இந்திய – அமெரிக்க இராணுவ கூட்டுப்பயிற்சி

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது!

இந்திய – அமெரிக்க இராணுவ கூட்டுப்பயிற்சி

இந்தியா – அமெரிக்காவுக்கான நான்கு ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஆண்டு தோறும் இரு நாடுகளுக்கிடையில் போர்ப்பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் 13வது கூட்டுப் பயிற்சி இமாச்சலப் பிரதேச மாநிலம் பாக்லோவில் 21 நாட்கள் நடைபெற்று வந்தது. அது ஆகஸ்ட் 28 ஞாயிறு அன்று திருப்திகரமாக முடிவடைந்ததாக இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். இந்த 21 நாள் பயிற்சி இரு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. முதல் கட்டம் எதிர்ப்பை முறியடிப்பது, போர் தந்திர சிறப்பு நடவடிக்கான பயிற்சி நடவடிக்கைகள்; இரண்டாவது கட்டம் மேலே குறிப்பிட்ட அந்த இரு நடவடிக்கை மீதான 48 மணி நேர மதிப்பீடு செய்வது குறித்த பயிற்சி. இந்த தொடர் பயிற்சிக்கு வஜ்ர பிரஹார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே பயிற்சி 12 முறை நடந்து முடிந்துள்ளது. 12வது பயிற்சி அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில் அக்டோபர் 2021ல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வஜ்ர பிரஹார் தொடர் கூட்டுப் பயிற்சியானது, கூட்டுப் பணி திட்டமிடல் மற்றும் செயல்பாட்டுத் தந்திரங்கள் போன்ற துறைகளில் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் இந்திய – அமெரிக்க நாடுகளுக்கு இடையில் பகிர்ந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியா அமெரிக்காவிற்கு இடையில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் :

யுத் அபியாஸ் - இந்த இராணுவ பயிற்சி 2002 ஆம் ஆண்டு தொடங்கியது. அடுத்த பயிற்சி 18வது முறையாக அக்டோபர் 18 – 31 வரை இந்திய சீன எல்லை மா நிலமான உத்தரகாண்டில் ஆளி என்ற இடத்தில் நடைபெறப்போவதாக  திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன் அமெரிக்காவில் அல்ஸ்காவில் 14 நாள் பயிற்சியாக நடைபெற்று முடிந்தது.

வஜ்ர பிரஹார் - இந்த இராணுவப் பயிற்சியானது இந்தியா மற்றும் அமெரிக்காவின் சிறப்புப் படைகளுக்கு இடையே நடத்தப்படுகிறது. இந்த பயிற்சிதான் ஹிமாசல பிரதேசத்தில் நடந்து முடிந்துள்ளது.

டைகர் ட்ரையம்ப் - இது அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய இராணுவப் பயிற்சியாகும், இதில் இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகிய 3 இந்திய முப்படைகளும் அடங்கும்.   

 

போர்பயிற்சிகளுக்கான காராணமாக அமைந்துள்ள நான்கு அடிப்படை ஒப்பந்தங்கள்:

1.    இராணுவத் தகவல் உடன்படிக்கையின் பொதுப் பாதுகாப்பு ஒப்பந்தம் (GSOMIA) -  இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இராணுவ இரகசிய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு வசதியாக 2002 இல் கையொப்பமிடப்பட்டது.

2.   தளவாடங்கள் பறிமாறிக்கொள்வதற்கான உடன்படிக்கை ஒப்பந்தம் (LEMOA) - இந்த ஒப்பந்தம் 2016 இல் கையெழுத்திடப்பட்டது. இந்தியாவும் அமெரிக்காவும் இராணுவ தளவாடங்களை பழுதுபார்ப்பதற்கும், மறுவிநியோகம் செய்வதற்கும் ராணுவ தளங்களை ஒன்றுக்கொன்று பயன்படுத்திக்கொள்வதற்கான ஒப்பந்தம்.

3.  தகவல்தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (COMCASA) - இந்த ஒப்பந்தப்படி கூட்டுப் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளின் போது 2 நாடுகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தைப் பகிர்ந்து கொள்வதும் பாதுகாப்பதும் ஆகும்.

4.       அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA) - அக்டோபர் 27, 2020 அன்று இந்திய - அமெரிக்கா அரசுகளுக்கு இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான புவிசார் தகவல் பரிமாற்றம், தற்போது இந்தியாவால் இயக்கப்படும் அமெரிக்க தளவாடங்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவது பற்றியது.

 

சீனாவின் எதிர்ப்பு:

இதற்கிடையே அக்டோபர் மாதம் நிகழவுள்ள அமெரிக்க – இந்திய கூட்டுபயிற்சி இந்தியாவின் உத்திரகாண்ட் மாநிலத்தில் சீன எல்லைக்கு அருகாமையில் நடக்க உள்ளதால் சீனா கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் (எம்என்டி) செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் டான் கெஃபே, பெய்ஜிங்கில் வியாழன் அன்று நடந்த வழக்கமான செய்தியாளர் கூட்டத்தில், சீன-இந்திய எல்லைக்கு அருகே நடக்கவுள்ள மற்றும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க-இந்தியா கூட்டு ராணுவப் பயிற்சிகள் குறித்த கருத்து கேட்கப்பட்டபோது, சீன-இந்திய எல்லைப் பிரச்சினையில் எந்த மூன்றாம் தரப்பினரும் தலையிடுவதை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம்.

சீன-இந்திய எல்லைப் பிரச்சினை இரு நாடுகளுக்கு இடையேயான விஷயம். இரு தரப்பும் அனைத்து மட்டங்களிலும் பயனுள்ள தகவல்தொடர்புகளை பராமரித்து, இருதரப்பு உரையாடல்கள் மூலம் நிலைமையை சரியாக கையாள ஒப்புக்கொண்டுள்ளன. 1993 மற்றும் 1996 இல் சீனாவும் இந்தியாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LAC) அருகில் உள்ள பகுதிகளில் இரு தரப்பும் மற்றொன்றுக்கு எதிராக இராணுவப் பயிற்சியை நடத்த அனுமதிக்கப்படவில்லை என்று டான் வலியுறுத்தினார்.

இந்தியாவின் மறுப்பு

சீனாவின் கருத்துக்களை மறுத்துள்ளது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம். வழக்கமாக நடக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய வெளியுறவுத் அமைச்சகத்தின் பேச்சாளரான அரிந்தம் பாக்ச்சி, அக்டோபர் மாதம் நடக்கவுள்ள இந்திய-அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சியானயுத் அபியாஸ் குறித்து கூறியபோது, உண்மை கட்டுப்பாட்டுக் கோடு (LAC) அருகே ராணுவப் பயிற்சி முற்றிலும் வித்தியாசமானது என்று கூறினார்.

மேலும், “மூன்றாம் தரப்பினரின் குறுக்கீடு பற்றி சீனா குறிப்பிடுவது எனக்குப் புரியவில்லை. இந்தியா அமெரிக்காவின் கூட்டு பயிற்சி முற்றிலும் வேறுபட்டது, அதற்கு இப்போது என்ன நிறம் சீனாவால் கொடுக்கப்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த பயிற்சி எதிர்க்கப்படுகிறது. இந்த எதிர்ப்பு என்பது ஒப்பந்தங்களை மீறுவதாகும்என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் நோக்கம்:

இதற்கிடையே தனது ஆட்சிப் பரப்பை விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சீனாவுக்கு பதிலடி கொடுக்க, இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என அமெரிக்க கடற்படை தலைவர் கில்டே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வாஷிங்டனில் இந்தியா தொடர்பான கேள்விக்கு அவர் பதில் அளித்தபோது, “பிற நாடுகளைவிட இந்தியாவுக்கு நான் அடிக்கடி பயணம் செய்துள்ளேன். ஏனென்றால், வரும் காலத்தில் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளியாக இந்தியா விளங்கும் என கருதுகிறேன்.

இமயமலைப் பகுதியில் (லடாக்) இந்தியா, சீனா இடையே எல்லை தொடர்பான மோதல் நிலவுகிறது. இதன்மூலம் சீனாவுக்கு இருமுனை பிரச்சினையாக இந்தியா இருந்து வருகிறது. எனவே, வரும் காலத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், இதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை முன்னாள் உயர் அதிகாரி எல்பிரிட்ஜ் கால்பி கூறும்போது, “தைவான் விவகாரத்தில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் இந்தியா நேரடியாக பங்கேற்காது. ஆனால் இமயமலைப் பகுதியில் சீனாவின் கவனத்தை இந்தியா ஈர்க்கும். இதற்காக தெற்கு ஆசியாவில் இந்தியா வலிமையுடன் இருக்க வேண்டும் என அமெரிக்காவும் ஜப்பானும் விரும்புகின்றன. அப்போதுதான் சீனாவுக்கு 2-வது முனை பிரச்சினையாக இந்தியா இருக்கும்” என்றார்.

அமெரிக்கவுடனான உறவு – இந்திய மக்களுக்கு ஆபத்தானது:

இந்திய – அமெரிக்க கூட்டுப்பயிற்சி என்பது இந்திய – அமெரிக்க நான்கு அடிப்படை ஒப்பந்தங்களின் வெளிப்பாடு. இந்த நான்கு ஒப்பந்தங்களும் அமெரிக்க உலக ஒழுங்கமைவுக்கு சேவை செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள்.

அமெரிக்காவுடனான இந்த நான்கு அடிப்படை ஒப்பந்தங்கள் மூலமும் இராணுவ ஒப்பந்தங்கள் மூலமும் ‘குவாட்’ போன்ற கூட்டமைப்புகள் மூலமும் இந்தியாவை யுத்த தந்திர கூட்டாளியாக மாற்றியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவின் உலக ஒழுங்கமைவுக்கு முதன்மை சவாலாக அறிவிக்கப்பட்ட சீனாவிற்கு எதிராக இந்தியாவை பணயம் வைக்கும் முயற்சிகளில் இந்திய ஆளும் மற்றும் அதிகார வர்க்கங்களும் இணைந்து அமெரிக்காவின் எடுபிடியாக மாறியிருக்கின்றன. இதனால் இந்திய சீன எல்லைப் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்காமல், இந்தியா அமெரிக்காவின் போர்வெறிக்கு துணை போகிறது. சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் ஆத்திரமூட்டல் செயல்களுக்கு மற்ற தெற்காசிய நாடுகளைப் போல இந்தியாவையும் பயன்படுத்துகிறது. இந்திய ஆளும் வர்க்கமும் அமெரிக்க உலக ஒழுங்கமைவுக்கு இணங்கி, தொடர்ந்து சீன எல்லையில் போர்ப்பதற்றத்தை அதிகரித்து வருகிறது.

இப்படி இந்திய-அமெரிக்க ஒப்பந்தங்களும் அதை தொடர்ந்த நடைமுறைகள் அனைத்தும் பார்க்கையில், இவை இந்திய இறையாண்மையை அமெரிக்காவிற்கு அடகு வைப்பதாகவே அமைந்துள்ளது எனலாம். இந்திய – அமெரிக்க ஒப்பந்தம்  எனபது இந்திய மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் பாதுகாக்கபட போடப்பட்ட ஒப்பந்தங்கள் அல்ல. அது இந்திய மக்களையும் நாட்டையும் அபாயத்தில் தள்ளும்  ஒப்பந்தங்கள். அண்டை நாடுகளுடனும், அமெரிக்க உலக ஒழுங்கமைவுக்கு ஒத்துவராத நாடுகளுடனும் போர்பதற்றத்தையும் வர்த்தக முறிவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்திய நாட்டின் இராணுவ இரகசியங்களையும் கேந்திர முக்கியத்துவ இரகசியங்களையும் மற்றும் பாதுகாப்பு தகவல்களையும் தகவல் பறிமாற்றம் என்ற பெயரில் அமெரிக்கா திருடிக்கொள்கிறது. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு மிகப் பெரும் அச்சுறுத்தலாக அமெரிக்கா விளங்குகிறது. சமீபத்தில் சீன உளவுகப்பல் (யுவான் வாங்) அண்டை நாடான இலங்கைக்கு வருவதே நாட்டின் பாதுகாப்புக்கும் தகவல் இரகசியங்களுக்கும் அச்சுறுத்தலாக பேசிய அதே ஆட்சியாளர்கள், அமெரிக்காவின் போக்கப்பல்களும், உளவுக்கப்பல்களும் நமது நாட்டு கப்பல் தளத்தை பயன்படுத்தலாம் என்று ஒப்பந்தம் கையெத்திட்டிருப்பது எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். அதனால்தான் அமெரிக்காவுடனான இந்த நான்கு அடிப்படை ஒப்பந்தங்களிலிருந்தும், இராணுவ ஒப்பந்தங்களிலிருந்தும், குவாட் போன்ற கூட்டமைப்பிலிருந்தும் வெளியேறுவதே இந்திய மக்களுக்கு நாட்டிற்கும் பாதுகாப்பானது மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கும் அதுவே உகந்தது.

தெற்காசியாவில் தென் சீனக்கடல் மற்றும் தைவானை மையப்படுத்தி  அமெரிக்கா -  சீனாவிற்கு இடையில்  போர் தயாரிப்புகள் தீவிரம் பெற்றுவருவதால்  இப்பிராந்தியத்தில் சீன எதிர்ப்பு தேசியவெறியை  தூண்டவும்சீன எதிர்ப்பின் பேரில் அமெரிக்காவின் யுத்த வெறிக்கு துணைபோகவும், இதுவரை ரசியாவிற்கு எதிராக வாக்களிக்காத மோடி ஆட்சி முதன்முதலில் ஐ.நாவில் அமெரிக்கா - உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரசியாவிற்கு எதிராகவும் வாக்களித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இந்திய-சீன எல்லையில் இரண்டு நாடுகளும் ஒன்றுக்கொன்று வரம்பு மீறலில் ஈடுபட்டு வருகிறது. இரண்டு நாடுகளும் எல்லையை மீறி ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனர். இதில் சீனாவின் தரப்பு இந்தியாவின் பல வடகிழக்கு மாநிலப் பகுதிகளை உரிமை கொண்டாட முயற்சிக்கிறது. இதை இந்தியா திடமாக எதிர்த்து இந்திய அரசு சீனாவுடனான எல்லை பிரச்சனையை தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பிரச்சனையில் இந்தியாவும் சீனாவும் மூன்றாம் தரப்பை பயன்படுத்தக் கூடாது. இந்தியா அமெரிக்காவின் கைப்பாவையாக மாறுவது இந்திய நாட்டு இறையாண்மைக்கும் மக்களுக்கும் எதிராகும்!

- செந்தளச் செய்திப் பிரிவு