எஸ்.வி.சேகர் விசயத்தில் மு.க.ஸ்டாலினின் பெருந்தன்மை(?!)
சாவித்திரி கண்ணன்
ஸ்டாலினின் பெருந்தன்மையை கண்டு வியக்கிறேன்!
’’எஸ்.வி.சேகர் இந்த நாடக விழாவிற்கு வர வேண்டும் என உத்திரவிட்டார் வந்துள்ளேன்.’’
”2026 தேர்தலுக்கு எஸ்.வி.சேகரைப் பயன்படுத்திக் கொண்டால் போதும். வேறு ஒன்றும் தேவையில்லை…”
”எஸ்.வி.சேகர் எங்கிருந்தாலும், எந்த கட்சியில் இருந்தாலும், இப்போது எந்த கட்சி என்று தெரியாது.. நம்ம கட்சி”
’’இன்னும் சொல்லப் போனால், எஸ்.வி.சேகர் எங்கள் குடும்பத்தை சார்ந்தவர் தான். குடும்பம் என்றால் கலை குடும்பம்.’’
இப்படி ஸ்டாலினால் புகழப்படும் எஸ்.வி.சேகர் பாஜகவின் கொள்கைபரப்பு செயலாளராக கடந்த பத்தாண்டுகளாக மோடியின் புகழ் பாடி வருபவர். திராவிடக் கருத்தியல் குறித்து தீரா பகையாக அவர் பேசிய பேச்சுக்கள் இணையமெங்கும் குவிந்து கிடக்கின்றன.
தற்போது அண்ணாமலை அவருக்கு பாஜகவில் அகாமடேஷன் தரவில்லை. ஆகவே, அண்ணாமலையை வறுத்தெடுக்கிறார். இது ஒரு தனி நபர் மோதல். அவ்வளவே. தற்போதும் எஸ்.வி.சேகர் மோடி ஆதரவாளர் தான். பார்ப்பன கருத்தியல் மீது பற்றாளர் தான்.
பெண் பத்திரிகையாளரை இழிவுபடுத்திய விவகாரத்தில் சிறை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள எஸ்.வி.சேகரை திமுகவின் உடன்பிறப்புகளோ இணையத்தில் கழுவிக் கழுவி ஊற்றுகின்றனர். அவரது பார்ப்பன பற்றையும், பார்ப்பன குசும்பையும் கிண்டல் செய்கின்றனர். அவரை சிறையில் தள்ளத் துடிக்கின்றனர்.
ஆனால், அந்த தொண்டர்களின் தலைமையான ஸ்டாலினோ, எஸ்.வி.சேகரை வானாளவப் புகழ்ந்து தள்ளியதோடு, கட்சி பிரச்சாரத்திற்கு வரக் கேட்டு கோரிக்கையும் வைத்துள்ளார். இந்த முரணை, விநோதத்தை எப்படி புரிந்து கொள்வது..?
- சாவித்திரி கண்ணன்