வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் நடந்த ஊழல்-CAG அறிக்கை

தமிழில் : விஜயன்

வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் நடந்த ஊழல்-CAG அறிக்கை

இந்திய இரயில்வே அமைச்சகம் எடுத்த தவறான முடிவின் காரணமாக Train-18 (முந்தைய வந்தே பாரத்) இரயிலுக்காக தயாரிக்கப்பட்ட 6 பெட்டிகள் பயன்படுத்த முடியாமல் தேங்கிக் கிடப்பதால்ன்ன துருப்பிடித்து வருகிறது; 54.57 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வீணழிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2022 வரையிலான இந்திய இரயில்வே அமைச்கத்தின் செலவுகளை தணிக்கை செய்து சமீபத்தில் CAG அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. 

வந்தே பாரத் இரயில் திட்டம் வருவதற்கு முன்பு Train-18 என்ற பெயரில் இதே போன்றதொரு ரயிலை கொண்டு வருவதற்கு மோடி அரசு கடந்த 2017-ம் ஆண்டு திட்டமிட்டிருந்தது. சென்னையிலுள்ள பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை(ICF) மூலமாக 24 பெட்டிகளை முதற்கட்டமாக உற்பத்தி செய்வதற்கு இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய 16-பெட்டிகள் மற்றும் 8-பெட்டிகள் கொண்ட Train-18 வகைமாதிரிக்கான(Prototype) திட்ட வரைபடங்களை பிப்ரவரி 2018ல் இரயில்வே அமைச்சகம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. Train-18 வகைமாதிரியின் 16-இரயில் பெட்டிகளும் முதற்கட்டமாக அக்டோபர் 2018 அன்றும், இரண்டாவதாக மே 2019 அன்றும் தயாரிக்கப்பட்டு வட இந்திய இரயில்வேயிடம் முன்னோட்டம் பார்ப்பதற்காக ஒப்படைக்கப்பட்டது.

மேலும், 2018-19 ஆண்டிற்கான உற்பத்தியில் 80 பெட்டிகள் தயாரிப்பதற்கும், 2019-20ம் ஆண்டிற்கான உற்பத்தியில் 160 பெட்டிகள் தயாரிப்பதற்கும் இந்திய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. அதன்படி, ஜீன் 2019 வாக்கில், உந்துவிசை சாதனங்களை(Propulsion system) கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிட்டதோடு, 8.57 கோடி ரூபாய் செலவு செய்து 2019ல்(மே-நவம்பர்) Train-18க்கான 6 இரயில் பெட்டிக் கூடுகளையும் தயார் செய்திருந்தது.

பிப்ரவரி 2021ல், 44 இரயில்களுக்கு(trainsets) உந்துவிசை சாதனங்களை கொள்முதல் செய்யச் சொல்லி இரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Train-18 வகைமாதிரியில் பொருத்தப்படும் இழுவை சாதனங்களுக்கும்(traction system), தற்போது இரயில்வே அமைச்சகம் கொள்முதல் செய்யச்சொல்லியுள்ள உந்துவிசை சாதனங்களுக்கும் மாறுபாடு இருப்பதுகூட ICF-க்கு அப்பொழுதுதான் தெரிவிக்கப்பட்டது. உந்துவிசை சாதனத்திலும், சக்கரம் மற்றும் அச்சாணி பொருத்தப்பட்டிருக்கும் இரயில் பெட்டியின் அடிப்பாகத்திலும்(bogie) மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால் முன்னோட்டம் பார்ப்பதற்காக முன்பு ஒப்படைக்கப்பட்ட்ட இரயில்பெட்டிக் கூடுகள் இனிப் பயன்படாது என்பதையும் வட இந்திய இரயில்வேயிடம் உடனடியாக ICF தெரிவித்துவிட்டது. Train-18 வகைமாதிரிக்கான உந்துவிசை சாதனங்கள், இரயில்பெட்டியின் அடிப்பாகங்களுக்கு ஏற்ப கொள்முதல் செய்யப்பட்ட 64 கோடி ரூபாய் மதிப்பிலான மூலப் பொருட்களில் 46 கோடி ரூபாய் அளவிற்கான பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலையில் வீணடிக்கப்பட்டுள்ளது.

Train-18க்காவே வாங்கப்பட்ட 46 கோடி மதிப்பிலான பொருட்கள் வீணாகிவிட்டது என்பதை ICF-ன் தலைமை மேலாளர் சார்பாகவும் மத்திய இரயில்வே அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 2019ல் 8.57 கோடி ரூபாய் மதிப்பில் 6 இரயில் பெட்டிக் கூடுகள் தயாரிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். மாற்றப்பட்ட வடிவமைப்புக்கு பொருத்த முடியாததால் அவையும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது என்பதையும் சேர்த்துக் கூறியுள்ளனர்.

2019-20ம் ஆண்டிற்கான உற்பத்திக்கு அனுமதி வழங்கிய பிறகு இழுவை சாதனங்களை மாற்ற வேண்டும் என இரயில்வே அமைச்சகம் எதற்காக கூறியது என்பதற்கு எந்த காரணத்தையும் வழங்கவில்லை என்று CAG அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

CAG அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டவை:

1) 1.36 கோடி ரூபாய் செலவில் 6 இரயில் பெட்டிக் கூடுகள் தயாரிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்ததால் துருப்பிடித்து வீணாகியுள்ளது.

2) 1.84 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட ஓட்டுனர் இருக்கையுடன் அமைக்கப்பட்டிருக்கும் இணைப்புப் பெட்டியும், 1.29 கோடி ரூபாய் மதிப்பில் ஓட்டினர் இருக்கையில்லாமல் தயாரிக்கப்பட்ட ஒரு சாதாரண இணைப்புப் பெட்டியும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

3) 1.36 கோடி ரூபாய் மதிப்பில் உந்துப்பொறியுடன் தயாரிக்கப்பட்ட 4 இரயில் பெட்டிகளும் பயனின்றி வீணழிக்கப்பட்டுள்ளது.

4) 46 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட மூலப்பொருட்களும் வீணாகியுள்ளது.

5) பிப்ரவரி 2023 முதல் டிசம்பர் 2023 வரை இந்த பிரச்சனை தொடர்பாக இரயில்வே அமைச்சகத்திடம் கேட்க்கப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் தரப்படவில்லை.

6) இழுவை சாதனத்தை மாற்றுவதென்று இந்திய இரயில்வே அமைச்சகம் எடுத்த முடிவினால் Train-18 திட்டத்தின் கீழ் இரண்டாண்டு காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட 240 இரயில் பெட்டிகள் படுமோசமாக வீணழிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு உற்பத்திப் பணிக்கும் ஒப்புதல் வழங்குவதற்கு முன்பாக அனைத்து குறிப்பான அம்சங்களையும் முழுமையாக ஏற்றுக் கொண்ட பிறகே ஒப்புதல் வழங்க வேண்டும் என CAG அறிக்கையில் பரிந்துரையும் வழங்கியுள்ளது.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.dtnext.in/news/tamilnadu/railways-wasted-crores-on-vande-bharat-prototype-finds-cag-audit-799840