ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும் மோடி அரசு

செந்தளம் செய்திப்பிரிவு

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும் மோடி அரசு

ரேசன் முறையை ஒழிக்கவிருக்கும் ‘ஒரே நாடு ஒரே ரேசன்’ திட்டத்தை முடுக்கிவிட்டுள்ளது மத்திய அரசு. சமூக நலத்திட்டங்களுக்கு படிப்படியாக மூடுவிழா நடத்தி வரும் மோடி அரசு ”ஒரே நாடு, ஒரே……... இத்தியாதி இத்தியாதி….” என்ற பல்வேறு பெயர்களில் புதிய காலனிய ஆதிக்கத்திற்கான திட்டங்களை நாடு முழுவதும் தீவிரமாக்குகிறது. நியாய விலைகடைகளின் மீதான மாநில உரிமைகளை அநியாயமாக பறித்து வருகிறது. அதற்கான ஏற்பாடுகளுக்கு நிதியை ஒதுக்கியுள்ளது குறித்தே இத்தகவல் நமக்கு தெரிவிக்கிறது.

நேற்று (14.12.2022) மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பின்வருமாறு தெரிவித்துள்ளார்:    

”ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் புலம் பெயர்ந்தவர்கள் உள்பட அனைத்து பயனாளர்களும் தங்களது மாதாந்திர உணவு தானியங்களை தற்போதைய ரேஷன் அட்டை அல்லது பயோ மெட்ரிக் அங்கீகாரத்துடனான ஆதார் எண்ணை பயன்படுத்தி நாட்டில் எங்கும் உள்ள நியாய விலைக்கடைகளில் வாங்க முடியும். 

ஒருங்கிணைந்த பொது விநியோக மேலாண்மை முறையில் ஏப்ரல் 2018ஆம் ஆண்டு ரூ.127.3 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம் மார்ச் 31, 2023ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2020-21, 2021-22 மற்றும் 2022-23 ஆகிய 3 நிதியாண்டுகளின் போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், தேசிய தகவல் மையங்கள், தேசிய தகவல் மையசேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ரூ.46.86 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் சராசரியாக 3.5 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை மொத்தம் 93.31 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 167 பண்பலை வானொலி மற்றும் 91 சமுதாய வானொலி நிலையங்கள், ரயில் நிலையங்களில் ஒலி-ஒளி காட்சி, நியாயவிலைக் கடைகள் மற்றும் வெளியிடங்களில் பதாகைகள் உள்ளிட்டவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 13 மொழிகளில் இடம் பெற்றுள்ள ‘மேரா ரேஷன்’ என்ற செயலியை இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து கண்டுள்ளனர்”

என்று தெரிவித்துள்ளார்.

- செந்தளம் செய்திப் பிரிவு