச்சிகளும் வெளிவந்தன. இந்துமத எதிர்ப்புப் பிரசாரத்தின் பலனாக வைதீகர்கள், சைவ, வைணவப் பண்டிதர்களின் எதிர்ப்பும், வாலிபர்களின் ஆதரவும் ஒன்றுபோல் வளர்ந்து வந்தன.
1930-ல் அரசியல் மிதவாதப் பழமான மாகாணம் ஜெயகர் தலைமையில் 2-வது சுயமரியாதை மாகாண மகாநாடு நடந்தது. மகாநாட்டுத் தலைவர் விரிவுரையில் ஜெயகர் "ஈ.வெ. ராமசாமியார் சட்ட சபைகளைப் பற்றியோ, அரசாங்கத்தைப் பற்றியோ கவலை கொள்ளாதவர். அவர் ஏழை மக்களுக்குத் தொண்டு செய்வதே தனது பிறவியின் பயன் என்று கருதியிருப்பவர்" என்று ஈ.வெ.ராவைப் புகழ்ந்தார். ஈ.வெ. ரா அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்ற கருத்தை வாலிபர்கள் உள்ளத்திலும் பொதுமக்கள் மனத்திலும் புகுத்துவதற்கான நல்ல ஏற்பாடு இது.
ஈரோட்டு மகாநாட்டிற்கு முன்பே நாடு முழுவதிலும் உப்புச் சத்தியாகிரகம் ஆரம்பமாகிவிட்டது (1929ல் லாகூரில் காங்கிரஸ் மகாசபை நிறைவேற்றிய பூர்ண சுதந்திரத் தீர்மானத்தை அமலுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை இது.) உப்புச்சத்தியாகிரகம் காந்திஜியின் திட்டம். இருந்த போதிலும், சத்தியாகிரகப் போராட்டம் நாடு முழுவதிலும் உள்ள தீவிரத் தேசியவாதிகளான வாலிபர்கள், மாணவர்கள் நடத்திய திரண்ட கிளர்ச்சியின் பலனாக, காங்கிரஸ் தலைமை நிர்ப்பந்திக்கப்பட்டுத் தொடங்கியதாகும். எனவே அந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் வாலிபர்கள் ஆயிரக்கணக்கில் தலைகால் புரியாமல் குதித்தனர். நாடு முழுக்க உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகள் தழுவி நின்றன. ஈ.வெ.ரா எதிர்த்தார்.
"குடியரசில்" உப்புப்போரை எதிர்த்து எழுதினார். "இந்தியாவில் இன்றைய நிலைமைக்கு பூரண சுயேட்சை வேண்டுமானால் - விடுதலை வேண்டுமானால் - சுயராஜ்ஜியம் என்பது வேண்டுமானால் - வெள்ளைக்காரர் சுயநல ஆட்சி ஒழிய வேண்டுமானால் முதலில் மத ஆதிக்கமும் அதன் குருட்டு நம்பிக்கைகளும் ஒழிய வேண்டும், தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். பெண்கள் கட்டுப்பாடு ஒழிய வேண்டும், ஜாதி ஒழிய வேண்டும், பார்ப்பன ஆதிக்கம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும், இவ்வளவும் நடந்த பிறகுதான் வெள்ளைக்காரர் கொடுங்கோன்மை (தானாய் ஒழிந்துவிடும் அல்லது) நம்மால் ஒழிக்கப்பட வேண்டும், ஒழிக்கப்படவும் முடியும் என்பது நமது முடிவு." (குடியரசு - 16.3.30)
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றித்தான் சமூக வாழ்வை சீர்திருத்த முடியும் என்பது சரித்திரம் கண்ட உண்மை. அனுபவ அரசியலும் கூட ஆயினும் தனது "சுயமரியாதைச் சித்தாந்தத்திற்கு" ஆக்கம் தேடும் நோக்கத்தோடு வெள்ளைக்கார ஆட்சி ஒழியும் முன்பே ஜாதியும், மதமும் பார்ப்பன ஆதிக்கமும், முதலாளித்தன்மையும் ஒழியவேண்டுமென்று குதிரைக்கு முன் வண்டியைக் கட்டி ஓட்ட முடியுமென்பது போல் சாதித்தார் ஈ.வெ.ரா.
இன்னும் ஒருபடி மேற்சென்று உப்பு சத்தியாகிரகத்தை எதிர்த்து (குடியரசு 13-4-30) எழுதுகிறபோது, "எப்படி இருந்தாலும் சரி, உப்புக் காய்ச்சும் சட்டமறுப்பு வெற்றிபெற்று, தெருத் தெருவாக உப்பு மலைமலையாகக் குவிந்து கிடந்தாலும், அங்கே அதோடு வெள்ளைக்கார ராஜாங்கமே ஒழிந்து, இந்தியா பூர்ண சுயேட்சை அடைந்து இங்கிலாந்து தேசமும் நமது கைக்கு வருவதாயிருந்தாலும் சரி, இந்த உப்பு காய்ச்சும் காரியத்தையோ, இது சம்பந்தமான சட்டமறுப்பு காரியத்தையோ நாம் சிறிதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதை தைரியமாகச் சொல்வதோடு, இதனால் இந்தியாவுக்கு வளைந்துபோன குண்டூசி அளவுகூட நன்மை ஏற்படாதென்று கோபுரத்தின் மீது நின்று கூறுவோம்" என்று எழுதி தனது காங்கிரஸ் எதிர்ப்பு உணர்ச்சியின் வேகத்தை காட்டினார்.
உப்பு சத்தியாகிரக காலத்தில் நாடு முழுவதும் பல இடங்களிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டில் சென்னையிலும் வேதாரண்யத்திலும் அடக்குமுறை பேயாட்டம் ஆடியது. ஈரோட்டு மகாநாட்டில் அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற சில இளைஞர்கள் முயன்றனர். இந்தத் தீர்மானம் விஷயாலோசனை கமிட்டிக்கு வந்தபொழுது, கமிட்டிக்குத் தலைமை வகித்த ஆர்.கே.ஷண்முகம், சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கலாமா, கூடாதா என்று முடிவு கட்டிய பின்னர்தான், தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியுமென்றார். உடனே ஈ.வெ.ரா. "சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கக் கூடாது. யார் எவ்வளவு தூற்றினாலும் சரி, போற்றினாலும் சரி, சட்டமறுப்பை ஆதரிக்கக்கூடாது. தனித்த சமூக இயக்கமாகவே நடைபெற வேண்டும்" என்று அழுத்தமாகக் கூறிவிட்டார். தீர்மானத்திற்கு இடம் கிடைக்கவில்லை.
இந்த மாநாட்டிற்குப் பின் சுயமரியாதை இளைஞர்கள் பலர் இயக்கத்தைவிட்டு விலகினர். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரால் வசீகரிக்கப்பட்டு காங்கிரஸில் சேர்ந்தனர். சுயமரியாதைக் கொள்கைகளோடு தேசியமும் அவசியம் என்பதை உணர்ந்து தேசிய சுயமரியாதைக்காரர்களென்று பேர் பூண்டு, ஈ.வெ. ரா.வின் தேசிய எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பைக் கண்டித்தனர்.
1930-ல் செப்டம்பரில் சென்னை சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. சட்டமறுப்பில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ், தேர்தலில் ஈடுபடவில்லை. இது ஜஸ்டிஸ் கட்சிக்கு நல்ல வாய்ப்பாக முடிந்தது. சுயேட்சையாக நின்று பலர் தோல்வியுற்றனர். ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற்றது.
"ஜஸ்டிஸ் கட்சியின் இவ்வெற்றிக்குக் காரணம் சுயமரியாதை இயக்கமும், ஈ.வெ.ரா.வின் உழைப்புமே" என்று ஈ.வெ.ரா.வின் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.
பிற்போக்கு அரசியல் கட்சியான ஜஸ்டிஸ் கட்சிக்கு தேர்தல் ஏஜெண்டாக ஈ.வெ.ரா.வும், சுயமரியாதை இயக்கமும் ஊழியம் புரிந்தபோது சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கக் கூடாதென்று ஈ.வெ.ரா. சொன்னதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்புத் திட்டம் கொண்ட காங்கிரஸையோ, காங்கிரஸ் போராட்டங்களையோ சுயமரியாதை இயக்கமும், ஈ.வெ. ரா.வும் எதிர்த்தபொழுதும் சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கக்கூடாதென்று ஈ.வெ.ரா. சொன்னதில்லை. அரசாங்க அடக்கு முறையைக் கண்டித்து, காங்கிரஸ் போராட்டத்திற்கு அனுதாபம் காட்ட தீவிர இளைஞர்கள் முன்வந்தபொழுதுதான் "சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கக்கூடாது, தனித்த சமூக இயக்கமாகவே நடைபெற வேண்டும்" என்று ஈ.வெ.ரா. கூறினார் என்பதை நன்றாகச் சிந்திக்க வேண்டும்.
பகுத்தறிவு இயக்கம்: சுயமரியாதை இயக்கத்தில் 'பகுத்தறிவு' முதலிடம் பெற்று கிளர்ச்சி நடைபெற்றது. இந்து மதத்தோடு நிற்காமல் கிறிஸ்தவ, முகமதிய மதங்களிலும் பகுத்தறிவு ஆராய்ச்சி நுழைந்தது. இந்தக் காலத்தில் முனுசாமி நாயுடு ஜஸ்டிஸ் கட்சித் தலைவராகவும் முதன் மந்திரியாகவும் இருந்தார். ஜஸ்டிஸ் கட்சிக்கும், சுயமரியாதை கட்சிக்கும் அதிகம் தொடர்பில்லை. ஏற உதவிய ஏணியை எட்டி மிதித்துவிட்டதாக ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைப் பற்றி சுயமரியாதைக்காரர்கள் நொந்து கூறி மூக்கால் அழுத காலம் இது. சுயமரியாதை இயக்கத்தில் சிக்கிய வாலிபர்களுக்கு போதை ஊட்டுவதுபோல், உணர்ச்சி வேகம் ஊட்டவும், புதிய மக்கள் பகுதியை இழுக்கவும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தைப் பல துறைகளிலும் ஈ.வெ.ரா.வும், சுயமரியாதைக்காரர்களும் செலுத்தினார்கள்.
பகத்சிங்கின் தூக்கைப் பற்றி பயங்கரமான தலையங்கம் எழுதிற்று 'குடியரசு'. நூற்றுக்கணக்கான வாலிபர்கள் பகத்சிங்கைப் பின்பற்ற வேண்டும் என்று சண்டப்பிரசண்டம் அடித்தார். ஈ.வெ.ரா. அதேபொழுது பகத்சிங்கின் தியாகத்தை ஆகாயத்தில் தூக்கி வைத்துப்பேசி தனது ரத்தத்தில் ஊறிய காந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு கொள்கைக்கு புரட்சி உணர்ச்சிகொண்ட வாலிப உள்ளங்களில் ஆதரவைத் தேடினார். இந்த காலத்தில்தான் கதர் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பில் சுயமரியாதை இயக்கம் முனைந்தது. நாட்டின் பல பகுதிகளிலுள்ள புரட்சிக்காரர்களுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் தீவிர வாலிபர்களுக்கும், தொழிற்சங்க இயக்கத்தார்களுக்கும் காந்தீயத்தையும், காங்கிரஸையும் பிரித்து வெவ்வேறாகக் காண முடிந்தது. ஈ.வெ.ரா.வின் பகுத்தறிவுக் கண்ணில் காந்தியும், காங்கிரஸும் ஒன்றாகவே தென்பட்டனர்.
விருதுநகர் மாநாடு: மகாநாடு ஆரம்பிக்க மூன்றிரண்டு நாட்களிருக்கும்பொழுது உள்ளூர் காங்கிரஸ் வாலிபர்களுக்கும் சுயமரியாதை வாலிபர்களுக்கும் தகராறு. கைகலப்பு அரசியலில் கலப்பதில்லை என்றும், அரசியல் - அயோக்கியர்களின் புகலிடமென்றும் உதட்டளவில் சொல்லி வந்த சுயமரியாதை இயக்கம், காங்கிரஸ் எதிர்ப்பைப் பாலூட்டி வளர்க்காமல் ஒரு நிமிடம் கூடக் கழித்ததில்லை. தகராறு - வைதீகர்களோடல்ல, காங்கிரஸ் வாலிபர்களோடு.
இந்த மகாநாட்டின் முக்கிய அம்சம், எல்லா மதங்களும் ஒழிய வேண்டுமென்ற தீர்மானம். இங்கும் கண்டனக் கோடாலி காந்திஜியின் மீதும், கராச்சித் திட்டத்தில் மத நடுநிலைமைத் தீர்மானம் கண்ட காங்கிரஸ் மீதுமே வீசப்பட்டது. மகாநாட்டில்
நிறைவேற்றப்பட்ட இந்தி எதிர்ப்பு, கதர் எதிர்ப்புத் தீர்மானங்கள், பகுத்தறிவு இயக்கத்தின் பலன்கள் என்று கூறப்பட்டபோதிலும் காங்கிரஸ் எதிர்ப்பு நோக்கம் கொண்ட அரசியல் தீர்மானங்களே.
சமதர்ம நாத்திக இயக்கம்: சுயமரியாதைப் பகுத்தறிவு இயக்கம் நாளடைவில் சமதர்ம, நாத்திகப் பிரசாரத்திலும் இறங்கியது.
சமதர்ம, நாஸ்திகப் பிரசாரம் செய்ய சோவியத் யூனியனின் சமூக வாழ்வு எடுத்துக்காட்டாக இருந்தது சுயமரியாதைக்காரர்களுக்கு அங்கு மதமற்ற சமூக வாழ்வைக் கண்டனர். எனவே, ரஷ்யக் காதல் பிறந்தது. ஈ.வெ.ரா. ரஷ்யாவுக்குப் போக விரும்பினார். சோவியத் இலக்கியங்களையும் கம்யூனிஸ்ட் நூல்களையும் படித்துக்கொண்டிருந்த எஸ்.ராமநாதனின் கூட்டுறவும் யோசனையும் ஐரோப்பிய பிரயாணமாக மலர்ந்தது.
இந்தக் காலத்தில் இந்திய கம்யூனிஸ்டுகளை சம்பந்தப்படுத்திய மீரத் சதிவழக்கு நடந்துகொண்டிருந்தது. இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசுப் பட்டாளத்தின் சரித்திரமும், டில்லி வெடிகுண்டு வழக்கு, லாகூர் சதிவழக்கு விவரங்களும் வாலிப உலகத்தின் உள்ளத்தில் புயல் வீசிக்கொண்டிருந்தன. உப்புச் சத்தியாகிரகத்தில் சிறைசென்ற ராஜாஜிகூட, பெல்லாரி சிறையில் சோஷலிசத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார். இந்தச் சூழ்நிலை சுயமரியாதை இயக்கத்திலும் எதிரொலிக்காதா?
ஈ.வெ.ரா. ஐரோப்பா சென்றிருந்த காலத்தில் தோழர் சிங்காரவேலுவின் தொடர்பு சமதர்ம இயக்கத்திற்கு கிடைத்தது. சிங்காரவேலு "குடியரசுப்" பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகள் சமதர்மம், நாத்திகம் ஆகியவைகளைப்பற்றிய
புத்தொளியையும், புதிய பார்வையையும் சுயமரியாதை இயக்கத்தாருக்கு அளித்தன. பலப்பல மகாநாடுகளில் சிங்காரவேலு முக்கியப் பங்கெடுத்து, சுயமரியாதை இயக்கத்தை சமதர்மத்தை நோக்கி அழைத்துச் சென்றார்.
ஈ.வெ.ரா. இந்தியாவுக்கு திரும்பினார். ஈ.வெ.ரா.வின் இலங்கைப் பிரசங்கம் சோவியத் யூனியனைப் பார்த்ததின் பலனையும், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்களோடு பழகியதன் காரணமாகவும் சமதர்மப் பாதையில் செல்வதாக இருந்தது.
ஈ.வெ.ரா. சோவியத் யூனியனிலிருந்து இங்கிலாந்துக்கு சென்றபோது பல தொழிலாளர் தலைவர்களைச் சந்தித்தார். காலஞ்சென்ற தோழர் சக்லத்வாலாவைக் கண்டு அவரோடு உரையாடி பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொண்டார். இங்கிலாந்தில் மேக்ஸ்பரோலேக் பார்க்கில் ஒரு தொழிலாளர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர் ஒரு சொற்பொழிவாற்றினார். லாண்ட்ஸ்பரிக்கு விடைகூறும் முறையில் ஈ.வெ.ரா.வுக்கு பேச சந்தர்ப்பம் கிடைத்தது. தோழர் சக்லத்வாலா எழுதிக்கொடுத்த பிரசங்கத்தை ஈ.வெ. ரா. படித்தார். அதில் இரண்டொரு கருத்தைக் கீழே தருகிறோம்.
"இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத்தக்க சமூகமாகக் கருதலாம். ஆனால் நாங்கள் பிரிட்டிஷ் தொழிற் கட்சியை ஆட்சியை மிகமிக பரிகசிக்கத்தக்க ஒன்றாகக் கருதுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்."
"இந்தியச் சுரங்கங்களில் 10 மணி நேர வேலை கொடுக்கப்படுகிறது. சுமார் 40 ஆயிரம் பெண்கள் தினம் 15 அணா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்கிறார்கள். இந்தக் கொடுமையையும் ஆபாசத்தையும் போக்க தொழிற்கட்சி அரசாங்கம் என்ன செய்தது?
அவ்வளவோடு மாத்திரம் அல்லாமல், இந்தியா தனது - இந்திய அரசர்களும், ஜமீன்தார்களும், முதலாளிமார்களும், ஐரோப்பிய வியாபாரிகளுமே ஆதிக்கம் வகிக்கும்படியானதும் தொழிலாளிகளுக்கும், பணக்காரர்களுக்குமே பாத்யமும், பொறுப்பும் இல்லாததுமான ஒரு அரசியல் சபை மூலம் நிர்வாகம் கிடைக்கும் படியான காரியத்திற்கு உதவி செய்கிறார்கள். ஆதலால் யார்க்ஷயர் தொழிலாளிகளே! நீங்கள் இந்தப் போலிக் கட்சிகளையும், கொள்கைகளையும் நம்பாமல் மனித சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் உண்மையாகவே போராடுவதற்காக உலகத் தொழிலாளிகளின் ஒற்றுமையை எதிர்நோக்கிக் கொண்டிருங்கள்."
கம்யூனிஸ்ட் சக்லத்வாலவோடு சேர்ந்தபோது ஈ.வெ. ரா. பார்ப்பன ஆதிக்கத்தையும், பனியாசுரண்டலையும் மறந்துவிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் 1932 அக்டோபரில் தஞ்சையில் தங்கள் கட்சி மகாநாடு நடைபெற்றது. கண்டோர், கேட்டோர் எள்ளி நகையாடும்படி மகாநாடு குழப்பத்தில் முடிந்தது. முனுசாமி நாயுடு மந்திரி பதவியிலிருந்தும், கட்சிப் பதவியிலிருந்தும் விலகிக் கொண்டார். அவருக்குபின் பொப்பிலி அரசர் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராகி முதல்மந்திரியானார். இந்த முயற்சியில் சுயமரியாதைக் காரர்களுக்கு முக்கிய பங்குண்டு. தஞ்சையில் நடந்த மகாநாட்டில் சுயமரியாதைக்காரர் அத்தனை பேரும் பொப்பிலி அரசரையே ஆதரித்தார்கள். காரணம் முனுசாமி நாயுடு காங்கிரஸில் அனுதாபமுடையவர் என்பதைப் பல வழிகளில் காட்டிக் கொண்டதேயாகும்.
ஈரோட்டு வேலைத் திட்டம்: இதுவரை சுயமரியாதை இயக்கம் வெறும் சமுதாய சீர்திருத்த இயக்கம் என்று சொல்லிக்கொண்டு வந்தது. மாஸ்கோ வழியை நேரில் கண்டறிந்து வந்த ஈ.வெ. ரா. அதை மாற்றி அரசியல் கொள்கையுடைய இயக்கமாக்க எண்ணினார். தோழர் சிங்காரவேலுவோடு கலந்து ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டது. இதில் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமும், சட்டசபை, சமதர்மவேலைத் திட்டமும் இடம் பெற்றிருந்தன.
சவுந்திரபாண்டியன், வி.வி.ராமசாமி போன்ற சுயமரியாதைப் பணக்காரர்கள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவுகொடுக்கவில்லை சுயமரியாதைச் சங்கத்தின் தலைவராயிருந்த ஆர்.கே.ஷண்முகம் ஈ.வெ.ரா.வின் போக்கை எதிர்த்து கடிதம் எழுதினார்.
சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலவாத வெறும் சமூக சீர்திருத்த இயக்கம் என்று சொல்லிக்கொண்டே ஜஸ்டிஸ் கட்சிக்கு பலம் தேடிவந்த சுயமரியாதைப் பிரமுகர்கள் பலர், முகத்தைச் சுழித்தார்கள். ஆனால் சமதர்மப் பிரசாரமும், கிளர்ச்சியும் இவற்றைச் சட்டை செய்யாமல் முன்னேறிக் கொண்டிருந்தன.
ஈரோட்டு வேலைத்திட்ட கூட்டம் 1932 டிசம்பர் 28, 29ம் தேதிகளில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கெடுத்துக்கொள்ள வேண்டுமென்று, சுயமரியாதைத் தொண்டர்களில் தலைசிறந்தவராயிருந்த தோழர் பொன்னம்பலனார் மூலம் ஈ.வெ.ரா.எனக்கு செய்தி தெரிவித்தார்.
1926-வது வருஷத்திலிருந்து சுயமரியாதை இயக்கத்தின் சமுதாயச் சீர்திருத்தக் கொள்கைகளைப் பரிபூரணமாக ஆதரித்து வந்தேன். அதேபொழுதில் ஜஸ்டிஸ் கட்சியின் அரசியலை, விடாமல் எதிர்த்து வந்தேன். அரசியலில் காங்கிரஸ்காரன் நான். ஆனால் தீவிரவாதி. செங்கல்பட்டு, ஈரோடு, விருதுநகர் மாகாண சுயமரியாதை மகாநாடுகளில் பங்கெடுத்துக்கொண்டேன். அதேபோல், சென்னையில் நடந்த காங்கிரஸ் மகாசபைக்கும், பின்னர் 1931ல் ஈரோட்டில் நடந்த தமிழ்நாடு ஜவான் மகாநாட்டுக்கும் பிரதிநிதியாகச் சென்றேன்.
சுயமரியாதை இயக்கம், அரசியலில் பங்கெடுத்து கொள்ள வேண்டும் என்றும் அதன் அரசியல் ஜஸ்டிஸ் கட்சி அரசியலாக இருக்க கூடாது என்றும், ஈரோடு, விருதுநகர் மகாநாடுகளில் போராடினேன். நான் சுயமரியாதைக் காரர்களிடையேயும் சரி, காங்கிரஸ்காரர்களிடையேயும் சரி, தீவிரவாதியாகவே விளங்கினேன். 1932-ம் போராட்டத்தில் ஜனவரி ஆரம்பத்தில் சிறை சென்று நவம்பர் இறுதியில் வெளிவந்தேன். பகத்சிங்கின் தோழர்களோடும், வங்கப் புரட்சி தலைவர்களோடும், சிறைச் சாலைகளில் விவாதித்தும், மார்க்சிய நூற்களைக் கற்றும் உறுதியான கம்யூனிஸ்ட் அபிப்பிராயத்தோடு சிறையிலிருந்து வெளிவந்தேன். இப்படி வெளிவந்த சந்தர்ப்பத்தில்தான் ஈரோட்டு வேலைத்திட்ட கூட்டத்தின் அழைப்பு, ஈ.வெ. ரா.விடமிருந்து கிடைத்தது.
ஈரோட்டு வேலைத்திட்ட கூட்டத்துக்கு சுயமரியாதைத் தொண்டர்கள் அனைவரும் வந்திருந்தனர். திட்டத்தின் கருத்தைப் பற்றி தோழர் சிங்காரவேலு விளக்கிக் கூறினார். ஈ.வெ.ரா.வும், நானும் ஆதரித்தோம். சுயமரியாதை இயக்கத்தில் அரசியல் கொள்கைகள் வேண்டாம் என்கிற பழைய பல்லவியைப் பாடி சிலர் திட்டத்தை எதிர்த்தனர். எந்தச் சீர்திருத்தத்தையும் நிறைவேற்ற அரசியல் அதிகாரம் வேண்டுமென்றும், அரசியலில் நுழைய விரும்புவோருக்கு நமது இயக்கத்தில் இடமிருக்க வேண்டுமென்றும், சுயமரியாதை இயக்கம் எப்பொழுதும்போல் சமூக இயக்கமாக இருக்கலாமென்றும், அரசியலுக்காக அதற்குள் சமதர்மக் கட்சி என்ற ஒரு தனிப்பிரிவை அமைத்துக் கொள்ளலாமென்றும் விளக்கி எதிர்த்தவர்களுக்கு விடையளிக்கப்பட்டது. எதிர்த்தவர்களும் புதிய திட்டத்தை ஒப்புக்கொண்டனர்.
இதுவரை அரசியல் கூடாது என்ற ஜஸ்டிஸ் கட்சி அரசியலை ஆதரித்துவந்த சுயமரியாதை இயக்கம் இப்பொழுது அரசியல் வேண்டுமென்றும், அந்த அரசியலைத் தாங்கி நிற்கும் கட்சி ஜஸ்டிஸ்கட்சி அல்லவென்றும், சுயமரியாதை இயக்கத்திற்கேற்ற சமதர்மக்கட்சிதான் என்றும் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கது. இது காலவேகத்தின் அறிகுறி.
1933, 34-வது வருஷங்களில் சமதர்ம பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் காட்டுத் தீபோல் பரவிற்று. அதேகாலத்தில், காங்கிரஸ் வாலிபர்களிடையிலும் சோஷலிஸ்டு கொள்கை தலைதூக்க ஆரம்பித்தது. 1930, 32 தேசியப் போராட்டங்களின் தோல்வியைக் கண்டு காந்தியத் தலைமையில் நம்பிக்கை இழந்தனர் தேசிய வாலிபர்கள். தகுந்த புதிய தலைமையைத் தேடினர். மார்க்சிய தலைமைதான் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போருக்கு ஏற்றத் தலைமை என கண்டனர். 1932 -ல் சிறைசென்ற வாலிபர்களில் தீவிர நோக்கமுடையவர்கள் இந்தியாவில் எந்தெந்த சிறைச்சாலைகளில் இருந்தார்களோ, அங்கெல்லாம் போராட்டமும், தலைமையும் என்ற பிரச்சினையைக் கிளப்பி விவாதித்து இதே முடிவுக்கு வந்தனர். சிறைச்சாலைகளிலேயே பல வாலிபர்கள் மார்க்சியவாதிகள் ஆயினர். மீரத் சதிவழக்கும், அதன் முடிவும், இந்த முடிவுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தன. நாசிக் ஜெயிலில் காங்கிரஸ் சோஷிலிஸ்ட் கட்சி பிறந்தது. திருச்சி, சென்னை, பெல்லாரி, அலிப்புரம், வேலூர், கண்ணனூர், கோவை முதலிய ஜெயில்களிலிருந்து பல காங்கிரஸ் வாலிபர்கள் சோஷலிஸ்டுகளாக வெளிவந்தனர். சமதர்மக் கருத்துகளுக்கு, மக்களிடையில் பேராதரவு ஏற்பட்டது. இந்த கற்றுணர்ச்சியில் சுயமரியாதைக்காரர்களின் சமதர்மப் பிரசாரத்தைக் கேட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.
பிற்போக்கு அரசியல்வாதிகள் ஈரோட்டு திட்டத்தைக் கண்டு நடுங்கினர். சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமை இயக்கமாக மாறிவிட்டதென்று கூச்சலிட்டனர். பழைய சுயமரியாதை காரர்களில் பலர் கட்சியின் போக்கு பிடிக்கவில்லையென்று ஒதுங்கினர். சிலர் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாவோம் என்று, அஞ்சி மறைந்தனர். ஆனால் புதியவர்கள் பலர் இயக்கத்தில் சேர்ந்து கொண்டே இருந்தனர். அந்த நாளில் காங்கிரஸைவிட சமதர்ம இயக்கத்திற்கு, தமிழ் மக்களிடம் அமோகமான ஆதரவு இருந்தது. அந்தக் காலத்திலும்கூட ஈ.வெ. ரா. தனது காங்கிரஸ் எதிர்ப்பு திருப்பணியை சமதர்மப் பிரச்சாரப் போர்வைக்குள் நின்றும் நடத்திவந்தார். ஒரு உதாரணம்:
"பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வேலை செய்யாமல் சமூக முற்போக்கு எப்படி ஏற்படும்? ஒரு சமூகத்துக்கு பொருளாதாரமும் அரசியலும் அவசியமானதா? அல்லவா? நீங்கள் இரண்டையும் விட்டுவிட்டுச் செய்யும் முற்போக்காக நமது சுயமரியாதை இயக்கம் தேவையே இல்லை. சும்மா அலங்காரமாக - வேடிக்கையாக புராண முட்டாள்தனத்தையும், பார்ப்பன சூழ்ச்சியையும் பேசிக் காலம் கழிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கம் என்றால், அது அழிந்துபோவதே மேலான காரியம் என்று சொல்வேன்."
"வருணாசிரமம் இருக்க வேண்டும், ஜாதி இருக்க வேண்டும், ராஜாக்கள் இருக்க வேண்டும், முதலாளிகள் இருக்க வேண்டும், மதம் இருக்க வேண்டும், வேதம், புராணம், இதிகாசம் இருக்க வேண்டும், இன்றைக்கு இருக்கிறவைகள் எல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு, இவைகளை எல்லாம் பலப்படுத்தி நிலைக்க வைக்கவேண்டி - "வெள்ளைக்காரன் மாத்திரமே போக வேண்டும்" என்கிற காங்கிரஸோ, சுயராஜ்ஜியமோ, தேசியமோ, காந்தியமோ சுயமரியாதை இயக்கத்திற்கு வைரியேயாகும். ஆகையால் சுயமரியாதை இயக்கத்தாரால் அழிக்கப்பட வேண்டியவைகளில் இந்தக் காங்கிரஸும், காந்தியமும் முதன்மையானவைகளாகும்."
(1933ல் திருப்பத்தூர் மகாநாட்டில் பேசிய பேச்சு)
மேற்படி பேச்சில் பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வேலை செய்யாமல் சமூகப் போக்கு எப்படி ஏற்படுமென்று கேட்டு, அரசியல் மதிப்பைக் குறைத்துப் பேசிய சென்ற காலத்தவர்களைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்கிறார். புராண முட்டாள்தனத்தையும் பார்ப்பனச் சூழ்ச்சியையும் பேசிக் காலங்கழிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கம் என்றால், அது அழிந்து போவதே மேலென்று ஆணித்தரமாக எடுத்துக்காட்டி சமதர்மக் கருத்தைப் பெருமைப்படுத்துகிறார். ஆனால் அதே பேச்சின் பிற்பகுதியில், 'பழைய கருப்பன் கருப்பன்', 'பழைய மண் கிண்ணி மண்கிண்ணி' பழைய ஈ.வெ. ரா. ஈ.வெ.ரா. பழைய காங்கிரஸ் எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு என்றே பேசியிருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். காங்கிரஸைக் குறைகூறுவது சமதர்மக் கண்ணோட்டத்தில் தவறில்லை, குறைகூறுவது தேசிய இயக்கத்தை வளப்படுத்தி முன்னேறுவதற்காக இருக்கவேண்டும். தேசிய இயக்கத்தை உருக்குலைப்பதாக இருக்கக்கூடாது. ஆனால் ஈ.வெ.ரா.வோ "முதன் முதலில் அழிக்கப்பட வேண்டியது காங்கிரஸ்தான்" என்கிறார் சொற்பொழிவில்.
இந்தக் காலத்தில், சமதர்ம இலக்கியமாக சின்னஞ்சிறு நூற்கள் வெளியிடப்பட்டன. 'சோஷலிசம்', 'உழைப்பாளிகளுக்கு ஏன் உலகமில்லை?' போன்ற நூற்கள் குடியரசுப் பதிப்பகத்திலிருந்து வெளிவந்தன. ஈ.வெ.ரா.வின் இன்றைய பாஷையில் இந்த நூற்களின் ஆசிரியர்கள் இருவரும் ஆரியர்கள். இருவரும் இந்தியர் ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள். 'சோஷலிசம்' எழுதியவர் நரசிம்மன். ஏ.ஏ. அடுத்த புத்தகத்தை எழுதியவர் கே.ஜி.சிவசாமி. நரசிம்மனின் கட்டுரைகள் 'குடியரசிலும்' 'புரட்சியிலும்' அடிக்கடி வெளிவந்தன. எனக்குத் தெரிந்தவரையில், நரசிம்மனின் எழுத்துக்களில் ஆரிய சூழ்ச்சி பொதிந்து கிடக்கிறதென்று ஈ.வெ.ரா. என்றும் சொன்னதில்லை. 'பொது உடைமை தத்துவங்கள்' (திருச்சி ஜெயிலில் வைத்து ஒரு தீவிர காங்கிரஸ் இளைஞரால் மொழிபெயர்க்கப்பட்டது) 'ஐந்தாண்டுத் திட்டம்' என்ற இரண்டு நூல்களும் முறையே, ஏங்கல்ஸையும், ஐலின் என்ற ரஷ்ய ஆசிரியரையும், ஆசிரியர்களாகக் கொண்ட சிறந்த மார்க்சிய நூல்கள்.
ஜமீன்தார் அல்லாதார் மகாநாடு, லேவாதேவிக்காரர் அல்லாதார் மகாநாடு இந்தக் காலகட்டத்தில் வந்தவைகளே. இந்த மகாநாடுகளில் பொப்பிலி அரசர்களும், சர் முத்தையா செட்டியார்களும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. இந்தக் காலத்தில் தான் அ.இராகவனின் அருமுயற்சியால் 'பகுத்தறிவுக் கழகம்' தோன்றி பகுத்தறிவு நூல்கள் பல வெளிவந்தன. சிங்காரவேலு, பிரம்மச்சாரி போன்றவர்களின் நூல்களும் இங்கர்சால், பெர்னார்ட் ரஸ்ஸல், ஜீன் மெஸ்லியர், போன்ற ஆசிரியர்களின் மொழிபெயர்ப்புகளும் குறிப்பிடத்தக்கவை.
தமிழ்நாட்டில் பெரும்பரபரப்பை எழுப்பிய "சென்னை மாகாண பகிரங்க நாத்திகர் மாநாடும்" "காந்தி பகிஷ்கார ஆர்ப்பாட்டங்களும்" நடந்தது இந்தக் காலத்தில் தான். இவைகளுக்கெல்லாம் ஈ.வெ.ரா.வுக்கு நேரடியான சம்பந்தமில்லை. 'ஈ.வெ.ரா.' 'குடியரசில்' எழுதிய "இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்" என்ற தலையங்கத்திற்காகத் தண்டிக்கப்பட்டார். ஜஸ்டிஸ் கட்சி அதிகாரத்திலும் பொப்பிலி முதலமைச்சர் பீடத்திலும் இருந்த பொழுதுதான் ஈ.வெ. ரா. தண்டிக்கப்பட்டார். 'குடியரசு' ஜாமின் கேட்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பின்னர் தோன்றிய கட்சிக்கும் ரூ.2000 ஜாமின் கேட்கப்பட்டு நிறுத்தப்பட்டது. "குருட்டு முதலாளிகளும் செவிட்டு சர்க்காரும்" என்று 'புரட்சியில்' பம்பாயில் நடந்த பொது வேலைநிறுத்தத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரைகளுக்குத்தான் இந்த ஜாமின்.
'மே தின' விழா கொண்டாடப்பட்டது, சுயமரியாதை சமதர்மிகளால் தொழிலாளர் மகாநாடுகளும் அங்கே நடைபெற்றன. மாகாண சமதர்ம மகாநாடு மன்னார்குடியில் சிங்காரவேலு தலைமையில் நடைபெற்றது.
இந்தச் சந்தர்ப்பத்தில் தோழர் அமீர் ஹைதர் அலிகான் சென்னைக்கு வந்து கம்யூனிஸ்டுக் கட்சி வேலையில் ஈடுபட்டிருந்தார். சுந்தரய்யா, கம்மம்பாடி, சத்திய நாராயணா, பி.ஸ்ரீனிவாச ராவ் போன்றவர்கள் அவரால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இழுக்கப்பட்டார்கள். அவர்களிடையிலும் நகரசுத்தித் தொழிலாளர்களிடையிலும் இவர்களுக்குத் தொடர்பு இருந்தது. பின்னர் இந்தக் கோஷ்டி தொழிலாளர் பாதுகாப்புக் கழகமாக வேலை (Labour Protection League) செய்தது.
1934: இந்த வருஷத்தில்தான் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதமானதென்று தடைசெய்யப்பட்டது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியும் பிறந்தது இந்த வருஷம்தான். ஜவஹர்லால் நேருவின் "இந்தியா எங்கே போய்க்கொண்டிருக்கிறது?" என்ற காங்கிரஸ் முன்னணிப் படைக்குப் புதிய வெளிச்சம் கொடுத்த கட்டுரையும் இந்த வருஷத்திலேயே வெளிவந்தது. காங்கிரஸில் தீவிரவாதம் மேலோங்கிற்று. பம்பாய் காங்கிரஸுக்குப்பின் காந்திஜியும் காங்கிரஸிலிருந்து விலகினார்.
ஈ.வெ.ரா. - ஜெயப்பிரகாஷ்: ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஈரோட்டில் ஈ.வெ.ரா.வை சந்தித்தார். தமிழ்நாட்டில் சமதர்ம நோக்கம் கொண்ட சுயமரியாதைக்காரர்கள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியாக இயங்கவேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார். நீண்ட விவாதத்திற்குப் பிறகு ஈ.வெ. ரா.வும் ஒப்புக்கொண்டு சுயமரியாதை இயக்கத்தை காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியோடு இணைத்து விடுவதைப் பற்றி முடிவுகட்ட சுயமரியாதை இயக்க தொண்டர் கூட்டம் ஒன்று கூட்டுவதாகவும் ஒப்புக்கொண்டார். இது சம்பந்தமாக ஜெயபிரகாஷைச் சந்திக்கும்படி, அப்பொழுது ஜோலார்பேட்டையில் சமதர்மம் என்ற வாரத்தாளின் ஆசிரியராக இருந்த எனக்கு தந்தியும் கொடுத்தார்.
இரண்டு தினங்களுக்குப்பின் "சமதர்மம்" ஆரம்ப விழாவுக்கு வந்த ஈ.வெ.ரா.வோடு, சுயமரியாதைக்காரர்கள் காங்கிரஸில் சேர்வது பற்றியும், காங்கிரஸ் சமதர்மக் கட்சியில் இணைந்து விடுவது பற்றியும் நான் கலந்து பேசியபொழுது, ஈ.வெ.ரா. காங்கிரஸில் சேர இணங்கினார். ஆனால் அன்றே மாலையில் நடந்த கூட்டத்தில், "சில வாலிபர்கள் காங்கிரஸ் மேனியா பிடித்து நிற்கிறார்கள்" என்றும் அதற்கு சுயமரியாதை இயக்கம் ஒருநாளும் இடம் கொடாது என்றும் பேசினார் "ஷணச்சித்தம் ஷணப்பித்தம்" பெரியார்களிடமும் உண்டு.
இந்தியா சட்டசபைத் தேர்தல்: "குடியரசைப்" புரட்டிப்பாருங்கள். முதல் வாரத்தில் தேர்தலில் சுயமரியாதைக்காரர்கள் கலந்து கொள்வதைப் பற்றி மாவிலும் படாமல் மாங்காயிலும் படாமல் எழுதினார், ஈ.வெ.ரா. அடுத்த வாரத்தில் ஆர்.கே.சண்முகத்திற்கும் டாக்டர் நாயுடுவுக்கும் ஆதரவாகப் பேனாவை நாட்டினார்.
எந்த அரசியல் கட்சிக்கும், தேர்தல் குறைத்தென்னவோ, புறக்கணிக்கவோ தக்கதல்ல. சமதர்ம வேலைத்திட்டம் வகுத்துவிட்ட சுயமரியாதைக்காரர்களும் இந்திய சட்டசபை விஷயத்தில் முக்கியக் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மகாநாட்டையோ மாகாணத் தொண்டர் கூட்டத்தையோ கூட்டி, தக்க முடிவு எடுத்திருக்க வேண்டும். சிங்காரவேலு, ஈ.வெ.ரா. போன்றவர்கள் தேர்தலில் போட்டி போட்டிருக்க வேண்டும். வெற்றி பெறாமற்போனாலும் பிரச்சார மதிப்பேனும் ஏற்பட்டிருக்கும். அத்தகைய முறையான நடவடிக்கைகள் எவையும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஈ.வெ.ரா. தானடித்த மூப்பாக (சர்வாதிகாரமாக) காங்கிரஸை எதிர்த்து, ஆர்.கே. சண்முகத்தையும் டாக்டர் நாயுடுவையும்
தேர்தலில் ஆதரித்தார், பேசினார், எழுதினார். ஆர்.கே.சண்முகம் சமதர்மத் திட்டத்தை எதிர்த்தவர். டாக்டர் நாயுடு சுயமரியாதை இயக்கத்தையே பழித்தவர்.
காங்கிரஸ் எதிர்ப்பு, ஈ.வெ.ரா.வை சமதர்மத் திட்டத்தைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியச் செய்தது, சமதர்ம எதிரியைத் தாங்கிநிற்கத் தூண்டிற்று, சுயமரியாதை இயக்கத்தை அவமரியாதை செய்தவரை ஆதரிக்க வைத்தது.
இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே, சுயமரியாதை மாகாண மகாநாடு கூட்டவேண்டுமென்றும் அதில் சமதர்மத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் பலகாலும் பலவிடத்தும் சுயமரியாதைக்காரர்கள் கோரினர். இந்தக் கோரிக்கையை ஒரு காதொடிந்த ஊசியளவு கூட மதிக்கவில்லை, ஈ.வெ.ரா. சுயமரியாதை சங்கத்தை 'ரிஜிஸ்டர்' செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை மதித்தாரா? தொண்டர்களின் நோக்கு அறிந்து, நடந்து கொண்ட விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற பட்டுக்கோட்டைத் தொண்டர் மகாநாட்டுத் தீர்மானத்தை மதித்தாரா? மன்னார்குடி, சுசீந்திரம் முதலிய இடங்களில் சத்தியாகிரகம் செய்வது பற்றி, ஈரோட்டு மகாநாட்டில் நிறுவிய சத்தியாகிரகக் கமிட்டியின் சிபாரிசை மதித்தாரா? சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களை சுயமரியாதைக்காரர்கள் மதித்தார்களேயொழிய அவர் மதித்தாரா? சுயமரியாதை வட்டாரத்தில் ஈ.வெ.ரா. வைத்தது சட்டம், இட்டது வழக்கமாகத்தானே நடந்து வந்திருக்கிறது?
ஆகவே ஈ.வெ.ரா. தன்னிச்சையாக ஒரு திட்டத்தைத் தயாரித்து (அதைத்தான் பின்னால், பொதுவுடமை என்பது இன்னதென்று புரியாதவாக்கில் ஈ.வெ.ரா.வின் பொதுவுடமைத் திட்டம் என்று பிரமாதப்படுத்தினார்கள்) அதை ராஜாஜிக்கும் பொப்பிலி அரசருக்கும் (கோவையில் நடந்த தமிழ் மாகாண மகாநாட்டுக்கும், சென்னையில் நடந்த ஜஸ்டிஸ் மாகாண மகாநாட்டுக்கும்) அனுப்பினார். அந்த திட்டத்தை ஒத்துக்கொள்கிறவர் கட்சியை தேர்தலில் ஆதரிப்பதாகவும் சொன்னார்.
ஜஸ்டிஸ் கட்சியினர் ஈ.வெ.ரா.வின் திட்டத்தை (ஈரோட்டுத் திட்டத்தை அல்ல) ஒப்புக்கொள்வதாக உறுதிகூறி சென்னை மகாநாட்டில் இதற்காக ஒரு கமிட்டியையும் தேர்ந்தெடுத்தனர். ஈ.வெ.ரா.வும் பிரிந்திருந்த ஜஸ்டிஸ் கட்சியை மனதாரத் தழுவினார்.
பின்னர்தான், மேலே குறிப்பிட்ட இந்தியச் சட்டசபைத் தேர்தல் நடந்தது. ஜஸ்டிஸ் கட்சி அபேட்சகர்கள் அனைவரும் போட்டியில் கோட்டைவிட்டனர்.
இச்சமயத்திலும் சில சுயமரியாதைக்காரர்கள் ஈ.வெ.ரா.வின் போக்கில் வெறுப்படைந்து காங்கிரஸில் சேர்ந்தனர். ஈ.வெ.ரா. தனது பக்த கோடிகளுக்கு "தோல்வியில் கலங்கேல்" என்றும் 'கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல' என்றும் தேறுதல் சொன்னார். பார்ப்பனரல்லாத வாலிபர்களுக்கு புதிய தத்துவ உபதேசமும் செய்தார். அதாவது "வகுப்பு வாதத்தால்தான் சமதர்மம் அடைய முடியும் என்று நினையுங்கள்!" என்றார். (18.11.1934 பகுத்தறிவு தலையங்கம்)
மேலும், "காங்கிரஸ் வாயிலாக சமூகச் சீர்திருத்தம் செய்ய முடியாது. அதைச் சமதர்ம நோக்கத்திற்காகத் திருப்ப முடியாது. ஜஸ்டிஸ் கட்சியின் மூலமே அதைச் சீர்திருத்தம் செய்ய முடியும். அதை சமதர்மக் கட்சியாகவும் ஆக்கிவிட முடியுமென்றும்" ஈ.வெ.ரா. அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். (தமிழர் தலைவர் பக்கம்149)
காங்கிரஸை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஸ்தாபனமாகவும் ஜஸ்டிஸ் கட்சியை ஏகாதிபத்திய அடிமைக் கும்பலாகவும் கருதிய கம்யூனிஸ்ட் பாதையில் மேற்கூறிய கருத்துகள் உண்மைகளாகப்பட முடியாது. தனக்குத் தோன்றியபடி எல்லாம் எண்ணவும், பேசவும், எழுதவும், நடக்கவும் துணிச்சலுள்ள ஈரோட்டு பாதையில் தான் மேற்கூறிய கருத்துகள் அசைக்கவியலாத உண்மைகளாகப்பட முடியும்.
நான் நாஸ்திகன் ஏன்?
ஈ.வெ.ரா.வின் வேலைத்திட்டத்தை ஒப்புக்கொள்வதைப் பற்றிய ஜஸ்டிஸ் கட்சியின் ஆராய்ச்சி அனுமார் வால்போல் நீண்டு கொண்டேயிருந்தது. அரசாங்கத்தார் மீண்டும் திடீரென்று 1935ல் பத்திரிக்கைக்கு ஜாமின் கேட்டனர். பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக வெளியீடான நான் நாத்திகன் ஏன்? வரலாறு ஆயிற்று.
இந்நூல் பகத்சிங் இறுதிக் காலத்தில் தனது தந்தைக்கு எழுதிய ஒரு கடிதத்தின் அதன் மொழிபெயர்ப்பை தமிழாக்கியது நான்.
வெளியிட்டவர் என்பதற்காக; ஈ.வெ.கிருஷ்ணசாமியும், மொழி பெயர்த்தவர் என்பதற்காக என்னையும் கைது செய்தனர்.
சுயமரியாதை இயக்கத்தின் மீது சர்க்காரின் கோபப்பார்வை விழுந்தது. அதிகாரத்தில் இருந்த பொப்பிலி அரசரின் ஜஸ்டிஸ் கட்சி, தேர்தலில் ஈ.வெ.ரா. ஜஸ்டிஸ் கட்சிக்கு தோள்போட்டு, அதனைச் சமதர்மக் கட்சியாக்கியதன் விளைவுதான், அது இந்த அடக்குமுறைக்கு உடந்தையாக இருந்ததற்குக் காரணம். இதில் வெட்கக்கேடு என்னவென்றால் இந்த நடவடிக்கைக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூச்சநாச்சமில்லாமல் சொன்னதுதான்.
மன்னிப்பு: சர்க்காரின் அழிவு நடவடிக்கையைக் கண்டு ஈ.வெ.ரா. மிரண்டார். சமதர்மத்திற்கு விரோதிகளான ஆர்.கே சண்முகம் போன்றவர்கள் தருணத்தைத் தவறவிடாமல் செயல்பட்டனர். ஏற்கனவே உள்நாட்டு மந்திரியாய் இருந்த பன்னீர்செல்வம், சி.வி.நாயுடு மூலம் நாத்திக பொதுவுடமைப் பிரச்சாரத்தை நிறுத்திவிட வேண்டுமென்றும் இல்லாவிட்டால் கட்சியை சர்க்கார் அழித்துவிட முடிவு கட்டிவிட்டது என்றும்
ஈ.வெ.ரா.வை மிரட்டிய கதையும் நமக்குத் தெரியும். என்னை மானங்கெட்ட தனமாக மன்னிப்பு கொடுத்துவிட்டு வெளிவரும்படி ஈ.வெ.ரா. கே.எம்.பாலசுப்பிரமணியம் மூலம் ஒரு கடிதத்தை சிறைச்சாலைக்கு அனுப்பிக் கட்டாயப்படுத்தினார்.
'பெரிய நாயக்கர்' (ஈ.வெ.கி) வேண்டுமானால் மன்னிப்பு கொடுத்துவிட்டுப் போகட்டும் என்றும் நான் முடியாதென்றும் ஒரே பிடிவாதமாகக் கூறினேன். நான் மன்னிப்புக் கொடுக்காவிட்டால் இயக்கம் அழிக்கப்பட்டுவிடும் என்றும் இது சர்க்கார் சட்டத்தை நன்றாக அறிந்த ஆர்.கே.சண்முகம் போன்றவர்களின் கருத்து என்றும், தானே மன்னிப்பும் பொறுப்பும் என்று குடியரசில் எழுதிவிடுவதாகவும் ஈ.வெ.ரா. கட்டாயப்படுத்தினார் - கே.எம்.பாலசுப்பிரமணியம் மூலம்.
"இந்த நிலைமையில் சுயமரியாதை இயக்கம் நாட்டில் குழப்பத்தை உண்டாக்கும் கொள்கையை உடைய பொதுவுடமை இயக்கமல்ல" என்று அரசாங்கம் நம்பும்படி ஏதாவது செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் "இவ்வியக்கம் இதுவரையிலும் செய்து வந்த பலன் முழுவதும் பாழாகிவிடும் போலிருந்தது. இந்த அரசாங்கத்தின் உண்மை நோக்கத்தை அறிந்த நண்பர்கள் பலரும் இயக்கம் உயிரோடு இருக்க ஏதாவது செய்யும்படி யோசனை கூறினர்" என்று எழுதினார். ஆர்.கே.சண்முகம் உற்ற உதவியாயினார். மத்திய சர்க்கார் தலையில் பழியைப் போட்டு, மாகாண சர்க்கார் உடையவும் ஜஸ்டிஸ் கட்சி உடைய குற்றவாளித்தனத்தை மறைத்தார். பொதுவுடைமை இயக்கமல்ல என்று அரசாங்கத்தை நம்ப செய்ய வேண்டுமென்று எண்ணுகிற, எழுதுகிற அளவுக்கு சாக்கடையில் சறுக்கி விழுந்தார். தான் உயிரோடு இருக்க (யாருக்காக?) பிற்போக்கு கும்பல்களின் யோசனைப்படி யார் காலையும் பிடிக்கத் துணிந்தார்.
சுயமரியாதை - சமதர்மத்திற்காக உயிரைவிடத் தயாராய் இருந்த ஆயிரக்கணக்கான வாலிபர்களின் மானத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் பொப்பிலி சர்க்காருக்கும் அடகு வைத்தார்.
1935 மார்ச் 10ஆம் நாள் குடியரசு மூலம் மானங்கெட்டத்தனமான ஒரு அறிக்கையை வெளியிட்டார், அறிக்கையின் இறுதிப் பகுதியினை கீழே தருகிறோம்.
"சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது பார்ப்பன ஆதிக்கக் காங்கிரஸை எதிர்த்து அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும், சமுதாயத்தில் ஜாதி, மத பேதங்களை அகற்றுவதும், மூடப் பழக்கங்களை ஒழிப்பதும், பொருளியல் சமதர்மம் ஆகிய இவைகளைப் பற்றிய விஷயங்களை மக்களிடையில் பிரச்சாரம் செய்யவும் அமலுக்கு கொண்டுவரவும் ஆன காரியங்கள் நடைபெற வேண்டும். காங்கிரஸ் ஆட்சியை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகுநாளைய அபிப்பிராயம்."
ஈரோட்டுப் பாதையில் கண்ட பொதுவுடைமைப் போர்முறையை பழைய சரித்திரம் தெரியாமல், நல்லெண்ணத்துடன் புதிதாகத் திராவிடக் கழகத்தில் சேர்ந்துள்ள இளைஞர்கள் கவனிக்க வேண்டுகிறோம்: காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சி மேலானதென்பது ஈரோட்டு பாதை கண்ட உண்மை. காங்கிரஸை எதிர்ப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் ஏகாதிபத்திய அரசாங்கத்தோடு ஒத்துழைக்கத் தயாரென்பது ஈரோட்டுப் பாதையின் அரசியல் கொள்கை.
இதே ஈ.வெ.ரா. "பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கசாப்புக் கடைக்காரன். ஜமீன்தார்களும் முதலாளிகளும் வாடிக்கைதாரர்கள். இந்தியப் பொதுமக்கள் ஆடுகள்" என்றார்.
இதே ஈ.வெ.ரா. ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவத்தையும் ஒழித்தால்தான் பார்ப்பனச் சூழ்ச்சியும் மூடநம்பிக்கைகளும் ஒழியுமென்று திருப்பத்தூர் மகாநாட்டில் பேசினார்.
இதே ஈ.வெ.ரா. "பகத்சிங்கை வாலிபர்கள் பின்பற்ற வேண்டும்" என்றார்.
இதே ஈ.வெ.ரா. "மீரத் சதிவழக்கில் தண்டனை அடைந்த கம்யூனிஸ்ட்களின் லட்சியம்தான், மனித வர்க்கத்தின் விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் நல்வாழ்விற்கும் அவசியமானது" என்றார்.
ஏன்? ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் புரட்சியிலும் கம்யூனிஸத்திலும் தணியாத காதல் கொண்டிருந்த இளங்காளைகளை ஏமாற்றி, காங்கிரஸ் எதிர்ப்புப் பாதையில் தன்வழிக்கு இழுத்துக்கொள்ளவே, பல சந்தர்ப்பங்களிலும் இவ்வாறு பேசினார்.
இந்திய சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சியை ஈ.வெ.ரா. ஆதரிக்கத் தொடங்கியதும் தோழர் சிங்காரவேலுவும் நானும் எதிர்த்தோம். 'சமதர்மம்' பத்திரிகையில் ஈ.வெ.ரா.வைத் தாக்கி நான் எழுதினேன். சிங்காரவேலுவும் ஈ.வெ.ரா.வின் போக்கை 'போலி சுயமரியாதை' என்று கண்டித்தார்.
திருத்துறைப்பூண்டி மகாநாடு: ஈ.வெ.ரா. மன்னிப்புக் அறிக்கை கொடுத்த பிறகு, உண்மையான சுயமரியாதை சமதர்மிகள் ஈ.வெ.ரா.வின் தலைமையை வெறுத்தனர். தங்கள் கருத்து வேற்றுமையை உறுதியாகச் சொல்ல ஆரம்பித்தனர்.
நான் ஜெயிலிலிருந்து வந்தது முதல், சுயமரியாதை இளைஞர்களின் மானத்தை பிற்போக்குக் கும்பலான ஜஸ்டிஸ் கட்சிக்கு பாதகாணிக்கை வைக்கத் துணிந்த தலைமையால் ஒரு தூசளவு நன்மைகூட நாட்டிற்கு வராது, அந்தத் தலைமை சுயமரியாதைத் தலைமையுமல்ல என்று செல்லும் திசையெல்லாம் சொல்லத் தொடங்கினேன். ஈ.வெ.ரா.வைச் சந்திக்கும் கூட்டங்களிலும் மகாநாடுகளிலும் சுயமரியாதைத் தலைமையின் பிற்போக்கைப் புட்டுப்புட்டு வைக்கத் தவறியதில்லை நான்.
ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை போலித்தனத்தை சிங்காரவேலு 'புதுஉலகம்' பத்திரிக்கை மூலம் விடாமல் தாக்கிவந்தார். நானும் 'குறைவும் நிறைவும்' 'வகுப்புவாரி பிரதிநி- தித்துவம்' 'முக்யாம்சம் எது'? ஆகிய 'புது உலகத்தில்' வெளிவந்த கட்டுரைகள் மூலம் தப்பிதத்தைச் சரிபோல் காட்ட தனி வியாக்கியானம் செய்யும் ஈ.வெ.ரா.வின் அசகாய சூரத்தன்மையையும், தன்போக்கே உண்மையான சுயமரியாதைக் கொள்கை என்று கோணற்கழி வெட்டும் ஈ.வெ.ரா.வின் போலி வாதங்களையும் உடைத்தெறிந்து சுயமரியாதைச் சமதர்மிகள் ஈ.வெ.ரா.வின் மாயவலையில் விழாமல் தடுத்துவந்தேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில் திருத்துறைப்பூண்டியில் சுயமரியாதை மகாநாடு நடந்தது. அதில் நான், ஈ.வெ.ரா. சுயமரியாதைக்காரர் அல்லவென்றும் இதுவரை சுயமரியாதைக் கொள்கைகள் என்று சொல்லிவந்தவைகள் ஈ.வெ.ரா.வின் தலைமையில் வெற்றிபெற முடியாதென்றும், கடவுளையும் காந்தியையும் தூக்கி எறிந்துவிட்டு பகுத்தறிவின் வழியில் செல்லும் வாலிபர்கள் பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் விரோதமாகச் செல்லும் ஈ.வெ.ரா.வின் தலைமையையும் தூக்கி எறிந்துவிட்டு முன்னேறவேண்டுமென்றும் வாலிபர்களைக் கேட்டுக்கொண்டேன்.
1. ஈரோட்டில் சமதர்ம வேலைத் தீர்மானத்தை நிறைவேற்றினார் பின்னர் சமதர்ம விரோதிகளான ஆர்.கே.சண்முகம், ஏ.ராமசாமி முதலியார்களைத் தேர்தலில் ஆதரித்தார் ஈ.வெ. ரா.
2. சுயமரியாதை இயக்கத்தின் அரசியலுக்காக சமதர்மக் கட்சி வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, ஜஸ்டிஸ் கட்சிக்குத் திரும்பவும் ஓடினார் ஈ.வெ.ரா.
3. ஜமீன்தார் - அல்லாதார் மகாநாடு கூட்டி, பொப்பிலி முதல் எல்லா ஜமீன்தாரிகளும் ஒழியவேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, பொப்பிலி அரசர் சிறந்த சமதர்ம வீரர் என்று பாராட்டி, பொப்பிலி தலைமையைப் புகழ்ந்தார். ஈ.வெ.ரா..
4. லேவாதேவிக்காரர் - அல்லாதார் மகாநாடு கூட்டி, லேவாதேவிக் காரர்களெல்லாம் ஒழிய வேண்டுமென்று சரமாரியாகச் சொல் மாரி பொழிந்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, குமார ராஜா முத்தையா செட்டியாரோடு கொஞ்சிக்குலாவினார். ஈ.வெ.ரா.
5. மதங்களெல்லாம் ஒழிய வேண்டுமென்று விருதுநகர் மாகாண சுயமரியாதை மகாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இஸ்லாம் மார்க்கம் நல்லதென்றும் அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேருங்களென்று பிரச்சாரம் செய்தார் ஈ.வெ.ரா.
6. திருநெல்வேலி மகாநாட்டில் கொள்கைப் பரப்பலில் ஈடுபட்ட சுயமரியாதை இயக்க முக்கிய ஊழியர்களைத் தாக்கி அவர்தம் கொள்கையைப் பழித்த சோமசுந்தரபாரதியாரை ஆதரித்து 'குடியரசில்' தலையங்கம் எழுதினார் ஈ.வெ.ரா.
இவைகளையும் இவைபோன்ற பல சம்பவங்களையும் எடுத்துக்காட்டி, ஈ.வெ.ரா.வின் தலைமையை வெட்டவெளிச்ச மாக்கினேன் நான். என்னைத் தொடர்ந்து நீலாவதியும், வல்லத்தரசும் ஈ.வெ.ரா.வின் தலைமையிலுள்ள குறைபாடுகளை விளக்கிப் பேசினார்கள்.
பதில் கூறுமுகத்தான் ஈ.வெ.ரா. "நான் ஏகாதிபத்தியத்திற்குப் பயந்துவிட்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். என்னை ஏன் வந்து வெறுக்கிறீர்கள்" (அவருடைய சொந்த வார்த்தை) பணக்காரர்கள் இல்லாமல் எந்த இயக்கமும் இருக்காது. என் போக்குப்பிடிக்காவிட்டால் இஷ்டப்படி நடந்து கொள்ளுங்களேன் என்று பொருள்படப் பேசினார். பின்னர் வெளியான 'குடியரசு' தலையங்கங்களிலும் இதே கருத்தையே வலியுறுத்தினார்.
சமதர்ம வேலைத்திட்டம் பிடியாதிருந்த பழைய பக்தர்கள் ஈ.வெ.ரா.வைச் சூழ்ந்தனர். சுயமரியாதை சமதர்மிகள் ஈ.வெ. ரா.வை விட்டு விலகிப்போயினர்.
திருத்துறைப்பூண்டி மகாநாட்டுக்குப்பின், ஈ.வெ.ரா.வின் வழியிற்செல்ல சமதர்மிகள் மறுத்தனர். பிற்போக்குக் கும்பல்களோடு அவர் கூடிக்குலாவி வந்ததை அவர் எழுத்திலும், பேச்சிலும் கண்டு அவர் சமதர்ம வழியைக் கடந்து சென்றதையும் வெறுத்தனர்.
நானும், நீலாவதியும் வல்லத்தரசும் ஏனைய தோழர்களும் தமிழகம் முழுவதிலும் முடிந்தவரை சமதர்மப் பிரச்சாரத்தை நடத்தி வந்தோம்.
நான் சென்னையில், குறிப்பாக பி.அண்டு.சி. மில் தொழிலாளர்களிடையிலும் அச்சுத் தொழிலாளர்களிடையிலும் கோவையில் பஞ்சாலைத் தொழிலாளர்களிடையிலும் பொன்மலையில் ரயில்வே தொழிலாளர்களிடையிலும் நெல்லிக்குப்பம் பாரி அண்டு கம்பெனித் தொழிலாளர்களிடையிலும் தொடர்பு ஏற்படுத்தி வந்தேன்.
அன்று, சட்டவிரோதமாக வந்துகொண்டிருந்த 'கம்யூனிஸ்ட்' என்ற ஆங்கிலப் பத்திரிக்கையை தஞ்சை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, ஈரோடு முதலிய ஊர்களுக்கு விநியோகம் செய்யும் பொறுப்பு என்னுடையதாயிருந்தது. காங்கிரஸ் இளைஞர்களில் சமதர்மப் பற்றுடையவர்களோடும் தமிழ்நாடு முழுவதிலும் எனக்குத் தொடர்பு இருந்தது.
சமதர்மப் பாதையில் சென்ற இளைஞர்கள் தடம் மாறிப் போகாதிருக்கவும் அவர்களிடம் கொழுந்துவிட்டெரிந்த சமதர்ம உணர்ச்சி 'ஆறின கஞ்சி பழங்கஞ்சியாக ஆகாமல் இருக்கவும்' தமிழக முழுவதும் சமதர்மப் பிரச்சாரம் தீவிரப்படுத்தவும், ஒரு கட்சி அவசியமென்ற சூழ்நிலை ஏற்பட்டது.
தென்னூர் கூட்டம்: 12.4.36-ல் திருச்சி தென்னூரில் வல்லத்தரசு தலைமையில் சுயமரியாதை சமதர்மக் கட்சி அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பிரதி- நிதிகள் வந்திருந்தார்கள். நானும் கே.ஏ.யும் முன்முயற்சி எடுத்துக் கொண்டோம். கே.ஏ.யிடம் பம்பாயிலிருந்து அக்காலத்தில் நாடு கடத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் அவசியம் பற்றி பல தோழர்கள் விளக்கினர். டாக்டர் எம்.கிருஷ்ணசாமியை அதன் தலைவராகவும் என்னைப் பொதுக் காரியதரிசியாகவும் நீலாவதியையும் அ.இராகவனையும் கூட்டுக் காரியதரி- சிகளாகவும், ஜில்லாவாரியாக அங்கத்தினர்களையும் கொண்ட ஒரு மாகாண நிர்வாகக் கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது.
நிறைவேறிய தீர்மானங்களில் மிக முக்கியமான இரண்டு தீர்மானங்களைக் கீழே தருகிறேன்.
1. "சமதர்ம லட்சியங்கொண்டு திகழ்ந்த சுயமரியாதை இயக்கம் உருக்குலைந்து நிற்பதால், சமதர்ம லட்சியத்தைக் கட்டுப்பாட்டோடு மும்மரமாகப் பரப்புவதற்காக
சுயமரியாதை சமதர்மக் கட்சி என்ற பெயரோடு மேற்படி இயக்கத்தில், விளைந்த தீவிரப்பகுதியை ஒரு கட்சியாக இக்கூட்டம் அமைக்கிறது."
2. "சுயமரியாதை இயக்கம் ஏகாதிபத்திய ஆட்சி முறையையும் முதலாளித்துவம் பொருந்திய கட்சிகளையும் ஆதரித்து வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது." (அறிவு 1936 மே இதழ்)
மேற்படிக் கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களை எண்ணிப்பார்த்தால், அந்த நாளில் அவர்களைவிட உண்மையும் உறுதியும் கொண்ட சிறந்த ஊழியர்களும் பொறுப்பாளிகளும் சுயமரியாதை இயக்கத்தில் இல்லை என்று துணிந்து கூறலாம். அவர்களில் பலர் அன்று சுயமரியாதை இயக்கத்திற்குத் தூண்களாக விளங்கினவர்கள். பல மகாநாடுகளில் தலைமை வகித்தும், பல பொறுப்புகள் ஏற்றும் ஈ.வெ.ரா.விடமும் சுயமரியாதை அன்பர்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர்கள். அவர்களெல்லாம் ஈ.வெ.ரா.விடமுள்ள தனித்த துவேஷத்தாலோ, கேட்டபொழுதெல்லாம் 'பெரியார்' அவர்களுக்குக் காசுபணம் வாரி வழங்கவில்லை என்ற சில்லறைக் கோபத்தாலோ, எதிர்ப்பைக் கண்டு மிரண்டதாலோ தியாகம் செய்யப் பயந்ததாலோ, இயக்கத்தைவிட்டு ஓடிப்போன உதிரிகள் என்றும் ஈ.வெ.ரா.வுக்குத் தொந்தரவு கொடுப்பதற்காகவே புதுக்கட்சி ஆரம்பித்தார்களென்றும், வழக்கமாகச் சொல்ல வந்திருக்கிற, வருகிற பொய்ச் சமாதானங்கள் மூலம் குற்றப்படுத்தி விட முடியாதவர்கள்.
அவர்கள் ஈ.வெ.ரா.வை விட்டு விலகியதும், கண்டித்ததும், ஈ.வெ.ரா. ஏகாதிபத்திய ஆட்சிமுறைக்கு அடிபணிந்துவிட்டாரென்பதும், பொப்பிலி, முத்தையா செட்டியார், சாமியப்பா முதலிய பிற்போக்கு முதலாளி வர்க்கத்திற்கு ஏஜெண்டாகி விட்டாரென்பதுமாகிய காரணங்களால் தான். அவர்கள் புதுக்கட்சியை ஆரம்பித்தது, ஈ.வெ.ரா. புறக்கணித்துவிட்ட சமதர்மப் பிரச்சாரத்தைக் கட்டுப்பாட்டோடு மும்மரமாக நடத்துவதற்காகத்தான். மேலே காட்டியுள்ள தீர்மானங்களில், இந்தக் கருத்துகள், சந்தேகத்திற்கு இடமின்றி எதிரொலிப்பதை சமதர்மத்தில் அல்லது பொது உடைமையில் உண்மையான ஆர்வமும் அதே மூச்சில் அதை அடைவதற்கு ஈ.வெ.ரா.வின் தலைமையில் நம்பிக்கையும் வைத்திருக்கும் திராவிடக்கழக இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். மேலும், 'அறிவு' பத்திரிக்கையில் 1935 ஜுன் இதழில் சமதர்மக்கட்சியின் அவசியத்தைப்பற்றி நான் எழுதியுள்ள நீண்ட கட்டுரையைப் படித்துப்பார்ப்பது, 'ஈரோட்டு பாதைக்கும்' சமதர்மத்திற்கும் உள்ள தொடர்பைப்பற்றித் தெரிந்துகொள்ளப் பெருந்துணைபுரியுமென்று திராவிட கழக இளைஞர்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.
அன்று சுயமரியாதை இளைஞர்களாகிய நாங்கள், ஈ.வெ. ரா.வை விட்டுப்பிரிந்து என்ன செய்வதற்காகப் புதுக்கட்சி அமைத்தோம் என்று, இன்று உண்மையான சமதர்ம உணர்ச்சியோடு, ஈ.வெ.ரா.வை நம்பிநிற்கும் திராவிடக் கழக இளைஞர்கள் உணர்ந்து பார்க்க, அன்று நான் எழுதிய கட்டுரை- யிலிருந்தே ஒருசிறு பகுதியைக் கீழே தருகிறேன்.
சுயமரியாதை சமதர்மிகளாகிய எங்கள் வேலை, இதற்குமுன் சுயமரியாதைக்காரர்கள் செய்தமாதிரியாக, மனம்போன போக்கில் கத்துவதும் எழுதுவதுமாக இல்லாமல் தொழிலாளி, விவசாயி சங்கங்கள் காண்பதிலும், இருக்கும் சங்கங்களில் ஒத்துழைப்பதிலும், கட்சித் தோழர்கள் விஷயஞானம் பெறும் பயிற்சிக் கூடங்களைக் (Study circle) காண்பதிலும், வாலிபர் கழகங்கள் நிறுவுவதிலும் சமதர்மத்தை விஞ்ஞான ரீதியாக விளக்கும் துண்டுப்பிரசுரங்களையும் புஸ்தகங்களையும் தமிழில் வெளியிடுவதிலும், விவசாயிகள், வாலிபர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்டவர்கள் இவர்களிடையே பேசும் பொழுது (சுயமரியாதைக்காரர்களைப்போல எல்லா விஷயங்களையும் போட்டு ஒரே குழப்பமாகக் குழப்பாமல்) விஞ்ஞான ரீதியாக அவர்களுக்கு அறிவுறுத்துமாறு, பொருளாதாரத்தை அஸ்திவாரமாகக் கொண்டு திறம்படப் பேசத் தகுந்த பிரசங்கிகள் ஆண்களிலும் பெண்களிலும் பலரைத் தயார் செய்வதிலும் எங்களுடைய பெருங்கவனத்தையும் காலத்தையும் செலவிடுவோம். இத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் உறுதுணையும் கொடுக்கும் யாரையும் சுயமரியாதைச் சமதர்மிகள் நன்றாக வரவேற்பார்கள். வறட்டுப் பிடிவாதத்தால் (Dogmatism) முற்போக்காளர்கள் தங்கள் கட்சிக்காரர்களல்ல என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களோடு ஒத்துழைத்து சமதர்மம் அடைவதற்கு வேண்டிய பொதுஜன சக்தியைப் பெருக்குவதைத் தடைப்படுத்த மாட்டார்கள்.
சுயமரியாதை சமதர்மிகள், மத்தியதரவர்க்கப் புத்திசாலிகளிடம் (Middle Class Intellectuals) சமதர்மத்தைப் பரப்புவதற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்தியைப் பெருக்குவதற்கும் காங்கிரஸ் அபேதவாதக் கட்சியாரோடு தோளோடு தோள் நின்று தொண்டாற்றுவார்கள். தொழிலாளர் விஷயத்தில் அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸோடு (AITUC) இணங்கி நிற்பார்கள். விவசாய சங்கங்களை நாடு முழுவதும் நிறுவுவதற்குச் சிறப்பாக முயற்சி எடுத்துக் கொள்வார்கள்.
இளந்தமிழர்கள் இக்கட்சியில் கலந்து உழைக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து பார்ப்பார்களாக:
இந்தக் காலத்தில்தான் சென்னை மாகாண தொழிற்சங்க காங்கிரஸ் நிறுவப்பட்டதும், நான் தலைவராகவும் சுந்தரய்யா (ஆந்திர கம்யூனிஸ்ட் தலைவர்) பொதுக்காரியதரிசியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அகில இந்திய அச்சுத் தொழிலாளர் மகாநாடு நடைபெற்றதும், நானும் சிங்காரவேலு செட்டியாரும் நீலாவதியும் பங்கெடுத்துக்கொண்டதும் இந்தக் காலத்தில்தான். சென்னையில் தீவிர வாலிபர் மகாநாடு நடைபெற்றது இத்தருணத்தில்தான்.
இதே காலக்கட்டத்தில் 'ஈரோட்டு பாதை'யினைப் பார்ப்போம்.
சமதர்மம் என்ற பேச்சு மறைந்தது. சுயமரியாதை சங்கங்கள் மறைந்தன. அக்காலத்தில் குடியரசைப் புரட்டிப்பார்த்தால் முன்போல 'சமதர்மமும்' 'சுயமரியாதையும்' பலபடக் காணப்பட்ட நிலைமை மாறி, அத்தி பூத்ததுபோல் அருமையாகப் போய்விட்டது தெரியவரும்.
சுயமரியாதைக் கட்சி, சமதர்ம கட்சிகளை காற்றுவாக்கில் பறக்கவிட்டார் ஈ.வெ.ரா. சௌந்தரபாண்டியன், கி.ஆ.பெ. விஸ்வநாதம், சி.டி.நாயகம், டி.பி.வேதாசலம் (இவர்கள் சமதர்மப் பிரச்சாரக் காலத்தில் ஈரோடு வேலைத்திட்டக் கூட்டத்திற்குப் பிறகு விலகி இருந்தவர்கள்) ஆகியவர்களோடு இணங்கி ஈ.வெ.ரா.வால் பார்ப்பனரல்லாதார் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. ஈ.வெ.ரா.வும் அவரைப் பின்பற்றியவர்களும் ஜஸ்டிஸ் பார்ப்பனரல்லாதார் கட்சிப் பிரச்சாரத்திலேயே லயித்து விட்டனர்.
சுயமரியாதை சமதர்ம மகாநாடு: 1936 நவம்பர் 1ம் தேதி திருச்சியில் தமிழ்நாடு சுயமரியாதை சமதர்ம மகாநாடு நடைபெற்றது. அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பக் கர்த்தாக்களில் ஒருவரான டாங்கே முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். மகாநாட்டின் பிரதான நோக்கம், தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சியை காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியோடு இணைக்க வேண்டியது என்பது.
ஹிட்லர் அதிகார பீடத்திலேறிய பின்னர், உலகத்தில் நாசிசம் சீறி எழ ஆரம்பித்தபிறகு, மக்கள் முன்னணியில் மகத்தான ஒற்றுமை ஏற்படவேண்டியது என்றுமில்லாத அளவு தேவைப்பட்டது. அதுவரை ஏனைய இடதுசாரி கட்சிகளோடு ஒன்றுபட்டு போராடாது வந்த கம்யூனிஸ்ட் அகிலம் 1934- ல் முன்கையெடுத்து, ஐக்கிய முன்னணி நிறுவ ஒவ்வொரு நாட்டிலும் முயன்றது. இந்தியாவிலும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தை வலுப்படுத்த ஐக்கிய முன்னணி முயற்சி ஆரம்பமாயிற்று. கம்யூனிஸ்ட்கள் சோஷலிஸ்ட்களோடு ஐக்கிய முன்னணிக்கு முயன்றனர். காங்கிரஸ் மகாசபையை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி ஸ்தாபனமாகக் கண்டனர்.
தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக்கட்சி மட்டும் தனித்துநின்று ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முறியடித்துவிட முடியாதென்று கண்டும், அகில இந்திய சமதர்ம ஸ்தாபனமான காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் கலந்துவிடுவதைதான், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை வலுப்படுத்தித் துரிதப்படுத்தத் தக்கவழி என்று தெரிந்தும் மகாநாட்டில் சுயமரியாதை சமதர்மக் கட்சியைக் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியோடு இணைத்துவிடுகிறதென்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தை டாங்கேயும் நானும் விளக்கிக்கூறிய பின்னர் அது ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
தமிழ்நாடு சோஷலிஸ்ட் மகாநாடு
பின்னர் இரண்டொரு மாதங்களில் தமிழ்நாடு சோஷலிஸ்ட் கட்சி மகாநாடு சேலத்தில் அகில இந்திய சோஷலிஸ்ட் கட்சியின் கூட்டுக்காரியதரிசியாக இருந்த திகார் மேத்தா தலைமையில் நடந்தது. சுயமரியாதை சமதர்மிகளும், காங்கிரஸ் சமதர்மிகளும் நல்ல பிரதிநிதித்துவத்தோடு மகாநாட்டில் கலந்துகொண்டனர். நான் பொதுக் காரியதரிசியாகவும், சீனிவாசராவும் நீலாவதியும் கூட்டுக் காரியதரிசிகளாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.
இவ்வாறு உலக முழுவதிலுள்ள மார்க்சியவாதிகள் போல் சுயமரியாதைச் சமதர்மிகளும் இந்நாட்டில் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி நிறுவும் பாதையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வந்தோம். அதேசமயத்தில் ஈரோட்டு பாதையில் சென்றவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு - ஜஸ்டிஸ் கட்சிக்கு - விளம்பர ஏஜெண்டுகளானார்கள். "குதிரை கீழே தள்ளியது மட்டுமல்ல, குழியையும் பறித்த கதைபோல்" சமதர்ம இயக்கத்தைக் கைகழுவினது மட்டுமல்லாமல் ஜமீன்தார் - பொப்பிலி அரசரையும் லேவாதேவி முதலாளி - முத்தையா செட்டியாரையும், பெருமிராசுதார் சாமியப்பாவையும் சமதர்மிகளாக்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்துவரும் தேர்தலில் நல்ல அறுவடை செய்துவிடலாமென்று மனப்பால் குடித்து ஜஸ்டிஸ் கட்சிக்கு சமதர்ம மெருகு கொடுக்க என்னென்னவோ செய்துகொண்டிருந்தார் ஈ.வெ.ரா.
37வது ஆண்டு தேர்தல்: எல்லாத் தீவிரக் கட்சிகளும், சகல ஜனநாயக சக்திகளும் காங்கிரஸிலேயே ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை ஸ்தாபிக்கும் நோக்கோடு, காங்கிரசைத் தழுவி நின்றன. நாடு முழுவதிலுமுள்ள சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸ் வெற்றியின் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்பு வெற்றிக்காகப் போராடினர். அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரசும் அகில இந்திய கிஸான் சபையும் காங்கிரஸையே தேர்தலில் ஆதரித்தன.
ஆனால் ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை அல்லது ஈரோட்டு பாதை ஏகாதிபத்தியத்தின் நித்ய அடிமைகளும், ஜமீன்தாரி, நிலச்சுவான்தாரி, முதலாளிவர்க்கப் பிற்போக்குக் கும்பல்களுமான ஜஸ்டிஸ் கட்சியாரை ஆதரித்தது ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை எதிர்த்து, ஜனப்பிரவாகத்தை எதிர்த்தார் ஈ.வெ.ரா. எதற்காக? உளுத்துப்போன உதவாக்கரை ஜமீன்தார்களையும், பண மூட்டைகளையும் அதிகாரப்பீடத்தில் ஏற்றி வைத்து அழகு பார்க்க.
அவர் தேர்தலில் ஆதரித்த 'ஜஸ்டிஸ்' பிரமுகர்களின் அங்க அடையாளங்களைச் சிறிது அலசுவோம்.
பி.டி.ராஜன்: மக்களால் வெறுக்கப்பட்ட பினாமி மந்திரி சபையில் ஒரு தூண் ஜமீன்தார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குப் பல்லக்கு தூக்குவதும், பழனி ஆண்டவனுக்குக் காவடி தூக்குவதும், மோட்ச சாதனங்கள் என்பதில் முழுநம்பிக்கையும் கொண்டவர். சமதர்மப் பிரச்சாரத்தை நசுக்க, பன்னீர்செல்வத்தோடும், பாத்ரோவோடும் சேர்ந்து தலைகீழாக நின்றவர்.
ஜம்புலிங்க முதலியார்: தென்னாற்காடு ஜில்லாவின் குட்டி ஹிட்லர். ஜில்லாபோர்டு நிர்வாகத்தை பணம் காய்க்கும் மரமாக அனுபவித்த அதிர்ஷ்டசாலி. பொதுமக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட வள்ளல்.
ஈஸ்வர மூர்த்தியாபிள்ளை: நெல்லை ஜில்லா போர்டின் காட்டுராஜா, வைத்ததுதான் சட்டம், தன்னுடையதுதான் ஆணை என்று அமல் நடத்தி மக்களின் வெறுப்பையும், சாபத்தையும் பரிபூரணமாகச் சம்பாதித்த பண்ணையார், ஜஸ்டிஸ் கட்சிப் புலி.
இப்படிப்பட்ட 'பொதுஜன ஊழியர்கள்' தான் ஜஸ்டிஸ் கட்சியின் பேரால், காங்கிரஸோடு போட்டி போட்டார்கள் தேர்தலில் அவர்கள் வெற்றி பெறத்தான் 'ஈரோட்டுப் பெரியார்' பாடுபட்டார். இராப்பகலாக. மத்திய சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் அபேட்சகர் (திருச்சி - தஞ்சை தொகுதிக்கு டாக்டர் ராஜனோடு போட்டிபோட்ட வைதீகப் பிள்ளை எம்.கே.ஆச்சாரியாரை, ஈ.வெ.ரா.வைப் பின்பற்றிய சுயமரியாதைக்காரர்கள் ஆதரித்தார்கள் என்ற உண்மையறிந்த யாரும், 37வது வருஷத் தேர்தலில், ஈ.வெ.ரா. ஜம்புலிங்கம், ஈஸ்வரன்பிள்ளை போன்ற முக்கிய சிகாமணிகளையும் பி.டி.ராஜன் போன்ற ஏகாதிபத்திய அடிவருடிகளையும், ஆதரித்ததில் ஆச்சரியப்படமாட்டார்கள். ஆனால் ஈ.வெ. ரா.வை சிறந்த சமதர்மப் பாதுகாவலர் என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறது திராவிட கழகம். நல்லிளைஞர்களுக்கு அப்பெரியாரின் சென்ற காலத்தின் தர்ம சேவையை உணர்த்தவே இதைக் குறிப்பிடுகிறேன். பிற்போக்கு கும்பல்களை, ஏகாதிபத்திய பாதம் தாங்கிகளை பணத்திமிர் கொண்ட பெருந்தனக்காரர்களை பொதுமக்கள் விரோதிகளை அரசியல் பீடத்தில் அமரச்செய்வதுதான் அனுபவ சாத்தியமான 'சமதர்மம்' என்று ஒரே சாதிப்பாகச் சாதித்தார் 'ஈரோட்டு பாதை' கண்ட பெரியார்.
தேர்தலில் மக்கள் தீர்ப்பு கூறினர். ஜஸ்டிஸ் கட்சியின் முதுகெலும்பு முறிந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகள் வெற்றிக்கொடி நாட்டின. 'ஜஸ்டிஸ் கட்சி'யின் அபேட்சகர்கள் எல்லோரும் ஒருவர் பாக்கியில்லாமல், பொதுஜன எழுச்சியின் முன் மண்ணைக்கவ்வினர். ஆனால் ஈரோட்டுப் பாதையில் சென்றவர்களுக்கு மட்டும் மீசையில் மண் ஒட்டவில்லை.
மந்திரிசபை எதிர்ப்பு: 1935-ம் வருஷ அரசியல் சீர்த்திருத்ததின்படி மாகாண சுயாட்சி ஏற்பட்டது. காங்கிரஸ் மந்திரி சபைகள் அமைக்கப்பட்டன. காங்கிரஸ் மந்திரிசபை பொதுமக்கள் மந்திரி சபையாகவே நூற்றுக்குநூறு பங்கு அமல் நடத்தவேண்டுமென்றும், குறிப்பிட்ட வரையறைக்குள் கிடைத்துள்ள அதிகாரம் முழுவதையும் பொதுமக்கள் நலனுக்காகவே உபயோகித்து, தேசியப் போராட்டத்தை பலப்படுத்தி, புதிய அரசியல் சட்டத்தை உடைக்க வேண்டுமென்றும் கோரி, தீவிரசக்திகளும் ஜனசக்திகளும் மந்திரி சபையை ஆதரித்தன. பொதுஜன மந்திரிசபைக்கு பொதுவாக ஆதரவு அளித்தபோதிலும் மந்திரிசபைகள் எடுத்துக்கொண்ட ஜனவிரோதமான நடவடிக்கைகளை காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, கிஸான்சபை, தொழிற்சங்கக் காங்கிரஸ் போன்ற தீவிரக் கட்சிகளும் ஸ்தாபனங்களும் கண்டிக்கவோ, எதிர்க்கவோ, தயங்கினதுமில்லை, தவறினதுமில்லை.
ஈ.வெ.ரா. அகில இந்தியாவிலும், மக்கள் சென்ற வழியில் சென்றாரா? இல்லை, அப்படிச் செல்வது அவருடைய பகுத்தறிவுக்கு எப்படிப் பொருந்தும்? பழைய வண்டியில் பழைய பாதையிலேயே சென்றார். தமது சொற்பொழிவுகள் மூலமும், 'குடியரசு', 'விடுதலை' ஆகிய பத்திரிக்கைகள் மூலமும் காங்கிரஸ் ஆட்சியை வெட்டி வீழ்த்த தமது அழிவு கோடாலியை இடைவிடாமல் பாய்ச்சி வந்தார்.
தீவிரவாதிகள் எல்லோரும் மந்திரிசபை சறுக்கி விழுந்த பொழுதெல்லாம் கைதூக்கிவிட்டு ஆக்க ரீதியில் குற்றத்தைக் கண்டித்தார். முதலாளிகளிடமும், நிலச்சுவான்தார்களிடமுமிருந்து குறைந்தபட்சக் கோரிக்கைகளைப் பெற்று அதன் மூலம் ஜனசக்தியையும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தையும் வலுப்படுத்த சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், தொழிலாளர், விவசாயிகளுக்குத் தலைமை வகித்துப் போராடினார்களே, மந்திரி சபையின் அடக்குமுறைக்கு மார்பைக் காட்டினார்களே, அவர்களோடு ஈ.வெ.ரா.
சேர்ந்தாரா, அல்லது அதுமாதிரி பொதுமக்களின் உடனடியான பிரச்சனைகளை எடுத்துப் போராட்டங்களை நடத்தினாரா? அந்தச் சமயங்களில் மந்திரிசபை கையாண்ட ஜனவிரோத நடவடிக்கைகளை தேசபக்தர்கள் உணரும் விதத்தில் ஆக்க ரீதியாகத் தாக்கினாரா? இல்லை. ஈ.வெ.ரா.வோ மந்திரிசபை சறுக்கி விழுந்தபொழுதெல்லாம் அதை மிதித்துச் சாகடித்துப் புதைக்கக் கங்கணம் கட்டினார். ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், தமது நாசவேலைக்கு அதிகபட்சம் உபயோகிக்க, கண்ணில் எண்ணெயை ஊற்றிக்கொண்டு காரியத்தில் ஈடுபட்டார். காங்கிரஸின் வெற்றியையும், அதிகார அதிர்ஷ்டத்தையும் கண்ட பலசந்தர்ப்பவாதச் சுயநலப் பச்சோந்திகள், காலத்திற்குத் தக்கபடி கோலத்தை மாற்றிக்கொண்டு, அழிந்துபோன ஜஸ்டிஸ் கட்சிக் காட்டைத் துறந்து, விளைந்து கிடந்த காங்கிரஸ் காட்டுக்குப் பறந்து போயின. மிச்சமுள்ள காங்கிரஸ் விரோத நொண்டிக்குதிரைகளைத் திரட்டி தமது பரம்பரை அறப்போரை நடத்த முயன்றார்.
இந்தி எதிர்ப்பு: இந்தச் சந்தர்ப்பத்தில் ராஜாஜி இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கினார். வெறும் வாயையே மென்று கொண்டிருந்த கிழவிக்கு ஒரு வாய் அவல் கிடைத்தது.
தமிழ் உயர் தனிச்செம்மொழி. சூரியனிடமிருந்து ஒளிபெற வேண்டிய சந்திரன் அல்ல அது. வடமொழியின் அல்லது வேறு எம்மொழியின் கடாட்சமின்றியும் தனித்தியங்கத் தமிழால் முடியும். தாய்மொழி போதிய வளர்ச்சியும் வசதியும் பெறாதுநிற்க, பொதுமக்கள் மந்திரி சபை இந்தியைக்கட்டாயமாக்கத் துணிந்தது அரசியல் விவேகமல்ல, முறையுமல்ல.
தமிழைத் தெய்வமாக வணங்கிய மரபில் வந்து, மறுமலர்ச்சி பெறாத தமிழர்களுக்கு, ராஜாஜி இந்தியை கட்டாயப்பாடமாக்கியது, ஆத்திரத்தை அளித்தது. ஈ.வெ.ரா. சந்தர்ப்பத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். எரிகிற நெருப்பில், எண்ணெயை வார்த்தார். கட்டாய இந்தியை எதிர்த்து, காங்கிரஸ் மந்திரி சபைக்கு ஓரளவுக்குத் தொந்தரவு கொடுக்க முடிந்தது.
உண்மையான, தமிழ் ஆர்வமுள்ள, ஆனால் அரசியல் தெளிவற்ற வாலிபர்களும், அகழியில் விழுந்து அதுவே வைகுண்டம் என்ற தமிழ்ப் பண்டிதர்களும், 'பார்ப்பன ஆரிய' விரோதிகளும் ஜஸ்டிஸ் கட்சி இளைஞர்களும் ஈ.வெ.ரா. பக்தர்களும் இந்தி - எதிர்ப்புக் கிளர்ச்சியில் கலந்து சிறைசென்று, 'செத்த சவமாக'க் கிடந்த ஈரோட்டுப் பாதைக்குச் சிறிது புத்துயிர் கொடுத்தனர். ஈ.வெ.ரா.வும் அவரோடு கிளர்ச்சியில் தலைமை வகித்தவர்களும், கட்டாய இந்தி - எதிர்ப்போடு நிற்காமல் தமிழ்ப் பற்றுதலையும் தமிழ் மதிப்பையும் மாத்திரம் உயர்த்துவதற்கு மேற்படி வாய்ப்பை உபயோகப்படுத்தாமல், அதே கிளர்ச்சியை காங்கிரஸ் மந்திரிசபை ஒழிப்புக்குத் திருப்பிவிட்டனர். அதுவரையில் 'தலையிடாக்கொள்கை' அனுஷ்டித்த சோஷலிஸ்ட்களாகிய நாங்கள், இந்தி எதிர்ப்பு - மேல்பேச்சு, மந்திரி சபை ஒழிப்புதான் உள்நோக்கம் என்பதைக் கண்டதும், இந்தக் கிளர்ச்சியின் நோக்கத்தை எதிர்த்தோம். ஜஸ்டிஸ் கட்சிக்குப் பயன்தேடவும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கவும் ஈ.வெ.ரா. செய்த சூழ்ச்சியை அம்பலப்படுத்தினோம் "இந்தி அவசியமா?" என்ற 11.6.38ல் வெளிவந்த 'ஜனசக்தி' தலையங்கம் குறிப்பிடத்தக்கது.
இந்தி எதிர்ப்பின் பேரால் பொதுஜன மந்திரி சபையைக் கவிழ்க்க - கட்டாய இந்தி நுழைவை எதிர்த்து, தமிழுக்கு முதலிடம் கொடுக்கும் அளவில் மாத்திரமல்ல, செய்த முயற்சியை சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், தீவிரகாங்கிரஸ்வாதிகள் ஆகிய நாங்கள் எல்லோரும் எதிர்த்தோம். ஆனால் அதே மூச்சில் இந்தி - எதிர்ப்புக் கிளர்ச்சியை அடக்க கிரிமினல் திருத்தச் சட்டத்தைப் பிரயோகித்தது பொதுஜன ஆட்சிக்குப் பெரிய களங்கமென்று அழுத்தமாகக் கண்டிக்கவும் செய்தோம்.
தமிழர் இயக்கம்: இந்தி - எதிர்ப்புக் கிளர்ச்சியில் தமிழ்ப் பெரும் புலவர் சோமசுந்தர பாரதியாரும், தமிழ்ப்பற்றும் ஜஸ்டிஸ் கட்சிப் பிடிப்பும் கொண்ட சி.என்.அண்ணாதுரை, கி.ஆ.பெ.விஸ்வநாதம் முதலியவர்களும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களாக சி.டி.நாயகம். ஏ.வி.நாதன் முதலியவர்களும் மறை திருநாவுக்கரசு போன்ற தனித்தமிழ் அன்பர்களும் இன்னும் பலரும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டனர். திருச்சியில் தமிழர் மகாநாடு ஒன்றுகூட்டப்பட்டது. தமிழார்வமும், கட்டாய இந்தி - எதிர்ப்பு உணர்ச்சியும் ஜஸ்டிஸ் கட்சி அனுதாபமும் காங்கிரஸ் விரோதமும் கொண்ட இளைஞர்களும், பண்டிதர்களும் ஓரளவிற்குத் திரண்டனர். ஈ.வெ.ரா. தமிழ்ப் பாதுகாவலராக புத்தவதாரம் செய்தார் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற கோஷம் கிளம்பிற்று. தமது அரசியல் நோக்கத்திற்குப் படைதிரட்ட மேற்படி கோஷத்தை நன்றாக உபயோகப்படுத்தினார் ஈ.வெ. ரா. இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியில் சிறைசென்றுவந்த பெண்கள் சென்னையில் ஒரு மகாநாடு கூட்டி ஈ.வெ.ரா.வை 'பெரியார்' என்ற அடைமொழி கொடுத்து அழைக்க வேண்டுமென்றும் தீர்மானித்தனர்.
தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம், சர்வ கட்சி தமிழ் மக்களையும் பெருவாரியாக இழுத்திருக்க வேண்டுமல்லவா? அப்படி நடந்தா? இல்லை, ஏன்? அந்த கோஷம் காங்கிரஸ் - எதிர்ப்பு, காங்கிரஸ் மந்திரி சபை எதிர்ப்பையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்தது. அதோடு, தீவிர சக்திகளை தழுவி நிற்கவில்லை. அதே பொழுதில் தேர்தலில் சிதைந்துபோன 'ஜஸ்டிஸ்' கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கம் அதில் பச்சையாகத் தெரிந்தது.
தமிழர் இயக்கமல்ல - 'ஜஸ்டிஸ்' கிளர்ச்சிதான்: எல்லா தமிழர் பொது இயக்கம் அல்ல அது. அது ஜஸ்டிஸ் கட்சி மீண்டும் பலம் திரட்ட கையாண்ட நூதன மார்க்கம் என்பதை பின்னர் நடந்த சம்பவங்கள் தெள்ளத் தெளிவாக்கின. ஜஸ்டிஸ் கட்சியார் சென்னையில் மாகாண பார்ப்பனரல்லாதார் (ஜஸ்டிஸ்) மகாநாட்டைக் கூட்டினர். ஒரு மனதாக பெரியாரைத் தேர்ந்தெடுத்தனர். இதில் முக்கியப் பங்கெடுத்துக் கொண்டவர்கள் ஏகாதிபத்தியத் தரகர்களும், லட்சுமி புத்திரர்களுமான சர்.பன்னீர்செல்வம், குமாரராஜா போன்றவர்களே என்பதை மறந்து விடக் கூடாது. ஏனென்றால் ஈரோட்டு பாதை (ஈ.வெ.ரா. சமதர்மம்) ராஜாக்களும் 'சர்'களும் தலைவராகக் கொண்டாடும் சந்தர்ப்பத்தை 'பெரியாருக்கு' அளித்ததல்லவா?
ஈ.வெ.ரா. இந்தி - எதிர்ப்பில் சிறைசென்ற போதும் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் "சுயமரியாதை இயக்கமும் தமிழர் இயக்கமும், இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியும், ஜஸ்டிஸ் இயக்கமும்" ஒன்று என்றே குறிப்பிடுகின்றார். நாடு முழுவதிலும் முற்போக்குக் கட்சிகள் இடதுசாரிக் கோஷ்டிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை வலுப்படுத்த காங்கிரஸின் வலது சாரித் தலைமையின் பிற்போக்கை அம்பலப்படுத்தியும் காங்கிரஸ் போராட்டப் பாதையில் செல்ல வேண்டிய அவசியத்தை வற்புறுத்தியும் காங்கிரஸின் உள்ளிலும், வெளியில் பொது ஜன ஸ்தாபனங்கள் மூலமும் போராடிவந்தனர். சோஷலிசம் தோன்ற ஏகாதிபத்திய ஒழிப்பு முதற்பெரும் வேலை என்ற தெளிவான கருத்துக் கொண்ட சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் பார்வர்ட் பிளாக் காரர்கள் கூட காங்கிரஸில் உள்ளில், இடதுசாரி ஒற்றுமைக் கமிட்டி (Left Consolidation Committee) நிறுவிப் போராடினர். வெளியில் தொழிற்சங்கங்களையும் கிசான் சபைகளையும் மாணவர் கழகங்களையும் அமைத்துப் போராடினர் உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்ட் சோஷலிஸ்ட் கட்சிகள் இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டணியை ஆதரித்தன. காங்கிரஸை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி மேடையாகக் கருதின.
ஈ.வெ.ரா.வோ, ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராக இருந்து, பொப்பிலி, குமாரராஜா, சர்.பன்னீர்செல்வம், சாமியப்பா ஆகிய பிற்போக்கு சுரண்டல் கூட்டத்தின் பிரதிநிதியாக காங்கிரசை அழிவுக் கண்ணோடு எதிர்த்து வந்தார்.
காங்கிரசைத் தாக்குவதில் ஈ.வெ.ரா.வும், அவரைப் பின்பற்றியவர்களும் எவ்வளவு பாதாளத்திற்கும் இறங்கி, சாக்கடையை அள்ளி வீசினர். ராஜாஜி மந்திரிசபை எதைச் செய்தாலும் - நல்லது பொல்லாதது என்று பகுத்துப்பார்க்காமல் - தாக்கி வந்தனர். மதுவிலக்கு அமலுக்கு வந்ததும், ஈ.வெ. ரா.யிஸ்டுகள் கள்ளுக்குடிப் பிரச்சாரத்தில் மும்முரமாக முனைந்தனர். ஈ.வெ.ரா.வே டாக்டர் அக்ராயிடைத் தோற்கடித்து கள்ளில் என்ன என்ன 'வைட்டமின்கள்' இருக்கின்றன என்பதை பொதுக் கூட்டங்களில் விரிவாக வர்ணித்துச் சொல்மாரி பொழிந்து, கள்குடிக்கு ஆதரவு தேடி மதுவிலக்கைக் கொண்டு வந்த மந்திரி சபைக்கு எதிர்ப்புத்தேட பகிரங்கப் பகீரதப் பிரயத்தனம் செய்தார். ஆசை வெட்கம் அறியாதன்றோ?
காங்கிரஸ் எதிர்ப்பில் ஜின்னாவுக்கும், முஸ்லீம் லீக்குக்கும் பரிபூரண ஆதரவு அளித்தார். தமிழ்நாட்டின் ஜின்னாவாக விளங்கினார்.
காங்கிரஸ் எதிர்ப்பில் டாக்டர் அம்பேத்கார் என்ன சொன்ன போதிலும் அதை அப்படியே விழுங்கி அவரோடு இரண்டறக்கலந்து நின்றார் ஈ.வெ.ரா.
இவ்வாறு, தமிழ்நாட்டு முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் திரட்டி, காங்கிரஸ் எதிர்ப்புக்கும் ஜஸ்டிஸ் பணமூட்டைகள் ஆதரிப்புக்கும் பலிகடாக்களாக்கும் தமது சூழ்ச்சிக்கு பலம் தேட முயன்றார்.
ஜின்னா, அம்பேத்கார் ஆகியவர்கள் தயவை நாடி ஒருமுறைக்கு இருமுறை வடநாட்டுக்கு காவடி எடுத்தார் ஈ.வெ. ரா. - காங்கிரஸ் - எதிர்ப்பு ஐக்கிய முன்னணி நிறுவ.
சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் துரோகியான எம்.என். ராய், ஏகாதிபத்தியத்தின் கூலிப்பிரச்சாரகரான எம்.என்.ராய், காங்கிரஸை விட்டு விலகி ஓடி, பிறகு ஏகாதிபத்தியத் தாசனாகி, காங்கிரஸை தாக்க ஆரம்பித்த பிறகு ஈ.வெ.ரா. ராயின் ஆருயிர்த் தோழரானார்.
உலக யுத்தம்: உலகம் முழுவதிலுமுள்ள மக்களுடைய கட்சிகளும் ஸ்தாபனங்களும் யுத்தத்தை எதிர்த்தன. ஏகாதிபத்திய யுத்தத்தில் மக்கள் பலியாகக் கூடாதென்று யுத்த எதிர்ப்புக் கிளர்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டன. காங்கிரஸ் யுத்த எதிர்ப்பு அடிப்படையில் மந்திரி எதிர்ப்பு அடிப்படையில், மந்திரிப் பதவியை ராஜிநாமாச் செய்தது. நம்நாட்டிலும் உலக முற்றிலும் இந்நடவடிக்கையை முற்போக்கு சக்திகள் வரவேற்றன. ஈ.வெ.ரா. ஜின்னாவோடு சேர்ந்து நின்று காங்கிரஸ் ஆட்சி ஒழிப்புக் கொண்டாட்டத்தை மனங்குளிரக் கொண்டாடினார். காங்கிரஸ் ஆட்சி ஒழிந்து, 'அட்வைசர்' ஆட்சி வந்ததில் அத்தனை மகிழ்ச்சி!
நான் காங்கிரஸ் ஆட்சி ஒழிந்த மறுநாளே யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக, இந்திய பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்டேன். நாடு முழுவதிலும், கம்யூனிஸ்ட்களும் சோஷலிஸ்ட்களும் தீவிரத் தேசபக்தர்களும் கைது செய்யப் பட்டனர். நாடு கடத்தப்பட்டனர். தடை செய்யப்பட்டனர். தொழிலாளர் பொது வேலை நிறுத்தங்கள் மூலம் யுத்த எதிர்ப்பு உணர்ச்சியைக் காட்டினர். பத்திரிக்கைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்களிடையில் யுத்த எதிர்ப்பு உணர்ச்சி, இமயத்திலிருந்து குமரி வரையில் கரை புரண்டோடியது.
ஈ.வெ.ரா. 'தமிழ்நாட்டு எம்.என்.ராயாக' விளங்கினார். ஏகாதிபத்திய ஆதரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஏகாதிபத்தியத்தின் பரம்பரை பக்தர்களைக் கொண்ட ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராகிவிட்ட ஈ.வெ.ரா. அதைத்தானே செய்ய வேண்டும். அங்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஸ்டார் பிரச்சாரகர்களின் ஜஸ்டிஸ் - சுயமரியாதை பிரச்சாரகர்களின் அட்வைசர் ஆட்சியில் கூலிக்கு மாரடிக்கும் யுத்த பிரச்சாரகர்களாகும்படி ஈ.வெ.ரா. ஏற்பாடு செய்தார். ஜஸ்டிஸ் கட்சியின் பத்திரிக்கையாக இருந்த 'விடுதலையைச்' சர்க்காருக்கு விற்றார். ஏகாதிபத்தியத்தின் நாக்காகவும் பேனாவாகவும் மாறிய பிறகு - மிச்ச சொச்சமில்லாமல் முழுக்க முழுக்க மாறிய பிறகு - சொந்தப் பத்திரிக்கை அவசியமும் இல்லை. ஏகாதிபத்தியத்திற்கு பத்திரிக்கை விற்றுப் பணமாக்கிக் கொள்வதில் வெட்கமுமில்லை.
யுத்தகாலத்தில் புரட்சிக்காரர்களையும், காங்கிரஸையும், தேசபக்தர்களையும் இழிமுறையில் கன்னாபின்னாவென்று தாக்கியதில் டாட்டன்ஹாமுக்கு மறுபதிப்பு ஈ.வெ.ரா.என்று சொல்லலாம். ஏன்? பொய்ப்புளுகுகளோடு, கனமான பாஷைப் பிரயோகத்தில் டாட்டன்ஹாமையும் மிஞ்சினார் ஈ.வெ.ரா. என்பது உறுதி.
ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர் ஈ.வெ.ரா., சென்னை கவர்னராயிருந்த சர் ஆர்தர்ஹோப்பின் அந்தரங்க நண்பரும், தலைசிறந்த ஊழியருமானார். மதுவிலக்குச் சட்டத்தை கவர்னர் ரத்துச்செய்ததும் சேலத்தில் ஈ.வெ.ரா.யிஸ்ட்கள் 'மதுவிலக்கு ரத்து' விழா கொண்டாடினார்கள். சர் ஆர்தர் ஹோப்பை தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடினார்கள். கள்ளுக்கடைக்காரர்களுக்கும் குடிகாரர்களுக்கும் ஒரே கொண்டாட்டம். தேசபக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆறாத்துயரம். ஈரோட்டு பாதையின் மகிமையே மகிமை!
'பெரியாரின்' கூட்டுறவு: இங்கு, காங்கிரஸிலிருந்து விலகிய நாளிலிருந்து ஈ.வெ.ரா. யார் யாரோடு கூட்டணி ஏற்படுத்தி வந்திருக்கிறார் என்பதை, தலைவரிடம் குருட்டு பக்தி காட்டுவதை விட சரித்திர உண்மைக்கு மதிப்புக் கொடுக்கும் திராவிட கழகத்தைச் சேர்ந்த நல்லிளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
ஆரம்பத்தில் ஜஸ்டிஸ் கட்சித்தலைவர் பனகல் அரசரோடு கூட்டுறவு, அப்பால் மிதவாதிகளான ஜெயகர், பராஞ்சிபே கூட்டுறவு, பின்னர் பொதுஜனவிரோதிகளான ஜமீன்தார் பொப்பிலி, பணமூட்டை குமாரராஜா கூட்டுறவு. அதன் பிறகு வகுப்புவாதக் கோட்டைத் தாண்டாத ஜின்னா, அம்பேத்கார் தொடர்பு, அதைத்தொடர்ந்து புரட்சி இயக்கத்தின் துரோகி எம்.என்.ராயின் கூட்டுறவு, கடைசியாக 93 - வதுபிரிவுப்படி ஆண்ட ஏகாதிபத்திய, எதேச்சதிகார சர் ஆர்தர் ஹோப்பின் கூட்டுறவு.
உலகத்தில் அல்லது இந்தியாவில் அல்லது தமிழகத்தில் 'சுயமரியாதை' - 'சமதர்ம தமிழரியக்க' ஈ.வெ.ரா.வுக்கு மக்களுடைய உருப்படியான எந்தக் கட்சியோடாவது எந்த ஸ்தாபனத்தோடாவது, எந்த இயக்கத்தோடாவது, எந்தக் கிளர்ச்சியோடாவது நேரடியான முறையான கூட்டுறவு, என்றேனும் ஏற்பட்டிருந்ததுண்டா?
ஈ.வெ.ரா.வும் அண்ணாதுரையும்: யுத்தகாலத்தில் ஈ.வெ. ரா.வை விட ஜஸ்டிஸ் - சுயமரியாதை மாணவர்கள், இளைஞர்களிடையில் அண்ணாதுரைக்குச் செல்வாக்கு அதிகரித்து வந்தது. அண்ணாதுரையின் சொல்வன்மையும் எழுத்து வன்மையும் இளைய உள்ளங்களுக்கு ருசித்ததே இதற்குக் காரணம்.
1937-வது வருடத் தேர்தல் காலத்திற்கு முன்பிருந்தே ஜஸ்டிஸ் கட்சி சுயமரியாதைக் கிளர்ச்சியை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது. ஈ.வெ.ரா.வைப் பின்பற்றியவர்களுக்கு யாவும் ஜஸ்டிஸ் கட்சியாகவே விளங்கிவந்தது. சுயமரியாதையா, பொது உடைமையா, எல்லாம் ஜஸ்டிஸ் கட்சிதான்.
யுத்தகாலத்தில் - குறிப்பிட்ட 42 -ம் ஆண்டுக்குப் பின்னால் உலக முழுவதும் நம் நடவடிக்கையால் மக்களிடையில் பெரும் விழிப்பும் பேரெழுச்சியும் ஏற்பட்டதையை உலக அறிவோடும் அரசியல் - உணர்ச்சியோடும், இவ்வெழுச்சியும், கலை ஆர்வமும், மொழிப்பற்றும் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வண்ணம் கிளர்ந்தெழுந்தன.
இந்தப் புதிய எழுச்சியும் உணர்ச்சியும் ஜஸ்டிஸ் - சுயமரியாதை வாலிபர்களையும் தீண்டாமலில்லை. அண்ணாதுரையின் பேச்சிலும் எழுத்திலும் புத்துணர்ச்சிக்கு ஒருவிதக் கவர்ச்சியும் திருப்தியும் ஏற்பட்டது. பெரியாரைவிட அண்ணாதுரையை மாணவர்கள் விரும்பினர், வாலிபர்கள் சூழ்ந்தனர்.
ஈ.வெ.ரா. பழைய 'பெத்தான் பெத்தான்' என்றபடி பழைய தண்டவாளத்திலேயே ஜஸ்டிஸ் தலைவராகப் போய்க் கொண்டிருந்தார். அண்ணாதுரை சமூகச் சீர்திருத்தத்திற்கு புதியமெருகு கொடுத்து, புதிய உணர்ச்சிகளைத் தழுவிப்போகா விட்டால் கட்சிக்கு வளர்ச்சியில்லை எனக் கண்டார். ஈ.வெ.ரா. இடங்கொடுக்க மாட்டார் எனத் தெரியும். புதிய அமைப்புக்கு பூர்வாங்க வேலைகளைப் பூர்த்தி செய்தார்.
திராவிட கழகம்: இந்த நிலைமையில்தான் சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு நடந்தது. அண்ணாதுரை ஜஸ்டிஸ் கட்சியை விட்டு விலகி சுயமரியாதைக் கட்சியை திராவிட கழகமாக்கிக்கொண்டு போக முயன்றார். ஈ.வெ.ரா. ஜஸ்டிஸ் கட்சியையே திராவிடக் கழகமாக்கி திராவிட கழகத்தோடு அண்ணாதுரை போகாமலும், தம்மைவிட்டு ஜஸ்டிஸ் கட்சி போகாமலும், ஜஸ்டிஸ் கட்சியும் திராவிடக் கழகமும் சுயமரியாதை இயக்கமும் தம் ஜேபிக்குள்ளேயே இருக்கும்படி செய்து ஒரே வெட்டில் மூன்று பறவைகளை விழுத்தாட்டினார்.
முதலில் 'ஒரிஜினல்' ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் பி.டி.ராஜன் தலைமையில் கூடி, திராவிடக் கழகம் ஜஸ்டிஸ் கட்சி அல்லவென்று தீர்மானித்து, பிரிந்து போயினர். பின்னர் பழைய சுயமரியாதைக்காரர்கள் ஈ.வெ.ரா.வின் சர்வாதிகாரத்தில் வெறுப்புற்று சௌந்திரபாண்டியன் தலைமையில் 'ரிஜிஸ்டர்' செய்யப்பட்ட சுயமரியாதைச் சங்கம் அமைத்துப் பிரிந்து போயினர். பிற்பட்ட ஜஸ்டிஸ் - சுயமரியாதைக்காரரான அண்ணாதுரைக் கோஷ்டியைத் தழுவிநிற்கவே ஈ.வெ.ரா. தீர்மானித்தார். எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் காட்டுக்குப் பறந்துபோக வேண்டும் - ஜஸ்டிஸ் கட்சிக்கொள்கையைக் காப்பாற்ற என்பது அவருக்குத் தெரியும்.
'ஒரிஜினல்' ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களுக்கும், 'பதிவு செய்யப்பட்ட' சுயமரியாதைச் சங்கத்தாருக்கும் மக்களிடம் துளிகூடச் செல்வாக்கில்லை என்பதும், அண்ணாதுரை செல்வாக்கிலுள்ள மாணவர் - வாலிபர்கள் புதிய உணர்ச்சியைப் பிரதிநிதித்துவப் படுத்துவதால் சக்தியுடையவர்களென்பதும், முற்கூறியவர்களின் எதிர்ப்பைவிட அண்ணாதுரையின் எதிர்ப்புதான் அதிகத் தொந்தரவு அளிக்கும் என்பதும் ஆகவே அண்ணாதுரை பிடிப்பிலுள்ள புதிய சக்தியை விழுங்கிவிட வேண்டியது முதல் வேலையென்பதும் ஈ.வெ.ரா.வின் பார்வையில் விழுந்தது.
ஜஸ்டிஸ் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி அல்ல, திராவிடர் கழகந்தான் உண்மையான ஜஸ்டிஸ் கட்சி என்று ஒரே போடுபோட்டார். பதிவுசெய்யப்பட்ட சுயமரியாதைச் சங்கம், சுயமரியாதைச் சங்கமல்ல. திராவிட கழகம் தான் உண்மையான சுயமரியாதைச் சங்கம் என்று ஒரே அடி அடித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அல்ல, திராவிடக் கழகம் தான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்று தளுக்காகப் பசப்பினார். பழைய பக்தர்களையும், புதிய இளைஞர்களையும், தம் தலைமையில் சிக்கவைக்கும் சிலந்தி வலை இது.
திராவிடக் கழகமும் கம்யூனிஸ்ட் கட்சியும்: 1942-லிருந்து தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி உற்பத்தி பெருக்குவதற்காகவும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தர உயர்வுக்காகவும் இடையறாது போராடி வந்த காலத்தில், 'ஈரோட்டு பாதை' ஒரு துரும்பைக்கூட அசைத்ததில்லை. அதேபொழுதில் உடனடிக் கோரிக்கைகளுக்காக தொழிலாளி வர்க்கம் போராடியதை, காங்கிரஸ் முதலாளிகளின் சார்பில் காமராஜ், "பஞ்சப்படி கேட்பது லஞ்சப்படி கேட்பது" என்று சொன்னது போலவே ஈ.வெ.ரா.வும் குறைகூறினார் - ஜஸ்டிஸ் பணமூட்டைகள் சார்பில்.
நாடு முழுவதிலும் கம்யூனிஸ்ட்கள் தொழிலாளி, விவசாயி சங்கங்கள் அமைத்த காலத்தில், மாணவர் கழகங்கள் நிறுவிய காலத்தில், 'ஈரோட்டு பாதை' அந்தப் பக்கம் வழி காட்டவேயில்லை.
திராவிட கழகம் ஏற்பட்டபிறகும், யுத்தம் முடிந்தபிறகும், தொழிலாளர் - விவசாயி போராட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சியேயன்றி திராவிட கழகமல்ல தலைமை வகித்தது.
சோவியத் யூனியனில் மட்டுமல்ல, புதிய ஜனநாயக நாடுகளிலும் சரி (போலந்து, செக்கஸ்லோவாக்கியா, யூகோஸ்லேவியா, பல்கேரியா, ருமேனியா போன்ற நாடுகள்) ஜனநாயகத்தை நோக்கி முன்னேறும் இதர நாடுகளிலும் சரி, தொழிலாளி - விவசாய பொதுமக்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போலவே இந்திய கட்சியும் செய்தது. தமிழ்நாட்டிலும் அதுதான் நடந்தது.
திராவிட கழகத் தலைமை மேனாட்டுக் கம்யூனிஸத்திற்கும் இந்திய கம்யூனிஸத்திற்கும் வித்தியாசமுண்டு என்று கூறி, கம்யூனிஸத்தில் ஆர்வமுள்ள திராவிடர் கழக இளைஞர்களை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நெருங்க விடாமல் முயன்றது.
மார்க்ஸ், லெனின் மேற்கோள்களை 'விடுதலை', 'குடியரசு', 'திராவிடநாடு' - இவைகளில் வெளியிட்டு மார்க்சியத்தில் தங்களுக்கு நம்பிக்கையுண்டு என்று தமிழ்நாட்டு இளைஞர்கள் நம்பும்படியாக்க முயன்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சாதி, மதங்களைப்பற்றி பேசுவதில்லை என்றது. சாதி - ஒழிப்பு - மத ஒழிப்புக்காகப் பாடுபடுவது திராவிடக்கழகம் மட்டுமே என்று இடைவிடாமல் கூறி, கம்யூனிஸ்ட் கட்சி, சாதி, மத ஒழிப்பில் அக்கரையில்லாதது. அக்கொடுமைகளை விட்டுவைக்க ஒருப்படுவது என்று தங்கள் முன்னணிப்படை வீரர்கள் கருதத்தக்க விதத்தில் பிரச்சாரம் செய்தது.
இவ்வாறு சாதி ஒழிப்பு, மதவொழிப்பு விஷயங்களை முக்கியப்படுத்தி திராவிடக்கழகத்தில் நல்ல அபிப்பிராயத்தோடும், பற்றுதலோடும் இருந்த இளைஞர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களைக் கண்டு புத்துணர்ச்சி அடைந்து வந்ததைத் தடுக்க நயமான முறைகளில் சூழ்ச்சி செய்தது.
ப.ஜீவானந்தம் நம் ஆள்தான் என்றும் "கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமக்கும் வித்தியாசமில்லை" என்றும் பொதுவுடைமை ஆர்வமுள்ள வாலிபர்களை திராவிட கழகம் வலை வீசிப்பிடிக்க முயன்றது.
நடுநிலைக் கொள்கை: இந்தச் சந்தர்ப்பத்தில் மாகாண சட்டசபைத் தேர்தல் வந்தது. தேர்தலில் போட்டிபோட கையாலாமல் அரசியல் தெளிவில்லாததால் நிர்ணயமான தேர்தல் கொள்கையுமில்லாமல், நடுநிலைமை வகிப்பதாக முடிவு கட்டிற்று திராவிட கழகத் தலைமை. என்னைப் போன்றவர்களுக்குக்கூட ஓட்டுப் போடாமல், நடுநிலைமை வகித்தனர் திராவிடக் கழகத்தார். இந்த அரசியல் தவறின் விளைவு என்ன? திராவிடக் கழகத்தார் அல்லாத முத்தையா முதலியாருக்காக அரசியல் நிர்ணய சபைத்தேர்தலில் ஓட்டுச் சேகரிக்க, 'ஜனசக்தி' ஆபிசுக்கு திராவிட கழக முக்கியஸ்தர்கள் ஓடிவரவேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பதையும் இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சி: காங்கிரஸ் மந்திரிசபைக்கு, கண்டிக்கும் உரிமையுடன் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்து வந்தகதை, 'மானங்கெட்ட சரணாகதி' என்றும் 'பதிபக்தி' என்றும் திரித்துக்கூறி கம்யூனிஸ்ட் கட்சியிடம் நன்மதிப்பிலிருந்த திராவிடக் கழக இளைஞர்களைத் தப்பான வழியிற் செலுத்த கச்சை கட்டிநின்றது ஈரோட்டு பாதை.
பின்னர், கம்யூனிஸ்ட் கட்சியை பார்ப்பனக் கம்யூனிஸ்ட் கட்சி என்று சொல்கிற அளவுக்கு ஈ.வெ.ரா.க்கும் 'விடுதலை' பத்திரிகைக்கும் ஜன்னிவாத ஜீரம் கண்டது.
ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாட்டத்தைப்பற்றி ஈ.வெ.ரா.வுக்கும் அண்ணாதுரைக்கும் நேர் விரோதமான கருத்துகள் ஏற்பட்டன. திராவிடத் தலைவருக்கும், திராவிடத் தளபதிக்கும் இடையில் பிளவு அதிகரித்தது. 'ஈரோட்டு பாதை'யின் மகத்துவத்தால் அவ்வழிநடந்த சிறப்பால் அண்ணாதுரையே வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தக்க விதத்தில், 'தளபதி' 'தளர்பதி' ஆனார். அண்ணாதுரையின் பாஷையில் அவர் திராவிட கழகத்திலிருந்து ஒதுங்கி நிற்கவேண்டியதாயிற்று. திராவிட கழக இளைஞர்களிடையில் சிறந்த கிளர்ச்சிக்காரர்களில் ஒருவரான 'இளந்தாடி' நெடுஞ்செழியன் 'வெறுந்தாடி' நெடுஞ்செழியனாகி ஈ.வெ.ரா.வோடு தனக்குள்ள கருத்து வேற்றுமையை பகிரங்கப் படுத்தினார். ஈ.வெ.ரா.வைப் பின்பற்றிய சிறந்த ஊழியர்களின் அரசியல் 'தெளிவுக்கு' மேற்கூறியவை எடுத்துக்காட்டுகள்.
"திராவிட நாடு திராவிடருக்கே" என்ற கோஷத்திலும், பார்ப்பன - எதிர்ப்பு, ஆரிய - எதிர்ப்பு, இந்துமத - எதிர்ப்பு கோஷங்களிலும் 'தான்தோன்றிப் பொதுவுடைமைத்' தத்துவ முழக்கத்திலும் நம்பிய மக்களின் காதையும் கருத்தையும் திருப்பி விட்டு, செயல் முறையில் ஜமீன்தார் - நில சுவான்தார் - முதலாளித்துவப் பிற்போக்குச் சக்திகளின் பிரதிநிதியாய் ஈரோட்டு பாதை சென்றுக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் வருவார்கள், மனிதர்கள் போவார்கள், கோஷங்கள் தோன்றும்.
கோஷங்கள் மறையும். ஈரோட்டு பாதை 'சைக்கிள்' சுற்றுகிற மாதிரி சுற்றிக்கொண்டே இருக்கிறது. பழைய கொள்கைதான் புதிய குரலில் கேட்கும், அல்லது பழைய குரலே புதிய பாணியில் கேட்கும்.
எது சரி?
தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல நேர்மையான தீவிர நல் இளைஞர்கள், மாணவர்கள் திராவிட கழகத்தில் திரண்டு நிற்கிறார்கள். திராவிடர் கழகந்தான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்றும், அதுதான் அதிதீவிர கொள்கையுடையதென்றும், அதன் மூலம் மாத்திரமே சமூக அடிமைத்தனம் வேரோடு ஒழியுமென்றும் அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையின், நேர்மையில், எனக்கு அல்லது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால், 'ஈரோட்டு பாதை' அவர்களின் நம்பிக்கைக்கு வெற்றி அளிக்குமா?
சமூகப் புரட்சியில்தான் சமூக அடிமைத்தனங்கள் (பார்ப்பான் - பார்ப்பனரல்லாதவர், உயர்ந்தவன் - தாழ்த்தப்பட்டவன், ஆரியன் - திராவிடன் என்ற கொடுமைகளும் இன்னும் மதத்தின் பேராலும் கடவுளின் பேராலும் ஏற்படும் கொடுமைகளும் சுரண்டல்களும்) அறவே ஒழியும். சோவியத் யூனியன் இதற்கு எடுத்துக்காட்டு. சோவியத் வாழ்வில்தான் இனக்கொடுமை, மதக்கொடுமை, பணக்கொடுமை, ஆகியவை ஒழிந்திருக்கின்றன.
கம்யூனிஸம் உலகப் பொதுத் தத்துவம், ஏற்பாடு, வழிகாட்டி. மேனாட்டு கம்யூனிஸம், இந்திய 'கம்யூனிஸம்' என்று பிரிப்பது அறியாமை, அல்லது விஞ்ஞான விரோதம். ரஷ்யாவில் ஜாராட்சியிலிருந்த சமூக அடிப்படைகள் தான் இன்று இந்தியாவிலும் தமிழகத்திலும் இருக்கின்றன.
ஆகவே, சமூக அடிமைகளும் கொடுமைகளும் ஒழிய விரும்புவோர் சமூகப் புரட்சிக்கு பாடுபட வேண்டும். சமூகப் புரட்சி ஏற்பட வேண்டுமாயின், புதிய ஜனநாயகப் புரட்சி ஏற்பட வேண்டும். அதாவது, நிலப்பிரபுத்துவம் - முதலாளித்துவம் - ஏகாதிபத்தியம் ஒழிய வேண்டும். மேற்படி ஒழிப்பில்தான் சமூக அடிமைத்தனம் ஒழியும். சொத்துரிமைக் கும்பல் (Vested Inerest) ஒழியும். அதுதான் சமூக அடிமைத்தனத்தை ஒழிக்கும் உருப்படியான முதற்பெரும் பணி. சொத்துரிமைக்கூட்டம் ஒழியும்போது, மடங்கள் ஏது? கோவில் காளைகள் ஏது? ஒட்டுண்ணி வைதீகம் ஏது? 'பிறவி முதலாளி' ஏது?
சொத்துரிமைக்காரர்களை அதாவது ஜமீன்தார்களை, இனாம்தார்களை, பெருமுதலாளிகளை, மடாதிபதிகளை, மன்னர்களை அடியோடு கவிழ்ப்பதில் முனைந்து நில்லாமல் வேறு எத்தனைதான் ஆரிய - எதிர்ப்பு, பார்ப்பன - எதிர்ப்பு, மத - எதிர்ப்பு, சமூகக் கொடுமை - எதிர்ப்பு முழங்கினாலும் தொண்டைதான் கம்மும், பேச்சு மூச்சுத்தான் நஷ்டப்படும், காகிதந்தான் வீணாகும். சமூக அநீதிகளின் அடிப்படைகளை அணுக்கூட அசைக்க முடியாது. சோவியத் வாழ்வும், புதிய ஜனநாயகங்களும், உலகத் தொழிலாளி வர்க்கத்தின் சரித்திரமும் மேற்படி உண்மையைத்தான், மார்க்சியப் பாதையின் வெற்றியின் மூலம் தெளிவுபடுத்துகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாதிமுறை ஒழிப்புக்கும், ஸ்தாபன ரீதியான மத ஒழிப்புக்கும் நிற்கிற பொதுஜன வர்க்க - அரசியல் போராட்டங்களின் மூலமாகவே இவைகளை ஒழிக்க முடியுமென்று நம்புகிறது. ஒழிக்கும் பாதையில் போராடுகிறது. இதற்காக வர்க்கப் புரட்சியில் நாட்டங்கொண்ட பொதுமக்கள் கம்யூனிஸ்டுகளின் - இடதுசாரி கட்சிகளின் ஐக்கிய முன்னணியின் அவசியத்தை வற்புறுத்திப் போராடுகிறது. குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் அடைந்துவருகிறது.
இதுவரை, ஈரோட்டு பாதையின் இருபது வருட சரித்திரத்தை எனது கட்டுரையில் குறிப்பிட்டு வந்துள்ளேன். அந்தச் சரித்திரம் எடுத்துக் காட்டுவதென்பது ஈ.வெ.ரா., என்றும் சமூகப் புரட்சிக்கு விஞ்ஞானியாகப் பாதை காட்டியதில்லை. தொழிலாளி - விவசாயப் பொதுமக்களிடையில் வேரூன்றி நிற்கிற எந்த போக்குக்கட்சியோடும், ஸ்தாபனத்தோடும் கூட்டணிக்கு முயன்றதுமில்லை. நெருங்கி உறவாடி, படிப்பினை பெற்றதுமில்லை. போகட்டும், தனித்துநின்று, பொது மக்களுக்கும் புரட்சி கட்சிகளுக்கும் வழிகாட்டும் வடிவத்தில் உருப்படியான எந்த முன்னேற்றத்தையாவது கண்டாரா? அதுவுமில்லை. நேர்மாறாக, புரட்சி கட்சிகளின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்திருக்கிறார். ஜனநாயக ஸ்தாபனங்களைத் திருத்துவதற்குப் பதில் அழிக்க முற்பட்டிருக்கிறார். 'சுயமரியாதைத் தந்தை', 'சிந்தனையின் சிற்பி', 'புரட்சிப்பெரியார்' என்ற பெரிய பட்டங்களைச்சூடி, சமதர்ம இயக்கத்தை - பொதுமக்களின் புரட்சி எழுச்சியை காட்டிக் கொடுத்திருக்கிறார். இந்த நாட்டில் பிற்போக்கு சக்திகளான ஜமீன்தாரி - நிலச்சுவான்தார் - முதலாளி வர்க்கங்களின் கையாளாக, கடனாற்றி வந்திருக்கிறார். தமது எதிர் புரட்சிக் கொள்கைகளுக்கு சாதகமாக, இளைஞர்களின் வேகத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு, மக்கள் அணியில் பிளவு உண்டாக்கும் பொருட்டும், புரட்சிச் சொற்றொடர்களையும் இனவெழுச்சி அடைமொழிகளையும் தாராளமாக அள்ளி வீசி வந்திருக்கிறார்.
எனவே, ஈரோட்டு பாதை, புரட்சிப் பாதை அல்லது பொதுவுடைமைப் பாதை அல்ல. பொதுமக்கள் பாதையும் அல்ல. சாதி, மதத் தாழ்வுகளிலிருந்தோ, சமூக கொடுமைகளிலிருந்தோ, ஜமீன்தார் - முதலாளி சுரண்டல்களான சகலவித சுரண்டல்களி லிருந்தோ, தமிழ் மக்களை விடுவிக்கும் பாதையுமல்ல. அழுகிப்போன ஜமீன்தாரி, நிலச்சுவான்தாரி வர்க்கத்தின் பாதை, பிற்போக்குப் பணமூட்டைகளின் பாதை, ஈரோட்டு பாதை.
1848ல் இரண்டு கம்யூனிஸ்ட்களை (மார்க்ஸையும் எங்கல்ஸையும்) தழுவி, 1948-ல் இன்று இரண்டு கோடி கம்யூனிஸ்ட்களைத் தழுவிநிற்கும் பாதை, அன்றிலிருந்து இன்றுவரை 50 கோடி மக்களை செங்கொடியின் கீழ் திரட்டியுள்ள பாதை, "எல்லா வழிகளும் கம்யூனிஸத்திற்கே செல்கின்றன" என்ற மாலட்டோவ் கூற்றுப்படி எதிர்காலத்தில் பரிபூரண, தெளிந்த திட நம்பிக்கையை ஊட்டும் பாதை,ஒவ்வொரு நாட்டிலும் புதிய ஜனநாயகத்தை நோக்கி செல்லுவதில் வெற்றிமேல் வெற்றி சூடிவரும் பாதை, நம் நாட்டிலும் வல்லபாய்படேலும், மன்னர் எதேச்சதிகாரமும், பெருமுதலாளிக் கும்பலும், பிற்போக்கு நிலச்சுவான்தார்களும், இனாம்தாரிகளும், மடாதிபதிகளும் வகுப்புவாத வெறியர்களும் சாதிகொடுங்கோலர்களும், கதிகலங்க பொதுமக்களின் நல்வாழ்வு, விடுதலைக்கான போராட்டங்களின் ஒவ்வொரு பிரச்சனைகளும், தொழிலாளி - விவசாயி - நடுத்தர வர்க்கத்தார்களை, சர்வக் கட்சிகளையும் சேர்ந்த பொதுமக்களை ஒன்றுதிரட்டி ஜனநாயகத்திட்டத்தோடு கூட்டணி வகுத்து புதிய ஜனநாயக இந்தியாவை, புதிய ஜனநாயகத் தமிழகத்தை, நோக்கிச் செல்ல, கொள்கைத் தெளிவோடு செயல்முறை உறுதியோடு தொடர்ச்சியாகப் போராடி, வரவர வளர்ச்சியும், வெற்றியும் அடைந்துவரும் பாதை,கம்யூனிஸ்ட் கட்சியின் பாதை, எங்கள் பாதை. பொதுவுடைமையிலும், புதிய வாழ்விலும் புரட்சியிலும் நேர்மையும் உறுதியும் கொண்டுள்ள அன்பார்ந்த திராவிடர் கழக வாலிபத் தோழனே! உனக்குரிய பாதை எது? ஈரோட்டு பாதையா, எங்கள் பாதையா?
- ப.ஜீவானந்தம் (ஜனநாயகம் -1947 டிசம்பர் - 1948 பிப்ரவரி)
அச்சு நூலினைப் பெற தொடர்பு கொள்ளவும்:
செந்தளம் பதிப்பகம்
9543738415
Pdf வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்: