இந்தியப் பொருளாதாரத்தை மீட்க நடுத்தர வர்க்கத்தின் வரி சேமிப்பு உதவுமா?
தமிழில்: விஜயன்
![இந்தியப் பொருளாதாரத்தை மீட்க நடுத்தர வர்க்கத்தின் வரி சேமிப்பு உதவுமா?](https://senthalam.com/uploads/images/202502/image_750x_67a345cc3a973.jpg)
ஒருவழியாக, தற்போது இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் சிக்கியுள்ளது என்பதை மோடி அரசாங்கம் ஒப்புக்கொண்டுவிட்டது. 8.2% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி, 6.4% ஆகக் குறைந்துள்ளது. மேலும் பொருளாதார வல்லுநர்கள் இந்த மதிப்பீட்டைக்கூட சந்தேகித்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர். மோடி அரசாங்கத்தின் ஊதிப்பெருக்கப்பெற்ற இலக்கான 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு, 10% க்கும் அதிகமான வளர்ச்சி விகிதம் தேவைப்படுகிறது. ஆனால், உலகப் பொருளாதாரமும் மந்தநிலையில் இருப்பதால், அது சாத்தியமற்றது. அந்நிய முதலீடு லாபம் கிடைக்கும் வரை மட்டுமே ஒரு நாட்டில் இருக்கும், லாபம் வேறு இடத்தில் கிடைத்தால், அந்நிய முதலீடு அந்நாட்டைவிட்டு பறந்தோடிவிடும். முன்பு அந்நிய முதலீட்டைப் புகழ்ந்து பேசிய மோடி அரசாங்கம், தற்போது அந்நிய முதலீடு குறைவது பற்றி கள்ள மௌனம் சாதிக்கிறது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க, மோடி அரசாங்கம் உள்நாட்டுத் தேவையை உருவாக்கி சந்தையை விரிவுபடுத்த முயற்சிப்பதாக கூறுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு தொடர்ந்து சலுகைகள் வழங்கியதால் எந்த பலனும் கிடைக்கவில்லை. முதலாளிகளுக்கு சலுகைகள் அளித்தால் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அரசாங்கம் நம்பியது. அப்படி நடந்திருந்தால், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்திருக்கும். ஆனால், 'உலக சமத்துவமின்மை அறிக்கையின்படி', நாட்டின் மொத்த வருமானத்தில் 23% வருமானம் 1 சதவீதம் மட்டுமே உள்ள பெரும் பணக்காரர்களின் சட்டைப் பைகளுக்கே செல்கிறது, மேலும் 40% க்கும் அதிகமான சொத்துக்களும் அவர்களிடமே குவிந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 100 பில்லியனர்கள் இருந்த நிலையில், இன்று அவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த பணக்காரர்களின் செல்வம் நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கப் பயன்படவில்லை.
தற்போது, வருமான வரி விலக்கு ரூ.12 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நடுத்தர வர்க்கத்தின் கைகளில் ரூ.1 லட்சம் கோடி சேமிக்கப்படும் என்று மோடி அரசாங்கம் நம்புகிறது. இந்த பணம் சந்தைக்கு வந்து உள்நாட்டுத் தேவையை உருவாக்குவதோடு, நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று நம்புகிறது.
இந்த அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோள், தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பது அல்ல, மாறாக அவர்கள் தற்போது சம்பாதிக்கும் வருமானத்தில் இருந்து சேமிப்பை அதிகரிப்பதன் மூலம் வாங்கும் சக்தியை அதிகரிப்பது பற்றி பேசுகிறது. வருமானத்தை அதிகரிப்பதென்பதும் சேமிப்பை அதிகரிப்பதென்பதும் வெவ்வேறான விஷயங்கள். 2014-20 காலகட்டத்தில், மோடி ஆட்சியின் முதல் 6 ஆண்டுகளில், தொழில்துறை தொழிலாளர்களின் மொத்த வருமானம் 3% குறைந்துள்ளது, அதே நேரத்தில் முதலாளிகளின் மொத்த லாபம் 13% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. எனவே, முதலாளிகளுக்கு வரிச்சலுகை அளிப்பதன் மூலமும், அவர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலமும், அவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதன் மூலமும், தொழிலாளர்களின் கூலி உயர்வை முடக்குவதன் மூலமும் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்று நினைப்பவர்கள் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்று சொன்னக் கதையாகத்தான் இருக்கிறது.
சமீபத்தில் வெளியான குடும்பங்களின் நுகர்வு செலவு பற்றியத் தரவுகள், ஒரு கிராமப்புற குடும்பம் மாதத்திற்கு சராசரியாக ரூ.8,079 மட்டுமே செலவிடுவதாகவும், நகர்ப்புற குடும்பங்கள் மாதத்திற்கு ரூ.14,528 மட்டுமே செலவிடுவதாகவும் கூறுகிறது. இது, நாட்டில் வசிக்கும் மக்களின் சராசரி வாங்கும் திறனைக் குறிக்கிறது; இதில் ரூ.12 லட்சம் மற்றும் அதற்கு மேல் சம்பாதிப்பவர்களும் அடங்குவர். ரூ.4 லட்சம் முதல் 12 லட்சம் வரை சம்பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை 5.6 கோடி மட்டுமே என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது. நாட்டின் 44 கோடி தொழிலாளர்களில் (விவசாயம் மற்றும் விவசாய பொருளாதாரத்தை நம்பி இருக்கும் கிராமப்புற தொழில்களும் இதில் அடங்கும்), 38 கோடி மக்களின் ஆண்டு வருமானம் ரூ. 1.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் என்பதே இதன் பொருள். இந்த 38 கோடி மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்காமல், எந்தவிதமான உள்நாட்டு தேவையையும் உருவாக்க முடியாது, வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியாது.
நடுத்தர வர்க்கத்தினரின் வரி சேமிப்பிலிருந்து தேவையை உருவாக்க முடியுமென்தெல்லாம், பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும்போது மட்டுமே சாத்தியமாகும். உணவு தானியங்களின் சில்லறை பணவீக்க விகிதம் சுமார் 10% ஆக உள்ளது. ஆனால், கொள்ளை இலாபம் ஈட்டுபவர்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தால் இந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. 12 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுபவரால் 80,000 ரூபாய் வரை சேமிக்க முடியும் என்பதும், இதனால் நுகர்வுக்கானத் தேவை அதிகரிக்கும் என்று கூக்குரலிடுவதெல்லாம், அதிகரித்து வரும் பணவீக்கத்தால் அடிபட்டுப் போகும்.
மோடி அரசாங்கம் பட்ஜெட் மூலம் முன்வைக்கும் கூற்றுக்களை இன்னும் ஆழமாகப் பார்த்தால், ஒரு பரிதாபகரமான நிலை வெளிப்படுகிறது. 12 இலட்சம் முதல் 24 லட்சம் வரை வருமானம் ஈட்டக்கூடிய குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 2.5 முதல் 3 கோடி என்று கருதினால், இந்தியாவில் நடுத்தர வர்க்க குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 8 முதல் 9 கோடியாக இருக்கும். வருமான வரியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் சலுகை வழங்குவது என்றால், ஆண்டுக்கு சராசரியாக 12,000 ரூபாய் அல்லது மாதத்திற்கு சராசரியாக 1000 ரூபாய் என ஒரு குடும்பத்திற்கு சேமிப்பாக எஞ்சும். இந்த சேமிப்பை வைத்துத்தான் நுகர்வுக்கானத் தேவையை உருவாக்கப் போகிறார்களாம்(?!). நடுத்தர வர்க்கத்தினருக்கு வழங்கப்படும் இந்த சலுகையை பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியுடன் ஒப்பிட்டுச் சொல்லுவது பொருத்தமாக இருக்கும். மேலும் இதற்கு பிரதம மந்திரி மத்திய வர்க்க சம்மான் நிதி என்றுகூட பெயர் வைத்துக்கொள்ளலாம்.
உண்மையில், மோடி அரசாங்கம் சேமிப்பைக் கொண்டு நுகர்வுக்கானத் தேவையை உருவாக்கப் போவதாக சொல்வதெல்லாம் வேடிக்கையானதே. இந்த வழிமுறையைப் பற்றி சிறிதளவாவது அக்கறை கொண்டிருந்திருந்தால்கூட, பெட்ரோலிய பொருட்களின் மீது மனம்போனப் போக்கில் விதிக்கப்படும் வரிகளைத் திரும்பப் பெற்றிருந்தால்கூட இவரின் வரி-சேமிப்பு பொருளாதார வளர்ச்சி உபாயத்திற்கு பயன்பட்டிருக்கும். அதவாது, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வின் காரணமாக ஏற்படும் பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தால் இவர்கள் சொல்லும் வழிமுறை பயனுள்ளதாக இருந்திருக்கும். மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதோடு, சேமிப்பின் மூலம் தேவையை உருவாக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் முடிந்திருக்கும். நடுத்தர வர்க்கம் உட்பட சாமானிய மக்கள் அனைவரும் இதனால் பயனடைந்திருப்பார்கள்.
ஆனால், மோடி அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் வேலைவாய்ப்பை உருவாக்குவதோ அல்லது தேவையை அதிகரிப்பதோ அல்ல. அவர்களின் நோக்கம், நடுத்தர வர்க்கத்தினரை வசப்படுத்தி டெல்லி தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே. பாரதிய ஜனதா கட்சியின் இந்த மறைமுக நிகழ்ச்சி நிரல் (எல்லா காலங்களிலும் வெளிப்படுத்தியே வந்துள்ளனர்), டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது, மோடி-ஷா கும்பல் இந்த வரி சேமிப்பு பிரச்சினையை தேர்தல் பிரச்சார உத்தியாக மாற்ற முயன்றபோது வெளிப்பட்டது.
மோடி அரசாங்கம் வேலைவாய்ப்பு நெருக்கடியைத் தீர்ப்பதிலும், உள்நாட்டு பொருளாதாரத்தில் தேவையை உருவாக்குவதன் மூலம் மந்தநிலையிலிருந்து மீட்டெடுப்பதிலும் உண்மையாலுமே அக்கறை கொண்டிருந்திருந்தால், மத்திய அரசில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு உத்தரவிட்டிருக்கும். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான (MNREGA) பட்ஜெட் ஒதுக்கீட்டை கணிசமாக உயர்த்தியிருக்கும்; ஊதியங்களையும் வேலை நாட்களையும் அதிகரித்திருக்கும்; நகர்ப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை அறிவித்திருக்கும்; அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு கண்ணியமான வாழ்வாதாரத்திற்கான குறைந்தபட்ச ஊதியத்தை அறிவித்திருக்கும்; விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மற்றும் உற்பத்திக்கான சி-2 செலவில் 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்திருக்கும்; தொழிலாளர்களை கொத்தடிமைகளாக மாற்றும் தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற்றிருக்கும். இவை அனைத்தும் சாமாணியனின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் தேவையை உருவாக்கி, இறுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கும்.
ஆனால், மோடி அரசு இதைச் செய்யவில்லை, ஏனென்றால் அவர்களின் பொருளாதார தத்துவம் கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாபம் பாதிப்படைவதை ஒருபோதும் அனுமதிக்காது.
(சஞ்சய் பரதே, சத்தீஸ்கர் கிசான் சபாவின் துணைத் தலைவராக உள்ளார், இது அகில இந்திய கிசான் சபையுடன் இணைக்கப்பட்டுள்ளது)
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/02/an-attempt-to-pull-the-economy-forward-with-the-help-of-tax-savings-of-the-middle-class/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு