‘உலகமயமாக்கல் பஞ்சங்களின்’ அச்சுறுத்தல்

வெண்பா (தமிழில்)

‘உலகமயமாக்கல் பஞ்சங்களின்’ அச்சுறுத்தல்

மோடி இந்திய விவசாயிகளை "ஏற்றுமதியை நோக்கிய பயிர்களை" அதிகம் பயிரிடுமாறு அறிவுறுத்தினார். இதன் மூலம், இந்திய விவசாயிகள் உணவு தானியங்களை சாகுபடி செய்வதை விட்டு விலகி, நாடு உணவு தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்று அவர் கூறுவதாகவே அமைகிறது. 

இந்த ஆலோசனையைத்தான் உலக வங்கி போன்ற நிறுவனங்களும், பொதுவாக அதன் நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்கும் இந்தியப் பொருளாதார வல்லுநர்களும் சில காலமாக பேசி வருகின்றனர்; மேலும் இதுதான் ஏகாதிபத்திய நாடுகளின் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது. உதாரணமாக, அமெரிக்காவில் பல ஆண்டுகளாக விவசாய உற்பத்தி மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட பாதியளவு உள்ள பெரும் மானியங்களை அவர்கள் தங்கள் விவசாயிகளுக்கு வழங்குவதால், அங்கே உணவு தானியங்கள் உபரியாக (அதிகமாக) உற்பத்தியாகிறது. இந்த உபரியை இந்தியா போன்ற நாடுகளில் அவர்கள் விற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்த நாடுகள் உணவு தானியங்களைப் பயிரிடும் நிலப் பயன்பாட்டை, அவர்களுக்குத் தேவையான -அவர்களால் உற்பத்தி செய்ய முடியாத ஏற்றுமதிப் பயிர்களை உற்பத்தி செய்வதற்காக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். 

இதனால், விவசாயிகளுக்கான மோடியின் அறிவுரை, ஏகாதிபத்தியத்தின் கோரிக்கைகளுக்கு இசைவாகவே உள்ளது.

மோடி அரசின் மோசமான மூன்று வேளாண் சட்டங்கள் மூலம், உணவு தானியப் பயிர்களிலிருந்து சாகுபடிப் பரப்பை மாற்றுவது விவசாயிகளுக்குக் கட்டாயப்படுத்தப்பட முயன்றது. முன்னதாக இருந்த, அரசால் நிர்வகிக்கப்பட்ட குறைந்தபட்ச விநியோக விலை (minimum-supply-prices) முறை, பணப்பயிர்களிலிருந்து அகற்றப்பட்டுவிட்டாலும், உணவு தானியங்களுக்கு இன்னமும் நீடித்திருந்தது. இத்தகைய விலை முறையை உணவு தானியங்களிலிருந்தும் நீக்க முயன்றனர். இது உணவு தானிய உற்பத்தியின் மீதான கவர்ச்சியைக் குறைத்து (பணப்பயிர்களுக்குச்) சாகுபடிப் பரப்பை மாற்ற வல்லது. இந்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய வெற்றிகரமான ஓராண்டு காலப் போராட்டமானது, உணவு தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறையை மீண்டும் நிலைநிறுத்த வழிவகுத்தது. இது ஏகாதிபத்தியத்திற்கும் மோடி அரசுக்கும் பெரும் மனவருத்தத்தை அளித்தது. ஆனால், ஏகாதிபத்தியவாதிகளோ அரசோ தங்கள் நிகழ்ச்சி நிரலைக் கைவிடவில்லை; ஏற்றுமதிப் பயிர்களைப் பயிரிடுமாறு மோடி தற்போது விவசாயிகளை வலியுறுத்தியிருப்பது இதை மேலும் உறுதிப்படுத்துவதாகும்.

விவசாயிகள் போராட்டத்தின் போது, அரசு சார்ந்த பொருளாதார வல்லுநர்களும், உலக வங்கியின் நிலைப்பாட்டைப் பின்பற்றுபவர்களும், உணவு தானியங்களிலிருந்து பணப்பயிர்களுக்குச் சாகுபடிப் பரப்பை மாற்றுவது விவசாயிகளின் நலனுக்கே உகந்தது என்று வாதிட்டனர். மேலும், உணவு தானியங்களுக்கு MSP முறை இருந்ததால்தான் இத்தகைய மாற்றம் தடுக்கப்படுவதாகவும் அவர்கள் வாதிட்டனர். இருப்பினும், விவசாயிகளுக்கு நன்கு தெரியும்: பணப்பயிர்களுக்கான MSP முறை நீக்கப்பட்டதால், உலகச் சந்தை விலைகளில் அத்தகைய பயிர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் கடுமையான ஏற்ற இறக்கங்களுக்கு விவசாயிகள் ஆளானார்கள். பணப்பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள் இந்த காரணத்தால் அதிக ஆபத்தை எதிர்கொண்டனர். பணப்பயிர் உற்பத்திக்கு அதிக கடன் தேவைப்படுவதால், இந்த அபாயம் மேலும் பெரிதாகியது.

இதனால், விலை வீழ்ச்சி ஏற்பட்ட ஆண்டுகளில், அவர்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பலர் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த முப்பது ஆண்டுகளில், நான்கு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள், பெரும்பாலும் பணப்பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள், தற்கொலை செய்து இறந்துள்ளனர். உணவு தானியங்களிலிருந்து கூட MSP முறையை அரசாங்கம் நீக்க முயன்றபோது, எஞ்சியிருந்த ஒரே ஒரு பாதுகாப்பு அரணையும் அது நீக்கிவிடும் என்பதால் விவசாயிகள் அந்த நடவடிக்கையை எதிர்த்தனர். ‘நன்மை நாடுவோர்’ என்று சொல்லிக்கொள்ளும் பிரதமரையோ அல்லது உலக வங்கியின் நிலைப்பாட்டைப் பின்பற்றும் பொருளாதார வல்லுநர்களையோ விட, MSP முறையை முழுவதுமாக நீக்குவதன் மூலம் தங்களுக்குக் காத்திருக்கும் விதியை (பயங்கர விளைவை) விவசாயிகள் கூர்மையாக அறிந்திருந்தனர்.

இருப்பினும், விலை வீழ்ச்சியின் போது பணப்பயிர்களை பயிரிட ஏற்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போவது தவிர, உணவுப் பயிர்களிலிருந்து பணப்பயிர்களுக்குச் சாகுபடிப் பரப்பை மாற்றுவதில் உள்ளார்ந்த கூடுதல் ஆபத்து ஒன்று உள்ளது. அதுதான், நாடு முழுவதற்குமான மற்றும் விவசாய மக்களுக்கான உணவுப் பாதுகாப்பு இழப்பு ஆகும். இது பஞ்சங்கள் வடிவில் வெளிப்படலாம், உண்மையில் வெளிப்பட்டும் இருக்கிறது. உலகமயமாக்கலினால் உணவுப் பயிர்களிலிருந்து பணப்பயிர்களுக்குச் சாகுபடிப் பரப்பு மாற்றப்பட்ட பல ஆப்பிரிக்க நாடுகளில் இத்தகைய பஞ்சங்கள் நிகழ்ந்துள்ளன. பொருளாதார வல்லுநரான அமியா குமார் பாக்சி (Amiya Kumar Bagchi) தனது "தி பெரிலஸ் பாசேஜ்" (The Perilous Passage) என்ற புத்தகத்தில், அத்தகைய பஞ்சங்களை "உலகமயமாக்கல் பஞ்சங்கள்" என்று மிகவும் பொருத்தமாகவே குறிப்பிடுகிறார்.

இத்தகைய பஞ்சங்கள் ஏற்படுவதற்கான காரணம் பின்வருமாறு: ஒரு நாடு பணப்பயிர்களை உற்பத்தி செய்து உணவு தானியங்களை இறக்குமதி செய்யும்போது, அது உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் பயிரின் விலை வீழ்ச்சி அடையும் அதே ஆண்டில், அதன் உணவு தானிய இறக்குமதிக்குத் தேவையான வெளிநாட்டு நாணயத்தை (அந்நியச் செலாவணியை) ஈட்ட முடியாது. ஏனென்றால், பொதுவாகவே உணவு தானியங்களின் விலைகள் பணப்பயிர்களின் விலைகளை விடக் குறைவான ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகின்றன. மேலும், குறிப்பிட்ட அந்த ஆண்டில் உணவு தானியங்களின் விலை, அந்த நாடு ஏற்றுமதி செய்யும் பயிரின் விலையைப் போல் அதிகம் வீழ்ச்சியடைந்திருக்காது. எனவே, உணவு தானியங்களின் கையிருப்பில் ஏற்படும் வீழ்ச்சியை அந்த நாட்டால் தடுக்க முடியாமல் போகும். இதுவே ஒரு பஞ்சத்திற்கான நிலைமைகளை உருவாக்குகிறது.

இருப்பினும், ஏதோ ஒரு வகையில் அந்த நாடு சர்வதேசச் சந்தையிலிருந்து போதுமான உணவு தானிய விநியோகத்தைப் பெற முடிந்தாலும் (உதாரணமாக, ஒரு சில நன்கொடையாளர் நாடுகளின் “உணவு உதவி” மூலம் கிடைத்தாலும்) கூட, ஒரு கூடுதல் சிக்கல் இருக்கிறது. விலை வீழ்ச்சி அடைந்த பணப்பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளிடம் சந்தையில் உணவு தானியங்களை வாங்குவதற்கான போதுமான வாங்கும் சக்தி இருக்காது. “உணவு உதவி” கிடைப்பதன் மூலம் உணவு தானியங்கள் சந்தையில் கிடைத்தாலும் இதுதான் நிலை. எனவே, “உணவு உதவியை” ஏற்பாடு செய்வதுடன், துயரத்தில் இருக்கும் விவசாய மக்களுக்கு உணவு மானியம் வழங்குவதன் மூலம் அதை ஈடுசெய்ய வேண்டும். அரசாங்கம் இந்த மானியத்தை வழங்கத் தவறினால் (அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமான அளவு உணவு தானியங்களை இலவசமாக விநியோகிக்கத் தவறினால்) மீண்டுமொரு பஞ்சத்தைத் தவிர்க்க முடியாது.

உணவுப் பயிரிலிருந்து சாகுபடியை வேலைவாய்ப்புக் குறைவான பணப்பயிருக்கு மாற்றினால் (அதாவது, ஒவ்வொரு ஏக்கர் மாற்றத்திலும் பயிர் உற்பத்தியில் வேலை செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்றால்), இதேபோன்ற பஞ்சத்திற்கான வாய்ப்புகளோ அல்லது குறைந்தபட்சம் ஊட்டச்சத்துக் குறைவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகளோ எழுகின்றன. வேலை இழந்தவர்களுக்குச் சந்தையில் உணவு தானியங்களை வாங்குவதற்கான வாங்கும் சக்தி இருக்காது. நாடு எவ்வளவு தேவையோ அவ்வளவு உணவு தானியங்களை இறக்குமதி செய்யப் போதுமான வெளிநாட்டு நாணயத்தைக் கொண்டிருந்தாலும் இதுதான் நிலை. இந்தச் சந்தர்ப்பத்திலும் கூட பஞ்சம் ஏற்படும். ஆனால் அதற்கான காரணம் முன்னதாக விவாதிக்கப்பட்டதிலிருந்து மாறுபட்டது. பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் (Amartya Sen) உருவாக்கிய வேறுபாட்டைப் பயன்படுத்தினால், இந்தச் சூழ்நிலை, "பரிவர்த்தனை உரிமையில் தோல்வி" (Failure of Exchange Entitlement - FEE) என்ற பிரிவின் கீழ் வரும். ஏனெனில், வேலை இழந்தவர்களுக்கு உணவு வாங்கத் தேவையான 'திறன்' இருக்காது. முன்னர் விவாதிக்கப்பட்ட சூழ்நிலை, "உணவு கிடைப்பதில் சரிவு" (Food Availability Decline - FAD) ஆகும். FEE (உதாரணமாக, தோட்டப் பயிர்களில் இது உண்மையாகும், அவை குறைவான வேலைவாய்ப்பைக் கொண்டவை) ஏற்படலாம்; ஆனால் FAD நிச்சயமாக நடக்கும்.

இதன் விளைவாக, புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் நடப்பது போல, உணவுப் பயிர்களிலிருந்து பணப்பயிர்களுக்குச் சாகுபடிப் பரப்பை மாற்றுவதன் மூலம் உள்நாட்டு உணவு தானிய உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பைக் குலைப்பது, குறிப்பாக ஆப்பிரிக்காவில் உள்ள உலகளாவிய தென்பகுதியின் பல இடங்களில் நிகழ்ந்துள்ளது போல, பஞ்சங்கள் ஏற்படுவதற்கு சாதகமான நிலைமைகளை உருவாக்குகிறது. உணவு தானிய உற்பத்தியிலிருந்து விலகிச் செல்லாததால், இந்தியா இதுவரை இந்த வாய்ப்பைத் தவிர்த்து வந்தது. ஆனால், ஏகாதிபத்திய அழுத்தத்திற்கு அடிபணிந்து செயல்படும் பிரதமரின் ஆலோசனையைக் கேட்டால், இந்தியா தன்னை இந்த ஆபத்திற்கு ஆளாக்கிக் கொள்ளும்.

இருப்பினும், "உலகமயமாக்கல் பஞ்சங்களின்" வாய்ப்பைத் தவிர, உணவு தானிய இறக்குமதியை நம்பியிருப்பது முற்றிலும் அறிவுறுத்த முடியாததற்கு (தவிர்க்கப்பட வேண்டியதற்கு) ஒரு கூடுதல் காரணம் உள்ளது. அமெரிக்கா, தனது கட்டளைகளுக்கு அடிபணியாத நாடுகளுக்கு எதிராகத் திட்டமிட்டு ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்தி வருகிறது. கியூபா, ஈரான், ரஷ்யா, வட கொரியா மற்றும் வெனிசுலா ஆகியவை தற்போது அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவுடன் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள பல நாடுகளும் அடங்கும். தடைகளின் உள்ளடக்கம் மாறுபடும், ஆனால் அவை அமெரிக்கா தானே வர்த்தகம் செய்யாமலும், தடை செய்யப்பட்ட நாட்டுடன் மற்ற நாடுகள் வர்த்தகம் செய்வதைத் தடுக்கும் வடிவத்தையும் அடிப்படையாகக் கொள்கின்றன. ஒரு நாடு உணவு தானிய இறக்குமதியைச் சார்ந்திருந்தால், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகள் அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதானது மனிதப் பேரழிவை உருவாக்கும். மேலும், தடைகள் கூடுதலாக அமலில் உள்ள நாட்டின் வெளிநாட்டில் உள்ள அந்நியச் செலாவணி சொத்துகளைப் பறிமுதல் செய்யும் வடிவத்தை எடுத்தால், அதன் உணவு தானியங்களை வாங்கும் திறன் மேலும் நசுக்கப்பட்டு, மனிதப் பேரழிவு மேலும் தீவிரமடையக் கூடும்.

ஏகாதிபத்திய உலகில் உள்ள ஆளும் வர்க்கங்களால் காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு மறைமுகமான ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதானது - ஒரு நாடு ஏகாதிபத்தியத்தை மீறி நிலைப்பாட்டை எடுத்தால் - பேரழிவின் அச்சுறுத்தல் உண்மையாகியுள்ளதை காட்டுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாகவே வர்த்தகத்தை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதால், ஒரு நாடு உணவு இறக்குமதியைச் சார்ந்திருப்பது, அதன் கொள்கை வகுப்பில் அதன் சுயாட்சியை இழப்பதற்கான உறுதியான வழியாகும். இவ்வாறு, உணவு இறக்குமதியைச் சார்ந்திருப்பது, ஒரு நாடும் அரசும் ஏகாதிபத்தியத்தின் சார்புநிலைக்கு தள்ளப்படும் கருவியாக இன்று மாறியுள்ளது.

மோடி, விவசாயிகளை ஏற்றுமதிப் பயிர்களைப் பயிரிடுமாறு அறிவுறுத்துவது—அதாவது, உணவு தானியங்களிலிருந்து விலகி, பெருநகரங்களில் (metropolis) தேவைப்படும் பணப்பயிர்களைப் பயிரிடுவதை நோக்கி மாறுவது  - இதில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து அவருக்கு இருக்கும் விழிப்புணர்வின்மையையும், அதன் மூலம் ஏகாதிபத்திய அழுத்தத்திற்கு அவர் அடிபணியும் தன்மையையும் காட்டுகிறது. இது மிகவும் ஆச்சரியமளிக்கிறது.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://theaidem.com/the-spectre-of-globalisation-famines/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு