பெண்களுக்கு பாதுகாப்பில்லாத திராவிட மாடல் ஆட்சி

வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் - இரா முத்தரசன்

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத திராவிட மாடல் ஆட்சி

சுபஸ்ரீ என்ற பெண்ணும், அவரது கணவரும் ஜ.க்.கி.யின் தீவிர நம்பிக்கையாளர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஜ.க்.கி.யின் ஆசிரமத்தில் நடைபெற்ற ஜீரோ ஹவர்ஸ் என்ற பயிற்சியில் கலந்துகொண்ட சுபஸ்ரீ என்ற பெண்... அந்த பயிற்சி வகுப்பு நிறைவடையும் நாளில், கடந்த 18ஆம் தேதி, காலை வேளையிலேயே காணாமல் போகிறார்.

அவரது கணவர், அன்று மாலை ஈ.ஷா. மையத்துக்கு தனது மனைவியை அழைத்துச் செல்வதற்காக வருகிறார். ஆனால் அவர் மனைவி காலையிலேயே மையத்திலிருந்து வெளியேறியதாக அங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள். அப்போதிருந்தே தனது மனைவியைத் தேடத் தொடங்குகிறார். இடையில், கடந்த 24ஆம் தேதி ஜ.க்.கி. வா.சு.தே.வை.யும் தனது பெண் குழந்தையோடு சென்று சந்தித்து, தன் மனைவி காணாமல் போனது குறித்து தெரிவிக்கிறார். ஜ.க்.கி.யோ அவருக்கு ஒரு ருத்ராட்ச மாலையை அணிவித்து அனுப்பிவிடுகிறார்.

இதன்பின்னர், சுபஸ்ரீயைத் தேடும் முயற்சியில், அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமராக்களைச் சோதித்ததில், ஈஷா நிறுவனத்தால் வழங்கப்பட்ட பிரத்யேக உடையிலேயே சுபஸ்ரீ அங்கிருந்து வெளியேறி, ஓட்டமும் நடையுமாக எங்கோ செல்கிறார். அது சி.சி.டி.வி.யில் பதிவாகியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அவர் காணப்படவில்லை. அதை வைத்து சந்தேகத்தின் பேரில் தேடியதில், அப்பகுதியில் புதர் மண்டியிருந்த ஓரிடத்திலுள்ள கிணற்றினுள் சுபஸ்ரீயின் பிணம் அழுகிய நிலையில் கடந்த 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று கிடைக்கிறது. மிகுந்த துயரமான செய்தி. அந்த பிணம் உடனுக்குடன் பிணக்கூராய்வு செய்யப்பட்டு எரிக்கப்பட்டது!

மர்மமாக மரணித்த சுபஸ்ரீ, இறுதியாக, ஜ.க்.கி.யின் ஜீரோ ஹவர்ஸ் பயிற்சி வகுப்பில் தான் ஒரு வார காலத்துக்கு கலந்திருக்கிறார். அங்கிருந்து வெளியேறிய நிலையில்தான் காணாமல் போனார். சுபஸ்ரீ தான் அணிந்திருந்த உடைக்கு மாறாமல், தனது செல்போன், பேக் உள்ளிட்ட உடைமைகளைக்கூட எடுக்காமல், ஈ.ஷா. கொடுத்த உடையிலேயே, ஓட்டமும் நடையுமாக ஈ.ஷா.விலிருந்து வெளியேறி இருக்கிறாரென்றால், இந்நேரம் ஈ.ஷா நிறுவனர் ஜ.க்.கி.யையும், அந்த பயிற்சியை நடத்தியவர்களையும் காவல்துறை விசாரித்திருக்க வேண்டும்.

ஆனால் ஜ.க்.கி.யின் அரசியல், அதிகார பலத்தால் சுபஸ்ரீயின் மரணம் அப்படியே மூடி மறைக்கப்படுகிறது. சுபஸ்ரீ மர்ம மரணம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஈஷா ஆசிரமத்தில் எந்த விசாரணையும் நடக்கவில்லை என்பது மிகவும் ஆச்சர்யமான உண்மை. அந்த மரணத்தை விவாதமாக்காமல் மறைக்க, வேறு பிரச்சனைகள் விவாதத்துக்கு வருகின்றன. இதில் இன்னொரு கொடுமை என்னன்னா, ஈ.ஷா. மையத்தின் மூளைச்சலவையால் ஜ.க்.கி.யின் தீவிர நம்பிக்கையாளராக சுபஸ்ரீயின் கணவர் இருந்திருக்கிறார். அவரே சுபஸ்ரீயையும் ஈ.ஷா.வின் நம்பிக்கையாளராக மாற்றியிருக்கிறார். காவேரிக்காக குரல் கொடுப்பது, நதிகளை இணைப்போம் என்று குரல் கொடுப்பதென ஜ.க்.கி.யின் அனைத்து விளம்பர ஸ்டண்ட்களிலும் இருவருமே பங்கெடுத்திருக்கிறார்கள். தற்போது அந்த தீவிர நம்பிக்கையே சுபஸ்ரீயை பலிவாங்கியிருக்கிறது. அவரது கணவரோ, பித்துப்பிடித்த மனநிலையில் இருக்கிறார். சுபஸ்ரீயின் மரணத்துக்கு நீதி வேண்டும்... 

கார்ப்பரேட் சாமியார்கள் வெறும் போலிகள் மட்டுமல்ல, உங்களை மூளைச்சலவை செய்து பணம் பறிப்பதோடு, அதிகார பலத்தால் தங்கள் குற்றங்களை மிக எளிதாக மூடி மறைத்துவிடுவார்கள். மிகவும் அபாயகரமானவர்கள்... ஜ.க்.கி.யே வாழும் சாட்சி!

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

(நடவரசன் அமிர்தம் - முகநூலிலிருந்து)

https://www.facebook.com/100002825282036/posts/pfbid0291DmdLoAnbWtG1qdd8twMFppj7FKXv99F4ViLZqRCKeoBKtXPnYRnPoNU6RGMtJVl/?app=fbl

_____________________________________________________

ஈஷா தொடரும் மர்மசாவுகள்- நீதி விசாரனை நடத்த வேண்டும்

 

கோவை மாவட்டத்தில் நவீன சாமியார் ஜக்கி வாசுதேவ் நிர்வாகத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மர்ம சாவுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. தற்போது அவிநாசி பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார் மனைவி சுபஸ்ரீ  மரணச்செய்தி வெளியாகியுள்ளது. 

ஈஷா யோகா மையம் உச்சமட்ட அதிகார மையத்தின்   செல்வாக்கு எல்லைக்குள் அழுத்தம் கொடுக்கும் "சக்தி "  பெற்றிருப்பதால் அத்துமீறல்களும், மர்மச் சாவுகளும் தொடர்வதாக ஆழ்ந்த சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. இது போன்ற சம்பவங்களுக்கு தமிழ்நாடு அரசின் காவல்துறை மெளன சாட்சியாக இருந்து கடந்து போகக் கூடாது.

 

ஈஷா யோக மையத்தில்  பயிற்சிக்காக  கடந்த 11.12. 2022 ஆம் தேதி உள்ளே சென்ற சுபஸ்ரீ 18.12.2022 ஆம் தேதி வீடு திரும்ப வேண்டும். அன்று காலை 7 மணிக்கு மனைவியை அழைத்து வரச் சென்ற, அவரது கணவர் பழனிகுமார்  11 மணி வரை காத்திருந்த பின்னர், அவர் காலையிலேயே சென்று விட்டதாக மையத்தினர் சொன்னது ஏன்? மனைவி காணவில்லை என ஆலாந்துறை காவல் நிலையத்தில் பழனிக்குமார் கொடுத்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அதில் கிடைத்த விபரங்கள் என்ன?  ஈஷா யோக மையத்தின் வாகனம் மூலம் சுபஸ்ரீ இருட்டுப்பள்ளம் பகுதிக்கு கடத்தப்பட்டது ஏன்? ,   சுபஸ்ரீ, வாடகை  வாகனத்தில் இருந்து பதற்றத்துடன் பதறியடித்து தப்பி  ஓடும்  காட்சிகள் பதிவாகியுள்ளன . இது எப்போது, ஏன் நிகழ்ந்தது? நேற்று 01. 01. 2023 சுபஸ்ரீ கிணற்றில் பிணமாக மிதந்த அதிர்ச்சி செய்தியை தொடர்ந்து எடுத்த நடவடிக்கைகள் என்ன? 

 

அரசு மருத்துவ மனையில் இரவோடு, இரவாக உடற்கூறாய்வு முடித்து, மின் மயானத்தில் தகனம் செய்தது ஏன்?  மனைவி காணமல் போனது குறித்து புகார் கொடுத்துள்ள  சுபஸ்ரீயின்  குடும்பத்தினர், அவரது  இறுதி காரியங்களை விருப்பபூர்வமக செய்தார்களா? என்பது போன்ற ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

 

ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்மச்சாவுகள், காணமல் போவோர் குறித்த புகார்கள், நில ஆக்கிரமிப்பு குறித்த முறையீடுகள் என எல்லாக் கோணங்களையும் விரிவாக விசாரித்து, குற்றச் செயல்கள் தடுக்கப்பட  வேண்டும். இதற்கான முறையில் நேர்மையும், சமூக அக்கறையும், நம்பகத்தன்மையும் கொண்ட ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை  நடத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.    

தங்களன்புள்ள,

 (இரா முத்தரசன்)

மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு