பொது சிவில் சட்டம்: பல ஆண்டுகளாக உக்கிரமடைந்து வரும் விவாதங்களும், வலுவான எதிர்ப்பலைகளும்

தமிழில் : விஜயன்

பொது சிவில் சட்டம்: பல ஆண்டுகளாக உக்கிரமடைந்து வரும் விவாதங்களும், வலுவான எதிர்ப்பலைகளும்

பிரதமர் மோடி கடந்த செவ்வாயன்று பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பேசினார். அப்போது இச்சட்டத்தை எதிர்ப்பதற்காக சிறுபான்மை மக்களை தூண்டிவிடும் வகையில் எதிர்க்கட்சியினர் செயல்பட்டு வருகிறார்கள் என்ற கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். மதம், பாலினம், சாதி, இன்னப் பிற வேறுபாடுகளின்றி அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான சட்டத் தொகுப்பொன்றை உருவாக்குவதற்காக பொது சிவில் சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த செவ்வாயன்று(ஜீன் 27) பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பேசினார். அப்போது இச்சட்டத்தை எதிர்ப்பதற்காக சிறுபான்மை மக்களை தூண்டிவிடும் வகையில் எதிர்க்கட்சியினர் செயல்பட்டு வருகிறார்கள் என்ற கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். மோடியின் இப்பேச்சிற்கு எதிராக அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (AIMIM) சுருக்கமாக மஜ்லிஸ் கட்சி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடமிருநது எதிர்ப்புகள் கிளம்பியது. “பிரிவினைவாத அரசியலை” மோடி கையிலெடுக்கிறார் என்று பதிலுக்கு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. மேலும், வீட்டையும், நாட்டையும் ஒப்பிட்டுக் கூறுவது மடத்தனம் என்று கூறியதோடு எவர்மீதும் பொது சிவில் சட்டத்தை நீங்கள் திணிக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

சட்ட ரீதியிலான அம்சங்கள் குறித்து பார்ப்போம். பொது சிவில் சட்டம் மீதான மக்களின் கருத்துக்களையும், பரிந்துரைகளையும் வழங்குமாறு முறைப்படி சட்ட ஆணையம் பொது அறிப்பு ஒன்றை 2023 ஜீன் 14, ல் வெளியிட்டிருந்தது. இதே சட்டத்தின் மீதான மக்களின் கருத்தறிவதற்கான விவாத குறிப்பறிக்கை ஒன்றை 21வது சட்ட ஆணையம் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளியிட்டிருந்தது. அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து இந்த பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டத்திற்கான முக்கியத்துவம், தேவை மட்டுமல்லாது நீதிமன்றங்கள் இது குறித்து அளித்திருந்த தீர்ப்புகளையும் கணக்கில் எடுத்து கொண்டு பார்க்கிற போது, இந்த விவகாரத்தை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது அவசியமானதென 22வது இந்திய சட்ட ஆணையம் கருதுகிறது என புதிதாக வெளியிடப்பட்டிருந்த அறிவிக்கையில் கூறப்பட்டிருந்தது.

பொது சிவில் சட்டம் குறித்தான பொது மக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மத நிறுவனங்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக ஆணையம் வெளியிட்டிருந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள் எவ்வாறு பெறப்படுகிறது?

அறிவிப்பு வந்த நாளிலிருந்து (ஜீன் 14, 2023) முப்பது நாட்களுக்குள் மக்கள் தங்கள் கருத்துக்களை  தெரிவிக்கலாம். சட்ட ஆணையத்தின் வலைதளத்தில் கருத்துரைப்பதற்கு “இங்கே சொடுக்கவும்” என இருக்கும் பொத்தான் வழியாகவோ அல்லது ஆணையச் செயலரின் மின்னஞ்சல்(lci@gov.in) வாயிலாகவோ தங்களது கருத்துக்களை சமர்பிக்கலாம். பொது சிவில் சட்டம் தொடர்பான எந்த அம்சம் குறித்தும் விரிவான விவாதக் குறிப்பறிக்கைகளாகவும் கூட இந்திய சட்ட ஆணையத்தின் செயலாளர் அலுவலகத்திற்கு(நான்காவது தளம், லோக் நாயக் பவன், கான் மார்க்கெட், புதி தில்லி – 110 003) தபால் வழியாக அனுப்பி வைக்கலாம். இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிப்பதற்காக தனிநபர்களோ அல்லது அமைப்புகளின் பிரதிநிதிகளோ நேரடியாகக் கூட வரலாம் என்று ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

பொது சிவில் சட்டம் ஏன் முக்கியமானது?

இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தில் வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடாக(DPSP) சேர்க்கப்பட்டிருந்த பொது சிவில் சட்டம் பல ஆண்டு காலமாகவே இந்திய அரசியலில் சர்ச்சைக்குரிய விசயமாகவே நீடித்து வருகிறது.

“இந்திய ஆட்சி எல்லை முழுமைக்கும், அனைத்து குடிமக்களுக்கும் ஒரு பொதுவான உரிமையியல் சட்டத் தொகுப்பை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம்” என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு – 4 ல் உள்ள 44வது சரத்து கூறுகிறது.

1998 மற்றும் 2019 ல் நடந்த தேர்தல்களில், பாஜகவின் தேர்தல் அறிக்கைகளில்கூட பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. நாரயண லால் பஞ்சாரியா என்பவர் நாடாளுமன்றத்தில் இதனை சட்டமாக்குவதற்காக நவம்பர் 2019ல் சட்ட முன்வரைவாக(மசோதா) முன்மொழிந்தார். பின்னர் எதிர் கட்சிகளின் போராட்டத்தின் காரணமாக இந்த மசோதா திருமபப் பெறப்பட்டது.  மார்ச் 2020ல் கிரோடி லால் மீனா என்பவர் மூலம் இச்சட்டம் மீண்டும் நாடாளுமன்றத்தில் முன்மொழிவதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் பின்னர் அந்த முடிவு கைவிடப்பட்டது. திருமணம், விவாகரத்து, தத்தெடுக்கும் உரிமை, வாரிசுரிமை தொடர்பான சட்டங்களில் சமச்சீரான தன்மை கொண்டு வரப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றத்திலும் கூட இதற்கு முன்னதாக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பல்வேறு மதத்தவர்களின் குடும்ப விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதற்காக இருந்துவரும் பல்வேறு குடும்பச் சட்ட நடைமுறைகள் பெண்களுக்கு எதிராக இருப்பதோடு பாகுபாடு பாராட்டுவதாகவும் இருக்கிறதென்பதை 2018-ல் சட்ட ஆணையம் வெளியிட்ட விவாதத்திற்கான குறிப்பறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளதோடு இவை சரிசெய்யப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இஸ்லாமிய பெண்களின் விவாகரத்து உரிமை தொடர்பான ஷா பானு வழக்கில்(1985), “நாட்டின் ஒருமைப்பாட்டையும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு வழியமைத்துத் தரும் கருவியாக பொது சிவில் சட்டம் விளங்குகிறது என்பதால் அதற்கென ஒரு பொதுவான வரைவெல்லையை நாடாளுமன்றம் உருவாக்கிட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கருத்துரைத்திருந்தது.

“பெற்ற குழந்தைகளை பேணி வளர்ப்பதற்கு இயற்கையாக இருக்க வேண்டிய பாதுகாவலர் உரிமை” கூட கிறுத்துவ மதச் சட்டத்தின்கீழ் கிறித்தவ பெண்களுக்கு வழக்கப்படவில்லை. ஆனால், திருமணமாகாத இந்து பெண்களுக்கு கூட அவ்வுரிமை உள்ளது என்று ABC எதிர் தில்லி மாநில அரசு(2015) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற “அரசிலமைப்புச் சட்டத்தின் எதிர்பார்ப்பு நிறைவேறமலே இருந்து வருகிறது” என்று உச்ச நீதிமன்றம் அவ்வழக்கில் தெரிவித்திருந்தது.  

பாலின சமத்துவத்தை உறுதிபடுத்தும் வகையில், ஆண் வாரிசுகளைப் போல சக வாரிசுதாரர் என்பதன் அடிப்படையில்(Coparcenary rights) பெண்களுக்கு அதாவது இந்து வாரிசுரிமை சட்டம் 2005 ல் திருத்தப்பட்டபோது உயிருடன் இருந்த அல்லது அதன் பிறகு பிறந்த பெண்களுக்கு பரம்பரைச் சொத்துக்களை பெறுவதில் சம உரிமை உள்ளது என்று இந்து வாரிசுரிமை சட்டத்தின் அடிப்படையில் 2020ல் உச்ச நீதிமன்றம் பொருள் விளக்கம் அளித்திருந்தது.

மாற்று மதத்தவரை திருமணம் செய்வதன் மூலம் மதம் மாறுவதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், “தேசிய ஒருமைப்பாட்டுணர்வு வளர்வதற்கு ஒரு பொது சிவில் சட்டம் இயற்றுவது பயனுடையதாக இருக்கும்” என்று அலகாபாத் உயர்  நீதிமன்றம் கூறியிருந்தது. பல்வேறு திருமணச் சட்டங்கள் தடைகளாக இல்லாமல் நாட்டின் அனைத்து குடிமக்களும் “மன விருப்பத்தின்படி திருமணம் செய்து கொள்வதை” உறுதி செய்வதற்கு சமச்சீரான குடும்பச் சட்டங்கள் இயற்றப்படுவதை நாடாளுமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

பொது சிவில் சட்டம் தொடர்பான பல்வேறு சட்ட கருத்துக்களையும், சவால்களையும் குறித்து இந்தியா டுடே ஆராய்ந்தது.

“பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்ற பேரார்வம் நமது நாட்டின் பன்முக கலாச்சாரத்தை சிதைத்துவிடுமளவிற்கு சென்றுவிடுமானால், அதுவே நாட்டின் பிராந்திய அளவிலான ஒருமைப்பாட்டுணர்விற்கு கேடு விளைவிப்பதாக மாறிவிடும்” என்று ஆகஸ்ட் 31, 2018ல் இந்திய சட்ட ஆணையத்தால் வெளியிடப்பட்ட விவாதத்திற்கான குறிப்பறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திருமணம், விவாகரத்து, தத்தெடுக்கும் உரிமை, குழந்தைகளை வளர்க்கும் பாதுகாவலர் உரிமை, வாரிசுரிமை, பரம்பரை சொத்துக்களைக் பெறுவதற்கான உரிமை தொடர்பான பல சட்டங்களை நடைமுறையில் ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்வதாக பொது சிவில் சட்டம் அமைந்திருக்கும். நாடு முழுவதும் உள்ள எல்லா மதத்தவர்களின் பழக்கவழக்கங்கள், அந்தந்த பிராந்தியத்திற்கே உரிய வழக்கங்கள், மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள் உட்பட கலாச்சாரத்தின், மதத்தின் பல்வேறு அம்சங்களையும், பல்வேறு நடைமுறைகளையும் ஆராய்வன் மூலமே இதைச் செய்ய முடியும் என்று 2018ல் வெளியான குறிப்பறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சவால்கள் அல்லது சிக்கல்கள்

இந்தியா சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில், பொது சிவில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், தனிநபர்களின் விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்களை சீர்திருத்துவதற்கான கோரிக்கையும் பல்வேறு காலக்கட்டங்களில் எழுப்பப்பட்டே வந்துள்ளது. எனினும்,பொது சிவில் சட்டத் தொகுப்புகளை அமல்படுத்தும்போது மத அமைப்புகளின் எதிர்ப்பு, அரசியல் ரீதியிலான ஒத்த கருத்தின்மை, ஒரே சட்டத் தொகுப்பாக இருந்தாலும் அதிலுள்ள பல்வேறு மதத்தவர்களுக்கான சட்டங்களிலே காணப்படும் வேறுபாடுகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், விவாகரத்து, குழந்தைகளை வளர்க்கும் பாதுகாவலர் உரிமை, வாரிசுரிமை தொடர்பான சட்டங்களை ஒழுங்குபடுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தின் முன்பு தற்போதும் பல பொது நல வழக்குகள் நிலுவையிலுள்ளன.

மூன்று முறை வெறுமனே தலாக் என்று சொல்வதன் மூலம் உடனடியாக விவாகரத்து செய்தல், ஒப்பந்த முறையிலான திருமணம்(முதா), விவாகரத்து ஏற்பட்டால் குறுகிய காலத்திற்கு வேறொரு ஆணுடன் திருமணம் செய்தல்(நிக்காஹ் ஹலால்) போன்ற பெண்களுக்க எதிரான பாகுபாடு பாராட்டக்கூடிய வழக்கங்கள் இஸ்லாமிய சட்டத்தில் கடைபிடிக்கப்படுவதை சுட்டிக்காட்டி இஸ்லாமிய பெண்கள் தரப்பிலிருந்து பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. 

சீக்கியர்களுக்கான திருமணச் சட்டங்கள் ஆனந்த் திருமணச் சட்டம், 1909ன் கீழ் வருகிறது. எனினும், அதில் விவாகரத்து தொடர்பான சத்துக்கள் கொடுக்கப்படாததால் இந்து திருமணச் சட்டத்தின்படி விவகாரத்து விவகாரங்கள் கையாளப்படுகிறது.

தத்தெடுத்தல் தொடர்பான சட்டங்களும் கூட மதத்திற்கு மதம் மாறுபடுகிறது. உதாரணத்திற்கு, பார்சிகள் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்களுக்கான உரிமைகளை தத்தெடுக்கப்பட்ட பெண் பிள்ளைகளுக்கு வழங்கப்படாத நிலையில் தத்தெடுக்கப்பட்ட ஆண் பிள்ளைகளுக்கு வழங்குகிறார்கள். எனினும், ஆண்பிள்ளைகளுக்கேகூட, பரம்பரைச் சொத்துக்களில் உரிமையோ அல்லது ஜீவனாம்ஷமோ வழங்கும் முறை பார்சி மத வழக்கத்தில் கிடையாது. தத்தெடுத்தல் தொடர்பான சட்டங்களை திருத்துவதற்கான முன்மொழிவுகளுக்கு அம்மதத்தவர் மத்தியிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பதினெட்டு வயது பூர்த்தியடையாத இளையோர்களை(மைனர்) பாதுகாத்து வளர்க்கும் உரிமைகளை ஒழுங்குபடுத்துவதற்கு கூட பல்வேறு தனிநபர் சட்டங்கள் உள்ளன. அதிலும்கூட சிறுவன் சிறுமிகளுக்கான பாதுகாவலர் உரிமையில் பாகுபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ‘பதினெட்டு வயது பூர்த்தியடையாத இளையோர்கள் (மைனர்) தொடர்பான பாதுகாவலர் உரிமை, பராமரிப்பு உரிமை முதலியவற்றில் பெண்களுக்கு எதிராக நிலவும் பாகுபாடுகளை களைதல் மற்றும் நல்வாழ்வுக் கோட்பாடுகள் பற்றிய விளக்கம்’ என்ற தலைப்பிட்ட சட்ட ஆணையத்தின் 133 வது அறிக்கையிலும்(1989), ‘இந்தியாவில் உள்ள பாதுகாவலர் உரிமை மற்றும் பராமரிப்பு உரிமை தொடர்பான சட்டங்களை சீர்திருத்துவது’ என்று தலைப்பிட்ட சட்ட ஆணையத்தின 257வது அறிக்கையிலும்(2015) குழந்தைகளை பாதுகாத்து வளர்ப்பதில் பெற்றோர்கள் இருவருக்குமே உள்ள சம உரிமை பற்றிய பிரச்சினையில் அவர்களின பங்கு மற்றும் பொறுப்புடைமை மட்டுமல்லாது அவர்களின் உரிமை மற்றும் சட்ட ரீதியில் அவர்களின் நிலை என்ன என்பது பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

இறந்தது ஆணா பெண்ணா என்பதைப் பொறுத்து அவர்களின் வாரிசுகளுக்கு இடையில் ஒதுக்கப்படும் சொத்துக்களில் பாரபட்சம் காட்டப்படுவதை நீக்க வேண்டுமென்பதற்காக இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்ட்ட வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதை பார்க்கும் போது வாரிசுரிமைச் சட்டங்களுக்கு எதிராகவும் கூட நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

திருமணமான பெண் ஒருவர் உயில் ஏதம் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால், அவருடைய சொத்துக்கள் முறைப்படி கணவன் மற்றும் கணவனின் குடும்ப உறுப்பினர்களுக்கே முதலில் சென்று சேரும், அவர்கள் யாரும் இல்லாத நிலையில் அல்லது இரண்டாம் நிலையாகத்தான் இறந்த பெண்ணின் பெற்றோர்கள்/உடன்பிறந்தவர்களுக்கு செல்லும். இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி இதுவே இன்றைய நடைமுறையாக இருக்கிறது. இறந்தது ஆணா பெண்ணா என்பதைப் பொறுத்து அவர்களின் வாரிசுகளுக்கு இடையில் ஒதுக்கப்படும் சொத்துக்களில் பாரபட்சம் காட்டுவது மற்றும் பெண்கள் தாமாக சேர்த்த சொத்துக்களை பங்கிடுவதில் வரும் பிரச்சினைகள் குறித்து இந்திய சட்ட ஆணையம் 2008ல் வெளியிட்ட 204 மற்றும் 207வது அறிக்கையில் ஆராய்ந்துள்ளது. சொத்துக்களை வாரிசுரிமையின்படி பெறுவதில் இந்து பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை சீரமைக்க வேண்டுமென இந்த அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

இந்திய வாரிசுரிமைச் சட்டம், 1985ன்படி வாரிசுரிமையில் எழக்கூடிய பிரச்சினைகள் குறித்து 110வது அறிக்கையிலும் கூட ஆராயப்பட்டுள்ளது. வாரிசுகள் என்ற பதத்திற்கான வரையறையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமெனவும், பார்சிகள் உட்பட பல்வேறு மதத்தவர்களின் வாரிசுரிமை சட்டங்களை ஒழுங்குபடுத்தி சீரமைக்க வேண்டுமெனவும் 110வது அறிக்கையின் வாயிலாக சட்ட ஆணையம் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. எனினும், முன்மொழியப்பட்ட பரிந்துரைகளுக்கு எதிராக மத அமைப்புகளிடமிருந்து கடுமையான எதிர்புகள் கிளம்பியதால் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்டது.

திருமண உறவுமுறைக்கு வெளியே பிறந்த குழந்தைகளுக்கான சொத்துரிமையும் அங்கீகரிக்கத்தக்கது என்றுகூட சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. திருமணம் செய்துகொள்ளாமல் தம்பதிகளாக வாழும் உறவுமுறையும் “திருமண உறவு முறை”யைப் போன்றதுதான் என நீதிமன்றங்கள் அங்கீகரித்துள்ள லிவ்-இன்-ரிலேசன்சிப் முறை அதிகரித்து வரும் இன்றைய காலத்தில் இது முக்கியமான கோரிக்கையாகவே மாறியுள்ளது எனலாம். 

‘பெண்களுக்கான சொத்துரிமை: இந்து மதத்தவர்களுக்கான சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள்’ என்ற தலைப்பில் சட்ட ஆணையத்தின் 174வது அறிக்கை 2000ஆம் ஆண்டில் வெளியானது. பரம்பரைச் சொத்துரிமை விவகாரத்தில்  ஆண்களைப் போலவே பெண்களையும் சக வாரிசுதாரராக அங்கீகரிக்காதது மற்றும் பிற பாரபட்சமான அனுகுமுறைகள் குறித்து அந்த அறிக்கையில் ஆராயப்பட்டுள்ளது. பரம்பரைச் சொத்தில் பெண்களும் தங்களுக்கான பங்கை பெறுவதற்கான உரிமையை அங்கீகரிக்கும் வகையில் 2005ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமை சட்டம் திருத்தப்பட்டது. எனினும், அனைத்து இந்து பெண்களுக்கும், தங்களது தந்தை 2005க்கு முன்பே இருந்தவர்களாக இருக்கும் பெண்களுக்கும்கூட கூட்டு வாரிசுதாரர் என்ற முறையில் சக ஆண் வாரிசுகளைப் போல சொத்துக்களை இயல்பாக பெறுவதற்கும், பரம்பரைச் சொத்தில் பங்கு கோருவதற்குமான சம உரிமை என்பது 2020ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலமாகவே உறுதிபடுத்தப்பட்டது.

இதுமட்டுமல்லாது, ஒவ்வொரு மதத்திற்குள்ளேயும் கூட வெவ்வேறு பிரிவினருக்கிடையில் பரந்துபட்ட வேறுபாடுகள் நிலவுவதை கண்டறிந்தது மட்டுமல்லாது சில மாநிலங்களில் மட்டும் வெவ்வேறு பட்டியல் பழங்குடியின மக்களின் கலாச்சார வழக்கங்களுக்கு பிரத்யேக பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதையும்கூட தனது அறிக்கைகள் மூலமாகவும், 2018ல் வெளியிட்ட விவாதத்திற்கான குறிப்பறிக்கையின் மூலமாகவும் சட்ட ஆணையம் உறுதிபடுத்தியுள்ளது.

உதாரணத்திற்கு, மேகாலயா மாநிலத்தில் உள்ள சில பழங்குடிகள் மத்தியில் “தாய்வழிச் சமூகமைப்பு முறை அதாவது பெண்களை குடும்பத் தலைவியாகக் கொண்ட பரம்பரை முறை பின்பற்றப்படுவது மட்டுமல்லாது சொத்துரிமையும்கூட இளைய மகளுக்கே வழங்கப்படும் முறையே நிலவுகிறது. கரோ(Garo) பழங்குடிகள் மத்தியில், மருமகன்கள் மனைவியின் இல்லத்தில் வந்து வாழும் வழக்கம் நிலவுகிறது.” என்று 2018ல் வெளியான குறிப்பறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

நாகா பழங்குடிகள் மத்தியில், பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது அல்லது நாகர்களைத் தவிர்த்து பிற ஆண்களை மணப்பதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்கு முன்பாக பலதரப்பட்ட கலாச்சார முறைகள் நிலவுகிறது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

 விவாகரத்து முடிந்த இந்துப் பெண்களின் ஜீவானாம்ஷம் தொடர்பான விதிகளில்கூட திருத்தங்களை கொண்டு வருவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட 98வது அறிக்கையில்(1984) பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, கிறுத்துவ பெண்களுக்கு விவகாரத்து கோருவதற்காக காண்பிக்கப்படும் காரணங்களில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு 1983ல் வெளியான அறிக்கையில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.

கிறுத்துவ திருமண சட்டங்கள் மற்றும் விவாகரத்து விதிகள் போன்றவற்றில் திருத்தங்களை கொண்டு வருவதற்காக 1960ல் சட்ட ஆணையம் வெளியிட்ட பரிந்துரைகள் கிறுத்தவ மத நிறுவனங்களின் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தது.

மணமுடித்த தம்பதிகளில் ஒருவர் மத மாறுவதை காரணமாக வைத்து விவாகரத்து செய்யும் பிரச்சினை குறித்து 1961ல் வெளியிடப்பட்ட சட்ட ஆணையத்தின் 18வது அறிக்கையில் ஆராயப்பட்டுள்ளது. மணமுடித்த தம்பதிகளில் எவரேனும் ஒருவர் முறைப்படி விவாகரத்து செய்யாமல் கிரிமினல் குற்றமாக கருதப்படும் இருதார மணமுறையை நாடும்போது மதம் மாறுவதனால், குறிப்பாக ஒருதார மணமுறை பின்பற்றப்படும் மதங்களிலிருந்து(அதவாது இந்து அல்லது கிறுத்தவ மதம்) பலதார மணமுறை பின்பற்றப்படும் மதங்களுக்கு(அதாவது இஸ்லாம்) மாறுவதனால்  உண்டாகும் விளைவுகள் குறித்து 2009ல் வெளியிடப்பட்ட 227வது அறிக்கை ஆராய்ந்துள்ளது.

ஒரு ஆண் பல பெண்களை மணமுடிப்பது, ஒரு பெண் பல ஆண்களை மணமுடிப்பது போன்ற பலதார முறைகள் அனுமதிக்கப்பட்டுள்ள சில பழங்குடிகளின் வழக்கங்களுக்கு அரசியலமைபு சட்ட ரீதியாகவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கொஞ்சம் கூட சரிசெய்ய முடியாதளவிற்கு, கொஞ்சம் கூட ஒத்துப்போகாதளவிற்கான கருத்து வேறுபாடுகளினால் மனதளவில் முறிந்துபோன உறவை” காரணமாகக் காட்டுவதன் மூலம் “குற்றங்குறையில்லையென்றாலும் விவாகரத்து”(No-fault divorce) பெறுவது போன்ற வழிமுறைகளை அங்கீகரிக்கலாம் என்று 1978ல் இந்து சட்டத்தின் கீழ் விவாகரத்து பெறுவதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்த 71வது அறிக்கையின் மூலம் சட்டம் ஆணையம் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

பொதுசிவில் சட்டத்தின் இன்ன பிற பாதகமான கிளை அம்சங்கள்

தனிநபர்களின் சிவில் உரிமைகளை பாதிக்கக்கூடிய அம்சங்கள் மட்டுமல்லாது, திருமணத்தை கட்டாயமாக பதிவுசெய்தல் தொடர்பாக எழும் பிரச்சினை குறித்து அராய்ந்ததோடு, பல்வேறு தனிநபர் சட்டங்கள் மற்றும் சிறப்பு திருமணச் சட்டங்கள் மூலமாக பதிவு செய்யப்படும் திருமண முறைகளின் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் சட்ட ரீதியான திருமண வயது தொடர்பாக எழும் சிக்கல்கள் குறித்தும் 2017ல் வெளியிடப்பட்ட 270வது அறிக்கையில் சட்ட ஆணையம் கேள்வியெழுப்பியிருந்தது.

குழந்தைத் திருமண தடைச் சட்டம், இ.பி.கோ மற்றும் போக்சோ சட்டங்களின்கீழ் பாலுறவுக்கு இசையும் வயது குறித்தும், பாலியல் வன்புணர்வு குறித்தான கிரிமினல் சரத்துகள் உருவாக்கப்பட்ட பிறகும்கூட, “16 வயது பெண் பிள்ளைக்கும் 18 வயது ஆண் பிள்ளைக்கும் திருமணம் செய்வது சட்டப்டி செல்லும் என இந்து சட்டம் சொல்கிறது. எனினும், குழந்தை திருமணத்தை ரத்து செய்வதற்கும் சட்டத்தில் இடமுள்ளது. பூப்பெய்தும் வயதை அடைந்த குழந்தைகளுக்கு செய்து வைக்கும் திருமணத்தை இந்தியாவிலுள்ள இஸ்லாமிய சட்டம் அங்கீகரிப்பதால் அது சட்டரீதியாகவும் செல்லுபடியாகிறது.” மேற்கூறிய இரண்டு சரத்துகளுமே கிரிமினல் குற்றமாக கருதப்படுவதை தவிர்த்துவிடுகிறது.

‘(கௌரவம், கலாச்சாரம் என்ற பெயரில்) சுதந்திரமான திருமண உறவுமுறைக்குள் தலையிடுவதை தடுத்தல்: முன்மொழியப்பட்ட சட்ட வடிவங்கள்’ என்ற தலைப்பில சட்ட ஆணையம் 2012ல் வெளியிட்ட அறிக்கையில் ஆணவக் கொலைகள், கப் பஞ்சாயத்துகளின் அதிகாரம் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சாதி மறுப்பு, மதம் மறுப்பு திருமணங்கள் செய்து கொள்ளும் இணையர்கள் ஆணவக் கொலைகளுக்கு பலியாவதைத் தடுக்கும் பொருட்டு சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்படும் சாதி மறுப்பு, மதம் மறுப்பு திருமணங்களில் பின்பற்றப்படும் சரிபார்ப்பு நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கான பரிந்துரைகளையும் அந்த அறிக்கையில் வழங்கியுள்ளது. ஒரு பொது சிவில் சட்டம் உருவாக்க வேண்டுமெனில் சிறப்பு திருமணச் சட்டத்தில் உள்ள இதுபோன்ற சரத்துகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

வரிவிதிப்பு மற்றும் வங்கிச் சட்டங்களில் சட்ட உரிமைகள் பெற்ற ஒரு தனிநபர்களுக்கு எவ்வாறு சலுகைகளும் பாதுகாப்புகளும் வழங்கப்பட்டுள்ளதோ அதேபோலத்தான் இந்து மதத்திலுள்ள கூட்டுக் குடும்பத்திற்கு(HUF) சில சலுகைகளும், பாதுகாப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொது சிவில் சட்ட உருவாக்கத்தின்போது வரி விதிப்பு தொடர்பான சட்டத் திட்டங்களையும் கூடுதலாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. பிற மதத்தைச் சேர்ந்த எந்த குடும்பத்திற்கும் வரிவிதிப்பு அல்லது வங்கிச் சட்டங்களின் எந்தவொரு பாதுகாப்பும், சலுகைகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“பொது சிவில் சட்டத்தை இயற்றவதில் கொஞ்சங்கூட ஒத்த கருத்து உருவாகாதபோது, தனிநபர் சட்டங்களில் காணப்படும் பண்மைத்துவத்தையும், வேற்றுமைகளையும் பாதுகாக்கும் அதே வேளையில் இந்திய அரசியலமைபுச் சட்டத்தின்கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக தனி நபர் சட்டங்கள் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ள முயல்வதே சிறந்த வழியாக இருக்க முடியும். எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு குடும்பம் தொடர்பாக இருக்கக்கூடிய எல்லா தனிநபர் சட்டங்களையும் முதல்கட்டமாக தொகுத்துகொண்டு, தொகுக்கப்பட்ட சட்டங்களுக்கு இடையில் காணப்படும் பாரபட்சமான அம்சங்களை, சட்டத் திருத்தத்தின் மூலமாக சீரமைக்கலாம். இவ்வழியின் மூலமாக உருவாக்கப்படும் பொது சிவில் சட்டமே பொருத்தமானதாக இருக்கும்” என்று 2018ஆம் ஆண்டில் பல்வேறுபட்ட மத நிறுவனங்களின் எதிர்ப்புகளையும், மாற்றுக் கருத்துக்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு வெளியிடப்பட்ட விவாதத்திற்கான குறிப்றிக்கையில் சட்ட ஆணையம் தனது ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.

பொது சிவில் சட்டத்தை இயற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை உணர்ந்த சட்ட ஆணையம் ஒரே சட்டத் தொகுப்பை உருவாக்குவதன் மூலம் பொது சிவில் சட்டத்தை இயற்றுவதற்கு பதிலாக பல்வேறு தனிநபர் சட்டங்களில் “பாரபட்சமாக வழங்கப்படும் உரிமைகளை பகுதி பகுதியாக பிரச்சினை எழும் இடங்களை மட்டும் திருத்தியமைப்பதன் மூலம் ஓரு பொதுவான உடன்பாட்டிற்கு வர முடியும்” என்று 2018ல் ஆலோசனை வழங்கியது.

இப்போது நீதிபதி ரித்துராஜ் அவாஸ்தி தலைமையில் அமைக்கப்பட்ட 22வது சட்ட ஆணையம் கருத்துக் கேட்பிற்கான புது அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த பிரச்சினை குறித்தான வாத விவாதங்களின் முடிவு என்னவாக இருக்கும் என்று இப்போதே நம்மால் கணிக்க இயலாது.

- விஜயன்

தமிழில்

மூலக்கட்டுரை: https://www.indiatoday.in/law/story/uniform-civil-code-challenges-and-debates-over-the-years-2393239-2023-06-15?utm_source=washare&utm_medium=socialicons&utm_campaign=shareurltracking