பங்குச்சந்தை சூதாடி அதானியின் கூட்டாளி மோடியே பதவி விலகு!

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

பங்குச்சந்தை சூதாடி அதானியின் கூட்டாளி மோடியே பதவி விலகு!

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் பங்குசந்தை மோசடியின் மூலமாக பல லட்சம் கோடிகளை அதானியின் குழுமம் மோசடி செய்து கொள்ளையடித்ததை அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகான ஏகாதிபத்திய அணிசேர்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தாலும், முரணாலும், அதானிக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் வீழ்ந்துகொண்டிருக்கும் போது அதானி குழுமம் 3வது, 2வது என்று உயர் சொத்து மதிப்பு அறிவித்ததாலும் ஆய்வு செய்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. வெளியிட்ட பிறகு சொத்து மதிப்பில் 2வது இடத்திலிருந்து 11 லட்சம் கோடி இழந்து 20வது இடத்திற்கும் கீழே சரிந்துள்ளது. ஹிண்டன்பர்க்கால் மட்டுமல்ல மாபெரும் சர்வதேச நிதி நிறுவனங்கள் உலக பொது நெருக்கடியால் ஏற்பட்ட வீழ்ச்சியின் ஒரு சிறு பகுதியே அதானி குழும பங்குச் சந்தையின் வீழ்ச்சி. இது இந்திய பொருளாதார நெருக்கடிக்கான மணியோசை.

ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியுள்ள அதானி குழுமத்தின் மோசடிகள்

அதானி எண்டர்பிரைசஸ் 156 துணை நிறுவனங்களையும் பல கூட்டு நிறுவனங்களையும் ஷெல் நிறுவனங்களாக (போலி நிறுவனங்களாக) உருவாக்கி ப்ரோமட்டர் மூலமாக மீண்டும் மீண்டும் பங்கினை சுழற்சி செய்து விலையை பல மடங்கு செயற்கையாக ஏற்றி நிதிமோசடி செய்திருக்கிறது; அதை வைத்தே எல்ஐசியிலிருந்து ரூ.77 ஆயிரம் கோடி முதலீடும், எஸ்பிஐ வங்கியிடமிருந்து ரூ.81,200 கோடி கடனும் பெற்றுள்ளது. 18% டாய்ச், பார்க்லேஸ், ஸ்டாண்டர்சார்ட், சிட்டி வங்கி (Deutsche, Barclays StanChart, City Bank) ஆகிய வெளிநாட்டு வங்கிகளிடமிருந்தும் 37% பத்திரக் கடன்கள் மூலமாகவும் 27 பில்லியன் டாலர் (ரூ. 2.16 லட்சம் கோடி) அளவுக்கு அந்நிய நிதிநிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளது.

குழுமத்தை குடும்ப கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அதானியின் சகோதரர்கள் ராஜேஷ், வினோத் அதானி, மைத்துனர் சமீர் வோரா ஆகிய குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக சதி செய்திருக்கிறார்கள். சுங்க வரி ஏய்ப்பு, சட்டவிரோத நிலக்கரி இறக்குமதி செய்வது, போலி நிறுவனங்களை உருவாக்கி ஹவாலா கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவது உட்பட பல பில்லியன் டாலர் அளவுக்கு மோசடியையும் செய்துள்ளது; கணக்கு வழக்குகளில் சிக்காமல் இருக்க பல நிதி மேலாளர்களை (CFO) மாற்றுவதும். தகுதியற்ற நிறுவனத்தால் தணிக்கை செய்யவதும் என மோசடிகளை மூடி மறைத்துள்ளது.

இந்திய நிறுவனங்களையும் அரசு சொத்துக்களையும் விழுங்கி கொழுத்த அதானி குழுமமும் ஒட்டுண்ணி மோடி ஆட்சியும்

சுரங்கம், கச்சாப் பொருள் உட்பட விவசாயம், இராணுவ தளவாடம், விண்வெளி, துறைமுகம், விமானதளம், போக்குவரத்து, மெட்ரோ ரயில், நீர், மின் உற்பத்தி, மின்பகிர்மானம், பசுமை எரிசக்தி, எரிவாயு உள்பட உள்கட்டமைப்பு துறைகள் எண்ணெய் & உணவுப் பொருள், டேட்டா செண்டர் உள்ளிட நீண்டகால லாபம் ஈட்டும் துறைகளை அதானி குழுமம் கைப்பற்றிவிட்டது.

மோடி ஆட்சியை பயன்படுத்தி அதே போல் ரிலையன்ஸ் மின்பகிர்மானம், ஜிஎம்ஆர், எல்&டி துறைமுகம், தமிழக கோஸ்டல் எனர்ஜான் என்கிற திட்டத்தில் 51% சதவிகிதம்,  டாட்டாவின் துறைமுகம் என பெரிய கார்ப்பரேட்டுகளை துணை நிறுவனங்களை மட்டுமல்ல ஏற்கெனவே செயல்படுத்திக்கொண்டிருந்த திட்டங்களையெல்லாம் விழுங்கியும், இணைத்தும் அசுர வளர்ச்சி பெற்று ஏகபோகம் அடைந்தது. 2018ல் மட்டும் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு மற்ற நிறுவனங்களை கையகப்படுத்தியது. மொத்தத்தில் மோடி ஆட்சியின் 2014-20 ஆண்டுக்குள் 63 பெரிய ஒப்பந்தங்களை கைப்பற்றி அதானி குழுமம் தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவியுள்ளது.

மோடி அரசு ஜி.எஸ்.டி, பணமாக்கல் திட்டம், நீட் என மக்கள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டே இன்னொரு பக்கம் மோடியின் ’ஆத்மநிர்பார்’ ‘மேக் இன் இந்தியா (Make In India)’ திட்டங்கள் பெயரில் அதானியின் ஊக மூலதன பங்குச்சந்தையுடன் கைக்கோர்த்துக்கொண்டு மிகப் பெரிய ஊழல்-மோசடி-சூதாட்டம் என பிண்ணிப் பிணைந்து பாசிச பாஜக தன்னை வளர்த்துக் கொண்டது. எஸ்.பி.ஐ, எல்.ஐ.சி. போன்ற அரசு நிதிமூலதனம், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பணம், தனியார் துறை ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் பணத்தை பங்குச்சந்தையில் வைத்து சூதாடும் கொள்கையால் மக்களின் சொத்துகளை வைத்து மோடி கும்பலும் சூதாடுகிறது. இதற்காகவே இந்த ஆளும் வர்க்கங்கள் மொரூசியஸ் போன்ற புதையல் தீவுகளை திட்டமிட்டே உருவாக்குகிறது. 

அதிகார நிறுவனங்கள் அதானிக்கு சரணடைந்தது

செபி, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளும் மத்திய நிதி அமைச்சகமும் இவர்களை பாதுகாத்தது. தேசிய பங்குச் சந்தை நிர்வாக அதிகாரியாக இருந்த சித்ரா சுப்பிரமணியன் ஊழல் அதற்கு ஓர் சாட்சி. பினாமி பரிவர்த்தனைகள் (தடை) திருத்தம் சட்டத்தின், 2016படி பங்குச் சந்தை சூதாட்டம், போலி ஷெல் நிறுவன மோசடியில் ஈடுபடும் நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யமுடியும். இருந்தும் செய்வதில்லை. 

கார்ப்பரேட்டுகளை காப்பாற்ற மக்களை நரபலிகொடுக்கும் மோடி ஆட்சி

இவ்வளவு மோசடிக்கு பிறகும் இந்த நெருக்கடிகளை சரிசெய்ய அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் 10 லட்சம் கோடி ஒதுக்கியிருக்கிறது. ஆனால் 11 கோடி வேலைவாய்ப்பை வழங்கும் சிறு, குறு தொழில்களுக்கு வெறும் 9,000 கோடி மட்டுமே. விவசாயிகளுக்கு உர மானியத்தை 50,000 கோடியும் அனைத்து மக்கள் நலத் திட்டங்களுக்கும் நிதிகளை குறைத்துள்ளது. அதானி சொத்துகளை பறிமுதல் செய்து மக்கள் நலத் திட்டங்களுக்கும், சிறு, குறு தொழிலுக்கும் ஒதுக்க வேண்டும். 

அதானியின் இந்த நீர்க்குமிழி பொருளாதாரத்தின் (Bubble Economy) வீக்கத்தை நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சியாக காட்டுவதும், இந்த மோசடி அதானியை அம்பலப்படுத்துவதை நாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று இந்திய கொடியை போர்த்திக்கொண்டு பாசிச மோடி கும்பல் தேசிய வெறியூட்டி பாசிசத்தை கட்டியமைக்க முயற்சிக்கிறது. இந்த ஊக மூலதனத்தின் இந்த அழுகல் போக்கு உலகமய, தனியார்மய, தாராளமய கொள்கைகளை அமல்படுத்திய பிறகு கொள்ளைக்கும், ஊழலுக்கும், மோசடிகளுக்கும் பன்மடங்கு பெருகுவதற்கு வழிவகுத்திருக்கிறது.

அதானியுடனான திமுக அரசு போட்டுள்ள திட்டங்கள் திரும்பப் பெறவேண்டும்

மாநில ஆட்சியில் இருக்கும் திமுகவோ 22 மாவட்டங்களுக்கு உட்பட்ட 33 ஒப்பந்தங்களை சூதாடி அதானியுடன் போட்டுள்ளது. பசுமை வழிச் சாலை ஒப்பந்தம், காட்டுப்பள்ளி, விழிஞ்சம் உள்ளிட்ட துறைமுகங்கள், விமான நிலையங்கள், கமுதி சோலார் பவர் யூனிட் ஒப்பந்தம், டேட்டா செண்டர், இராணுவத் தளவாட உற்பத்தி முனையம், தூத்துக்குடி அனல் மின்சார உற்பத்திக்கான திட்டத்தில் அதிகம்பட்ச பங்குகளை பெறுவது, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துடன் கூட்டு என பல ஒப்பந்தங்களை கார்ப்பரேட்டுகளின் நலனிலிருந்து இந்த மோசடி அதானி கும்பலிடம் போட்டுள்ளது. திமுக அரசும் அதானி போன்ற பெரும் குழுமங்களுக்கு திட்டங்களை ஒதுக்குகிறது. 

எனவே திமுக அரசு போட்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் முற்றிலுமாக ரத்து செய்யகோரி போராட வேண்டும். அதானி குழுமத்தின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், அதானியை உட்பட மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். இவர்களுக்கான அரசியல் அதிகார மையமான பாசிச மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டுமென்றால் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் அதாவது அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் ஏகபோகங்களைத் தகர்க்காமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது. அதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் இருந்து அகற்ற உறுதியாக போராட வேண்டும்.

- பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி

Disclaimer: இது முன்னணியின்  அறிக்கை செய்திக்காகவும் விவாதத்திற்காகவும்  இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு