ராகுல் காந்தி மீதான மோடி அரசின் பாசிச நடவடிக்கை குறித்து வெளிவந்த அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் விமர்சனங்கள்
செந்தளம் செய்திப் பிரிவு
10 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல மார்ச் மாதத்தில் தான் அப்போதிருந்த காங்கிரஸின் கூட்டணி ஆட்சிக்கு எதிராக அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம், 2ஜி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் போன்ற விசயங்களை விசாரனை செய்வதற்கு நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்க வேண்டும் என்ற பெயரில் பல்வேறு போராட்டங்களை பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலமாக முன்னெடுத்தனர். இன்றும் மோடியின் குஜராத் கலவரம் குறித்து பிபிசியால் வெளியிடப்பட்ட ஆவணப்படம், ஹிண்டன்பர்க் அறிக்கை, ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரை, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பு குறித்தும், அதானி-மோடியின் ஊழல் குறித்தும் ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு மத்தியில் தான் இந்த கிரிமினல் அவதூறு வழக்கிற்கான சிறைத் தண்டனை தீர்ப்பும் வெளியாகியுள்ளது.
'எல்லா திருடர்களும் ஏன் 'மோடி' என்ற ஒரே குடும்ப பெயரை வைத்துள்ளனர்? என்று கூறியதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி மீது மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டது. இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அந்த வழக்கின் தீர்ப்பு மார்ச் 23 அன்று வெளியானதைத் தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. கடந்த திங்கள் கிழமையன்று அரசு பங்களாவை காலி செய்யும் படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.
பிற நாடுகளின் உள்விவகாரங்களின் தலையிடுவது இயல்பானதே’ என்கிறது அமெரிக்கா
“சட்டத்தின் ஆட்சியும், நீதி மன்றங்களின் சுதந்திரமும் மதிக்கப்படுவதில் தான் எந்தவொரு ஜனநாயக நாட்டின் அஸ்திவாரமும் அடங்கியுள்ளது. ராகுல் காந்தியின் வழக்கு விசாரனை குறித்து தொடர்ந்து கவனித்து வருகிறோம். கருத்து சுதந்திரம் உட்பட ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதில் தங்களுக்கும் அக்கறை உண்டென்பதால் இது தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசிப்போம்.” என்று கடந்த திங்கள் கிழமை நடந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க நாட்டின் வெளியுறவுத் துறைக்கான துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறியிருந்தார்.
இந்தியாவுடன் கலந்தாலோசிக்கும் போது இரு நாடுகளின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான வழியாக, கருத்து சுதந்திரம் உட்பட மனித உரிமைகளை பாதுகாத்தல், ஜனநாயக விழுமியங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் தொடர்ந்து எடுத்துக்கூறுவோம் என்று கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்காவுடன் இருதரப்பு உறவு கொண்டுள்ள எல்லா நாடுகளிலும் உள்ள எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, ஒருங்கிணைந்து செயல்படுவது போன்றவையெல்லாம் இயல்பான விசயம் தான் என்று வேதாந்த் படேல் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எ.ஸ். ஜெய்சங்கரிடம் இந்த விவகாரம் குறித்து கேட்ட போது, “எந்த நாட்டின் தூதர்களும் இது குறித்து இன்னும் தம்மிடம் கேள்வியெழுப்பவில்லை” என்று பதிலளித்திருந்தார்.
ஒரு பிரதான ஆளும் வர்க்க கட்சியான காங்கிரசின் மீதே தொடுக்கப்படும் பாசிச தாக்குதலை திசைதிருப்ப, காங்கிரஸ் சாதிய அரசியல் செய்வதாக அதன் மீதே குற்றம் சுமத்துகிறது பாஜக.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ன சொல்கிறார்கள்?
சிலிக்கான் வேலி பகுதியின் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும், இந்தியாவுக்கான மற்றும் இந்திய – அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த நாடாளமன்ற உறுப்பினர்களுக்கான சங்கத்தின் துணைத் தலைவரான கண்ணா என்பவர் “ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட நிகழ்வு என்பது காந்தியக் கொள்கைக்கும், இந்தியாவின் மகத்தான சிந்தனைக்கும் இழைக்கப்பட்ட துரோகம்” என்று டிவிட்டரில் கருத்து பதிவு செய்திருந்தார்.
“இந்த நிகழ்வு இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு துக்க தினமாகிவிட்டது. ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்ததன் மூலம் மோடி சர்க்கார் இந்தியர்களின் கருத்து சுதந்திரத்திற்கு மட்டுமல்லாது உலகம் முழுதும் உள்ள இந்தியர்களின் சுதந்திரத்திற்கே சாவு மணி அடிக்கிறது” என்று அமெரிக்காவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அயல்நாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் கூறியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் அயல்நாட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பாக ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு என்பது “ஜனநாயக விரோத, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான, நாடாளுமன்ற மான்பை மீறிய செயல்” என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
“அதானி பிரச்சினையிலிருந்து நாட்டு மக்களை திசைத்திருப்புவதற்கான மோடி அரசாங்கம் இவ்வாறு செய்துள்ளது” என்று அந்த அமைப்பின் தலைவர் கமல் தலிவால் கூறினார்.
ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் டிவிட்டர் பதிவு
அமெரிக்காவைத் தொடர்ந்து ஜெர்மனியும் தனது வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மூலம் இந்த விவகாரம் குறித்து கவனித்து வருவதாக கூறியிருந்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான திக் விஜய சிங் என்பவர் ஜெர்மனி அரசின் கருத்திற்கு நன்றி கூறி டிவீட் செய்திருந்தார். இதற்கு மத்திய சட்ட அமைச்சர் கிரன் ரிஜிஜீ அந்நிய நாடுகளை நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு துணை போனதற்கு நன்றி என்று நக்கலாக கூறியதோடு, “அந்நிய நாடுகளின் தலையீட்டால் இந்திய நீதிமன்றத்தை ஒன்றும் அசைத்துப் பார்த்துவிட முடியாது என்பதை மறவாதீர். அந்நிய நாடுகளின் தலையீட்டை ஒரு போதும் இந்தியா ஏற்காது. ஏனெனில் இன்று நடப்பது திரு. நரேந்திர மோடிஜியின் ஆட்சி” என்று டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
ஐ.நா சபையின் அறிக்கை
ஜ.நா சபைக் கூட ராகுல் காந்தி விவகாரத்தில் தலையிட்டு செய்தியறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. “ராகுல் காந்தியின் விவகாரம் குறித்து நாங்கள் அறிவோம், மேலும் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதும் தெரியும். மற்ற எல்லா வழக்குகளிலும் எப்படியோ அதே போல இவ்வழக்கிலும், நீதி வழங்குவதில் எவ்வித அரசியல் தலையீடும் இருக்கக்கூடாது, அடிப்படையான ஜனநாயகக் கொள்கைகள் பின்பற்றப்படுதல் வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்று அமெரிக்கா அரசின் நிலைப்பாட்டை அப்படியே மறுபதிப்பு செய்துள்ளது ஜ.நா.
பா.ஜ.க - நீதிமன்ற கூட்டு பாசிசம்
பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனுக்கு மறுக்கப்பட்ட ஜாமீன், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக மருத்துவ காரணங்களுக்காக கூட கவிஞர் வரவர ராவ் அவர்களுக்கு மறுக்கப்பட்ட ஜாமீன் அர்னாப் கோசாமிக்கு உடனடியாக வழங்கப்பட்டது; CAA போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவிய கபில் மிஸ்ரா என்ற பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு செய்யச் சொன்னதற்காக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியை இடமாற்றம் செய்தது; காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 370 சட்டப்பிரிவை ரத்து செய்தபோது ஒட்டுமொத்த மக்களையும் வீட்டுச் சிறையில் வைத்தது, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது, ஊடகவியலாளர்களை அனுமதிக்காதது, அயோத்தி தீர்ப்பு, பணமதிப்பு நீக்க நடவடிக்கை போன்ற விசயங்களில் மத்திய அரசுக்கு துணைபோனது; கோவிட் பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சித்த பத்திரிக்கையாளர்கள், மருத்துவர்கள் மீது அவதூறு வழக்கு தொடுத்தை வரவேற்று தண்டனை வழங்கியது உட்பட பல்வேறு பாசிச நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் ஊடாகவே நடந்தேறியுள்ளது என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விசயமாகும். அதே போல சூரத் உயர்நீதிமன்றம் வழங்கிய சிறைத் தண்டனையும், தீர்ப்பு வெளியாகிய நாளன்றே ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதென்பது ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கான பாசிச நடவடிக்கையே ஆகும்.
- செந்தளம் செயதிப் பிரிவு