சாதியமைப்பை திராவிடத்தாலோ தலித்தியத்தாலோ ஒழிக்க முடியாது. ஏன் ??

பகத்சிங் பாரதி

சாதியமைப்பை திராவிடத்தாலோ தலித்தியத்தாலோ ஒழிக்க முடியாது. ஏன்  ??

சாதிப் பிரச்சினை உள்ளிட்டு அனைத்துப் பிரச்சினைக்கும்  திராவிட அரசியல்  பார்ப்பனிய எதிர்ப்பு  மட்டுமே பேசுகிறது. பார்ப்பனர்களை எதிர்த்து பிற சாதி மக்களை அணி திரட்டுவதாக சொன்னாலும் அது நீதிக்கட்சி காலம் தொட்டு தாழ்த்தப்பட்டவர்களை புறக்கணித்தே வந்துள்ளது. இன்றும் திராவிடக் கட்சிகள் அதைத்தான் செய்கின்றன. இடை நிலை ஆதிக்க சக்திகளின் பக்கம்தான் நீதிக்கட்சியும் அதன் வாரிசுக்கட்சிகளும் நின்று வருகின்றன. பார்ப்பனிய எதிர்ப்பும்  கூட  வர்க்கப் பார்வையற்ற கண்ணோட்டத்தில் அதை ஒழிக்கும் நோக்கில் இல்லை. ஆகவேதான் திராவிடத்தால் பார்ப்பனியத்தை  வீழ்த்தமுடியவில்லை. பார்ப்பனிய எதிர்ப்பும் கூட  வெறும் பார்ப்பனர்கள் எதிர்ப்பாக (அதுவும் பூசாரிப் பார்ப்பனர்கள் எதிர்ப்பு) மட்டும் சுருங்கியுள்ளது. இன்று நம்ம ஸ்கூல் திட்டம் டி.வி.எஸ் எனும் பெரும் பார்ப்பன முதலாளியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகவே இவர்களின் பார்ப்பனர் எதிர்ப்பும் கூட உண்மையானதல்ல. திராவிடம் பார்ப்பன முதலாளிகள் பக்கம் நிற்கிறது.  பார்ப்பன எதிர்ப்பின் பேரில் இடை நிலை ஆதிக்க சாதிகள் பக்கம் நிற்கிறது. ஆகவே  திராவிடத்தால் சாதியை ஒழிக்கவே முடியாது. 

தலித்தியம்  தலித்துகள் மீதான சாதி ஒடுக்குமுறைகளை பேசுகிறது. அது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் அதனிடமும் சாதி ஒழிப்பு திட்டம் இல்லை. சாதி பிரச்சினைக்கு  சூத்திர சாதி வெறியையும் இந்து மதத்தையும் (சிலர் பார்ப்ப்பனியத்தையும் சேர்த்து  சொல்கிறார்கள்) காரணமாக சொல்கிறது. தலித்தியம் சூத்திர சாதிவெறி மீது வைக்கும் விமர்சனம் கூட சரியானதே. ஆனால் அதுவும் கூட சாதி ஒழிப்பில் வர்க்கப் பார்வையில்லாமல் அடையாள அரசியலாக உள்ளது. தலித்துகள் தங்கள் விடுதலையை தாங்கள் மட்டுமே வெல்ல முடியும் என்கிறது தலித்தியம்.இது இயல்பாகவே தலித்துகளை  பிற சாதி  உழைக்கும் மக்களுடன் ஐக்கியப்படுவதை தடுத்துவிடுகிறது. ஆகவே தலித்தியம் சாதியை எதிர்ப்பதாக சொன்னாலும் உண்மையில் சாதி ஒழிப்பிற்கு தடையாக உள்ளது.  வி சி.க போன்ற சில தலித்திய இயக்கங்கள் தவிர பெரும்பாலான தலித்திய அமைப்புகள் (கிருஷ்ணசாமி, மாயாவதி, பஸ்வான் etc) பாஜகவுடன் சங்கமித்துவிட்டன. விசிக சனாதன எதிர்ப்பு பேசுவது சரியானதே. ஆனால்  சனாதனத்தை பாதுகாக்கும் காங்கிரசையும் திமுகவையும் மாற்றாக முன்வைக்கிறது. ஆகவே தலித்தியத்தாலும் சாதியை ஒழிக்கவே முடியாது. 

சாதியின்  பொருளியல் அடித்தளமான அரை நிலவுடமை முறையை வீழ்த்தாமல் சாதியை வீழ்த்த முடியாது. பார்ப்பனியமும் சூத்திர சாதிகளின் பார்ப்பனியமும்  கூட இந்த உற்பத்தியின் விளைபொருள்தான். இதை சாதிப்பதற்கு அனைத்து சாதி உழைக்கும் மக்களும்  ஒன்று திரள வேண்டியது அவசியமாகும். தருமபுரியில் பாலன் தலைமையில் வன்னிய சாதி உழைக்கும் மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் ஒன்று திரட்டப்பட்டதால்தான் இரட்டைக் குவளை முறையை ஒழிக்கமுடிந்தது. ஆகவே வர்க்கப் போரட்டமும் வர்க்கப் புரட்சியும்தாம்  நிலவும் இந்த பிற்போக்கான உற்பத்தியை ஒழிக்கும். அதுவே  சாதியமைப்பை  தகர்க்கும்.

- பகத்சிங் பாரதி

(முகநூலில்) 

https://www.facebook.com/100005082614404/posts/pfbid02wcw9R5rJv6ZAiF1xjuDvSqzkRrQUETpVYthWNQfRQkNsnvnw51m3bLro4ptq15iGl/?app=fbl