நீரியல் மேலாதிக்கம்: எல்லை தாண்டி ஓடும் நதிகளை இந்தியா ஆயுதமாக்குதல்
வெண்பா (தமிழில்)

நீண்டகாலமாக கங்கை நதிநீர் ஒப்பந்தத்திற்காக வங்காளதேசம் அழுத்தம் கொடுப்பதானது இந்தியாவின் மேல்மடை தந்திரங்களை மீண்டும் கூர்மையாகக் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது. நீர் பற்றாக்குறையும் காலநிலை பிரச்சனைகளும் அதிகரித்து வரும் ஒரு பிராந்தியத்தில், எல்லை தாண்டி ஓடும் நதிகள் மீதான கட்டுப்பாடு என்பது வெறும் வள மேலாண்மை சார்ந்த விஷயமாக இல்லாமல், அது புவிசார் அரசியல் செல்வாக்கிற்கான ஒரு கருவியாக மாறியுள்ளது. ஒப்பந்த விதிகளைப் மீறுவதற்கும், பிராந்திய மேலாதிக்கத்திற்கும், அரசியல் தந்திரங்களை மாற்றி அமைப்பதற்கும் இந்தியாவின் நீரியல் ஆதிக்கம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானின் சமீபத்திய அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றன. ஒரு காலத்தில் பகிரப்பட்டவைகளாக இருந்தவை, தற்போது தெற்காசியாவின் மாறிவரும் அதிகார போட்டியில் சர்ச்சைக்குரிய நீரோட்டங்களாக மாறியுள்ளன.
இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏப்ரல் 22 அன்று சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதமாகக் குறிப்பிட்டு, இரு நாடுகளுக்கும் இடையே 65 ஆண்டுகளாக இருந்த நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியது. இந்த ஒப்பந்தத்தின் இடைநிறுத்தம், பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை உருவாக்கியது, ஏனெனில் அங்கு விவசாயம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்டுள்ளது. மேலும், நாட்டின் நீர்ப்பாசனம், நீர்மின்சாரம், மின்சார விநியோகம், மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவை சிந்து நதிப் படுகையைதான் சார்ந்துள்ளன.
அதன் பின்னர், பருவமழைக்காலம் வந்தபோது, ஏற்பட்ட வெள்ளப்பேரழிவால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; நாற்பது இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தான் அதிகாரிகள், நதியின் மேல்மடை பகுதிகளில் இருந்து வரும் நீரோட்டத்தை இந்தியா கையாண்டதாக நேரடியாகக் குற்றம் சாட்டினர்; இந்திய அணைகளிலிருந்து வேண்டுமென்றே திறந்துவிடப்பட்ட நீர், பருவமழையின் தீவிரத்தை அதிகரித்து, இந்த பருவகாலத்தை பல நூறு உயிர்களைப் பலிகொண்ட பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்காக மாற்றியது என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும், நீரியல் மற்றும் காலநிலை வல்லுநர்கள் பரந்த கண்ணோட்டத்தில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்துகின்றனர்; நீர் அரசியல் ஓரளவு பங்கு வகிக்கக்கூடும் என்றாலும், காலநிலை மாற்றமானது முன்னெப்போதும் இல்லாத அளவு, பருவமழையைத் தீவிரப்படுத்தி, பிராந்தியத்தின் நீர் மேலாண்மை உள்கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்துவிட்டது என்றும் குறிப்பிடுகின்றனர்.
பாகிஸ்தான் வெளிப்படையான ஒப்பந்த இடைநிறுத்தத்தைச் சந்திக்கும் வேளையில், வங்காளதேசத்தின் நிலையும் அதே அளவு ஆபத்தானதாகவே உள்ளது; இது இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மேல்மடை பகுதிகளால் தொடர்ந்து பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. வங்காளதேசம் எல்லை தாண்டி வரும் 57 நதிகளால் வளம் பெறுகிறது, அவற்றில் 54 நதிகளை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்த நதிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உலகின் மிகப்பெரிய நதி அமைப்புகளில் ஒன்றான பரந்த கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா (GBM) படுகையை உருவாக்குகின்றன; இது 1.72 மில்லியன் சதுர கிலோமீட்டர் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து நீரை வங்காளதேசம் வழியாக வங்காள விரிகுடாவில் சேர்க்கிறது. இதன் விளைவாக, ஒரு கீழ்மடை நாடாக, வங்காளதேசம் இந்தியாவிலிருந்து பாயும் நீரினை அதிக அளவில் சார்ந்தும், அதனால் பாதிக்கப்படக்கூடிய நிலையிலும் உள்ளது; அதன் நதி நீரில் 90%-க்கும் மேல் வெளி மூலங்களிலிருந்தே வருகிறது. இந்த 54 நதிகளில், கங்கை நதி மீது மட்டுமே வங்காளதேசம் மற்றும் இந்தியாவிற்கு இடையே ஒரு நீண்டகால நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் உள்ளது. மேலும், கடந்த ஐம்பது ஆண்டுகளில் எல்லை தாண்டிய நதிகள் மீது இந்தியாவால் பல அணைகள் மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட்டிருப்பது, வங்காளதேசம் முறையான நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. அத்தகைய ஒப்பந்தங்கள் இல்லாத நிலையில், பருவமழைக்கால வெள்ளப்பெருக்கு மற்றும் கோடைக்கால நீர் பற்றாக்குறை ஆகிய இரட்டை அச்சுறுத்தல்களை குறைக்க, அந்த நாடு தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பருவ மாறுபாடுகளால் மட்டுமல்லாமல், இந்தியாவின் நீர் மேலாண்மை நடைமுறைகளாலும் (திட்டமிடப்பட்ட தலையீடுகளான அணைகள் கட்டுதல் மற்றும் நீர் திசைதிருப்பல் போன்றவை) நீர் பற்றாக்குறை மற்றும் வெள்ளப்பெருக்கு என்ற சிக்கலான சவால்களை எதிர்கொள்கின்றது.
இந்த நீண்டகால நீரியல் சார்புநிலை ஒரு சிக்கலான உறவை வடிவமைத்துள்ளது, மேலும் ஆகஸ்ட் 5, 2024 அன்று ஷேக் ஹசீனா ஆட்சியின் வீழ்ச்சி பதற்றங்களை அதிகரித்தது, இதனால் இருதரப்பு உறவுகள் வரலாற்றில் மிக மோசமான நிலையை அடைந்தது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிகழ்வுகளுக்குப் பிறகு, வங்காளதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. அந்நாட்டில் உள்ள பலரால், இந்தியா ஒரு கூட்டாளியாக இல்லாமல், மேலாதிக்கம் செலுத்தும் சக்தியாகவே பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த 15 ஆண்டுகளாக ஷேக் ஹசீனா அரசாங்கம் சட்டவிரோதமாக அதிகாரத்தில் நீடிக்க இந்தியாவின் புவிசார் அரசியல் ஆதரவே காரணம் என பல மக்கள் இந்திய அரசைக் குற்றம் சாட்டினர்.
ஹசீனா ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஆகஸ்ட் 2024-இல், தென்கிழக்கு வங்காளதேசத்தில் ஏற்பட்ட பரவலான வெள்ளப்பெருக்கு 11 மாவட்டங்களில் 5.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கடுமையாகப் பாதித்தது. செப்டம்பர் 3, 2024 அன்று தேசிய பேரிடர் பதிலளிப்பு ஒருங்கிணைப்பு மையம் (NDRCC) வெளியிட்ட ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கை, இந்த பேரழிவில் 71 பேர் உயிரிழந்ததாகக் கூறுகிறது, இதில் 45 ஆண்கள், 7 பெண்கள், மற்றும் 19 குழந்தைகள் அடங்குவர். முன்னறிவிப்பின்றி அணையின் மதகுகளைத் திறந்ததாக இந்தியா மீது வங்காளதேசம் குற்றம் சாட்டியது. வங்காளதேசத்தின் இடைக்கால அரசும் அரசியல் கட்டமைப்பும் இந்த வெள்ளப்பெருக்குக்கு இந்தியாவே காரணம் என அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர் போராட்டங்களைத் தூண்டியது, அங்குப் போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
எல்லை தாண்டிய வளங்களுக்கான சர்வதேச நதிநீர்ச் சட்டம் சில அடிப்படைக் கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகிறது: சமமான மற்றும் நியாயமான பயன்பாடு அனைத்து கரையோர நாடுகளுக்கும் இடையே பகிரப்பட்ட மற்றும் நியாயமான நீர் பயன்பாட்டை உறுதி செய்கிறது; குறிப்பிடத்தக்கத் தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற கடப்பாடு, சக-கரையோர நாடுகளுக்கு கணிசமான சேதத்தைத் தடுப்பதை அவசியமாக்குகிறது; பகிரப்பட்ட நீரைப் பாதிக்கக்கூடிய திட்டங்கள் குறித்துத் தெரிவிப்பதற்கும் கலந்தாலோசிப்பதற்கும் முன்னறிவிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவின் நடவடிக்கைகள் சர்வதேச நதிநீர்ச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதலைப் பிரதிபலிக்கின்றன. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக இடைநிறுத்தியதன் மூலம், இந்தியா நன்னம்பிக்கை அடிப்படையிலான ஒத்துழைப்பு என்ற அடிப்படைக் கொள்கையை மீறியுள்ளது, மேலும் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை ஸ்திரத்தன்மைக்கான அடித்தளமாகக் கருதாமல், அதை ஓர் அரசியல் கருவியாகக் கையாண்டுள்ளது.
பருவமழைக்காலத்தில் வேண்டுமென்றே நீரைத் திறந்து விடுவது அல்லது வங்காளதேசத்திற்கு எச்சரிக்கை செய்யத் தவறுவது — என நீரோட்டங்களை இந்தியா கையாண்ட நடவடிக்கைகள், குறிப்பிடத்தக்கத் தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற அடிப்படைக் கடப்பாட்டை மீறுகின்றன. இது பகிரப்பட்ட நதிகளைத் தண்டனைக் கருவிகளாக மாற்றுகிறது. மேலும், இந்தியாவின் மேல்மடை உள்கட்டமைப்பு மீதான கட்டுப்பாடு, வங்காளதேசத்தின் சமமான மற்றும் நியாயமான பயன்பாட்டிற்கான உரிமையை மறுக்கிறது, இதனால் ஒரே சக்தியால் நிர்ணயிக்கப்படும் பற்றாக்குறை மற்றும் வெள்ளப்பெருக்கு என்ற சுழற்சி உருவாகிறது. நீரைத் திறந்துவிடும் முன் முன்னறிவிப்பு இல்லாதது, இந்த சட்டக் கடமையையும் கீழ்மடை நாடுகளின் பாதுகாப்பையும் வெளிப்படையாகப் புறக்கணிப்பதற்கு ஓர் உதாரணமாகும்.
இது பகிரப்பட்ட வளங்களை நிர்வகிக்கும் சட்டக் கட்டமைப்பை அச்சுறுத்துவதோடு வளம் சார்ந்த மோதல்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கைகள் தெற்காசிய புவிசார் அரசியலில் ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கின்றன. நீரை ஆயுதமாக்குதல் என்பது, ஒத்துழைப்பிலிருந்து நீரியல் மோதல்களுக்கு பிராந்தியத்தை நகர்த்துகிறது. இது பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை மட்டுமல்ல, பகிரப்பட்ட வளங்களை நிர்வகிக்கும் சர்வதேச சட்டத்தின் அடித்தளங்களையும் அச்சுறுத்துகிறது. நீர் மோதல்கள், எதிர்காலத்தில் நடக்கவிருப்பது அல்ல; அவை இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை உலகம் உணர வேண்டும். சமமான பங்கீடு, வெளிப்படைத்தன்மை இல்லாததால், ஏற்கனவே நிலையற்று இருக்கும் தெற்காசியாவின் அரசியலானது வளம் சார்ந்த மோதல் எனும் அலையில் மூழ்கும் அபாயம் உள்ளது.
(எம்.டி. தாரிகுல் இஸ்லாம் தன்வீர் - ஷஃபி எம்.டி. முஸ்தோஃபா)
- வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/09/the-hydraulic-hegemon-indias-weaponization-of-transboundary-rivers/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு