லடாக்கில் ஊரடங்கு - பாஜக தலைமையகம் சூறையாடப்பட்டது
தி வயர் - தமிழில்: வெண்பா

லடாக்: சிறப்பு அரசியலமைப்புப் பாதுகாப்புகளைக் கோரிப் போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதியதால் ஊரடங்கு - பாஜக தலைமையகம் சூறையாடப்பட்டது
2019-ல் லடாக் யூனியன் பிரதேசமாகத் தரம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த எல்லைப் பகுதிக்குச் சிறப்பு அரசியலமைப்புப் பாதுகாப்புகளை வழங்கக் கோரி, இன்று (செப்டம்பர் 24) லே-வில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர்; அப்போது பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைமையகம் சூறையாடப்பட்டது.
லே மாவட்ட ஆட்சியர் ரொமில் சிங் டோன்க் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்.
லே-வில் உள்ள லடாக் தன்னாட்சி மலையக வளர்ச்சிக் குழுவின் (LAHDC) செயலகத்திற்கு வெளியே அவ்வப்போது நடைபெற்ற சிறிய ஆர்ப்பாட்டம் கட்டுப்பாட்டை மீறிப் பெரிய போராட்டமாக மாறியதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் லே-வின் தெருக்களில் குவிந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
2020-ல் நடைபெற்ற கவுன்சில் தேர்தலில் மொத்தமுள்ள 26 இடங்களில் 15 இடங்களை வென்று, பாஜக LAHDC-யை ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் புதிய கவுன்சில் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் லே-வின் சில பகுதிகளில் கடும் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர், காவல்துறை வாகனம் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இந்த மோதலில் யார் யாருக்கு என்னென்ன காயங்கள் ஏற்பட்டதென்பது உடனடியாகத் தெரியவில்லை.
லடாக் தலைவர்கள், லடாக்கின் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது, அதனை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்ப்பது, நிலம் - வேலைவாய்ப்பு தொடர்பான பிற உத்தரவாதங்கள் ஆகியவற்றை வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை ஆராய்வதற்காக, மத்திய அரசு 2023-ல் ஒரு உயர் மட்டக் குழுவை (HPC) அமைத்தது.
இருப்பினும், லடாக் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாததால், சீனாவை ஒட்டியுள்ள இந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், பாஜகவுக்கும் மோடி அரசுக்கும் எதிராகப் பரவலான அதிருப்தி நிலவி வருகிறது.
2019-ல் ஜம்மு-காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டதிலிருந்து லடாக்கில் உருவாகி வந்த கோபம், புதன்கிழமை வீதிகளில் வெளிப்பட்டது. லே-வில் உள்ள பாஜக தலைமையகத்தை ஆத்திரமடைந்த கும்பல் கைப்பற்றியபோது, கட்சியின் நிர்வாகிகள் நூலிழையில் தப்பினர்.
தி வயர் செய்தி நிறுவனம் சரிபார்த்த ஒரு காணொளியில், இளைஞர் ஒருவர் லே-வில் உள்ள பாஜக-வின் மூன்று மாடிக் கட்டிடத்தில் இருந்த கட்சிக் கொடியை அகற்றித் தரையில் வீசி எறிவது தெரிகிறது. இருப்பினும், அந்தக் காணொளியில், போராட்டக்காரர் காவிக் கொடிக்கு அருகில் பறக்கவிடப்பட்டிருந்த தேசியக் கொடியைத் தொடாமல் விட்டுச் செல்வது பதிவாகியுள்ளது.
"இளைஞர்கள் குழு ஒன்று லே-வில் உள்ள என்.டி.எஸ் மைதானத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தப் போராட்டம் வெடித்தது. விரைவில், பாதுகாப்புப் படையினர் மீது கடுமையான கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டு, குழப்பம் ஏற்பட்டது. ஓரிடத்தில், இளைஞர்களால் சூழப்பட்ட காவல்துறை வாகனம் நூலிழையில் தப்பியது, மற்றொன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டது," என்று பெயர் வெளியிட விரும்பாத ஒருவர்கூறினார்.
லே-வில் உள்ள என்.டி.எஸ் மைதானத்தில் 15 நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் காலநிலை ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், ஒரு காணொளிச் செய்தியை வெளியிட்டார். அதில், இந்தப் போராட்டத்தை "சமூக அமைதியின்மை" என்று குறிப்பிட்ட அவர், அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
தன்னுடன் உண்ணாவிரதம் இருந்த இரண்டு பேர் உடல்நிலை மோசமடைந்து செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இது பொதுமக்களிடையே கோபத்தை மூட்டியதால் புதன்கிழமை லடாக்கில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டதாகவும் வாங்சுக் கூறினார்.
"ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெளியே வந்தனர். போராட்டக்காரர்கள் எங்கள் ஆதரவாளர்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த லடாக்கும் எங்கள் கோரிக்கையை ஆதரிக்கிறது. இது ஒரு ஜென்-Z புரட்சி; அதுவே அவர்களை வீதிகளுக்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்கள் வேலையின்றி உள்ளனர். எங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்க சில காரணங்கள் உருவாக்கப்படுகின்றன. இது சமூக அமைதியின்மைக்கு சரியான எடுத்துக்காட்டாகும்," என்று கூறிய அவர், சில அரசு கட்டிடங்கள் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் போராட்டக்காரர்களால் குறிவைக்கப்பட்ட வன்முறையைக் கண்டித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும், உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ள மற்றவர்களுக்கும் ஆதரவு தெரிவிக்க புதன்கிழமை காலை முதல் ஏராளமான மக்கள் போராட்டம் நடைபெறும் இடத்தில் கூடியதால் குழப்பம் ஏற்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், வாங்சுக்கின் போராட்டத் தளத்தில் இருந்து எந்தவித மோதல் சம்பவங்களும் பதிவாகவில்லை.
"லே-வில் நடப்பது துரதிர்ஷ்டவசமானது. ஒரு காலத்தில் அமைதியாக இருந்த லடாக், அரசின் தோல்வியுற்ற யூனியன் பிரதேச கொள்கையால் இப்போது விரக்தியிலும் பாதுகாப்பின்மையிலும் சிக்கியுள்ளது. இதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சாரும் – பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி, விவேகத்துடன் செயல்பட்டு, லடாக்கின் மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணைக்கான கோரிக்கையை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். மேலும், மக்கள் அமைதியாகவும் உறுதியாகவும் இருக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று கார்கிலைச் சேர்ந்த ஆர்வலர் சஜ்ஜாத் ஹுசைன் 'X' சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சட்டம்-ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளதால், லடாக் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தாவின் கார்கில் பயணம் செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், வரவிருக்கும் லடாக் திருவிழாவும் "பாதுகாப்பு காரணங்களுக்காக" ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், லே உயர் அமைப்புடன் இணைந்து மத்திய அரசின் உயர் மட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி, வியாழக்கிழமை மாகாணம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
வாங்சுக்குடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் உயர் மட்டக் குழுவின் கூட்டத்தை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று இந்த இரண்டு குழுக்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://thewire.in/government/protesters-demanding-statehood-for-ladakh-clash-with-police-bjp-headquarter-in-leh-vandalised
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு