ஜெட் இன்ஜின் தயாரிப்பு ஒப்பந்தத்தின் விளைவுகள்
சு.அழகேஸ்வரன்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு மேற்கொண்ட முதலாவது அரசு முறை பயணத்தின் போது அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஜீ ஈ ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தின் ஜெட் இன்ஜினை உள்நாட்டில் தயாரிப்பது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தத்தின் அனைத்துக் கூறுகளையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இந்திய விமானப்படையின் பயன்பாட்டிற்காக இலகுரக போர் விமானம் தேஜஸ் மார்க்-2 வை ஹெச்.எ.எல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரூ.9,000 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கான ஒப்புதலை 2022 ஆகஸ்ட் மாதம் பாதுகாப்புக்கான அமைச்சகங்கள் குழு வழங்கியது. இந்தப் போர் விமானத்தில் அமெரிக்காவின் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தின் எஃப் 414 ஐ.என்.எஸ் 6 (414INS6) இன்ஜினை பொருத்துவதற்கும் அவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கும் அந்நாடு ஒப்புக்கொண்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 22-ஆம் தேதியன்று ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்திற்கும், ஹெச்.எ.எல். நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. தயாரிக்கப்படவுள்ள இந்த போர் விமானங்களின் எண்ணிக்கை இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. அது குறித்து பாதுகாப்புக் கொள்முதல் குழுமம் முடிவெடுக்கும். தற்போதைய யோசனையின்படி 120 முதல் 130 போர் விமானங்கள் தயாரிக்க வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல் அறிக்கையில் இந்த ஒப்பந்தம் இருநாட்டு உறவுகளில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளதைக் காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பிற்கும் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், உயர்ந்த பட்ச தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் தயாரிக்கப்படவுள்ள இந்த ஒப்பந்தம் இந்திய அமெரிக்க உறவுகளில் ஒரு மைல்கல் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒப்பந்தம் கையெழுதிட்டதற்கு பின்னர் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினைய் கவட்ரா, அமெரிக்காவின் ஏற்றுமதி மற்றும் சர்வதேச ஆயுத வரி விதிமுறைகள் ஆகிய இரண்டு சட்டங்கள் சம்பந்தப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதலை அளிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் குறித்து இரு தரப்பாரும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக மூலோபாய வர்த்தக உரையாடல் அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற இதன் முதலாவது கூட்டத்தில் இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். அதன் பின்னர் மூன்று ஆண்டுகளில் முதல் இன்ஜின் தயாராகும் என்று தெரிவித்தார். அதன் பின்னரே இன்ஜின் விலை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த தேஜஸ் மேக்-2 போர் விமானங்கள் மட்டுமல்லாமல், நடுத்தர போர் விமானங்களையும் எதிர்காலத்தில் தயாரிப்பது குறித்து பாதுகாப்புத்துறை பரிசீலித்து வருகிறது. ரூ.15,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழு முடிவெடுக்கும். ஏற்கனவே இந்திய விமானப்படையில் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தின் எஃப் 404 இன்ஜின் பொருத்தப்பட்ட 40 இலகுரக போர் விமானங்கள் தேஜஸ் எம்.கே.1 பயன்பாட்டில் உள்ளது. கூடுதலாக 48 விமானங்களை 2024 முதல் 2029 க்குள் ஆண்டிற்கு 16 என்ற எண்ணிக்கையில் ஹெச்.ஏ.எல் நிறுவனம் வழங்கும். இந்த இன்ஜினின் திறன் 84 நியூட்டன் கிலோ கொண்டது. ஆனால் தேஜஸ் மேக்-2 விமானத்தில் பொருத்தப்பட்டவுள்ள எஃப் 414 ஐ.என்.எஸ். 6 இன்ஜின் 98 நியூட்டன் கிலோ திறன் கொண்டது.
போர் விமானங்களில் பொருத்தப்படும் இஞ்சின் தொழில்நுட்பம் மிகவும் சிக்கல் வாய்ந்ததாகும். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளிடம் மட்டுமே இதற்கான தொழில்நுட்பம் உள்ளது. சீனாவோ இந்த இன்ஜினை தயாரிக்க 2 பில்லியன் டாலர் முதலீடு செய்து ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதுவரை அந்நாடு ரஷ்யாவிலிருந்தே கொள்முதல் செய்து வருகிறது. இந்தியாவைப் பொருத்தமட்டில் 1986-ஆம் ஆண்டு ‘காவேரி' என்ற பெயரில் இன்ஜினை வடிவமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அத்துடன் ஜீ.டி.எக்ஸ்-33 என்ற பெயரில் 9 மாதிரி இன்ஜின்களை பாதுகாப்பு ஆராய்ச்சி துறை (டி.ஆர்.டி.ஒ) வடிவமைத்தது. அதுவும் குறைபாடுள்ளதாகவே இருந்தன. இதன் காரணமாகவே அமெரிக்காவிலிருந்து இன்ஜின்கள் கொள்முதல் செய்யப்பட்டு விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் விமானப்படையின் தேவைக்காக ஹெச்.எ.எல். நிறுவனம் சக்தி வாய்ந்த தேஜஸ் மார்க்-2 இலகுரக விமானத்தை தயாரிக்க முடிவு செய்தது. இந்த விமானத்தில் பொருத்துவதற்கு கூடுதல் திறன் கொண்ட எஃப் 414 ஜெட் இன்ஜின் தேவைப்பட்டது. ஆனால் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் பல பத்தாண்டுகளாக அவற்றை வழங்க மறுத்து வந்தது. அதற்கு பின்னர் அமெரிக்காவும், இந்தியாவும் உயர் தொழில்நுட்ப ஆயுத தளவாடங்களை கூட்டாக வளர்ப்பது, தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு வர்த்தக தொழில்நுட்ப அமைப்பில் இந்த இன்ஜினை கூட்டாக வடிவமைப்பதற்கான பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா ஒத்துழைக்காததால் வடிவமைப்புப் பணிகள் துவக்கப்படவில்லை. பின்னர் இந்தப் பணிக்குழுவையும் அமெரிக்கா கலைத்துவிட்டது. இந்த பின்னணியில்தான் தற்போதைய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்திய விமான படையில் 42 படை அணிகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 31 மட்டுமே உள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள மூன்று மிராஜ்-2000, 5 மிக்-29, ஆறு ஜாகுவார் மற்றும் இரண்டு மிக்-21 பைசன் ஆகிய 16 படை அணிகள் காலாவதியாக உள்ளது. இவற்றில் மிக்-அணி 2025-ஆம் ஆண்டில் காலாவதியாக உள்ளது. இவற்றிற்கு மாற்றாகத்தான் இலகுரக போர் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறது.
இந்த ஒப்பந்தத்தின் நடைமுறை சாத்தியப்பாடுகளைப் பொறூத்தமட்டில் ஜெட் இன்ஜினை உள்நாட்டில் தயாரிப்பதற்கான தொழில் நுட்பத்தை அமெரிக்கா முழுமையாக வழங்காது. அதாவது இந்த இன்ஜினின் முக்கிய பாகமான உயர் வெப்பநிலையை தாங்கக்கூடிய சுழல் விசை விசிறிகள் (டர்பைன் ஃபேன்) மற்றும் உலோகவியல் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு அந்நிறுவனம் ஏராளமான முதலீட்டையும், மனித ஆற்றலையும் பயன்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட தொழில்நுட்ப அறிவுச்சார்ந்த சொத்துரிமையை முழுமையாக விநியோகித்துவிட்டால் ஹெச்.எ.எல். நிறுவனம் ஏரோ ஸ்பேசிற்கு போட்டியாளராக மாறிவிடும் என்பதால் இன்ஜினின் முக்கியமான தொழில்நுட்பத்தை வழங்க முன்வராது என பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். முன்னதாக தேஜஸ் மேக்-1 எஃப் 404 இன்ஜினில் ஒப்பந்தத்தின் படி 58 சதவீதம் அளவிற்கே தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் வழங்கியது என்பது குறிப்பிட்டத் தக்கது. தற்போதைய ஒப்பந்தத்தின்படி 80 சதவீத அளவிற்கு தொழில்நுட்ப பரிமாற்றம் செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நடுத்தர போர் விமானங்களில் பொருத்துவதற்காக, கைவிடப்பட்ட காவேரி இன்ஜின் வடிவமைப்பு பணிகளுக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும் பணிகளில் பிரான்ஸ் நாட்டின் சினிக்மா, பிரிட்டனின் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் தேஜஸ் எம்.கே.-2 விமானத்திற்கான இன்ஜினை தயாரிப்பதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து விட்டால் எதிர்காலத்தில் தயாரிக்கப்பட உள்ள நடுத்தர போர் விமானங்களுக்கான இன்ஜினை வடிவமைப்பதற்கான வாய்ப்புகள் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்திற்கே கிடைக்கும். இதன் காரணமாக காவேரி இன்ஜின் வடிவமைப்புக்காக பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாதிப்படையும் அல்லது பயனற்றுபோகும் என வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அத்துடன் கப்பற்படையின் சேவைக்காக மற்றுமொரு விமானந்தாங்கி போர்க்கப்பலை கட்டுவதற்கான யோசனையும் பாதுகாப்பு அமைச்சகத்திடம் உள்ளது. அந்த போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டால் அதில் இடம்பெறும் போர் விமானங்களை தயாரிப்பதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் போயிங் விமானம் ஈடுபட்டுள்ளது. அதாவது அந்நிறுவனத்தின் எஃப் 414 இன்ஜின் பொருத்தப்பட்ட எஃப்/எ-8 கார்னெட் விமானம் போட்டியில் உள்ளது. ஏற்கனவே தேஜஸ் மார்க்-2 வில் எஃப் 414 இன்ஜின் பொருத்தப்பட உள்ளதால், இந்த வாய்ப்பும் போயிங் நிறுவனத்திற்கு வழங்கப்படும். அதன் பின்னர் 20 ஆண்டுகளுக்கு விமானப்படை ஏரோ ஸ்பேஸ் இன்ஜினை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த பிரச்சனையெல்லாம் மோடி அரசு கணக்கில் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.
- சு.அழகேஸ்வரன், முன்னாள் பாதுகாப்புத் துறை ஊழியர்
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு