சமூக அறியாமையை பயன்படுத்தி தேர்தல் முடிவுகளை மாற்றும் நிழலுலக நிறுவனங்கள்
அன்பே செல்வா
கார்டியன் இதழ் ஒரு முக்கியமான ஸ்டிங் ஆபரேஷன் செய்திருக்கிறது தேர்தல் நேரங்களில் அல்லது திடீரென்று சமூக வலைதளங்களின் மூலமாக பரப்பப்படும் வீடியோக்கள் செய்திகள் தவறான தகவல்கள் அல்லது வெறியேற்றக்கூடிய தகவல்களைக் கொண்டதாக இருக்கும் இது மாதிரியான வீடியோக்களை உருவாக்கி பரப்பக்கூடிய இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றை அணுகி அவர்கள் செயல்படும் விதத்தை ஒரு ஸ்டிங் ஆபரேஷனாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்..
இஸ்ரேலைச் சார்ந்த இந்த நிறுவனத்தை ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வரும் தொழிலதிபர்களைப் போல அணுகி தங்கள் நாட்டில் தேர்தலை தாமதப்படுத்துவதற்கான வேலைகளுக்காக இந்த நிறுவனத்தை அணுகுவது போல அணுகி சுமார் ஆறு மாத காலங்களாக முயற்சி செய்து அவர்கள் செயல்படும் விதத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்..
கால் ஹனான் என்னும் இஸ்ரேலியின் முன்னாள் சிறப்பு பிரிவை சார்ந்த இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பணியில் இருப்பதாக தெரிகிறது, இவர்கள் பல நாடுகளுக்கும் தேர்தல் வேலை செய்திருப்பதாக அதில் கூறுகிறார், சுமார் 30,000 மேற்பட்ட சமூக வலைதள போலி கணக்குகளைக் கொண்டு எந்த நேரத்திலும் மிக விரைவாகவும் மிக அதிக மக்களை சென்றடையும் விதத்திலும் ஒரு தகவலை இவர்களால் பரப்பி விட முடியும் என்பதை அவர்கள் வெளிப்படுத்துவதையும் கார்டியன் இதழ் அம்பலப்படுத்தி இருக்கிறது.
இந்த நூற்றாண்டு அறியாமையின் நூற்றாண்டாக இருக்கிறது. ஒரு பக்கம் மனிதகுலம் இதுவரை சந்தித்திராத தொழில்நுட்ப வளர்ச்சியோடு இருக்கிறது. இன்னொரு பக்கம் பல நூறு ஆண்டு பழமைத்தனங்களோடு மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கைகளுக்கு இந்த அதிஉயர் சாதனம் வந்துவிடுகிறது, இந்த அதி உயர் சாதனங்களை கையாள்வது குறித்து அதில் வரும் தகவல்களின் நிதானமாக நுங்குவதற்கான எந்த நேரமும் வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப்பட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்றால் முதலாளித்து உலகில் அவன் செலுத்த வேண்டிய உழைப்பின் நேரம் என்பது மிக மிக அதிகமாக இருக்கிறது எப்போதுமே ஒருவிதப் பதட்டத்தோடு ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வே நமக்கு இது தந்திருக்கிறது. இந்த வாழ்வில் நின்று நிதானமாக தர்க்கப் பூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும் நிலை என்பது நமக்கு வாய்ப்பதே இல்லை. இதுதான் இது போன்ற முதலாளித்துவ உளவு நிறுவனங்களின் மூலதனமாக இருக்கிறது.
ஒரு உதாரணமாக கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் நடந்த தேர்தலை பார்க்கலாம் அங்கு தேர்தலுக்கு முன்பு இடதுசாரி கட்சி முன்னணியில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன திடீரென்று தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ பரப்பப்படுகிறது இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தால் சர்ச்சுகளை மூடி விடுவார்கள், லெஸ்பியன் ஹோமோசெக்ஸ் வரைக்கும் கொண்டு வந்து விடுவார்கள் என்கிற ரீதியில் ஆன வீடியோ அது. கடுமையான கத்தோலிக்க மதப் பற்றாளர்களான அந்நாட்டு மக்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது அந்தத் தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்கிறது. வலதுசாரி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருகிறது.
20 கோடி மக்கள் தொகை கொண்ட பிரேசில் நாட்டில் இந்த வலதுசாரிகளின் ஊடகங்கள் பரப்பிய வீடியோக்கள் தேர்தலுக்கு முன் சில நாட்களில் மட்டும் 10 கோடி பார்வையாளர்களை கடந்தது என்றால் இது மாதிரியான செய்தி நிறுவனங்களின் வீச்சை கற்பனை செய்து பாருங்கள்..
இஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த அப்படி ஒரு நிறுவனத்தைத்தான் கார்டியன் ஸ்டிங் ஆபரேஷன் செய்து வெளிக்கொண்டு வந்திருக்கிறது கார்டியன்.
இந்த செல்போனும் வாட்ஸப்பும் youtube யும் கத்தோலிக்க மத நம்பிக்கை கொண்ட மக்களின் கைகளில் கிடைக்கும் போது சர்ச்சை மூடிருவாங்கன்னு சொன்ன உடனே அவர்கள் பதட்டம் ஆகி தேர்தல் முடிவை மாற்றி விடுகிறார்கள் இதே மாடலை இங்கே உள்ள பெருமாள் கோவிலுக்கு பொருத்தி பாருங்கள், பள்ளிவாசல் முன்பு பன்றிக்கறியை வீசும் வீடியோவை பரப்பினால் என்ன ஆகும், இந்துக்களுக்கு துரோகம் முஸ்லீமுக்கு துரோகம் இந்த ஜாதிக்கு துரோகம் அந்த மதத்திற்கு துரோகம் என்று இதுபோல பரப்பப்படும் வீடியோக்களுக்கு எந்த விதமான பொருளியல் அடிப்படை இருக்கும் என்பது குறித்த எந்த சிந்தனையும் இந்த வீடியோக்களை பார்க்கும் பகிரும் மக்களுக்கு தோன்றப் போவதில்லை. இதற்கான நேரத்தை இந்த முதலாளித்துவ கட்டமைப்பும் கொடுக்கப் போவதில்லை அந்த பதட்டத்தோடும் அறியாமையிடனுமே அதை பரப்பி இந்த மூலதனத்துக்கு பலியாகி விடுவார்கள்.
ஏனென்றால் பல நூற்றாண்டு காலமாக இந்த ஆண்டை அடிமை மனநிலையை ஏற்றுக் கொண்டு வாழ பழகிவிட்ட இந்திய சூழலில் ஒரே ஜாதியில் அவர்கள் மட்டும் எப்படி பணக்காரர்கள் நாம் எப்படி ஏழை என்றோ அல்லது ஒரே மாதத்தில் அவர்கள் மட்டும் எப்படி உள்ளே நாம் ஏன் வெளியில் என்றோ சிந்திக்கும் மனநிலையே இல்லாமல் அதை ஊழ்வினையாக மறுபிறப்பின் விளைவாக நம்பக்கூடிய ஏற்றுக்கொள்ளக்கூடிய சமூகமாகவே இங்கு நாம் இருக்கிறோம்.
இந்த சமூக அறியாமையை தான் அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்புறம் நமக்குள்ளாக இருக்கும் பண்பாட்டுப் பலகீனங்கள், காந்தி மீது நமக்கு இருக்கும் பொது அன்பின் உள்ளாக கொண்டு வந்து அண்ணா ஹசாரேவை நிறுத்தி பெரும் பிரச்சாரம் செய்கிறார்கள். காந்தி என்று சொன்னதால் கேள்வி கேட்காமல் நம் மனமும் ஏற்றுக் கொள்கிறது. இங்கே கவனமாக வளர்த்தெடுக்கப்பட்ட ஊழல் கருத்துக்களை அவரும் பேசுவதால் நம் ஆளாகவே மாறிவிடுகிறார். அவர் எவ்வளவு ஆபத்தான ஒரு ஆட்சியை ஏற்படுத்தி விட்டு இந்த எட்டு ஆண்டுகளாக உறங்குகிறார் என்று பாருங்கள், நம் அறியாமையின் விலை என்னவென்று புரியும்.
இதுபோல நமக்குள் இருக்கும் பண்பாட்டு பலகீனங்களைக் கொண்டே நம்மை எப்படி ஏமாற்றுவது என்பதை அவர்கள் கற்று அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.
திடீரென்று ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ஊழல் என்பது இந்தியா முழுவதும் பரப்பப்படுகிறது. அதற்கு திமுக தான் காரணம் என்பதும் இந்தியா முழுவதும் பரப்பப்படுகிறது. 2ஜி ஊழலை அறிந்த அளவுக்கு அந்த வழக்கின் இறுதியில் வழங்கப்பட்ட தீர்ப்பு விவரங்கள் பட்டியல் தெரியாது. அறிந்து கொள்ளும் நிதானமும் மக்களுக்கு வாய்க்காது.
ஒரு லட்சத்து 75 ஆயிரம் என்ற எண்ணை நம் எல்லோர் மனதுக்குள்ளும் ஒட்டி வைத்து விட அவர்களால் முடியும் அதே சமயம் சித்ரா ராமகிருஷ்ணன் போன்ற சுமார் 350 லட்சம் கோடி புழங்கக்கூடிய பங்கு சந்தையில் நடைபெற்ற ஊழல் குறித்த கைது செய்யப்பட்ட அந்த நபரின் புகைப்படமும் கூட நம் பார்வைக்கு வந்து விடாது. கனிமொழி கைது செய்யப்பட்ட புகைப்படம் இருக்கிறது, சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட புகைப்படம் எங்கே என்ற தர்க்கபூர்வமான கேள்விகளுக்குள் நாம் செல்லும் வாய்ப்பே நமக்கு வாய்க்காது.
இந்த அறியாமையை பண்பாட்டு பலகீனங்களை ஊழல் பற்றிய முழுமையற்ற கருத்துக்களை மத இன ஜாதியை உணர்வுகளை மூலதனமாகக் கொண்டுதான் இது போன்ற நிறுவனங்கள் பல நாடுகளில் தேர்தல் முடிவுகளையும் ஆட்சியாளர்களையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக இப்போது திடீரென்று வடக்கர்கள் குறித்தான செய்திகள் நமக்கு அதிகமாக வந்து கொண்டிருக்கிறது ஒரு பேச்சுக்கு திடீரென்று தேர்தல் சமயத்தில் ஐந்து வடக்கர்கள் ஒரு தமிழ் பெண்ணை இழுப்பது போன்ற வீடியோ பரவுகிறது என்று வைத்துக் கொள்வோம் அது தேர்தல் சமயத்தில் பரவினால் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்துபாருங்கள்.
கடந்த தேர்தலில் புதுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் ஒரு வாட்ஸ்அப் ஆடியோ பரப்பப்பட்டது இந்தப் பகுதி முத்தரையர்கள் மற்றொரு சமூக பெண்களை கள்ளர் சமூகம் என்று நினைக்கிறேன் குறித்து அவதூறாக பேசுவது போன்ற ஒரு வாட்ஸ் அப் ஆடியோ அது. அடுத்த ஒரு வாரம் அந்த பகுதியில் எவ்வளவு பதட்டத்தை ஏற்படுத்தியது என்பதை நினைவுப்படுத்தி பார்ப்பது இது மாதிரியான வேலைகள் எவ்வளவு வீரியமானது என்பதை புரிந்து கொள்ள உதவும்.
வடக்கன் அடிச்சுட்டான் வடக்கன் இழுத்தான் என்பது மட்டுமே கவனம் பெறும் சமயத்தில், ஒரு நாளைக்கு தமிழ்நாட்டில் எத்தனை கற்பழிப்புகள் கொலைகள் கொள்ளைகள் வன்முறைகள் நிகழ்கிறது என்ற கிரைம் ரெகார்ட் எடுத்துப் பார்த்தால் இது எவ்வளவு ஊதிப் பெறப்பட்ட விஷயம் என்பது புரியும். ஆனால் அந்த நிதானம் நமக்கு இருக்காது. வடக்கர்கள் ஏன் இங்கு வருகிறார்கள், அவர்கள் மட்டும் ஏன் குறைந்த கூலிக்கு வேலை செய்கிறார்கள், ஏன் இவ்வளவு நேரம் உழைக்கிறார்கள், இதில் லாபம் அடையும் முதலாளிகள் யார், அவர்களின் ரோல் என்ன என்பது குறித்த எந்த வர்க்க சிந்தனைகளும் விளக்கங்களும் நமக்கு வழங்குவதற்கு இங்கு கட்சியோ அமைப்போ சரிவர கிடையாது.
மக்களின் இந்த பலவீனத்தை அறியாமையை இயலாமையை பயன்படுத்திக் கொண்டு ஆளும் வர்க்கங்களால் நம்மை எப்படி வேணாலும் ஆட்டி வைக்க முடியும்.
சரி இதை எப்படி தடுப்பது?
பல நூற்றாண்டு காலமாக வாய்க்கப் பெற்ற அறியாமையோடும் பழமைவாத கருத்துக்களோடும் வாழும் மக்களை பேரன்போடு அணுகி அவர்கள் அறியாமையை நீக்க வேலை செய்யும் கட்சிகள் ஜனநாயக அமைப்புகள் இங்கு தேவை இருக்கிறது..
கற்பனை செய்ய முடியாத வகையில் நவீன தொழில்நுட்பம் என்பது வளர்ந்திருக்கிற சூழலில் அது எப்படி நம்மை ஆட்படுத்தும் ஏமாற்றும் வெறியேற்றும் என்பது குறித்த எச்சரிக்கைகள் அன்றாடம் செய்ய வேண்டியது இந்தக் கட்சிகள் அமைப்புகளில் முக்கிய பணியாக இருக்கிறது.
தர்க்கப்பூர்வமான பார்வை வர்க்க சிந்தனை நவீன சிந்தனை என்பதை அன்றாடம் மக்களிடம் வளர்த்து எடுக்க வேண்டியதாக இருக்கிறது.
இது யானை செல்லும் பாதை என்று சில சாலைகளில் அறிவிப்பு பலகை இருப்பது போல, யானை என்றைக்காவது கடந்து செல்லும் மூன்று மாதம் முன்பு போயிருக்கும் ஆனால் தினந்தோறும் அறிவிப்பு பலகை இருக்க வேண்டியதை போல மக்களிடம் இந்த முதலாளித்துவ உலகம் எப்படிப்பட்ட வீடியோக்களை உருவாக்கி உணர்வுகளை தூண்டி ஏமாற்றும் என்பது குறித்து மக்களோடு ஜனநாயகமாக உரையாட வேண்டிய தேவை முன்னெப்போதை விடவும் இப்போது அதிகமாக அரசியல் கட்சிகளிடமும் ஜனநாயகத்தை நம்பும் மக்களிடமும் இருக்கிறது.
- அன்பே செல்வா
(முகநூலில்)
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு