அறிவாலயத்தின் சொம்படி வித்வான்களுக்கு தொடர் அதிர்ச்சி கொடுத்து வரும் 'இந்தியா' கூட்டணி

செந்தளம்

அறிவாலயத்தின் சொம்படி வித்வான்களுக்கு தொடர் அதிர்ச்சி கொடுத்து வரும் 'இந்தியா' கூட்டணி

இல்லாத இந்தியா கூட்டணிக்கு முட்டுக்கொடுத்த சொம்படி வித்வான்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக தந்துக்கொண்டேயிருக்கிறார்கள் அவர்களது தலைவர்கள். சில நாட்களுக்கு முன்னர் சி.பி.எம் பா.ஜ.கவின் பி டீம் என்று ராகுல்காந்தி தனது முடிவினை அறிவித்தார். பதிலுக்கு காங்கிரசு பா.ஜ.கவின் பி டீமாக செயல்படுவதாக ஆராய்ந்து சி.பி.எம் அறிவித்தது. பா.ஜ.கவிற்கு மாற்று இந்தியா கூட்டணி அல்ல என்று நாம் கூறிய போதெல்லாம் அறிவாலயத்து அறிவு ஜீவிகளாக அவதாரம் எடுத்துவிட்ட செந்நிற ஆடை அணிந்த கோபாலபுரத்து கொள்கை சேவகர்கள், குரல்வளையை கடிக்காத குறையாக எப்போதும் நம்மீது பாய்ந்தார்கள். இன்று அறிவாலயத்து அதி உச்ச மடாதிபதியான ஸ்டாலினே நாக்பூருக்கு நமஸ்காரம் செய்பவர்தான் என்று மம்தாவே கூறியிருக்கிறார்.


மம்தாவையும் பா.ஜ.க ஆள் என்று சி.பி.எம் கூறியுள்ளது. சி.பி.எம்மை பா.ஜ.க ஆள் என்று ஏற்கனவே  மம்தாவும் கூறியுள்ளார்.

பா.ஜ.கவுடன் ரகசிய உடன்பாட்டில் ஸ்டாலின் இருக்கிறார் என்று மம்தா கூறியபிறகு தி.மு.க முட்டுகள் தங்கள் திராவிட மெட்டுகளில் இனி ஆபாசமாக பாடி திளைப்பார்கள்.

இல்லாத இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் அவர்களை அவர்களே தாங்கள் பா.ஜ.கவின் பி டீம் என்று ஒருவரை ஒருவர் கூறியிருப்பினும் பா.ஜ.கவுடன் இவர்கள் வேறுபட்டவர்கள் என்று சொல்ல முடியாது.


பா.ஜ.கவின் அரசியல் பொருளாதார கொள்கை எதுவோ அதுவேதான் காங்கிரசின் கொள்கை. காங்கிரசு அமல்படுத்திய ஏகாதிபத்தியத்திற்கு நாட்டை அடிமைபடுத்தும் அரசியல் பொருளாதார கொள்கைகளை அதன் அடிச்சுவட்டிலிருந்துதான் மோடி கும்பல் மிகத்தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இக்கொள்கைதான் பாசிசம் தீவிரம் பெற அடிப்படை ஆகும். காங்கிரசு கதர் கும்பல் பெருந்தேசிய வெறியாகவும் பா.ஜ.க காவி கும்பல் இந்துமதவாத பாசிசமாகவும் கட்டமைக்கிறது.


இந்திய பாசிசத்தின் இரு முகங்களாக - ஒருநாணயத்தின் இரு பக்கங்களாக காங்கிரசும் பா.ஜ.கவும் இருக்கின்றன.


ஆனால் பாசிசத்தை வெறும் மதவாதமாக மட்டுமே பார்த்து இன்னும் பார்ப்பனிய பாசிசமாக சனாதனமாக குறுக்கி பார்க்கும் போக்குகளே இன்றுவரை தீவிரம் பெற்று இருக்கிறது. இது பாசிச எதிர்ப்பு அணியை கட்டியமைப்பதில் பெருந்தடையாக இருக்கிறது. இப்போக்குதான் காங்கிரசிற்கும் திமுகவிற்கும் முரட்டுத்தனமாக முட்டுக்கொடுப்பதற்கான வகைமையாக இருக்கிறது.

இந்து மதவாத்தை எதிர்த்தப் போராட்டத்தில் கூட காவி கும்பலுக்கு மாற்றாக என்றாவது காங்கிரசு இருந்திருக்கிறதா? பாபர் மசூதியை சர்ச்சைக்குள்ளான இடமென பூட்டியது காங்கிரசு அரசு. மசூதி இடத்தில் ராமன் சிலையை வைத்து வணங்க வகை செய்தது காங்கிரசு அரசு. சங்பரிவார இந்து மதவெறி பிடித்த காவி கும்பல்களுடன் கூடிக்குலாவி பாபர் மசூதியை தரைமட்டமாகவும் செய்தது இந்த காங்கிரசு கும்பல். மதச்சார்பின்மைக்கான சக்திவாய்ந்த பாதுகாவலன் இந்துத்துவம்தான் என்று தீர்மானம் நிறைவேற்றியதல்லவா இந்த காங்கிரசு!


பா.ஜ.கவிற்கு எதிராக மீண்டும் ஆட்சியை பிடிக்க ராமர்கோயிலை பா.ஜ.க கட்டாது நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ராமர் கோயிலை கட்டி முடிப்போம் என ஓட்டு கேட்ட கட்சிதான் இந்த காங்கிரசு. இந்த காங்கிரசு கும்பலை மதவாதத்தை எதிர்ப்பதாக முன்னிறுத்துவது எவ்வளவு பெரிய மோடி வித்தை மோசடி?

இந்துத்துவ மாடலின் தமிழக திரிபு திராவிட மாடல்


காங்கிரசோ பா.ஜ.கவோ மத்தியில் அமல்படுத்தும் அரசியல் பொருளாதார கொள்கைகளை அப்படியே தமிழ்நாட்டில் அமல்படுத்துவதுதான் தி.மு.கவின் வேலை என்பது எல்லோர்க்கும் தெரிந்ததே!


ஆனால் முன் எப்போதும் இல்லாத வகையில் நமது அறிவாலயத்தின் கவிப்புலவர்கள் புரட்சிப்பாக்களை பாடுவதோடன்றி தி.மு.கவின் அந்தரங்க காவலர்களாகவும் இப்போது அவதாரமெடுத்து ஆடி வரும் நிலையை  தமிழகம் கண்டுவருகிறது.

சென்ற தேர்தலில் பாசிச எதிர்ப்பு என்றும் "பாசிசம் பூந்துரும்" என்றும் முரட்டுதனமான முட்டுகள் மூலம் திராவிட செம்படை சேவகர்களின் அரும்பணியால் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது தி.மு.க.


அரியனை ஏறி சூடு மாறுவதற்குள் ஆட்சிக்கு வருதற்கு முன் கருப்பு பலூன் விட்டு "கோ பேக் மோடி" என்று சொன்ன திராவிட திருமகன் ஸ்டாலின், மோடிக்கு வெள்ளைக்குடை பிடித்தார். 

தொடர்ந்து ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்றது, கருணாநிதி நாணய வெளியிட்டிற்கு பா.ஜ.கவை அழைத்து ஆரத்தி எடுத்தது. 

இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ. 340 கோடி ஒதிக்கீடு. 

மதத்தை கல்வியிலிருந்து பிரிக்க வேண்டும் எனும் ஜனநாயக கோரிக்கைக்கு மாறாக அறநிலையத் துறை மூலம் கல்லூரிகள் துவங்கி இந்து மதவாதத்தை புகுத்தியது.

கோவில்களின் சொத்துகளை மீட்பதாக கூறி இந்துத்துவத்திற்கான சேவை

அரசு விழாக்களில், ஆர்.எஸ்.எஸ்.ன் சேவாபாரதி உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளை அழைத்து பூஜையில் ஈடுபட்டது.

 பாரத் மாதாவிற்கு சிலை திறந்தது

மதக்கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் சாகா பயிற்சிக்கு அனுமதியளிப்பது


5 ஆண்டுகளில் சுமார் 4,044 கோயில்களில் குடமுழக்கு விழாக்கள் நடத்தி இந்துக்களின் அரசு என தம்பட்டம் அடிப்பது

முருகனுக்கு சிலை அமைக்க
*​மருதமலையில் 
​ 184 அடி சிலை அமைக்க
​ 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

​*திண்டல் மலையில் 
​186 அடி 240 அடியில்
​ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்க நிதி ஒதிக்கீடு

​*திமிரியில் (ராணிப்பேட்டை)
​ 114 அடி சிலை அமைக்க நிதி ஒதுக்கீடு

சங்கபரிவார கும்பல்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழி பலியிடுவதை தடுத்து நிறுத்தியது.

மாணவர்களை கந்தசஷ்டி கவசம் பாடவைத்தது...

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்தது. புதிய கல்வி கொள்கையை மாநில கல்வி கொள்கை என்ற பெயரில் கொண்டுவந்தது 

பழனியில் முருகன் மாநாட்டை நடத்தி இந்து மதவாதத்தை வளர்க்கும் தீர்மானங்களை போட்டது. 

இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் கூட பி.டி.ஆர் தியாகராஜனுக்கு ஓட்டுக்கேட்ட கனிமொழி "இந்துக்களுக்கான கட்சி எங்க கட்சிதான் ஆகவே எங்களுக்கு ஓட்டு போடுங்கள்" என்று பேசினார். இப்படி தொடர்ந்து இந்து மதவாத செயல்பாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம். கட்சிக்குள் பாசிச பா.ஜ.கவின் பாதம் கழுவிக்குடித்த மைத்ரேயன், எஸ்.வி.சேகர், ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்ட காவி கும்பல்களை கட்சிக்குள் கவ்விக்கொண்டது. இப்போது தேர்தல் கூட்டைப்பாருங்கள் கூட்டணி சாதிவெறி கட்களால் நிரம்பி வழிகிறது. பதவிவெறி பிடித்த பெட்டி பிரேமலதா, கொங்கு ஈஸ்வரன் இவர்களை எல்லாம் தாண்டி, தான் ஆர்.எஸ்.எஸ்-ஆல் உருவாக்கப்பட்டவன் என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட ஆர்.எஸ்.எஸ்சின் முத்தரையர் சாதி கட்சிக்கு கூட்டணியில் சீட்டு ஒதுக்கியுள்ளது. வெளிப்படையாக வி.சி.க கேட்ட சீட்டை கொடுக்காமல் உள்ளடி வேலையும் செய்து வருவதோடு சி.பி.ஐ சி.பி.எம்மை 5 சீட்டோடு அணைத்துப்போட்டு விட்டு யாரோடு தி.மு.க ஐக்கியப்படுகிறது சாதிவாத மதவாத சக்திகளுடன் ஐக்கியப்பட்டிருக்கிறது.

வாஜ்பாய் நல்லவர் என்றும் ஆர்.எஸ்.எஸ் சமூக கலாச்சார இயக்கம் என்றும் கூறி மத்தியில் கூட்டணி கும்மாளமிட்டு, பா.ஜ.கவை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவந்த தி.மு.க இந்துத்துவ சங்பரிவார கும்பல்களுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தன் அரசியல் நிலைமைகளிலிருந்து கூட்டுவைப்பது அதன் வாழ்வின் அடிப்படை. அந்த வகையில் இந்து மதவாத சக்திகளுடன் நேரடி உறவாடும் வகையில் தேர்தல் முடிந்ததும் வெளிப்படையாக அதன் நகர்வு இருக்கப்போகிறது.


ஆனால் என்ன இருந்தாலும் தி.மு.க மீது ஒரு முற்போக்கு வாசம் வீசுகிறது எனவே பா.ஜ.கவிற்கு மாற்று தி.மு.கதான் என்று நரகலில் நல்லரிசி தேடுவது போல,  காலிப்பெருங்காய டப்பாவான  திமுகவில்  இன்னமும் பெருங்காய வாசனை வீசுவதாக கூறுகிறார்கள்.


பாசிசம் பூந்துடும் என்கிறீர்களே?கூட்டணிக்குள்ளேயே ஆர்.எஸ்.எஸ் பூந்திருக்கிறதே..! என்றால் நீங்கள் புனித கோட்பாட்டுவாதிகள் என்று புலம்புகிறார்கள். அறிவாலத்திற்கு அனுசரித்துப்போவது என்ற நிலையிலிருந்து, ஆர்.எஸ்.எஸ் கூடவும் அனுசரித்துப்போவது எனும் அளவிற்கு நமது பாசிச எதிர்ப்பு படைவீரர்கள் போர்புரிவது வியக்க வைக்கிறது.

பாசிசத்தை வீழ்த்த "செத்தே பிறந்த" இந்தியா கூட்டணிதான் மாற்று என்று பேசியவர்கள் அது மாற்று அல்ல என்று மாற்றை வைத்து வாதித்தவர்களை எல்லாம் சங்கி என்று முத்திரை குத்தினார்கள்.

பா.ஜ.கவின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தி மென்மையான இந்துத்துவத்தை கடைபிடிக்கும் காங்கிரசு, மாநில தி.மு.க, திரிணாமூல், ஆம் ஆத்மி உள்ளிட்டவைகளை மாற்றாக கூறுவது ஏமாற்று!

பாசிசத்திற்கு அடிப்படையான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் புதியகாலனிய அரசியல் பொருளாதார கொள்கைகளை எதிர்த்த மேலிருந்தும் கீழிலிருந்தும் கட்டப்படும் உண்மையான பாசிச எதிர்ப்பு முண்ணனி கட்டி முன்னேறுவது காலத்தின் கட்டாயம் அதுவே பாசிச பா.ஜ.கவை வீழ்த்தும்!

செந்தளம்