முதலமைச்சரின் கட்டுரை: தேர்தலுக்கானதொரு குட்டிக்கரணம்!

கீழடிவாணன், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

முதலமைச்சரின் கட்டுரை:  தேர்தலுக்கானதொரு குட்டிக்கரணம்!

கடந்த 17-2-2026 அன்று “தி ஹிந்து” ஆங்கில நாளேடில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அது சமூக ஊடகங்களில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. “இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கட்டுமானம்” மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மாநில அரசுகளின் தனித்துவம் காப்பாற்றப்பட வேண்டுமாம்.

மாநிலங்களுக்கு சுயாட்சி உரிமை வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இதை தேர்தல் காலங்களில் மட்டும் வலியுறுத்தும் பழக்கம் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் 1969 முதலே இருந்து வருகிறது. அவருக்கு முன்பு சி.என். அண்ணாதுரை அவர்களும் நாடாளுமன்ற மேலவையில் தனது கன்னிப்பேச்சில், மாநிலங்களுக்கு சுயாட்சி உரிமை வேண்டும்; கூட்டாட்சி என்பது அதிகாரப் பரவல், அதிகாரக் குவிப்பு அல்ல என்ற பொருளில் வலிமையாகப் பேசினார். மாநில முதலமைச்சராகப் பதவியேற்றதும் 1967 இல் இந்திய அரசமைப்புச்சட்டம் மறுபரிசீலனைக்குட்படுத்த வேண்டும் என்று மென்மையாகவும் பேசினார்.  

முன்னாள் முதல்வர் கருணாநிதி 1969 இல் ஒன்றிய - மாநில உறவு, மாநில சுயாட்சி ஆகியன குறித்து ஆராய்ந்து அறிக்கை தர ராஜமன்னார் கமிட்டி அமைத்தார். அதன் அறிக்கையை ஏற்று, அதன் அடிப்படையில் 1974-இல் மாநில சுயாட்சி தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்து நிறைவேற்றினார். 

அதன் பிறகு அ.தி.மு.க.விடம் ஆட்சியை இழந்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும், அதன்பின் மீண்டும் ஆட்சியில் இருந்த காலங்களிலும் மாநில சுயாட்சி என்ற பேச்சையே எடுக்கவில்லை. தான் முன்மொழிந்த அந்த மாநிலசுயாட்சி தீர்மானம் என்னவாயிற்று என்று கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.

அவர் (மு. கருணாநிதி) அமைத்த ராசமன்னார் குழுவின் பரிந்துரையின் அத்தியாயம் III பத்தி 5, 6 இல் கூறப்பட்டுள்ள பரிந்துரையின் சுருக்கம்: மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் முகாமையாக அரசமைப்புச்சட்ட உறுப்புகள் 162, 198 ஆகியவற்றில் அடங்கியுள்ளன. ஆனால், இவ்வதிகாரத்தை பெரிதும் செயலற்றதாக்கும் வகையில் உறுப்புகள் 256, 257 ஆகியவை உள்ளன. 365 வது உறுப்பு மாநிலங்கள் நடுவண் அரசைச் சார்ந்தே இருந்தாக வேண்டும் என்ற நிலைமையை ஏற்படுத்துகிறது. உறுப்பு 356 ஒரு மாநில அரசை இரு எசமானர்களுக்கு - நடுவண் அரசுக்கும், மாநில சட்டமன்றத்திற்கும் - சேவை செய்யும் பொறுப்பில் கட்டுப்படச் செய்கிறது. மாநில அரசுகளுக்கு கட்டளையிடும்  அதிகாரமும், அவ்வாறு நடுவண் அரசு இடும் கட்டளையை மீறும் மாநில அரசுக்கு தண்டனை வழங்கும் அதிகாரமும் வழங்கும் உறுப்புகள் 256, 257 நீக்கப்பட வேண்டும் அல்லது மறுவார்ப்பு செய்யவேண்டும். மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை நிறுவுவதற்கு உள்ள அரசமைப்புச் சட்ட உறுப்பு 356 ஐ நீக்கியே ஆக வேண்டும். இவை ராசமன்னார் குழு அறிக்கையின் சிறப்புக்கூறுகள். 

ஆனால், தனது கருத்துக்கும், தான் அமைத்த கமிட்டியின் பரிந்துரைக்கும் முரணாக, தன்னுடை ஆட்சியை உறுப்பு 356 ஐச் செயல்படுத்தி 197 சனவரி 31 தேதி கலைத்த நடுவண் அரசின் தலைமை அமைச்சர் இந்திராகாந்தியின் காங்கிரசுக் கட்சியுடன் 1980 - இல் கூட்டணி அமைத்தார். தன்னுடைய கட்சி நடுவண் அரசில் பங்கு பெறச் செய்தார். 

ஆட்சியில் தன் பங்கு இருந்தாலும், இந்திராகாந்தி, நெருக்கடி நிலையைப் நடைமுறைப்படுத்தி, மாநில அரசு அதிகாரத்துக்கு உட்பட்டிருந்த கல்வியை ஒத்திசைவுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதை மீண்டும் மாநில அதிகாரத்திற்குள் கொண்டுவர அக்கறையற்று இருந்தார். ஒத்திசைவுப் பட்டியல் என்று பெயரளவில் மட்டுமே இருக்கும் அப்பட்டியலும், நடுவண் அரசின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் இருப்பதுதான். ஒன்றிய பட்டியல், ஒத்திசைவு பட்டியல் இரண்டுமே ஒன்றிய அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் அரசமைப்புச்சட்ட உறுப்புகள் துணைப் பிரிவுகளைக் கொண்டுள்ளன. இவற்றையே நாம் தேசிய இனங்களின் மீது ஒன்றிய அரசின் ஆதிக்கக் கூறுகள் என்கிறோம்.   

இப்போது கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் நிலையில் இருந்து கூட்டரசுக் கட்டமைப்பை மாறுவர்ப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்துவதன் மூலம், ராசமன்னார் குழு பரிந்துரை செய்தபடி உறுப்பு 356 ஐ நீக்கவேண்டும் என்று கேட்டுள்ளாரா? கல்வியை மீண்டும் மாநில அரசு அதிகாரத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுள்ளாரா? வரிவிதிக்கும் அதிகாரமும், மாநில மக்களுக்கான நலத்திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தும் அதிகாரமும் மாநில அரசுக்கு வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாரா? ராசமன்னார் குழு பரிந்துரையில் இருந்தபடி ஐ.ஏ.எஸ். போன்ற இந்திய அளவிலான உயர் அலுவலர்களுக்கான தேர்வும் மேலாண்மையும் மாநில அரசுக்கு வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாரா?  

இல்லை.

இப்படிக் குறிப்பிட்டு எதையும் வலியுறுத்திக் கோராமல், பொத்தாம் பொதுவாக அரசமைப்புச் சட்டம் மறுவார்ப்பு செய்யவேண்டும். எனவே எல்லா மாநிலங்களும் அதற்கென குழுக்களை அமைக்க வேண்டும் என்கிறார். இப்படி ஒரு தினசரியில் கட்டுரை எழுதுவதற்கு என்ன தேவை திடீரென எழுந்துள்ளது? ஏன் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தலைமை அமைச்சர் மோடிக்குக் கடிதம் எழுதும் முதலமைச்சர், மாநில முதல்வர்களுக்கு ஏன் கடிதம் எழுதக் கூடாது. நேரடியாக வெளிப்படையாக ஒரு நாளிதழில் எழுதுவதற்குக் காரணம் என்ன? 

2026 தேர்தல்! அதன் வழியாக ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய வேட்கை! அவருடைய வீரா வேசம் வாக்காளர்களுக்குத் தெரிய வேண்டாமா?   

ஏப்ரல் மாதமோ, மே மாதமோ தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு அந்த விழாவை நோக்கியுள்ளது. ஏமாளி மக்களின் வாக்குகளுக்கான விலையை ஆண்ட ஆளுகின்ற கூட்டணித் தலைமைக் கட்சிகள் முன்பணமாகக் கொடுக்க அணியமாக இருக்க வேண்டும். தி.மு.க. சார்பில் வழங்கப்பட்ட 5 மாத மகளிர் முன்தொகை அதுதானே அன்றி வேறு என்ன?

பின் அந்தக் கட்டுரையில் குறிப்பாக என்னதான் வலியுறுத்தியுள்ளார்? நடுவண் அரசு மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்கவில்லை. மானிய ஒதுக்கீடு கொடுக்கவில்லை. தான் போடும் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்யவில்லை. இப்படி இறைஞ்சுகிறார். இதன் வழியாக மக்களுக்கு என்ன கூறுகிறார்?  

நான் நடுவன் அரசை விடப்போவதில்லை. நிதிஒதுக்கீடும், வரிப்பங்கீடும், திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடும் வாங்கியே தீருவேன், தமிழர்களைத் தலைகுனிய விடமாட்டேன் என்றுதான் கூறுகிறார். எளிய மக்களுக்கு அதுதானே தேவை! 

நிதி வழங்காமலே நமக்கு “இலவசங்கள்” தரும் முதலமைச்சர் ஸ்டாலின், நிதி வந்துவிட்டால் நமக்கு எல்லா இலவசங்களையும் தடையின்றித் தருவார் அவருக்கே வாக்களிப்போம் என்றுதானே மக்கள் எண்ணுவர்.

ஆனால், நமக்குப் புரிகிறது. வழங்கும் நிலையில் நீங்களே இருங்கள். நாங்கள் இங்கு இருப்பதைப் பார்த்துக்கொள்கிறோம். மாநிலத்தின் முதலமைச்சர் ஒரு நாளிதழில் எழுதும் கட்டுரை உங்களை எந்தவிதத்தில் பாதிக்கப்போகிறது. மற்ற மாநில முதலமைச்சர்களும் என்னைப் போன்றோர் தானே. அவர்களுக்குப் பயன்படலாம். அப்படியல்லாது உண்மையில் அவர்கள் நான் கேட்டுக் கொண்டுள்ளபடி குழுக்களை அமைத்து, அனைத்து குழுக்களும் ஆய்வு செய்து பரிந்துரை வழங்குவதற்குள், என் மாநிலத்தில் தேர்தல் நடந்து முடிந்துவிடும். அப்புறம் 5 வருடங்களுக்குக் கவலையில்லை என்றெல்லாம் எண்ணுகிறார் என்று நமக்கு எண்ணங்கள் ஓடுகின்றன!

சரி, உண்மையாகவே கேட்கிறார். தேர்தலில் வெல்கிறோமோ இல்லையோ மாநில தன்னாட்சி பெற்றே தீருவது என்று போராட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறார் என்றே வைத்துக் கொள்வோம். மாநிலம் மாநிலம் அல்ல, தேசிய இனத் தாயகங்கள் (State) என்று அவருக்குத் தெரியாதா? அரசமைப்புச் சட்டம் அப்படித்தானே கூறுகிறது! 

முழு இறையாண்மை உள்ள தேசிய இனத் தாயகங்களின் கூட்டமைப்பாக இந்தியாவை மாற்று!  வரிவிதித்து வசூலிக்கும் அதிகாரமும், திட்டமிடும் அதிகாரமும் முழுவதுமாக தேசிய இனத் தாயகங்களுக்கு வேண்டும். ஒன்றிய அரசின் தேவைக்கு உறுப்பு தேசிய இனத் தாயகங்கள்தான் நிதி வழங்க வேண்டும். இவற்றுக்கு ஏற்றாற்போல் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தி, கடந்த 10-5-2025 அன்று கூட்டரசு மாநாடு என்ற பெயரில் மாநாடு நடத்தி, அதில் இந்தியாவை முழுமையான, உண்மையான கூட்டரசாக மாற்றுவதற்காகத் தீர்மானம் நிறை வேற்றிய ஒரே மக்கள் இயக்கம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பற்றி அவர் குறிப்பிட்டிருக்க வேண்டாமா? அந்த மாநாட்டில் பங்குபெற்ற நாம் தமிழர் கட்சியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டாமா? நாட்டின் நலத்துக்கான பொதுவான கோரிக்கை வைக்கும்போது ஒத்த கருத்துள்ள இயக்கங்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். இவ்விரு இயக்கங்களிலும் உள்ளவர்கள் தமிழ்நாட்டு மக்கள்தானே? அவர்களுக்கு ஸ்டாலின் முதலமைச்சர் இல்லையா?

முடிவாக, இந்திய ஒன்றியத்தின் உறுப்பு தேசிய இனத் தாயகங்கள்  முழுமையான இறையாண்மையுடன் தன்னாட்சி பெறும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்குத் தேவை இடையறா முயற்சி! காலத்துக்கு ஏற்ப சொல்லலங்காரம் அல்ல!  மு.க. ஸ்டாலின் கட்டுரை உண்மையான முயற்சி அல்ல, எளிய வாக்காளரை வீழ்த்தும் வெற்றுவேட்டு வீராப்பு!

கீழடிவாணன், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

https://www.facebook.com/story.php?story_fbid=1349222427240519&id=100064583236050&rdid=5ypjooHbNDKd7359

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு