மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜ் உள்ளிட்ட தோழர்களை படுகொலை செய்த பாஜக ஆட்சியைக் கண்டிப்போம்!
இகக (மா-லெ) (ம.யு. - போல்ஷ்விக்)

கண்டன அறிக்கை
மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜ் உள்ளிட்ட தோழர்களை படுகொலை செய்த பாஜக ஆட்சியைக் கண்டிப்போம்!
சட்டிஸ்கரில் மாவோயிஸ்ட் கட்சி தலைவர் பசவராஜ் உள்ளிட்ட 30 தோழர்கள் மற்றும் பழங்குடிகளை மோடி கும்பல் படுகொலை செய்துள்ளது.
நக்சலிசத்துக்கு எதிரான இறுதிப்போர் எனும் பெயரில் மோடி கும்பல் மாவோயிஸ்ட்டுகளையும், அவர்களின் பெயரில் பழங்குடிகளையும் கொன்றொழித்து வருவதன் தொடர்ச்சியாகவே இந்த அரசு பயங்கரவாதத்தை அரங்கேற்றியுள்ளது. இந்த கொடூரமான கார்ப்பரேட் பாசிசத்தை கடுமையாக கண்டிக்கிறோம்.
அமெரிக்காவின் கார்ப்பரேட்டுகளுக்கும், அம்பானி அதானிகளுக்கும் காடுகள், மலைகள், கனிமவளங்களை தாரைவார்ப்பதற்கு எதிராக மாவோயிச அமைப்பினரும், பழங்குடிகளும் கடுமையாக போராடி வருகின்றனர். தமது இன்னுயிரை ஈந்து வருகின்றனர்.
மாவோயிச அமைப்பினரையும், பழங்குடிகளையும் முற்றாக ஒழித்துக் கட்டாமல் காடுகளை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பது சாத்தியமில்லை என மோடி கும்பல் முடிவெடுத்துதான் “ஆப்பரேசன் காகர்” எனும் பாசிச இராணுவ நடவடிக்கையை துவக்கியது. இதுவரை அத்திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மாவோயிஸ்ட்டுகளையும் பழங்குடிகளையும் படுகொலை செய்துள்ளது.
அமெரிக்காவில் எலான் மஸ்க்- டிரம்ப் கும்பல் செயல்படுத்திவரும் டாக் இ - டெக்னோ பாசிசத்திற்கு ஏற்றவாறு இந்தியச் சந்தையை மாற்றுவதற்கான காம்பாக்ட் (COMPACT) ஒப்பந்தத்தில் மோடி கும்பல் கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்க, இந்திய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, காஷ்மீர், வடகிழக்கு மாகாணங்களின் காடுகள் மலைகளில் உள்ள கனிமவளங்கள், மூலப்பொருட்கள் மிகவும் அவசியம்.
நக்சல் ஒழிப்பு எனும் பேரில் மோடி கும்பல் நடத்திவரும் ஆப்பரேசன் காகரின் அரசியல் பொருளாதாரம் இதுவேயாகும். காஷ்மீருக்கான ஆப்பரேசன் சிந்தூரின் பின்புலமும் இதுவேயாகும்.
ஆகவே, கார்ப்பரேட்டுகளுக்கு காடுகளை காவு கொடுக்க, அதை தடுக்கப் போராடும் மாவோயிஸ்ட்டுகளையும் பழங்குடிகளையும் வேட்டையாடும் மோடி கும்பலை ஆட்சியில் இருந்து அகற்றுவது நமது உடனடி கடமையாகும். அதுவே படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நாம் செய்யும் நேர்மையான அஞ்சலியாக இருக்கும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (மக்கள் யுத்தம் - போல்ஷ்விக்)
தமிழ்நாடு
23.05.2025
Disclaimer: இது மக்கள் யுத்தம் - போல்ஷ்விக் கட்சி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை ஆகும். இதனை செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு