மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பான கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்தின் பதில்

தமிழில்: சத்யன் - விஜயன்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பான கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்தின் பதில்

குறிப்பு : "அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஏற்றத் தாழ்வான வளர்ச்சி பெற்றுள்ள அரைக்காலனிய-அரை நிலப் பிரபுத்துவ இந்திய நாட்டின் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மக்கள் யுத்தப்பாதைக்கு நாடாளுமன்ற அமைப்பு முறையிலும் தேர்தலிலும் பங்கு கொள்வது உகந்ததல்ல. தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் செயல்தந்திரம் இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மக்கள் யுத்தப் பாதைக்கு கோட்பாடு ரீதியில் பொருந்தக் கூடியதே ஆகும்" என்ற செந்தளம் நிலைபாட்டிலிருந்து இக்கட்டுரையை விமர்சனபூர்வமாக படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

விரிவாக படிக்க: நாடாளுமன்ற முறை குறித்த பாட்டாளி வர்க்கக் கட்சியின் போர்த்தந்திரமும், செயல்தந்திரங்களும்!

"தேர்தல் மோசடிகளை அம்பலப்படுத்தும்  நோக்கில்தான் இக்கட்டுரை வெளியிடப்படுகிறதே  ஒழிய போலியான இந்திய  ஜனநாயகத்தின் இவ்வகை  தேர்தல் மீது மாயைகளை உருவாக்கும் நோக்கில் அல்ல".

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக அடிக்கடி எழுப்பப்டும் கேள்விகளுக்கான பதில்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.  

இவை, உண்மையில் EVM வடிமைப்பு முறையில் காணப்படும் குறைபாடுகள் பற்றி வாயைத் திறக்கவில்லை. 

  

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின்(EVM) பயன்பாடு இந்தியத் தேர்தல் முறையை, மின்னணுத் தேர்தல் முறையாக(EES) மாற்றிவிட்டது என்றே சொல்ல வேண்டும். எப்பேற்பட்ட தேர்தல் முறையின் நம்பகத் தன்மையையும், நேர்மையையும் ஆராய்வதற்கு, அந்த முறையில் உள்ள ஒரு அம்சத்தை – அது எவ்வளவுதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பினும் –ஒரே ஒரு அம்சத்தின் நம்பகத்தன்மையை மட்டும் ஆராய்வது போதுமானதாக இருக்காது. மாறாக, குறிப்பிட்ட தேர்தல் முறையின் ஒட்டுமொத்த அம்சத்தின் நேர்மையும், நாணயமும் பலமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

 

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக அடிக்கடி எழுப்படும் கேள்விகளுக்கான புதிய பதில்களை இந்தியத் தேர்தல் ஆணையம் ஜனவரி 30 அன்று வெளியிட்டிருந்த நிலையில், மற்றொரு புதிய கேள்வி-பதில் தொகுப்பும்கூட பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியிட்டிருப்பதென்பது வரவேற்கத்தக்க விசயம்தான். EVM தொடர்பாக வழக்கமாக  எழுப்பப்படும் கேள்விகளுக்கு, குறைந்தபட்சமாக சில தொழில்நுட்ப விவரங்களை உள்ளடக்கிய பதில்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்... 

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ளடங்கியுள்ள மூன்று கருவிகளுமே தொடர்நிலையான தகவல் பரிமாற்றத்திற்கு RS-435 தரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒற்றை மின்வட வழியையே பயன்படுத்துகிறது என்று தெளிவுபடுத்தியுள்ளனர். 

வாக்கு பெட்டியில்(Ballot Unit) செலுத்தப்படும் வாக்குப் பதிவைச் சரிபார்த்து ஒப்புகைச் சீட்டு வழங்கும் விவிபேட்(VVPAT) இயந்திரத்தை கட்டுப்பாட்டு சாதனத்திலிருந்து(Control Unit-CU) நீக்குவதென்பது வெறுமனே கழட்டி மாட்டுகிற விசயமல்ல என்பதே இந்த(RS-435) ஒற்றை மின்வட தொழில்நுட்பத்தின் மூலம் உறுதிபடுத்தப்படும் விசயமாகும். மாறாக, முழுவதுமாகவே மாற்றியமைத்து புதிதாக வடிமைக்கப்பட வேண்டும். அவ்வகையில், மின்னணு தேர்தல் முறையிலும் அதன் தொழில்நுட்பத்திலும் காணப்படும் பலவீனமான அம்சம் நாளையே தீர்க்க முடிகிற விசயமல்ல. வாக்கு பெட்டியில்(BU) விழும் ஒவ்வொரு வாக்கும் நேராக கட்டுப்பாட்டு சாதனத்திற்கு செல்லாமல் ஒப்புகைச் சீட்டு வழங்கும் விவிபேட் இயந்திரத்திற்கு செல்ல முடியாது; அதாவது, கட்டுப்பாட்டு சாதனத்துடனான தொடர்பு இல்லாமல் விவிபேட் இயந்திரம் வாக்குகளை சரிபார்த்து ஒப்புகை சீட்டுகளை வழங்க முடியாது என்பதை கீழ்க்காணும் வரைபடம் தெளிவாக விளக்குகிறது.. 

 

ஜனவரி 4-ம் தேதி, தி இந்தியா ஃபோரம் என்ற வலைதளத்தில் வெளியான எனது கட்டுரையில் கூறியபடி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின்(EVM) பயன்பாடு இந்தியத் தேர்தல் முறையை, மின்னணுத் தேர்தல் முறையாக(EES) மாற்றிவிட்டது. எப்பேர்பட்ட தேர்தல் முறையின் நம்பகத் தன்மையையும், நேர்மையையும் ஆராய்வதற்கு, அந்த முறையில் உள்ள ஒரு அம்சத்தை – அது எவ்வளவுதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பினும் – ஒரே ஒரு அம்சத்தின் நம்பகத்தன்மையை மட்டும் ஆராய்வது போதுமானதாக இருக்காது. மாறாக, குறிப்பிட்ட தேர்தல் முறையின் ஒட்டுமொத்த பகுதிக்கூறுகளின் நேர்மையும், நாணயமும் பலமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், அதன் நம்பகத்தன்மை நிறுவப் பட. அவ்வகையில், நடைமுறையலிருக்கும் மின்னணு தேர்தல் முறையின் நாணயமும், நம்பகத்தன்மையும் கைமுறையாக, மின்னணு வழியாக, இணையம் வழியாக வரக்கூடிய ஆபத்துகளை உறுதியாக முறியடிக்கும் திறன் பெற்றுள்ளதா என்பதை நிரூபித்தாக வேண்டியுள்ளது.  

  

அவ்வகையில், மேற்சொன்ன அனைத்து நிபந்தனைகளையும்  பூர்த்தி செய்கிறதா இல்லையா என்பதையே மின்னணுத் தேர்தல் முறையை முழுமையாக ஆராய்வதற்கு, நாம் அடிப்படையாக எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்களாகும். 

  

இந்தியத் தேர்தல் ஆணையம் அவர்களது வலைதளத்தில் வெளியிட்டுள்ள தகவலை அடிப்படையாகக் கொண்டு மின்னணுத் தேர்தல் முறையின் பகுதிக்கூறுகளை மட்டும் ஆராயமல், ஒட்டுமொத்தமாக நோக்கும் போது, வடிவமைப்பு/கட்டமைப்பு முறையிலேயே காணப்படும் பிராதானமான குறைபாடுகள் பின்வருமாறு: 

 

1. தொகுதிகளுக்கும் EVM கருவிக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பது உண்மையல்ல: 

 

வாக்கு பெட்டியும்(Ballot Unit), கட்டுப்பாட்டு சாதனமும்(Control Unit) இயங்குவதற்கு எந்தவொரு தொகுதியின்/இடத்தின் தகவலும் தேவைப்படாத நிலையில், ஒப்புகைச் சீட்டு வழங்கும் விவிபேட் கருவி செயல்படுவதற்கு அந்தந்த தொகுதியிலுள்ள வேட்பாளர்களின் தகவல்களை வாக்குப் பதிவு தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு அதில் பதிவேற்ற வேண்டியுள்ளது. ஒரு தேர்தல் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் நடைபெறுவதற்கு எந்தவொரு தொகுதி தொடர்பான தகவல்களையும் சாராமல் இருப்பது முதலில் அவசியமாகிறது. மின்னணுத் தேர்தல் முறையில் வாக்குப் பதிவைச் சரிபார்த்து ஒப்புகைச் சீட்டை வழங்குதல் போன்ற துல்லியமான வேலைகளைச் செய்யும் கருவி அந்தந்தத் தொகுதித் தொடர்பான தகவலை கொண்டிருக்கும் போது, எவ்வளவுதான் (இங்கொன்றும் அங்கொன்றுமாக) எந்த வரிசைக் கிரமம் கலைந்த, இரண்டு கட்டமாக, வாக்கு பதிவு இயந்திரத்தை வெவ்வேறு வாக்குச் சாவடிகளுக்கு ((இடம் மாற்றி) கலைத்துப் போட்டு அனுப்பினாலும், அது தொகுதிக்கு தொடர்புடையதாகத்தானே இருக்க வேண்டும்?  அதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. 

 

2. இவிஎம் வெளிக்கருவி எதனுடனும் இணைக்கப்பட்டிருக்காது என்று முன்பு சொன்னதும் முழு உண்மையல்ல: 

 வாக்குப் பதிவு நடைபெறும்போது மட்டுமே எதனுடனும் இணைக்கப்படாமல் இருக்கும்; மாறாக வாக்கு பதிவு தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு, மறைமுகமாக, சின்னத்தை பதிவேற்றும் கருவி(SLU) மற்றும் தனிக் கனிணி(PC) வழியாக இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும், அதாவது, அந்தந்தத் தொகுதிவாரியான தகவல்களை தேர்தல் ஆணையத்தின் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கும், வேட்பாளர்கள் தொடர்பான தகவல்களை சேமித்து வைப்பதற்கும் இணையத்துடன்(இன்டெர்நெட்) இணைக்கப்பட்டிருக்கும். (கேள்வி 52க்கு பதில்) 

 

3. பதிவேற்றம் செய்யப்படும் வேட்பாளர் தொடர்பான தகவல்களில் பிட்மேப்(bitmap) வடிவிலான படங்கள் மட்டுமே இடம்பெறும் என்பதும் முழு உண்மையல்ல: 

 

வாக்குப் பெட்டியில் செலுத்தப்படும் வாக்குகள், மின்னிலக்க எண்களாக மாற்றப்படுவதோடு, அந்தந்த வேட்பாளருக்குரிய எண் மதிப்புகளை சுமந்துகொண்டுதான் விவிபேட் இயந்திரத்திற்கு செல்கிறது. இங்ஙனம், பிட்மேப் வடிவிலுள்ள ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனியான எண் மதிப்பை குறித்தாக வேண்டும் அல்லது நிரல்நிறையாக எண் மதிப்பை சேமித்து வைத்திருப்பது அவசியமாகிறது. இவ்வாறிருக்க, பிட்மேப் வடிவிலுள்ள வேட்பாளரின் எண் மதிப்பில் எந்தமாதிரியான கூடுதலான தகவல்கள் குறியிடப்பட்டு பதிவேற்றப்படும் என்பது தெரியவில்லை ஆனால் நூறு சதவீதம் அவ்வாறு செய்வதற்கு மேற்கூறிய இரண்டு வழிகளிலுமே வாய்ப்புள்ளது. உள்ளீடு செய்யபட்ட வாக்குகளையும், ஒப்புகை சீட்டில் வெளியிடப்பட்ட வாக்குகளையும் சரிபார்க்கும் செயல்முறையை மாற்றியமைப்பதற்கு மட்டுமல்லாது, கட்டுப்பாட்டு சாதனம் எவ்வாறு மின்னிலக்கத் தகவல்களை செயல்முறைப்படுத்துகிறது என்பதையும்கூட இந்தக் கூடுதலாகச் சேர்க்கப்படும் தகவல் மூலமாக எளிதில் மாற்றியமைத்துவிடலாம்.   

4. ஒரு கால்குலேட்டர் போன்ற எளிய இயந்திரம்தான் இவிஎம் என்று கூறப்பட்டதும் உண்மையல்ல: 

 வாக்குப் பெட்டியும், கட்டுப்பாட்டுச் சாதனமும் வேண்டுமானால் அவர்கள் சொல்வது போல இருக்கலாம்(தேர்தல் ஆணையம் சொல்வதை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது, ஏனெனில் இது தொடர்பான எந்தவொரு ஆதாரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை), ஆனால் நிச்சயமாக விவிபேட் கருவி கால்குலேட்டர் போன்றதல்ல. விவிபேட் இயந்திரத்திற்கென்று தனியாக கட்டளை/நிறைவேற்று நிரல்கள் உள்ளன. அதாவது, குறைந்தபட்சம் வருகின்ற எண்ணிலக்க தகவல்களை புரிந்து கொண்டு, சேமிக்கப்பட்ட தகவலுடன் சரியாகப் பொருத்தியப் பிறகு, குறியிடப்பட்ட எண்ணைக் கொண்டுள்ள பிட்மேப் வடிவிலான வேட்பாளரின் படத்தை அச்சுப்பொறிக்கு அனுப்ப வேண்டும்; சரியாகப் பிரித்து ஒப்புகைச் சீட்டை வெளித்தள்ள வேண்டும். இதோடு கூடவே, அனுப்பப்பட்ட தகவல்கள்தான் அச்சிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து மீண்டும் கட்டுப்பாட்டு சாதனத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். ஒரு கால்குலேட்டர் செய்யும் பணியுடன் ஒப்பிடும்போது நிச்சயமாக இது மேம்பட்ட பணிகளையே செய்கிறது என்பது புலப்படும். இதுபோன்ற திட்ட/கட்டளை நிரல்களைக் கொண்டு நம்மால் மொத்தமாக எவ்வளவு வாக்குகள் செலுத்தப்படுகிற என்பதையும் கணக்கிட முடியும், செலுத்தப்பட்டுள்ள மொத்த வாக்குகளில் எத்தனையாவது வாக்கு எந்த வேட்பாளருக்கு விழுந்துள்ளது என்பதையும் கண்டறிய முடியும், கட்டுப்பாட்டு சாதனத்திற்கு “நாம் விரும்பும்படியான” உறுதிப்படுத்தல்களைக்கூட பதிலாகத் தர முடிவது போன்ற பலவற்றையும் செய்யலாம். (அதாவது வேட்பாளார் வரிசைக் கிரமத்தை பதிக்கும் நிரலியில், வாக்கை எண்ணுவது எப்படி என்ற கட்டளையும் அடக்கம். அந்தக் கட்டளையில் மோசடி செய்தால் போதுமானது, தேர்தல் முடிவை மாற்றிவிடலாம்) 

  

5. விவிபேட் கருவியை ஒரு முறை மட்டுமே நிரலாக்கம்(புரோக்கிராம் செய்ய) முடியும் என்று முன்பு கூறியதும் முழு உண்மையல்ல: 

 

விவிபேட் கருவியின் ஒரு நினைவகம் மட்டுமே ஒரு முறை நிரலாக்க (One time programmable) முறையின்படி செயல்படுகிறது; மற்றொரு தகவல் சேமிப்பகம் அப்படியில்லாமல் (இருப்பதை அழித்து) பல முறை நிரலாக்கும் வகையில்  வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று புதிதாக வெளியிடப்பட்ட கேள்வி-பதில் தொகுப்பில் (கேள்வி எண். 53க்கான பதிலில்) தேர்தல் ஆணையமே தெளிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில் விவிபேட் கருவி என்பது மிகவும் பலவீனமான கருவி என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். வாக்கு பெட்டியில் செலுத்தப்பட்ட வாக்குகள் மின்னிலக்க முறையில் கட்டுப்பாட்டு சாதனத்தில் வந்து சேருகிறது. செலுத்தப்பட்ட வாக்குதான் வந்து சேர்ந்துள்ளதா என்பதை உறுதிபடுத்துவதற்காகவுள்ள விவிபேட் கருவி ஒரு ஒப்புகைச் சீட்டை வழங்கும். கட்டுப்பாட்டு சாதனம் எந்த கட்டளை நிரலின் அடிப்படையில் செயல்படுகிறது என்பதைப் பற்றி எவருக்குமே தெரியாத நிலையில் செலுத்தப்பட்ட வாக்கும் சரிபார்க்கப்பட்ட வாக்கும் ஒன்றுதான் என்பதையும் எந்தவொரு டிஜிட்டல் தொழில்நுட்ப வல்லுநராலும் சொல்ல முடியாது. குறிப்பிட்ட வேட்பாளருக்கு செலுத்தப்பட்ட “X வேட்பாளருக்கான ஒப்புகைச் சீட்டை அச்சிடவும்” என்று கட்டுப்பாட்டு சாதனம் அளிக்கும் கட்டளைக்கு “X வேட்பாளருக்கு ஒப்புகைச் சீட்டு சொன்னவாறே வழங்கப்பட்டது” என்று விவிபேட் கருவி பதிலளிப்பதாக புரிந்துகொள்வோம். 

 “ஊகத்திற்கு இவ்வாறு வைத்துக்கொள்வோம். “3-க்கான ஒப்புகைச் சீட்டை அச்சிடவும்” என்று கட்டுப்பாட்டு சாதனம் அளிக்கும் கட்டளைக்கு, மூன்றாவது வரிசையிலுள்ள வேட்பாளருக்கான ஒப்புகைச் சீட்டையே வழங்க வேண்டும், அதாவது பிட்மேப் படத்தில் உள்ள மூன்றாவது வேட்பாளரின் பெயர், கட்சிப் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றையே அச்சிட்டு வழங்க வேண்டும். ஒருவேளை இவ்வாறு செய்வதற்கு மாறாக,  விவிபேட் கருவி  “3,5க்கான கட்டளை நிறைவேற்றப்பட்டது” என்றவாறு பதிலளிப்பதாக வைத்துக் கொள்வோம். விவிபேட் தரும் நிறைவேற்றப்பட்ட பதில்களில் x,y என்பதை வேட்பாளார் Xக்கு விழுந்த வாக்கை Yக்குரிய வாக்காக மாற்றி பதிவு செய்யும் வகையில் கட்டுப்பாட்டு சாதனத்தில் புரோகிராம் செய்யப்பட்டிருந்தது என்றால் சரியான ஒப்புகைச் சீட்டை வழங்கியபோதும் தவறான நபரின் பெயருக்கு வாக்கு பதிவாகிவிடுவதற்கு நிச்சயம் வாய்ப்புள்ளது. 

 

இவ்வாறு நடைபெறுவது சாத்தியமே, ஏனென்றால்: 

 

அ. விவிபேட் கருவி கட்டளை நிரல்களின் அடிப்படையில் இயங்குகிறது. 

 

ஆ. கட்டுப்பாட்டு சாதனம் வழங்கும் குறிப்பிட்ட எண் மதிப்பை புரிந்து கொண்டு, சின்னத்தை பதிவேற்றும் சாதனம் மூலமாக பதிவேற்றப்பட்ட பட்டியலில் உள்ள எண் மதிப்புடன் சரியாக பொருத்தும் வகையில் விவிபேட்-ன் கட்டளை நிரல்கள் உருவாக்கப்படுகிறது. 

  

இ. இணைய வசதியுள்ள கனிணியிலிருந்து பெறப்படுகின்ற பிட்மேப் வடிவிலான தகவல்களையே சின்னத்தை பதிவேற்றும் கருவி பதிவேற்ற முடியும். ஒரு குறிப்பிட்ட பிட்மேப் வடிவிலான(வேட்பாளர்) தகவலில் வெறுமனே ஒரேயொரு பிரத்யேகத் துண்டுத்(special byte) தகவலைச் மிகச் சுலபமாக சேர்ப்பதற்கு நிறையவே வாய்ப்புள்ளது. 

  

யாருக்கு எவ்வளவு வாக்குகள் செலுத்தப்படுகிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவது போன்றும், இன்னும் பலவாறாகவும்கூட நாம் எதிர்பார்க்கும் கட்டளைகளைச் செயல்படுத்தும் வகையிலான கட்டளை நிரல்களை(புரோகிராம்களை) உருவாக்க முடியும். அதாவது, எதேனும் ஒரு வேட்பாளருக்கு கூடுதலான வாக்குகள் விழுகிறதென்பதை தொடர் கண்காணிப்பில் தானாகத் தெரிந்தகொண்ட பிறகு எந்த மாதிரியான கட்டளைகளை நிறைவேற்றுவது என்றவாறுகூட புரோகிராம் செய்ய முடியும்.  

 

(பிழிவாக: வேட்பாளர் 'ரங்கனுக்கு' வாக்களித்தால், விவிவிபாட் ஒப்புகை சீட்டு, 'ரங்கனுக்குக்கு'தான் என்று அச்சடித்துவிட்டு, வாக்கை 'கந்தனுக்கு' என மோசடியாக பதிவு செய்ய முடியும்! அச்சடிப்பில் நேர்மை, பதிவு செய்வதில் மோசடி! ஏனெனில் விவிபாட் இரண்டு வேலைகளை தனித்தனியாக செய்கிறது.) 

 

6. விவிபேட் கருவியில் காணப்படும் மறுக்கமுடியாத பலவீனங்களையும், ஓட்டைகளையும் கணக்கில் கொள்ளும்போது, செலுத்தப்பட்ட வாக்கிற்கும், ஒப்புகைச் சீட்டில் வந்துள்ள தகவலுக்கும் வேறுபாடிருப்பதாகக் கண்டறியும் ஒவ்வொரு வாக்காளருக்கும் உரிய தீர்வை வழங்க வேண்டியது அவசியமாகிறது; விவிபேட் கருவியின் ஒரு பகுதி புரோகிராம்கள் மூலமே இயங்குகிற காரணத்தால் வாக்காளர் கவனத்திற்கு வராமலேயேக்கூட, அதாவது, விவிபேட் கருவியனுள்ளேயேக்கூட அவர்கள் செலுத்தும் வாக்குகள், வேறொருவர் பெயருக்கு மாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பதையும் எவரும் மறுக்க முடியாது.   

7. VVPAT (வாக்காளர்  ஒப்புகை காகித சோதனை சுவடு) என்பதே தவறான பெயராகும். ஏனெனில், அதை பார்க்கத்தான்  முடியும். திருத்த இயலாது. மறுப்பு என்பது சோதனையின்  மிக முக்கிய அங்கம். 

பார்த்தால் மட்டும் சோதனை முடிவதில்லை. உதாரணமாக எந்த ஒரு அதிகாரியும் ஒரு ஆவணத்தை சோதனை செய்யும் போது, பார்ப்பதோடு நிறுத்த மாட்டார். தவறானதை மறுத்து ஒதுக்கிவிடுவார். தவறு என்று ஒன்றை நாம் கண்டுபிடித்தால், தவறு என சொல்லிவிட்டு போய்விடக் கூடாது. தவறை சரி செயலையும் உடனே தொடர வேண்டும் அல்லவா? அந்த நடைமுறை இதில் இல்லை.

விதி 49 சொல்வது என்னவெனின்ல், விவிபாட் சீட்டு தவறானதென ஒருவர் புகார் கொடுத்தால், அடுத்து வருபவரும், தனது சீட்டும் தவறு எனப் புகார் தர வேண்டும். அப்போதுதான் அந்தப் புகார் ஏற்றுக் கொள்ளப் படும். அடுத்து வரும் நபரும் புகார் செய்யவில்லை என்றால், இவரது புகார் ஏற்றுக்கொள்ளப் படாது. அதோடு நிற்பதில்லை, அவர் மீது வழக்கு பதிவு செய்யப் படும். குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் படுவார். இப்படி ஒரு விதி இருப்பதே காட்டுமிராண்டித் தனமானது. அதோடு அறிவியலுக்கே புறம்பானது. எனது தவறு என்பதால், மற்றவரதும் தவறாக இருக்க வேண்டும் என்பது விதி இல்லையே?

உதாரணமாக, தொலைபேசியில் ஒருமுறை தவறான எண் வந்தால், அடுத்த எண்ணும் தவறாகத்தான் இருக்கிறதா? இந்த முறை சரியான எண் வந்ததே? போனமுறை தவறான எண் வந்திருக்க முடியாது என சொல்வது எவ்வளவு அபத்தம்?

8. கேள்வி 49க்கு சொல்லப் பட்ட பதில், “ஒரு DRE (நேரடியாக பதிவு செய்யும் வாக்கு இயந்திரம்) வாக்காளர் செலுத்திய ஓட்டுகளை சரி பார்த்து ஒப்புகை சீட்டை  உருவாக்குகிறது என்று கூறுவதன் பொருள்,  “அந்த செயல் போக்கில் மென்பொருளின் இடையீடு இல்லை." என்பது.

இந்த விளக்கத்தின் அடிப்படை என்ன? நேரடியாக உருவானது. மென்பொருள் சம்மந்தப் படவில்லை என்பது.

ஆனால், இதை நிறுவ எந்த சான்றும் காணோம். “மென்பொருள் சார்பின்மை” என்ற கருத்தாக்கத்தை,  வாக் அன் ரிவெஸ்ட்  (Wack and Rivest) உருவாக்கினர். மென்பொருள் வழிபடுத்தாத வாக்களிப்பு முறை என்பது, தனது மென்பொருளில் உருவாகும் (கண்டறிய முடியாத) மாற்றம் அல்லது பிழையை தவிர்க்க ஏற்பாடு செய்ப்பட்டுள்ள வழிமுறை.

அதாவது அந்தப் பிழை அடுத்த செயல்பாட்டில் திருத்தப் பட்டுவிடும் என்பது இதன் பொருள்.

இதில் என்ன பிரச்சினை என்றால், மென்பொருள் எனும் போது, நாம் ‘தரவு மாறிலி’, ‘திட்ட நிரல்' எனும் இரு பகுதிகளைப் பற்றி பேசுகிறோம்.

1.கண்டறியப்படாத தரவு மாறிலி: (உதாரணமாக, ஒரு படத்தின் மேல் * எனும் குறி, அல்லது மேற்கண்ட 5ம் பத்தியில் குறிப்பிடப் படும் x, y மாதிரி விடை) விவிபாட்  அல்லது மைய அலகில் உள்ள மர்மமான நிரலியால் செயலாக்கப் படலாம்.  

2.(மென்பொருளால் நிர்வகிக்கப் படுவது என்பதால்) தேர்தல் முடிவில் தவறுகளை உருவாக்கி, தேர்தல் முடிவின் கண்கண்ட மாற்றத்திற்கு அடிகோலலாம். 

ஆக,   “அந்த செயல் போக்கில் மென்பொருளின் இடையீடு இல்லை." என்னும் விளக்கமே, சொல்லும்போதே, அடிபட்டுப் போய்விடுகிது.

9. கேள்வி 37க்கான பதிலில், தகவல் பரிமாற்றத்தின் போது உறுதி செய்ய, டிஜிட்டல் சான்றிதழ்கள் மற்றும் பொது விசை குறியாக்கத்தின் பயன்பாடு பற்றி பேசப் படுகிறது.  இருப்பினும், "இவையெல்லாம் அங்கீகரிக்கப் பட்ட இயந்திரங்கள்"  எனும் சான்று மட்டும் இங்கே போதாது. சான்றளிக்கப் பட்டதாக இருப்பினும், வேறொரு சான்றளிக்கப் பட்ட முறைகேடான / மாற்று இயந்திரம் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதே. இதை தவிர்ப்பதற்கு ஒருமுக இணைப்பு பற்றிய சோதனை அவசியமானதாகும். இயந்திரம் மட்டும் அங்கீகரிக்கப் பட்டதல்ல, இந்த இரு இயந்திரங்களின் இணைப்பும் அங்கீகரிக்கப் பட்டது என்பதுதான் ஒருமுக இணைப்பு சான்றாகும். அதாவது வாக்களிக்கப் பட்ட போது D+M  என்ற இயந்திரங்கள் எனில், இப்போதும் D+M என்ற ஜோடிதான் சான்றளிக்கப் பட்டதாகும். D+ J ஆக மாறிவிடக் கூடாது என்பது இதன் பொருள். D,M,J மூன்றுமே அசல் இயந்திரங்கள்தானே எனும் வாதத்தை இங்கே ஏற்க முடியாது. செயல் பாடு, ஜோடியான செயல்பாடாக இருக்கும் போது, அந்த இணைப்பும் சரிதானா என சரிபார்ப்பது இது. இணைப்பு மாறிவிட்டால், முடிவில் கோளாறுகள் ஏற்படும் என்பது இந்த ஆய்வின் மையக் கருத்தாகும். தயாரிப்பின் போது, வாக்குப் பதிவு அலகு (BU)  VVPATகள், கட்டுப்பாட்டு அலகு (CU) இவற்றிற்கு இயந்திர வாரியான சான்று அளிக்கப் படுகிறது. அவைகளின் தொகுப்புக்கும் கூட சான்று இருக்கிறது. ஆனால் அவை போதாது. அதாவது, அவை பயன்படுத்தப் படும் தேர்தலில், துவக்கம் முதல் எண்ணிக்கை வரை அதே ஜோடிகள்தான் மாறாமல் இருக்கிறதா என்பதற்கு, "அதே ஜோடிகள்தான்,   வேறேதும் புதியன நுழையவில்லை " என உறுதிப் படுத்தும் இன்னொரு சான்று தேவைப் படுகிறது. இந்த வாக்களிப்பு அலகும் இணைக்கப் பட்ட அலகும், வாக்களிக்கப் போது இருந்த அதே இரண்டு அலகுகள்தானா? என்ற அம்சம், எண்ணும் தினத்தின் போது (மறுபடி) சரிபார்க்கப் படுவதுமில்லை. இந்த ஓட்டை இருப்பதால், எண்ணும் தினத்ததில்,உண்மையாக பயன்படுத்தப் பட்ட மைய அலகுக்குப் பதில், வேறொரு மைய அலகு, போலி வாக்குகள் நிரப்பப் பட்டு, வைக்கப் படலாம். (இரண்டும் அங்கீகரிக்கப் பட்ட அலகுகள் என்பதால் இது சாத்தியமாகும். ஆனால் அது மோசடிக்கு வழிவகுக்கும். அதை தவிர்க்க எந்த ஏற்பாடும் இல்லை.)

மின்னணுவியல் சான்றிதழ் என்பது, ஒரு கட்டுப் படுத்தப் பட்ட கூட்டத்திற்கு வழங்கப் பட்ட அனுமதி சீட்டைப் போன்றது. அனுமதி சீட்டு இருந்தால் போதும், காவலர் சீட்டு வைத்திருப்பவரை அனுமதித்துவிடுவார். அவர் யார் என்பதை சோதிப்பது அவரது பணியாக இல்லை. அதாவது ரங்கனுக்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டை மட்டும் காட்டி, கந்தன்  உள்ளே நுழைந்துவிடலாம். (சீட்டுதான் அங்கீகரிக்கப் பட்டது, நபர் அல்ல)  ஆனால், மேம்பட்ட பாதுகாப்பு சூழலில், அனுமதிக்கப் படும் நபரின் அடையாளமும் அவசியமானது மட்டுமல்ல, அதை சரிபார்த்து நிறுவுவதும் கூட அவசியம். அந்த வகையான சான்று தேவை. போர்டிங் பாஸ் தேவை, ஆனால், அதோடு, அரசு பிறப்பித்த அடையாள அட்டை ஒன்றும் நம்மை யாரென்று நிரூபிக்க தேவையாகிறது. ரங்கனின் போர்டிங் பாஸை  காட்டி, விமான நிலையத்தில் கந்தன்நுழைய முடியாது.  உறுதியான அடையாளத்திற்காக  வழக்கமாக மேற்கொள்ளப் படும் இந்த எளிய உதாரணம், வாக்குப் பதிவு தொடர்பான அனைத்து இயந்திரங்களின்  தனி, ஒருமுக அடையாள பாதுகாப்பையும் உறுதி செய்யும் தேவையை வலியுறுத்துகிறது.  மூன்று அலகுகளிடையேயும் ஒருமுகப் பட்ட அடையாளங்களால்  சரிபார்க்கப் பட்ட தொடர்புகள் மட்டுமே,  தேவையானதும், போதுமானதுமானதுமாகும்.(முன்பிருந்த அதே ஜோடிதானா என்பது) தொடர்பற்ற, பிரிந்து கிடக்கும் இவிஎம் அலகுகளின் தன்மையை பார்க்கையில், ஒரு இயங்கு அம்சமாவது, தனி அடையாளம் காட்டியை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். 

அத்தகைய இயங்கு அடையாளம் காட்டிகளில் எளிய ஒன்று, தேதி நேர பதிவு அடையாளம் காட்டி ஆகும். (வாக்கு  போடப் பட்ட தேதி + நேரம் = 25/08/2024-11:42:13)  இது நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்கும். போலிகளை உருவாக்கும் போது இதே முத்திரையை இரு அலகுகளிலும் கொண்டு வர முடியாது.

10. இவிஎம் இருக்கும் இடம்,  தொடர்ந்து கண்காணிக்கப் படுவதில்லை. 

இது அடுத்த சிறு குறைபாடாகும். ஜிபிஎஸ் (GPS) கண்கண்காணிப்புக் குறைபாடு, சில தொகுதிகளில் இந்த அலகுகள் சமூக விரோத சக்திகளால் திருடப் பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட நீக்குப் போக்கான வாய்ப்பை தருகிறது. இதன் மிக மோசமான அம்சம், எதிரி நாடுகள், திட்டமிட்டால், இவிஎம்களின்  ஒட்டுமொத்த மோசடி சதிக்கு வழிவகுக்கலாம்.  இது தேசத்துக்கே அச்சுறுத்தலாக பார்க்கப் பட வேண்டிய விஷயம். ஒவ்வொரு காரும் எங்கே போகிறதென ஜிபிஎஎஸ் குறியிடுதலைப் பற்றி பேசும் நாடு, இவிஎம்கள் எங்கிருக்கிறதென ஜிபிஎஸ் குறியீடு செய்யாதது பெரும் புதிராக இருப்பது மட்டுமல்ல. தேச பாதுகாப்பு பற்றி கிஞ்சித்தும் அக்கறையில்லாத போக்கைக்  காட்டுகிறது. 

11. மொத்த இவிஎம் கேள்விபதில் ஆவணமும் சொல்வது, இது இடர் மீட்பு (Disaster Recovery) செயல்திறன் கொண்டதல்ல என்பதை. கடந்த 50 ஆண்டுகளாக, நாட்டின் தேர்தல் முடிவுகளே, நாட்டின் விதியை நிர்ணயிக்கின்றன என்பதையும், இத்தகைய மோசடிகளோ, விபத்துகளோ சமீப வரலாற்றிலே அப்படி ஒன்றும் நடக்காதவை அல்ல என்பதையும்  இணைத்து நோக்குகையில், இடர் மீட்பு செயல் திறன் இல்லாத ஒரு அமைப்பை ஒப்புக் கொள்ளவே முடியாது. 

 இந்த  உடனடியான, பெரும் முக்கியத்துவமுள்ள கவலைதரும் குறைபாடுகளுக்கும் மேலாக, மின்னனு தேர்தல் முறையில் (EES) ஒவ்வொரு வாக்காளருக்கும், வாக்கின் இரண்டு பிரதிகள் இருப்பதை காண்கிறேன். 

அ) VVPATல் உள்ள அச்சிட்ட சீட்டு ஒன்று,  

ஆ) அடுத்தது, கட்டுப்பாட்டு அலகில் (CU) உள்ள மின்னணுவியல் வாக்கு.  (கண்ணுக்கு புலப்படாதது)

இதைப் பற்றிய அடிப்படையான கேள்வியை கண்ணன் கோபி நாதன் கேட்டுக் கொண்டே இருக்கிறார். இதற்கான விடையை, தேர்தல் ஆணையம்  மட்டுமல்ல, உச்ச நீதி மன்றமும் தர வேண்டும்.  

கேள்வி என்ன?  

எது உண்மையான ஓட்டு?   

அ) விவிபாட் இயந்திரத்தில் வாக்காளர் பார்க்கும், தானே சோதிக்க இயலாத  வாக்கா?  

ஆ) பார்க்கவும் சோதிக்கவும் முடியாத, மின்னணுவியல் அலகில் பதிவாகி உள்ள வாக்கா? 

அமைப்பில், மாற்றங்கள் செய்து செயல் படுத்த வேண்டிய பணியின் அளவைப் பார்க்கையில், அடுத்த தேர்தலுக்கான நேரம் நெருங்கிவிட்ட இந்த தருணத்தில், இதற்கான நேரம் போதாது. எப்படி இருப்பினும், புதிய கேள்வி பதில் ஆவணத்துக்கு பிறகும் கூட, மோசடி செய்வதற்கான உண்மையான, கோட்பாட்டியல் சாத்தியங்கள் தொடர்ந்து இருப்பது அம்பலம் ஆவதால்,  தேர்தல் ஆணையம் மேற்கொள்ளக் கூடிய மிகப் பொருத்தமான நடவடிக்கை இப்படி இருக்க வேண்டும்: 

ஒரு மேம்பட்ட நவீனமாக பிறந்த தொழில் நுட்ப மாதிரியில் அமைந்த, இவிஎம்-இல் இருந்தே வாக்கை அச்சிட்டு, அதை 100 சதம் கையால் எண்ணும் முறையை (காகித வாக்குச் சீட்டுகள் போல) நாடு முழுவதும் அமுல் படுத்துவதாகும். கையால் எண்ணும் முறையால் சில நாட்கள் தாமதமாகலாம், ஆனால் வெற்றி பெறுபவர், ஐந்து ஆண்டுகளுக்குப் பதவியில் இருப்பாரே?

 மூன்று நாள் தாமதம் என்பது, இந்திய ஜனநாயகத்துக்கான நன்மை எனும் நோக்கில், ஒன்றும் பெரிய விஷயமல்ல என நான் நிச்சயமாக சொல்வேன். 

மேலே விவாதிக்கப் பட்ட பிரச்சினைகளை தீர்க்க, ஒராண்டுகால திட்டமாக மேற்கொள்ளப் பட்டு, முழுமையாக செயல் படுத்தப் படும் திட்டம் ஒன்று  வேண்டும். 

மாதவ் தேஷ் பாண்டே, துலிப் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி. ஒபாமா நிர்வாகத்தின் முன்னாள் ஆலோசகர். இந்தியாவின் முதன்மையான இவிஎம் இயந்திர வல்லுனர்



- சத்யன் - விஜயன் 

(தமிழில்) 

மூலக்கட்டுரை: https://thewire.in/rights/election-commissions-faqs-on-evms-dont-really-address-major-design-deficiencies

Disclaimer: கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு