மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறையும் அரசியல் செயல்தந்திரங்களும்

ஏஎம்கே

மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறையும் அரசியல் செயல்தந்திரங்களும்

பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கம் மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையைத் தனது வழிகாட்டும் சிந்தாந்தமாக கொள்கிறது. மார்க்சியத்தின் உலகக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள்முதல்வாதமாகும். முற்றிலும் நாத்திகவாதமும், எல்லா மதங்களுக்கும் நேர்படித்தான முறையில் பகைமையானதுமாகும்.
எல்லா மதங்களுமே, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிற அந்தப் புறம்பான சக்திகள் மனிதர்களின் மனங்களில் ஏற்படும் கற்பனையின் பிரதிபலிப்பே தவிர வேறு எதுவும் அல்ல; இந்தப் பிரதிபலிப்பில் மண்ணுலகச் சக்திகள் இயல்பிற்கும் மேற்பட்ட (Super Natural) வடிவத்தை மேற்கொள்கின்றன என்பதுதான் மதத்தின் சாரம் என்று மார்க்சியம் கூறுகிறது.


மதம் பொருளாதார வாழ்க்கையிலிருந்து விலகி நின்று அதற்கு மிகவும் அயலானதாகத் தோன்றுகிறது. ஆயினும், மதக் கருத்துக்கள் தம் சொந்த விதிகளின்படி வளர்ந்தாலும், இவ்வளர்ச்சியின் போக்கும் சாரமும் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார வாழ்க்கையின் மாற்றங்களுடன் மிக நெருக்கமாகத் தொடர்புடையவை என்று மார்க்சியம் சுட்டிக்காட்டுகிறது.

சமுதாய வாழ்க்கையின் எல்லா அம்சங்களும் எதிர் எதிராக நின்று போராடும் வர்க்கங்களின் பொருளாதார் உறவுகள் மற்றும் நலன்களால் கோட்பாடு ரீதியாக நிர்ணயம் செய்யப்படுகின்றன என்ற உண்மை மதத்துறைக்கும் பொருந்தும்.

சுரண்டப்படும் மக்களை சுரண்டல்காரர்கள் தமது அடிமைகளாக நீடித்து வைத்திருப்பதற்கு பொருளாதார ஒடுக்குமுறையுடன் கூட அரசியல், ஆன்மீக ஒடுக்கு முறைகள் தேவைப்படுகின்றன. ஆன்மீக ஒடுக்குமுறைகளின் பல வடிவங்களில் மதமும் ஒன்றாகும்.

காட்டுமிராண்டியாய் வாழும் மனிதன் இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் ஏலாதவனாய் இருக்கும் அவல நிலை எப்படித் தேவதைகளிலும், சைத்தான்களிலும், அவதாரங்களிலும், அற்புதங்களிலும், பிறவற்றிலும் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கை உண்டாக்குகிறதோ, அதுபோல சுரண்டப்படும் வர்க்கங்கள், சுரண்டுவோருக்கு எதிரான தமது போராட்டத்தில் ஏலாதவனாய் இருக்கும் அவலநிலையானது மறுமையில் சிறப்பான வாழ்வு உண்டென்பதில் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கை உண்டாக்குகிறது.

பிறர் உழைப்பில் உண்டு வாழ்வோர் சுகபோகமாக வாழ்வது ஏன்? ஒருவன் மேல் சாதிகாரனாகப் பிறப்பது ஏன்? அது அவன் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் என மதம் காரணம் கூறுகிறது. உழைத்து உழைத்து உருக்குலைந்து போன சுரண்டப்படுவோர் இல்லாமையால் துன்புறுவது ஏன்? ஒருவர் தாழ்ந்த சாதிக்காரராக பிறப்பது ஏன்? அது அவர் செய்த பாவம் என மதம் காரணம் கூறுகிறது. இவ்வாறு ஆண்டான் அடிமை முறைக்கு மதம் நியாயம் கற்பிக்கிறது. சுரண்டப்பட்டு அடிமைப்பட்டிருப்போர் இந்தப் பிறவியில் தமது எஜமானர்களுக்கு பயன் கருதாமல் உழைத்தால் அவர்களுக்கு செத்தபின் சிவலோக பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி, இந்த வாழ்வில் அவர்களை மன ஆறுதல் கொள்ளச் செய்கிறது மதம். இந்த வாழ்வில் தமது அவல நிலையைப் போக்கவும், ஓரளவேனும் மனிதனாக வாழ்வதற்குத் தேவையான கோரிக்கைகளைப் பற்றிச் சிந்திக்க விடாமல் இருக்கும் படி அவர்களை ஆன்மீக போதையில் மதம் மூழ்கடித்து விடுகிறது. இதனால்தான் மதம் மக்களின் அபின் என்று மார்க்ஸ் சொன்னார். “மதம் மக்களின் அபின்” என்ற மார்க்சியத்தின் ஆய்வுரைதான் மதம் பற்றிய மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் அச்சாணியாகும்-அடிப்படையாகும் (Corner Stone).

மதமும் சுரண்டலின் விளைவாகத் தோன்றும் ஒரு சமூக நிகழ்வு என்றும், சுரண்டலும், வர்க்க சமுதாயமும் ஒழிக்கப்பட்டு ஒரு சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற, ஒரு புதிய சமுதாயம் தோன்றும்போது மதமும் ஒழிந்துப்போகும் என்றும் மார்க்சியம் கூறுகிறது.

இயற்கை மற்றும் சமுதாய வளர்ச்சியை ஆளுமை புரியும் புறநிலை விதிகளின் அடிப்படையில் மார்க்சியம் மதத்தின் தோற்றம், அதன் சாரம், மற்றும் வர்க்க சமுதாயத்தில் அது ஆற்றும் பாத்திரம் ஆகியவற்றைக் குறித்து தனது கண்ணோட்டத்தை முன்வைக்கிறது.

மேற்கு ஐரோப்பாவில் மத்திய காலத்தில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த முதலாளித்துவப் புரட்சிகர சகாப்தத்தில், மதத்தை எதிர்த்து புரட்சிகர முதலாளிகள் நிறைவேற்றிய ஜனநாயக பணிகளிலிருந்தும், அதற்குப் பின்னர் அங்கே முதலாளித்துவத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கத்தின் சோசலிசப் போராட்ட அனுபவத்திலிருந்தும், மார்க்சியம் மதம் குறித்த கோட்பாட்டு ரீதியான முடிவுகளைக் கண்டது.

மேற்கு ஐரோப்பாவில் மத்திய காலம் இறையியலுடன் மற்றெல்லா சித்தாந்த வடிவங்களும் - தத்துவஞானம், அரசியல், சட்டவியல் ஆகியவற்றை ஒட்டவைத்து அவற்றை இறையியலின் துணைப் பிரிவுகளாக ஆக்கிவிட்டது. நிலப்பிரபுத்துவத்தை கத்தோலிக்க மதச்சபை பாதுகாத்து வந்தது. நிலப்பிரபுத்துவ நிறுவனங்களை இச்சபை தெய்வீகப் பண்புடையதாக்கிப் புனிதம் பெறச் செய்தது. நிலப்பிரபுத்துவத்தை மாதிரியாகக் கொண்டு இது தனது படிநிலை அமைப்பை வகுத்திருந்தது. இந்த மதச்சபை கத்தோலிக்க உலகின் நிலங்களில் மூன்றில் ஒரு பகுதிக்குத் தானே உடமையாளனாக இருந்தது. மிக, மிகச் சக்திவாய்ந்த நிலவேந்தனாகச் செயல்பட்டது. லௌகீக நிலப்பிரபுத்துவத்தின் மீது ஒவ்வொரு நாட்டிலும் விவரமான அடிப்படையில் வெற்றிகரத் தாக்குதல் தொடுப்பதற்கு முன்பு அதன் புனித மத்திய நிறுவனமாகிய இந்த மதச்சபையை ஒழித்தாக வேண்டியிருந்தது. திருச்சபை நிலப்பிரபுத்துவ நிலவுடமையுடன் பல நாடுகளுக்கிடையில் உண்மையான இணைப்புச் சங்கிலியாக இருந்தது. நிலப்பிரபுத்துவ திருச்சபை நிறுவனம் நிலப்பிரபுத்துவ அரசு அமைப்புக்கு ஒரு மத ரீதியான புனிதத்தன்மையை வழங்கியது.

மேற்கு ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த முதலாளித்துவ புரட்சி சகாப்தத்தில் மதத்தை எதிர்த்துப் போராடும் பணி புரட்சிகர முதலாளித்துவத்தின் பணியாக இருந்தது. மதத்தை எதிர்த்த பணி பெருமளவிற்கு முதலாளித்துவ ஜனநாயகத்தினால் நிறைவேற்றப்பட்டது. நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவ வர்க்கம் நடத்திய நீண்ட நெடும் போராட்டம் தீர்மானகரமான மூன்று பெரும் போர்களில் உச்சநிலை வந்தடைந்தது.

1. ஜெர்மனியில் நடைபெற்ற புரோட்டஸ்டண்டு மதச் சீர்திருத்தப் போக்கு எனப்படுவது முதலாவதாகும்.
2. இங்கிலாந்தில் நடந்த கால்வினிச முதலாளித்துவ எழுச்சி இரண்டாவது பெரும் போராகும்.
3. மாபெரும் பிரஞ்சு புரட்சி மூன்றாவது பெரும் போராகும்.

மேற்கூறப்பட்ட மூன்று போர்களில் முதல் இரண்டு போர்கள் மத முகமூடியணிந்து நடத்தப்பட்டவையாகும். மூன்றாவது போரான மாபெரும் பிரஞ்சுப் புரட்சி மட்டும்தான் முதலாளித்துவ வர்க்கம் மத முகமூடியை உதறித் தள்ளிவிட்டு ஒளிவுமறைவின்றி அரசியல் வழிகளில் முடிவுகட்டிய எழுச்சியாக அமைந்தது. நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த இந்த முதலாளித்துவப் புரட்சியின் சகாப்தத்தில் மேற்கு நாடுகளில் பின்வரும் பணிகள் பெருமளவிற்கு முதலாளித்துவ ஜனநாயகத்தால் நிறைவேற்றப்பட்டன.

மத நிறுவனங்கள் அரசாங்க அதிகாரத்திலிருந்து பிரிக்கப்பட்டன. மதம் தனிநபரின் சொந்த விவகாரமாகப் பிரகடனம் செய்யப்பட்டன. (இதற்குப் பின்னர் இக்கோரிக்கைகள் ஜனநாயகப் புரட்சியின் கோரிக்கைகளாகிவிட்டன.) எனினும் பிரான்சு முதலாளித்துவப் புரட்சிக்குப் பிறகு, குறிப்பாக ஏகாதிபத்தியத்தினதும், பாட்டாளி வர்க்க புரட்சி சகாப்தத்தில் முதலாளித்துவ வர்க்கம் ஜனநாயகத்திற்காகவும், மதச் சார்பின்மைக்கான போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் பணியை கைவிட்டுவிட்டது. ருசிய ஜனநாயகப் புரட்சி குறித்து லெனின் பின்வருமாறு சொன்னார்.

“ருசியாவில் நமது பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் நிலைமைகளின் காரணமாக இந்த பணியும்கூட ஏறக்குறைய முற்றிலும் தொழிலாளி வர்க்கத்தின் தோள்களின் மேல் விழுகிறது”. மேலும் அவர் சொன்னார்; “ருசியாவில் நிலைமைகள் முற்றிலும் வேறானது. நமது பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் தலைமை பாட்டாளிவர்க்கமே ஆகும். அதிகார பூர்வமான மதத்தை உள்ளிட்டு இடைக்காலத்திற்குரிய எல்லாப் பண்புகளுக்கும் (attributes) அதைப் புதுப்பிப்பதற்கோ அல்லது ஒரு புதியதை உருவாக்குவதற்கோ செய்யப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிரான போராட்டத்திற்குப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி சித்தாந்த தலைவனாக இருக்கவேண்டும்”.

எனவே ஏகாதிபத்தியத்தினதும், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் சகாப்தத்தில், ஜனநாயகத்திற்கும் மதச் சார்பின்மைக்கான போராட்டத்தில் பின்வருவன மார்க்சிய லெனினியத்தினதும், பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்தினதும் கோரிக்கைகள் ஆகிவிட்டன.

அரசைப் பொறுத்தமட்டில் மதம் தனிநபரின் சொந்த விவகாரமாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டும். மதம் அரசின் கருத்துக்குரியதாய் இருக்கக் கூடாது. மதநிறுவனங்கள் அரசாங்க அதிகாரத்துடன் எந்த சம்பந்தமும் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் தம் விருப்பம்போல் எந்த மதத்தையும் கடைப்பிடித்து ஒழுகவும், எம்மதத்தையும் சேராதவராய் இருக்கவும் - அதாவது பொதுவாய் ஒவ்வொரு சோசலிஸ்டும் இருந்து வருவதுபோல், நாத்திகராய் இருக்கவும் - பூரண உரிமை பெற்றிருக்க வேண்டும்.

குடிமக்களின் மத நம்பிக்கைகள் காரணமாக அவர்களிடையே எவ்விதமான பாகுபாடுகளுக்கும் இடமளிப்பது ஒருபோதும் அனுமதிக்கப்படலாகாது. அரசாங்கம் மதச்சபைக்கு மானியங்கள் வழங்கப்படலாகாது. மதச்சபை, சமயக்கழகங்களுக்கு அரசாங்க உதவித்தொகை எதுவும் அளிக்கப்படலாகாது. இவையாவும் அரசை சாராத நிறுவனங்களாகிவிட வேண்டும். ஒத்தமனத்தோராகிய குடிமக்களது முற்றிலும் சுதந்திரமான நிறுவனங்களாகிவிட வேண்டும்.

அரசியல் சுதந்திரத்தின் அத்தியாவசிய உள்ளடக்க கூறுகளில் ஒன்றாய் ஜனநாயகப் புரட்சி இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், 1891ஆம் ஆண்டு எர்பர்ட் திட்டத்தில், “மதம் தனிநபரது சொந்த விவகாரமாகும்” என்ற அம்சம் பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்தின் அரசியல் செயல்தந்திரத்தை வகுத்தளித்தது.

மார்க்சியத்தின் உலகக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள்முதல்வாதமாக இருப்பினும், பாட்டாளிவர்க்கம் புரட்சிகர கட்சியின் வேலைத் திட்டத்தில் நாம் நாத்திகர்கள் என அறிவிக்கக் கூடாது என மார்க்சியம் கூறுகிறது. அவ்வாறு கூறுவதற்குக் காரணங்கள் என்ன?

கட்சியின் வேலைத்திட்டம் முற்றிலும் விஞ்ஞான வழிபட்ட முறையிலும் முற்றிலும் பொருள் முதல்வாத உலகக் கண்ணோட்டத்தின் அடிபடையிலும்தான் வகுக்கப் படுகின்றது. ஆகையால் அந்த வேலைத் திட்டத்திற்கு விளக்கம் தருவதில் மதத்தினால் ஏற்படும் அறியாமை மற்றும் மூடநம்பிக்கைகளின் மெய்யான வரலாறு மற்றும் அதன் பொருளாதார வேர்கள் பற்றிய விளக்கம் இன்றியமையாதபடி அடங்கியிருக்கிறது. எனவே வேலைத்திட்டத்தைப் பற்றிய பிரச்சாரம் ஒரு நாத்திகப் பிரச்சாரமாகவும், வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின்படி செயல்படுத்துவதாகவும் அமைக்கிறது. இதனால் பாட்டாளி வர்க்கக் கட்சி நாத்திகப் பிரச்சாரம் செய்வது அவசியமற்றது எனக் கொள்ளக் கூடாது. நாத்திகப் பிரச்சாரம் செய்வது இன்றியமையாததாகும். எனினும் முதலாளித்துவவாதிகள் நாத்திகத்தைப் பற்றியும், மதத்தை எதிர்த்தும் பிரச்சாரம் செய்யும் முறையிலிருந்து பாட்டாளி வர்க்கம் அதைப் பிரச்சாரம் செய்யும் முறை மாறுபட்டிருக்கிறது. அவர்கள் செய்வதுபோல், மதம் பற்றிய பிரச்சினையை ஒரு அரூபமான, கருத்து முதல்வாத பாணியிலும், வர்க்கப் போராட்டத்துடன் சம்பந்தம் இல்லாத ஒரு “அறிவுத்துறை” பிரச்சினையாகவும், முன்வைப்பது ஒரு தவறான பாதையாகும் என மார்க்சியம் கருதுகிறது. மேலும், உழைக்கும் மக்களை ஒடுக்கப்படுவதை அடிபடையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் வெறும் பிரச்சார முறைகளைக் கொண்டே மத மூட நம்பிக்கைகளை அகற்றிவிட முடியாது.

மக்களிடம் மத நம்பிக்கைகள் நிலவுவது சமுதாயத்திலுள்ள அரசியல், பொருளாதார ஒடுக்குமுறைகளின் ஒரு விளைவும் பிரதிபலிப்புமாகும். முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் பிற்போக்குச் சக்திகளை எதிர்த்து உழைக்கும் மக்கள் தாமே போராடுவதின் மூலம் அவர்கள் அறிவொளி பெறாதவரை, எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும், அவர்கள் அறிவொளி பெறச் செய்துவிட முடியாது. ஆகையால், விண்ணுலகச் சொர்க்கம் குறித்து, உழைக்கும் மக்களிடையிலான கருத்து ஒற்றுமையைக் காட்டிலும், மண்ணுலகில் ஒரு சொர்க்கத்தைப் படைக்கும் பொருட்டு நடைபெறும் போராட்டத்தில் ஒற்றுமை ஓங்குவது பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். வர்க்கங்களும், சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகள் நிலவும் சமுதாயம் இருக்கும் வரையில் மத நம்பிகைகளுக்கான வேர்கள் முற்றாக அகற்றப்படாது. ஆகையால்தான் தமது தப்பெண்ணங்களை இன்னமும் முற்றாக விட்டொழிக்காமல் வைத்திருக்கும் மக்களை பாட்டாளி வர்க்கக் கட்சி முன்வைக்கும் வர்க்கப் போராட்டங்களுக்குத் திரட்டுவதற்கும், அதன் மூலம் அவர்கள் அறிவொளி பெற்று மத மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கச் செய்யும் பொருட்டும் கட்சித் திட்டம் நாம் நாத்திகர்கள் என அறிவிக்கக் கூடாது என மார்க்சியம் கூறுகிறது.

பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கம் நாத்திகப் பிரச்சாரம் செய்வதை அதன் அடிப்படையான பணிக்கு - அதாவது சுரண்டல்காரர்களை எதிர்த்து சுரண்டப்படும் மக்கள் நடத்தும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு உட்படுத்தியே செய்யவேண்டும். இதற்கு மாறாக ஒரு பிரச்சினை எழுப்பப்படலாம்.

சிந்தாந்தப் பிரச்சாரம் என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்தவரும் பண்பாடு மற்றும் முன்னேற்றத்திற்குமான எதிரியை எதிர்த்த ஒரு போராட்டமாகும். இப்போராட்டத்தை எவ்வாறு வர்க்கப் போராட்டத்துக்கு உட்படுத்த முடியும்? அதாவது அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒரு திட்டவட்டமான நடைமுறை நோக்கங்களுக்காக நடத்தப்படும் ஒரு போராட்டத்துக்கு உட்படுத்த முடியும் என்று கேட்கக்கூடும். இவ்வாறு கேட்பது மார்க்சிய இயக்கவியலைப் பற்றி ஒரு சரியான புரிதலின்மையினாலேயாகும். இந்த எதிர்ப்பாளர்களை திகைக்கச் செய்யும் இந்த முரண்பாடு உண்மையான வாழ்க்கையில் உள்ள ஒரு உண்மையான முரண்பாடாகும். அதாவது இது ஒரு இயக்கவியல் முரண்பாடாகும். இது ஒரு வெற்றுப்பேச்சோ அல்லது புனையப்பட்ட ஒன்றோ அல்ல.நாத்திகப் பிரச்சாரத்துக்கும் - அதாவது உழைக்கும் மக்களின் ஒரு பிரிவினருக்கிடையில் உள்ள மத நம்பிக்கைகளை ஒழிப்பதற்கும் இப்பிரிவினரின் வர்க்கப் போராட்டத்தின் வெற்றிக்கும், முன்னேற்றத்திற்குமான நிலைமைகளுக்கும் இடையில் அழிக்க முடியாத ஒரு எல்லைக் கோட்டை வரைவது இப்பிரச்சினையை இயங்கியலற்ற முறையில் (அதாவது மாறாநிலைவாத கண்ணோட்டத்தில்) புரிந்துக் கொள்வதாகும். மாறக்கூடய, ஒப்புநோக்கு ரீதியலான ஒரு எல்லைக் கோட்டை (வேறுபாட்டை) அழிக்க முடியாத முற்றான ஒரு எல்லைக்கோடாக (வேறுபாடாக) மாற்றிவிடுவது ஆகும். இவ்வாறு செய்வது மெய்யாக வாழ்க்கையின் பிரிக்க முடியாதவாறு இணைந்திருக்கும் ஒன்றை பலவந்தமாகப் பிரிப்பதாகும். ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.

உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் கொண்டு வரும் அரசியல், பொருளாதார, ஒடுக்குமுறைகளை எதிர்த்தோ அல்லது சுரண்டும் வர்க்கங்களின் சுரண்டலையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தோ உழைக்கும் மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். உழைக்கும் மக்களில் ஒரு பகுதியினர் முற்போக்கான (சோசலிச) கருத்துகளைக் கொண்டிருப்பவர்களாகவும், மற்றொரு பிரிவினர் இன்னும் மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களாகவும், பிளவுபட்டிருக்கின்றனர் என வைத்துக்கொள்வோம். இத்தகைய ஒரு சூழ்நிலைமையில் மதவாதிகள் உழைக்கும் மக்களிடையில் இருக்கும் மதம் குறித்த கருத்து வேற்றுமைகளைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களைப் பிளவுபடுத்தி ஆட்சியாளர்களுக்கோ அல்லது சுரண்டும் வர்க்கத்தினருக்கோ சேவை செய்ய முயற்சித்து வருகின்றனர் என வைத்துக்கொள்வோம். இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் ஆட்சியாளர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையில் அரசியல் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக ஒரு போராட்டம் துவங்கிவிட்டது. அப்போது ஒரு மார்க்சிய வாதியின் கடமை என்ன? இப்போராட்டத்தில் உழைக்கும் மக்கள் வெற்றி பெறச் செய்வதை எல்லாவற்றிற்கும் மேலான ஒரு கடமையாகக் கருதி, இப்போராட்டத்தில் முற்போக்கான தொழிலாளர்களையும், மதநம்பிக்கைக் கொண்ட தொழிலாளர்களையும் இரண்டாகப் பிளவுபடுத்துவதை எதிர்த்து தீவிரமாகப் போராடச் செய்வதும் அவர்கள் ஒன்றுபட்டுப் போராடுவதற்காகப் பாடுபடுவதும் ஒரு மார்க்சியவாதியின் கடமையாகும்.

இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் நாத்திக்கப் பிரச்சாரம் செய்வது மதத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் உழைக்கும் மக்கள் மதவாதிகள் விரிக்கும் மாயவலைக்குள் சிக்கிக் கொள்வதற்குத்தான் பயன்படும். ஆகையால் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில், இத்தகைய ஒரு சூழலில் நாத்திகப் பிரச்சாரம் செய்வது அவசியமற்றதும், தீங்கானதும் ஆகும். இவ்வாறு சொல்வது பின்தங்கிய உழைக்கும் மக்கள் நம்மை விட்டுத் தூரமாகச் சென்றுவிடுவார்களோ என்ற ஒரு பழமைவாதச் சிந்தனையினாலோ அல்லது இதைப் போன்ற வேறு பிற்போக்கு எண்ணத்தினாலோ அல்ல. அதற்கு மாறாக மெய்யான ஒரு வர்க்கப் போராட்டதின் முன்னேற்றத்தைக் கருதியே இவ்வாறு சொல்கிறோம்.

இத்தகைய ஒரு தருணத்தில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகப் பிரச்சாரம் சாதிப்பதைவிட இந்தப் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் வெற்றி பெறச் செய்வதுதான் சுரண்டுவதையும், அடிமைப் படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் வாழும் மதநம்பிக்கை கொண்டுள்ள உழைக்கும் மக்களை நூறு மடங்கு அதிகமாக சோசலிஸ்டுகளாகவும், நாத்திகவாதிகளாகவும் மாறச் செய்யும். இதனால்தான் நாத்திகப் பிரச்சாதத்தை உழைக்கும் மக்களின் அடிப்படையான பணிக்கு - அவர்களின் வர்க்கப் போராட்டம் வெற்றி பெறச் செய்யும் நோக்கத்திற்கு உட்படுத்த வேண்டும் எனக் கூறுகிறோம்.

பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்தினராகிய நாம் மதம் குறித்த பின்வரும் மார்க்சிய கோட்பாட்டு ரீதியான முடிவுகளை, நமது வழிகாட்டும் கோட்பாடுகளாகக் கொள்கிறோம்.

1. மதம் மக்களின் அபின்.
2. மதம் சுரண்டலின் விளைவாகத் தோன்றும் ஒரு சமூக நிகழ்வு என்றும், சுரண்டலும், வர்க்க சமுதாயமும் ஒழிக்கப்பட்டு ஒரு சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற ஒரு புதிய சமுதாயம் தோன்றும் போது மதமும் ஒழிந்துபோகும்.
3. (அரசைப் பொருத்தமட்டில்) மதம் தனிநபரின் சொந்த விவகாரமாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டும். மத நிறுவனங்கள் அரசாங்கத்துடன் எந்தச் சம்பந்தமும் கொண்டிருக்கக் கூடாது.
ஒவ்வொருவரும் விருப்பம்போல் எந்த மதத்தையும் கடைப்பிடித்து ஒழுகவும் எம்மதத்தையும் சேராதவராய் இருக்கவும் - அதாவது ஒவ்வொரு சோசலிஸ்டும் இருந்து வருவதுபோல் நாத்திகராய் இருக்கவும் பூரண உரிமை பெற்றிருக்க வேண்டும்.
4. அரசியல் சுதந்திரத்தின் அத்தியாவசிய உள்ளடக்கக் கூறுகளில் ஒன்றாக ஜனநாயகப் புரட்சி இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
5. இந்தியாவின் புதிய ஜனநாயகப் புரட்சியின் நிலைமைகளின் காரணமாக, மதத்தை எதிர்த்தப் போராட்டத்திற்கு பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்சி சித்தாந்தத் தலைவனாக இருக்க வேண்டும்.
6. சோசலிச பாட்டாளி வர்க்கத்தின் கட்சியைப் பொறுத்தமட்டில் மதம் தனிநபரது சொந்த விவகாரமல்ல. அதன் உலகக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள் முதல்வாதமேயாகும். எனினும் ஒருவர் மதத்தில் நம்பிக்கை கொண்டவராக இருப்பினும் அவர் கட்சியின் திட்டத்தை ஏற்று அதை அமல்படுத்தும் தகுதியுடையவராக இருந்தால், அவர் கட்சியின் உறுப்பினராக இருக்கத் தகுதியுடையவர் ஆவார்.
7. இயக்கவியல் பொருள்முதல்வாதமே கட்சியின் உலகக் கண்ணோட்டமாக இருப்பினும், கட்சியின் திட்டம் நாம் நாத்திகர்கள் என அறிவிக்கக்கூடாது.
8. நாத்திகப் பிரச்சாரம் செய்வது கட்சியின் பணியாகும்.
9. நாத்திகப் பிரச்சாரத்தை கட்சியின் அடிப்படைப் பணிக்கு அதாவது வர்க்கப் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்யும் பணிக்கு - உட்படுத்தியே செய்யவேண்டும்.

மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறை மற்றும் அரசியல் செயல்தந்திரத்தை சாதி முறைக்குப் பொருத்தக்கூடாது:

இந்து மதம் சாதி மற்றும் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அது சாதி முறைக்கும், தீண்டாமைக்கும் புனிதத்தன்மையை வழங்குகிறது. எனினும் இந்துமதம் ஒரு மதம் என்ற முறையில் நிலைத்திருப்பதற்கான சமூகவேர்களும், சாதி மற்றும் தீண்டாமை நிலைத்திருப்பதற்கான சமூக வேர்களும் வெவ்வேறானவையாகும். மதம் ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் ஒரு குறிப்பிட்ட வர்க்க சமுதாயத்திற்குள் (ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறைக்குள்) மட்டுமே அடங்கியிருக்கவில்லை. நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாத்து வரும் ஒரு மதம் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்ட பிறகும், முதலாளித்துவ ஒழுங்கு முறைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்துக் கொன்டு, புதிய சுரண்டல்காரர்களும் ஒடுக்குமுறையாளர்களான முதலாளிகளுக்குச் சேவை செய்யக்கூடிய ஒரு ஆன்மீக ஒடுக்குமுறை கருவியாக மாறிவிடமுடியும். கத்தோலிக்க மதச் சபையின் வரலாறு இதற்கு ஒரு சான்றாகும். நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாக்க வந்த கத்தோலிக்க மதச் சபை, ஒரு நீண்ட நெடிய போரட்டத்துக்குப் பிறகு நிலப்பிரபுத்துவம் தோற்கடிக்கப்பட்டதும், அது முதலாளித்துவ ஒழுங்குமுறைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொண்டு, மீண்டும் புதிய சுரண்டல்காரர்களும் ஒடுக்குமுறையாளர்களுமான முதலாளிகளுக்குச் சேவை செய்யும் ஒரு ஆன்மீக ஒடுக்குமுறைக் கருவியாக மாறிவிட்டது.

இந்துமதம் இப்போது சாதி மற்றும் தீண்டாமையைத் தனது அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை ஒழிக்கப்பட்ட பிறகும் தன்னை புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டு தொடர்ந்து உயிர்வாழ்வது சாத்தியமானதேயாகும். அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்திய சமுதாயத்தில் ஏற்படும் முதலாளித்துவ வளர்ச்சியின் தன்மைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொண்டு தரகு முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கும் சேவை செய்கிறது. இதிலிருந்தே மேற்கூறப்பட்ட சாத்தியப்பாட்டை அறியலாம். ஆனால் சாதிமுறை என்ற சமூக நிகழ்வுப்போக்கு அவ்வாறு தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது. ஏனெனில் பரம்பரைத் தொழில் பிரிவினை (Social Division of Labour) அடிப்படையில் சாதிமுறை தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. ஆகையால் சாதி மற்றும் தீண்டாமையின் சமூகவேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிற அம்சங்களான அகமண முறை, உயர்வுதாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவப் பண்பாடே காரணமாகும். ஆகையால் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும், பண்பாடும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டால் சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் தகர்ந்துவிடும். அதற்கு அடுத்த சமுதாய வளர்ச்சிக் கட்டத்தில் சாதிமுறை தொடர முடியாது. இவ்வாறு, மதம் ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்திருப்பதற்கான வேர்களும், சாதிமுறை ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்து நிற்பதற்கான வேர்களும் வெவ்வேறானவை என்பதைக் காணலாம்.

மதம் சுரண்டலின் விளைவாகத் தோன்றும் ஒரு சமூக நிகழ்வாகும். சுரண்டலும். வர்க்க சமுதாயமும் ஒழிக்கப்பட்டு ஒரு சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதின் மூலம் மதத்தை ஒழிக்க முடியும். அத்தகைய ஒரு சமூக அமைப்பை ஏற்படுத்துவதற்கிடையில், மத ஒடுக்குமுறையிலிருந்து அரசியல் சுதந்திரம் பெறும் பொருட்டே மதநிறுவனங்கள் அரசாங்க அதிகாரத்துடன் எந்த சம்பந்தமும் கொண்டிருக்கக்கூடாது என்ற ஒரு தீர்வும், வர்க்க முரண்பாடுகள் நிலவும் சமுதாயத்தில் மக்கள் மதநம்பிக்கை கொள்வதற்கான சமூக வேர்கள் இருப்பதால் மக்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் பொருட்டும் அதே சமயம் மத மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான உரிமை என்ற முறையில் நாத்திகப் பிரச்சாரம் செய்வதற்கும், நாத்திகனாக இருப்பதற்கான உரிமையும் இருக்க வேண்டுமென்பதற்காகவும் மதம் தனிநபரது சொந்த விவகாரமாக்கப்பட வேண்டும் என்ற மற்றொரு தீர்வும் வைக்கப்படுகிறது.

நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்ட பிறகும் நிலைத்திருக்கக் கூடிய மதத்திற்கு எதிராக வைக்கப்படும் தீர்வுகள், நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்படுவதோடு ஒழிந்துவிடக் கூடிய சாதி மற்றும் தீண்டாமைக்கும் பொருந்தாது. ஆகையால் மதத்திற்கு எதிராக வைக்கப்படும் மேற்கூறப்பட்ட இரண்டு தீர்வுகள் சாதி ஒழிப்பதற்கு உகந்ததல்ல.

வேறுவிதமாகச் சொன்னால், சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ள பரம்பதைத் தொழிற் பிரிவினையும், அவை நிலைத்து நிற்பதற்கு சேவை செய்யும் அகமண முறை, உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகிய அம்சங்களும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு உரியதும், இந்திய சமுதாயமும் அரசும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக நீடிக்கச் செய்வதும் ஆகும். ஆகையால் மதத்துறையில் ஜனநாயகத்திற்காக வைக்கப்படும் தீர்வுகளான அரசுத் தலையிடாக் கொள்கையும், தனிநபர் சொந்த விவகாரமாக ஆக்கப்படுவதும் சாதி மற்றும் தீண்டாமைக்கு பொருந்தாது. மேலும் சாதி மற்றும் தீண்டாமையும் இன்றைய வரலாற்றுக் கட்டத்தில் ஒழிக்கப்படக் கூடியதாகும். ஆகையால் இத்தீர்வுகள் சாதிமுறைக்குப் பொருந்தாது.

அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ இந்திய சமுதாயத்தில் சாதியும், தீண்டாமையும் நிலவுவதற்குக் காரணம் நிலப்பிரபுத்துவத்திற்கு முதலாளித்துவத்திற்கு முந்தைய (எல்லா உற்பத்தி உறவுகள் நீடித்திருப்பதற்கு) ஏகாதிபத்தியமும் தரகுப் பெருமுதலாளித்துவமும் ஆதரவு தருவதே ஆகும். புரட்சிகரமான முறையில் தரகுப் பெருமுதலாளிகள் மற்றும் பெரும் நிலப்பிரபுக்களின் அரசை ஒழித்து ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு நிறுவுவதன் மூலமே ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஒழிக்க முடியும். நிலப்பிரபுத்துவத்திற்கு ஏகாதிபத்தியமும், தரகு முதலாளித்துவமும், தரும் ஆதரவுக்கு முடிவு கட்ட முடியும். நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி உறவுகளை ஒழிப்பதால், சாதிமுறைக்கும், தீண்டாமைக்கும் ஆதாரமாக இருக்கும் பரம்பரை தொழில் பிரிவினையை ஒழிக்க முடியும். மக்கள் ஜனநாயகக் குடியரசும் புரட்சிகர மக்களும் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக கலச்சாரப் புரட்சிகளை நடத்தி சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்திரவாதம் செய்கின்ற பிற அம்சங்களான அகமணமுறை, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகியவற்றின் அடித்தளத்தைத் தகர்த்துவிட்டு ஒரு புதிய ஜனநாயகப் பண்பாட்டை உருவாக்க முடியும். இவ்வாறு நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை முற்றாக ஒழித்து, புதிய ஜனநாயக அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டை உருவாக்கி, சோசலிச சமுதாயத்தை நிறுவும் நிகழ்வுப் போக்கில் சாதி மற்றும் தீண்டாமைக்கு முடிவு கட்டுவது சாத்தியமான ஒன்றாகும்.

மக்களுக்கு, ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு இன்றி, அவர்களால் பரம்பரை வேலைப் பிரிவினையை ஒழித்து ஒரு புதிய வேலைப் பிரிவினையை உருவாக்க முடியாது. சாதிமுறை நிலைத்து நிற்பதற்கு உத்திரவாதம் செய்யும் அகமணமுறை மற்றும் பிற அம்சங்களை ஒழித்து ஒரு புதிய பண்பாட்டையும் உருவாக்க முடியாது. ஆகையால் சாதிமுறைத் துறையில் ஜனநாயகத் தீர்வு ஒரு மக்கள் ஜனநாயகத் குடியரசு என்பதேயாகும்.

உயர்சாதி ஆதிக்கமுறையை எதிர்த்தும், சாதி மற்றும் தீண்டாமையை ஒழிக்கும் பொருட்டு பரம்பரை தொழில் பிரிவினை, அகமணமுறை (சாதிக்கு உள்ளே மட்டுமே திருமண உறவுகள் கொள்ளுதல்), உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள், தீண்டாமை ஆகியவற்றிற்கு எதிராகவும், பார்ப்பனிய உயர்சாதி ஆதிக்க முறையை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு ஆதரவாகவும், பாடுபடுத்தி, உண்மையான முதலாளிய, ஜனநாயக் சீர்திருத்தங்கள் அரசு செய்யக்கோருவது ஒரு முதலாளிய ஜனநாயகக் கோரிக்கை ஆகும்.
இப்பிரச்சினைகளில் அரசு தலையிடக் கூடாது என்பதோ சாதி மற்றும் தீண்டாமை தனிநபரது விவகாரமாக ஆக்கி விடுவதோ எதுவாயினும் சாதி மற்றும் தீண்டாமை தொடர்வதற்கே பயன்படும். ஆகவே இவ்விரண்டு தீர்வுகளும் சாதி மற்றும் தீண்டாமைக்குப் பொருந்தாது. மேற்கூறப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் அவை உண்மையாகவே முதலாளிய ஜனநாயக சீர்திருத்த உள்ளடக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள் நீங்கலாக, பிற சாதிகள் குறிப்பாக பிற்பட்ட சாதிகளிலே கூட வர்க்க முரண்பாடுகள் தோன்றி ஜனநாயகத்திற்கு எதிரான நலன்கள் கொண்ட பிரிவுகள் இருப்பதையும் கணக்கில் கொண்டு, சாதி மற்றும் தீண்டாமைக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற வகையில் அவை கோட்பாடு ரீதியில் ஆதரிக்கத் தகுந்தவை ஆகும்.

- ஏஎம்கே 
(1993
தேர்வு நூல்கள், தொகுதி 5 லிருந்து)