சூறையாடப்படும் வக்ஃப் சொத்துக்கள்
தமிழில்: விஜயன்

இந்திய முஸ்லிம்களின் 14 பில்லியன் டாலர் மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்கள் அரசாங்கத்தினாலும்கூட எவ்வாறு சூறையாடப்படுகிறது?
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் நகரில், சுமார் 2.1 ஹெக்டேர் (5.27 ஏக்கர்) பரப்பளவை மீட்பதாக கூறி, வீடுகள், கடைகள் மற்றும் 100 ஆண்டுப் பழைமையான மசூதி உட்பட சுமார் 250 சொத்துக்களை அரசாங்கமே இடித்துத் தள்ளியது.
இந்த நிலம் மத்தியப் பிரதேச வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமானது. வக்ஃப் என்ற சொல் அரபு மூலம் கொண்டது; இது மசூதிகள், பள்ளிகள், கல்லறைகள், அனாதை இல்லங்கள், மருத்துவமனைகள் அல்லது வெற்று நிலம் போன்ற சொத்துக்களைக் குறிக்கிறது – இவற்றை இஸ்லாமியர்கள் சமய அல்லது அறக்கட்டளை நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்குகின்றனர். ஒருமுறை வழங்கப்பட்ட இத்தகைய சொத்துக்களை விற்கவோ அல்லது வேறு பயன்பாட்டுக்கு மாற்றவோ முடியாது.
இருப்பினும், உஜ்ஜைனில், இந்த வக்ஃப் நிலம் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான மஹாகால் வழித்தடம் எனப்படும் அரசாங்கத் திட்டத்திற்காக அகற்றப்பட்டது. இந்தத் திட்டம் நகரத்தின் புகழ்பெற்ற மஹாகாலேஸ்வர் ஆலயத்தைச் சுற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
இருபது கோடிக்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர். உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு அதிகமான வக்ஃப் சொத்துக்கள் இங்குதான் காணப்படுகின்றன – 8,72,000க்கும் மேற்பட்ட சொத்துக்கள், சுமார் 4,50,000 ஹெக்டேர் பரப்பளவில் (தோராயமாக பத்து லட்சம் ஏக்கர்கள்) அமைந்துள்ளன. இவற்றின் கணக்கிடப்பட்ட மதிப்பு சுமார் 14.22 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். ஒவ்வொரு மாநிலத்திலுள்ள, மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழிருக்கும் யூனியன் பிரதேசங்களிலுள்ள வக்ஃப் வாரியங்கள் இவற்றை நிர்வகிக்கின்றன.
தொகுத்துப பார்த்தால், நாட்டிலேயே நகர நிலங்களை அதிகளவில் உடைமையாக வைத்துள்ள அமைப்பாகவும், இராணுவம் மற்றும் ரயில்வே துறைகளுக்கு அடுத்து மூன்றாவதாக அதிக நிலங்களை உடைமையாக வைத்துள்ள அமைப்பாகவும் வக்ஃப் வாரியங்கள் விளங்குகின்றன.
பல பத்தாண்டுகளாக அமலில் உள்ள வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் – ஒருவேளை இந்த வாரமே – விவாதங்கள் துவங்கப்படலாம். இந்தச் சட்டம் படிப்படியாக வக்ஃப் வாரியங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்குவதன் மூலம் அரசாங்கத்தின் கைகளில் அதிகாரம் குவிவதற்கு வழிவகுக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்து பெரும்பான்மைவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) கொண்டு வந்துள்ள இந்தத் திருத்த மசோதா, வக்ஃப் சொத்துக்களின் நடவடிக்கைகள் மீது அரசாங்கத்திற்கு முன்னெப்போதும் இல்லாத அதிகாரத்தை அளிக்கக்கூடும்.
சிறுபான்மையினரை மேலும் ஓரங்கட்ட மோடி அரசாங்கம் தனது நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்துவதாகக் இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
எனினும், இந்த விவாதம் தொலைக்காட்சி செய்தி விவாதங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், சில செயற்பாட்டாளர்களும் வழக்கறிஞர்களும் நீண்ட காலமாக வக்ஃப் சொத்துக்கள் ஆழமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றன என்பதற்கு உஜ்ஜைன் சம்பவத்தை ஒரு உதாரணமாக குறிப்பிடுகின்றனர்: பல ஆண்டு கால முறையற்ற நிர்வாகத்தால் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டன, இத்திருத்தப்பட்ட சட்டத்தால் இந்நிலைமையை மேலும் மோசமாகலாம் என்பதே அவர்கள் முன்வைக்கும் வாதமாக இருக்கிறது.
நூற்றாண்டுகால பழமையான தக்கியா மசூதி இடிக்கப்பட்டது. வக்ஃப் நிலத்தில் அமைந்திருந்த இந்த மசூதியை அரசாங்கம் 2025 ஜனவரியில் புல்டோசர் கொண்டு இடித்துள்ளது.
‘அப்பட்டமான விதிமீறல்’
பரப்பளவின் அடிப்படையில் இரண்டாவது பெரிய மாநிலமான மத்தியப் பிரதேசம், கடந்த 22 ஆண்டுகளில் பெரும்பாலும் பாரதிய ஜனதா கட்சியால் (பாஜக) ஆளப்பட்டுள்ளது; டிசம்பர் 2018 முதல் மார்ச் 2020 வரையிலான குறுகிய காலகட்டத்தில் மட்டும் மத்தியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது, பின்னர் மாநில சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்துள்ளது.
2023 டிசம்பர் மாதம் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், உஜ்ஜயினைச் சேர்ந்த பாஜக தலைவர் மோகன் யாதவ் அவர்கள், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உஜ்ஜயினின் ஷிப்ரா நதிக்கரையில் நிகழும் முக்கிய இந்து யாத்திரையான கும்பமேளா 2028க்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத் தரும் கும்பமேளா நிகழ்விற்கான ஏற்பாடு என்ற பெயரில் மகா காலேஷ்வர் ஆலயத்திற்கு அருகில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வக்ஃப் சொத்துக்கள் இடிப்பு நடவடிக்கை என்பது அரசாங்கத்தின் நில கையகப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே பரவலாகப் பார்க்கப்படுகிறது.
உஜ்ஜயினில் குறிப்பிட்ட அந்த இடம் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலமாகவும், சுமார் 2,000 பேர் வரை தொழக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதியையும் கொண்டிருந்தது என்பதை 1985ஆம் ஆண்டு அரசாங்க ஆவணம் உறுதிப்படுத்தியிருந்தாலும்கூட, மாநில அதிகாரிகள் அதனைப் பொருட்படுத்தவில்லை என்று விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காலப்போக்கில், அரசியல் செல்வாக்கு மிக்க கட்டுமான நிறுவனங்கள் அப்பகுதியில் குடியிருப்பு மேம்பாட்டிற்காக சட்டவிரோதமாக வீட்டுமனைகளை உருவாக்கி விற்பனை செய்தனர். இதன் விளைவாக 250க்கும் மேற்பட்ட நிரந்தர கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன—இவை அனைத்தும் இந்த ஆண்டு ஜனவரியில் அகற்றப்பட்டுள்ளன. அல் ஜசீரா ஊடகத்திற்கு கிடைத்த அரசாங்க நில கையகப்படுத்தும் ஆவணம் ஒன்றின்படி, உஜ்ஜயினில் ஜூன் 2023இல் வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் வக்ஃப் நிலத்தைக் கையகப்படுத்தும் மாநில அரசின் திட்டத்திற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார். குடியிருப்பாளர்கள் தன்னிடம் 1985ஆம் ஆண்டு அரசிதழ் வாயிலான அறிவிக்கையைச் சமர்ப்பித்ததாகவும், அதில் நிலம் வக்ஃப் சொத்து என்றிருந்த நிலையினை உறுதிப்படுத்துவதாகவும் அந்த அதிகாரி தனது ஆட்சேபனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நிலத்தை கையகப்படுத்துவதற்கு முன்பு, மாநில வக்பு வாரியத்திடம் இருந்து “தடையில்லாச் சான்றிதழ்” ஒன்றை முறையாகப் பெறுமாறு அந்த அதிகாரி பரிந்துரைத்துள்ளார். எனினும், சரியாக ஒரு மாதத்திற்குப் பின்னர், உஜ்ஜைன் மாவட்ட நிர்வாகம், “பொது நலன் கருதி நிலம் கையகப்படுத்தப்படும்போது எந்த அனுமதியும் தேவையில்லை” என்று அதிகாரப்பூர்வமாக ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கறிஞர் சோஹைல் கான் அவர்கள், அரசாங்கத்தின் இந்த நில அபகரிப்பு நடவடிக்கையை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்த்து வாதாடி வருகிறார். “இந்த அபகரிப்பு வக்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அப்பட்டமாக மீறியுள்ளது,” என்கிறார் சோஹைல் கான்.
ஜனவரி மாதத்தில் வீடுகளும் வணிக நிறுவனங்களும் இடிக்கப்பட்டதோடு, அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த மக்களுக்கு அரசாங்கம் 33 கோடி ரூபாய் (சுமார் $3.8 மில்லியன்) இழப்பீடாக வழங்கியிருந்தது; உஜ்ஜைனைச் சேர்ந்த பலரும் அந்த நிலம் சட்டப்படி வக்பு வாரியத்திற்குச் சொந்தமானதாக இருக்கிறபோது, சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமித்து வீடுகளையும் வணிக நிலையங்களையும் கட்டியதாகக் கூறப்படும் தனிநபர்களுக்கு எதிராக ஏன் வக்ஃப் வாரியம் அந்த இழப்பீட்டுத் தொகையை இதுவரை கோரிப் பெறவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.
மத்தியப் பிரதேச வக்பு வாரியத்தின் தற்போதைய தலைவரும், உஜ்ஜைனைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சனாவர் படேலிடம் இது குறித்து அல் ஜசீரா செய்தியாளர் பேசியுள்ளார். இந்த நில அபகரிப்பை ஏன் எதிர்க்கவில்லை அல்லது இழப்பீடு கோரவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “நான் கட்சியின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவேன், ஏனெனில் நான் இன்று இந்தப் பதவியில் இருப்பது கூட கட்சியினால்தான்” என்று பதிலளித்துள்ளார்.
அந்த நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டாம் என்று வக்பு வாரியம் உஜ்ஜைன் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது என்று சனாவர் படேல் கூறினார். இருப்பினும், அந்த வாரியம் மாவட்ட நிர்வாகத்தின் முடிவை ஏன் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை என்பதற்கான காரணத்தை அவர் விளக்கவில்லை. மத்தியப் பிரதேசத்தில் உள்ள 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வக்பு சொத்துக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன அல்லது சட்டரீதியான சிக்கல்களில் உள்ளன என்பதையும் சனாவர் படேல் ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையில், மத்தியப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் ஆஷிஷ் அகர்வால், "சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, மாநிலத்தின் தேவைகளுக்கு ஏற்பவே" நிலம் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்திப் பேசினார். இதுகுறித்து மேலதிக தகவல்கள் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு தற்போது முஸ்லீம் அறக்கட்டளைகள் (வக்பு சொத்துக்கள்) மீதான தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. மோடி கடந்த பிப்ரவரி 11, 2025 அன்று பாரிஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்தார்.
"வரலாறு நம்மை மன்னிக்காது"
இந்தியாவில் வக்பு வாரியங்கள் 1954 ஆம் ஆண்டு வக்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன. இந்தச் சட்டம், அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த அறக்கட்டளைகளை இஸ்லாமியர்கள் நிர்வகிக்க அனுமதி அளித்தது. பின்னர் வந்த திருத்தங்கள் (1995 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில்) வாரியங்களின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தியதுடன், வக்பு சொத்துக்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக தனி வக்பு தீர்ப்பாயங்களையும் (சிறப்பு நீதிமன்றங்கள்) அமைத்தது.
சமீபத்தில், சென்ற மாத இறுதியில், பிரதமர் மோடியின் அமைச்சரவை வக்பு (திருத்த) மசோதா, 2024-க்கு ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா, தற்போதுள்ள சட்டத்தில் பதினான்கு மாற்றங்களைப் பரிந்துரைக்கிறது. வக்பு வாரிய உறுப்பினர்களாக முஸ்லிம் அல்லாதவர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகளும், வக்பு சொத்து என்று வரையறுக்கப்பட்ட அனைத்து நிலங்களையும் உள்ளூர் மாவட்ட அதிகாரிகளிடம் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற விதியும் இந்த முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களில் பரவலான சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள முக்கிய அம்சங்களாகும்.
"இது மசூதி மற்றும் தர்கா நிலங்களைக் கைப்பற்றுவதற்கான முக்கியமான முதல் படியாகும். இதற்காக வரலாறு நம்மை கடுமையாக விமர்சிக்கும்," என்று ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சிப் பிரதிநிதியுமான சஞ்சய் சிங் பேசியிருந்தார். இந்த வாரம் நாடாளுமன்றத்தில் இந்தத் திருத்தங்கள் விவாதிக்கப்படுவதற்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை தற்போது ஆராய்ந்து வரும் 31 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு நாடாளுமன்றக் குழுவில் (JPC) சஞ்சய் சிங் அவர்களும் உறுப்பினராக இருக்கிறார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அனாஸ் தன்வீர் அல் ஜசீரா ஊடகத்திடம் பேசியபோது, நாடு தழுவிய அளவில் காணப்படும் அரசியல் தலையீடுகளுக்கும், வக்பு நில முறைகேடுகளுக்கும் உஜ்ஜைன் சம்பவம் கண்கூடான உதாரணமாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவில் உள்ள வக்பு சொத்துக்கள் நீண்ட காலமாக முறையற்ற நிர்வாகத்தினாலும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளினாலும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன". "2024 ஆம் ஆண்டு திருத்தச் சட்டம் இந்த சிக்கல்களை மேலும் தீவிரமாக்கக்கூடும்" என்றும் அவர் எச்சரித்தார்.
இருப்பினும், மத்தியப் பிரதேச வக்பு வாரியத்தின் தலைவர் சனாவர் படேல் இந்த மாற்றங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தத் திருத்தங்கள் "தற்போதைய குறைபாடுகளை நீக்கி, கட்டமைப்புரீதியான முறைகேடுகளைச் சரிசெய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன" என்று அவர் கூறினார்.
[புகைப்படக் குறிப்பு] 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி போபாலில் உள்ள மோதி மசூதியில் இந்திய இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் காட்சி. இது வழிபாட்டுத் தலமாக இருந்தும், அரசாங்கப் பதிவுகள் இந்த மசூதி நிலத்தை அரசாங்கச் சொத்தாகக் குறிப்பிடுவது - வக்பு நில ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் முறைகேடான நிர்வாகத்தின் முக்கிய உதாரணமாக செயற்பாட்டாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
வக்ஃப் சொத்துக்களை வேண்டுமென்றே அபகரித்தல்
முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள், வக்ஃப் சொத்துக்களின் மீது அரசாங்கம் தனது கட்டுப்பாட்டை அதிகரிப்பது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன. எனினும், பல இஸ்லாமிய சமூகத் தலைவர்களும் வழக்கறிஞர்களும், தற்போதுள்ள சட்டத்தின் கீழும் கூட, இந்த நிலங்கள் பரவலான ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன என்று கூறுகின்றனர்.
அதிகாரிகள் வக்ஃப் சொத்துக்களைக் கையாண்ட விதத்தில் வேண்டுமென்றே அபகரித்தல், முறைகேடுகள், ஊழல் போன்ற நீண்டகாலப் பிரச்சினைகள் காணப்படுவதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாவட்ட வருவாய்துறையைச் சார்ந்த அதிகாரிகளும், பிற அரசு அமைப்புகளும் வக்ஃப் நிலங்களை திட்டமிட்டுக் கைமாற்றுவதையும், வக்ஃப் சொத்துக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு தனிப்பட்ட சொத்துக்களாக மாற்றப்படுவதற்கு உதவியதையும் இதற்கு உதாரணமாகக் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நில ஆவணங்களைப் பராமரிக்கும், வரிகளை வசூலிக்கும் அரசுத் துறையான வருவாய்த் துறையால் பெரும்பாலான வக்ஃப் நிலங்கள் "வக்ஃப் அல்லாதவை" என்று அறிவிக்கப்பட்டுள்ளன என்பதே வல்லுநர்களின் வாதமாக இருக்கிறது.
மத்தியப் பிரதேச வக்ஃப் வாரியம் 1960களின் பிற்பகுதியிலும் 1980களிலும் இரண்டு பெரிய ஆய்வுகளை மேற்கொண்ட போது 23,000-க்கும் மேற்பட்ட சொத்துக்கள் மீது சட்டப்பூர்வமான அதிகாரம் பெற்றிருப்பதாகக் கண்டறிந்தது. பிற்காலத்தில், வாரியம் இந்த ஆவணங்களை மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக டிஜிட்டல் மயமாக்கி, புவிக்குறியீடும் வழங்கியது.
அரசாங்கத்தின் வருவாய்த்துறை பழைமையான, காலாவதியான நில ஆவணங்களைப் பயன்படுத்தி வருகிறது, இவற்றில் பல, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நில அளவைப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்று வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். வக்பு வாரியத்தால் நடத்தப்பட்ட நில அளவைகளின் அடிப்படையில் வருவாய்த் துறையானது தங்கள் நில ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று 1954 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வக்பு சட்டம் திட்டவட்டமாக வலியுறுத்துகிறது. இருப்பினும், இப்பணியானது முறையான நெறிமுறைகளின்படி நிறைவேற்றப்படவில்லை.
உதாரணமாக, 1985 ஆம் ஆண்டின் அரசாங்க வெளியீட்டின்படி (அரசிதழ்), உஜ்ஜைன் நகரில் 1,014 அசையாச் சொத்துக்கள் வக்பு வாரியத்திற்குச் சொந்தமானவையாக இருந்தன. ஆனால், வருவாய்த் துறையின் அதிகாரப்பூர்வப் பதிவேடுகளில் இவை எதுவும் வக்பு சொத்துக்களாகக் காட்டப்படவில்லை.
"அந்த 1,014 வக்பு சொத்துக்களில், 368 அரசாங்கச் சொத்துக்களாகவும், 454 தனிப்பட்ட சொத்துக்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 192 சொத்துக்களுக்கான ஆவணங்களோ முழுமையாக இல்லை அல்லது முற்றிலுமாக காணப்படவில்லை," என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் உஜ்ஜைனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆஷார் வார்ஸி அவர்கள் டிசம்பர் மாதத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
2000-களின் பிற்பகுதியில் அரசாங்கம் நில ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்கத் தொடங்கிய பிறகு, இப்பிரச்சினை மேலும் தீவிரமடைந்தது. இந்த நடைமுறைக்காகப் பயன்படுத்தப்பட்ட மென்பொருளில் அரசுக்குச் சொந்தமான, தனியாருக்குச் சொந்தமான என்ற இரு வகையான பிரிவுகள் மட்டுமே இருந்தன. இதனால், பழைய ஆவணங்களில் வக்ஃப் சொத்தாகக் குறிப்பிடப்பட்டிருந்த எந்த நிலமும், டிஜிட்டல்முறைப் புதுப்பித்தலின்போது பெரும்பாலும் "அரசுடைமை" என்ற பிரிவின் கீழ் தவறாகப் பதியப்பட்டது.
"இந்தத் தவறின் விளைவாக, 1857-ஆம் ஆண்டு கட்டப்பட்ட போபாலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மோதி மஸ்ஜித் தற்போது அரசு சொத்தாகக் காட்டப்படுவது பொருத்தமற்றதாக உள்ளது, " என்று வக்ஃப் நிலங்களைப் பாதுகாக்கவும் மீட்கவும் போராடி வரும் உள்ளூர் அமைப்பைச் சேர்ந்த மசூத் கான் கூறுகிறார். கான் வக்ஃப் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளார். வருவாய்த் துறை ஆவணங்களைத் திருத்தி, மஸ்ஜிதை வக்ஃப் சொத்தாகப் பதிவு செய்யும்படி தீர்ப்பாயம் உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
வருவாய் ஆவணங்கள் முறையாகப் புதுப்பிக்கப்படாதது குறித்து அல் ஜசீரா மத்தியப் பிரதேச வருவாய்த்துறை அமைச்சர் கரண் சிங் வர்மாவிடம் பேசியபோது, "இப்பிரச்சினை நீண்ட காலமாக நீடிப்பதால், இதுகுறித்து அமைச்சருக்கு விரிவான தகவல்கள் ஏதும் தெரியாது. ஆயினும், நாங்கள் விசாரிப்போம்," என்று அவரது அலுவலகம் பதிலளித்துள்ளது.
உஜ்ஜயினில் வக்ஃப் நிலத்தில் அமைந்திருந்த நிஜாமுதீன் காலனியின் ஒரு பகுதி, ஜனவரி மாதம் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின்போது அரசாங்கத்தால் இடிக்கப்பட்டதையும் மற்றுமொரு உதாரணமாக குறிப்பிடலாம்.
நிர்வாக முறைகேடுகளும், ஊழலும்
உஜ்ஜைனில் நடந்தது தனிப்பட்ட நிகழ்வு அல்ல என்று இஸ்லாமியர்கள் கூறுகின்றனர். மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் காணப்படுகின்ற பரவலான ஒரு போக்கின் ஒரு பகுதியாகவே அவர்கள் இதைக் கருதுகின்றனர்.
ஆஷார் வார்ஸி தனது மனுவில், வக்ஃப் சொத்துக்கள் "முறையாகவும், திட்டமிட்டும் கொள்ளையடிக்கப்படுகின்றன" என்றும், அரசு அதிகாரிகள் இதனை முழுமையாக அறிந்திருந்தும் கண்டும் காணாமல் இருக்கின்றனர் என்றும் குறிப்பிடுகிறார். மேலும் அந்த மனுவில், 2001 முதல் 2023 வரை, மத்தியப் பிரதேச வக்ஃப் வாரியமும், மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத் துறையும் மாநில அரசுக்கு நிலப் பதிவுகளைச் சரிசெய்யக் கோரி பல கடிதங்களை அனுப்பியிருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு அந்த வேண்டுகோள்களை "புறக்கணித்தது" மட்டுமின்றி, வக்ஃப் சொத்துக்கள் "தொடர்ந்து சட்டவிரோதமாக அபகரிக்கப்படவும் அனுமதித்தது".
"வக்ஃப் நிலப் பதிவுகளுக்கும், அரசாங்கத்தின் வருவாய்ப் பதிவுகளுக்கும் இடையே உள்ள குளறுபடிகள் நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படும் ஒரு பொதுவான சிக்கலாக உள்ளது. இந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, பலர் வக்ஃப் நிலத்தை சட்டவிரோதமாகக் கைப்பற்றிக் கொள்கின்றனர்," என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், வக்ஃப் சட்ட நிபுணருமான மெஹ்மூத் பிராச்சா அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், பாஜக தலைவர்கள் நிர்வாகிகளாக இருந்த ஓர் தொண்டு நிறுவனத்திற்கு போபாலில் அமைந்திருந்த 1.2 ஹெக்டேர் (2.88 ஏக்கர்) வக்பு நிலத்தை ஒப்படைப்பதற்கு மத்தியப் பிரதேச அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. இந்த நிலம் பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் அமைந்திருந்ததுடன், அரசாங்கப் பதிவேடுகளில் அதிகாரப்பூர்வமாக "சவக்காடு" என்று குறிக்கப்பட்டிருந்தது. மேலும், அங்கு சுமார் ஆறு கல்லறைகளும் இருந்தன.
வக்ஃப் வாரியத்தின் தீர்ப்பாயமோ அல்லது எந்த நீதிமன்றமோ இந்த நில அபகரிப்பைத் தடுக்க உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னரே, அந்த தொண்டு நிறுவனம் 2021 இல் அந்த நிலத்தைச் சுற்றி சுவர் எழுப்பியது. அதன் பின்னர், அதே இடத்தில் ஒரு சமுதாயக் கூடம் கட்டுவதற்கான திட்டங்களை அறிவித்தது. உள்ளூர் மக்களின் எதிர்ப்பை அடக்கும் விதமாக, அதிகாரிகள் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததோடு, கணிசமானளவிற்கு காவல்துறையினரை அங்கு ஏவிவிட்டுள்ளனர்.
"வக்ஃப் சட்டத்தின்படி, வக்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை மாவட்ட நிர்வாகமோ அல்லது அரசாங்கமோ அகற்ற வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கமே வக்பு நிலத்தை அபகரித்தால், சட்டத்தை யார் பாதுகாப்பது?" என்று செயற்பாட்டாளர் மசூத் கான் கேள்வி எழுப்பினார்.
மத்தியப் பிரதேசத்தின் போபால், இந்தூர் மற்றும் பிற நகரங்களில் நூற்றுக்கணக்கான வக்பு சொத்துக்கள் அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்டுள்ளன அல்லது செல்வாக்கு மிக்க தனிநபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
போபால் நகரில் அமைந்துள்ள மத்தியப் பிரதேசக் காவல் துறையின் தலைமையகம், நகரத்தின் முக்கியக் காவல் கட்டுப்பாட்டு அறை, போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் உட்பட பல முக்கிய அரசாங்கக் கட்டிடங்கள் வக்ஃப் நிலத்தில் கட்டப்பட்டுள்ளன என்று பெயர் வெளியிட விரும்பாத வக்ஃப் வாரிய உறுப்பினர் ஒருவர் அல் ஜசீரா ஊடகத்திற்குத் தெரிவித்தார். ஒரு காலத்தில் ஏறத்தாழ 140 ஆக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் போபாலில் காணமல் ஆக்கப்பட்டுவிட்டன என்றும் அந்த உறுப்பினர் தெரிவித்தார்.
மேலும், பல சந்தர்ப்பங்களில், வக்ஃப் சொத்துக்களைப் பராமரிப்பதற்காக வக்ஃப் வாரியத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களான "முத்தவல்லிகள்", மோசடி செய்து வக்ஃப் நிலத்தை விற்பது அல்லது அதில் சட்டவிரோதக் கட்டுமானங்களுக்கு அனுமதி அளிப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
டிசம்பர் 2024 இல், இந்தூரில் வக்ஃப் சொத்து ஒன்றின் முன்னாள் பொறுப்பாளர் நாசிர் கான் என்பவர் மத்தியப் பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃப் சொத்தை போலியான வக்ஃப் ஆவணங்கள் மூலம் விற்றுவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. காவல்துறையினர் அவரது இல்லத்தில் சோதனை செய்தபோது, வக்ஃப் வாரியத்தைப் போன்ற போலியான லெட்டர்ஹெட், ரப்பர் முத்திரைகளைக் கைப்பற்றியிருந்தனர்.
வல்லுநர்களின் கருத்தின்படி, பல ஆண்டுகளாக அரசாங்கம் மற்றும் தனிநபர்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு, ஊழல் மற்றும் முறையற்ற நிர்வாகம் ஆகியவை வக்ஃப் சொத்துக்களை எளிதில் அபகரிக்கக்கூடிய சொத்துக்களாக ஆக்கியுள்ளன. அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்களின் மூலம், அரசாங்கம் தற்போது இந்தச் சொத்துக்களை சட்டப்பூர்வமாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைக்கின்றது என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது.
வழக்கறிஞர் மெஹ்மூத் பிராச்சா அல் ஜசீராவிடம் கூறுகையில், "மக்கள் தொகை பெருகி வருவதால், நிலத்தின் விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. வக்ஃப் வாரியங்கள் இந்தியாவின் முக்கிய இடங்களில் ஏராளமான மதிப்புமிக்க நிலங்களை வைத்துள்ளன. இப்போது இந்த நிலம் அனைத்தையும் ஒரே நேரத்தில் அபகரிக்கும் ஒரு வழியாக அரசாங்கம் இப்புதிய திருத்த சட்டத்தை பயன்படுத்துகிறது" என்கிறார் மெஹ்மூத் பிராச்சா.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.aljazeera.com/news/2025/3/25/government-encroachment-of-indias-waqf-lands-a-madhya-pradesh-example