போக்குவரத்து ஊழியர்களின் நிலுவை ஊதியங்களை வழங்க 12 மணி நேரம் பணிசெய்ய வற்புறுத்தும் கேரள அரசு
செந்தளம் செய்திப் பிரிவு
ஏழைத் தொழிலாளர்களின் நலன் என வாய் கிழிய பேசும் கேரள CPM அரசு, போக்குவரத்துத் தொழிலாளர்களின் பணி நேரத்தை 8மணியிலிருந்து 12 மணி நேரமாக நீட்டித்து தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கான புதிய நிபந்தனையை விதித்துள்ளது. திருத்தல்வாத சிபிஎம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாத சம்பளத்தை வழங்குவதற்கு மாற்றாக வேலை நேர அதிகரிப்பை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது. கேரளாவில் போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பளம் வழங்காததைக் கண்டித்து பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்கள் 12 மணி நேர வேலை-நாளை ஏற்கவில்லை என்றால், அவர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்கப்படாது என்று பினராயி அரசு கூறியது. இதனால், தொழிற்சங்கங்கள் நிபந்தனையை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டன.
கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (KSRTC) சுமார் 25,000 ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள ஊதிய நெருக்கடியைத் தீர்க்க செப்டம்பர் 5, 2022 அன்று KSRTC நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டத்தை பினராயி விஜயன் கூட்டினார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, போக்குவரத்துக் கழகத்துக்கு 100கோடி ரூபாய் நிதியை ஒதுக்க அரசு உத்தரவிட்டது. மேலும், மீதமுள்ள நிதியை KSRTC நிர்வகிக்கும் என்றும் கூறியுள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்தான் நிதியை விடுவிப்பதாக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. KSRTC ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் கேரள அரசின் நடவடிக்கைக்கு (சிபிஎம்-ன் தொழிற்சங்க அமைப்பான) சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. கடைசியில் அரசின் நிபந்தனைகளை அவையும் ஏற்றுக் கொணடு சிபிஎம்மின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு துணை போயின.
1300 கூடுதல் பேருந்துகளை இயக்க, ஊழியர்களின் பணியை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தவிருப்பதாக கேரள அரசு நியாயம் கூறுகிறது. கூடுதல் பேருந்துகளை இயக்க கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற அடிப்படை கூட இல்லாமல் பண்ணையடிமைகளை சுரண்டும் ஆண்டையைப் போல செயல்படுகிறது இந்த கார்ப்பரேட் நல சிபிஎம் அரசு. தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கார்ப்பரேட்களை எதிர்ப்பதாக நாடகமாடும் சிபிஎம், தான் ஆளும் மாநிலத்தில் கார்ப்பரேட் நல அரசாக ஆட்சி புரிகிறது. இதற்கு பெயரும் கம்யூனிஸ்ட் கட்சியாம்! வெட்க கேடு!
- செந்தளம் செய்திப் பிரிவு
ஆதாரம் : தி பிரிண்ட்