கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்: அறிவித்ததை விட மறைத்ததே அதிகம்

தமிழில்: விஜயன்

கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்: அறிவித்ததை விட மறைத்ததே அதிகம்

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை, 'விக்சித் பாரத்' எனும் பெயரில் தனியார்மயமாக்கலையும், கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளையும் பரிந்துரைக்கிறது. இந்த போக்கு, இன்றைய பட்ஜெட்டில் அப்பட்டமாக வெளிப்படுவதை பார்க்க முடிகிறது. வழக்கம்போல, இந்த பட்ஜெட்டும் பொதுமக்களின் நலனுக்கானது என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் மக்கள் நலன் சார்ந்தவற்றை அறிவிதத்தை விட, மறைத்ததே அதிகம்.

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்த பிறகு, பட்ஜெட்டின் மொத்த அளவு பற்றியோ, 100 நாள் வேலைத் திட்டம் (MNREGA), அங்கன்வாடி திட்டம், மதிய உணவுத் திட்டம் போன்ற முக்கிய திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது பற்றியோ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதோ, ஏன் ஏழை மற்றும் விவசாயிகளுக்கான உணவு மற்றும் உர மானியங்களுக்காக எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது பற்றியோ யாருக்கும் தெளிவான விவரம் கிடைக்கவில்லை. ஜனாதிபதி அவர்கள், "எனது அரசாங்கம் ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கானது" என்று கூறியிருந்தார். ஆனால், மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில்களை நாடாளுமன்றத்தின் மூலமாகப் பெற முடியாமல், சாதாரண மக்கள் பட்ஜெட் ஆவணங்களை ஆராய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றால், ஜனாதிபதியின் நிலை "பரிதாபகரமானதாகவே" பார்க்கப்படும்.

"வரவு செலவுத் திட்டத்திலிருந்து இரண்டு முக்கிய விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன, அவற்றை ஊடகங்கள் நாள் முழுவதும் தீவிரமாகப் ஒளிபரப்பின. முதலாவதாக, பீகாரில் ஒரு வசந்த காலம் தொடங்கியிருக்கிறது என்றார்கள்; ஆனால், இது அங்கு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருப்பதால் ஏற்பட்டிருக்கும் ஒரு அரசியல் வசந்தம் எனலாம். இரண்டாவதாக, ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இது நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது என்றார்கள். இந்த நிவாரணமும்கூட, டெல்லியில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரத்தையும், ஆம் ஆத்மி கட்சியின் வீழ்ச்சியையும் மனதில் வைத்து வழங்கப்பட்டிருக்கிறது. இது பாஜக அரசின் 'இரகசிய செயல்திட்டம்' என்றவாறு சொல்லப்பட்டாலும் உண்மையில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. மத்திய அரசின் வரவு செலவுத் திட்டம், மாநிலத் தேர்தல்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டால், இந்த அரசு கூட்டாட்சி தத்துவத்தையும், நாட்டின் கூட்டாட்சி அமைப்பையும் எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். தலித் மக்களையும், பழங்குடியின மக்களையும் ஏமாற்றுவதற்காக, அம்பேத்கரின் பெயரைச் சொல்வது ஒருபுறம் என்றால், அவர்களின் நலனுக்கு எதிராக வேறுவழியில் செயல்படுகிறது.

கடந்த பத்து வருட மோடி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்கள் வெறும் காகித அளவிலேயே இருப்பதால், இந்த 'வசந்தம்' பீகார் மக்களுக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று தெரியவில்லை. இது 'அமிர்த காலம்' என்று சொல்லப்படுகிறது. ஆனால், கும்பத்தில் இருக்கும் அமிர்தம் பெரு நிறுவனங்களுக்கானது. மக்களுக்கு கிடைப்பதோ, புனித நதியில் நீராடி புண்ணியம் தேடிக்கொள்ளும் கும்பம் மட்டுமே."

ஆண்டுக்கு 12 இலட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு வரி விலக்கு அளிப்பது குறித்த கேள்வியைப் பொறுத்தவரை, நம் தேசத்தில் எத்தனை பேர் இந்த வருமான வரம்பில் இருக்கிறார்கள் என்பதை முதலில் வினவ வேண்டும். இந்த அரசாங்கத்தின் அறிக்கையின்படி, கிராமப்புற குடும்பமொன்றின் மாதாந்திர செலவு திறன் ரூ. 8,000 ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ. 14,000 ஆகவும் உள்ளது. நாட்டின் மொத்த தொழிலாளர்களில் 95% ஆக உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள், குறைந்தபட்ச மாதாந்திர ஊதியமாக ரூ. 26,000 அல்லது ஆண்டு வருமானமாக ரூ. 3.12 இலட்சம் கேட்டுப் போராடுகின்றனர். தற்போது, இவர்கள் கேட்கும் ஊதியத்தில் 33% முதல் அதிகபட்சம் 50% வரை மட்டுமே பெறுகின்றனர். விவசாயிகளின் நிலைமை இன்னும் பரிதாபகரமாகவே உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MNREGA) தொழிலாளர்கள், பல ஆண்டுகளாக 600 ரூபாய் ஊதியம் கேட்டுப் போராடியும், அது இன்னும் 225 ரூபாயாகவே உள்ளது. ஊதியம் பெறுபவர்களில் எத்தனை பேருக்கு ஆண்டுக்கு ரூ. 12 இலட்சம் சம்பளம் உள்ளது? இந்த வரவு செலவுத் திட்டம் சிலருக்குப் பயனளிப்பதாகக் ஆசைக் காட்டினாலும், அதிகரித்து வரும் பணவீக்கமும், மறைமுக வரிகளின் சுமையும், அவர்களின் சேமிப்பை கரைத்துவிடும்.

இப்பொழுது, நம் நாட்டு மக்களின் உண்மையான பிரச்சனைகளுக்கு வருவோம். ஒவ்வொரு வருடமும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், சி-2 + 50%(உற்பத்திச்) செலவு அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) வழங்குவோம் என்று பாரதிய ஜனதா கட்சி (BJP) அளித்த வாக்குறுதிகளைக் எடுத்துக்கூறி அவர்களை இழிவுபடுத்த முடியுமா(?!). சிறதளவாவது, மான உணர்வு இருப்பவர்கள், "சொன்ன சொல் தவறாதவர்கள்" தானே அவ்வாறு பேசத் தகுதியானவர்கள். மூலதனத்திற்கும், கார்ப்பரேட்டுகளுக்கு கொத்தடிமை சேவகம் செய்தால் வெட்க உணர்வெல்லாம் எங்கு எஞ்சியிருக்கப் போகிறது(?!).

அரசாங்கத்தின் பொருளாதார ஆய்வறிக்கை 5% பணவீக்க விகிதத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ₹50.65 லட்சம் கோடி; இது கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டமான ₹48.20 லட்சம் கோடியை விட ₹2.45 லட்சம் கோடி அதிகமாகும். இதுவும் 5% அதிகரிப்பைக் காட்டுகிறது. இருப்பினும், இந்த பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், வரவு செலவுத் திட்டத்தின் உண்மையான அதிகரிப்பு என்பது பூஜ்ஜியம்தான். எனவே, ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. மேலும், கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில், ₹1 லட்சம் கோடி செலவிடப்படாமல் உள்ளது. பொது மக்களின் நலனை விட நிதிப் பற்றாக்குறையை குறைப்பதில்தான் அரசு அதிக கவனம் செலுத்துகிறது என்பதையே இது காட்டுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, விவசாயத்தை நம்பியுள்ள மக்களின் எண்ணிக்கை 2% உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு முன், 44% மக்கள் விவசாயத் துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்தனர் என்றால், தற்போது இந்த எண்ணிக்கை 46% ஆக அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு மக்கள் திரும்புவதுதான். இந்த சூழ்நிலையில், விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது அவசியமாகிறது. ஆனால், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ₹3,76,720 கோடியை விடக் குறைத்து, இந்த ஆண்டு ₹3,71,687 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டால், இந்த நிதி ஒதுக்கீட்டில் செய்யப்பட்ட குறைப்பு 6% க்கும் அதிகமாகும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MNREGA) ரூ. 86,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து, ஊதியங்களுக்காகவும், ரூ. 11,000 கோடிக்கு மேலான கடன்களுக்காகவும் செலவிடப்படும். பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால், MNREGA திட்டத்திற்கு 17% க்கும் அதிகமான அளவிற்கு நிதி குறைப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவரும். இந்தத் திட்டம், கிராமப்புற இந்தியாவின் "ஆணிவேர்" எனக் கருதப்படுகிறது. இருந்தபோதிலும், பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) MNREGA திட்டத்தின் மீது இருக்கும் எதிர்ப்பு இந்த முறை மூடிமறைக்க முடியாதளவிற்கு வெளிபட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

பிரதான் மந்திரி பிமா யோஜனாவும், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமும் மோடி அரசாங்கத்தால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட திட்டங்களாகும். இருப்பினும், காப்பீட்டுத் திட்டத்தில் கூட ரூ. 3,622 கோடி குறைக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தின் அடிப்படையில் கணக்கிட்டால், இந்த குறைப்பு 26% க்கும் அதிகமாகும். மேலும், கிசான் சம்மான் நிதிக்கான ஒதுக்கீட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. அதே நேரத்தில், கோடிக்கணக்கான விவசாயிகள் இன்னும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறவில்லை. இந்தத் திட்டம் 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து, இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு மாதத்திற்கு ரூ. 500 மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளில் பணவீக்கம் 35% க்கும் அதிகமாக உயர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது .

விவசாயிகளுக்கான உர மானியம் நாட்டின் நிதிநிலை அறிக்கையில் மிக முக்கியமானது. உரங்களுக்காக நாம் பெரும்பாலும் வெளிநாடுகளையே சார்ந்திருக்கிறோம். இதனால், விவசாயிகள் ஒவ்வொரு விவசாயப் பருவத்திலும் உரத் தட்டுப்பாட்டைச் சந்திக்கின்றனர். இருப்பினும், உர மானியம் ரூபாய் 1,71,299 கோடியிலிருந்து ரூபாய் 1,67,887 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 3,412 கோடி ரூபாய் குறைப்பட்டிருப்பதை காட்டுகிறது; அதாவது உண்மை மதிப்பில் 7% ஆகும். இது நாட்டின் உணவு தானிய உற்பத்தியைப் பாதிக்கும். அதேபோல, உணவு தானியங்களுக்கான மானியமும் இந்த முறை குறைக்கப்பட்டுள்ளது. இது பொது விநியோக முறையை நேரடியாகப் பாதிக்கும். இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டாலும், ஏழை மக்கள் குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைக்காமல் அவதிப்படுவார்கள். மோடி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, உலகப் பசி குறியீட்டில் நம் நாட்டை மேலும் பின்னுக்குத் தள்ளும்.

மேலும், விவசாயிகளுக்கான பிரதம மந்திரி தான் தன்யா யோஜனா திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு (FDI) அனுமதிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் காப்பீட்டுத் துறை முழுவதும் தனியார்மயமாக்கப்படும். விவசாயிகளை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில்(FPO) இணைப்பதற்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது; இது விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதை நோக்கி நகர்த்துகிறது எனலாம்.

இந்த அரசாங்கம், கார்ப்பரேட்டுகளுக்கு வரிவிலக்கு அளிப்பதிலும், அவர்களின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்வதிலும் தீவிரம் காட்டுவதோடு சொத்து வரி, வாரிசு வரி போன்றவற்றை விதிக்க மறுத்து வருகிறது. இதனால், தனது வருவாயை அதிகரிப்பதற்கு வேறு வழியின்றித் திணறுகிறது. இவ்வாறு வருவாய் குறைந்திருக்கும் நிலையில், பொதுமக்களுக்கு வெறும் கவர்ச்சியான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. ஆனால், இவை பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியுடன் எந்தவித தொடர்பும் இல்லாதவையாக இருக்கின்றன. மேலும், இந்த நாட்டில் உள்ள கார்ப்பரேட்டுகள், நாட்டின் செல்வத்தை தாராளமாகக் கொள்ளையடிப்பதற்கு முழுமையாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பட்ஜெட்டில் எவ்வித குறிப்பும் இல்லை. உண்மையில் இது, கார்ப்பரேட்டுகள் தங்களுடைய கொள்ளையை எளிதாக்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு வரவு செலவுத் திட்டம் ஆகும். இதனை மோடி அரசாங்கம் நிர்மலா சீதாராமன் மூலம் வெளியிட்டிருக்கிறது.

(சஞ்சய் பரதே, அகில இந்திய கிசான் சபையுடன் இணைந்த சத்தீஸ்கர் கிசான் சபாவின் துணைத் தலைவராக உள்ளார்)

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/02/pro-corporate-budget-it-tells-less-and-hides-more/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு