அயோத்தி ராமர் கோவில் ஓர் அநீதியின் சின்னம் : திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் காங்கிரசு

அபூர்வானந்த்

அயோத்தி ராமர் கோவில் ஓர் அநீதியின் சின்னம் : திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் காங்கிரசு

  • காங்கிரஸ் தலைவர்கள் இதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
  • குற்றம், கோழைத்தனம் மற்றும் நரித்தனத்தால் கையகப்படுத்தப்பட்ட ஒரு மண்ணில் எந்த புனிதமான உணர்வும் உண்மையில் எழாது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு (2024 ஜனவரி 22 ஆம் தேதியன்று நடைபெறும்)  பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். 

அழைக்கப்பட்டவர்களில் காங்கிரஸிலிருந்து சோனியா காந்தியும், மல்லிகார்ஜுன் கார்கேயும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரியும் அடங்குவர்.

இந்த அழைப்பை யெச்சூரி நிராகரித்துள்ளார், மதம் என்பது தனிப்பட்ட விருப்பம் என்றும், அரசியல் ஆதாயத்திற்கான கருவியாக மாற்றக்கூடாது என்றும் கூறியுள்ளார். ஆனால் வகுப்புவாத எதிர்ப்பு அரசியலில் சமரசமற்றவர் என கருதப்படும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், சோனியா காந்தி இந்த அழைப்பை "நேர்மறையாக" பார்ப்பதாக தெரிவித்துள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் சோனியா காந்தியே செல்வார் அல்லது கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.

அவர் அழைக்கப்பட்டாரா என்ற கேள்விகளுக்கு பதிலளித்த சிங், “உண்மையான பக்தர்களை அழைக்காததால் என்னை அழைக்க மாட்டார்கள். முரளி மனோகர் ஜோஷியோ, லால் கிருஷ்ண அத்வானியோ, திக்விஜய் சிங்கோ இவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட மாட்டாது” என தான் அழைக்கப்படவில்லை என்பதை கிண்டலாக கூறினார்..

சிங் கூறுவது உண்மையாகவிருந்தால், காங்கிரஸ் இன்னொரு சுயகுழிபறிப்பு முடிவை எடுத்துள்ளது என்றே அர்த்தம்.

முதலாவதாக 1986 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் அதன் மாநில அரசின் மேற்பார்வையின் கீழ் பாபர் மசூதியின் பூட்டுகள் திறக்கப்பட்டது. அந்த முடிவுக்கும் பாபர் மசூதி இடிப்புக்கும் இடையே வெறும் ஆறு வருட இடைவெளி மட்டுமே. இன்னும் சரியாக சொல்வதானால், அதுகூட கட்சியின் இரண்டாவது தவறு என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு முன்பே, அதன் மாநில அரசாங்கம் 1949 இல் பாபர் மசூதியில் 'அடையாளம் தெரியாத நபர்கள்' சிலைகளை ரகசியமாக வைத்த குற்றத்தைக் கண்டுகொள்ளவில்லை. அதற்கு மாறாக, பாபர் மசூதிக்குப் பூட்டு போட்டு அதற்குள் இசுலாமியர்கள் செல்லத் தடை விதித்து தவறிழைத்தது.

1949ல் பூட்டப்பட்டதிலிருந்து 1986 ல் திறப்பதற்கு 37 ஆண்டுகள் ஆனது, ஆனால் அடுத்த 6 ஆண்டுக்குள் 1992ல் இடிக்கப்பட்டது. ஒரு குற்றம் மற்றொன்றுக்கு வழிவகுத்தது. மீண்டும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், இந்தக் குற்றத்துடன் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்று பேசியது.

1949 ஆம் ஆண்டு நள்ளிரவில் பாபர் மசூதிக்குள் இந்து கடவுள்களின் சிலைகளை திருட்டுத்தனமாக வைத்தது ஒரு குற்றமாகும், மேலும் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பட்டப்பகலில் பாபர் மசூதி இடிப்பு, மாநில அரசின் பாதுகாப்பிலும், மத்திய அரசின் வேடிக்கையின் கீழும் நிகழ்ந்தது. இது காங்கிரஸ் அரசின் மற்றொரு குற்றமாகும். இந்த இரண்டு செயல்களும் உச்ச நீதிமன்றத்தால் குற்றங்களாக அறிவிக்கப்பட்டன. பாபர் மசூதி இருந்த நிலத்தை - இந்த இரண்டு குற்றங்களிலும் ஈடுபட்டவர்களே அனுபவிக்க, அதே உச்ச நீதிமன்றம் அனுமதித்தது என்பது வேறு விஷயம்.

குற்றச்செயல்கள் மற்றும் மோசடிகளால் பாபர் மசூதியை அழித்ததன் மூலம் காலியாக இருந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட 2019 இல் உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்சில் உள்ள எந்த உறுப்பினரும் இதில் சம்பந்தப்பட்ட நீதித்துறையின் கூத்துகளுக்கு பொறுப்பேற்க தைரியமற்றவர்கள். தீர்ப்பை எழுதிய நீதிபதி தனது பெயரை பதிவு செய்ய விரும்பாத அரிய நீதிமன்ற தீர்ப்புகளில் அயோத்தி தீர்ப்பும் ஒன்றாகும். இது பணிவு அல்ல, இது கோழைத்தனம். அறநெறியை தலைகீழாக மாற்றிய இந்த தீர்ப்பின் பொறுப்பாளாராக எந்த நீதிபதியும் வரலாற்றில் இடம்பெற விரும்பவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, பெஞ்ச் தானாகவே (1) அந்த இடத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாபர் மசூதி நிற்கிறது, (2) எந்த கோவிலையும் இடித்து மசூதி கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை (3) 1949 ஆம் ஆண்டு வரை இந்து கடவுள்களின் சிலைகள் அங்கு திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட குற்றச்செயலுக்கு முன்புவரையிலும் கூட அங்கு இசுலாமியர்கள்தான் வழிபாடு செய்து வந்துள்ளனர் என்றும் முடிவு செய்தது. டிசம்பர் 6, 1992 அன்று மசூதியை இடித்தது மிகப்பெரிய குற்றம் என்பதில் நீதிமன்றம் சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது. இவற்றையெல்லாம் வைத்து எடுக்கப்பட்ட தர்க்கரீதியான முடிவாக இருந்தால், பல நூற்றாண்டு கால மசூதியை அது இடிக்கப்பட்ட இடத்திலேயே புனரமைக்கப்பட்டு மீண்டும் கட்ட உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை, சில இந்துக்கள் பல ஆண்டுகளாக ராமர் கோவிலை ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறி, இந்த நிலத்தை ராமர்கோவில் கட்ட அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் முடிவு செய்தது.

இதில் குற்றமிழைத்த நீதிமன்றத்தை கூட விடுங்கள்! குற்றம், கோழைத்தனம் மற்றும் நரித்தனத்தால் கையகப்படுத்தப்பட்ட ஒரு மண்ணில் புனிதமான உணர்வு சிறிதாவது உண்மையிலேயே எழுமா?! ஜனவரி 22, 2024 அன்று திறக்கப்படவிருக்கும் ராமர் கோவில் கட்டப்படுவதற்கு காரணமான மனிதவிரோத செயல்களின் நினைவிலிருந்து விடுபடுவது நிச்சயமாக சாத்தியமற்றது. இது நிச்சயமாக ஒரு பக்தருக்கு ஆன்மீக அமைதியைத் தரும் இடமாக  இருக்காது.

இந்த ராமர் கோவிலின் நோக்கம் மதமோ அல்லது ஆன்மீகமோ அல்ல. ராம் மந்திர் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் தனது சமீபத்திய கருத்துக்களில் இதைத் தெளிவுபடுத்தியுள்ளார். 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது வரும் ஜனவரி 22ஆம் தேதி என்று சம்பத் ராய் கூறினார். “1971ஆம் ஆண்டு சுமார் ஒரு லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் நமது ராணுவத்தின் முன் சரணடைந்ததைப் போலவே இந்த நாளும் முக்கியமானது. 1999 ஆம் ஆண்டு கார்கில் மீதான உரிமையை நமது நாடு மீட்டெடுத்த நாளுக்கு இணையாக இந்த நாள் உள்ளது” என்று ராய் கூறினார்.

பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட இரண்டு சம்பவங்கள் மற்றும் போரில் அது தோல்வியடைந்ததைக் குறிப்பிடுவதன் பின்னணியில் அவரது நோக்கத்தைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல. ஆனால் ஜனவரி 22 ஐ இந்தியாவின் சுதந்திர தினத்துடன் ராய் ஒப்பிட்டுப் பார்த்தது நெருக்கமான ஆய்வுக்கு உட்பட்டது.

ஆகஸ்ட் 15, 1947 சுதந்திரத்தின் உணர்வைத் தூண்டும் ஒரு நாள் - எந்தவொரு பொய்யும் மோசடியும் இல்லாமல் அடையப்பட்ட சுதந்திரம். சுதந்திரப் போராட்ட காலத்தில், மிகவும் சக்திவாய்ந்த பிரிட்டனுக்கு எதிரான போராட்டம் வெளிப்படையாக நடத்தப்பட்டது. காந்தியும் அவரது கூட்டாளிகளும் ஆங்கிலேயர்களுடன் நேருக்கு நேர் போராடினர். இந்திய தரப்பிலிருந்து எந்த சதியும் இல்லை, வன்முறையும் இல்லை. ஆகஸ்ட் 15 வெற்றியில் ஆழமான தார்மீகம் இருந்தது, இது எதிரி பிரிட்டனைக் கூட சரணடையச் செய்தது. இந்த போராட்டம் வெறுப்பால் நடத்தப்படவில்லை. அது அன்பையும் இரக்கத்தையும் உருவாக்கியது. அதனால்தான், உலகில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் இந்த மாபெரும் போரிலிருந்து உத்வேகம் பெற்றனர். அதற்கு நேர்மாறாக, அயோத்தியில் புதிய ராமர் கோவில் கட்டுவதை வஞ்சகம், பொய், வன்முறை, கோழைத்தனத்தால் மட்டுமே சாத்தியமாக்கியுள்ளது.

ராமரின் வனவாசத்தை முடித்துக் கொண்டு பாரதிய ஜனதா கட்சி அவரை அயோத்திக்கு அழைத்து வந்துள்ளதாக அறிவித்துள்ளது. வன்முறையிலும் வெறுப்பிலும் நம்பிக்கை கொண்ட ஒரு அமைப்பு தன்னை ராமரின் காவலனாக அறிவித்துக் கொண்டது. ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்படவிருக்கும் இந்த கோயில், பாஜக மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க (ஆர்எஸ்எஸ்) பாதுகாவலர் அல்லது மூலவரான ராமரின் கோயிலாகும். இந்துக்கள் இந்தக் கோவிலை அங்கீகரித்தால், பிஜேபி அல்லது ஆர்எஸ்எஸ் அவர்களின் மதத்தையும், அவர்களின் மத நடத்தையையும் வரும் நாட்களில் தீர்மானிக்கப் போகிறது என்று அர்த்தம்.

லால் கிருஷ்ண அத்வானி தலைமையிலான பிரச்சாரம் இல்லாமல் இந்த கோவில் சாத்தியமில்லை. ராமஜென்மபூமி பிரச்சாரம் உண்மையில் ஒரு அரசியல் பிரச்சாரம் என்றும், அதன் நோக்கம் மதம் அல்லது ஆன்மீகம் அல்ல என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்துக்களை மூளைச்சலவை செய்ய ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ராமர் ஒரு கருவி மட்டுமே. அத்வானியின் வாக்குமூலத்தில் இருந்து தான் இந்து மதத்திற்காக போராடவில்லை என்பது தெளிவாகிறது. பிஜேபி மட்டுமே ராமர் மீது அக்கறை கொண்டுள்ளதாக இந்துக்களை எப்படியாவது நம்பவைத்து, அந்த உணர்வைப் பயன்படுத்தி அதன் ஆதரவு தளத்தை உருவாக்க வேண்டும். அதில் அது வெற்றி பெற்றுள்ளது என்பது தெளிவாகிறது.

பாபர் மசூதியை இடிக்கும் பிரச்சாரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வன்முறை ஏற்பட்டது. வட இந்தியாவில் இரத்தக்களரியை ஏற்படுத்திய சவப்பயணம் அத்வானியின் டொயோட்டா டிரக்குடன் தொடங்கியது. இந்த முழுப் பிரச்சாரத்திலும் சிந்தப்பட்ட இரத்தம் இன்றுவரை கணக்கிடப்படவில்லை. அதற்கு யார் பொறுப்பு? ராமர் அல்ல, பிஜேபிதான், அவர்களுக்கு ராமர் என்பது அரசியல் லாபகர பெயர்.

இம்முறையும் ராமர் ஒரு கருவி மட்டுமே. அயோத்தியில் இந்த சமீபத்திய ராமர் கோவிலின் முக்கியமான யாகத்தை வளர்ப்பதற்கு தவறான வார்த்தைகள், தவறான நடத்தை, வெறுப்பு மற்றும் வன்முறை பிரச்சாரங்களால் அறியப்பட்டதொரு நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட யாகமா புனித ஆன்மாவை தூண்டும்? ராமரை கருவியாக பயன்படுத்துபவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த யாகத்தில் யாரெல்லாம் கலந்துகொள்கிறார்களோ, அவர்கள் இம்மாபாதகர்களின் வன்முறையையும் நியாயப்படுத்துகிறார்கள் என்றே அர்த்தம்.

ராமர் கோயில் கட்டப்பட்ட நிலத்தை பொய், வஞ்சகம், வன்முறை, கோழைத்தனம் ஆகியவற்றிலிருந்து பிரிக்க முடியாது என்பதே உண்மை. இப்போது எந்த அரசியல் கட்சிக்கும் இதைச் சொல்ல தைரியம் இருக்கிறதா?

இந்தியாவிற்கு இது தேசிய மன்னிப்பு கோரும் நாளாக இருக்க வேண்டும். ராமர் என்ற பெயரில் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்யும் நாள். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கும். இவை அனைத்திற்கும் மேலாக, காங்கிரஸின் கோழைத்தனம் இல்லாமல், இந்த கோவிலைக் கட்டியிருக்க முடியாது. தாங்கள் இல்லாமல் இந்த கோவில் சாத்தியமில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறுவது சரிதான். ஆனால் இது பெருமைக்குரிய விஷயம் அல்ல, அவமானம்.

ஆகஸ்ட் 15, 1947 ஐ அர்த்தமற்றதாக்கும் சதி அந்த நிமிடத்தில் இருந்தே தொடங்கியது என்பதை காங்கிரஸ் மறந்துவிடக் கூடாது. இப்போது, 2024 ஜனவரி 22, 1947 ஆகஸ்டு 15க்கு சமம் என்ற கூற்று முன்வைக்கப்படுகிறது. வகுப்புவாத வஞ்சகத்தையும் வன்முறையையும் எதிர்கொள்ளத் தயங்கியதுதான் நாட்டை இந்த நிலைக்குக் கொண்டுவந்தது என்பதை காங்கிரஸ் உணருமா?

காங்கிரஸ் தன் தவறுக்கு மனம் வருந்தலாம். காந்தி மற்றும் நேருவின் கட்சிக்கு இது ஒரு சுயபரிசோதனையின் தருணம் என்று கருதி அழைப்பிற்கு பதிலளிக்கலாம். அதன் தயக்கமான மதச்சார்பின்மையை உறுதிப்படுத்த இது ஒரு நல்ல தருணம். பாபர் மசூதி பிரச்சனைகளில் 1949 மற்றும் 1992ல் நடந்த குற்றங்களுக்கு தண்டனை வழங்காததன் விளைவுகளை இந்தியா இன்னும் அனுபவித்து வருகிறது என்று தைரியமாக சொல்ல வேண்டும்.

இந்த பரிகாரமும் கூட இந்து சமுதாயத்தின் சுய மீட்புக்கு இன்றியமையாதது. ஆனால் அது வருந்தாது என்பது ஒரு சோகமான உண்மை, அதன் கடந்த காலத் தவறுகளை சுயபரிசீலனை செய்ய மறுப்பது காங்கிரசின் நிலையை மேலும் மோசமாக்கும் என்பதும் மற்றொரு உண்மை.

காங்கிரஸ் தலைவர்கள் பற்றிய விவாதத்தில் எனது நண்பர் ஒருவர், 2019 நவம்பருக்குப் பிறகு அவர் அயோத்தி செல்வதை நிறுத்திவிட்டதாக கூறினார். அதற்கு முன் அடிக்கடி அயோத்திக்கு சென்று வருவது வழக்கம். அவர் சரயு நதியில் புனித நீராடி ஹனுமான் கர்ஹி மற்றும் கனக் பவனுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்,. அவர் அயோத்திக்கு சென்று தரிசனம் செய்த சம்பவத்தை விவரித்தார். அவர் ஒரு வயதான சாதுவிடம் அயோத்தியில் என்ன புனிதம் என்று கேட்டார். அதற்கு அவர் “முதலாவதாக, நித்தியமான சரயு நதி என்றும், இரண்டாவதாக அது அயோத்தி நிலம் என்றும் சாது கூறினார். மற்றவை அனைத்தும் இவர்கள் உருவாக்கிய கதைகள் மட்டுமே. அந்த கதைகள் ராமர் மீதான பக்தியின் கூற்றுகள் அல்ல, அவை உடைமைகளுக்கு உரிமைகோரல்கள் மட்டுமே” என்று பதிலளித்துள்ளார்.

எனது நண்பர் அயோத்திக்கு வரத் தொடங்கியபோது, பாபர் மசூதியின் இடித்து நொறுக்கப்பட்ட கட்டுமான குப்பைகள் (debris) அங்கேயே இருந்தன. அது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குற்றத்திற்கான சாட்சி. அரசின் அனைத்து நிறுவனங்களும் பங்கேற்ற அல்லது ஒத்துழைத்த குற்றம் அது. பாபர் மசூதி இருந்த இடமாக கூறப்படும் இந்த ராமஜென்மபூமிக்கு செல்வது பற்றி அவர் நினைத்ததே இல்லை. டிசம்பர் 6, 1992 அன்று நடந்த அநீதியை இந்தியா தண்டிக்கும் என்ற நம்பிக்கை இந்தக் குப்பைகளில் இருந்தது. ஆனால் நவம்பர் 9, 2019 அன்று, இந்த நீதியின் நம்பிக்கை உச்ச நீதிமன்றத்தால் மிகவும் ஆழமாகப் புதைக்கப்பட்டது. நவம்பர் 9, 2019 முதல் அயோத்தி அநீதியின் சின்னமாக மாறியது.

அன்று முதல் அயோத்தி தன் மனதில் இருந்து மறைந்து விட்டதாக என் நண்பன் சொன்னான். இப்போது அதுவொரு சிதைந்த சிலை, ஒரு கந்தித் பிரதிமா (khandit pratima). அங்கு வழிபட முடியாது. இது அநீதியின் வெற்றியின் அடையாளம். அநீதிக்கும் ஆன்மீகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

காங்கிரஸ் கட்சியால் மட்டுமே இந்த உணர்வை உருவாக்க முடியும். அதாவது, அந்த தீயசக்தியின் வெற்றியைக் கொண்டாடுவதில் இருந்து கருத்துக் கூறாமல் விலகி இருக்கத் தெரிந்தாலும், அது தன் கடமையைப் புறக்கணித்ததாகவே இருக்கும். அந்தக் கடமை மக்களிடையே சரி, தவறு பற்றிய உணர்வை எழுப்ப வேண்டும். எனது இளம் இந்து நண்பர் இன்னும் அந்த விழிப்புணர்வை தன்னுள் வைத்திருக்கிறார் என்றால், அந்த உணர்வு மற்றவர்களிடம் ஏன் இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதற்கான பதில் இல்லை.

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://thewire.in/politics/the-ram-temple-at-ayodhya-is-a-symbol-of-injustice-congress-leaders-should-stay-away-from-it

Disclaimer: கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு