கேரளாவில் உயர்கல்வி தனியார்மயம் - எதிர்த்து போராடிய CPI ஐ ஒடுக்கும் CPM அரசு
தி ஹிந்து

கேரள கல்வித்துறையில் புதிய அத்தியாயம்: தனியார் பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றம்
முக்கியத்துவம் வாய்ந்த இந்த புதிய சட்டம் கேரளாவில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவவும் செயல்படவும் அனுமதிக்கிறது; இந்த திட்டம் முதன்முதலில் முன்வைக்கப்பட்டு ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதியன்று, கேரள சட்டமன்றம் "கேரள மாநில தனியார் பல்கலைக்கழகங்கள் (நிறுவுதல் மற்றும் நெறிமுறைப்படுத்துதல்) மசோதா, 2025" என்னும் புதிய சட்டத்தை நிறைவேற்றியது. இது கேரளாவின் கல்வி முறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ள ஒரு முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இந்தச் சட்டத்தின் மூலம், இனி தனியார் பல்கலைக்கழகங்கள் மாநிலத்தில் நிறுவப்பட்டுச் செயல்பட அனுமதிக்கப்படும். தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிக்கும் திட்டம் முதன்முதலில் முன்வைக்கப்பட்டு சுமார் பத்து ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் மூன்று நாள்களாக நடைபெற்ற நீண்ட, முக்கியமான விவாதங்களுக்குப் பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த காலகட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏறத்தாழ 1,400 திருத்தங்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த விவாதத்தில் தீவிரமாகப் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் கவலைகளையும், ஆட்சேபனைகளையும் வெளிப்படுத்தினர், பொருத்தமான கேள்விகளை எழுப்பினர், மேலும் மசோதாவின் பல்வேறு கூறுகளை மேம்படுத்துவது குறித்து தங்கள் கருத்துக்களை வழங்கினர்.
எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குறைபாடுகள்
எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் தமது ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தினார். இந்த மசோதாவை ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) முழுமையாக எதிர்க்கவில்லை என்றாலும், இதிலுள்ள சில குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து ஐயங்களும் கவலைகளும் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பல்கலைக்கழகங்கள் குறித்த எண்ணம் முதலில் எழுந்ததிலிருந்து கேரளாவின் உயர்கல்விச் சூழல் பெருமளவு மாறியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்த நடவடிக்கை அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்தார். ஏற்கெனவே பல அரசு உதவி பெறாத (சுயநிதி) கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது அரசு மற்றும் பகுதி அரசு உதவி பெறும் கல்லூரிகள் கூட மாணவர் சேர்க்கையில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன என்று காங்கிரஸ் தலைவர் சதீசன் தெரிவித்தார்.
இந்நிலையில், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டால், இப்பிரச்சினை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. அதிகமான மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேருவதை விரும்பாமல் போகலாம், இது மாணவர் சேர்க்கை விகிதம் மேலும் சரிய வழிவகுக்கும்.
கூடுதலாக, தனியார் பல்கலைக்கழகங்களுக்குப் பிற இடங்களிலும் கிளை வளாகங்களை (வெளியக மையங்களை) நிறுவ அனுமதிப்பது அரசாங்கப் பல்கலைக்கழகங்களின் நிலையை மேலும் வலுவிழக்கச் செய்து, முக்கியத்துவமற்ற நிலைக்கு தள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
பல பத்தாண்டுகளாகச் சீரான முறையில் இயங்கி வருவதோடு, நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்ற கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம் என்பதையும் சதீசன் சேர்த்துக் கூறினார். இத்தகைய அனுபவம் வாய்ந்த கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களின் சிறப்பைக் கருத்தில் கொண்டு, ₹25 கோடி நிரந்தர வைப்பு நிதி செலுத்த வேண்டும் என்ற கட்டாய விதியையும், பல்கலைக்கழகம் குறைந்தபட்சம் 10 ஏக்கர் நிலம் கொண்டிருக்க வேண்டும் என்பன போன்ற கடுமையான நிபந்தனையையும் அரசாங்கம் தளர்த்துவது பற்றிப் பரிசீலிக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவரான ரமேஷ் சென்னிதலா அவர்களும் தமது ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொண்டார். கல்விக்காக கேரளாவை விட்டு வெளியூர்களுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அவர் பேசினார். மாணவர்கள் சிறந்த வாய்ப்புகளைத் தேடி வெளியேற வேண்டிய நிலையைத் தவிர்க்க, மாநிலத்திலேயே உயர்தரக் கல்வியையும் போதுமான வேலைவாய்ப்புகளையும் வழங்குவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
புதிய சட்டத்தை வலுவாக ஆதரிக்கும் கேரள அரசு
அவை உறுப்பினர்கள் தெரிவித்த கவலைகளுக்குப் பதிலளிக்கையில், சட்டமன்றத்தில் இந்த மசோதாவை முன்வைப்பதற்கு முன்னதாக அரசாங்கம் பலதரப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு, பல்வேறு தரப்பினருடனும் குழுக்களுடனும் விரிவாகக் கலந்தாலோசித்தது என்று உயர்கல்வி அமைச்சர் ஆர். பிந்து தெரிவித்தார். மேலும், தேவை ஏற்படின், இந்த மசோதாவில் பின்னாளில் மாற்றங்களைச் செய்யவும் அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிகப்படியான போட்டி குறித்த அச்சத்தைப் பற்றிப் பேசிய அமைச்சர், தனியார் பல்கலைக்கழகங்களைத் தொடங்குவது கேரளத்தின் ஒட்டுமொத்தக் கல்வி முறையையும் மேம்படுத்தி வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியே என்று விளக்கினார். அரசு கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்களுடன் ஆரோக்கியமான முறையில் போட்டியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தனியார் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான விதிமுறைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உறுதியாக அமல்படுத்தப்படும் என்றார். இந்த விதிமுறைகள் தனியார் பல்கலைக்கழகங்கள் உயர் தரமான கல்வியை வழங்குவதை உறுதிசெய்வதோடு மட்டுமல்லாமல், அவற்றின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும், அவை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டையும் நிலைநாட்டும் என்பதை வலியுறுத்தினார்.
தனது கருத்தே வென்றது என்கிறார் டி.பி. ஸ்ரீனிவாசன்
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கல்வி மாநாட்டில் இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்.எஃப்.ஐ.) உறுப்பினர்களால் தாக்கப்பட்ட நிகழ்வு நடந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கழிந்த நிலையில், கேரள உயர் கல்வியில் தனியார் முதலீடுகளை அனுமதிக்க வேண்டும் என்ற தனது முந்தைய நிலைப்பாடு தற்போது வென்றிருப்பதாக முன்னாள் இந்தியத் தூதர் டி.பி. ஸ்ரீனிவாசன் விளக்குகிறார்.
அப்போது, ஸ்ரீனிவாசன் அவர்கள் கேரள மாநில உயர் கல்வி மன்றத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். மாநிலத்தில் ஒரு வலுவான, செயல்திறன் மிக்க உயர் கல்வி முறையை உருவாக்குவதற்கு தனியார் பங்களிப்பை அனுமதிப்பது இன்றியமையாதது என்று கூறியவர் இப்போதும் அதே கருத்தை அழுத்தமாக வலுயுறுத்துகிறார்.
"அப்போது எனது கருத்துகளின் பின்னணியில் இருந்த நியாயத்தை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. அவர்களுடைய அரசியல் நம்பிக்கைகளின் அடிப்படையில் எனது நிலைப்பாடு தவறானது என்று கருதியது மட்டுமல்லாமல், கல்வியை கடைச்சரக்காக்கி, வணிகமயமாக்கும் நடவடிக்கையாக பார்த்தனர்," என்று அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
ஆயினும், சிறந்த உயர்கல்விக்கு அதிகச் செலவு பிடிக்கும் என்றும், அனைத்துச் செலவுகளையும் அரசாங்கத்தால் மட்டுமே ஈடுசெய்ய முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
"இப்போது, ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கேரளா ஒரு பெரிய வாய்ப்பை இழந்திருக்கிறது. இங்கு சூழ்நிலைகள் முற்றிலும் மாறியுள்ளன. முன்பெல்லாம், ஒரு சாதாரண கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்பிற்குக் கூட, ஒரு இடம் கிடைப்பதற்கு நல்ல செல்வாக்கும் பணபலமும் அவசியமாக இருந்தது. ஆனால் இன்றோ, ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்கச் செல்கின்றனர், மேலும் இங்குள்ள பல கல்லூரிகள் மாணவர் சேர்க்கை இல்லாமல் வெறுமையாகக் கிடக்கின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீனிவாசன் மேலும் குறிப்பிடுகையில், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களில் நிகழும் துரித வளர்ச்சியானது விரைவில் பாரம்பரியப் பல்கலைக்கழகங்களின் முக்கியத்துவத்தை வெகுவாகக் குறைக்கக்கூடும். "செயற்கை நுண்ணறிவு சார்ந்த கற்றல் முறை பெருகி வரும் இக்காலத்தில், பெரிய கல்லூரி வளாகங்களை அமைப்பதற்கு யார் பணம் செலவிட விரும்புவார்கள்?" என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
CPI மாணவர் அணி நடத்திய போராட்டம்
இதற்கிடையில், ஆளும் இடது ஜனநாயக முன்னணியின் (LDF) முக்கியக் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பும் (AISF), சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து களத்திலிறங்கி தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்தது.
அந்த மாணவப் போராளிகள், மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முடிவை தீவிரமாக மறுபரிசீலனை செய்யக்கோரி, கேரள சட்டப்பேரவையை நோக்கி மாபெரும் பேரணி நடத்தினர்.
சட்டப்பேரவைக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாண்டிச் செல்ல முயன்றபோது, காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சூழ்நிலையை முழுமையாகக் கட்டுப்படுத்தி கூட்டத்தைக் கலைக்கும் பொருட்டு, காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீரைப் பீய்ச்சியடித்து விரட்டினர்.
- விஜயன் (தமிழில்)