திராவிடர் ஓர் ஆய்வு

இக்கட்டுரையில் திராவிட இனவாதம் குறித்து மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆரிய இனவாதம் குறித்து பெரிதாக விவாதிக்கப்படவில்லை மற்றும் பிராமனரும் ஆரியரும் ஒன்று என்பன போன்ற தவறான கருத்தாக்கங்கள் உள்ளது. எனவே இதை செந்தளம் நிலைபாட்டில் இருந்து விமர்சன ரீதியாக படிக்குமாறு கேட்டுகொள்கிறோம். - செந்தளம் செய்திப் பிரிவு

திராவிடர் ஓர் ஆய்வு

#திராவிடர்_ஓர்_ஆய்வு

சங்க இலக்கியங்களில் “திராவிடர்” உள்ளனரா எனத் தேடி பார்த்தால், அச்சொல்லே காணப்படவில்லை. அதுமட்டுமல்லாது அதன் மற்ற திரவிட, திரவிடி, திரவிடம், திராவிடம், தமிள, திரமிள, முதலிய வடிவங்களும் காணப்படவில்லை. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் பதினென்கீழ்கணக்கு நூற்களில் இல்லாமல், தேவாரத்திலும், “தமிழன்” என்ற சொல்லே “ஆரியன்” என்ற சொல்லோடு காணப்படுகிறது. “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்”, “தமிழோடு ஆரியமும் கலந்து” என்றுள்ளது. [22].

18ம் நூற்றாண்டில் தான், தாயுமானவர் “திரவிடம்” என்ற சொல்லை தமிழைக் குறிக்க உபயோகப் படுத்துகிறார்[23].

………………………………வடமொழியிலே

வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே

வந்ததாவிவகரிப்பேன்.

ஆகவே, திராவிடம் என்ற வார்த்தை அதுவரை தமிழ் புலவர்களால் அறியப்படவில்லை, உபயோகப்படுத்தவில்லை. 7, 8 அல்லது 11ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப் படும் நாமதீப நிகண்டு, “தமிழ்” என்பதற்கு “திரவிடம்” என்ற சொல்லைக் காட்டுகிறது[24]. 9வது நூற்றாண்டைச் சேர்ந்த, சேந்தன் திவாகரம் பேசப்படுகின்ற, 18 மொழிகளுள் ஒன்றாக “திரவிடத்தை”க் குறிப்பிடுகிறது. பிறகு வந்த “காந்தத்து உபதேசக் காண்டம்” என்ற நூல் சிவபெருமான் எப்படி அகத்தியருக்கு திரவிடத்தினுடைய இலக்கணத்தை வெளிப்படுத்தினார் என்ற குறிப்பைக் கொண்டுள்ளது. “பிரயோக விவேகம்” என்ற நூலின் ஆசிரியர் சமஸ்கிருத வார்த்தை “திரமிளம்” என்பதுதான் “தமிழ்” என்றாகியிருக்க வேண்டும் என்று விளக்குகின்றனர். ஆனால், “தமிழ்” என்பதுதான் சமஸ்கிருதத்தில் “திரவிடம்” என்று வழங்கப் படுகிறது என்கின்றனர். சிவஞானயோகியும் திரவிடம் என்பது தென்மொழி என்பதனைக் குறிக்க உபயோகப்படுத்த படுகிறது என்கிறார்[25]. எனவே நிச்சயமாக, இச்சொல் மற்றும் இச்சொல்லின் பிரயோகம் தமிழருக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல, அவர் அதனை உபயோகப் படுத்தவில்லை எனத் தெரிகிறது.

#தமிழ்_இலக்கியங்களில்_தமிழ்:

 சங்க இலக்கியங்களில் தமிழ் கீழ்கண்ட பொருட்களில் உபயோகிக்கப் பட்டுள்ளது:

தமிழ் மொழி (புறம்.50: 50: 9-10; 58: 12-13);

தமிழ் படை (சிறும்பாணாற்றுப்படை. 66-67);

தமிழ்நாடு (பரிபாடல்.6:60)

தமிழ் என்ற வார்த்தை எத்தனை முறை தமிழ் இல்க்கியங்களில் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது என்று அட்டவணை-1 லிருந்து அறியலாம்[26].

[ தொல்கப்பியத்தில் ஐந்து முறையும்,

[ சங்க-இலக்கியத்தில் 21,

[ 200-500 CE காலத்தில் 45,

[ 500-900 CE 475,

[ 900-1200 CE 381,

[ 1200-1900 CE 341 முறை

உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஆகவே, தமிழருக்கு தமது மொழி மற்றும் அதன் உபயோகத்தை அறிந்திருக்கும்போது, அவர்கள் சமஸ்கிருத- “திராவிட்” என்ற சொல்லினின்று பெறவேண்டிய அவசியம் இல்லை. மேலும் இங்கு இனரீதியில் (racial connotation) இவ்வார்த்தை எங்குமே உபயோகப்பட / படுத்தப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.

சங்க-இலக்கியத்தில்  “ஆரியரை”ப் பற்றி உள்ளது.  எனவே தமிழர் “ஆரியரை அறிந்திருந்தபோது, ஏன் திராவிடரை அறியவில்லை?” என்ற முக்கியமான வினா எழுகிறது. “ஆரிய” என்ற வார்த்தை தமிழல்ல என்றால் சமஸ்கிருதத்திலிருந்துதான் பெற்றிருந்திருக்க வேண்டும். அவ்வாறான சமஸ்கிருதத்திலிருந்து பெற்றபோது, “திராவிட” என்ற வார்த்தை தமிழில் வர-உபயோகிக்க ஏன் 18வது நூற்றாண்டு வரைக் காத்திருக்க வேண்டும்? 

 ஐரோப்பியரான  மாக்ஸ்முல்லர் 19ம் நூற்றாண்டில்  “ஆரியர்” என இனத்தைக் கண்டுபித்தது சமஸ்கிருத இலக்கியத்தில் தான், ஆனால் “திராவிடர்” என்ற இனம் இலக்கண ஒப்பியலில் உருவாக்கினர். பிறகு மானிடவியல் வல்லுனர்கள் அதற்கேற்றவாறு, இந்தியவியல் வல்லுனர்களால் கொடுக்கப்பட்ட தஸா, தஸ்யூஸ், பணி முதலியோரின் விவரங்களை, அவ்விதமாக வர்ண, அனஸ், ம்ருத்வாச முதலிய வர்ணனைகளுடன் ஒப்புமைப் படுத்தி, தம்முடைய மண்டைவோடு (Caranial index), மூக்கு (nasal index), உயரம் (stature) முதலிய காரணிகளுடன் சரிபார்த்து இனரீதியிலான “திராவிடர்”களை உருவாக்கினர்.

#திராவிடர்களின்_மானுடவியல்_அளவுகள்:

ஹக்ஸ்லி (1871), ஹெக்கேல் (), டர்னர் (1900), ஓப்பர்ட், ரிஸ்லி (1908), தரஸ்டன் (1909), ஸெலிக்மன், ஸ்க்லேடர் முதலியோர் “திராவிடர்களை”ப்பற்றி கொடுத்துள்ள பல மற்றும் வேறுபட்ட மானுட-அளவுகளையும் (Anthropometry), விவரங்களையும் அட்டவணை-2ல் காணலாம்.

அவர்கள் மத்தியதரைகடல், ஆப்பிரிக்க-நீக்ரோ (negrito) மற்றும் ஆஸ்ட்ரேலிய (Australoid) பழங்குடி இனங்களோடு ஒப்பிட்டு இணைக்க முயன்றனர். இவ்விதமாக திராவிடர்களின் –

உயரம் – நெட்டை, குட்டை மற்றும் இடைப்பட்டது

தோல் நிறம் – மஞ்சலான மரக்கலர் (Yelloish-brown) முதல், மரக்கலர் (brown), கருப்பு வரைக் காணப்பட்டது.

மண்டைவோடு – இடைப்பட்ட உருண்டை (mesocephalic)லிருந்து நீண்ட உருண்டை (dolicocephalic) வரை இருந்தது.

மூக்கு – அகன்றும் குறுகியும் மற்றும் தட்டையாகவும் குறுகியதாகவும் காணப்பட்டது.

கருவிழி நிறம் – மரக்க்கலரிருந்து கருப்பு வரை இருந்தது.

முடி – நீண்டதாகவும் / அலை-அலையாக / சுருண்டும் இருந்தது, ஆனால் ஆட்டு-ரோமத்தைப் போன்றும் (woolly) அடர்த்தியாகவும் (frizzy) இல்லை.

உதடு – தடித்தும், நீண்டும் இருந்தது.

இவ்விதமாக “திராவிடர்” மேனாட்டவரின் ஆராய்ச்சியின் ஆதாரங்கொண்டு இருந்தனர் என்றால், சங்க-இலக்கியம், அம்மக்களை எவ்வாறு விவரிக்கிறது என்பதனை காணலாம்.

#சங்க_இலக்கியம்_கூறும்_தமிழரது_உருவமைப்பு: 

சங்க கால புலவர்களும் தமிழரது தலை, கண்கள், முடி, காதுகள், உதடுகள், கைகள், கால்கள் மற்றும் உருவ அமைப்பை நன்கு விவரித்துள்ளனர், ஆனால், எங்குமே அவர்கள் “கருப்பர்” என்று, இந்த மேனாட்டு இனவாத பண்டிதர்கள் போல குறிப்பிடவில்லை. 

– உச்சி, தலை, சிரம் எனவும்,

– குடுமி, மயிர், கூந்தல், முடி, ஓரி, அளகம், உலை எனவும்,

– அடி, சீரடி, சிவந்த அடி, கால் எனவும்,

– மேனி, உருவம், உடல், அகம், சரீரம், உரு

– எயிறு, முருவல், பல்

– நுதல், நெற்றி

– கவுள், தாடை, மோவாய்

– கண்ணிதழ், இமை

– இதழ், அதரம், உதடு

என்றெல்லாம் ஒரே அங்கத்தை / உறுப்பை பல வார்த்தைகள் மூலம் குறிப்பிட்டு அதன் தன்மையினை எடுத்துக் காட்டியுள்ளார்கள். அதுமட்டுமல்லாது, அவர்கள் எந்த அளவிற்கு அங்க மற்றும் உடல் உறுப்புகளுக்குத் தனி சிறப்பு செய்கிறார்கள் என்பது, தனி நபர்களுடையே பெயரே அந்த நபர்களின் சிறப்பு அம்சமாகக் கொண்டு அமைந்திதிருந்தன என்பதைக் காணலாம்.

[ ஆசிரியர் பெருங்கண்ணன்

[ பெருங்கண்ணன்

[ இளங்கண்ணன்

[ செங்கண்ணன்

[ நெட்டிமையார்

[ பேயனார்

[ பூதனார்

[ பூதம் தேவனார்

[ நிரைமுடி நெட்டையார்

[ இரும்பிடத்தலையார்

[ சீத்தலைசாத்தனார்

[ பெருந்தலையார்

[ புல்லாற்று எயிற்றனார்

[ கழார்கீரன் எயிற்றனார்

[ தேவனார்

[ காமக்கண்ணியார்

குறிப்பாக பெண்களின் தோலின் நிறம் – மாநிறம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மாமேனி (அகம்.270:10), மாயோள், மாமையோள் என பல இடங்களில் உள்ளன. அரசர்கள் சூரியனைபோல நிறங்கொண்டிருந்ததாக வுள்ளது.

………………………………………………………….ஞாயிற்

றொண்கதிர் தெறாமைச் சிறகிற் கோலி

நிழல்செய் து..

ஞாயிற்றினது ஒள்ளிய கதிர் அவன் உடலைக் காய்தல் செல்லாது பறவைகள் பலவும் கூடித் தம் சிறகுகளால் பந்தரிட்டு நிழலைச் செய்து சுழன்று கொண்டிருந்தன எனவுள்ளது, அவனது தோல் கருக்கக்கூடாது என்ற எண்ணம் இருந்ததைக் காட்டுகிறது.

ஒரு வீரனின் உடல் வர்ணன: செருப்பணிந்த கால்கள் கல்லைப் போன்று கடினமாக உள்ளன; அதற்கு மேல் கணுக்கால் வரை திரட்சியாக உள்ளது; மேலே வயிறும் அழகாக் உள்ளது; அதற்கும் மேலே மார்பு அகன்றுள்ளது; கண்கள் பசுமையாக உள்ளன; மோவாயில் முடி உள்ளது; செவிகள் உயர்ந்துள்ளன; கவுள் தாழ்ந்துள்ளது.   (புறம்.257)

பெண்களின் தோல் நிறம் உறையிலிருந்து எடுக்கப் பட்ட கத்தியைபோல இருளினின்று வெளிவரும் ஒளிபோல இருந்தது (அகம்,136:24, உறைகழி வாளின் உருவு பெயர்ந்து.. ..). பெண்களின் உறுப்புகள் எப்படியிருக்க வேண்டும் என்றால், அல்குல், தோள், கண் மூன்றும் அகன்று பெரிதாகவும், நுதல், அடி, நுசுப்பு மூன்றும் சிறுத்தும் இருக்கவேண்டும் என்று பொருள்பட தலைவியின் அழகை விவரிக்கும் ரீதியில் குறிக்கப் படுகின்றன (கலித்தொகை.108:2-3).

அகல் அல்குல், தோள், கண் என மூவழிப் பெருகி,

நுதல், அடி, நுசுப்பு என மூவழிச் சிறுகி..

இத்தகைய பல விவரங்கள் தமிழர்களின் உருவமைப்பு, உடல் கட்டமைப்பு இனரீதியிலான சித்தாந்தங்களின் வரையரைக்கு உட்படவில்லை என நன்றாகத் தெரிகிறது.

மேலும் கரூரில் அமராவதி நதிக்கரையில் கிடைத்த தங்க மோதிரத்தில் ஆண்-பெண் இருவர் தமது கால்களை ஒய்யாரமாக குறுக்காக மடக்கி  நின்றிருப்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆண் தனது வலது கையை பெண்ணின் தோளின் மீது போட்டுள்ளான், அதே மாதிரி பெண் தனது இடது கையை ஆணின் தோளின் மீது போட்டுள்ளாள். அங்க அளவுகள், வெளிப்புற உடலமைப்புகள் முதலியன அவர்கள் சொல்வது போல இல்லை. அவர்களின் உடலமைப்பு இனவாத ஆராய்ச்சியாளர் சித்தரித்தது மாதிரி இல்லவே இல்லை. மாறாக, நகைகள் அணிந்து காணப்படுகிறார்கள். எனவே அத்தகைய இனவாத சித்தாந்தங்கள், சங்க-இலக்கிய விவரங்களுடன் முழுவதுமாக மாறுபடுகின்றன. இம்மோதிரம் சுமார் 2ம் BCEலிருந்து 1ம் CEவரையிலுள்ள காலத்தைச் சேர்ந்தது என அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது எற்றுக்கொள்ளப்பட்ட சங்க-காலத்திற்குள் வருகின்றது. எனவே, சங்க-காலத் தமிழர் இவ்வாறுதான் இருந்திருப்பர் எனத் தெரிகின்றது.

மேலும் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், மேனாட்டு இந்தியவியல் ஆராய்ச்சியாளர்கள் “திராவிடர்களை” வேதங்களில் காணப்படுகின்ற விவரங்களுடன் தான் தமது மானுடவியல் காரணிகளை ஒப்பிட்டு தமிழர் “திராவிட இனத்தைச் சேர்ந்தவர்” எனக் காட்டினர். ஆனால், தமிழர்களுடைய சங்க-இலக்கிய விவரங்களுடன் தமது வெளியுடல் அமைப்புகளை (morphological features) ஒப்பிட்டு அவ்வாறான “திராவிடர்களை” அடையாளங் காணவில்லை. எப்படியிருப்பினும், கருத்த தோல் நிறங்கொண்ட, சப்பை மூக்குகொண்ட (அனஸ்), பேச்சுத்திரனற்ற (ம்ருத்வாச) மற்ற வேத-விவரங்களுடன் ஒத்துபோகின்ற “திராவிடர்களை” சங்க-இலக்கியங்களில் காணமுடியவில்லை.

#முன்னுக்கு_முரணான_இனவாத_சித்தாந்தங்கள்: 

இனரீதியிலாக மனித இனத்தை பிரித்து அடையாளங் காணும் போது, எவ்வாறு அத்தகைய அடையாளங் காணப்பட்ட இனங்கள் (races) மற்றும் இன-உட்பிரிவுகள் (sub-races) பெருகுகின்றன மற்றும் ஒன்றின் மீது ஒன்று படருகின்றன என்பதனைக் காணலாம்.

N    லின்னேயஸின் (1735) படி நான்கு இனங்கள் – ஐரொப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்க வகைகள்;

N    புளுமென்பேக் (1781) படி ஐந்து இனங்கள் – காகசிய, மங்கோலிய, எத்தியோப்பிய, அமெரிக்க, மலாய் வகைகள்;

N    ஹக்ஸ்லி என்பார் ஐந்து முதன்மை மற்றும் 14 இரண்டாம் வகை இனங்களை அடையாளங் காணுகிறார்.

N    டெனிகர் (1900) மானுடத்தை 17 வகைகளாகப் பிரித்து அதில் 25 இனங்கள் மற்றும் இன-உட்பிரிவுகளுக்கு இடமளிக்கிறார்.

N    ஜே. எஸ். ஹக்ஸ்லி மற்றும் ஏ.சி. ஹட்டன் – வெள்ளை, மஞ்சள், கருப்பு என மூன்றே இனங்கள் உள்ளதாக கூறினர்.

இவையெல்லாம் முன்பு கிரேக்க போர்வையில் மனித இனத்தை பல காரணிகளாகப் பிரித்து dolicocephalic, mesocephalic, brachycephalic, leiotrichi, cymotrichi, lechoderms, xanthoderms என்றெல்லாம் கூறியவை திடீரென்று மறைந்து

போனதுடன், அவை பொய்மை-விஞ்ஞான (pseudo-scientific) ரீதியாலானது என்று அவர்களே ஒப்புக் கொண்டனர்! அதுமட்டுமல்ல, “திராவிடர்”களையே அவர்கள்

#ஹோமோ_திராவிடர்(Homo-Dravidians), #புரோட்டோ_திராவிடர் (Proto-Dravidians), #பிரி_திராவிடர் (Pre-Dravidians), #மங்கோல்_திராவிடர்

(Mongol-Dravidians), #ஸ்கைத்தோ_திராவிடர் (Scytho-Dravidians)மற்றும்

#ஆரிய_திராவிடர் (Arya-Dravidians) என்றெல்லாம் பிரித்தனர்!

 ஆனால், பழந்தமிழரோ நல்ல வேளை, அவர்கள் தம்மை அவ்வாறு விவரித்துக் கொள்ளவும் இல்லை, பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளவும் இல்லை. ஆகவே, “திராவிடர்”, ஒரு இனம் என்பது பொய்யாகிறது.

#திராவிடர்_தோற்றத்தைப்_பற்றிய_சித்தாந்தங்கள்: 

கீன்ஸ் (Keans), மோரீஸ் (Morries), ஸ்க்லேட்டர் (Sclater), டர்னர் (Turner), ரகோஸின் (Ragozin), கால்ட்வெல் (Caldwell), பெர்ரி (Perry), ஸ்மித் (Smith), ஹார்னல் (Hornell) முதலிய மேனாட்டவர் முதல் நமது கனகசபை வரை “திராவிடருடைய” தோற்ற இடத்தைப் பற்றி பல ஆர்வமூட்டக் கூடிய, வித்தியாசமான கருதுகோள்களையும், சித்தாந்தங்களையும் புராணங்கள் (mythology), மானுடவியல்-அலகுமுறை (Anthropometry), வார்த்தை-விளக்கம் (philology), ரத்ததின் தூய்மை (purity of blood), நன்றான தூய்மையான இனத்தை உருவாக்குவது (Eugenics) முதலியவற்றின் ஆதாரமாக, வைத்தனர். அவை சுருக்கமாக இங்கு கொடுக்கப்படுகின்றன:

#மத்திய_ஆசிய_தோற்றம்:

 உடல் வெளியமைப்பு மற்றும் மொழியியல் ஒப்புமைகளின் ஆதாரமாக, “திராவிடர்கள்” மத்திய ஆசியாவிலிருந்து வந்திருக்கக் கூடும் என்ற வாதம். கால்ட்வெல் “ஸ்கைத்தியர்” மூலமாகத்தான் “திராவிடர்” பிறந்திருக்க / தோன்றியிருக்க வேண்டும் என பிடிவாதமாக வாதித்தார். ஆனால், இவ்வாதம், “ஆரியர்களும்” அங்கிருந்துதான் வந்துள்ளனர் எனப்படுகின்ற கருதுகோள்களையும், சித்தாந்தங்களையும் அவர்கள் மறந்து வாதிப்பது போன்றுள்ளது. இருகூட்டக்களும் இங்கிருந்துதான் இந்தியாவில் நுழைந்தன என்றால், பிறகு எதற்க்காக அந்த இரண்டு குழுமங்கள் எல்லா சரித்திர நிகழ்வுகளிலும் மோதிக்கொள்ள வேண்டும் எனத்தெரியவில்லை.

#மேற்காசிய_தோற்றம்:

 மேற்காசியாவில் பல தொன்மையான நாகரிகங்கள் தோன்றியதால், திராவிடர்களும் அந்த நாகரிகங்களின் கலப்பினால் (intermixing) அல்லது மக்களின் புணர்ச்சியினால் (interbreeding) உருவாகியிருக்கவேண்டும் என்ற வாதம்[27].

#பரவும்_சித்தாந்தம்: 

எல்லா நாகரிகங்களும் – எகிப்து மற்றும் மத்தியத்தரைகடல் பகுதியிலிருந்துதான் தோன்றியிருக்கவேண்டும் எனக்கொண்டு, “திராவிடர்” மத்தியத்தரைகடல் இனம் மற்றும் ஆசியகூறுகள் கலந்து (miscegenation), ஒரு கலப்பினமாக உருவாகியிருக்கவேண்டும் என்ற வாதம்[28].

#வட_இந்திய_மற்றும்_ஹிமாலயமலைகளுக்கு_அப்பாற்பட்ட_இடங்களில்_தோன்றியமை: 

ஆரியர்களுக்கு முன்பு, “திராவிடர்” வட-இந்தியா முழுவதும் வடமேற்கு-வடகிழக்கு பகுதிகளில் பரவியிருந்தனர். ஆரியர்கள் வந்து அவ்விடங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தபோது, அவர்கள் தெற்கு நோக்க்கி செல்ல வேண்டியதாயிற்று. “ஹிமாலயமலைகளுக்கு அப்பாற்பட்ட இடங்களில் தோன்றியமை என்ற சித்தாந்தத்தின்படி “திராவிடர்”, திபெத்து பகுதியில் தோன்றி இந்தியாவின் வடகிழக்கு திசை வழியாக இந்தியாவில் நுழைந்தனர். இங்கு “ஆரியர்” வடமேற்கு திசை வழியாக வந்த சித்தாந்தத்தை மனதில் வைத்துக் கொண்டு, “திராவிடர்” வடகிழக்கு திசைவழியாக நுழைந்தனர் என்றதை நோக்கத்தக்கது. எனவே இந்த நான்கு சித்தாந்தங்களின் படி, “திராவிடரும்” வெளியிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர் என்று ஆகின்றனர்.

#லெமூரியன்_அல்லது_குமரிக்கண்டம்: 

“இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தவர்”, “அந்நியர்” என்ற மேற்கண்ட சித்தாந்தங்களுக்கு மாறாக, “திராவிடர்கள்” கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் தோன்றி, பிறகு, அது மூழ்கியபிறகு, தமிழ்நாட்டிற்கு வந்தனர் என்ற வாதம்.

முதல் மூன்றும் செமித்தியமத நூல்கள் மற்றும் மேனாட்டுப் புராணங்களின் மீது ஆதாரமாகக் கொண்ட வாதங்கள். நான்காவது, ஆரியருக்கு எதிர் திசையில் நுழைந்தனர் மற்றும் இறுதியான வாதத்திற்கு சங்க-இலக்கியங்களில் கடல்கோள்களினால் நிலம் மூழ்கிய குறிப்புகள் மீது ஆதாரமாகக் கொண்டவை என அறியலாம். 

ஆனால் “தமிழர்” முன்பே குறிப்பிடப்பட்டபடி, வடக்கு-இமயம், தெற்கு-குமரி, குண-குடகடலால் – என்ற எல்லைகளுக்கு அப்பாலிருந்து வந்ததாக எந்த குறிப்பும் இல்லை. எனவே, இச்சித்தாந்தங்கள் சங்க-இலக்கிய குறிப்புகளுக்கு எதிராக உள்ளன.

#மானுட_அளவியலில்_முரண்பாடுகள்: 

மானுடவியல் வல்லுனர் என்ற தகுதியிலிருந்து இனவாத-விஞ்ஞானிகளாக மாறியவர், மண்டைவோடுமானி (craniometers), வளைந்த-பாகைமானிகள் (Spheroidal-hooks), மூக்களவுமானி (nasal-index meters) முதலிய கருவிகளைக்கொண்டு ஒத்துப்போகாத, முரண்பட்ட பலதரப்பட்ட அளவுகள் தங்களது “வெளியுடல்-அளவியல்” (Morphometry), “மண்டையோடு-அளவியல்” (Craniometry) என்ற புதிய விஞ்ஞான-ஞானத்தோடு “திராவிடரை”, “ஆரியரிடமிருந்தே” உருவாக்கியதை நன்றாக அறிந்து கொள்ளலாம். தங்களுடைய “விஞ்ஞான” ஆய்வுகளில், மூதாதையர்வழி-கூறுகள் மற்றும் சுற்றுப்புறசூழல், இவற்றின் தாக்கம் மற்றும் சீதோஷ்ணநிலை, உணவுமுறை, ஜீன்ஸ், குரோமோஸோம்களின் இணைப்புகள் முதலியவற்றைக் கருத்திற் கொள்ளவில்லை. ஆராய்ச்சிகள், உயரம், உடல் அமைப்பு முதலியன வாழும் முறை, செய்யும் தொழில் மற்றும் மூதாதையர்-கூறுகளால் மாற்றமடைகின்றன, எனக் காட்டுகின்றன. அதனால் தான், நடைமுறையில் உருண்டைதலை பெற்றோர்கள் நீண்டதலை குழந்தைகள் பெற்றெடுக்கின்றனர்; நீண்டதலை பெற்றோர்களுக்கு நடுத்தர-வடிவான தலையுள்ள குழந்தைகள் பிறக்கின்றன, என்றவற்றைக் காண்கிறோம். குட்டை-உயரம், கருப்பு-சிவப்பு முதலியனவும் அப்படியே.

எட்கார் த்ரஸ்டன் கொடுத்துள்ள மானுடவியல் – அளவு அட்டவணைகளில் பல முரண்பாடுகள் உள்ளதைக் காணலாம்[29]. 23 நீணடத்தலை காரர்களில், ஒரு நடுத்தர தலையைக் காண்கிறோம்; அதேமாதிரி 40 கம்மாளர்களில் 5 உள்ளனர்; 6/50 பள்ளர்கள்; 5/42 இடையர்; 5/24 புலையர்; 8/40 மாதிக; 6/30 மால; 11/60 பேஸ்த; 10/40 கொல்ல; 14/50 போய; 12/40 பன்ட்; 16/40 காப்பு; 19/50 குறும்ப; 23/50  பம்ஹல;

27/50 ஹொக்கலிக. 

இவ்வாறு, தென்னிந்தியாவைச் சேர்ந்த பழங்குடிகள் அல்லது “திராவிடர்” எவ்வாறு இனரீதியிலாகவும், மானுடவியல்-அளவீட்டு காரணிகளுக்கும் தமது இனம் (race), இனவாதம் / இனவெறி (racism) மற்றும் இன-சித்தாந்தங்களுக்கு (racialism) ஒத்துப்போகவில்லை என்பதனை காணலாம்.

படிக்க: ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தில் ஆரியமும்-திராவிடமும் ஒன்றே!! ஏ.எம்.கே

நூல்கள்: ஏகாதிபத்தியம் உருவாக்கிய இனக் கொள்கை ஆரிய திராவிட இனவாதம் குறித்து

'திராவிட' நீதிக் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 1916-1946' ஜெ.பி.பி. மொரே

“திராவிடர்” என்ற நிலையில் “பிராமணர்” என்றுமே “ஆரியர்”தாம். ஆனால், வேடிக்கை என்னவென்றால், மேற்கண்ட அளவு முறைகள் அவர்களை “திராவிடர்”களாக்குகிறது. 20 நீண்டத்தலை பிராமணர்களில் ஒரு உருண்டைத்தலை காணப்படுகிறது! அதே மாதிரி பத்தர் பிராமணர் 2/25; தேஸ்தா 4/24; மாத்வ – 60 நடுத்தர உருண்டைகளில், 18 உருண்டை;  கர்நாடக ஸ்மார்த – 50 நடுத்தர உருண்டைகளில், 9 உருண்டை; மாண்டியா – 50 உருண்டைகளில், 31 நடுத்தர உருண்டைகள்; சிவள்ளி – 30 உருண்டைகளில், 17 நடுத்தர உருண்டைகள். இதேமாதிரி மூக்களவுகளும் வேறுபடுகின்றன. “திராவிடரி”டையே, பல “ஆரியர்” காணப்பட்டு, ஒரு நிலையில், “திராவிடரு”க்கும் “ஆரியருக்கும்” உள்ள வித்தியாசங்கள் மறைகின்றன, அதாவது “விஞ்ஞான”அளவுகள் அத்தகைய “இனப்பிரிவினையைக் காட்டுவதில்லை.

#மொழியியல்_ரீதியில்_திராவிட_மற்றும்_திராவிட_இனம்_தோன்றியது: 

இவ்விதமாக, “இனவாத-விஞ்ஞானிகள்” சுறுசுறுப்பாக எப்படியாகிலும் “திராவிடர்”களை உருவாக்கியேத் தீரவே வேண்டும் என தமது விஞ்ஞான ஆய்வுக்கூடங்களில் தீவிர-முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, “மொழியியல்-விஞ்ஞானிகளும்” அத்தகைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். ஃப்ரான்ஸிஸ் W. எல்லிஸ் (Francis W. Ellis) தமிழ், கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளை ஒப்பிடும்போது அவற்றை, “தென்னிந்திய மொழிகள்” (South Indian dialects) என்று குறிப்பிட்டார். ஏ.டி. காம்ப்பெல் (A. D. Campbell) தமது, “தெலுகு மொழியின் இலக்கணம்” (1816)ல் எழுதும்போது அவற்றை அவ்வாறே குறிப்பிட்டார். லாஸென் (Lassen) “டெக்கான் மொழி”கள் என்று வகை படுத்தினார். ஹாக்ஸன் (Hackson) என்பார் 1848 மற்றும் 1856 ஆண்டுகளில் நீலகிரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தமது ஆய்வு மேற்கொண்டு, இப்பகுதி மக்கள் பேசிய மொழிகளுக்கு “தமுளியன்” (Tamulian) என பெயரிட்டார். முதன் முதலாக கால்ட்வெல் தான் “திராவிட மொழிகள்” என்று கூறினார். பிறகு டி. பரௌ (T. Burrow), எம்.பி.எமனௌ M. B. Emeneau), காமில் வி. ஸெலெபில் (Kamil V. Zvelebil), எம். அந்த்ரொபோவ் (M. Anthropov) முதலிய நவீன பண்டிதர்கள் தமது மொழியியல் யுக்திகளின் மூலம், அவ்வாறு “கண்டுபிடித்த திராவிட இனத்தை” உறுதி செய்தனர். தமது நூல்களில் மொழியியல் ஆராய்ச்சி என்ற போர்வையில், மொழியைவிட “இனம்” என்ற கருத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது, அவர்களது “திராவிடஇனம்” உபயோகத்திலிருந்து தெரிகின்றது.

#சமஸ்கிருத_மூலங்கள்:

:மனுவின் படி “திராவிடர்” தகுதியிழந்த / விலக்கப் பட்ட சத்திரியர் மற்றும் அவர்கள் விர்ஸபனுடைய மகனான “திராவிட” என்பவனது வழிவந்தவர்கள்[30]எனக்குறிப்பிடுகின்றார். மஹாபாரதத்தில் கொடுக்கப்பட்டுள்ள, இரண்டு தகுதியிழந்த சத்திரியர்களின் பட்டியல்களில் “திராவிட” என்போர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாகவத புராணம் சத்தியவிரதனை “திராவிடரின் அரசன்” என்று குறிக்கிறது. ஆதிசங்கரர், சௌந்தர்யலஹரி 75வது சுலோகத்தில் தம்மை “திராவிட சிசு” என்றுக் குறிப்பிட்டுக்கொள்கிறார்[31]. சந்திரகுப்தனின் அமைச்சராக இருந்த சாணக்கியன், திராவிட நாட்டை அதாவது காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவன் என்றே குறிப்பிடப்படுகிறான். அதுமட்டுமல்லாது, அவனது பல பெயர்களில் “திரமிள” என்பதும் உள்ளது – வாத்யாயன, மல்லங்க, குடில, த்ரமிள, பக்சிலஸ்வாமி, விஷ்ணுகுப்த, அங்குல முதலியன.  CE 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டர் “ஆந்திய திராவிட பாஷா” என்ற சொற்றொடரை உபயோகித்துள்ளார். விசிஸ்டாதுவைத இலக்கியங்களில் (சுமார் 7வது நூற்றாண்டு CE) “திரமிடாச்சாரியார்” என்பவர் காணப்படுகிறார்[32]. வராஹமிஹிரருடைய பிரஹத்சம்ஹிதை, யோகயாத்ரம், வராஹபுராணம், வராஹிதந்த்ரம், மஹாபாரதம் முதலிய நூல்கள் ஆந்திரர், கருநாடகர், கூர்ஜர், தைலிங்கர், மஹாரஷ்டிரர் என்பவர்களை “திராவிடர்” என்றே குறிக்கின்றன. இவர்கள் “பஞ்ச திராவிடர்” என்றே குறிப்பிடப்படுகின்றனர். இங்கு, “பஞ்ச திராவிடர்” மற்றும் “பஞ்ச கௌடர்” இரண்டு சொற்றொடர்களும் பிராமணருக்கு உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. அந்த “பஞ்ச கௌடர்” கீழ்கண்ட பகுதிகளைச் சேந்தவராக உள்ளனர்:

சாரஸ்வஸ்த்தர் (காஷ்மீரத்தைச் சேர்ந்தவர்)

கன்யகுப்ஜர் (பஞ்சாப்)

முக்கிய கௌடர் (வங்காளம்)

உத்கலர் (ஒரிஸா)

மைதிலர் (மிஸ்ரா எனப்படுவர்) (நேபாளம், பீஹார்)

மார்க்கண்டேய, கருட, விஷ்ணு-தர்மோத்திர புராணங்கள் மற்றும் பிரஹத்சம்ஹிதை தென்மேற்கு இந்தியாவில் உள்ள மக்களாக காம்போஜர், ஸ்ரீமுகர், அனர்த்தர் முதலியோருடன் “திராவிடரையும்” சேர்க்கின்றன. தசகுமார சரித்திரம்[33]“திராவிட”நாட்டைக் குறிப்பிட்டு, அதில் காஞ்சி என்ற நகரம் உள்ளதாகக் குறிக்கிறது. காதம்பரி[34] அந்நாட்டைச் சேர்ந்தவர் அல்லது அங்கு வசிப்பவர் “திராவிடர்” எனக்குறிப்பிடுகிறது. ஒரு முனிவர் “திராவிட-கௌடகர்” என்றும், ஒரு உபநிஷதம் “திராவிட-உபநிஷதம்” என்றும் குறிக்கப்படுகின்றன. பரதமுனி நாட்டிய சாஸ்திரத்தில் “திராவிட” என்றும், பாணர் ஒரு “திராவிட மார்க்கம்” என்பதனையும் குறிப்பிடுகின்றனர். பில்ஹணருடைய “விக்ரமாத்தித்யனுடைய திக்விஜயம்” என்ற நூலில் சோழனின் படை “திராவிடப் படை” என்றும், சோழமன்னன் “திராவிட மன்னன்” என்றும் குறிப்பிடுகின்றது. மியூர் மற்றும் கால்ட்வெல் முதலியோரே 1854ல், பாபு ராஜேந்திரலால் மிஸ்ரா என்ற இந்திய மொழியியல் வல்லுனர் பிராக்ருத மொழிகளுள் “திராவிடி” ஒன்று மற்றும் அது “சௌரஸேனி”ற்கு சமம் என்று குறிப்பிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே, இங்கு, “திராவிட” என்பது பூகோளரீதியில் தென்னிந்தியா அல்லது தென்னிந்திய பகுதி மற்றும் தென்னிந்திய மொழி, குறிப்பாக தமிழைக் குறிக்க உபயோகிக்கப் பட்டது என்றதனை அறியலாம்.

#ஜைனர்களின்_திரமிள_மற்றும்_திரவிட:

ஜைனர்களின் சம்வாங்க சூத்திரம் c.300 BCE), பன்னவன்ன சூத்திரம் (c.168 BCE) முதலிய நூல்கள் நமது நாட்டில் இருந்த மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட 18 மொழி-வரிவடிவங்களில் (script) “தமிலி” என்பது ஒன்றாகும், என கூறுகின்றன. ஜைன மதத்தை தெற்கில் பரப்ப வஜ்ரநந்தி என்ற திகம்பர ஜைன குரு, மதுரையில் (470 CE) ஒரு “திராவிட சங்கத்தை” ஏற்படுத்தினார். சதுரன்காய புராணத்தில் (421 அல்லது 605 CE) “திராவிட-வலிக்கில்ல-சைத்திரத்ரிதோவார” என்று குறிப்பிடும்போது, விரிஸபஸ்வாமியின் மகனாக “திராவிட” என்று உள்ளது, ஆனால் இவர் ஜைனர்[35]. ஹேமசந்திரருடைய “ஸ்தவீரவலி சரித்ர” என்ற நூலில் “தமிள” என்று குறிப்பிடுகின்றார், ஆனால், ஃப்லீட் (John Faithful Fleet) என்பார் “திரமில” பல்லவர்களுடைய “திராவிட நாடு” என்றும் மற்றும் அதன் தலைநகர் காஞ்சி, அது கிழக்குக்கடற்கரையில் இருந்தது என்று விவரிக்கிறார்.

#பௌத்த_நூல்களிலுள்ள_தமிள:

 பாலி வம்சாவளிகள் “தமிள” என்பரைப்பற்றி பல குறிப்புகளை கொடுக்கின்றன. லலிதாவிஸ்தார என்ற சமஸ்கிருத நூல் (c.2ndcent.CE) உத்தன் என்பவரின் காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட 64 மொழி-வரிவடிவங்களில் “திராவிட லிபியும்” ஒன்று என்று கூறுகிறது. “தமிள” நாட்டைச் சேர்ந்தவர் கஸ்ஸப தேர என்ற ஆசிரியர் வினய நூற்களுக்கு ‘விமதிவினாதினி’ என்ற பெயரில் உரை எழுதியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. புத்த நூல்களின்படி – தீபவம்ஸம், மஹாவம்சம் – இலங்கையில் சிங்களவருடன் சதா சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் மக்கள் – “தமிளர்கள்”. அதுமட்டுமல்லாது, அவர்கள் “அநாரியர்கள்” என்றும் குறிப்பிடப்படுகின்றனர். பௌத்தர்கள் தங்களை “ஆரியர்” என்றே குறிப்பிட்டுக் கொண்டனர். ஆகையால் தமக்கு எதிராகவுள்ளவர்களை “ஆரியர்”-அல்ல என்ற பொருள்படும் “அநாரியர்கள்’ என்ற சொற்றொடரை உபயோகப்படுத்தினர், எனத் தெரிகிறது. அவ்வாறு கூறும்போது அத்தகைய “தமிளர்” யார், இந்தியாவின் எப்பகுதியினின்று வந்தனர் என்று கூறப்படுவதில்லை, ஆனால் பாண்டிய-சோழ பிரதேசங்களை வித்தியாசப் படுத்திக் காட்டுகின்றன. தீபவம்ஸத்தில், “தமிளர்” 8 முறை குறிப்பிடப் படுகின்றனர்[36]. இதே மாதிரி, புத்தகோஸரும் “தமிளர்”களை யவனர் மற்றும் கிராதர்களினின்று ஒரு பக்கமும், ஆந்திரர்களினின்று மறுபக்கமும் வேறுபடுத்திக் காண்பிக்கிறார். யுவான் சுவாங் (Yuan Chwang) 637 CEல் தமிழகத்திற்கு வந்தபோது தனது குறிப்புகளில் காஞ்சியை (Kan-chih-pulo) “திராவிட” (Tolo-pi-la) நாட்டின் தலைநகராக குறிப்பிட்டுள்ளார். பெய்டிங்கர் அட்டவணையின்படி (Peutinger Tables), அவர் தில, திமிர், சிம்போ முதலிய வார்த்தைகளை “திராவிட”நாட்டைக் குறிக்க உபயோகப்படுத்தியதாகத் தெரிகிறது. பராக்கிரம பாஹு – I (1153-86 CE) “தமிளாதிகாரின் ரக்க” என்பனின் சேவையைப் பெற்றிருந்ததாக உள்ளது.

#கல்வெட்டுகளிலுள்ள_திரவிட_த்ரமில_தமில_முதலியவை:

 இருக்கின்ற பழங்காலத்திலிருந்து 18ம் நூற்றாண்டு வரை தேதியிட்டுள்ள கல்வெட்டுகள் மற்றும் தாமிரபட்டயங்களில் காணப்படுகின்ற சமஸ்கிருத- திரவிட, திராவிட, திரமிட; மற்றும் பிராக்ருத- தமில, தமிள, த்ரமிட, திரமிள முதலியன பொதுப்பெயர் மற்றும் உரிசொல்லாக உபயோகபடுத்தினாலும், அவை “தமிழ்” மொழியைத்தான் காட்டுகின்றன என்று நன்றாகத் தெரிகின்றது. பல இடங்களில் திரவிடர் / திரமிடர் மற்ற தென்னிந்திய மன்னர்களான சேர, சோழ, பாண்டிய, ஆந்திரர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியுள்ளன. பாரம்பரியமாகக் குறிப்பிடப்படுகின்ற 56 அரசர்கள் மற்றும் அரசுகளில் “திராவிடம் / திராவிடர்” ஒன்றாகவுள்ளது / உள்ளனர். கல்வெட்டுகள் மொழிரீதியில் கலிங்கர், ஆந்திரர், கருநாடகர், கேரளர் மற்றவரை “திராவிடருடன்” அல்லது “தமிளர்களை” சேர, சோழ, பாண்டிய குழுமங்களுடன் சேர்க்கவில்லை. ஆகவே இவ்வார்த்தைகள் தமிழ் மொழியைத்தான் குறிக்கும், இனரீதியில் இல்லை எனத்தெளிவாகிறது.

இனம் மற்றும் மொழி என்பன இரு தனியான நிலைகள், கூறுகள் மற்றும் மடிப்புகள் ஆகும். ஒரு குறிப்பிட்ட மக்கள் ஒரு குறிப்பிட்ட மொழியை பேசுவதால் அவர் குறிபிட்ட “இனத்தவராக” மாட்டார்கள். மொழியியல் மற்றும் மானுடவியல், இரண்டும் தனித்தனியானவை. “திராவிடர்” என்று தம்மை பிரகடனப் படுத்திக் கொள்பவர், சொல்லப்படுபவர் எல்லோரும் அச்சடித்த நகல்கள் போன்று எல்லா மானுட-வெளிப்புற அமைப்பு, உடல்வாகு, வனப்புக் கொண்டு ஒரே மாதிரியாகக் காணப்பட மாட்டார்கள், இருக்கமாட்டார்கள். கருப்பானவர் எல்லாம் “திராவிடர்” இல்லை, வெளுப்பானவர் “திராவிடர்” அல்லாதவராகி விடமட்டார். மேலே குறிப்பிட்டபடி, பாரம்பரிய கூறுகள் மற்றும் சுற்றுப்புற சூழல்கள் மனிதர்களின் உடலமைப்பை மாற்றுகின்றன, அம்மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. 

மேற்கண்ட விவரங்களினின்று, எவ்வாறு திரவிட, திராவிட, தமிள, திரமிள, முதலிய சொற்களினின்று “திராவிடர்கள்” உருவாக்கப்பட்டனர் என்றும், அவர்கள் மானிடவியல்-மானுட-அளவியல் காரணிகளுட்பட்டு வரவில்லை என்பதனையும் பார்த்தோம். 

இருப்பினும் திராவிட இனம், திராவிட ரத்தம், திராவிட மண்டையோடு, திராவிட எலும்புகள் என்றெல்லாம் பேசப்பட்டு வருகின்றன. 

மேலும் “திராவிட”த்தோற்றங்களின் கருதுகோள்களும் அவர்கள் எகிப்து, மத்திய-ஆசியா, மத்திரத் தரைகடல் பகுதி, திபெத் முதலிய பகுதிகளினின்று வந்திருக்கலாம் என்பது, நிச்சயமாக சங்க இலக்கிய பாரம்பரியம், கலாச்சாரம், நாகரிகம் முதலியவற்றிற்கு எதிராகவே உள்ளன. இதில் வேடிக்கையென்னவென்றால், அரசியல்வாதிகள் மட்டுமல்ல சரித்திர ஆசிரியர்களும் முன்னுக்கு பின் முரணாகவும் மற்றும் திரிபுவாதங்களையும் பேசி-எழுதி வருகின்றனர். 

கால்ட்வெல்லின் மொழியியல் கண்டுபிடிப்பு, மேனாட்டு மற்றும் இந்திய பண்டிதர்கள் இனவாத திரிபுவாதங்களைத் தமது சுயநலத்திற்காக உபயோகப் படுத்தினர். இதுதான் இன்றய திராவிட இயக்கங்கள் தோன்ற ஏதுவாகி ஒரு குறிப்பிட்ட சமூகமக்களுக்கு எதிராக வெறுப்பு, துவேஷம் என்ற ரீதியில் வளர்ந்தன. “திராவிடர்” என்ற வார்த்தையும், “ஆரியர்” போன்றே ஒரு நோக்கத்துடன், அதாவது “ஆரிய-இனத்தை விட உயர்ந்த இனம்” என்ற கருதுகோளின் ஆதாரமாக உருவாக்கப் பட்டது. இது இனங்கள், மக்கள் குழுமங்கள் குழுக்களைப் பற்றிய அறியாமையோ, குழப்பங்களோ இல்லை, ஆனால் மக்களை  அரசியல் ரீதியில் பிரித்து வைக்க ஐரோப்பிய-ஆங்கிலேய – இந்தியவியல் வல்லுனர்களாக, “சரித்திர ஆசிரியர்களாக”மாறியவர்களின்   சூழ்ச்சியே ஆகும். எனவேதான், இன்றைய இந்திய அரசியல்வாதிகளும் அத்தகைய சூழ்ச்சியைப் பின்பற்றி தமது அரசியல் ஆதாரங்களுக்காக உபயோகிக்கின்றனர் இன்றைய “திராவிட-இனவாத” சித்தாந்திகள். 

தமது “திராவிட மாயையை” நிலைநிறுத்த சங்க-இலக்கியங்கள் உதவுவதில்லை என்பதனை உணரவேண்டும்.

முற்றும்.

#K_V_Ramakrishna_Rao

(இக்கட்டுரை ஆசிரியர் ஆங்கிலத்தில் பல மாநாடுகளில் சமர்ப்பித்த-வெளிவந்த ஆங்கில கட்டுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு-தொகுப்பாகும்.

……………………………………………………, Dravidians – a Literary and anthropological Study, a paper presented during the IHC session held at New Delhi from Feb.21-23, 1992.

……………………………………………………, The Dravidian Problem, Proceedings of the Bharatiya Iitihasa Sankalana Samiti, Warangal, 1992, 

……………………………………………………, Racial Myths, Politics and Human Unity, in Make History, Madras, Oct-Dec.1993.

- ராமன் ராஜூ

(முகநூலிலிருந்து)

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு