இந்தியாவின் வேலையின்மை தொடர்பான புள்ளிவிவரங்கள் தவறானவை
எச்சரிக்கும் சார்பற்ற பொருளாதார வல்லுநர்கள் - தி வயர்

பட விளக்கம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் வேலையிழந்த ஆசிரியர்கள் கொல்கத்தாவில் மாநில அரசுக்கு எதிராகப் போராட்ட ஊர்வலத்தில் கலந்துகொள்கின்றனர். படம்: பிடிஐ.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கடந்த மாதம் ஆய்வு செய்த 50 பொருளாதார வல்லுநர்களில், 17 பேர் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 7% முதல் 35% வரை இருக்கும் என மதிப்பிட்டனர்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்திய பொருளாதார வல்லுநர்களில் 70% க்கும் அதிகமானோர், இந்தியாவின் வேலையின்மைத் தரவுகள் தவறானவை என்றும், இந்திய அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களை விட வேலையின்மை என்பது கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர். அதாவது, 50 பொருளாதார வல்லுநர்களில், 37 பேர் ஜூன் மாதத்தில் 5.6% ஆக இருந்த அதிகாரப்பூர்வ வேலையின்மை விகிதம் சரியானதல்ல எனக் குறிப்பிட்டனர். அதேவேளையில், 17 பேர் இந்த விகிதம் 7% முதல் 35% வரை எந்த அளவிலும் இருக்கலாம் எனக் கருதினர்.
வேலையின்மைத் தரவுகளைப் பதிவு செய்யும் காலமுறை உழைப்பு சக்தி கணக்கெடுப்பு (PLFS), வாரத்திற்கு ஒரு மணிநேரம்கூட பணிபுரிந்தவரையும் வேலைவாய்ப்பு பெற்றவராகவே கணக்கில் கொள்கிறது. நிபுணர்களின் கருத்துப்படி, வேலைவாய்ப்பு எனக் கருதப்படுவதை வரையறுக்கும் பழமையான வழிமுறைகளே இந்த உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றன.
"இந்த மொத்த விவகாரமுமே உங்களைக் குழப்பும் முயற்சிதான். நீங்கள் வேலையின்மை விகிதம், வளர்ச்சி விகிதம் பற்றி கூறுகிறீர்கள் – ஆனால், பல சந்தர்ப்பங்களில் இவை அர்த்தமற்றதாக இருக்கின்றன. நாம் படுமோசமான வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொண்டு வருகிறோம், அது தரவுகளில் துளியும் வெளிப்படுவதில்லை," என்று பெர்க்லேயில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பொருளாதாரப் பேராசிரியர் பிரணாப் பர்தன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
"பெரும்பாலான இந்திய உழைப்பாளிகளுக்குப் போதிய வேலை கிடைப்பதில்லை. நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து, கடந்த ஆறு மாதங்களில் ஒரு மணிநேரம் கூடப் பணியாற்றவில்லை என்றால், நீங்கள் வசதி படைத்தவராக இல்லாவிட்டால், உங்கள் வயிற்றை எப்படி நிரப்பியிருப்பீர்கள்?... உயிர் பிழைப்பதற்காக ஏதேனும் ஒரு வழியில் வேலைத் தேடி, சம்பாதித்திருத்திருந்தீர்கள் என்றால் நீங்கள் வேலைவாய்ப்பில் உள்ளவராகக் கருதப்படுகிறீர்கள். இப்போது, இவ்வகையில் கிடைத்த வேலைவாய்ப்பு உண்மையில் எதைக் குறிக்கிறது?" என்று பர்தன் வினவினார்.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், சர்வதேச அமைப்புகள்கூட தங்களது தரவுகளை அறிக்கைகளில் பயன்படுத்தியுள்ளன என்று சுட்டிக்காட்டி, PLFS-இன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆயினும், இந்திய அரசு கையாளும் இம்முறைக்கு எதிராக நிபுணர்கள் தங்கள் எதிர்ப்பை வலுவாக முன்வைத்துள்ளனர். கடந்த காலத்தில், இந்தியக் கணக்கீடுகளில் ஊதியம் பெறாத குடும்பப் பணிகளும், அடிப்படை வாழ்வாதாரப் பணிகளும் வேலைவாய்ப்பாகக் சேர்க்கப்பட்டுள்ளன. இது, நிபுணர்களின் கூற்றுப்படி, சர்வதேச விதிகளுக்கு முரணானது மட்டுமல்லாமல், இந்தியத் தரவுகளை மற்ற நாடுகளின் தரவுகளுடன் ஒப்பிட முடியாததாக ஆக்கிவிடுகிறது.
"வேலையின்மை நாம் எதிர்கொள்ளும் பெரும் சவால்களில் ஒன்று; அரசு வெளியிடும் தரவுகள் கள நிலவரத்தை உள்ளபடி பிரதிபலிக்கவில்லை என நான் நம்புகிறேன்," என்று 2008 முதல் 2013 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்த துவ்வூரி சுப்பாராவ் குறிப்பிட்டார்.
எவ்வகையான வேலைவாய்ப்புகள் உருவாகின்றன என்பதையும் முன்னாள் ஆளுநர் சுட்டிக்காட்டினார். குறைந்த மனிதவளத் தேவைகொண்ட நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளைப் போலன்றி, பெரும்பான்மையானோருக்கு வாழ்வாதாரம் வழங்கும் உற்பத்தித் துறையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விவாதிக்கப்பட்ட நிபுணர்களில் கால் பகுதியினர், அதிகாரப்பூர்வ வேலையின்மைத் தரவுகளின் துல்லியத்தில் எவ்விதச் சிக்கலும் இல்லை என்று கருதிய வேளையில், பெரும்பாலானோர் அத்தரவுகள் முறையியல் ரீதியாக சரியானதாக இருப்பினும், வேலையின்மைச் சூழலில் நிலவும் உண்மையான சவால்களைப் முழுமையாகப் பிரதிபலிக்கத் தவறிவிடுகின்றன என்று குறிப்பிட்டனர்.
முன்னணி வங்கிகளில் ஆள்சேர்ப்பு சரிவு
இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரம் என்று பரவலாகப் பேசப்பட்டாலும், இந்த வளர்ச்சி புதிதாகப் பணியில் இணைவோருக்குத் தேவையான வேலைவாய்ப்புகளை ஈட்டித் தரவில்லை.
முன்னணி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஆண்டு அறிக்கைத் தரவுகளின்படி, 2024-25 ஆம் நிதியாண்டில் ஆட்சேர்ப்பு பெருமளவு சரிவைக் கண்டது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி, 2025ம் நிதியாண்டில் 49,713 பணியாளர்களை மட்டுமே புதிதாகச் சேர்த்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் பணியமர்த்தப்பட்ட 89,115 பணியாளர்களையும், 2023ம் நிதியாண்டில் வேலையில் அமர்த்தப்பட்ட 85,000-க்கும் அதிகமானோரையும் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தகுந்த சரிவு என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழ் விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரும் கடன் வழங்கும் நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி (SBI), 2025ம் நிதியாண்டில் வெறும் 1,770 பேரை மட்டுமே பணியமர்த்தியுள்ளது. இது 2024ம் நிதியாண்டில் 10,661 பேரையும், 2023 நிதியாண்டில் 8,595 பேரையும் பணியமர்த்தப்பட்ட எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான எண்ணிக்கையாகும். இதேபோல, மூன்றாவது பெரிய தனியார் துறை வங்கியாகத் திகழும் ஆக்சிஸ் வங்கியும், முந்தைய ஆண்டில் 40,724 பேரை பணியமர்த்திய நிலையில், 2025ம் நிதியாண்டில் 31,674 பேரை மட்டுமே பணியமர்த்தியுள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
தனிநபர் கடன்கள், வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள், மற்றும் தங்கக் கடன்கள் போன்ற துறைகளில் வளர்ச்சி மந்தகதியில் இருப்பதால், புதிய பணியாளர்களைக் களத்தில் அமர்த்துவதில் வங்கிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றன. "பெரும்பாலான ஆட்சேர்ப்புகள் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கே அன்றி, புதிய விரிவாக்கத்தை நோக்கியவை அல்ல," என டீம்லீஸ் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் (ஆட்சேர்ப்பு பிரிவு) தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திக் நாராயண் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் புதன்கிழமை (ஜூலை 23) அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட கட்டுரை "உண்மைத் தன்மை அற்றது" என்றும், "தரவு அடிப்படையிலான ஆதாரங்களுக்குப் பதிலாக, நிரூபிக்கப்படாத கருத்துக்களையே சார்ந்துள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த கணக்கெடுப்பு "இந்தியாவின் அதிகாரப்பூர்வ வேலையின்மை புள்ளிவிவரங்களின் துல்லியத்தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்பும் ஒரு கட்டுக்கதையை முன்வைக்கிறது" எனவும், இது "சுமார் 50 பெயரிடப்படாத பொருளாதார நிபுணர்களின் கருத்துக் கணிப்பை முக்கியமாக நம்பி" தொகுக்கப்பட்டது எனவும் அரசு தரப்பு விளக்கமளித்திருந்தது.
இந்தியாவில் வேலைவாய்ப்பின் நிலை "வீழ்ச்சிப் பாதையில் இல்லை, மாறாக முன்னேற்றப் பாதையிலேயே உள்ளது" என்றும், இது "வலிமையான, நம்பகமான, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வத் தரவுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்றும் அரசு தனது அறிக்கையில் மேலும் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://thewire.in/economy/indian-unemployment-data-inaccurate-warn-independent-economists