இந்தியாவில் தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்யும் பெப்சிகோ யுனிலிவர் கம்பனிகள்! புதிய ஆய்வில் அம்பலமானது!
தமிழில் : விஜயன்
ஏழை நாடுகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் சராசரியான ஆராக்கிய தரநிலை ஐந்திற்கு 1.8 என்ற நிலையில், பணக்கார நாடுகளின் தரநிலை ஐந்திற்கு 2.3 என்பதாக இருக்கிறது என்று 30 வெவ்வேறு கம்பனிகள் விற்பனை செய்து வரும் உணவு பொருட்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆரோக்கிய தர மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா போன்ற ஏழை நாடுகளில் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பாணங்களை விற்பனை செய்யும் முக்கிய கம்பனிகள் உடல் நலனை பாதிக்கக்கூடிய தரம் குறைவான பொருட்களை விற்பனை செய்து வருவதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இத்தகைய பொருட்களினால் இந்நாடுகளில் உள்ள மக்களின் உடல் நலன் எந்தளவிற்கு பாதிக்கப்படும் என்பது குறித்தான அச்சம் எழுந்துள்ளது.
அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு(Access To Nutrition Initiative) என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டிருந்த பன்னாட்டு தரவரிசையின்படி, நெஸ்லே, பெப்ஸிகோ, யுனிலிவர் போன்ற கம்பனிகள் ஏழை நாடுகளில் தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள தரவரிசை மதிப்பீடுகளைக் அடிப்படையாக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்துள்ளனர். அதன்படி, ஏழை நாடுகளில் சராசரியாக விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் ஐந்திற்கு 1.8 என்ற நிலையில், பணக்கார நாடுகளில் ஐந்திற்கு 2.3 என்பதாக இருக்கிறது. இந்த தரநிலை மதிப்பீட்டு முறையின்படி ஐந்திற்கு 3.5 என்பதற்கு மேல் உள்ள பொருட்களே ஆராக்கியமானது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
30க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பொருட்களை இந்த தொண்டு நிறுவனம் ஆய்விற்கு எடுத்துக் கொண்டுள்ளது.
“ஏழை நாடுகளில் – இங்குதான் இந்தக் கம்பனிகளின் பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது – விற்பனை செய்யப்படும் பொருட்கள் உடல் நலனிற்கு ஆராக்கியமானதல்ல என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது,” என்று ATNI தொண்டு நிறுவனத்தின் ஆய்வு இயக்குநர் மார்க் விஜ்னே ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். ஏழை நாடுகளிலுள்ள அரசாங்கங்கள் அதீத எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
முதல்முறையாக பணக்கார நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளை எடுத்துக் காட்டும் வகையில் தரவரிசையை உருவாக்கியதன் வாயிலாகவே அதிர்ச்சிகரமான தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது.
உலகில் 100 கோடி பேர் உடல் பருமன் பாதிப்பால் அவதிப்படுகின்றனர்; இவர்களில் 70 சதவீதம் பேர் குறைந்த–நடுத்தர வருமான உடைய நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனமே கூறியுள்ளது. துரித வகை உணவுகள், உருளை வறுவல்கள் போன்ற நொறுக்குத் தீணிகள், கோலா குளிர்பாணங்கள் போன்றவை உலகம் முழுவதும் உடல்பருமன் பெருவாரியாக பெருகுவதற்கு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில், பரவலாக ‘Food Pharmer’ என்ற பெயரில் அறியப்படும் ரெவந்த் ஹிமாத்சிங்கா போன்ற சமூக ஊடக பிரபலங்கள், பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் எந்தெந்த வகையிலெல்லாம் முக்கியமான சுகாதார ஒழுங்கு முறைகளுக்கு எதிராக பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள் என்பதை மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவதில் முன்னணியாக செயல்பட்டு வருகிறார்கள். அப்பட்டமாகவும், நேரடியாகவும் வைக்கும் விமர்சனங்கள் காரணமாக பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் இவர் மீது பல வழக்குகளையும் தொடுத்துள்ளது.
இலட்சக்கணக்கான பார்வையாளர்களால் ஆதரிக்கப்படும் இவருடைய சமூக ஊடக பக்கத்தில் நெஸ்லேவின் செர்லாக், கிஸ்ஸான் கம்பனியின் தக்காளி கெட்சப் மற்றும் பல கம்பனிகளின் பொருட்களில் நடந்து வரும் விதிமீறல்கள் குறித்தும் அம்பலப்படுத்தியுள்ளார்.
(கட்டுரையாளர்: நிஷா ஆனந்த்)
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை : https://www.business-standard.com/india-news/pepsico-unilever-sell-lower-quality-products-in-india-finds-report-124110900617_1.html