அதானிக்கு ஈனத்தனமான கொத்தடிமை சேவகம் செய்வதில் “இணைபிரியா இரட்டையர்களாக” மாறி நிற்கும் சிபிஎம், பாஜக!
பி ஜே ஜேம்ஸ்
முன்னுரை
இந்த வரியை எழுதும் தருணத்தில், ஆதானிக்கு ஆதரவாக பாஜக–சிபிஎம் இடையில் நடந்த கூட்டு சந்திப்பிற்கு பிறகு, சிபிஎம் தலைமையிலான கேரள அரசாங்கம் விழிஞ்சம் பகுதியில் மத்திய துணை இராணுவப் படையினரை குவிப்பதற்கு அனுமதியளித்திருப்பதாக கேரள உயர் நீதிமன்றத்தில் வந்து உறுதிபடுத்தியுள்ளது. நிகழ்நேரத்தில் பெருங்கோடீஸ்வரர்களின் பட்டியலை வழங்கி வரும் போர்ப்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட்டாக, உலகின் மூன்றாவது பெருங்கோடிஸ்வரராக இருக்கும் அதானியின் கார்ப்பரேட் நலன்களை பாதுகாப்பதற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த நன்கரை மாதங்களாக, அதானியின் கார்ப்பரேட் இராஜ்ஜியத்திற்கு எதிராக விழிஞ்சம் பகுதியில் அமையவிருக்கும் சுற்றுச்சூழலை பாதிக்கும், சமூகத்தை சீர்குலைக்கும், பொருளாதார ரீதியில் பயன்தரவியலாத துறைமுகத் திட்டத்தை எதிர்த்து வீரியமிக்க போராட்டம் நடந்து வருகிறது. கேரளாவில் பெரிதும் ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட மீனவ மக்களின் வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும் வேரோடு அழிப்பதற்கு விழிஞ்சம் துறைமுக திட்டம் வழிவகுக்கிறது. சமரசமின்றி நடந்து வரும் போராட்டத்தில், கிட்டத்திட்ட 3,000க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிபிஎம் ஆட்சி எஞ்சியிருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, வழக்கப்படி கார்ப்பேரட்–காவி சக்திகளின் நலன்களை தாங்கி பிடிப்பதென்பது புதியதொன்றுமல்ல. 2021 வரை பினராயி விஜயன் தலைமையில் நடந்த முந்தைய ஐந்தாண்டு கால ஆட்சியில் 145 UAPA வழக்குகளை பதிவு செய்ததன் மூலம் மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமை(NIA) மாநிலத்திற்குள் நுழைவதற்கு ஏற்கனவே பாதையமைத்து கொடுத்திருந்தது. அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய புலனாய்வு முகமையை கட்டமைக்க வேண்டும் என்பதற்காகவும், மையப்படுத்தப்பட்ட ஒற்றை காவல் முறையை கொண்டு வருவது குறித்து பேசுவதற்காகவும் கடந்த அக்டோபர் 2022ல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் ‘சிந்தனை முகாம்/அமர்வு’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்துறை/காவல்துறை இலாக்காவையும் தங்கள் பொறுப்பில் வைத்துளள எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து முதலமைச்சர்களும் புறக்கணித்திருந்தனர்; பாஜகவை விட இந்துத்துவ கொள்கைகளை அதீத அர்ப்பணிப்போடு வெளிப்படையாக உரிமை கொண்டாடி வரும் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் எதிர்கட்சியாக இருந்தபோதும் பங்கேற்றிருந்தார். அதேபோல், கேரள சிபிஎம் முதல்வர் பினராயி விஜயன் இந்நிகழ்வில் பங்கேற்றிருப்பது மறைக்க முடியாத வகையில் சிபிஎம் கட்சியின் நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
என்னதான் வெட்கக்கேடான முறையில் மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழந்திருந்த போதிலும், மீண்டு வர முடியாதளவிற்கு புதிய தாராளயமய பாதையில் நெடுந்தூரம் சென்றுவிட்ட பிறகு, 2021 கேரள சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்த பிறகு எந்தப் படிப்பினையையும் கற்பதற்கு சிபிஎம் கட்சியால் முடியாது, முடியவில்லை என்பது தெரிகிறது. புதிய தாராளமய கார்ப்பரேட் மயமாக்கல் கொள்கைகளை தீவிரப்படுத்திய காரணத்தால், ஒட்டுண்ணி முதலாளித்துவ வாதிகளும், பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு முதலீட்டு ஆலோசனை வழங்கும் நிறுவனங்களும் முதலமைச்சர் அலுவலகம் வரைகூட ஊடுருவுவியுள்ளார்கள்; அதன் விளைவாக, 2016–21 வரையிலான பினராயி விஜயனின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்தன. காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சியினரின் அமைப்பு சார்ந்த பலவீனங்களை பயன்படுத்திக் கொண்டு, “காங்கிரஸ் இல்லா இந்தியா” என்ற பாஜக/ஆர்.எஸ்.எஸ்.--ன் முழக்கத்தை தாங்கிப் பிடிக்கும் இந்துத்துவ சக்திகளின் பேராதரவுடனும், கார்ப்பரேட் ஊடகங்களின் முழுநிறைவான பலத்துடனும் போட்டியிட்டதால் இரண்டாவது முறையும் மிகப் பெரும் பெரும்பான்மையுடன் சிபிஎம் கட்சி ஆட்சியை பிடிப்பதற்கு எளிதாக உதவியது. முதலமைச்சராக பதவியேற்றவுடன், கார்ப்பரேட்கள் “தொழில் செய்வதற்கு உகந்த” மாநிலமாக கேரளாவை மாற்றும் நிலைப்பாட்டில் தனது அரசாங்கம் பற்றுறுதியோடு இருப்பதால் நிலுவையிலுள்ள வேலைகள், குறிப்பாக, தொழிலாளர் இயக்கங்கள், சூழலியல் இயக்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் நிச்சயமாக முடிவுக்கு கொண்டுவரப்படும் என்பதை பினராயி விஜயன் அரசாங்கம் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவுபடுத்தியது; பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுடனும், PwC, KPMG போன்ற முதலீட்டு ஆலோசனை வழங்கும் நிறுவனங்களுடனும் முன்புவிட அதிக ஆழமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு தனது இரண்டாவது ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்தத் தடையும் இருக்காது என்பதையே உட்கிடையாக உணர்த்துகிறார்.
அதானியின் விழிஞ்சம் துறைமும்
இந்தப் பின்னணியில்தான் கேரளாவில் மையமான அரசியல் பிரச்சனையாக விவாதிக்கப்பட்டு வரும் விழிஞ்சம் துறைமுகப் பிரச்சனையையும் பார்க்க வேண்டும். சரக்கு பெட்டகங்களை கப்பல்களுக்கு இடையில் ஏற்றி இறக்குவதற்கு பல்நோக்கு வசதிகளுடன் ஆழ்கடலில் சர்வதேச தரத்தில் விழிஞ்சம் துறைமுகம் அமைக்கும் வேலையை அதானிக்கு கொடுத்துள்ளார்கள். இந்தியாவில் முதல்முறையாக மிகப் பெரிய அளவில் அமைக்கப்படும் சரக்கு பெட்டக கைமாற்றும் முணையம் என்று இதைச் சொல்கிறார்கள். வடிவமைப்பது, கட்டியமைப்பது, நிதி முதலீடு செய்வது, இயக்குவது, கைமாற்றுவது(DBFOT) என்ற முறையின் கீழ் அரசுத்–தனியார் பங்கேற்பு மாதிரியை பின்பற்றி 7,525 கோடி ரூபாய்(மாநில அரசிடமிருந்து 5,071 கோடி, அதானியிடமிருந்து 2,454 கோடி) செலவில் இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அதானி துறைமுகம், சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு(APSEZ) வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான உம்மன் சாண்டி அரசாங்கம் டிசம்பர் 5, 2015ல் இத்திட்டத்தை துவக்கியது. திட்டச் செலவில் மூன்றில் இரண்டு பங்கு செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் வழக்கமான அரசுத்–தனியார் பங்கேற்பு மாதிரியின் அடிப்படையில் துவங்கப்பட்டது என்றாலும் 40 ஆண்டுகளுக்கு இலாபம் அனைத்தும் கௌதம் அதானிக்கே செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகள் அதானியின் நன்மதிப்பை அடிப்படையாகக் கொண்டு வழங்கிய கடன்கள் மூலம் திரட்டப்பட்ட தொகைதான் மூன்றில் ஒரு பங்கு திட்டச் செலவிற்காக அதானி முதலீடு செய்துள்ளார். இந்தியாவிலுள்ள பிரதான ஒட்டுண்ணி முதலாளித்துவ வாதிகள் எப்படி வேண்டுமென்றே வாங்கிய கடனை அடைக்காமல் வங்கிகளின் வாராக் கடன்களை அதிகப்படுத்தி வருகின்றனரோ அதே வரிசையில்தான் இந்த துறைமுகக் கடனும் வந்து சேரும். இதோடு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து அதானிக்கு 1,685 கோடி ரூபாய் மானியமும் வழங்கப்படுவதோடு கூடுதலாக திட்டம் அமையவிருக்கும் இடத்தை சுற்றி 5,000 கோடி மதிப்பில் அமைந்துள்ள 500 ஏக்கர் நிலமும் வழங்கப்படுகிறது. இந்நிலம் ரியல் எஸ்டேட் தொழில்களுக்காகவும் பயன்படுத்த முடியும். இப்படிப்பட்ட வசதிவாய்ப்புகள் செய்து தரப்பட்ட நிலையில்தான், “துரித வேகத்தில்” அதாவது 1,000 நாள்களுக்குள் திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு செப்டம்பர் 1, 2018க்குள் செயல்படத் துவங்கிவிடும் என்று 2015ல் அதானி அறிவித்திருந்தார்.
2015–ல் எதிர்கட்சித் தலைவராக பினராயி விஜயன் இருந்த பொழுது வழக்கம் போல இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து பேசினார். அதானியுடன் 6,000 கோடி செலவில் ஊழல் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூட உம்மன் சாண்டி அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டினார். பொருளாதார ரீதியில் இத்திட்டம் எந்தளவிற்கு நடைமுறை சாத்தியமற்றது என்பதோடு நீண்ட கால அடிப்படையில் எந்த நன்மையும் தராத, விழிஞ்சம் பகுதிக்கு அருகில் வாழக்கூடிய ஒடுக்கப்பட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து அவர்களின் பிழைப்பையே கேள்விக்குறியாக்கும் திட்டம் என்றெல்லாம் கூட விமர்சனங்களை முன்வைத்தார். 2016 தேர்தலின்போது, மற்ற விசயங்களோடு, அதானி திட்டத்திற்கு எதிராக அடுக்குமொழியில் விமர்சனங்களை அள்ளி வீசியதோடு மக்களை ஏய்த்து ஆட்சியை பிடிப்பதற்காக கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான, மக்களை கவரக்கூடிய சில்லறை சலுகைகளையும் வாரி வழங்குவதாக அறிவித்தார். ஆனால், ஆட்சியை கைப்பற்றியப் பிறகு, தனது வர்க்க பண்பிற்கு ஏற்ப, பாட்டாளி வர்கக அரசியலை கைவிட்டு ஓடிய சிபிஎம் கட்சி கேரளாவில் ஆளும் வர்க்க நிலைக்கு முழுவதுமாக சீரழிந்தது போனது; அதானி துறைமுகம், கே–இரயில் போன்ற “கனவுத் திட்டங்களை” கொண்டு வரவண்டுமென்று விடாப்பிடியாக ஆதரித்து பேசியது; மக்கள் மத்தியில் எழுந்த கடுமையான போராட்டங்கள் காரணமாகவும், அதையொட்டி காவல்துறை நடத்திய குண்டாந்தடி தாக்குதல் காரணமாகவும் கே–இரயில் திட்டம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் முடிந்த நிலையில், கட்டப்பட்டு வந்த அதானி துறைமுக திட்டத்தில் பல்வேறு கடுமையான பிரச்சனைகள், குளறுபடிகள் நடந்து வருகிறது என்று மே 2017–ம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சிஏஜி அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. அதானியுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் எழுந்துள்ள பல்வேறு ஆபத்தான பிரச்சனைகள் குறித்து சிஏஜி அறிக்கை கேள்வி எழுப்பியிருந்தது: திட்டம் முழுமையாக கட்டியமைக்கப்பட்டவுடன் 80,000 கோடி அளவிற்கான இலாபத்தை அதானி நிறுவனம் ஈட்டுவதற்கு வாய்ப்புள்ள நிலையில், ஒட்டுமொத்த நிதிச் சுமையும் மாநில அரசாங்கத்தின் தலையில் விழுவதற்கு வாய்ப்புள்ளது; பொதுவாக அரசுத்–தனியார் பங்கேற்பு திட்டங்கள் என்றால் 30 ஆண்டுகள் வரை மட்டுமே ஒப்பந்தக் காலமாக வழங்கப்படும் நிலையில், அதானிக்கு 40 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதால் 29,217 கோடி அளவிற்கு கூடுதலாக இலாபம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது; தேவைக்கேற்ப, ஒப்பந்தத்தை 20 ஆண்டுகாலம் மேலும் நீட்டிப்பதற்கான சரத்தும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருப்பதால் கூடுதலாக 61,095 கோடி அளவிற்கான இலாபத்தை பறித்தெடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது; திட்டத்தின் மொத்த செலவில் 67 சதவீதத்தை கேரள அரசாங்கமே ஏற்றுக்கொண்ட போதிலும், அதற்கான வருவாய் சொற்ப அளவில்தான் கேரளாவிற்கு கிடைக்கும். அதுவும்கூட 2031–ம் ஆண்டிற்கு பிறகுதான் கிடைக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி உருவாக்கப்படும் அனைத்து சொத்துக்களையும் அடைமானம் வைத்து கடன் பெறுவதற்கான உரிமையும் அதானிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு ஆபத்தான பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்வதெனில், “ அதானியுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் மாநிலத்தின் நலன்கள் பாதுகாக்கப்படவில்லை என்பதோடு குறிப்பிடத்தகுந்த அளவில் குறைபாடுகள் நிறைந்ததாகவும் இருக்கிறது” என்று சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிஏஜி அறிக்கையில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை சமாளிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தையே கேலிக்கூத்தாக்கும் வகையில் சிபிஎம், காங்கிரஸ் கட்சி, பாஜகவின் ஏகோபித்த ஆதரவுடன் நீதிபதி இராமச்சந்திரன் நாயர் தலைமையில் பினராயி விஜயன் அரசாங்கம் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. விசாரணை ஆணைய சட்டத்தின் கீழ் அமைப்பட்ட ஆணையம் அதானியுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தவறேதும் நிகழவில்லை என்று சொல்லும் அளவிற்கு முழுமையாக பூசி மொழுகும் வகையில் கிட்டத்தட்ட 100 பக்கம் அளவில் அறிக்கை ஒன்றை தயாரித்திருந்தது. எனினும், விசாரணை ஆணையம் வழங்கிய அறிக்கையை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த பினராயி அரசு ஒப்பந்தப்படி முதற்கட்ட பணிகளை டிசம்பர் 2019க்குள்ளாக முடிக்க தவறும்பட்சத்தில் நாளொன்றுக்கு 12 இலட்சம் ரூபாய் அதானி நிறுவனத்தின் மீது அபராதம் விதிக்க நேரிடும் என்பதையும் வலியுறுத்தி பேசியிருந்தார். இதுவும்கூட மக்கள் மத்தியில் அதானிக்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பை திசைதிருப்புவதற்காக சொல்லப்பட்ட உத்தியே தவிர வேறொன்றுமல்ல; ஏனெனில், இப்போதும் கூட, டிசம்பர் 2022 வரை ஒப்பந்தத்தில் மூன்றில் ஒரு பகுதி பணிகள் மட்டுமே நிறைவடைந்திருப்பதாக கூறப்படுகிறது; ஆனால், இந்நாள்வரை, அதானி நிறுவனத்தின் மீது எந்தவொரு அபராதமும் விதிக்கவில்லை.
உதாரணத்திற்கு, அக்டோபர் 2022 வரை சரக்கு பெட்டக தளம் அமைக்கும் வேலை 18 சதவீத மட்டுமே நிறைவடைந்துள்ளது; தூர் வாருதல் பணியும், அலைதாங்கிகள் அமைக்கும் பணியும் 33 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது; துறைமுகம் இயங்குவதற்கு இன்றியமையாத உபகரணங்கள், கருவிகளை பொருத்தும் பணிகள் 34 சதவீதம் மட்டுமே நிறைவடைந்திருக்கிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ள நிலையில், எவ்வித கூச்சநாச்சமுமின்றி அரசாங்கம் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டதாக கூறுகிறது. துறைமுக கட்டுமானப் பணி துவக்க நிலையில் இருக்கிறது என்றபோதிலும்கூட மீனவ மக்களின் வாழ்வாதரத்திலும், பிழைப்பிலும் ஏற்கனவே பேரழிவை ஏற்படுத்யிருக்கிறது. அறிவியல் பார்வையற்ற முறையில் எழுப்பப்பட்டு வரும் துறைமுக கட்டுமானங்களினால் விரட்டியடிக்கப்பட்ட பலரும் சேமிப்பு கிடங்குகளிலும், பள்ளிகளிலும் தஞ்சமடைந்தள்ளனர். வறட்டு பெருமைக்கு வெற்று வாக்குறுதிகள் பலவற்றை முன்பு தந்திருந்தாலும், வேலையிழந்து தவித்து வருபவர்களுக்கு முறையான மறுவாழ்வு திட்டமோ அல்லது குறைந்தபட்ச வருமானத்தையோ அல்லது உயிரோடு இருப்பதற்கு வேண்டிய உணவுப் பொருட்களை உத்திரவாதப்படுத்துவதற்கான எந்த திட்டத்தையும் அரசாங்கம் உருவாக்கவில்லை. மட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட மக்களின் பங்கேற்புடன் நடத்தப்பட வேண்டிய சூழலியல் தாக்க மதிப்பீடுகளை முறைப்படி நடத்துவதற்குகூட பினராயி விஜயன் அரசாங்கம் இதுவரை முன்வரவில்லை. இறுதியாக நடந்த ஒப்பந்த ஏலத்தில் ஒற்றை நபராக பங்கேற்று ஏலத்தை கைப்பற்றிய அதானிக்கு சேவகம் செய்ய வேண்டுமென்ற வெறியில் நிதிசார்ந்த பெருநஷ்டம், சூழலியல் பாதிப்பு, மீனவ மக்களின் வாழ்விட, வாழ்வாதார இழப்பு போன்று அதானி துறைமுக திட்டத்தினால் விளையக்கூடிய பெருநாசகர பாதிப்புகள் பற்றி சூழலியல் அமைச்சகத்திலுள்ள வல்லுநர்கள்கூட பலமுறை சுட்டிக்காட்டியிருந்த போதிலும் மத்திய, மாநில அரசுகள் வேண்டுமென்றே இவற்றை புறக்கணிக்கிறது அல்லது மூடிமறைக்கிறது.
“அனைத்திற்கும் மேலான கோட்பாடுகள்” போன்றதாம் வளர்ச்சி
உழைக்கும் வர்க்கத்தையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் அடக்குவதற்கு மட்டுமல்லாது கண்கட்டி வித்தை காட்டி மக்களை ஏமாற்றுவதற்கும், அறிவுஜீவிகள் மத்தியிலுள்ள ஒரு பிரிவினரை கார்ப்பரேட்டுகள் பக்கம் இழுப்பதற்கும் கூட ‘வளர்ச்சி’ என்ற கருத்தியல் ஆயுதத்தை புதிய பாசிஸ்ட்களும், கார்ப்பரேட்டுகளும் இன்று பயன்படுத்தி வருகின்றனர். தங்களைத் தாங்களே மார்க்சியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கொள்கை வழியில் செல்லாமல் காரியவாத முறையில் வளர்ச்சிக்கான வழியை அணுகுவதுதான் சமூக முன்னேற்றத்தை அடைவதற்கான போர் தந்திரம் என்று சொல்லி வருகிறார்கள்; இவர்களுடன் வளர்ச்சி என்பதையே அனைத்திற்கும் மேலான கோட்பாடாக பிரபலப்படுத்தி வரும் கும்பலும் ஒரு புள்ளியில் இணைவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. மார்க்சியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு, கார்ப்பரேட் மூலதனத்தாலும், புதிய தாரளமய சந்தை சக்திகளின் ஆசீர்வாதத்தாலும் முன்தள்ளப்படும் வளர்ச்சிதான் எல்லா அரசியல் செயல்பாடுகளின் மையப் புள்ளியாக இருக்கிறது, ஆளும் வர்க்க நிலையை அடைவதும், அரசியல் அரங்கில் அங்கீகரிக்கப்படுவதும்கூட இவர்களின் ஆசீர்வாதத்தால் நடைபெறுவதுதான். புதிய தாராளமய கார்ப்பரேட் நிலையங்களை சார்ந்து நின்று சந்தை வாய்ப்புகளையும், அந்நிய நிதி மூலதனங்களையும் சொன்னபடி சரியாக பயன்படுத்திக் கொள்ளும்போது மட்டுமே இவர்கள் சொல்லும் வளர்ச்சிக்கான வழியில் தொடர்ந்து பயணிக்க முடியும். “முதலீட்டாளர்களுக்கு உகந்த” வகையில் தொழிலாளர் சட்டங்கள், வரிக் கொள்கைகள், சூழலியல் சட்டங்களை ஒட்டுமொத்தமாக தளர்த்துவது, மாற்றியமைப்பது போன்றவற்றை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் மிக மிகப் பிற்போக்கான கார்ப்பேரட் மூலதன கும்பல்கள் உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்துவது, இயற்கையை சூறையாடுவது என்பது புதிய தாராளமய வளர்ச்சி மாடலின் தாரக மந்திரமாக விளங்குகிறது.
இப்பேர்ப்பட்ட பிரதான வளர்ச்சி மாடலைத்தான் கேரள பினராயி விஜயன் அரசாங்கம் விடாப்பிடியாக செயல்படுத்தி வருகிறது. மத்தியிலுள்ள கார்ப்பரேட்–காவி பாசிஸ்ட் ஆட்சியைப் போல, அரசின் வளர்ச்சித் திட்டங்களை விமர்சிக்கும் எவரையும் “தேச விரோதிகள்” அல்லது ஏன் “பயங்கரவாதிகள்” என்று முத்திரை குத்துவதற்குகூட தயங்குவதில்லை. தான் கொண்டு வரும் கனவுத் திட்டங்களை எதிர்ப்பவர்கள் மீது குண்டாஸ் வழக்கு போடப்படும் என்று கூட பினராயி விஜயன் அச்சுறுத்தியுள்ளார். 2016–ன் நடுப்பகுதியில் ஆட்சிக்கு வந்த சில தினங்களிலேயே ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய தாரளமய பொருளாதார வல்லுநராக அறியப்படும் கீதா கோபிநாத் என்பவருக்கு பொருளாதார ஆலோசகர் பதவி வழங்கினார், பின்னாளில் இதே கீதா கோபிநாத் IMF–ன் தலைமை பொருளாதார ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் “தொழில் செய்வதை எளிதாக்குதல்” திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒத்துப்போகும் வகையிலான திட்ட வரைபடத்தை தயாரித்து வழங்கும் பொறுப்பை “நான்கு பெரிய” பன்னாட்டு ஆலோசனை வழங்கும் நிறுவனங்களுள்(இந்நிறுவனங்கள் IMF, உலக வங்கி, அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளுக்கான வளர்ச்சி வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவற்றிற்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது) ஒன்றாக இருக்கும் KPMGயிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பலதரப்பட்ட புதிய–தாராளமய நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்துள்ளது. சட்ட பேரவையின் மேற்பார்வைக்கே உட்படுத்தாமல் வளர்ச்சி திட்டங்கள் குறித்தான முடிவுகளை எடுப்பதற்கு உச்சபட்ச அதிகாரம் கொண்ட “கேபினட் அமைச்சரவைக்கு மேலான” அல்லது கார்ப்பரேட்டுகளையும், அதிகார வர்க்கத்தினரையும் கொண்ட உச்சபட்ச அதிகாரம் கொண்ட வாரியமாக KIIFB–யை மாற்றுவதற்கு (கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதிய வாரியம்) KIIFB சட்டத்தில் 1999–ம் ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. கார்ப்பரேட் சேவையை தீவிரப்படுத்துவதற்காக, இந்த கார்ப்பர்ட் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் என்ற பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிதி மூலதன கும்பல்களிடமிருந்து “மசாலா பத்திரங்கள்” வழியாக முதலீட்டிற்கான நிதியை திரட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதோடு, கேரளாவிற்குள் தங்குதடையின்றி அந்நிய மூலதனம் வருவதற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் பொறுப்பும் KIIFB–யிடம்தான் ஒப்படைக்கப்பட்டது. KIIFB வெளியிடும் மசாலா பத்திரங்கள் விற்பனைக்கான துவக்க விழாவில் பங்கேற்பதற்கு இலண்டன் பங்கு சந்தைக்குகூட பினராயி விஜயன் (இப்படிப்பட்ட புதிய தாரளமய கடமையாற்றிய ஒரே முதல்வர் என்ற பேறு பெற்றார்) மே 17, 2019ல் சென்றிருந்தார்.
ஜீன் 2017ல், நாடாளுமன்றத்தில் நடந்த நள்ளிரவு கூட்டத்தில், சுதந்திரமாக மாநில அரசுகள் நிதித் திரட்டிக் கொள்ளும் அரசியலமைப்பு சார்ந்த கூட்டாட்சி உரிமையை பறிக்கக்கூடிய புதிய–தாராளமய ஜிஎஸ்டி வரிச் சட்டத்தை மோடி அரசு திணித்தது. இந்த நடவடிக்கை இறுதியில் தீர்க்க முடியாத நிதி நெருக்கடிக்குள் மாநில அரசுகளை தள்ளியதோடு, மாநில பட்ஜெட் மீதான அதிகாரத்தையும் மொத்தமாக பறித்தது. இருந்தும், பினராயி விஜயன் அரசாங்கம் இச்சட்டத்தை தீவிரமாக ஆதரித்து பேசியதோடு, முதல் மாநிலலமாக செயல்படுத்தியும் காட்டியது. கேரளாவின் வரி வருவாய் ஒரேயடியாக சீர்குலைந்ததோடு, கடுமையான நிதிப் பற்றாக்குறையும் ஏற்படுவதற்கு வழிவகுத்தது. 1956ல் கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது முதல் 1.5 இலட்சம் கோடி அளவிற்கான கடன் வாங்கப்பட்டிருந்த நிலையில், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான, புதிய–தாராளமய ஜிஎஸ்டி கொள்கைகளை சிபிஎம் ஆதரித்து செயல்படுத்தத் துவங்கிய ஐந்தே ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகமாகியது. முதல் ஐந்தாண்டு கால ஆட்சி முடியும் போது, அதாவது 2021–ன் துவக்கத்தில் கேரளாவின் மொத்த கடன் என்பது தோராயமாக 3.5 இலட்சம் கோடியாக அதிகரித்திருந்தது. ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, உலக வங்கி போன்ற புதிய காலனியாதிக்க நிதி நிறுவனங்களோடு, மசாலா சந்தைகள் போன்று பன்னாட்டு ஊக மூலதன சந்தைகளை(முதலீட்டாளர்கள்) முன்னிலும் மிக அதிகமாக சார்ந்து நிற்பதற்கு ஏற்ற சாக்குப்போக்காக கடன் சுமையால் ஏற்ப்பட்ட நிதி நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டது பினராயி விஜயன் அரசு. இந்த சார்புநிலைதான், கடன் வழங்கும் பன்னாட்டு நிறுவனங்கள், ஊக மூலதன சூதாடிகளால் திணிக்கப்படும் புதிய–தாராளமய, தீவிர வலதுசாரிய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு கேரளாவை தள்ளியது.
முன்னேற்றம், உள்கட்டமைப்பு வளர்ச்சி என்ற பெயரில் விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், கார்ப்பரேட் தலைமையிலான ஆழ்கடல் மீன்பிடி தொழில், அதிவிரைவு இரயில்கள், தொழில் வழித்தடங்கள் போன்ற பல்வேறு “கனவுத் திட்டங்களை” சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் 2016–ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. அரசுத்–தனியார் பங்கேற்பின் மூலம் தனியார் கார்ப்பரேட்டுகள் தலைமையில் முன்னெடுக்கப்படும் இதுபோன்ற திட்டங்கள் சாராம்சத்தில் உச்சபட்ச உழைப்புச் சுரண்டலையும், இதுவரை இல்லாதளவிற்கு கார்ப்பரேட் நலனிற்காக இயற்கை சூறையாடப்படுவதையும் அடிப்படையாக கொண்டுள்ளது.
காவிமயமாக்கலுக்கு வழிவகுக்கும் கார்ப்பரேட்மயமாக்கல்
ஈஎம்எஸ் ஆட்சியில் 1957 முதல் 1959 வரையிலான காலக்கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, பெரிதும் கொண்டாடப்பட்ட நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி மக்கள், மீனவர்கள் போன்ற நிலமற்ற ஒடுக்கப்பட்ட பிரிவினர் சமூகத்தின் மையநீரோட்டத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டார்கள் என்றால் இன்று மென்மேலும் அதிகம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். கேரளாவை கார்ப்பரேட் நிதி மூலதனக் கொள்ளையர்களின் குவிமையமாக மாற்றத் துடிக்கும் சிபிஎம் அரசாங்கம், முதலமைச்சர் அலுவலகம் உட்பட அதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் கார்ப்பரேட்களின் ஏவலாளிகளையும், பன்னாட்டு நிதி மூலதன ஆலோசனை வழங்கும் நிறுவனங்களையும் ஊடுருவுவதற்கு கட்டற்ற அனுமதியை வழங்கியுள்ளது. இதன் விளைவாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கியதால், பினராயி விஜயனின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியின் போது செயல்பட்ட மூத்த அதிகாரிகள், மந்திரிகளை குறிவைத்து மத்திய அமலாக்கத்துறையையும், புலனாய்வு முகமையையும் கேரளாவிற்குள் நுழைப்பதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது.
மிக மிகப் பிற்போக்கான கார்ப்பேரட் மூலதனம், மனுவாத இந்துத்துவ சக்திகளின் கூட்டணியோடு ஆட்சி நடத்தும் மத்திய அரசுடன் கைகோர்த்துக் கொண்டு பினராயி விஜயன் அரசாங்கம் புதிய–தாராளமய, தீவிர வலதுசாரிய பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவதால், தவிர்க்கவியலாமல் அதற்குரிய அரசியல் பின்விளைவுகளையும் கேரளாவில் எதிர்கொண்டுதான் வருகிறது. அரசுப் பணிகளில் பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமெனக் கோரி நவம்பர் 4, 1990ல் சிபிஎம் கட்சியின் மத்திய குழு நிறைவேற்றிய தீர்மானத்தை, சமரசமின்றி உயர்த்தி பிடிக்கிறோம் என்ற பெயரில் இந்தியாவில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்திய முதல் மாநிலமாக பினராயி விஜயன் அரசு அமைந்தது. உயர்சாதி இந்துக்களும்(கேரளாவில் முக்கியமாக நாயர்கள்), சிரியன் மேட்டுக்குடி கிறுத்தவர்களும் நீண்ட காலமாக ஆதரித்து வந்த இக்கொள்கையை நிறைவேற்றிய அதே நேரத்தில் அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெற்றுள்ள சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கொள்கைக்கு பினராயி விஜயன் அரசு வேட்டு வைத்தது. அறநெறியற்ற முறையில் பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் கட்சியும், கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான, மதவாத கேரள காங்கிரசும்(மேட்டுக்குடி சிரியன் கிறிஸ்தவர்களை பிரதிநிதித்துவபடுத்துகிறது) 2021ல் நடந்த கேரள சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தார்கள். தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்த கடைசி கட்டத்தில் சூட்சமமாக இடது ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் கட்சியை சேர்த்துக் கொண்டதன் மூலம் ஐக்கிய ஐனநாயக முன்னணியினர் தேர்தல் அரசியலில் தங்கள் வசமிருக்கிற இடங்களை தக்கவைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இவையும்கூட சிபிஎம் கட்சியின் போர்த் தந்திர கொள்கையின் ஒரு பகுதி என்ற வகையில் பார்க்கப்பட வேண்டும். மேல்சாதி இந்து–கிறித்தவர்களின் வாக்குகள் முதலானவற்றை பெறுவதற்காகவும், “லவ் ஜிகாத்” போன்று இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களை கேரளாவில் உள்ள கிறுத்தவ சங்கிகள் வெளிப்படையாக முன்னெடுப்பதற்கு மறைமுகமாக சிபிஎம் கட்சியும் ஆதரவளித்து வருகிறது. இவையனைத்துமே, பிரதானமாக பரந்துபட்ட கார்ப்பரேட்–காவி பாசிச கொள்கைகளுக்கே இறுதியில் சேவை செய்கிறது.
மக்கள் மத்தியில் எழக்கூடிய போராட்டங்களையும், அரசியல் எதிர்ப்புகளை சமாளிப்பதற்கும் ஆகச் சிறந்த வழிமுறையாக காவல்துறையையும், ஆட்சித்துறையையும் படிப்படியாக காவிமயமாக்கி வரும் போக்கு பினராயி விஜயன் ஆட்சியில் நடந்தேறி வருவதை பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு, 1970களிலிருந்து 2016ன் நடுப்பகுதியில் பினராயி விஜயன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை “என்கவுண்டர் முறையில் போலியாக சுட்டுத் தள்ளப்படுவது” கேரளாவில் நடந்ததே இல்லை. கேரளாவில் “மாவோயிஸ்ட்கள் தாக்குதல்” ஏதும் இல்லாத நிலையிலும், ‘சட்டத்தின் ஆட்சி’ என்பதையெல்லாம் அப்பட்டமாக தூக்கியெறிந்துவிட்டு, போலி மோதல்கள் மூலமாக 8 நபர்களை பச்சை படுகொலை செய்துள்ளது இந்த பினராயி விஜயன் அரசு. கொடூரமான UAPA சட்டத்தை எதிர்ப்பதாக சிபிஎம் கட்சி வெளிப்படையாக அறிவித்திருந்த போதிலும், ‘மாவோயிஸ்ட்’ சார்ந்த பிரசுரங்களை வைத்திருந்ததாக சொல்லி சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீதே UAPA வழக்கு தொடுப்பதற்கு கொஞ்சம்கூட தயக்கம் காட்டவில்லை. இதுபோன்ற பிரசுரங்களை வைத்திருப்பதெல்லாம் குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. கேரளாவில் காவல் நிலைய கொட்டடி மரணங்களும், சித்தரவதைகளும் தொடர் நிகழ்வாக மாறியிருக்கிறது, பினராயி விஜயன் தலைமையிலான உள்துறை அமைச்சகம் இதை சரிசெய்வதற்கான எந்தவொரு தீர்வையும் முன்னெடுக்கவில்லை. ஆனால், இதற்கு மாறாக, சட்டத்திற்கு அப்பாற்பட்டு செயல்படும் வகையில் காவல் துறைக்கு கட்டற்ற அதிகாரத்தை வழங்குவதற்கு இரண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தார்: முதலாவதாக, காவல் ஆணையரகங்களை உருவாக்குவதன் மூலம் ஆட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்கு மேலாக காவல் துறையை உயர்த்துவது; இரண்டாவதாக, காவல் துறை சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு துணிந்தார். முதல்வர் பினராயி விஜயனின் புதிய–தாராளமய கொள்கைகளுக்கு பக்கபலமாக நின்று பக்கவாத்தியம் வாசித்து வரும் சிபிஐ கட்சி(இடது ஜனநாயக முன்னணியின் இரண்டாவது முக்கிய கூட்டணி கட்சி), அச்சமயத்தில் “வேஷ்டி–சட்டை அணிந்த மோடி” என்று முத்திரை குத்தும் அளவிற்கு காட்டிய கடும் எதிர்ப்பின் காரணமாகவே இவ்விரண்டு முன்னெடுப்புகளும்கூட கைவிடப்பட்டது.
2011–ம் ஆண்டு வரை 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக இருந்த சிபிஎம், அதிகாரத்தை இழந்த பிறகு நல்லெண்ணம், படைத்த பலரும் மேற்க வங்க அனுபவத்திலிருந்து தக்க படிப்பினையை சிபிஎம் கற்கும் என்றே நம்பினர். கார்ப்பரேட்மயமாக்கல்/காவிமயமாக்கலின் இயக்கவியல் அல்லது தர்க்கவியல் விதிகளுக்கு அடிபணிந்த ஒரு கட்சியாக இருக்கும் வரையிலும், தொடர்ச்சியாக பாட்டாளி வர்க்க அரசியலுக்கு விரோதமாக செயல்படும் வரையிலும் மீண்டு வருவதென்பது பகற்கனவே. காவி பாசிசம் பேரபாயமாக மாறி நிற்கிற இன்றைய இருண்ட காலத்திலும்கூட, வங்கத்திலிருந்து வரும் செய்தி யாதெனில், பல்வேறு மட்டங்களில் சிபிஎம் மற்றும் பாஜகவிற்கு இடையில் இரகசிய உடன்படிக்கையும், ஒத்துழைப்பும் இருப்பது தெளிவாக தெரிகிறது. உதாரணத்திற்கு, சிபிஎம் ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்ட(CPM’s Waterloo) நந்திகிராமம் அமைந்துள்ள கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்திற்கு நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் கூட்டுறவு சங்கங்களை பாதுகாப்போம்(Samabay Bachao Manch) என்ற போர்வையில் சிபிஎம் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையில் வெற்றிக் கூட்டணி உருவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பாஜகவை முதன்மை எதிரியாக அடையாளம் காண மறுப்பது போலத்தான் பினராயி விஜயன் தலைமையிலான கேரள சிபிஎம் பிரிவும் கார்ப்பரேட்–காவி பாசிச சக்திகளிடத்தில் ‘மென்மையான போக்கை’ கடைப்பிடித்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் சிபிஎம் வீழ்ந்தது என்பது ஓரிரவில் நிகழ்ந்ததல்ல. மேல்சாதி மேட்டுக்குடி போக்கு உட்பட பல்வேறு காரணிகள் இதற்கு வித்திட்டுள்ளன; புதிய–தாராளமய கார்ப்பரேட் மயமாக்கல் கொள்கைப் பிடிப்பிலிருந்து முளைத்த சிபிஎம் கட்சியின் தத்துவார்த்த, அரசியல் தோல்விகளே வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணியாக அமைந்திருக்கிறது; இதுதான், இறுதியாக, 2007–ம் ஆண்டு சிங்கூர், நந்திகிராமம் பகுதியில் காவல்துறையின் துப்பாக்கிச் சூடும், படுகொலையும் அரங்கேறுவதற்கு வழிவகுத்தது. நரசிம்ம ராவ்–மன்மோகன் சிங் கும்பல் 1990களில் புதிய–தாராளமய உலகமயமாக்கல் கொள்கைகளை புகுத்திய போது, மேற்கு வங்கத்தின் அப்போதைய முதல்வர் ஜோதி பாசுவும் இக்கொள்கைகளை ஆதரித்து பேசியவர்களுள் ஒருவராக இருந்தார் என்பது பரவலாக விவாதிக்கப்பட்ட நிகழ்வுதான். கார்ப்பரேட் மூலதன வேட்டைக்கு பற்றுறுதியோடு சமரசமின்றி சேவையாற்றிய காரணத்தால்தான் 1990களின் நடுப்பகுதியில் ஆளும் வர்க்கங்களுக்கு இடையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட போது பிரதமர் பதவி தானாக இவரைத் தேடி வந்தது. 1990களின் முடிவில், ஜிஎஸ்டி வரி கொள்கைக்கான – இந்தியாவில் ‘உலகமயமாக்கலின் இரண்டாம் அலை’யின் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்ட மிகப் பெரிய புதிய தாராளமய வரிச் சீர்திருத்தத்திற்கான – அஸ்திவாரம் வாஜ்பாய் அரசாங்கத்தில் போடப்பட்டது. இப்பணியை செவ்வனே செய்து முடிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர் மட்ட குழுவின் தலைவராக ஜோதி பாசு ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த அசிம் தாஸ் குப்தா என்பவரை வாஜ்பாய் அரசாங்கமே நியமித்தது. சுருக்கமாக சொல்வதென்றால், இத்தகைய புதிய–தாராளமய பாதையில் பயணித்ததன் இறுதியான அரசியல் வெளிப்பாடுதான் 2011–ல் ஏற்பட்ட படுதோல்வி; கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான மாற்று அரசியல் பார்வை ஏதும் இல்லாத காரணத்தால்தான் படுதோல்விக்கு பிறகும்கூட தொடர் சறுக்கல்களும், வீழ்ச்சியும் ஏற்பட்டு வருகிறது.
“இணை பிரியா” இரட்டையர்களாக பாசிசமும், சமூக ஜனநாயகமும்?
சுருக்கமாக சொல்வதெனில், பாட்டாளி வர்க்க அரசியலை கைவிட்டு, ஆளும் வர்க்க அரசியலுக்கு சீரழிந்ததோடு, கார்ப்பரேட்–காவி பாசிசத்தின் கூட்டாளிகளாக மேலும் சீரழிந்திருப்பதை பரந்துபட்ட வரலாற்றுப் பின்னணியை கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் அகிலம் இருந்த காலத்திலிருந்தே உழைக்கும் வர்க்கத்திற்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் துரோகமிழைத்துவிட்டு பன்னாட்டு நிதியாதிக்க கும்பல்கள் பக்கம் சென்றடைந்த சிபிஎம் போன்ற கட்சிகளை மார்க்சிய சொல்லாட்சியில் சமூக ஜனநாயகவாதிகள் என்று வகைப்படுத்துகின்றனர். இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, பயங்கரவாத சக்திகள் பாசிச வடிவத்திற்கு மாறின; ஐரோப்பாவில் இருந்த பாசிஸ்டுகள் சமூக–ஜனநாவாதிகளின் நேரடியான ஒத்துழைப்பை சார்ந்து நின்றதையும் பார்க்க முடிந்தது.
அச்சமயத்தில், தங்களைத் தாங்களே கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று சொல்லிக் கொண்ட பல கட்சிகளுக்கும், அதிகாரத்திலிருந்த பாசிச நிதியாதிக்க கும்பல்களுக்கும் இடையிலான நெருங்கிய கூட்டணியை கடுமையாக விமர்சித்ததோடு, பாசிசமும், சமூக ஜனநாயகமும் “இணை பிரியா இரட்டையர்கள்” போன்றதென்று அகிலத்து தலைவர்கள் குறிப்பிட்டிருந்தனர். “சமூக ஜனநாயகத்தின் நேரடியான ஆதரவையும், ஒத்துழைப்பையும் பாசிசம் சார்ந்து நிற்கிறது, பாசிசத்தின் நேரடியான ஆதரவையும், ஒத்துழைப்பையும் சமூக ஜனநாயகம் சார்ந்து நிற்கிறது” என்று அகிலத்து தலைவர்கள் வலியுறுத்தினர். அநேக நேரங்களில், சமூக ஜனநாயகம் என்பது “பாசிசத்தின் மிதவாதப் பிரிவு” என்றே பொருள் விளக்கம் தந்துள்ளனர். 1920களின் பிற்பகுதியில், பாசிஸ்ட்களுடன் சமூக ஜனநாயக கட்சிகள் வெளிப்படையாக கைகோர்க்க ஆரம்பித்த போது, 1928ல் நடந்த சர்வதேச கம்யூனிச அகிலத்தின் ஆறாவது மாநாடு, இவர்களை “சமூக பாசிஸ்ட்கள்” என்று பெயர்சூட்டும் நிலைக்கே வந்துவிட்டது.
புதிய பாசிச நிலைமைகளின் பின்புலத்தில், காவி–கார்ப்பரேட் பாசிச சக்திகள், சிபிஎம் போன்ற சமூக ஜனநாயக கட்சிகளுடன் கூட்டணி சேர்வதும், மறுதலையாக இவர்கள் அவர்களுடன் கூட்டணி வைப்பதும் புதிய நிகழ்வொன்றுமல்ல. ஐரோப்பாவில் தோன்றிய பழைய பாசிசத்தின் இருண்ட காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது என்பதால் இதுவொரு வரலாற்று போக்கு என்பதாகவே பார்க்க வேண்டும். அந்தந்த நாடுகளின் பருண்மையான வரலாற்று நிலைமைகளுக்கு எற்ப பிற்போக்கான, இனவாத, தேசியவெறியூட்டக்கூடிய, மீட்பியக்கவாத, மத அடிப்படைவாத, வந்தேறிவாத, அறிவியல் வளர்ச்சிக்கு எதிரான மூடநம்பிக்கைவாத கொள்கைகளைக்கூட தங்களது அரசியல்–தத்துவார்த்த ஆயுதமாக வரித்துக்கொள்ளும் கார்ப்பரேட் மூலதன மேலாதிக்கத்தில்தான் பாசிசம் அல்லது புதிய பாசிசத்தின்(புதிய–தாராளமய காலத்தில் தோன்றியுள்ள பாசிசம்) பொருளியல் அடிப்படை அடங்கியுள்ளது. உதாரணத்திற்கு, இன்று புதிய பாசிசம் அமெரிக்காவில் எவான்ஜலிச கொள்கைகளையும், மேற்கு ஆசியாவில் அரசியலாயுதமாக மாற்றப்பட்ட இஸ்லாத்தையும், இஸ்ரேலில் ஜியோனிசத்தையும், இந்தியாவில் இந்துத்துவத்தையும், இலங்கை மற்றும் மியான்மரில் பௌத்தத்தையும் தனது தத்துவார்த்த ஆயுதமாக திறம்பட பயன்படுத்தி வருகிறது.
நீண்ட காலமாக செயல்பட்டு வரும் மிகப் பெரிய பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.--ன் அரசியல் பிரிவான பாஜகவோ மிக மிகப் பிற்போக்கான கார்ப்பரேட் மூலதனத்துடன் கைகோர்த்துக்கொண்டு, அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு சிறிய, பெரிய அளவில் சமூக வாழ்வின் ஒட்டுமொத்த அரங்கையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட சிபிஎம் கட்சி ஆவணத்தில், “பாசிசத்திற்கான அறிகுறிகள்” இருந்தபோதும், இந்தியாவில் முழுநிறைவான பாசிச ஆட்சி தோன்றவில்லை என்று எடுத்துரைப்பது வேடிக்கையாக உள்ளது. சிபிஎம் கட்சி எங்கு, எப்போது அதிகாரத்தில் இருந்தாலும் ஒரே தீவிர, வலதுசாரிய புதிய தாராளமய கொள்கைகளையே அமல்படுத்துகிறது என்பதால் முழுமையான பாசிச ஆட்சி தோன்றும் வரை பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறை சிபிஎம் கட்சியின் அரசியல் வழிக்கு பொருந்தியே போகிறது. இதன் விளைவுகள்தான் இன்று கேரளாவில் அப்பட்டமாக வெளிப்படுகிறது.
ஆரம்ப காலத்தில், மறுமலர்ச்சி இயக்கங்கள், சமூக சீர்திருத்த இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சி என்ற பெருமைமிக்க வரலாற்றுத் தடங்களைக் கொண்ட கேரளாவும், இன்று இந்தியாவின் பிற பகுதிகளைப் போல வரலாற்றின் மிக ஆபத்தான கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. கேரளாவில் காவி–பாசிசத்தின் தாக்குதல்களுக்கு எதிராக, புதிய தாராளமய கொள்கைகளுக்கு மாற்றாக மக்களை முன்னிறுத்தக்கூடிய திட்டங்களை வலுவாக முன்வைக்கக்கூடிய முற்போக்கான–ஜனநாயக அரசியல் இயக்கங்கள் பலவீனமான நிலையில்தான் உள்ளது. பாசிச சக்திகளை எதிர்க்கும் பலம் பொருந்திய வலுவான மாநில ஆளும் வர்க்க கட்சியின் ஆட்சி நடக்கும் அண்டைய மாநிலமான தமிழ் நாட்டுடன் ஒப்பிடும் போது கேரளாவின் நிலை பரிதாபகரமானதாகவே உள்ளது. மறுபுறம், காங்கிரஸ் தலைமையிலான ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்பு பலவீனமாக இருப்பதையும்கூட தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு காவி பாசிஸ்ட்களுடன் சேர்ந்து புதிய–தாராளமய கார்ப்பரேட் மயமாக்கல் கொள்கையை சிபிஎம் கட்சி அமல்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட ஆபத்ததான நிலைமையில், அனைத்து இடதுசாரி சக்திகள், முற்போக்கு சக்திகள், ஜனநாயக சக்திகள், அநீதிக்கு எதிராக போராடும் சக்திகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து உறுதியான தத்துவார்த்த, அரசியல் இயக்கத்தை துவக்க வேண்டியது அவசர அவசியமான விசயமாக மாறியிருக்கிறது. மட்டுமல்லாது, கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராகவும், கேரளாவில் அதை அமல்படுத்துபவர்களுக்கு அதாவது சிபிஎம் தலைமையிலான பினராயி விஜயன் ஆட்சிக்கு எதிராகவும் போராடுவதற்கு குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையில் அரசியல், அமைப்பு வழியிலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதுபோன்ற போராட்டங்கள்தான் பெண்கள், சாதி ஒழிப்பு போராளிகள், மதச் சார்பற்ற இயக்கங்கள், ஜனநாயக சக்திகள் உள்பட அனைத்து ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களுக்கும் உத்வேகமளித்து, மக்களை மையப்படுத்திய, இயற்கையோடு இயைந்த, நீடித்த நிலையான மாற்று வளர்ச்சி திட்டங்களை நோக்கி அணிதிரட்டுவதற்கு உதவும்.
(பி ஜே ஜேம்ஸ்)
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை : https://countercurrents.org/2022/12/cpim-and-bjp-become-twin-brothers-in-kerala-in-their-ignominious-servility-to-adani/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு