ஏமாற்றமளிக்கும் பட்ஜெட், வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்ளும் பெண்களும், இளைஞர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்: AIDWA

தமிழில்: விஜயன்

ஏமாற்றமளிக்கும் பட்ஜெட், வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்ளும் பெண்களும், இளைஞர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்: AIDWA

வீட்டு  வேலை செய்பவர்கள், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் போன்ற அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களின் சமூகப் பாதுகாப்பிற்கான எந்தவொரு திட்டத்தையும் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிவிக்கவில்லை என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம் வருத்தம் தெரிவிக்கின்றன.

விவசாயிகளின், இளைஞர்களின், பெண்களின் நலனில் அக்கறை காட்டுவதாகக் கூறினாலும், உண்மையில் இந்த நிதிநிலை அறிக்கை "தவறான, திசை திருப்பும் நோக்கமுடைய வாக்குறுதிகளை"  வழங்குகிறது என்று மாதர் சங்கம் விமர்சித்துள்ளது.

மேலும், சாதாரண குடிமக்கள்,பெண்களின் நலனில் இந்த பட்ஜெட் அக்கறை காட்டாவில்லை என்பது, பொதுச் செலவினங்களில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான சரிவும், சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வெட்டுக்களிலிருந்தும் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக, பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொள்ளும்போது இந்த நிலைமை மேலும் மோசமாகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய அரசின் செலவு சென்றாண்டில்(2024-25) 14.55% ஆக இருந்தது, ஆனால் நடப்பாண்டில்(2025-26) அதுவே 14.18% ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட மிகக் குறைந்த நிதியைக் கூட அரசாங்கம் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பதை இது காட்டுகிறது. சென்ற(2024-25) நிதியாண்டிற்கான மத்திய அரசின் திட்டங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடு, முந்தைய நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டை விட 18% குறைந்துள்ளது.

பாலின அடிப்படையிலான திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு, அரசாங்கத்தின் மொத்த செலவில் 8.8% ஆகவும், நாட்டின் பொருளாதாரத்தில் தோராயமாக 1.61% ஆகவும் உள்ளது என்பதை பெண்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பாலின வரவு செலவு திட்டத்தின் "பகுதி ஏ"வின் கீழ் வரும் திட்டங்கள், அதாவது, பெண்களை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி, அரசாங்கம் ஒதுக்கியுள்ள மொத்த நிதியில் வெறும் 2% மட்டுமே.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, அரசாங்கத்தின் மொத்த செலவில் வெறும் 0.53% மட்டுமே. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், "பகுதி ஏ" திட்டங்களில், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது". உதாரணமாக, 2024-25 ஆம் ஆண்டில் 59% ஆக இருந்த நிதி ஒதுக்கீடு, 2025-26 ஆம் ஆண்டில் 74% ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பெண்களின் நலனுக்கான மற்ற பல முக்கியமான திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை, அல்லது சில திட்டங்கள் அரசாங்கத்தால் முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளன என்று மாதர் சங்கம் கவலை தெரிவிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், மிஷன் சம்பல் மற்றும் சாமர்த்யா போன்ற திட்டங்களின் கீழ், பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுத்தல், பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான செலவுகளுக்கான நிதி சுமார் 50% வரை குறைத்திருப்பதற்கு மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம், உணவுப் பொருட்களுக்கான மானியத்தை தொடர்ந்து குறைத்து, ஏழை மக்களின் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைப் பற்றி எவ்வித கவலையும் கொள்ளாமல் இருக்கிறது. மேலும், 2023-24 ஆம் ஆண்டில் உணவு மானியத்திற்காக செய்யப்பட்ட செலவுகளுடன் ஒப்பிடும்போது, தற்போது சுமார் ரூ.8,394 கோடி குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று AIDWA சுட்டிக்காட்டியுள்ளது.

பெண்களும், இளைஞர்களும் சந்திக்கும் வேலைவாய்ப்புப் பிரச்சினைகளுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) சுட்டிக்காட்டியுள்ளது. முந்தைய நிதிநிலை அறிக்கைகளைப் போலவே, தனியார் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமும், கடன் அளவுகளை உயர்த்துவதன் மூலமும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்ற தவறான எண்ணத்தில் அரசாங்கம் தொடர்ந்து இருக்கிறது.

முந்தைய ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது, பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவுக்கான (PMGKAY) நிதி ஒதுக்கீடு ₹2250 கோடி குறைந்துள்ளது. உணவுப் பணவீக்கம் 7-8% ஆக இருக்கும்போது, இந்த குறைவு இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். சக்ஷம் அங்கன்வாடி திட்டம், போஷான் 2.0 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட இது வெறும் 3% மட்டுமே அதிகம், இது உண்மையில்  பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளும் குறைவுதான்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான (MGNREGS) நிதி ஒதுக்கீடு ₹86,000 கோடியாகவே உள்ளது. இது 2023-24 ஆம் ஆண்டின் உண்மையான செலவை விட 3.7% குறைவாகும்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு (MSME) ஆதரவளிப்பதன் மூலமும், குறிப்பாக பெண்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு கடன் வரம்புகளை அதிகரிப்பதன் மூலமும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று நிதி அமைச்சர் நம்புகிறார். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் 48% MSME க்கள் மூடப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களை அரசாங்கம் கண்டறிய மறுக்கிறது.

மேலும், வீட்டு வேலை செய்பவர்கள், ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் போன்ற அமைப்பு சாரா தொழில்களில் உள்ள பெண்களின் சமூகப் பாதுகாப்பிற்காக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று AIDWA சுட்டிக்காட்டியுள்ளது. விவசாயத் துறையில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வரம்பு உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கிடைக்கும் கடனில் சுமார் 60% தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள் (MFIs) மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடமிருந்து அதிக வட்டிக்கு பெறப்படுவதால், இது பெண்களை மேன்மேலும் கடனாளியாக்கும் என்று AIDWA எச்சரித்துள்ளது.

இந்த அரசின் கார்ப்பரேட் ஆதரவு திட்டங்கள், பெரும்பணக்காரர்களுக்குச் சாதகமான திட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட AIDWA போராட்டங்களை நடத்தும் என்று அறிவித்துள்ளதோடு, உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொதுச் சேவைகளுக்காக அரசாங்கம் செலவு செய்வதை அதிகரிக்கக் கோரி தொடர்ந்து போராடும் என்றும் அறிவித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, அரசு நடுத்தர வர்க்கத்தினருக்குச் சில சலுகைகளை அறிவித்திருக்கிறது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) குற்றம் சாட்டியுள்ள. ஆனால், சாதாரண உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களின் மீதுள்ள வரிகள் குறைக்கப்படாததால் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது.

விஜயன் (தமிழில்)

https://www.newsclick.in/disappointing-budget-employment-crisis-faced-women-youth-ignored-aidwa