ஏகாதிபத்திய நீதிக்காக சமூகநீதியை ஒழிக்கும் திமுக அரசின் கல்விகொள்கைக்கு ஜவகர் நேசன் பலிகடா

சமரன்

ஏகாதிபத்திய நீதிக்காக சமூகநீதியை ஒழிக்கும் திமுக அரசின் கல்விகொள்கைக்கு ஜவகர் நேசன் பலிகடா

மோடி அரசின் புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளை அச்சில் வார்த்தவாறு அப்படியே பின்பற்றி வரும் திமுக அரசு கல்வியிலும் அதேக் கொள்கைகளைத்தான் பின்பற்றி வருகிறது. 2019ம் ஆண்டில் மோடி அரசால் முன்வைக்கப்பட்ட 'தேசிய கல்விக் கொள்கை -2020' ஐ அப்போது ஆட்சியில் இல்லாத திமுக எதிர்ப்பதாக நாடகமாடியது. அப்போதும் கூட அக்கல்வி கொள்கையின் ஏகாதிபத்திய உள்ளடக்கத்தை எதிர்க்காமல் இந்துத்துவ வடிவத்தை மட்டுமே எதிர்ப்பது போல் பிரச்சாரம் செய்தது. தான் ஆட்சிக் கட்டிலில் ஏறிய பின் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக திராவிட மாடல் 'மாநில கல்விக் கொள்கை'யை உருவாக்க இருப்பதாக அறிவித்தது. அதை வடிவமைப்பதற்கென்று உயர்நிலைக் கல்விக் குழுவை உருவாக்கியது. 'தேசிய கல்விக் கொள்கை'யின் அம்சங்களையே மறுவார்ப்பு செய்து 'மாநில கல்விக் கொள்கை'யை உருவாக்க வேண்டும் என தனக்கு அரசு அழுத்தம் கொடுப்பதாக கூறி குழுவின் முக்கிய உறுப்பினர் பேராசிரியர் லெனின் ஜவகர் நேசன் தற்சமயம் அக்குழுவிலிருந்து விலகியுள்ளார்.

ஜவகர் நேசன் விலகல் அறிக்கை

மே-10 அன்று உயர்நிலைக் கல்விக் குழுவிலிருந்து விலகிய பின், அதற்கான காரணங்களை பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டார். அதிலுள்ள அம்சங்கள் பின்வருமாறு:

1.        தேசிய கல்விக் கொள்கை 2020க்கு மாற்றாக மாநிலத்துக்கென்று தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும், அது கல்வி நலன், இளைஞர் நலன், மாநில வரலாற்று மரபுகள் மற்றும் நவீன சூழல்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு 2022 ஜூன் 1ல் ஓர் அரசாணை மூலம் உயர்நிலைக் கல்விக் குழுவை உருவக்கியது.

2.        அறிவியல் ரீதியாக நிறுவப்பட்ட முறைகளையும், தரங்களையும் கடைபிடிக்காமல் தனித்துவமிக்க கொள்கையை உருவாக்க முடியாது. அதனடிப்படையில் தற்போதைய சமூக சூழல், கல்வி செயல்பாடுகள், சமூக-பொருளாதார ரீதியான வரையறைகளை ஆய்வு செய்து கல்வியியல் சிக்கல்கள் குறித்த (Problem statement) வழிகாட்டும் ஆவணத்தையும்; அதன் தொடர்ச்சியாக 13 துணைக் குழுக்கள் உதவியுடன் பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மாதிரி ஆய்வுகள் மேற்கொண்டு இடைக்கால கொள்கை அறிக்கையை (Initial Policy Inputs) சமர்ப்பித்திருந்தேன். இவற்றை மேற்கொள்வதற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட ஏற்படுத்தி தரப்படவில்லை. இருப்பினும் நமக்கென தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே கடினமான சூழலுக்கிடையிலும் இதனை செய்து முடித்தேன்.

3.        ஆனால், இந்த உயர்நிலைக் குழு ஜனநாயகமற்ற முறையில் செயல்படுகிறது. குழிவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் தேசிய கல்விக் கொள்கை-2020ஐ பின்பற்றியே மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்கும் போக்கில் உள்ளனர். அதையே வலியுறுத்தி வரும் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலர் உதயச் சந்திரன் கடும் சினத்துடன் தகாத வார்த்தைகளால் திட்டி என்னை அச்சுறுத்தி, அவர் திணிக்கும் நிபந்தனைகளை வலுக்கட்டாயமாக ஏற்று செயல்பட வேண்டும் என அழுத்தம் தந்தார். இதை குழு தலைவரிடம் முறையிட்டும் அவர் கண்டுகொள்ளவில்லை. முதல்வருக்கு கடிதம் எழுதியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

4.        எனவே இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் மாநில கல்விக் கொள்கை பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட அதே தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட் - சந்தை - சனாதன சக்திகள் நலன்களை கொண்டிருக்கின்ற தேசிய கல்விக் கொள்கை 2020ன் மற்றொரு வடிவமாகவே இருக்கும். இது தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமான கல்விக் கொள்கையாகவே இருக்கும். இதை எதிர்த்தே நான் இக்குழுவில் இருந்து விலகுகிறேன். இருப்பினும் மதச்சார்பற்ற - சமூகநீதி அடிப்படையிலான - அறிவியல் ரீதியிலான கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான எனது போராட்டம் தொடரும்.

என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன், மாதிரிப் பள்ளிகள் என கார்ப்பரேட் நலத் திட்டங்களை கல்வியில் புகுத்தி வருகிறது திமுக அரசு. கல்வி நலன், இளைஞர் நலன் என ஏமாற்று அறிவிப்புகள் மூலம் உருவாக்கப்படும் மாநில கல்விக் கொள்கையையும் தேசியக் கல்விக் கொள்கையினடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு வருகிறது என்பதை ஜவகர் நேசனின் அறிக்கை மேலும் அம்பலப்படுத்தியுள்ளது. இருப்பினும், அவரது அறிக்கை அதிகாரிகளை பற்றி விமர்சனம் செய்வது என்று நிலையோடு மட்டுமே உள்ளது. அரசு பின்பற்றும் அரசியல்-பொருளாதார கொள்கைகளே இதற்கு அடிப்படை என்பதை அவர் முன்வைக்கவில்லை.

தேசிய கல்விக் கொள்கையின் இந்துத்துவ பாசிச அம்சங்களுக்கும் துணைபோகும் திமுக அரசு

பாஜக அரசு, இந்திய கலாச்சார மீட்பு எனும் பெயரில் மத்திய பாடத்திட்டங்களில் இந்துத்துவ பிற்போக்குத் தனங்களை NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் திணித்து வருகிறது. சமீபத்தில்,

1.        காந்தியை படுகொலைசெய்த கோட்சே மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை பற்றிய விவரங்களை நீக்கியுள்ளது

2.        2002 குஜராத் கலவரம் பற்றிய பாடத்தினை நீக்கியுள்ளது

3.        முகலாய மன்னர்களின் ஆட்சி காலம் பற்றிய பாடங்கள் இந்திய வரலாறு பற்றிய புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன

4.        பிரிவினைகள் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன

5.        மகாராஷ்டிரா, விதர்பா - தண்ணீர் தட்டுப்பாடு - விவசாயிகள் தற்கொலை பற்றிய ஆய்வுரைகளை நீக்கியுள்ளது.

இவற்றுக்கு மாற்றாக இந்துத்துவ பொய்ப் புரட்டுகளை வரலாறாக சித்தரிக்கும் மோசடியான வேலையில் ஈடுபடுகிறது. இதன் மூலம் NCERT மோடி கும்பலின் இந்துத்துவ அஜெண்டாவிற்கு பங்காற்றி கல்வியை விசமாக்கி வருகிறது. இவை தேசிய கல்விக் கொள்கை சட்டரீதியாக அமல்படுத்தப்படுவதற்கு முன்பே அரங்கேறும் அவலங்கள். அது அமல்படுத்தப்பட்டால் நிலை இன்னும் மோசமடையும்.

இந்த தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களைத்தான் இணைத்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என உயர்நிலைக் குழுவை கூட்டி வலியுறுத்தி வருகின்றார் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலர் உதயச் சந்திரன். தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்தும் நோக்கில் அனைத்து பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கும், மாநில அரசுகளின் முதன்மை செயலர்களுக்கும் தொடர்ந்து அறிக்கையை அனுப்பி வருகிறது மத்திய அரசு. இதை வழிகாட்டியாக கொண்டே உதயச்சந்திரன் போன்றோர் தேசிய கல்விக் கொள்கையை இங்கு மறுவார்ப்பு செய்யும் செயலில் ஈடுபடுகின்றனர். தமிழக பாடநூல்களிலும் கூட சாவர்க்கர் பற்றிய பொய்யுரைகள் திணிக்கப்பட்டு வருகின்றன.

இதனை தடுக்க வக்கற்ற - அரசுத் துறைகளில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார கழிசடைகளை களையெடுக்க வக்கற்ற - திமுக அரசு, மத்திய அரசின் இந்துத்துவப் பாசிச போக்கிற்கு துணை நிற்கிறது. அதை எதிர்த்துப் போராடும் ஜவகர் நேசன் போன்ற அலுவலர்களை வெளியேற்றி வருகிறது.

ஏகாதிபத்திய நீதிக்காக சமூகநீதியை காவு கொடுக்கும் திமுக அரசு

தேர்தல் பிரச்சாரத்தின் போது, பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்படும் என்றது. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றது. இவை எதையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்காது என்று தெரிந்தும் மோடி ஆட்சிக்கு எதிராக தன்னை பிம்பப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சந்தர்ப்பவாத வேசம் பூண்டது. இதைதான், தன்னை தமிழ்நாட்டின் டிமிட்ரோவாக காட்டிக்கொண்ட ஏமாற்று பேர்வழிகளும் திருத்தல்வாதிகளும் பாசிச எதிர்ப்பு செயல்திட்டம் என்றும்; இவர்தான் ஜோசப் ஸ்டாலினின் மறுபிறவி என்றும் ஆராதித்து வால் பிடித்தனர். நாம் அதை அப்போதே அம்பலப்படுத்தி வந்தோம்.

ஆனால் இன்று திமுக அரசு நீட் விலக்கு கோரி மத்திய அரசுக்கு கடிதங்கள் மட்டும் எழுதி அனுப்பிவிட்டு அமைதி காக்கிறது. பாஜக அரசின் போக்குகளையும் ஆர்.எஸ்.எஸ், ஆளுநர் ஆர்.என்.ரவியின் இழுத்தடிப்புகளையும் அம்பலப்படுத்தி ஒருவலுவான போராட்டத்தை கட்டமைக்காமல் தூங்கி வழிகிறது. மாறாக நீட் தேர்வை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கும் பச்சோந்தித்தனத்தை கடைபிடிக்கிறது. தொடரும் பாஜக அரசின் நீட் படுகொலைகளுக்கு துணை போகிறது. அதேப் போன்று, மாணவர்களின் உயர்கல்வியை முழுவதுமாக பறித்துவரும் கியூட் தேர்வை பற்றி பேச வாயைக் கூட அசைக்கவில்லை. இவர்கள்தான் தமிழகத்திற்கென்று பிரத்தியேகமாக கல்விக் கொள்கை உருவாக்கப் போகிறார்களா? இவர்கள்தான் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப் போகிறார்களா? ஏகாதிபத்திய அடிமைத்தன மோகத்தில் ஆங்கில வழிக்கல்வியை உயர்த்திப் பிடிக்கும் இந்த அடிமை அரசுதான் அறிவியல்பூர்வமான கல்வியை வழங்க முடியுமா? நிச்சயம் முடியாது. பிற துறைகளைப் போல கல்வித்துறையிலும் பாஜக அரசு அமல்படுத்தும் அதே கொள்கைகளைத்தான் திமுக அரசும் அமல்படுத்தப் போகிறது; அமல்படுத்தி வருகிறது. பன்னாட்டு- உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களுக்கு தமிழக கல்வித்துறையையும் திறந்துவிட்டுள்ளது; ஏகாதிபத்திய நீதிக்காக சமூகநீதியை காவு கொடுத்து வருவது; உழைக்கும் மக்களிடமிருந்து கல்வியை பறித்து வருவது போன்ற பாஜக -திமுக அரசுகளின் பாசிசப் போக்குகளை ஏற்கனவே நாம் சமரனில் தொடர்ச்சியாக பார்த்து உள்ளோம்.

எனவே மக்கள் ஜனநாயக குடியரசு அமைக்கும் போது மட்டுமே தேசிய சுய நிர்ணய உரிமையைப் பெற்ற - அறிவியலுக்கும் வாழ்க்கைக்கும் நெருக்கமான விஞ்ஞானப்பூர்வமான கல்விக் கொள்கையை உருவாக்க முடியும்; உருவாக்க வேண்டும்.

- சமரன்

ஜூன் மாத இதழ்