ஜனவரி - 30 – காந்தி படுகொலையும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

ஜனவரி - 30 – காந்தி படுகொலை நாளை காவி பயங்கரவாத நாளாக அறிவித்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

ஜனவரி - 30 – காந்தி படுகொலையும்  ஆர்.எஸ்.எஸ்.ஸும்

ஜனவரி - 30 – காந்தியார் படுகொலை நாளை, காவி பயங்கரவாத எதிர்ப்பு நாளாகக் கடைபிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்.ஐ விரட்டியடிப்போம்!

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

1948 ஜனவரி 30 அன்று காந்தியார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்திய தேசியத்தின் முன்னோடியான காந்தியைப் படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் அவரது சிலையையும் கூட விட்டுவைக்காமல் துப்பாக்கியால் சுட்டு தனது பயங்கரவாதத்தை ஆண்டுதோறும் நினைவு கூர்ந்து வருகிறது. 

ஆர்.எஸ்.எஸ் இன் அரசியல் முகமான பாஜக இன்று கார்ப்பரேட் நலன்களுக்காக நாட்டையே சீரழித்து கொண்டு, மதவெறி ஆட்சி நடத்திவரும் பாசிசச் சூழலில், காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளை காவி பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிப்பதும் பாஜக ஆட்சியை வீழ்த்த களம்காண்பதும் அவசியமானதும் அவசரமானதும் ஆகும். 

காந்தியை ஆர்.எஸ்.எஸ் கும்பல் படுகொலை செய்ததற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவில் இஸ்லாமியர்கள் சம உரிமையுடன் கூடிய குடிமக்களாக வாழும் உரிமை பெற்றவர்கள் என்ற அவரது நிலைப்பாடு எடுத்ததாகும்; காந்தி தன்னை இந்து என்றும் சனாதனவாதி என்றும் அறிவித்துக்கொண்டாலும் இந்து சமூகத்தில் தலித் மக்களுக்கு சம உரிமை உண்டு,  மதச்சார்பின்மை போன்ற அவரது நிலைப்பாடுகள் தங்களது நவீன இந்துராஷ்டிர கனவிற்கு இடையூறு என ஆர்.எஸ்.எஸ் கும்பல் கருதியது. 

எல்லாவற்றிற்கும் மேலாக காந்தி உயர்த்திப்பிடித்த சமயச்சார்பற்ற இந்திய தேசியம் உருவாகாமல் தடுத்து இந்துத்துவ தேசியவாதத்தை முன்னெடுத்து தனது தலைமையை நிறுவுவதற்கான மையமான இலக்கிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் கும்பல் காந்தியைப் படுகொலை செய்தது. அதனால் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது. ஆனால், அந்த தடை மிகக் குறுகிய காலத்திலேயே காங்கிரஸ் ஆட்சியின் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலால் ரத்து செய்யப்பட்டது. பிரம்மஞான சபையின் நவீன இந்துமதவாதத்தை (Neo-Hinduism) அடிப்படையாக்க கொண்டு கட்டப்பட்டதால்தான் காங்கிரஸ் தடையை நீக்கியது. அதற்கு பிறகுதான் ஆர்.எஸ்.எஸ். காவி பயங்கரவாத கும்பல் வளர்ந்தது. ஆகவேதான் ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பல் பட்டேலை தனது தலைவராக ஏற்றுக்கொண்டு சிலைவைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இட்லர் - கொபினியூ கும்பலின் தூய ஆரிய இனவாதத்தை அடிப்படையாக கொண்டுதான் நவீன இந்துத்துவாவை முன்வைத்தது. யூதர்களைக் கொன்றொழிப்பதன் மூலம் ஆரிய இனத்தின் தூய்மையைப் பாதுகாப்பது; அதன் மூலம் ஜெர்மானிய இனம்தான் ஆளத்தகுதி வாய்ந்த இனம் என்பதை நிறுவுவது என்ற நாஜிச வடிவத்தை இந்தியாவிற்கு பொருத்தி இசுலாமியர்கள், கிறித்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளை கொல்வதன் மூலம் இந்து இனத்தின் தூய்மையை (Hindu Race) பாதுகாப்பது அவசியம் என்று கோல்வால்கர் நேரடியாகவே கூறுகிறார். 

இத்தகைய நவீன இந்துத்துவத்தை பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் ஏகபோக நலன்களின் பாசிச சர்வாதிகாரத்திற்கு உகந்த வடிவமாக பயன்படுத்தி வெற்றி கண்டது பாஜக. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே சீருடை ஒரே காவல், ஒன் டேட்டா ஒன் எண்ட்ரி, ஒரே துறைமுகம், ஒரே பயணம் உள்ளிட்ட கார்ப்பரேட் கொள்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்திவருகிறது. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே இனம் உள்ளிட்ட கொள்கைகளின் பொருளியல் அடித்தளம் ஒரே சந்தையை உருவாக்குவதற்கேயாகும். இந்தியாவின் கடும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாமல்தான் இது போன்ற பாசிச செயல் தந்திரங்களை செயல்படுத்துகிறது.

காந்தியைக் கொன்றதன் மூலம் தனது முதல் பயங்கரவாத நடவடிக்கையை துவக்கிய ஆர்.எஸ்.எஸ் தனது பயங்கரவாத செயல்தந்திரங்களை ஒரு திட்டமிட்ட வன்முறை இயக்கமாகவே கொண்டு செல்கிறது. குஜராத் -டெல்லி கலவரங்கள், ரத யாத்திரை, பாபர் மசூதி தகர்ப்பு, தபோல்கர்-கௌரி லங்கேஷ் -கல்புர்கி படுகொலை, மாலேகான் அஜ்மர் தர்கா மற்றும் சம்ஜூதா விரைவு ரயில் குண்டுவெடிப்புகள் என காவி பயங்கரவாதத்தின் பட்டியல் மிக நீண்டது. 

இசுலாமியர்களையும் ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட சாதி மக்களையும் நாடற்றவராக மாற்றும் நோக்கில் குடியுரிமைச் சட்டம் கொண்டுவந்ததன் மூலம் இசுலாமியர்களின் குடியுரிமையைப் பறித்தது; மாட்டிறைச்சி தடை மூலம் அவர்களின் உணவுரிமையைப் பறித்தது; ஹிஜாப் தடை மூலம் மத - பண்பாட்டு - ஆடை உரிமையை பறித்தது; பாபர் மசூதியை தகர்த்து ராமர் கோவில் கட்டி அவர்களின் மத - வழிபாட்டுரிமையைப் பறித்தது; அதை தாஜ்மகால் காசி மதுரா வரை விரிவுபடுத்துவது; இசுலாமியர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து அவர்களின் வாழ்விட உரிமையைப் பறிப்பது.... என ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பாசிச நடவடிக்கைகளின் பட்டியல் அனுமார் வாலைவிட நீள்கிறது. 

கார்ப்பரேட் அரசியலை எதிர்த்தும், இந்துத்துவ அரசியலை எதிர்த்தும் மக்கள் போராடுவதை தடுக்கவே ஊபா, என்.ஐ.ஏ, குற்றவியல் நடைமுறை அடையாள சட்டம் உள்ளிட்ட பல பாசிச சட்டங்களை ஏவிவருகிறது. 

காந்தியைக் கொன்றதுமுதல் இந்நாட்டில் காவி பயங்கரவாதத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்பரிவார கும்பலை விரட்டியடிக்கவும் பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தவும் அணிதிரளுமாறு பொதுமக்களையும் ஜனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம்.

ஜனவரி 30ஐ காவி பயங்கரவாத எதிர்ப்பு நாளாக மக்களிடம் கொண்டு சேர்த்து ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் மதவெறி அரசியலை அம்பலப்படுத்துமாறு சனநாயக ஆற்றல்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

பாலன்,                               

ஒருங்கிணைப்பாளர்,

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி

   

Disclaimer: இந்த பகுதி முன்னணியின்  பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும்  இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு