யுவான் பந்தலிலே- ரூபாய் குப்பையிலே

"மோடி எங்கள் பிரதமர் ஆனால் உங்கள் பிரச்சனை" : கார்ப்பரேட்டுகள் - தி இந்து

யுவான் பந்தலிலே- ரூபாய் குப்பையிலே

நியூசான் அர்ஜென்டினாவின் மிகப்பெரிய வீட்டு உபயோகப் பொருள் விற்பனை நிறுவனம், பல தசாப்தங்களாக, சீனாவில் இருந்து தான் வாங்கிய குளிர்சாதன பெட்டிகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற பொருட்களுக்கான விலையை அமெரிக்க டாலரில் செலுத்தியது. ஏப்ரலில், நியூசான் நிறுவனம் தன் வர்த்தக பரிமற்றங்களை திடீரென சீன யுவானுக்கு மற்றியது. இதற்கிடையில், ஜனாதிபதி லுலா டா சில்வாவின் கீழ் பிரேசிலின் புதிய அரசாங்கம் சமீபத்தில் பிரேசிலிய நிறுவனங்கள் சீன யுவானைப் பயன்படுத்தி தங்கள் வெளிநாட்டு வர்த்தகத்தை மேற்கொள்ளலாம் என்று அறிவித்தது. இதன் விளைவாக, பிரேசிலிய நிறுவனங்கள் தங்களுக்கான இயற்கை எரிவாயு வாங்குவதற்காக பிரெஞ்சு நிறுவனங்களுக்கு யுவானில் பணம் செலுத்தத் தொடங்கியுள்ளன, இது அவர்களின் வரலாற்றில் முதல் முறையாகும். யுவான் இப்போது ரஷ்யாவில் மிகவும் தீவிரமாக வர்த்தகம் செய்யப்படும் நாணயம். மேலும் வங்காளதேசம் யுவானைப் பயன்படுத்தி ரஷ்ய அணுசக்திக்கு பணம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிகள் சுயாதீனமானவையோ தொடர்பில்லாதவையோ அல்ல.

ரஷ்யா-உக்ரைன் மோதலின் குறிப்பிடத்தக்க உலகளாவிய விளைவு அமெரிக்க டாலர்-சீன யுவான் மோதல் ஆகும். ஒரு பிரெஞ்சு நிதி மந்திரி "அதிகமான சலுகை" என்று அழைத்ததை போல அந்தப் பதவியை அமெரிக்க டாலர் நீண்ட காலமாக அனுபவித்து வருகிறது. ஏறக்குறைய அனைத்து நாடுகளும் அமெரிக்க டாலரைப் பயன்படுத்தி ஒன்றுக்கொன்று வர்த்தகம் செய்கின்றன, உலகின் இருப்பு நாணயமாக அதன் முன்னிலையை நிறுவுகின்றன. டாலரின் மீதான உலகளாவிய நம்பிக்கை அமெரிக்காவை வல்லரசாக நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெளிப்படையாக, சீனர்கள் இனி அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்கத் தயாராக இல்லை. அமெரிக்க டாலரை நிலைகுலையச் செய்வதும், பதவி நீக்கம் செய்வதும் சீனாவின் முக்கிய உத்தி, அமெரிக்காவிற்கு சவால் விடுவது மற்றும் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்காக யுவானுக்கு மாறுவதற்கு மற்ற நாடுகளைத் தூண்டும் வற்புறுத்தல்கள் உலக ஒழுங்கை மறுவடிவமைப்பதற்கான அதன் பெரும் லட்சியங்களின் ஒரு பகுதியாகும். இந்நிலையில், டிரில்லியன் டாலர் வர்த்தக நாடான இந்தியா, புதிய உலக நாணய ஒழுங்கை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக

வடகிழக்கில் இந்தியாவின் நிலப்பரப்பில் சீனா அத்துமீறி அதன் இறையாண்மை ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது. இது கோவிட் நோய்த்தொற்றின் போதும் இந்தியா-சீனா இரு நாடுகளையும் போரின் விளிம்பிற்கே கொண்டு சென்றது. சீனாவின் மேம்பாட்டிற்கு உதவுவது இந்தியாவின் நலன்களுக்கு உகந்தது அல்ல, எனவே டாலரில் இருந்து யுவானுக்கு உலக வர்த்தகப் பரிமாற்றங்களை நகர்த்துவதற்கான சீனாவின் விருப்பத்திற்கு இந்தியா உதவாது என்று எதிர்பார்க்கலாம். ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில், இந்தியா அதற்கு நேர்மாறாக நடந்துகொண்டது - யுவானில் அதன் சொந்த வெளிநாட்டு வர்த்தகத்திற்கு பணம் செலுத்துகிறது.

மோடி அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற பொருளாதார போர்தந்திரங்கள் இந்தியாவின் சுதந்திரமான வளர்ச்சிக்கு தீங்கு விளைவித்து சீனாவின் சர்வதேச வளர்ச்சிக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்த பிறகு, மோடி அரசாங்கம் பொருளாதாரத் தடைகளை ஆதரிக்காமல் அதற்குப் பதிலாக தள்ளுபடியில் கிடைக்கிறது என்ற காரணத்தினால் ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்க முடிவு செய்தது. இந்த நடவடிக்கையின் மூலம் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பெட்ரோலிய அமைச்சர்கள், எரிபொருள் விலை குறைப்பு மற்றும் பணவீக்கத்தில் இருக்கும் சாமானிய இந்தியர்களுக்கு எப்படி உதவ முடியும் என்று நெஞ்சை நெகிழ வைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டனர். போர் தொடங்கியதில் இருந்து, இந்தியா ரஷ்யாவிலிருந்து (முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது) 15 மடங்கு அதிகமாக 44 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.  இந்தப் பணமானது ரஷியாவின் உக்ரைன் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள மிகவும் தேவையானதாக உள்ளது.

இந்த எண்ணெய்க் கொள்கையில் ஒரு தடங்கல் இருந்தது - எண்ணெய்க்கான பணத்தை இந்தியா ரஷ்யாவிற்கு எப்படி கொடுக்கும்? எனபதுதான் அது பொதுவாக, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பெரும்பகுதியைப் போலவே அது ரஷ்யாவிற்கு அமெரிக்க டாலர்களில் செலுத்தியிருக்கும். ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவால் இதை ஏற்க முடியவில்லை. ரஷ்யா ரூபிள்களில் பணம் செலுத்துவதை ஏற்றுக்கொண்டிருக்கலாம், ஆனால் இது இந்தியாவிற்கு சாதகமாக இல்லை, ஏனெனில் ரூபிள் மதிப்பை நாணய சந்தைகளால் திறமையாக தீர்மானிக்க முடியாது. ரூபாய்க்கும் ரூபிளுக்கும் இடையே பரஸ்பர மதிப்பை நிறுவுவதற்கான இருதரப்பு ஏற்பாடு முன்வைக்கப்பட்டது, ஆனால் இது இந்தியாவை தாராளமயமாக்கலுக்கு முந்தைய இருதரப்பு நாணய ஏற்பாடுகளுக்குத் தள்ளும். இந்தியா ரூபாயில் பணம் செலுத்த விரும்பியிருக்கும், ஆனால் இது ரஷ்யாவிற்கு உகந்ததாக இல்லை, ஏனெனில், இந்திய ரிசர்வ் வங்கியின் அபத்தமான கூற்றுகளுக்கு மாறாக, இந்திய ரூபாய் சர்வதேச நாணயமாகவோ அல்லது நம்பகமான நாணயமாகவோ இல்லை, குறிப்பாக பணமதிப்பிழப்பு போன்ற வினோதமான கொள்கைகளுக்குப் பிறகு. இந்த புதிரில் சீனா ஒரு வாய்ப்பை உணர்ந்து, ரஷ்யாவிற்கு அருகாமையில் இருப்பதால், ரஷ்ய-இந்திய எண்ணெய் வர்த்தகத்திற்கான நாணயமாக யுவான் உருவெடுத்துள்ளது.

ரஷ்யாவின் வர்த்தகத்தை யுவானில் இந்தியா தீர்த்து வைக்க முடியுமானால், யுவானில் இந்தியா-சீனா வர்த்தகத்திற்கான தீர்வுகளைக் கோருவதில் இருந்து சீனாவைத் தடுப்பது எது? கடந்த தசாப்தத்தில் இந்தியா-சீனா வர்த்தகம் நான்கு மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது மற்றும் ஒருதலைப்பட்சமாக உள்ளது, இந்தியா சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்வதை விட ஏழு மடங்கு அதிகமாக இறக்குமதி செய்கிறது. சீனா இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது, அதே நேரத்தில் இந்தியா சீனாவின் 13 வது பெரிய கூட்டாளியாக உள்ளது. இந்த சூழலில், யுவானில் வர்த்தக தீர்வுக்கான சாத்தியமான சீன கோரிக்கையை இந்தியா மறுப்பது அல்லது எதிர்ப்பது கடினமாக இருக்கும். இந்தியா தனது வர்த்தகத்தின் கணிசமான விகிதத்திற்கு யுவானைப் பயன்படுத்தத் தொடங்கினால், அது புதிய உலக ஒழுங்கில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவின் அபிலாஷைகளுக்கு ஒரு பெரிய உந்துதலை வழங்கும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தி இந்து நாளிதழில் ஓராண்டுக்கு முன்பே எச்சரித்திருந்தார். சாராம்சத்தில், இந்தியாவை மிதிக்கப் போவதாக சீனா மிரட்டும் போது, ​​மோடி அரசாங்கத்தின் விளம்பரத்தனமான புவி-பொருளாதார உத்தி சீனாவின் இந்திய ஆதிக்கத்திற்கு பெரிதும் உதவியது.

சாமானியனுக்கு எந்த பலனும் இல்லை

முரண்பாடாக, அவர்கள் வாக்குறுதி கூறியது போல இந்த நடவடிக்கை சாமானிய இந்தியருக்கு கூட எந்த வகையிலும் பயனளிக்கவில்லை. ரஷ்ய எண்ணெய் வாங்கிய பிறகு சராசரி இந்தியக் குடும்பத்தின் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி பயன்பாட்டு விலை உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை 5% உயர்ந்துள்ளது. இதற்கு ஒரு காரணம், தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயில் பாதி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நயாரா எனர்ஜிக்கு சென்றது, அதை சுத்திகரித்து அதிக விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரலாறு காணாத லாபங்களை இந்நிறுவனங்கள் ஈட்டியது.

மோடி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களை பந்தயம் வைத்து, உக்ரைன் போரை பதிலியாகப் பயன்படுத்தி இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு பெரும் லாபத்தை ஈட்ட உதவுவதற்காக மட்டுமே சீனாவை பலப்படுத்துகிறார். 1971 ஆம் ஆண்டில், அமெரிக்க டாலரின் பங்கு பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் கேட்டபோது, ​​அப்போதைய அமெரிக்க கருவூலச் செயலர் ஜான் கோனாலி, "டாலர் எங்கள் நாணயம் ஆனால் உங்கள் பிரச்சனை" என்று பிரபலமாக கூறினார். ஒருவேளை, இந்தியாவின் சில பெரிய தொழிலதிபர்கள் இப்போது மற்ற இந்தியர்களிடம் கிண்டலாக, “மோடி எங்கள் பிரதமர் ஆனால் உங்கள் பிரச்சனை” என்று கூட சொல்லலாம்.

- மருதன் 

(தமிழில்)

மூலக்கட்டுரை: தி இந்து

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு