தத்துவ தலைமை கொள்!

துரை. சண்முகம்

தத்துவ தலைமை கொள்!

நீங்கள் ஊரை அடித்து உலையில் போடும் தனியார் கல்விக் கொள்ளை நிலையங்களை நடத்தலாம். 

கோடிகளில் புரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கொழிக்கலாம்.

அவன் ஆரிய நல நிதி நடத்தினால் 

நீங்கள் திராவிட நலநிதி நடத்தலாம். 

கருவறைக்குள் நுழைய விடு! என்று பார்ப்பானின் குடுமியை பிடிக்கலாம்.

ஆனால் எங்களுக்கு அரசு பணியை கொடு! என தூய்மை பணியாளர்கள் பக்கம் நின்று அரசின் குடிமையை பிடிக்க 

வர மாட்டீர்கள்! 

பெரியார் பிறந்த நாளை ஒட்டி சமத்துவ உணவு படைக்கலாம். 

ஆனால் சாம்சங் தொழிலாளர் பக்கமோ போராடும் எம்ஆர்எப் தொழிலாளர் பக்கமோ நின்று தனியார் அடக்குமுறைக்கு எதிராக சமத்துவம் பேச மாட்டோம்! உங்கள் முரசொலியும் விடுதலையும் இதற்காக இனமான உணர்வோடு முழங்காது 

என்றால் எப்படி? 

பெரியாரை விமர்சிக்கிறார்கள் என்று வேதனைப்பட்டு என்ன பயன்? பெரியாரை விமர்சனப்படுத்தும் நிலைக்கு ஆளாக்குவது உங்களுடைய அதிகபட்ச செய்கைகள்தான்.

அதற்கு பெரியாரிடமும் நிலை கொண்டிருக்கும் தத்துவ பார்வையும் கூட.

பெரியாரை வைத்து நடக்கும் மிகப்பெரிய பெரியாரிய பிழைப்புவாதத்தை அதன் தொழிலாளர் வர்க்கத்தோடு ஒட்டாத கலைப்பு வாதத்தை

அம்பலப்படுத்தி முறியடிக்காமல் ஒரு அடி கூட கம்யூனிசம் முன்னேற முடியாது. 

பாட்டாளி வர்க்கத்தின் உரிமை உணர்வுகளை சுரண்டும் வர்க்க தத்துவங்களோடு இணைத்து ஏய்க்க முடியாது!

நாம் வரலாற்றில் யாரிடமிருந்தும் கற்றுக் கொள்கிறோம்! 

ஆனால் வர்க்கப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்க நலன்களில் இருந்து அவர்களைத் தாண்டி முன்னேறிச் செல்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.

இவர்கள் சொல்லும் "பெரியார் இயத்தை" வைத்து முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளுக்காகவே போராட அடிப்படையற்ற இவர்கள் 

பெரியாரை வைத்து பாசிசத்தை ஒழிப்போம்! என்பதெல்லாம் கோட்பாடு அறியாத குழப்படி வேலை.

மக்கள் உணர்வுகளால் அடித்துச் செல்லப்பட இருக்கும் அரசு உத்திரவுகளை காப்பதற்கான பேப்பர் வெயிட்டாக பெரியாரை நீங்கள் பயன்படுத்தும் போது, 

எதிர்வினைகள் இருக்கத்தான் செய்யும். பயன்படுத்தும் நீங்கள்தான் உண்மையில் பெரியாரை இந்த நிலைக்கு ஆட்படுத்துகிறீர்!

ஏனென்றால் பெரியார் சிந்தனைகளின் அடிப்படையே முதலாளித்துவ தாராளவாதத்தை சாரமாகக் கொண்டது. வன்முறை கொண்டு ஒடுக்கும் சிறுபான்மை முதலாளி வர்க்கத்துக்கு எதிராக பெரும்பான்மை பாட்டாளி வர்க்கத்தின் வன்முறையை நிராகரிப்பது. 

இந்த வழியில் எப்படி பாசிசத்தை ஒழிக்க முடியும்?

பெரியாரின் சிந்தனைகளில் வெளிப்படும் சில கருத்துக்களை மதிப்பதும் ஏற்பதும் வேறு. 

ஆனால் அது பாட்டாளி வர்க்க விடுதலைக்கு தலைமை தாங்கும் தத்துவமாக இருக்க அடிப்படை அற்றது.

இந்த சமூக அறிவியலை பேசாமல் என்ன பகுத்தறிவு? 

இந்த அரசியல் உண்மைகளை பேச தயங்கும் கம்யூனிஸ்டுகள் இயக்கங்கள் கரைந்த அழிவதே காலத்தின் விதி!

பெரியார் சொன்னதிலிருந்து பெரியாரைக் கொண்டாடி பெரியாரை வேறு மாதிரி பிரயோகிக்கிறோம் என்றால், 

நீங்கள் பெரியாரின் தத்துவ கோட்பாட்டை தாண்டி 

அரசின் மீதான புரட்சிகர அரசியல் பார்வை இன்றி வெல்வதற்கு ஒன்றுமில்லை! 

திராவிட மாடல் என்பதால் இந்த அரசையும் கட்டிக்கொண்டு அழுவேன்! பெரியாரையும் ஒட்டிக்கொண்டு திரிவேன் என்றால், 

அது பாட்டாளி வர்க்கத்திற்கு பயன் தராது. 

இல்லை இல்லை அரசு சரியில்லைதான்! ஆனால் இதைவிட மோசமான பாஜக வந்துவிடும் என்று சொல்லியே

உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான போக்குகளை நியாயப்படுத்துவது மக்களிடமிருந்து உங்களை அந்நியப்படுத்தி விடும். 

ஒரு வகையில் பாஜக என்ற எதிரி பளிச்சென மக்களின் கண்ணுக்கு தெரிகிறான். 

அவன் வந்தாலும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் காரணமாக மக்கள் எதிர்த்து எங்கும் போராடத்தான் செய்கிறார்கள். 

எதிரிகளைக் காட்டியே நாட்டை துரோகத்திற்கு விலை பேசும்

உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கும் 

திரைச் சீலைகள்தான் உண்மையில் மறைந்திருந்து வேலை பார்க்கும் எதிரியின் மறைமுக கூட்டாளிகள்!

வரலாற்றில் மார்க்சிய ஆசான்கள் எத்தனையோ சீர்திருத்தவாத கண்ணோட்டங்களை அதன் தலைவர்களை அவர்களின் அந்த அளவுக்கான பணியை அங்கீகரித்து இருக்கிறார்கள். 

ஆனால் அதனை பாட்டாளி வர்க்க விடுதலையின் தத்துவ சார்பாக ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை.

அதன் வர்க்கச் சார்பை அம்பலப்படுத்தியும் தனிமைப்படுத்தியும், 

சமூக ஜனநாயக வாதம் பேசியவர்களின் சந்தர்ப்பவாதங்களை துடைத்தெறிந்தும் அரசியல் பணியாற்றினார்கள்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தான் உழைக்கும் மக்களுக்கான உண்மையான ஜனநாயகம்! 

என்று அதன் இலட்சியத்திற்கு கீழேதான் , பாட்டாளி வர்க்க அரசியல் ஜனநாயக உரிமைகளுக்கான

நிபந்தனைகளுடன்தான் 

ஐக்கியத்தையும் போராட்டத்தையும் நடத்தியும் உள்ளனர்.

இங்கே நடப்பது என்ன? 

ஒடுக்குமுறைக்கான ஐக்கியம், 

போராட்டத்திற்கு தடை! 

தூய்மை பணியாளர் போராட முடியாது! 

சாம்சங் தொழிலாளர் போராட முடியாது !

ஒப்பந்த ஆசிரியர் போராட முடியாது! 

சத்துணவு ஊழியர்கள் போராட முடியாது!

செவிலியர்கள் போராட முடியாது!

அதாவது அரசியல் சட்டம் அங்கீகரித்த அமைதி வழியில் தெருவில் ஒரு ஓரமாக உட்கார்ந்து கூட தனக்கான கோரிக்கைகளை மக்களிடம் முழங்க முடியாது! 

ஆனால் இந்த பாசிச பங்காளி கட்சிகளுக்கு நாம் விடியல் பயணம் போக வேண்டும். 

என்ன வகை சமூக ஜனநாயகம் இது!

இதை பெரியார் வழியில் கண்டிப்பதும் முறியடிப்பதும் எப்படி? 

மார்க்ஸ் வழியில் லெனின் வழியில் தான் இதை முறியடிக்க முடியும்.

இவர்களிடம் தடியை கொடுத்து அடியை வாங்க பட்டாளி வர்க்கம் என்ன தத்துவம் இல்லாத இளித்த வாயர்களா?

காப்பதற்கு கையேந்தி தத்துவப் பிச்சை வாங்க!

பாட்டாளி வர்க்கத்தின் உரிமைகளுக்கான தத்துவ தலைமை மார்க்சிய லெனியமே! 

இந்த அரசியல் ஜனநாயகத்தை அங்கீகரித்தால் கூட்டு! 

மறுப்போரை ஓட்டு! 

      - துரை. சண்முகம்

https://www.facebook.com/share/19ckwXWptG/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு