கேரளாவிலும் அமல்படுத்தப்படும் ஹிஜாப் தடை

ஹிஜாப் தடையின் பெயரில் பள்ளிகளில் இருந்து மாணவிகள் விரட்டியடிக்கப்படும் அவலங்களை கண்டுகொள்ளாத கேரள சிபிஎம் அரசு

கேரளாவிலும் அமல்படுத்தப்படும் ஹிஜாப் தடை

கேரளா: அம்மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க பள்ளியில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதையடுத்து முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன

அப்போஸ்தலிக் கார்மல் தென் மாகாணம் என்ற சபையால் நடத்தப்படும் கோழிக்கோடு பள்ளியும் பள்ளி வளாகத்தில் ஹிஜாபை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

9 அக்டோபர் 2022

 

கேரளாவில் உள்ள கத்தோலிக்க பள்ளிகளுக்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 26 செப்டம்பர் 2022 திங்கட்கிழமை, கோழிக்கோட்டில் உள்ள பிரொவிடன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நிறுவனத்தில் முக்காடு அணிவதைத் தடைசெய்ததால் முஸ்லீம் இளைஞர் கூட்டமைப்பு (MYL), முஸ்லீம் மாணவர் கூட்டமைப்பு (MSF), மற்றும் மாணவர்கள் இஸ்லாமிய அமைப்பு (SIO) போன்றவை எதிர்ப்புத் தெரிவித்தன.

 

கேரளாவில் ஹிஜாபை தங்கள் வளாகத்தில் தடை செய்த இரண்டாவது கத்தோலிக்க பள்ளி இதுவாகும். அப்போஸ்தலிக் கார்மல் தென் மாகாணம் என்ற சபையால் நடத்தப்படும் கோழிக்கோடு பள்ளியும் ஹிஜாபை தடை செய்தது. அதற்கெதிராகவும் 26 ஆகஸ்ட் 2022ல் முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

பிரொவிடன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, சீருடையில் இல்லாததால் தலையில் முக்காடு போட முடியாது என பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். பள்ளி அதன் விதிகளில் உறுதியாக இருந்ததால், அம்மாணவி மாற்றுச் சான்றிதழை பெற்று பள்ளியிலிருந்து வெளியேறினார்.

 

இந்த சம்பவத்திற்குப் பிறகு முஸ்லீம் இளைஞர் கூட்டமைப்பு (MYL) ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “இப்போது அந்த பள்ளியிலிருந்து மாணவி மாற்றுச் சான்றிதழ் பெற்றுள்ளார். இது அவரது அடிப்படை உரிமையை மீறுவதாகும். இதுபோன்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மாநில அரசு செயல்படாமல் இருப்பதை ஏற்க முடியாது.

 

செப்டம்பர் 26, 2022 அன்று, எதிர்ப்பு தெரிவித்த முஸ்லீம் அமைப்புகள் பெரும் எண்ணிக்கையில் தெருக்களில் இறங்கி பள்ளிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். கும்பலை கலைக்க போலீசார் பலத்தை பயன்படுத்த வேண்டியதாயிற்று. போராட்டக்காரர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர்.

 

ஆகஸ்ட் 2022ல் கோழிக்கோட்டில் நடந்த இதுபோன்ற மற்றொரு சம்பவத்தில், 11ஆம் வகுப்பில் சேர விரும்பும் ஒரு பெண்ணின் பெற்றோர் மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டியிடம் புகார் அளித்தனர். 2022 ஆகஸ்ட் 23 ஆம் தேதி அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளுக்கு ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்படுவதாக அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இப்பள்ளியும் கத்தோலிக்கர்களால் நடத்தப்படுகிறது. அப்போஸ்தலிக் கார்மல் தென் மாகாண சபை, பள்ளியின் நிர்வாகக் குழுவின் மீது ஆளுமை செலுத்துகிறது. வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2022 அன்று, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உட்பட பல முஸ்லிம் அமைப்புகள் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தன, இதன் விளைவாக பள்ளிக்கு வெளியே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவத்தை கட்டுப்படுத்த போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

தொடர்புடையவை: ஹிஜாப் தடை: பகுதி-1 இசுலாமியப் பெண்களின் கல்வி உரிமையை மறுக்கும் இந்துத்துவப் பாசிசம்

ஹிஜாப் தடை: பகுதி-2 இசுலாமியப் பெண்களின் கல்வி உரிமையை மறுக்கும் இந்துத்துவப் பாசிசம்

செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தந்தை, “இது தனி மனிதனின் மதச் சுதந்திரத்துக்கும், மதச்சார்பற்ற அரசமைப்புக்கும் எதிரானது. பள்ளிச் சீருடை அரைப் பாவாடை மற்றும் கோட்டுடன் கூடிய மேலாடை. ஆண் ஆசிரியர்களும் இருப்பதால் இது பெண் மாணவர்களை அசௌகரியத்திற்கு ஆளாக்குகிறது. ஆனால் பள்ளி சீருடையை கடைப்பிடிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் ஹிஜாப் அணிய அனுமதி வேண்டும்.

 

அவர் மேலும் கூறுகையில், “எனது மகளை ஹிஜாப் அணிய வேண்டாம் என்று பள்ளி முதல்வர் கேட்டுக் கொண்டார். சால்வை (துப்பட்டா) கூட பள்ளியில் அனுமதிக்கப்படவில்லை. சால்வை அணிய அனுமதி இல்லை என்பதால் ஹிஜாப் அணியக் கூடாதா என்று நான் மீண்டும் மீண்டும் பள்ளி முதல்வரிடம் கேட்டேன். இறுதியாக, அவர் ஹிஜாப் அனுமதிக்கப்படுவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார். இது கேரளா போன்ற மாநிலத்தில் தனி மனிதனின் மத சுதந்திரத்தை கேள்விக்குறியாக்குகிறது. எனவே, அமைச்சரிடம் புகார் அளித்துள்ளேன்,'' என்றார்.

 

பள்ளி முதல்வர் சில்வி கூறுகையில், பள்ளியின் விதிமுறைகளில் மாற்றம் இல்லை. “பள்ளியின்  விதிகளை அவர்களிடம் (தந்தை, மகளிடம்)  எடுத்துக் கூறியுள்ளோம். பள்ளியிலிருந்து டி.சி வாங்கிக்கொண்டு தேவையெனில் வெளியேறலாம். இந்தப் பள்ளியில் இதுவே பொதுவிதியாகும்” என்று சில்வி தெரிவித்தார்.

 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளில், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாணவர் பிரிவாகும். மாணவர் இஸ்லாமிய அமைப்பு, ஜமாத்-இ-இஸ்லாமி-ஹிந்தின் மாணவர் பிரிவாகும். 28 செப்டம்பர் 2022 அன்று இந்திய அரசாங்கத்தால் PFI மற்றும் அதன் அனைத்து அமைப்புகளும் தடை செய்யப்பட்டன.

- வெண்பா

(தமிழில்)

மூலக்கட்டுரை : opindia.com