தபோல்கர் படுகொலை : தீர்ப்பும் பாடங்களும்
சுந்தரசோழன்
மகாராட்டிர மாநிலத்தைத் சேர்ந்த சமூகச் செயல்பாட்டாளரும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தின் முன்னோடியுமான நரேந்திர தபோல்கர் 20 ஆகஸ்டு 2013 அன்று பூனே நகரில் இந்துத்துவ தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இப்படுகொலை குறித்து முதலில் விசாரணை நடத்திய மகாராட்டிர மாநிலக் காவல்துறை சில தடயங்கள் கிடைத்துள்ளன என்று கூறியது. அது ஒரு நன்கு திட்டமிடப்பட்ட படுகொலை என்பது அப்போதே ஐயத்திற்கு இடமின்றித் தெளிவாக இருந்தது. இவ்வழக்கில் தேசிய விசாரணை முகமையின் விசாரணை கோரப்பட்ட போது, அதனைத் தான் விசாரிக்க முடியாது என்று அந்த அமைப்பு கூறியது. பின்னர் 9 மே 2014 அன்று வழக்கு விசாரணை சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது.
18 ஆகஸ்டு 2018 அன்று குற்றவாளிகளில் ஒருவனான சச்சின் அன்டுரே சிபிஐயினால் கைது செய்யப்பட்டான். 2019ஆம் ஆண்டில் சநாதன் சன்ஸ்தா அமைப்பின் சட்ட ஆலோசகரான சஞ்சீப் புனலேகர் என்பவர் தபோல்கர் மற்றும் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை அழிக்க உதவியதை சிபிஐ கண்டுபிடித்ததாகச் செய்திகள் வெளியாகின. மேலும், நரேந்திர தபோல்கர், கோவிந்ந் பன்சாரே, கவுரி லங்கேஷ் மற்றும் கல்புர்க்கி ஆகிய நான்கு பேரது படுகொலைகளும் திட்டமிட்ட பயங்கரவாதச் செயல்கள் என்று சிபிஐ கருதுவதாகவும் செய்திகள் வெளியாகின. இத்தனைக்குப் பிறகும் சலிப்பூட்டும் அளவுக்குக் காலதாமதத்திற்குப் பின்னர் இவ்வழக்கில் விசாரணை நடத்திய சிறப்பு நீதிமன்றம், 11 மே. 2024 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்துரே மற்றும் சரத் கலஸ்கர் ஆகிய இரு கொலையாளிகளும் குற்றம் இழைத்தவர்கள் என்று உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் இருவரும் தலா ரூ. ஐந்து லட்சம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்திரவிட்டது.
குற்றம் சாட்டப்பட்ட மூவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக தபோல்கரின் உறவினர்கள் கூறியுள்ளனர். ஆகவே இவ்வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டுவதற்கு இன்னும் சில பத்தாண்டுகள் கூட ஆகலாம்.
தீர்ப்பும் பாடங்களும்
தபோல்கர் படுகொலைக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதும் ஆகிறது.
இக்குற்றத்தில் தொடர்புடைய கூட்டுச் சதிகாரர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட சநாதன் சன்ஸ்தா அமைப்பின் தலைவர் விரேந்திர சிங் டாவ்டே, சஞ் சிவ் புனலேகர் மற்றும் விக்ரம் பாவே ஆகிய மூவரும் போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விரேந்திர சிங் டாவ்டே தான் நரேந்திர தபோல்கர் படுகொலைக்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்டார் என்று பிராசிகியூசன் தரப்பு குற்றம் சாட்டியது. அது மட்டுமின்றி தபோல்கரைத் துப்பாக்கியால் சுட்ட குற்றவாளிகள் இக்கொலையில் சநாதன் சன்ஸ்தா அமைப்பிற்கு உள்ள தொடர்பு குறித்து சிபிஐ விசாரணையின் போது தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின என்பது கவனிக்கத் தக்கது.
நீதிமன்றம், அது வெறும் தோல்வியா? அல்லது அதிகாரத்தில் உள்ள நபரின் தாக்கம் காரணமாக திட்டமிட்ட செயலின்மையா? என்று கேள்வி எழுப்பி யிருப்பது மிகுந்த கவலையளிப்பதாகும்.
எப்படி இருப்பினும் இவ்வழக்கில் இரு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்த நீதியரசர்களுக்குக் குடிமைச் சமூகத்தின் சார்பில் நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் அதைத் தாண்டி விடைகிடைக்காத பல கேள்விகளும் உள்ளன.
கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் வேறு யாரோ இந்துத்துவ எதிர்ப்பாளர்களைக் கொன்றொழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட படுகொலைகளில் தபோல்கர் படுகொலை மட்டுமே தனியானதொரு குற்றவியல் நிகழ்வு எனப் பார்க்கக் கூடாது. இவ்வழக்கில் குற்றவாளிகள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர், இது ஒரு பயங்கரவாதக் குற்றமாகக் கருதப்பட்டது. கோவிந்த் பன்சாரே, கலபுர்கி மற்றும் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் போன்றவர்கள் கொலையுண்டவர்கள் பட்டியலில் அடுத்தடுத்து இடம் பிடித்தவர்கள் ஆவர். குறைந்தபட்சமாக அவற்றில் ஓரிரு கொலைகளில் மட்டுமாவது இக்கொலையாளிகளுக்கும் அதை விட முக்கியமாக இக்கொலைக்கு சூத்திரதாரியாகச் செயல்பட்டவர்களுக்கும் பங்கு இருக்கும் என்பதை மறுக்க முடியாது. இது குறித்த ஐயங்கள் ஏற்கனவே பொதுவெளியில் எழுப்பப் பட்டுள்ளன. அப்படி இருக்கும் போது இக்கொலைக்குச் சூத்திரதாரிகள் இருந்தனர், அவர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகள் தீர்மானகரமாகச் செயல்படவில்லை, அதிகாரத்தில் இருக்கும் யாரோசிலரின் தாக்கத்தால் அந்தச் சூத்திரதாரிகளுக்கு தண்டனை பெற்றுத் தர முயற்சிக்காமல் வேண்டுமென்றே செயலின்றி இருந்தனர் என்ற ஐயம் நீதியரசர்களுக்கே இருந்த போதிலும் அது குறித்து மேலதிகமாக எதுவும் செய்யப்படாதது, மீதமுள்ள மூன்று கொலை வழக்குகளிலும் உள்ள சூத்திரதாரிகளை அம்பலப்படுத்துவதைச் சாத்தியமற்றதாக்கி விடும் அபாயம் உள்ளது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதியரசர் ஜாதவ் அவர்களின் பின்வரும் அவதானிப்பு முக்கியமானது. 'இந்தக் கொலை மிக நன்கு திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டுள்ளது, அந்துரே மற்றும் கலாஸ்கர் ஆகிய இருவரும் இதனைச் செயல்படுத்தினர். குற்றவாளிகள் இருவரின் பொருளாதார, சமூக நிலையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அவர்கள் இதன் சூத்திரதாரிகள் இல்லை... கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் வேறு யாரோ. புனே காவல்துறையினரும் சிபிஐயும் அந்தச் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தத் தவறி விட்டனர். இது அவர்களது தோல்வியா? அல்லது அதிகாரத்தில் உள்ள ஏதோவொரு நபரின் செல்வாக்கு காரணமாக வேண்டுமென்றே செயலற்று இருந்து விட்டார்களா? என்பதை அவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும்” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த வரிகள் குடிமைச் சமூகத்திற்குத் தரும் செய்தி என்ன என்பதை விளக்கத் தேவையில்லை. |
உச்சபட்சத் தண்டனை
முதலாவதாக, ஆயுள் தண்டனை வழங்கும் இந்தத் தீர்ப்பை உச்சபட்ட தண்டனையாகக் கொள்ள முடியாது. குற்றவாளிகள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர், இது ஒரு பயங்கரவாதக் குற்றமாகக் கருதப்பட்டது என்பது கவனிக்கத் தக்கது.
இவ்வாறு ஆயுள்தண்டனை உள்ளிட்ட நீண்டகாலத் தண்டனை வழங்கப்பட்டவர்கள் (குறிப்பாக வலதுசாரி சார்பு உள்ளவர்களாக இருக்கும் பட்சத்தில்) விரைந்து சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதைப் பார்த்துள்ளோம். மிக அண்மையில் பில்கிஸ் பானு வழக்குக் குற்றவாளிகள் விசயத்திலும் இது நடந்தது. உச்சநீதிமன்றம் தலையிட்டு அதனை ரத்து செய்ய வேண்டியிருந்தது. அவ்விசயத்தில் குஜராத் அரசின் செயல்பாட்டை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்து, குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்ததையும் பார்த்தோம்.
இரண்டாவதாக, இக்கொலையில் தொடர்புடையவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் விரேந்திரசிங் டாவ்டே, சஞ்சய் புனலேகர் மற்றும் விக்ரம் பாவே ஆகிய மூவரும் போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டது குறித்துத்தான் அதிகம் பேசப்பட வேண்டியுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரி வித்த நீதிபதி இக்கொலைக்குப் பின்னிருந்த சூத்திரதாரிகளை அம்பலப்படுத்த விசாரணை அமைப்புகள் தவறி விட்டன என்று கூறிய விசாரணை
தற்போது தண்டிக்கப்பட்டுள்ள இரு குற்றவாளிகளும் இதன் சூத்திரதாரிகள் கிடையாது என்று நீதியரசர்கள் கூறியுள்ளனர். அது மட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்ட சநாதன் சன்ஸ்தா தலைவர் டாவ்டேவுக்குக் குற்ற நோக்கம் (motive) இருந்தது விடுவிக்கப் பட்ட மற்ற இருவருக்கும் எதிராக நியாயமாக சந்தேகம் இருப்பதாக நீ இருப்பதாக நீதியரசர் ஜாதவ் கூறியிருப்பதாக என்.டி. டிவி செய்தி தெரிவித்தது. இவற்றை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, விசாரணை அமைப்புகள் நடத்திய விசாரணையானது இக்கொலையின் சூத்திரதாரிகளை நோக்கி நீண்டு விடாமல் சில கருப்புச் சக்திகள் பார்த்துக் கொண்டார்களா? என்ற ஐயத்தை இது எழுப்புகிறது, இவ்வழக்கில் இன்னமும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் இருப்பதை உறுதி செய்கிறது.
மூன்றாவதாக, விசாரணை அமைப்புகள் இக்கொலையின் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தும் கடமையில் யாரையோ திருப்திப்படுத்த செயலின்றி இருந்து விட்டனர் என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராகப் பணி நீக்கம் அல்லது பணி இடைநீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கை எதையும் நீதிமன்றம் பரிந்துரைக்காதது ஏன்? என்ற கேள்விக்குப் பதிலில்லை.
“இந்த வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரியின் அலட்சியமிக்க அணுகுமுறையால் குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை” என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படி இருக்கும் போது இங்கே குறிப்பிட்டுள்ளது போன்ற கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளை வருங்காலத்தில் தவிர்க்க முடியும். ஆனால் அது ஏன் நடைபெறவில்லை என்ற கேள்விக்கு நீதியரசர்கள் தவிர வேறு யாரும் இதற்குப் பதிலளிக்க முடியாது.
நான்காவதாக, இக்கொலைக்குப் பின்னணியில் வேறு சூத்திரதாரிகள் இருந்தனர் என்று கருதினால், அவர்களுக்கு எதிராக ஐயத்திற்கு இடமற்ற சாட்சியங்களை அடுக்கி அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கு விசாரணை அமைப்புகள் தவறி விட்டன என்றால், இதனைச் சுட்டிக் காட்டி நீதியரசர்கள் இவ்வழக்கில் ஒரு வேளை மறுவிசாரணைக்கு உத்திரவிட்டு இருக்கலாம். அது ஏன் செய்யப்படவில்லை?என்பதும் தெரியவில்லை. முந்தைய கேள்வியைப் போலவே நீதியரசர்கள் தவிர வேறு யாரும் இதற்குப் பதிலளிக்க முடியாது.
இறுதியாக, இந்திய ஒன்றியம் சட்டபூர்வ வழிமுறைகளைப் பின்பற்றியே புறக்கடை வழியாகப் பாசிசத்தைக் கட்டமைக்க முற்படும் இந்துத்துவவாதிகளின் இந்துத்துவவாதிகளின் கையில் சிக்கியுள்ளது. பாசிசம் எப்போதுமே தனது கோர முகத்தை முழுமையாக வெளிக்காட்டுவதற்கு நீதித்துறையில்... ...என்பதை நாஜிச் செயல்பாடுகள் மூலம் அறிகிறோம். இந்திய நீதித்துறையும் எத்தகைய அபாயத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம். விழிப்புடன் இருக்க வேண்டியது மிக அவசியம்.
- சுந்தரசோழன் (ஜனசக்தி மே19 - 25 இதழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு