நலிந்தோரை மென்மேலும் கையறு நிலைக்குள் தள்ளும் ஒன்றிய அரசாங்கம்
தமிழில்: விஜயன்

2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியத்தை அரசாங்கம் சற்றும் உணராமல் அலட்சியப்போக்கோடு செயல்படுகிறது. குறிப்பாக, தேசிய சமூக உதவித்தொகைத் திட்டத்துக்கான (NSAP) நிதி ஒதுக்கீடு சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ₹9,652 கோடியாகவே நீடிக்கிறது. ஏழை எளிய மக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்கள் போன்ற நலிந்த பிரிவினரின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த ஓய்வூதியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் உதாசீனம் செய்வது அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
2014-15ஆம் ஆண்டில், தேசிய சமூக உதவித்தொகைத் திட்டத்துக்கு (NSAP) மொத்த பட்ஜெட்டில் இருந்து 0.58% நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், 2025-26ஆம் ஆண்டில் இது கவலைக்குரிய விதமாக 0.19% ஆகச் சரிந்துள்ளது. 2007ஆம் ஆண்டில், NSAP திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ₹8,447 கோடியாக இருந்தது. அதன்பிறகு பணவீக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு 100%-ஐ தாண்டி உயர்ந்துவிட்டது. ஆனால், ஓய்வூதிய ஒதுக்கீட்டில் எந்தவித மாற்றமும் இதுவரையில் செய்யப்படவில்லை. பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இருப்பினும், NSAP திட்டத்துக்கான பட்ஜெட் தொடர்ந்து குறைந்து வருவது கவலைக்குரியது. இந்தத் திட்டத்தின்கீழ் தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை மிகவும் சொற்பமானது. இந்தத் தொகையை வைத்துக்கொண்டு ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவது என்பது மிகவும் கடினம். மேலும், 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தத் தொகை உயர்த்தப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தேசிய சமூக உதவித் திட்டத்திற்கான (NSAP) நிதி ஒதுக்கீடு எவ்வித உயர்வுமில்லாமல் அப்படியே உறைந்து போயுள்ளது. விண்ணை முட்டும் அளவிற்கு உயர்துள்ள பணவீக்கத்தையோ, அன்றாடங் காய்ச்சிகளின் வாழ்க்கைச் செலவுகளையோ கருத்தில் கொள்ளவில்லை. 2014ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்திற்கு 10,547 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், 2025-26ஆம் ஆண்டில் இது 9,562 கோடியாகச் சுருங்கிவிட்டது. இது, நிதி ஒதுக்கீட்டில் செய்யப்பட்ட நேரடியான வெட்டு மட்டுமல்ல, பயனாளிகளின் வயிற்றில் அடித்த செயலாகும். பணவீக்கத்தின் அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால், ஓய்வூதியங்களின் உண்மையான மதிப்பு அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. இதனால், ஏற்கனவே வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் பயனாளிகள் மேலும் பரிதவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
தற்போது, NSAP திட்டத்தின் கீழ் சுமார் 3 கோடி பயனாளிகள் மூன்று துணைத் திட்டங்களின் மூலம் மிகக் குறைந்த நிதி உதவி பெற்று வருகின்றனர்:
1. முதியோர்களுக்கான இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS): இந்தத் திட்டத்தின் மூலம் 2.21 கோடி முதியோர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
2. விதவைகளுக்கான இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டம் (IGNWPS): இதன் மூலம் 65.73 லட்சம் விதவைகள் பயனடைந்து வருகிறார்கள்.
3. ஊனமுற்றோர்களுக்கான இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டம் (IGNDPS): இதன் மூலம் 10.9 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பயனடைந்து வருகிறார்கள்.
NSAP திட்டத்தின்கீழ், முதியோர்களுக்கு மாதம் 200 ரூபாயும், விதவைகளுக்கும், ஊனமுற்றோர்களுக்கும் 300 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்த அற்பத் தொகை அவர்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. இதற்கு பெயர் உதவி செய்தல் அல்ல, கைவிடுவதாகும். ஓய்வூதியத்தை பணவீக்கத்துடன் இணைக்காதது அரசாங்கத்தின் கொள்கைகள் அடைந்திருக்கும் மாபெரும் தோல்வியை பறைசாற்றுகிறது; இது நலிவடைந்த பிரிவினரை மென்மேலும் கையறு நிலைக்குள் தள்ளுகிறது.
மேலும், பயனாளிகளைத் தீர்மானிக்க 23 வருடங்கள் பழமையான அதாவது 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பயன்படுத்துவது அநியாயமானது. ஏனெனில், இந்தியாவின் மக்கள் தொகையும், சமூக பொருளாதார நிலையும் இப்பொழுது முற்றிலும் மாறிவிட்டது. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களைத் (BPL) தவறாக வகைப்படுத்துவதால், உண்மையில் ஆதரவு தேவைப்படுபவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைப்பதில்லை.
அரசாங்க ஓய்வூதியதாரர்களுக்கும், வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் முதியோர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியங்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உள்ளது.
ஏழ்மை நிலையில் பரிதவிக்கும் முதியோர்களைக் கண்டுகொள்ளாமல், அரசாங்கம் தனது சொந்த ஊழியர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் போலக் காட்டிக் கொள்கிறது. ஏறத்தாழ அறுபத்து நான்கு லட்சத்து எண்பத்து எட்டு ஆயிரம் (64.88 லட்சம்) அரசு ஓய்வூதியம் பெறுவோர் உள்ளனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) நான்கு விழுக்காடு (4%) இவர்களுக்காகவே அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த ஒரு ஆண்டிலேயே, அகவிலை நிவாரணம்/அகவிலைப்படியை (Dearness Relief (DR) / Dearness Allowance (DA)) மூன்று விழுக்காடு உயர்த்தியதால் அரசுக்கு பதின்மூவாயிரம் கோடி ரூபாய் (₹13,000 கோடி) கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இதோடு, எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைக்கும் ஊதிய உயர்வையும் சேர்க்கும் பொழுது செலவு மலையளவு உயர்ந்து நிற்கும். ஆனால், ஏழைகளின் நலனுக்கென ஒரு துரும்பையும் கிள்ளிப்போட மனமில்லாமல் அரசு கஞ்சத்தனம் செய்கிறது. இது மனிதத்தன்மையற்ற புறக்கணிப்பு மட்டுமல்ல; வளப் பகிர்வில் செய்யப்படும் மன்னிக்க முடியாத குற்றமுமாகும்.
மாநில அரசுகள் மீது ஏற்றப்படும் நிதிச் சுமை
தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP) என்பது மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும். இதன் காரணமாக, மாநில அரசுகளும், மத்திய அரசுக்கு ஈடாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால், மத்திய அரசின் கஞ்சத்தனமான நிதி ஒதுக்கீட்டின் காரணமாக, மாநிலங்கள் மிகக் குறைந்த ஓய்வூதியத்தை வழங்குவதற்குகூட தங்கள் சொந்த வருவாயிலிருந்து ஐந்து முதல் பத்து மடங்கு அதிகமாகச் செலவு செய்ய வேண்டிய அவல நிலையில் உள்ளன. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசின் இந்த பாராமுகம் மேலும் சுமையை அதிகரிக்கிறது.
பென்ஷன் பரிஷத் அமைப்பின் கோரிக்கைகள்
தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக, எண்ணற்ற மக்கள் சொல்லொணாத் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். இது தற்செயலான விளைவு அல்ல, மாறாக, அறிந்து எடுக்கப்பட்ட திட்டமிட்ட கொள்கை முடிவு ஆகும். பென்ஷன் பரிஷத் அமைப்பு பல காலமாக சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது:
• அனைவருக்கும் பொதுவான, பங்களிப்பு கோராத ஓய்வூதியம்: ஒவ்வொரு பயனாளிகளுக்கும் மாதம் குறைந்தபட்சம் ₹4,000 ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். இதில் மத்திய அரசும், மாநில அரசும் சமமான பங்கினை அளிக்க வேண்டும்.
• விலைவாசி உயர்வுக்கேற்ப மாறும் ஓய்வூதியம்: பணவீக்கம் அதிகரிக்கும்போது, ஓய்வூதியத்தின் உண்மை மதிப்பை பாதுகாக்கும் வகையில், அவ்வப்போது ஓய்வூதியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
• எல்லாருக்கும் சமூகப் பாதுகாப்பு: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பயன்பெறும் தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்கச் செய்ய வேண்டும். காலாவதியாகிப்போன வறுமைக் கோட்டின் பழைய கணக்குகளைக் உதறிவிட்டு, சமூகத்தில் உள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
• ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது: தேசிய சமூக உதவித் திட்டத்தின் (NSAP) கீழ் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற விதியை நீக்க வேண்டும். ஆதார் இல்லை என்பதற்காக எந்தவொரு நபருக்கும் ஓய்வூதியம் மறுக்கப்படக் கூடாது.
தற்போதைக்கு செய்யப்படும் சிறு சிறு மாற்றங்கள், உயர்வுகள் எந்தவிதமான பலனையும் அளிக்காது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஓய்வூதிய முறையையும் முழுமையாக மறுசீரமைக்க வேண்டியது அவசியம். வயதானவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்க இருப்பதால், சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. சமூகப் பாதுகாப்பு என்பது நாட்டின் அடிப்படையான ஒன்றாக இருக்க வேண்டுமே தவிர, மூன்றாம்பட்சம், நான்காம்பட்சமான விசயமாகக் கருதக் கூடாது.
விதவை, முதியோர் அல்லது ஊனமுற்றோர் என ஒவ்வொருவருக்கும் சமூகப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வது அரசின் தலையாய கடமை. இந்த ஓய்வூதியங்கள் மேலும் குறைக்கப்பட்டால், பல கோடி மக்கள் கையறு நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனால், யாருக்கு உண்மையில் உதவி அதிகம் தேவையோ, அவர்களின் நலன் பின்னுக்குத் தள்ளப்படும் சூழ்நிலையே உருவாகும்.
=============================================================================================
சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும், பென்ஷன் பரிஷத் அமைப்பு கோரிக்கை
இந்தியாவில் 10.4 கோடிக்கும் அதிகமான மூத்த குடிமக்கள் உள்ளனர். இவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவானதாக இருப்பது கவலைக்குரியது. தேசிய சமூக உதவித் திட்டத்தின் (NSAP) கீழ் ஓய்வூதியங்களுக்காக ₹9,500 கோடி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மூத்த குடிமகனுக்கும் மாதத்திற்கு வெறும் 200 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இந்தத் தொகை 2007 ஆம் ஆண்டிலிருந்து மாற்றப்படாமலே உள்ளது என்பது மிகவும் வருந்தத்திற்குரியதாகும். 2007-ஆம் ஆண்டில், NSAP திட்டத்திற்கு 8,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அப்போதைய இந்தியாவின் மொத்த பட்ஜெட் என்பது 1,52,328 கோடியாகும். ஆனால், 2023-24 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த பட்ஜெட் என்பது 45,03,097 கோடியாகப் பல மடங்கு அதிகரித்திருந்தாலும், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு என்பது 9,500 கோடியாகவே உள்ளது. அதாவது, பட்ஜெட் பல மடங்கு அதிகரித்திருந்தும், முதியோர்களுக்கான ஓய்வூதியம் அதே அளவிலேயே இருப்பது ஏற்கத்தக்கதல்ல.
2007 முதல் 2023 வரை இந்தியாவின் பணவீக்கம் 100 சதவீதமளவிற்கு உயர்ந்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 6.95 சதவீதமளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது எனலாம். 2007-இல் 200 ரூபாயாக இருந்த ஓய்வூதியம், 2023-இல் பணவீக்கத்தின் காரணமாக ₹586.38 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஓய்வூதியம் கடந்த 16 ஆண்டுகளாக மாற்றப்படாமல் ஒரே அளவிலேயே உள்ளது. பணவீக்கத்தின் அதிகரிப்புடன் ஒப்பிடும்போது ஓய்வூதியம் உயரவே இல்லை. இது மூத்த குடிமக்களை வறுமையில் தள்ளும் செயல். ஓய்வூதியத்தின் உண்மையான மதிப்புக்கும் பணவீக்கத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம் என்பது பொருத்தமற்றதாக உள்ளது. இந்தத் தேக்க நிலை, ஓய்வூதியம் பெறுபவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறுவதோடு மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு வளங்களை ஒதுக்குவதில் உள்ள பாரபட்சத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த ஓய்வூதியம் முதியோர்களின் வாழ்வாதாரத்திற்குப் போதுமானதாக இல்லை என்பதோடு அவர்கள் கண்ணியமாக வாழ்வதற்குண்டான வாய்ப்பையே கேள்விக்குறியதாக்குகிறது.
2014-ஆம் ஆண்டு கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் தேசிய சமூக உதவித் திட்டத்தின் (NSAP) கீழ் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை நிர்ணயிக்கப்பட்டது. 60 முதல் 79 வயது வரை உள்ளவர்களுக்கு மாதம் 200 ரூபாய் என்றும், 79 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் 500 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. 18 முதல் 79 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் 40 முதல் 59 வயது வரை உள்ள விதவைகளுக்கும் மாதம் 300 ரூபாய் வழங்கப்படும் என கூறியிருந்தது. இந்த உதவித்தொகை, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மாநில அரசுகள், மத்திய அரசின் பங்களிப்புடன் கூடுதலாக நிதி உதவி வழங்க முடியும். இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் உதவித் தொகையின் அளவு மாறுபடுகிறது. உதாரணமாக, இராஜஸ்தான் மாநிலம் ஆண்டுக்கு 1 கோடி பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக சுமார் 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. இதனோடு ஒப்பிடும்போது, மத்திய அரசின் பங்களிப்பு எந்தளவிற்கு பற்றாக்குறையாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய முறையை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளாகவே செவிடன் காதில் சங்கூதிய கதையாகத்தான் இருந்து வருகிறது. ஓய்வூதியம் பெறுபவர்கள் 3-4 மாதங்கள் வரை தாமதமாகப் பணம் பெறுகின்றனர். இது உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானதாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, நேரடி வங்கிப் பரிமாற்றம், ஆதார் அட்டையை ஓய்வூதியத்துடன் இணைப்பது போன்ற நிர்வாக நடைமுறைகளால், பாதிக்கப்படக்கூடிய மக்கள் மென்மேலும் வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை UDID வலைவாசலில்(போர்ட்டல்) பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணை, நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குப் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, ராஜஸ்தானில், அம்மாநிலத்தின் ஜன் ஆதார் அமைப்பை UDID போர்ட்டலுடன் இணைக்கத் தேவையான API அனுமதியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததால், மார்ச் 2024 முதல் புதிய மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தியாவில், சரியான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால், ஓய்வூதியம் பெற முடியாமல் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பாதிக்கப்படக்கூடியவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து, அவர்களை "ஆயுள் தண்டனை கைதி போல அனைத்து சட்ட உரிமைகளையும் இழந்ததற்கு"(Civil Death) சமமாகக் மாற்றிவிடுகிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், முதியோர்களும், ஓய்வூதியம் பெறுவோரும் பல இன்னல்களை சந்தித்தனர். குறிப்பாக, உடல்நலப் பிரச்சினைகள், நடமாடுவதில் சிரமம், ஓய்வூதியம் பெறுவதில் தாமதம் போன்ற சவால்களை எதிர்கொண்டனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அதிகமாக இருந்தாலும், நேபாளம், இலங்கை, பொலிவியா போன்ற நாடுகளை விட இந்தியாவின் சமூக பாதுகாப்பிற்கான ஓய்வூதியம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டில், முதியோர்களுக்கும், நலிந்தோர்களுக்குமான தேவைகள் பூர்த்தி செய்யப்படுமா அல்லது "விக்ஸித் பாரத்" (வளர்ந்த இந்தியா) என்ற பிம்பத்தை மட்டும் காண்பித்து, "சப் சங்கா சி" (எல்லாம் நன்றாக இருக்கிறது) என்று கூறி, மக்களின் தேவைகளை புறக்கணிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எங்கள் கோரிக்கைள்
1. பங்களிப்பற்ற, அனைவருக்குமான ஓய்வூதியம்: இந்தியாவில், குறைந்தபட்ச கூலியின்(ரூ. 249 ) சராசரி பாதி என்பது ஒரு நாளைக்கு 125 அல்லது மாதத்திற்கு 3,750 ரூபாயாக இருக்கிறது. மூத்த குடிமக்கள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய பிரிவினர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் 4,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும். இந்தத் தொகையை மத்திய-மாநில அரசுகள் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். மத்திய அரசின் பங்கு ₹2,000 ஆக இருக்கும் பொழுது, ஆண்டுக்கு சுமார் ₹1.2 லட்சம் நிதி கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இதற்கும் குறைவாக நிதி ஒதுக்குவதென்பது - குறிப்பாக விலையேற்ற காலத்தில், ஓய்வூதியர்கள் மோசமாக பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்கிற சமயத்தில் குறைவாக நிதி ஒதுக்குவதென்பது அப்பட்டமான மனித்தன்மையற்ற செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.
2. பணவீக்கத்துடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியம்: ஓய்வூதியம் பணவீக்கத்துடன் இணைக்கப்பட்டு, அவ்வப்போது திருத்தப்பட வேண்டும். அதாவது, பணவீக்கம் காரணமாக ஓய்வூதியத்தின் மதிப்பு குறையாமல் இருக்க, அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இது ஓய்வூதியம் பெறுபவர்களின் வாங்கும் சக்தியைப் பாதுகாக்கும்.
3. அனைவருக்கும் ஓய்வூதியம்: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் வரும் அனைத்து குடும்பங்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். வறுமைக் கோட்டிற்குக் கீழே (BPL) என்ற அளவுகோலைப் பயன்படுத்தி பயனாளிகளை விலக்கக் கூடாது. ஓய்வூதியம் என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய உரிமை.
4. ஆதார் கட்டாயம் என்ற விதியை ரத்து செய்ய வேண்டும்: தேசிய சமூக உதவித் திட்டத்தின் (NSAP) கீழ் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்படக் கூடாது. ஆதார் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு, ஓய்வூதியம் பெறும் பயனாளிகளை விலக்கக் கூடாது.
இந்த வாதங்களின்படி, 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஓய்வூதியங்களுக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கப்படாவிட்டால், அது ஒரு பெருங் குற்றமே. பணவீக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியத் தொகையை உயர்த்தாமல் இருப்பது, பாதிக்கப்படக்கூடிய மக்களின் துன்பத்தை மென்மேலும் அதிகரிப்பதோடு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது. அரசு தனது முத்தக் குடிமக்கள், பாதிக்கப்படக்கூடிய பிரிவினர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சமூகப் பாதுகாப்பிற்கான ஓய்வூதியம் என்பது தான-தர்மம் போன்றதல்ல; இது ஒரு நியாயமான, சமத்துவ சமூகத்தின் அடிப்படை உரிமை. இந்த ஓய்வூதியங்கள் தான-தர்மமாக இல்லாமல் உரிமையாகக் கருதப்பட வேண்டும்.
- விஜயன் (தமிழில்)