ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்: தமிழகத்தை குஜராத்தாக மாற்றும் திட்டம்
ஆர்.எஸ்.எஸ்க்கு கரசேவை செய்யும் திமுக அரசை பாதுகாக்கும் செஞ்சட்டை உடன்பிறப்புகள்
ஒரு புறம் ஆ.ராசா சனாதன எதிர்ப்பு பேசுகிறார். மறுபுறம் தி.மு.க அரசு சனாதனத்தையே தனது கொள்கையாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி தருகிறது. இதுதான் இவர்களின் சனாதன எதிர்ப்பு சமூக நீதியின் இலட்சணம். காந்தியைக் கொன்ற கோட்சேவின் வாரிசுகளுக்கு காந்தி ஜெயந்தி ஊர்வலத்திற்கு அனுமதி என்பது எவ்வளவு பெரிய ஐயோக்கியத்தனம்.
முன்னதாக ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்ட போது தி.மு.க அரசு அனுமதி தருவதற்கு சில நிபந்தனைகளைத்தான் விதித்ததே ஒழிய அனுமதி மறுக்கவில்லை. நீதிமன்றத்திலும் இதையேதான் கூறியுள்ளது. சங்பரிவாரத்தை சேர்ந்த சக்தி பள்ளி கொலையாளிகளை விடுதலை செய்த அதே நீதிமன்ற அமர்வுதான் தற்போது ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கும் அனுமதி தந்துள்ளது. 28 ந்தேதிக்குள் அனுமதி தருமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றமும் தி.மு.க ஆட்சியும் சட்டத்தின் பேரால், ஜனநாயகத்தின் பேரால் தமிழகத்தை பாசிஸ்ட்டுகளின் களமாக மாற்ற துணை போயுள்ளன.
கடந்த ஜெயா ஆட்சியில் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊரவலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்தால் நீதிமன்றம் பொறுப்பேற்குமா என ஜெயா கேள்வி கேட்டதால் நீதிமன்றம் அனுமதி தரவில்லை. வாக்குவங்கி நலன்களில் இருந்து ஜெயா கேட்ட கேள்வியைக் கேட்பதற்கும் கூட ஸ்டாலின் ஆட்சிக்கு துணிவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவாரங்களை தடை செய்ய எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சட்டமன்ற தீர்மானம் இயற்றி மத்திய அரசை நிர்பந்திக்கவில்லை. உயர் நீதி மன்ற அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவில்லை. தடை செய்யப்படாத அமைப்பின் ஊர்வலத்தை எவ்வாறு மறுப்பது என கேட்டு அதையே ஒரு சாக்காக இன்று பயன்படுத்துகிறது.
தி.மு.க ஆதரவு ஊடகங்களும் இந்த வாதத்தை முன்வைக்க துவங்கிவிட்டன.
சாஹா உள்ளிட்ட இரகசிய ஆயுதப்பயிற்சிகள் மூலம் நாடு முழுதும் ஆயிரக் கணக்கான குஜராத் - டெல்லி மாடல் கலவரங்களை கட்டியமைக்கும், வெளிப்படையாக இஸ்லாமியர்களை கொல்வது குறித்துப் பேசும், காந்தியைக் கொன்ற கோட்சேவை வணங்கும் இந்த பயங்கரவாத அமைப்பை ஏன் தி..மு.க அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி கேட்க யாரும் தயாரில்லை. கேரள அரசும் கூட இதுவரை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை இடதுசாரிகளும் பேசமாட்டார்கள்.
இந்த நிலையில் செஞ்சட்டை உடன்பிறப்புகளும், பெரியாரின் பேரன்களும், வாழும் அம்பேத்கர்களும் நீதிமன்றத்தின் மீது பழியை போட்டுவிட்டு வழக்கம் போல் தி.மு.க ஆட்சியை பாதுகாத்து வருகின்றன. தி.மு.கவின் பாசிச ஆதரவுப் போக்கை எதிர்க்காமல் பாசிச எதிர்ப்பு பேசுவது எவ்வளவு பெரிய சந்தர்ப்பவாதம் ! .
திமுகவை விமர்சித்தால் பாஜகதான் உள்ள பூந்துரும்னு சொன்னோம். ஆர்.எஸ்.எஸ்தானே பூந்துருக்குனு சொன்னாலும் சொல்வார்கள் பாசிச எதிர்ப்பு வீரர்கள்.
ஒரு தேசத்துரோக பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஐ ஜனநாயக அமைப்பாக காட்டுவதற்கு நடத்தப்படும் ஊர்வலத்தை முறியடிக்கவும் , அவ்வமைப்பை தடை செய்யவும் நாம் களம் காணவில்லை எனில் தமிழகம் குஜராத்தாக மாறி இரத்தவெள்ளத்தில் அழிவதை நாம் தடுக்க இயலாது.