மின்னணு (EVM) தேர்தல் முறையிலுள்ள மோசடிகள் குறித்து

தமிழில்: சத்யன்

மின்னணு (EVM) தேர்தல் முறையிலுள்ள மோசடிகள் குறித்து

குறிப்பு : "அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஏற்றத் தாழ்வான வளர்ச்சி பெற்றுள்ள அரைக்காலனிய-அரை நிலப் பிரபுத்துவ இந்திய நாட்டின் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மக்கள் யுத்தப்பாதைக்கு நாடாளுமன்ற அமைப்பு முறையிலும் தேர்தலிலும் பங்கு கொள்வது உகந்ததல்ல. தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் செயல்தந்திரம் இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மக்கள் யுத்தப் பாதைக்கு கோட்பாடு ரீதியில் பொருந்தக் கூடியதே ஆகும்" என்ற செந்தளம் நிலைபாட்டிலிருந்து இக்கட்டுரையை விமர்சனபூர்வமாக படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

விரிவாக படிக்க: நாடாளுமன்ற முறை குறித்த பாட்டாளி வர்க்கக் கட்சியின் போர்த்தந்திரமும், செயல்தந்திரங்களும்!

"தேர்தல் மோசடிகளை அம்பலப்படுத்தும்  நோக்கில்தான் இக்கட்டுரை வெளியிடப்படுகிறதே  ஒழிய போலியான இந்திய  ஜனநாயகத்தின் இவ்வகை  தேர்தல் மீது மாயைகளை உருவாக்கும் நோக்கில் அல்ல".

வாக்குச் சீட்டு முறையை மீண்டும்  கொண்டு வருவதற்கான தேவை

மின்னணு வாக்களிப்பின் மீதான மக்களின்  நம்பிக்கை, என்றுமில்லாத அளவிற்கு அதள பாதாளத்துக்குப் போய்விட்டது. அதற்கு  நிறைய  காரணம் உண்டு. மின்னணு வாக்கு இயந்திந்திரங்களை (EVM) பற்றி சில வாரங்களாக பொது மக்களிடையே விவாதம் எழுந்துள்ளது. மக்களாட்சி நிலவும் பல்வேறு உலக நாடுகளிலும் உள்ளதைப் போல,  வாக்குச் சீட்டு முறையையே பலரும் மீண்டும் கொணர விரும்புகின்றனர்.  மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீதான நம்பிக்கை எப்போதையும்விட இப்போது மிக குறைந்துவிட்டது. ஜனநாயகத்தின் அடிப்படையான அம்சங்களை பூர்த்தி செய்யும் வகையில் எந்தவொரு தேர்தல் முறையும் இருந்தாக வேண்டும்; இதற்கு மாறாக  மின்னணு வாக்களிப்பு முறை என்பதே ஜனநாயகத்தின் எந்தவொரு அடிப்படை கொள்கைகளுக்கும் எதிராக இருப்பதுதான் மக்களிடையே நம்பிக்கையிழப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் எதிர்வினை என்னவாக இருக்கிறதென்றால், மின்னணு வாக்கு இயந்திரங்களை இயக்கிக் காட்டி "விளம்பர ஊர்வலம்" நடத்துவது, அதோடு, பக்கம் பக்கமாக அடிக்கடி கேட்கப் படும் கேள்வி பதில் பிரசுரங்களை (FAQs) வெளியிட்டு மக்களை திக்குமுக்காடச் செய்வதுமாக இருக்கிறது.

உலகளவில், ஐந்துவிதமான வாக்களிப்பு முறைகள் உள்ளன

1. வாக்குச் சீட்டு முறை

2. மின்னணு வாக்கு இயந்திரங்கள் முறை 

3. (EVM Voter Verifiable Paper Audit Trail (VVPAT) செலுத்தப்பட்ட வாக்குகளை சரிபார்த்து ஒப்புகை சீட்டு வழங்கும் கருவியுடன் இணைந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள் முறை.

4. இயந்திரங்கள் படிக்கத்தக்க வாக்குச் சீட்டு முறை

5. இணைய வழி வாக்களிப்பு முறை. 

 

இந்தியா, முதல் வகைப் பட்டதில் துவங்கி, இரண்டாம் வகைப் பட்டதற்கு மாறி, இப்போது மூன்றாம் வகைப் பட்டதற்கு வந்துள்ளது. வாக்குச் சீட்டு முறை ஜன நாயக அம்சங்களுக்கு பொருந்தி வருகையில், மின்னணு வாக்கு இயந்திரங்கள் அப்படி பொருந்தி வரவில்லை.   

ஐனநாயக  அம்சங்கள் என்பன:  

 வாக்களிப்பு முறை, பொது மக்கள் அறியத் தக்கதாகவும், அதோடு தங்கள் வாக்குகள் சரியாக பதிக்கப் பட்டு எண்ணப் படுகிறதென்பதை நம்பும் அளவுக்கும் கூட  வெளிப்படையானதாக இருக்க வேண்டும். 

  வாக்களிக்கும் முறையும், எண்ணும் முறைகளும், பொதுமக்கள் தணிக்கை செய்யும் வகையில் இருக்க வேண்டும். 

வாக்களிக்கும் முறையில் உள்ள படிநிலைகள் குறித்து,  சாதாரண குடிமக்கள், சோதனை செய்யத் தக்க வகையில் இருக்க வேண்டும். 

வாக்களிக்கும் முறை, எண்ணும் முறை, முடிவை மேற்கொள்ளும் முறை இவைகளை  சோதிக்கவும், சரிபார்க்கவும் இயல வேண்டும். 

வாக்களிப்பு முறை மட்டு்மே சுதந்தரமானதாகவும், நியாமானதாகவும் இருப்பது போதாது, அதோடு  சுதந்தரமானதாகவும் நியாயமனாதாகவும் நம்புவதற்கு ஏற்றார்போலவும் கூட இருக்க வேண்டும்.  

வாக்களிப்பு துவங்கியது முதல் இறுதி வரை அனைத்துமே தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலே இருக்க வேண்டும்.

இந்த கருத்தை, வாக்குச் சீட்டு முறையையும், மின்னணு வாக்களிப்பு முறையையும் ஒப்பிடுவதன் மூலம் எளிதாக விளக்கலாம். இதை, தனது இறையாண்மையை, தன்னால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதியிடம் ஐந்து வருடங்களுக்கு தர முனையும் சாதாரண குடிமகனின் பார்வையிலிருந்து நோக்குவோம். 

வாக்குச் சீட்டு முறையின் கீழ்: 

வாக்களிப்பு பெட்டி, மறைக்கப் பட்ட ஒரு அறையில் இருக்கும். 

வாக்குச் சாவடியை அடையும் நபர், சரிபார்த்தலுக்குப் பின்னர், வாக்குச் சீட்டைப் பெறுவார். 

அதில் தனது வேட்பாளரின் பெயரும் அவருடைய சின்னமும் இருக்கிறதா என பார்ப்பார்.  

வாக்குப் பெட்டி இருக்கும் வாக்களிக்கும் தடுப்பறைக்குச் செல்வார். 

வாக்களிக்கும் தடுப்பறையின் உள்ளே போவார். 

வாக்காளர், தனது விருப்பத்துக்குரிய வேட்பாளரின் சின்னத்தில் / பெயரில் முத்திரை இடுவார். வாக்குப் பெட்டியில் போடுவார். 

எண்ணிக்கை, எண்ணும் மேஜையில், சீட்டுக்களை எடுத்து, தனித்தனியாக அடுக்கி, தேர்தல் அதிகாரி (Returning Officer-RO) மற்றும் வேட்பாளர்களது முகவர்கள் முன்னிலையில், கையால் எண்ணப் படும். 

எண்ணும் மேஜையில், ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு பெட்டி எனவும், 'ஐயத்திற்குரிய' வாக்குகளுக்கும், 'செல்லாத' வாக்குகளுக்கும் தனித்தனியான  பெட்டிகள் இருக்கும். 

சரிபார்க்கும்/ தணிக்கை செய்யும் முறையின் ஒரு அங்கமாக, வாக்குகள் 25 சீட்டுகள் கொண்ட கட்டுக்களாக கட்டப் பட்டு, மொத்த வாக்குகளின்  எண்ணிக்கையோடு, சரி பார்க்கப் படும். 

பிறகு வாக்குச்சீட்டுகள் வேட்பாளர் வாரியாக பிரிக்கப் பட்டு அதற்குரிய பெட்டிகளில் போடப் பட்டு, பிறகு எண்ணப் படும். 

முகவர்கள், ஒவ்வொரு வாக்குச் சீட்டும், அவற்றிற்குரிய பெட்டிகளில்தான் போடப் படுகின்றனவா என்பதை கண்காணிப்பர். இறுதியாக எண்ணிக்கை சரிபார்க்கப் படும் முன், 'செல்லாத' 'ஐயத்துக்குரிய' வாக்குகள் மீண்டும் உறுதிப் படுத்தப் படும். 

அனைத்து பிணக்குகளும், அதே இடத்தில் தீர்க்கப் படும். தேவையானால் தேர்தல் அதிகாரி (RO) தலையிடுவார்.  

 

இந்த முறையின் கீழ், வாக்குச்சீட்டுகளின் சரியான தன்மை, வேட்பாளரின் பெயர், இவற்றை சரி பார்த்து, அது சரியாக பிரிக்கப் பட்டிருக்கிறதா என்பதை வாக்காளர்கள் சோதனை செய்ய முடியும். இது, ஒரு தனிப்பட்டவர், தனது இறையாண்மையை தங்களுக்கு இசைவான ஒரு வேட்பாளருக்கு அளித்ததை நம்பகமான முறையில் திருப்தியுறச் செய்யும். தேர்தல் பிணக்கு ஏற்பட்டால், மறுபடி வாக்கு எண்ணும் முறையை கடைப் பிடித்து, மீண்டும் திருத்தி அங்கீகரிக்க வைப்பது இதில் சாத்தியம். வாக்கு எண்ணிக்கை பார்க்கக் கூடியதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கும். 

 

மின்னணு வாக்களிப்பு முறையின் கீழான நடைமுறைகள்: 

 

மின்னணு வாக்கு இயந்திரம், இரண்டு அலகுகளைக் கொண்டது. வாக்குப் பதிவு அலகு- Ballat Unit(BU) அதில், வேட்பாளரின் பெயரும் சின்னமும் இருக்கும். பிறகு வருவது, கட்டுப்பாட்டு அலகு, Control Unit(CU) அதில் நினைவகமும், திரை அமைப்பும் இருக்கும். 

விவிபாட்(VVPAT) (வாக்காளர் சோதிக்கக் கூடிய காகித ஒப்புகைச் சீட்டு தணிக்கை) அலகு என்பது வாக்குப் பதிவு அலகுடனும், கட்டுப்பாட்டு அலகுடனும்  இணைக்கப் பட்டிருக்கும். கட்டுப்பாட்டு அலகு, வாக்குப் பதிவு அலகு, விவிபாட் ஒன்றோடொன்று மின்கம்பிகளால் இணைக்கப் பட்டிருக்கும். 

கட்டுப்பாட்டு அலகு  தேர்தல் அதிகாரியிடமும், வாக்குப் பதிவு, விவிபாட் அலகுகள் வாக்களிப்பு தடுப்பறையிலும் இருக்கும். 

வாக்காளர்ர் தடுப்பறையில் நுழைந்ததும், தேர்தல் அதிகாரி கட்டுப்பாட்டு அலகின் விசையை அழுத்துவார். பச்சை விளக்கு எரிந்ததும், வாக்காளர் தனது வாக்கை தனது  வேட்பாளரின் சின்னத்துக்கு நேராக உள்ள பொத்தானை அழுத்தி பதிவு செய்வார். 

உடனே, வேட்பாளரின் வரிசை எண், பெயர், அதோடு சின்னமும் விவிபாட்டில் தோன்றி, 7 வினாடிகளுக்கு நிலைக்கும். 

ஏழு வினாடிக்குப் பின்னர், வாக்கு அளிக்கப் பட்டுவிட்டது என்பதைக் குறிக்க இரைச்சலான பீப் சத்தம் கட்டுப்பாட்டு அலகிலிருந்து வரும். 

வாக்குகளை எண்ணும் தினத்தில், எண்ணும் அதிகாரி, கட்டுப்பாட்டு அலகில் எண்ணிக்கை பொத்தானை அழுத்தினால், ஒவ்வொரு வேட்பாளாரது பெயருக்கும் நேராக வாக்குகளின் எண்ணிக்கை தோன்றும். 

இறுதி முடிவு வெளியிடப் படும் முன்னர், எந்த ஒரு உடனடி சரிபார்ப்போ, தணிக்கையோ, கருத்துமுரண் தீர்வு நடைமுறையோ இருப்பதில்லை.  

 

காகித வாக்குச் சீட்டின் அப்பட்டமான  வெளிப்படைத் தன்மையானது,  முழுக்க கண்ணுக்கு புலப்படாத மின்னணுத் தேர்தல் முறைக்கு முற்றிலும் எதிரானதாகும். எல்லாமே இயந்திரத்தின் உள்ளே செயலாக்கப் படுகிறது, வெளியே புலப்படாதவகையில், சோதனை, அறிதல், திருப்தியாகவே நிர்ணயிக்க முடியாத வகையில்தான்  வாக்காளரது இறையாண்மை, வேட்பாளருக்கு போய் சேருகிறது. வாக்காளர், விவிபாட்டில்  ஏழு வினாடிகள் பார்ப்பதோடு சரி. அவை எண்ணப் படுமா,  இல்லை விவிபாட் மற்றும் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு இடையே மோசடி செய்யப் படுமா என்றால், பதில் இல்லை. வாக்குப்பதிவு என்பது,  வாக்காளர் ஒரு பொத்தானை அழுத்தி, ஒரு விளக்கு எரிவதையும் ஒரு சத்தத்தையும் கேட்பதும்தான்.  அந்த வாக்கு பதியப் பட்டதா,  போடப் பட்ட வேட்பாளருக்குதான்  சேர்ந்ததா என்பது தெரியாது. விவிபாட்டை ஏழு நொடிகளுக்குப் பார்ப்பதைத் தவிர.  

அவர்களுக்கு, அந்த சீட்டு, எண்ணப் பட்டதா, அல்லது விவிபாட், மின்னணு வாக்குப் பதிவு இயரந்திரத்துக்கும் இடையே களவாடப் படாமல் இருக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எண்ணும் போதும் வெளிப்படைத் தன்மை இல்லை. 

 

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரமும், விவிபாட்டும், கட்டுப்பாட்டு அலகும் (BU-VVPAT-CU) "முழுக்க தனித்து நிற்கும் ஒற்றை நிரலிடப் பட்ட சில்லு"களை கொண்டது என இந்திய தேர்தல் ஆணைய வல்லுனர்களும், விற்பன்னர்களும்  சொல்வது  உண்மையல்ல. விவிபாட் இணைக்கப் பட்ட பின், வேட்பாளர்களின் பெயர்களும் சின்னங்களும் வாக்குப்பதிவு அலகில் தேர்தல் அறிவிக்கப் பட்ட பின்னர் ஏற்றப் படவேண்டும். 

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்(பெல் நிறுவனம்) மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (ECIL) போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள், சின்னங்களை ஏற்றும் அலகு  Symbol Loading Unit (SLU) மூலம், இந்த தகவல்களை விவிபாட்டில் ஏற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் கையேடு கூறுகிறது. அதே கையேடு, இந்த கருவிகள், மின்னனு வாக்குப் பதிவு அலகுகள் விவிபாட்கள் வைக்கப் படும் பாதுகாப்பு அறையில் வைக்கப் பட வேண்டியதில்லை எனவும் அந்தப் பொறியாளர்களிடமே திருப்பித் தந்துவிடப் படும் எனவும் தெளிவாக சொல்கிறது. அதாவது வாக்களிப்பு முடிந்த உடனே, அவை, தேர்தல் அதிகாரியின் பாதுகாப்பு வளையத்திலிருந்து  விடுவிக்கப் பட வேண்டும். 

 

இப்படி  வாக்குப் பதிவு/விவிபாட் அலகுகள்,  ஒரு மின் தொடர்பால், தேர்தல் அதிகாரியின் RO/District Election Officers கட்டுப்பாட்டில் இல்லாத, வேறொரு இயந்திரத்துடன் இணைக்கப் படுவதும்,  வேட்பாளர்கள் வரிசை முறைப்படுத்தப் பட்டு, பூத் எது என மறுமுறை வரிசை கலைத்து  மாற்றப் படுவதும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை மிக ஐயத்துக்குள்ளாக்குகிறது.  இது வாக்களிப்பையும் எண்ணுதலையும் மோசடிக்கு உள்ளாக வழி வகுக்கிறது. 

தேர்தல் நடத்தை விதிமுறைகளின் விதி, 56(D)(4)(b) 1961, விவிபாட்டின் வாக்குச்சீட்டு எண்ணிக்கைதான், வாக்குப் பதிவு அலகின் எண்ண்ணிக்கையை காட்டிலும் சரியானது என்கிறது. "கட்டுப்பாட்டு அலகு தரும் எண்ணிக்கைக்கும், காகித சீட்டுகளின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருக்குமெனில், படிவம் 20ல், காகிதச் சீட்டு எண்ணிக்கையை பதிந்து  மாற்று முடிவை பதிய வேண்டும்." 

இறுதியில் வேட்பாளர்களின் விருப்பத்தை துல்லியமாக பதிவு செய்யும் கருவி விவிபாட்தான் என்பதையும், வாக்குப் பதிவு அலகில் காணப் படும் மாற்றமோ, பிழையோ, வரலாம் என்பதை காரணத்தைக்கொண்டும் மறுக்க முடியாது என்பதையும் ஒப்புக் கொள்ளும் இந்தவிதி, இந்த குறைபாட்டின் சட்ட பூர்வமான ஒப்புதலே ஆகும். 

இப்படிப் பட்ட சட்டபூர்வ ஒப்புதலுக்குப் பின்னர், தேர்தல் முடிவுகளை விவிபாட் சீட்டுகளை எண்ணாமல் அறிவிப்பது, சட்டம் 14ஐ ஒருதலைப் பட்சமாக அப்பட்டமாக மீறுவதாகும். 

இந்திய தேர்தல் ஆணையம், மின்னணு வாக்களிப்பு அமைப்பில், கட்டுப்பாட்டை முழுதாக இழந்துவிட்டது. வாக்குச் சீட்டு அமைப்பில், தேர்தல் ஆணையம், வாக்குப் பதிவு பெட்டி தயாரிப்பு, வாக்குச் சீட்டு அச்சடிப்பு, அவற்றின் வினியோகம், எண்ணிக்கை அனைத்திலும் முழுக் கட்டுப்பாட்டை கொண்டிருந்தது.    

ஆனால், மின்னணு வாக்குப் பதிவின் கீழோ, கட்டுப்பாட்டு அலகில் பதிவான ஓட்டுகளை,  திருத்தப் படக் கூடிய தன்மையுள்ள நிரல் நினைவகத்தை EEPROMS (Electrically Erasable and Programmable Memory) மின்னணுவியல் வழியில் (வெளியிலிருந்து) அழிக்க முடியும் வாய்ப்புள்ளதால், மேற்கண்ட  கட்டுப்பாடு சாத்தியமற்றதாகிறது. 

 மின்னணு வாக்குப் பதிவு அலகுகளை தயாரிக்கும் BEL / ECIL, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழோ, கண்காணிப்பிலோ இல்லை. 

அவை தம் தொடர்பான அமைச்சகங்களின் கட்டுப்பாட்டில் இயங்குபவை. அவற்றின் அன்றாட நிர்வாகம், பாஜக தலைவர்களால் நிரம்பிய நிர்வாகக் குழுவினரால் மேற்கொள்ளப் படுகிறது. 

இந்த அமைப்புதான், மின்னணு வாக்குப் பதிவு அலகின் மைக்ரோ கன்ட்ரோலர்களில், அந்நிய சில்லு தயாரிப்பாளர்கள் மூலமான ரகசிய நிரலை மின்னணு வாக்குப் பதிவு அலகினுள் நகலெடுக்கிறது.  

அந்நிய தயாரிப்பாளர்கள் மின்னணு வாக்குப் பதிவு அலகின் மென்பொருள் குறீயீடுகள் பொறித்த மைக்ரோ கன்ட்ரோலர்களை வினியோகம் செய்கையில், தயாரிப்பாளர்களோ, தேர்தல் ஆணைய அதிகாரிகளோ அதில் பொதிந்துள்ளதை படிக்க முடியாது. ஏனெனில் அவை முடக்கப் பட்டவையாகும். 

எனவே, மின்னணு வாக்குப்பதிவு ஜன நாயக நடைமுறைகளோடு ஒத்து வராததென்பதையும், இந்தியா வாக்குச் சீட்டு முறைக்கு திரும்ப வேண்டியதன் முக்கியத்துவமும் இதனால் தெளிவாகிறது. 

 

 

பழையநடைமுறைக்கு எதிரான ஒரே வாதம், பூத் கைப்பற்றுதலும், வாக்குப் பெட்டிகளில் போலி வாக்குகளை நிரப்புவதும் ஆகும். அதற்குக் காரணம் முந்தைய கண்காணிப்பு முறைகள் பழங்காலத்தவை, புரையோடிப் போனவை. இன்றைய நிலை அப்படி அல்ல. 

 

இப்போதெல்லாம், மூத்த தேர்தல் அதிகாரிகளும், தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்களும், போலீசும் பறக்கும் படைகளும், என்ன நடக்கிறதென உடனுக்குடன் கண்காணிக்க முடியும். வாக்குப் பதிவு பூத்களில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. மோசடி ஏதேனும் நடப்பதை உடனடியாக பார்க்க முடியும். அதில்லாமல், பதட்டம் நிறைந்த பகுதிகளின் வாக்குப் பதிவு நிலையங்களில் பூத் கைப்பற்றுதல், போலி வாக்குகள் நிரப்புதல், இவைக்கு எதிரான கண்டால் சுடும் அதிகாரம் உள்ள ஆயுதப் படைகள் நிறுத்தப் படுகின்றன.  

 

இந்த கோரிக்கையை நிராகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு எந்த முகாந்திரமும் இல்லை. தேர்தல் விதிகளை மாற்றுவது என்பது, அவசர சட்டங்களின் மூலம், சில நிமிடங்களுக்குள் சாதிக்கப் பட முடியும் விஷயமாகும். வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகளையும் மற்றவற்றையும் தயாரித்துப் பெறுவதும், ஒரிரு வாரங்களுக்குள் செய்யக்கூடியவை. ஏனெனில், பஞ்சாயத்து மற்றும், உள்ளாட்சி தேர்தலுக்கான அவை, தொடர்ந்து தயாரிக்கப் பட்டுக் கொண்டுதான் உள்ளன. பயிற்சி பெற்ற ஊழியர்களும் ஏற்கனவே உள்ளனர்.  

இதில், வாக்குச் சீட்டுகள் மட்டுமே, வேட்பாளர் பட்டியல் இறுதியான பின்னர் அச்சிடப் படும். இதற்குத் தேவையானதெல்லாம், அவற்றை அச்சிடும் அச்சகங்களை முன்பே தேர்ந்து வைத்துக் கொள்வதும், அவற்றை பாதுகாப்பு கோணத்தில் சான்றளித்து நெறிப்படுத்துவதுமே ஆகும். 

 

 

ஆகவே, தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப் பதிவின் விற்பனை முகவர்களாக செயல் படாமல், மக்களது கோரிக்கையை செவிப் படுத்தி, ஜனநாயகத்தை காக்க முன்வர வேண்டும். 

 

எம் ஜி தேவ சகாயம் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.  தேர்தல் குறித்த குடிமக்களின் ஆணையத்தின் Citizens Commission on Elections ஒருங்கிணைப்பாளர். தேர்தல் ஜனநாயகம் -இந்திய தேர்தல்களில் நியாயமும் நேர்மையும் பற்றிய விசாரணை Electoral Democracy—An Inquiry into the Fairness and Integrity of Elections in India. எனும்  புத்தகத்தின் ஆசிரியர்

- சத்யன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://thewire.in/rights/the-case-for-bringing-paper-ballots-back

Disclaimer: கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு