தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு கொள்கை மனுஸ்மிருதியால் உந்தப்பட்டுள்ளது

தி வயர் - தமிழில்: வெண்பா

தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு கொள்கை மனுஸ்மிருதியால் உந்தப்பட்டுள்ளது

மத்திய தொழிலாளர் அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு கொள்கை வரைவு, பண்டைய இந்து நூலான மனுஸ்மிருதியிலிருந்து உந்தப்பட்டுள்ளது. இந்த நூல் சமூக, பொருளாதார மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகளைப் போற்றி, வலுப்படுத்துகிறது என்று பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

இந்த தொழிலாளர் கொள்கை வரைவில், உழைப்பு (labour) “ராஜ்தர்மம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சமூக நெறிமுறைகள் உழைப்பை புனிதமான தார்மீகக் கடமையாகக் கருதுகின்றன என்றும், இது சமூக நல்லிணக்கம், பொருளாதார வளம் மற்றும் கூட்டு செழிப்பை நிலைநிறுத்துகிறது என்றும் அக்கொள்கை கூறுகிறது.

“வேலை என்பது வெறுமனே வாழ்வாதாரத்திற்கான வழிமுறை அல்ல, மாறாக தர்மத்தின் பரந்த ஒழுங்கிற்கான பங்களிப்பாகும். இந்த கண்ணோட்டம் ஒவ்வொரு தொழிலாளியையும்—அவர் கைவினைஞராகவோ, விவசாயியாகவோ, ஆசிரியராகவோ, அல்லது தொழிற்சாலை தொழிலாளியாகவோ இருந்தாலும்—சமூக உருவாக்கத்தின் சுழற்சியில் இன்றியமையாத பங்கேற்பாளராக அங்கீகரிக்கிறது,” என்று அந்தக் கொள்கை கூறுவதாக தி டெலிகிராப் தெரிவித்துள்ளது.

“மனுஸ்மிருதி, யாஜ்னவல்கியஸ்மிருதி, நாரதஸ்மிருதி, சுக்ரநீதி மற்றும் அர்த்தசாஸ்திரம் போன்ற பண்டைய நூல்கள் ‘ராஜ்தர்மம்’ என்ற கருத்தின் மூலம் இந்தக் கொள்கையை வெளிப்படுத்தின. இது நீதியை உறுதி செய்தல், நியாயமான ஊதியம் வழங்குதல், மற்றும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது ஆகியவற்றில் ஆட்சியாளரின் கடமையை வலியுறுத்துகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) உடன் இணைந்த அகில இந்திய தொழிற்சங்கமானது (AITUC), தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்காமல் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது - உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் கருத்திற்காக அதை இறுதி செய்வதற்கு முன், மத்திய தொழிற்சங்கங்களுடன் விவாதம் தொடங்கப்பட வேண்டும் என்றும் AITUC கோரியுள்ளது.

பண்டைய காலங்களில் தொழிலாளர்களுக்கு உரிமைகள் இல்லை, ஊதிய முறையும் இல்லை என்ற உண்மையைக் குறிப்பிட்டு, பண்டைய இந்து நூல்களிலிருந்து கொள்கையை உருவாக்குவதற்கான காரணத்தை வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) அமைப்புசாரா மற்றும் துறைசார் தொழிலாளர் ஆய்வு மையத்தின் பேராசிரியர் பிரதீப் ஷிண்டே செய்தித்தாளிடம் கூறியதாவது: “இந்து நூல்களால் முன்வைக்கப்படும் ‘ஸ்ரமம்’ (உழைப்பு) என்ற கருத்தை மகிமைப்படுத்துவது, மத சடங்குகளில் தங்கள் சடங்கு நடைமுறைகளுக்காக பிராமணர்கள் மிக உயர்ந்த அந்தஸ்தை அனுபவிக்கும் அதே சாதி அடிப்படையிலான படிநிலை உழைப்புப் பிரிவை வலுப்படுத்த எடுக்கும் முயற்சியே ஆகும்.”

“தொழிலாளர் உரிமைகளின் பின்னணியில் ஸ்மிருதிகள் மேற்கோள் காட்டப்படுவது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது பிராமணர்களின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாக மீண்டும் வலியுறுத்த முயற்சிக்கிறது என்பதைக் காட்டுகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளால் இது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நம்புகிறது,” என்று ஷிண்டே மேலும் கூறினார்.

உழைப்பை தர்மம் அல்லது ராஜ்தர்மத்துடன் ஒப்பிடுவது என்பது தவறான கருத்து. ஏனெனில் அது தொழிலாளர்களின் உரிமைகள், நியாயமான ஊதியங்கள் மற்றும் பாதுகாப்பை புறக்கணிக்கிறது என்றும் அவர் கூறினார்.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://m.thewire.in/article/labour/draft-national-labour-and-employment-policy-inspired-by-manusmriti-draws-criticism

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு