மோடி ஆட்சியின் கீழ் இராணுவம்
சு. அழகேஸ்வரன்
சுதந்திரத்திற்கு பின், மதச்சார்பற்ற அரசியல் சாயலற்ற தன்மையுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்திய ராணுவம் மோடியின் ஆட்சியில் தனி நபரை மையப்படுத்தியும், தேசியவாத கண்ணோட்டத்துடனும் உருமாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பதை விளக்கி 2024 பிப்ரவரி கேரவன் மாத இதழில் சுசாந்த் சிங் விரிவான கட்டுரையொன்றை எழுதியுள்ளார்.
2024 ஜனவரி 22 ஆம் தேதியன்று அயோத்தியில் கட்டப்பட்ட ராமன் கோவில் கும்பாபிஷேகத்தில் 35 க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ தளபதிகள் கலந்து கொண்டது குறித்த விளக்கத்துடன் அந்த கட்டுரை துவங்குகிறது. தொடர்ந்து பாஜக அரசின் அமைச்சரவையில் இணையமைச்சராக பதவி வகித்து வரும் வி.கே.சிங், முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே உட்பட கலந்து கொண்ட உயர் சாதியைச் சேர்ந்த தளபதிகள் பெரும்பாலும் வட மாநிலங்களில், மோடியின் சித்தாந்தத்தைப் பிரதிபலிக்கும் தொகுதிகளைச் சேர்ந்தவர்களாவார்கள். இவர்களில் ஜே.ஜே.சிங் ஒருவர் மட்டுமே இந்து அல்லாதவர். இந்த நிகழ்ச்சியின் போது ராணுவ ஹெலிகாப்டர்கள் மலர்களை தூவின. ஹெலிகாப்டரின் பைலட் ராணுவ சீருடையுடன் கோவிலுக்குள் நின்ற காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. அரசியல், மதம், அரசு ஆகியவற்றில் கலவையாக அந்த காட்சி இருந்தது. இதன் மூலம் மோடியின் ஆட்சியில் பொது வெளியில் ராணுவம் முதல் முறையாக புது தன்மையுடன் வெளிப்பட்டது ஒரு புதிய நிகழ்வாக இருந்தது. ஏற்கனவே தெற்காசியாவில் பாகிஸ்தான் ராணுவம் இஸ்லாமிய அடையாளத்துடனும், சீனாவின் ராணுவம் கம்யூனிஸ்ட் கட்சியின் ராணுவமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அரசியலுக்கு அப்பாற்பட்ட, மதச்சார்பற்ற ராணுவம் முதல் முறையாக இந்துமத அடையாளத்துடன் காணப்பட்டதற்கு சாட்சியாக அந்த நிகழ்ச்சி இருந்தது.
பெரும்பான்மையான இந்தியர்கள் ராணுவத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். வகுப்பு மோதல்கள், இயற்கை பேரிடர்கள் போதும் பாரபட்சமற்ற முறையில் ராணுவம் சேவையாற்றி வருவதால் மக்கள் மத்தியில் அதற்கு நல்ல அபிப்ராயம் இருந்தது. ராணுவ நடவடிக்கைகளில் ஏற்பட்ட தோல்விகள், மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ராணுவம் உட்படும் போதெல்லாம் ஒட்டுமொத்த ராணுவத்தையும் அது பாதிக்கவில்லை. 1976 வங்கதேச விடுதலைக்காக ராணுவம் போர் புரிந்தது குறித்து சில மாறுபட்ட பார்வைகள் உள்ளன. 1987 இலங்கையில் அமைதிப்படை பாலியல் வன்முறையில் ஈடுபட்டது குறித்து விமர்சனங்கள் உள்ளன. ஆனால் 1999 இல் நடைபெற்ற கார்கில் போரின் போது ராணுவத்தின் தனித்தன்மை நீர்த்துப் போக தொடங்கியது. போரில் ஈடுபட்ட வீரர்கள் போர் கதாநாயகர்களாக சினிமா, தொலைக்காட்சி, தொலைக்காட்சி தொடர்களில் காண்பிக்கப்பட்டார்கள்.
1990 களில் காஷ்மீரில் ராணுவத்தை பெருமளவு குவிக்கப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதின் மூலம் ராணுவம் குறித்த பொதுமக்களின் கருத்து மாற்றப்பட்டது. அதாவது வெளிநாட்டினர் மட்டும் எதிரிகள் அல்லர். உள்நாட்டில் உரிமைகளுக்காக போராடுபவர்களையும் எதிரிகளாக சித்தரித்து அவர்களுக்கு எதிராக ராணுவம் முதன்முறையாக போரிட்டது நியாயப்படுத்தப்பட்து. மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட இந்த எண்ணத்தை தான் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மோடி பயன்படுத்திக் கொண்டார். இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வானார்.
காஷ்மீரில் 2019 ஆம் ஆண்டில் ராணுவ வீரர்கள் பயணம் செய்ய ஹெலிகாப்டர்களை வழங்காததால் புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இதை காரணம் காட்டி பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பாலக்கோட்டில் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகத் தேர்தலில் மோடி பிரச்சாரம் செய்தார். உண்மையில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதையும் மோடி அரசு காட்டவில்லை. ஆனால் இந்த நடவடிக்கை இந்திய ராணுவம் தனது சொந்த ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்துவதற்கும், விமானப்படை பைலட் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிறைப்படுவதற்கும் காரணமாக அமைந்தது. ஆனால் பாலக்கோட்டுத் தாக்குதலில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து செய்திகளை வெளியிடாமல், பாஜகவின் தேசிய பாதுகாப்பு குறித்த நிலைப்பாடுகளை புகழந்துரைக்கும் வேலையை ஊடகங்கள் செய்தன.
இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர்தான் லடாக்கில் சீனா ராணுவம் ஊடுருவி இந்தியாவிற்கு சொந்தமான சில பகுதிகளை கைப்பற்றிக் கொண்டதுடன் இந்திய வீரர்களையும் படுகொலை செய்தது. ஆனால் பாங்காக் ஏரியில் வடக்குக் கரையில் சீன ராணுவம் ஊன்றி வைத்திருந்த கொடிகளைக் கைப்பற்றி கைலாஷ் மலையை இந்தியா கைப்பற்றி விட்டதாக கூறியது. இதன் மூலம் சீனாவிற்கு மோடி அரசு தக்க பதிலடி கொடுத்தது என்ற சித்தரிப்புகள் உருவாக்கப்பட்டது. இவ்வாறாக மீண்டும் ஒருமுறை ஆளுங்கட்சியின் அரசியல் விளையாட்டிற்கு ராணுவம் துணை போனது. ஆனால் நாடாளுமன்றத்தில் லடாக் மோதல் குறித்து கேள்வி கேட்பதற்கு எதிர்க்கட்சிகள் அனுமதிக்கப்படவில்லை.
மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்திற்கும் மோடி அரசின் பாதுகாப்பு குறைபாடுதான் காரணமாக அமைந்தது. அங்கே மெய்திகள், குக்கிகள் மீது நடத்தி வந்த தாக்குதலை தடுக்க அஸ்ஸாம் ரைஃபில்ஸ் படை அனுமதிக்கப்படவில்லை. மத்திய அரசின் ஆதரவோடு மாநில அரசும், மெய்திகளும் ரைஃபில்ஸ் படைக்கு எதிராக செயல்பட்டார்கள். இமயமலையில் உள்ள புனித இந்து நகரங்களை இணைக்கும் சார்டோம் ஹைவே திட்டம் நிறைவேற்றப்பட்டால் அப் பிராந்தியத்தில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் என்று கூறி உச்சநீதிமன்றம் அதற்கு அனுமதி மறுத்த போதும், நாட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி ராணுவம் அனுமதி பெற்றது. பணிகளும் துவக்கப்பட்டது. அதுவே பின்னர் அங்கு நடைபெற்ற பேரிடருக்கு காரணமாக அமைந்தது. ராணுவம் குறித்த மோடி அரசின் தவறுகளை சுட்டிக் காட்ட தணிக்கை அமைப்பு அனுமதிக்கப்படவில்லை. 2017 ஆம் ஆண்டு தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் இந்திய ராணுவம் பத்து நாட்களுக்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே வெடி மருந்துகளை கையிருப்பில் வைத்துள்ளது என்பதை கண்டறிந்து சொன்னது. இது நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்கு உள்ளானதால் அதன் பின்னர் பாதுகாப்பு சம்பந்தமான தணிக்கை அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று மோடி அரசு ஆணையை வெளியிட்டது. நாட்டின் சட்டபூர்வ அமைப்புகளான தேசிய மனித உரிமை கவுன்சில், தலைமை தகவல் கமிஷன், பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகளைக் கூட மோடி அரசு முடக்கி வைத்தது. தேசிய மனித உரிமை ஆணையத்தால் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க முடியாத நிலையிலேயே உள்ளது.
பிராந்தியம் மற்றும் சாதி ரீதியாக ராணுவத்திற்கான அதிகாரிகளை தேர்வு செய்யும் நடைமுறையை மாற்றி நுழைவுத் தேர்வு மூலமாக தேர்வு செய்வது என்ற முடிவால் ஒரு சில பிரிவினர்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதல் எண்ணிக்கையில் பணிநியமனம் செய்யப்பட்டார்கள். ராணுவ அதிகாரிகள் பணிநியமனம் செய்யப்படுவது குறித்து இந்திய ராணுவ அகாதமி வெளியிடும் விவரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது பெரும்பாலும் இந்தி பேசும் வட மாநிலங்களில் இருந்து அதிகமானவர்களும், கிழக்கு மாகாணங்கள் மற்றும் தெற்கு இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் குறைவான எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. முஸ்லிம்கள் முற்றிலும் விடுபட்டுள்ளார்கள். இந்த வகையான விகிதாச்சாரம் ராணுவத்திற்கும், தேசத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும். நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பரவலாக அதிகாரிகள் தேர்வு செய்வதை உறுதிப்படுத்துவதற்காக சைனிக் பள்ளிகள் துவக்கப்பட்டன. இதன் காரணமாக இந்தப் பள்ளியில் பயின்றவர்களே பெரும்பாலும் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டு வந்தார்கள். ஆனால் தனியார் பள்ளிகள், இந்துத்துவா ஆதரவுப் பள்ளிகள் நூற்றுக்கணக்காக துவக்கப்பட்டு சைனிக் பள்ளிகளின் செயல்பாடுகள் நீர்த்துப்போக செய்யப்பட்டது.
ராணுவ வீரர் ஒருவர் ராணுவத்தில் நடைமுறையில் உள்ள சகாயக் முறை எவ்வளவு கொடுமையானது என்பதை சமூக ஊடகத்தில் பதிவிட்டதையொட்டி ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அதற்குப் பின்னர் 2020 ஜூன் மாதம் வெளியிட்ட உத்தரவில் ராணுவ வீரர்கள் செல்பேசி மற்றும் சமூக ஊடகங்களில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதற்கான விதிகள் வெளியிடப்பட்டது. முகநூல் உட்பட 89 வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ட்விட்டர், யு ட்யூப், குவாரா போன்ற சமூக ஊடகங்களை தகவல்களைப் பெறுவதற்கு மட்டும் குறைவான நேரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.
பொதுக்கருத்தை உருவாக்கும் பொறுப்பையும் ராணுவம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக இந்தப் பணியைப் பாதுகாப்பு அமைச்சகமே செய்து வந்துள்ளது. 1965 மற்றும் 1999 போருக்குப் பின்னர் ஊடகங்களுடனான தொடர்புகளுக்கு இரண்டு கொள்கைகளை வகுத்து பாதுகாப்பு அமைச்சகம் செயல்பட்டு வந்தது. ஊடகங்களுடன் அதிகாரபூர்வமாக தொடர்புகளை மேற்கொண்டு வந்த அதிகாரி இந்திய தகவல் சேவை பிரிவிலிருந்து வருபவராக இருப்பார். அவருக்கு முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உதவுவார்கள். அவர் பொது தகவல் தொடர்பு அதிகாரியாக பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றுவார். 1990 களில் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ராணுவ புலனாய்வுத் துறையிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறு குழுவானது ராணுவ தலைமையகத்திலிருந்து ஊடகங்களுக்கு உடனுக்குடன் தகவல்களை தெரிவித்து வந்தனர். பின்னர் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக அது பதவி உயர்த்தப்பட்டது. ஆனால் அவரால் அதிகாரப்பூர்வமான அறிக்கைகளை வெளியிட முடியாது. அந்தப் பணி தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகத்திடமே தொடர்ந்து இருந்து வந்தது. ஊடகங்களுக்கு தகவல்களை அளிக்கும் பணியை ராணுவம் செய்து வந்ததுடன், கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பையும் நாள்தோறும் நடத்தி வந்தது. அதில் ஒரு ராணுவ அதிகாரியும், வெளியுறவுத்துறையைப் சேர்ந்த ஒரு அதிகாரியும் பங்கேற்பார்கள். பின்னர் அது ராணுவ தொடர்பு செல்லாக மாற்றப்பட்டது.
புதிதாக ராணுவத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் வாயிலாக துணை ராணுவ தளபதி (மூலோபயம்) என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. தற்போது அது கூடுதல் இயக்குநர் ஜெனரல் (மூலோபாயம்) தகவல் தொடர்பு அதிகாரி என்று மாற்றப்பட்டுள்ளது. இவர்தான் போர்க்கள தொடர்பு துறையின் இயக்குநர் துறைக்கு தகவல்களை வழங்குவார். மேஜர் ஜெனரல் தலைமையில் இரண்டு டஜன் அதிகாரிகள் ஊடங்களுக்கான தகவல் தொடர்பை மேற்கொண்டு வருவார்கள். இந்த அமைப்பிலிருந்துதான் ராணுவம் சம்பந்தப்பட்ட செய்திகள் தற்போது கசிய விடப்பட்டு வருகிறது.
அதே வேளையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில் ராணுவத்திற்கு உடந்தையாகவே இருந்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் ராணுவத்தை மையப்படுத்தியதாகவே இருந்தது. அது ராணுவத்தின் மீது அனுதாபம் கொள்ளும் வகையில் வழங்கப்பட்டது. சில செய்திகள் காஷ்மீர் மக்கள் ராணுவத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூட சொல்லப்பட்டன. அந்த வகையில் ஊடகத்தை ஒரு மூலோபய கூட்டாளியாக இணைத்துக் கொண்டு ராணுவம் மறைமுகமாக பொதுஜன அபிப்பிராயத்தை சில அரசியல் தலைவர்களின் நன்மைக்காக உருவாக்கி வருகிறது.
என்றாலும், இதர ஆசிய நாடுகளைப் போல ஒரு நபரைச் சுற்றி கட்டமைக்கப்படும் செயல்பாடுகளை இந்தியாவில் மறைக்க முடியாது. ஏனெனில் இது ஒரு ஜனநாயக நாடு. அளவுக்கு அதிகமான ராணுவப் பிரயோகம் மக்களின் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. ஆனாலும் மோடி ராணுவம் குறித்து எடுத்து வரும் முடிவுகள் மிகவும் அபாயகரமானவை. காலனியத்திற்கு முந்தைய ஒரு நூற்றாண்டுகளுக்கும், காலனியத்திற்குப் பிந்தைய சுதந்திர இந்தியாவிலும் உருவாக்கப்பட்ட நடைமுறைகளுக்கு எதிர் திசையில் ராணுவம் கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறாக மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் ராணுவத்தின் செயல்பாடுகள் மக்கள் அபிப்ராயங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து சுசாந்த் சிங் முன் வைத்துள்ள கருத்துக்கள் அனைத்தும் சரியானவை. இவ்வளவு விரிவாக இதற்கு முன்னர் யாரும் எழுதியதில்லை. என்றாலும் இது முழுமையானது அல்ல. ஏனெனில் ராணுவத்தின் காலனிய கால சகாயக் முறையை நீக்க முன்வரவில்லை. தன் பாலுறவு சட்டவிரோதமானதல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் தன் பாலுறவு அனுமதிக்க ராணுவம் மறுத்து வருகிறது. இந்தக் கட்டுரையில் ராணுவ அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு மாறாக அக்கினி பாதைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் கருத்தியல் சார்பு குறித்தும் அது இந்தியா-நேபாள உறவுகளின் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும் சொல்லப்படவில்லை. இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து இக் கட்டுரையில் பேசப்படவில்லை.
இறுதியாக, கருத்தியல் சார்புள்ள அக்னி பாதைத் திட்டம் இந்தியாவில் சிவில்-ராணுவ சமநிலையை பாதிக்கும் என்றும் இது போன்ற முடிவுகளை தடுத்து நிறுத்தும் வகையில் ராணுவம் செயல்பட வேண்டும் என்றும் போர் வரலாற்று ஆய்வாளர் ஶ்ரீ ராம் ரகுநாத் கூறியுள்ளது போல, மோடி அரசின் தவறான முடிவுகளை தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகள் எதையும் சுசாந்த் சிங் முன்வைக்கவில்லை. என்றாலும் ஶ்ரீ ராம் ரகுநாத் கருத்துகளை கவனப்படுத்தவும், விவாதிக்கவும் சுசாந்த் சிங்கின் கட்டுரையை அடிப்படை ஆவணமாக எடுத்துக் கொள்ளலாம்.
சு. அழகேஸ்வரன்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு