மோடியின் 24 ஆண்டுகால வளர்ச்சி: அதிகார குவிப்பும் கட்டமைப்புகளின் சிதைவும்
தமிழில்: வெண்பா
பிரச்சாரகர் முதல் முதலமைச்சர் வரை
நரேந்திர மோடியின் கடந்த 24 ஆண்டுகால அரசியல் பயணம், 2001 அக்டோபர் 8 அன்று அவர் குஜராத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டது முதல் தொடங்கி, துணிச்சலான உத்திகள், பலியிடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதொரு லட்சியக் காவியத்தைப் போல விளங்குகிறது. பாரதீய ஜனதா கட்சிக்கு (BJP) அனுப்பப்படுவதற்கு முன், தனது வாழ்நாளில் பாதிக்கு மேல் ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராகக் கழித்த அவர், ஒரு பஞ்சாயத்துத் தேர்தலில்கூட போட்டியிடாமல் நேரடியாகத் தேர்தல் அதிகாரத்தைப் பெற்றார். குஜராத் மாநிலத்திற்குள் நிலவிய பாஜக பூசல்களுக்கு மத்தியில் அவர் திடீரென உயர்த்தப்பட்டது, அவருக்கு செல்வாக்கு மிகக் குறைவாக இருந்தபோதிலும், போட்டியை தக்கவைக்க கொண்டுவரப்பட்ட "நைட் வாட்ச்மேன்" பாத்திரத்தை அவருக்கு வழங்கியது.
கோத்ரா கலவரங்கள் மற்றும் “இந்துக்களின் இதயச் சக்கரவர்த்தி”
அரசியலமைப்பு ரீதியாக ஆறு மாதங்களுக்குள் சட்டமன்றத்தில் நுழைய வேண்டிய கட்டாயம் இருந்ததால், அவர் ஆரம்பத்தில் அமைச்சர் ஹரேன் பாண்டியா வைத்திருந்த எல்லிஸ்பிரிட்ஜ் தொகுதியை குறிவைத்தார். ஆனால், அவர் அந்தத் தொகுதியை காலி செய்ய மறுத்ததானது, அக்காலத்தில் குஜராத் அரசியலில் மோடிக்கு உறுதியான அடித்தளம் இல்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது. எண்ணிக்கையில் சிறிய டெலி சாதியைச் சேர்ந்தவராகவும், குறிப்பிடத்தக்க சாதனைகள் இல்லாதவராகவும் இருந்ததால், 2001–02 இல் அவரால் மாநிலத்தில் எங்கிருந்தும் எளிதில் வெற்றிபெற முடியும் என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை.
2001 அக்டோபர் 7 அன்று அவர் பதவியேற்ற 150 நாட்களுக்குள், 2002 பிப்ரவரி 27 அன்று கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் அதைத் தொடர்ந்து மாநிலம் தழுவிய வன்முறையும் நிகழ்ந்தன. இந்த நிகழ்வுகள், மோடியின் பிம்பத்தை நிலைநிறுத்த அரசியல் ஆயுதமாக்கப்பட்டன. அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பகிரங்கமாக “ராஜதர்மத்தைப்” பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஆனால் மோடி, அதைத்தான் செய்வதாக பதிலளித்தார். "56 அங்குல மார்பு" என்ற அதீத ஆணாதிக்கப் பிம்பத்தையும், தொடர்ச்சியாக மூன்று முறை முதலமைச்சராகப் பதவியைப் பாதுகாக்க "இந்துக்களின் இதயச் சக்கரவர்த்தி" (Hindu Hriday Samrat) என்ற பட்டத்தையும் இணைத்துக் கொண்டார்.
இஷ்ரத் ஜஹான், சொராபுதீன் ஷேக், கவுசர் பீ மற்றும் துளசி பிரஜாபதி போன்றோரின் போலி என்கவுன்டர் (fake encounter) வழக்குகள், வலிமையான பாதுகாப்பு என்ற பரவான கட்டுக்கதைகளின் பகுதியாக மாறின. இதற்கிடையில், சிறையில் இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி டி.ஜி. வன்சாரா தனது ராஜினாமா கடிதத்தில், இதுபோன்ற நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்ட கொள்கைகளை குஜராத் அரசே உருவாக்கி கண்காணித்து வந்ததாகக் குற்றம் சாட்டினார். பல விசாரணைகள் மற்றும் எழுத்துக்களால் ஆவணப்படுத்தப்பட்ட 2002 வன்முறைக்கான தண்டனை விலக்குடன் (impunity) இந்த நிகழ்வுகள் இணைந்தபோது, பெரும்பான்மைத் திரட்சியானது அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு மேலானது என்ற அரசியலுக்கான அடித்தளத்தை அமைத்தது.
பெருநிறுவனத் தொடர்பும் சொத்து மாற்றங்களும்
இந்த அரசியல் திரட்சிக்கு இணையாக, மோடியின் குஜராத் மாடல், குறிப்பிட்ட சில பெருநிறுவனங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருந்தது. அம்பானி, டாடா, குறிப்பாக கௌதம் அதானியின் குழுமங்களுக்கான திட்டங்களை விரைவுபடுத்த விதிகள் திருத்தப்பட்டன என்று விமர்சகர்கள் வாதிட்டனர். கண்ட்லா துறைமுகத்தினை (இப்போது தீன்தயாள் துறைமுகம்) அதானியிடம் ஆரம்பத்திலேயே ஒப்படைத்தது. சொற்ப விலைக்கு விற்கப்பட்டு தனியார்மயமாக்கலின் பரந்த வீச்சுக்கான அடையாளமாக அது மாறியது. தொடர்ந்து பொதுச் சொத்துக்களும் இயற்கை வளங்களும் படிப்படியாகத் தனியார் கைகளுக்கு மாற்றப்பட்டன.
பொதுத்துறை வங்கிகள், எல்ஐசி போன்றவை கார்ப்பரேட் கடன்கள் ரத்து செய்யப்பட்டபோது மோசமான நிதி நெருக்கடிக்குள்ளாகின. நேர்மாறாக சிறிய கடனாளிகள் கடுமையாக நடத்தப்பட்டனர். துறைமுகங்கள் மற்றும் தொழில்துறை திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து பசுமைத் தீர்ப்பாயத்தின் அபராதங்களுக்குள்ளாகின. ஆனாலும், தங்களுக்கு விருப்பமான கார்ப்பரேட்களுக்கான கொள்கை மற்றும் அரசியல் ஆதரவுகள் தொடர்ந்தது. இந்த போக்குதான் ஹிண்டன்பர்க்–அதானி பிரச்சனையின் மூலம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.
2014 திருப்புமுனை: ஊடகங்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள்
2014 ஆம் ஆண்டளவில், பெரும் விளம்பரதாரர்களைச் சார்ந்திருந்த பெருநிறுவன ஊடகங்களால் ஊதி பெரிதாக்கப்பட்ட பிம்பத்தை மையப்படுத்திய தேர்தல் பிரச்சாரம், பாஜகவின் போட்டியை "மோடி Vs மற்றவர்கள்" என்ற போட்டியாக மாற்றியது. அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் கிரண் பேடி போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட அண்ணா ஹசாரே தலைமையிலான ஜன லோக்பால் போராட்டம், அப்போதைய ஆளும் ஆட்சியை மதிப்பிழக்கச் செய்து, ஊழல் எதிர்ப்பு மனநிலையை ஏற்கெனவே உருவாக்கியிருந்தது. அந்த பலன்களை "அனைவருக்கும் ஆதரவு, அனைவருக்கும் வளர்ச்சி" (Sabka Saath, Sabka Vikas) போன்ற முழக்கங்கள் மற்றும் "ஒரே ஒரு வாய்ப்பு" என்ற வேண்டுகோள் மூலம் திறமையாகத் தனதாக்கிக் கொண்டார் மோடி.
2013 இல் முசாபர்நகரில் நடந்த கலவரங்கள் மேற்கு உத்தரப் பிரதேசத்தைத் பாஜகவுக்கானதாக்கி கொள்ள உதவியது. அக்கலவரம் மாநிலத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் பாஜக மகத்தான வெற்றி பெற கணிசமாக பங்களித்தது. இதன் மூலம், 1984 க்குப் பிறகு மையத்தில் அக்கட்சி முதல் முறையாகத் தனிப்பெரும்பான்மையைப் பெற உதவியது. பதவியேற்றவுடன், மோடி திட்டக் குழுவை (Planning Commission) கலைத்ததோடு, பொருளாதாரத்தை மையப்படுத்தியதன் மூலம் தனிப்பட்ட அதிகார குவிப்பை வலியுறுத்தினார். வேலைகள் மற்றும் முறைசாரா துறைக்கு ஏற்படக்கூடிய சேதம் குறித்து பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கைகள் இருந்தாலும், அதையும் மீறி 2016 இல் பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏஜென்சிகள், தேர்தல்கள் மற்றும் மதபெரும்பான்மைவாதச் சட்டங்கள்
2014 க்குப் பிறகு, அமலாக்கத் துறை (ED) மற்றும் சிபிஐ போன்ற மத்திய அமைப்புகள், மட்டுமல்லாமல் தேர்தல் ஆணையம் உட்பட ஒழுங்குமுறை மற்றும் அரசியலமைப்பு அமைப்புகள், எதிர்க்கட்சித் தலைவர்களையும் அரசாங்கத்தின் விமர்சகர்களையும் இலக்கு வைத்துப் பாரபட்சமாகச் செயல்படுவதாகத் தொடர்ச்சியான விமர்சனத்திற்கு உள்ளாயின. புல்வாமா மற்றும் பாலகோட் வான்வழித் தாக்குதல்கள் 2019 தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக மாறின. பாலகோட்டில் பாகிஸ்தான் உயிரிழப்புகள் முதலில் கூறப்பட்டதை விட மிகக் குறைவாக இருந்தன என்று பிந்தைய அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவித்தபோதும், இந்த நிகழ்வு தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்பட்டது குறித்தும் கேள்விகள் எழுந்தன.
சரத்து 370 ரத்து, CAA–NRC சட்டங்கள் மற்றும் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட 2020 விவசாயச் சட்டங்கள் போன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள், அதிகாரத்தை குவிக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்தப் பாராளுமன்ற ஓட்டெடுப்பு கணக்குகளில் குறுக்குவழிகள் பயன்படுத்தப்படும் போக்கினை எடுத்துக்காட்டின. ஒரே நாடாளுமன்ற அமர்வில் 150க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் சஸ்பெண்ட் - அதைத் தொடர்ந்து முக்கியமான மசோதாக்களை விரைவாக நிறைவேற்றுதல் மற்றும் தேர்தல் ஆணையர்கள் போன்ற முக்கியஸ்தர்களுக்குப் புதிய பாதுகாப்புகள் வழங்குதல் போன்றவை ஒழுங்குமுறை நிறுவனங்களைக் கைப்பற்றி ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கின.
கோவிட், ஊரடங்குகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள்
மார்ச் 2020 இல் சில மணிநேரங்களுக்குள் அறிவிக்கப்பட்ட திடீர் தேசிய ஊரடங்கு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டதை ஒத்திருந்தது. இது பிரிவினைக்குப் (Partition) பிறகு மிகப் பெரிய உள்நாட்டுப் புலப்பெயர்வு போன்ற நெருக்கடியைத் தூண்டியது. இதன் விளைவாக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து தங்கள் கிராமங்களுக்குத் திரும்பினர். பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர் நல ஆராய்ச்சியாளர்கள் சிறிய தொழில்களின் சரிவு, மொத்தமான வேலை இழப்புகள், முறைசாரா பொருளாதாரத்தில் நீண்டகால சரிவுகள் ஆகியவற்றைப் பதிவு செய்துள்ளனர்.
அதே நேரத்தில், ரயில்வே, விமான நிலையங்கள், பாதுகாப்பு, சுரங்கம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் தனியார்மயமாக்கல் அதிகரிப்பையும், அரசின் முதலீட்டைத் திரும்பப் பெறுவதையும் (disinvestment) விரைவுபடுத்த இந்தக் கொள்ளைநோய் காலம் பயன்படுத்தப்பட்டது. இது அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்த ஒரு சில பெருநிறுவனக் குழுக்களின் ஆதிக்கத்தை மேலும் நிலைநிறுத்தியது. தொற்றுநோயின் ஆரம்பத்தில் குறிப்பாக தப்லீக் ஜமாத் போன்ற குழுக்களைக் இலக்கு வைத்து எடுக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் மூலம் முஸ்லிம்களைத் திரும்பத் திரும்பக் குற்றவாளிகளாக்கின.
குடியுரிமை, நீதித்துறை மற்றும் ராமர் கோயில்
நாடு முழுவதும் NRC நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான திட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நிறைவேற்றி, இந்தியாவின் குடியுரிமையை மதத்தை மையப்படுத்தி கட்டமைத்தது. இது முஸ்லிம்களை இலக்கு வைத்து அவர்களுக்கு வாக்குரிமையை மறுக்கும் அபாயத்தை உருவாக்கியது. அசாமின் லட்சக்கணக்கான மக்களில் முஸ்லிம்கள் விகிதாச்சார அளவில் அதிகமாக இருந்தனர், NRC செயல்முறைகளின் போது அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதிகாரத்துவம் நபர்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தப்பட்டதானது மக்களை அச்சத்தில் ஆழ்த்தின.
நீதித்துறையின் சுதந்திரம் குறித்த நம்பிக்கையும், சர்ச்சைக்குரிய நிகழ்வுகளின் தொடர் வரிசையால் ஆட்டம் கண்டுள்ளது. இதில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் மோசமான சட்டக் குறைபாடுகள் (legal infirmities) இருந்தாலும், சர்ச்சைக்குரிய நிலத்தை ராமர் கோயிலுக்காக ஒதுக்கிய 2019 அயோத்தி தீர்ப்பு, அதைத் தொடர்ந்து அப்போதைய தலைமை நீதிபதி ஓய்வு பெற்ற சிறிது காலத்திலேயே ராஜ்ய சபாவிற்குப் பரிந்துரைக்கப்பட்டது ஆகியவை நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியது. ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை, ராமர் கோயில் திறப்பு என்பது மோடி சகாப்தத்தின் முதன்மையான சாதனையாகும். விமர்சகர்களைப் பொறுத்தவரை, இது அரசியலமைப்புச் சார்ந்த மதச்சார்பின்மைக்குப் பதிலாக, பல தசாப்தகாலமாக பெரும்பான்மைவாத அச்சுறுத்தலின் உச்சநிலையைக் குறிக்கிறது.
இராணுவமயமாக்கல், கலவரங்கள் மற்றும் "சர்க்காரி முஸ்லிம்"
ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஜமீர் உத்தீன் ஷா, தனது சுயசரிதை நூலான “தி சர்க்காரி முஸ்லிமன்” (The Sarkari Mussalman) இல், 2002 வன்முறையின் போது இராணுவப் பிரிவுகள் குஜராத்துக்குள் நுழைந்தன என்றும், ஆனால் மாநில நிர்வாகத்திடமிருந்து தளவாட ஆதரவைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதங்களால் அவை தடைபட்டன என்றும் விவரிக்கிறார். இவை, கலவரங்களின் முக்கியமான ஆரம்ப நாட்களில், அனைத்து குடிமக்களையும், குறிப்பாக சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் தனது கடமையை அரசு நிறைவேற்றியதா இல்லையா என்பது பற்றிய கேள்விகளைத் தூண்டுகின்றன.
மோடி, தேசியப் பாதுகாப்பு பற்றி அடிக்கடி பேசுவதும், விமர்சகர்கள் "இராணுவத்தின் நன்மதிப்பைக் குலைக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டுவதும், இது போன்ற சாட்சியங்களுடனும், 2020 டெல்லி கலவரங்கள் போன்ற பிந்தைய நிகழ்வுகளுடனும் ஒத்துப்போகின்றன. அந்தக் கலவரங்களின் போது காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் பதில்கள் பாரபட்சமானவையாக இருந்தன. சிறுபான்மைப் பிரமுகர்களை "சர்க்காரி" முஸ்லிம்களாகச் சித்தரிப்பதும், மாறுபட்ட குரல்களை இழிவுபடுத்துவதும் பெரும்பான்மைவாத அரசின் அரசியலைப் பிரதிபலிக்கிறது.
அதிகாரக் குவிப்பு, சிறுபான்மையினர் மற்றும் இந்தியா பற்றிய கருத்தாக்கம்
இந்த 24 ஆண்டுகளாக—குஜராத்தில் இருந்து பிரதமர் அலுவலகம் வரை—மோடியின் வளர்ச்சி, ஆழமடைந்து வரும் மதவாதத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. லவ் ஜிகாத், பசு பாதுகாப்பு, ஹிஜாப், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வக்பு சொத்துக்கள் போன்ற பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் தேர்தல் லாபத்திற்காகத் தூண்டப்படுகின்றன. இந்தச் சூழல், 200 மில்லியன் முஸ்லிம் மக்களின் பெரும் பிரிவினரிடையே பாதுகாப்பின்மையை வளர்த்துள்ளது. இருப்பினும், அத்தகைய சமூகங்களை மொத்தமாக வெளியேற்றுவது அல்லது அழிப்பது என்பது தார்மீக ரீதியாகத் தவறானதும் நடைமுறையில் சாத்தியமற்றதுமாகும் என்றும் வரலாறு காட்டுகிறது.
அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, கட்டமைப்பு சிதைவு, சிறுபான்மையினர் மற்றும் எதிர்ப்பாளர்களைத் திரும்பத் திரும்ப குறிவைத்தல் போன்றவற்றால் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியானது, 2014 ஆம் ஆண்டு செங்கோட்டையில் பேசப்பட்ட "டீம் இந்தியா" மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வாக்குறுதிக்கு எதிர்மறையாக உள்ளது. மாறாக நெருக்கமான நட்பு கும்பல்களின் வெற்றி மற்றும் பெரும்பான்மை மதவாத வெற்றி என்பதை அடிப்படையாகக் கொண்ட இந்தஸஆட்சி மக்களிடம் பீதியையே உருவாக்கியுள்ளது. முந்தைய தலைமுறையினர் போராடி உருவாக்கிய இந்தியாவின் பன்மைத்துவம் கொண்ட இந்திய அரசியலமைப்புக் கொள்கையை (plural, constitutional idea of India) இனி பாதுகாக்க முடியுமா என்ற அச்சத்தையும் கேள்வியையும் உருவாக்கியுள்ளதே மோடியின் இந்த 24 ஆண்டுகால சாதனையாகும்.
வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/12/narendra-modis-24-year-ascent-power-polarisation-and-the-erosion-of-institutions/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு