தீவிரமடையும் புதிய காலனிய பாசிச கருப்புச் சட்டங்கள்

தங்களின் தேச விரோத புதியகாலனியச் சேவையை மூடிமறைக்க , பயங்கரவாத எதிர்ப்பு பூச்சாண்டி காட்டி சட்டவிரோத - தேசவிரோத பாசிச கருப்புச் சட்டங்கள் அனைத்தையும் அரங்கேற்றும் பாசிச மோடி-அமித்ஷா கும்பல்.

தீவிரமடையும் புதிய காலனிய பாசிச கருப்புச் சட்டங்கள்

ஏகாதிபத்திய நிதிமூலதன கும்பல்களின்  நெருக்கடியின் சுமைகள் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படுகின்றன. அதை எதிர்த்து போராடுபவர்களை நசுக்க இப்போதிருக்கும் சட்டங்கள் போதுமானதாக இல்லை. ஆகவேதான் புதியகாலனிய பாசிச சட்டங்களை அமல்படுத்தும் போக்குகளும் தீவரமடைகின்றன. அதற்கான ஏற்பாடாகதான் மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்றிருந்த இரண்டு நாள் ஆய்வுக் கூட்டம் ஹரியாணாவின் சூரஜ்கண்ட் பகுதியில் பல்வேறு மாநிலப் பிரிதிநிதிகளுடன் நேற்று தொடங்கியது. தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியும் கலந்து கொண்டுள்ளார்.

மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 2024-க்குள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய பாதுகாப்பு முகமையின் (என்.ஐ.ஏ) கிளைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது:

  1. எல்லை கடந்த பயங்கரவாதம், இணையவழிக் குற்றங்கள் பிரதேசங்கள் கடந்து, நாடுகளின் எல்லைகள் கடந்து நடத்தப்படுகின்றன.  இது போன்ற குற்றங்களுக்கு சமச்சீரான சட்ட, ஒழுங்கு முறையை ஒவ்வோரு மாநிலங்களும் உருவாக்கியிருக்க வேண்டும்.

  2. தேசிய புலனாய்வு முகமைக்கான பிரத்யேக காவல் நிலையங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் 2024ஆம் ஆண்டிற்குள் கட்டமைக்கபட்டிருக்க வேண்டும்.  இந்த NIA அமைப்பிற்கு மாநிலங்களின் எல்லை கடந்து செயல்படும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  பயங்கரவாதம் தொடா்பான வழக்குகளில் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான அதிகாரமும் இந்த அமைப்பிடம் உள்ளது.

  3. பயங்கரவாத குற்றங்கள் தொடா்பான தகவல்கள் மட்டுமல்ல, பிற குற்றங்கள் தொடர்பான தரவுகளும் ஓர் இடத்தில் குவிக்கப்பட்டு மையப்படுத்த வேண்டும்.  ஒரு தகவல் ஒருமுறை பதிந்தால் போதும் (One Data, One Entry) என்ற கொள்கையின்படி மையப்படுதல் வேண்டும்.

  4. தேசிய அளவிளான பயங்கரவாத புள்ளிவிவரத் தரவுகளை பராமாரிப்பது NIAவின்   கடமையாக விதிக்கப்பட்டுள்ளது.

  5. தேசிய புலனாய்வு வலையமைப்பு (NATGRID) என்பது 11 காவல்-உளவு அமைப்புகளின் தரவுத்தொகுதிகளை ஒரு பொதுவான தளத்தில் வழங்கி வருகிறது. அனைத்து மாநிலங்களும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

  6. குற்றங்களின் தன்மை மாறிவருகிறது. எல்லைகள் கடந்து குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன.  இதன் காரணமாகவே, அனைத்து மாநிலங்களும் ஒரு பொதுவான மூலயுக்தியை பயன்படுத்தி இது போன்ற குற்றங்களை முறியடிக்க வேண்டியுள்ளது.  இதை கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கி செயல்படுத்த முனைய வேண்டும்.  மத்திய - மாநில அரசுகளுக்கிடையில் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு ஒத்திசைவு அவசியமாக இருந்தால்தான் இதை செய்ய முடியும்.

  7. சில தொண்டு நிறுவனங்கள் தேச விரோதச் செயல்கள், மதமாற்றம், அரசின்  வளா்ச்சித் திட்டங்களுக்கு அரசியல் ரீதியாக அல்லது அரசின் கொள்கைகளுக்கு எதிராக பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றன  சமீபத்தில் வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) சட்டத்தில்(FCRA,2020) செய்யப்பட்ட திருத்தம் அயல்நாடுகளில் இருந்து பெறப்படும் நிதியுதவிகள் தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளதோடு, தொடா்ச்சியாக கண்காணிப்பதையும் சாத்தியப்படுத்தியுள்ளது. 

  8. இந்திய தண்டனைச் சட்டத்தொகுப்பையும் (இ.பி,கோ- IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டத்தொகுப்பையும் (CrPC) புதுப்பித்து, சீரமைப்பு செய்யுங்கள் என்று ஆயிரக்கணக்காண கோரிக்கைகள் தொடா்ச்சியாக தன்னிடம் முன்வைக்கப்படுகிறது,  கூடிய விரைவில் அதற்கான திருத்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்மொழியப்படும்.

அடுத்தபடியாக, 

“சட்ட, ஒழுங்கு துறை மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது என்றாலும், தேசப் பாதுகாப்பு தொடா்பான பிரச்சனையில் உள்துறை அமைச்சகம் தலையிடுவதற்கான அதிகாரத்தை நமது அரசமைப்புச் சட்டமே வழங்கி உள்ளது.  அதற்கேற்ப மாநிலங்களுக்கு உரிய காலத்தில் தேவைப்படும் உரிய வழிக்காட்டுதல்களையும், ஆலோசனைகளையும் இந்த அமைச்சகம் வழங்கி வந்துள்ளது” என்று மத்திய உள்துறை செயலாளா் அஜய் குமார் பல்லா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 

மாநாட்டின் நிறைவில் பிரதமர் நரேந்திர மோடி, புதுடெல்லியில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:

  1. துப்பாக்கி முனையாக இருந்தாலும் சரி, பேனா முனையாக இருந்தாலும் சரி, நக்சல் தீவீரவாதம் எந்த முனையிலிருந்து வந்தாலும் களையெடுக்கப்பட வேண்டும்.  நாம் சா்தார் பட்டேலிடமிருந்து படிப்பினைகள் பெற வேண்டும்.  நக்சலைட்டுகளும், இன்ன பிற தீவிரவாத சக்திகளும் நம் நாட்டில் வேரூன்றி வளா்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.  

  2. பயங்கரவாதத்தை எதிர்த்த போராட்டத்தில் தீர்மானகரமான வெற்றியை ஈட்டுவதற்கு ஊபா  (UAPA) போன்ற சட்டங்கள் அரச இயந்திரத்திற்கு புது வலு சோ்த்துள்ளது என்றார்.

  3. சட்ட விரோத சக்திகளுக்கு எதிரான எந்தவொரு கடுமையான நடவடிக்கை எடுப்பதென்பது நமது கடமையாகும்

  4. சுதந்திரந்திற்கு முன்பு இயற்றப்பட்ட 1500 சட்டங்கள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. அதே போல மாநில அரசுகளும் வழக்கிழந்து போன சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

  5. பிரிட்டிஷ் காலத்து காக்கிச் சீருடைக்கு மாற்றாக நாடு முழுமைக்கும் ஒரே சீரூடை (One nation, One Uniform) முறைக்கு மாறுவதற்கு முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

- செந்தளம் செய்திப் பிரிவு