டொனால்ட் டிரம்ப்பின் 25% வாகன வரி விதிப்பால் எந்தெந்த இந்திய நிறுவனங்கள் பாதிப்படையக்கூடும்?

விஜயன் (தமிழில்)

டொனால்ட் டிரம்ப்பின் 25% வாகன வரி விதிப்பால் எந்தெந்த இந்திய நிறுவனங்கள் பாதிப்படையக்கூடும்?

2024ம் நிதியாண்டில், இந்தியா 21.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள வாகன உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்தது. உலகளாவிய அளவில் 1.2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள வாகன உதிரிபாகத் துறையின் ஒரு கணிசமான பகுதியாக இந்த ஏற்றுமதிகள் விளங்கின.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் மீது 25 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, டாடா மோட்டார்ஸ், ஐஷர் மோட்டார்ஸ், சோனா பிஎல்டபிள்யூ, சம்வர்தனா மோதர்சன் போன்ற இந்திய நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனங்கள் தங்களின் வாகன உதிரிபாகங்களை முக்கியமாக ஐரோப்பா, ஜப்பான், தென் கொரியா, மற்றும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்கின்றன. அங்கிருந்துதான் வாகனங்களும் உதிரிபாகங்களும் அமெரிக்கச் சந்தையைச் சென்றடைகின்றன என MoneyControl செய்திக் குறிப்பின் வாயிலாகத் தெரியவருகிறது.

டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜேஎல்ஆர்

டாடா மோட்டார்ஸ் நேரடியாக அமெரிக்காவிற்கு கார்களை ஏற்றுமதி செய்வதில்லை. ஆயினும், அதன் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) அமெரிக்கச் சந்தையில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது.

ஜேஎல்ஆரின் 2024ம் நிதியாண்டு அறிக்கையின்படி, அதன் மொத்த விற்பனையில் 22 சதவீதம் அமெரிக்காவிலிருந்தே பெறப்பட்டது. 2024 ஆம் ஆண்டில், ஜேஎல்ஆர் உலகளவில் சுமார் 4,00,000 வாகனங்களை விற்றது; அமெரிக்கா அதன் முக்கியத்துவம் வாய்ந்த சந்தைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான கார்கள் இங்கிலாந்திலும் பிற நாடுகளிலும் தயாரிக்கப்படுகின்றன, அவை இப்போது 25 சதவீத வரி விதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஐஷர் மோட்டார்ஸ்(Eicher Motors)

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் தயாரிப்பாளரான ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனமும் இந்த வரிவிதிப்பின் தாக்கத்தை எதிர்கொள்ளக்கூடும். அதன் ராயல் என்பீல்டு 650சிசி மாடல்களுக்கு அமெரிக்கா ஒரு முக்கியமான சந்தையாகும்; இந்த புதிய வரியால் அவை பாதிப்புக்குள்ளாகக்கூடும்.

சம்வர்தனா மோதர்சன்(Samvardhana Motherson)

சம்வர்தனா மோதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட், இந்தியாவின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்; இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கணிசமான அளவில் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம், டெஸ்லா மற்றும் ஃபோர்டு உள்ளிட்ட பெரிய அமெரிக்கக் கார் தயாரிப்பாளர்களுக்கு உதிரிபாகங்களை வழங்குகிறது. எனினும், வெறும் ஏற்றுமதியை நம்பியிராமல், மோதர்சன் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்நாட்டு உற்பத்தி நிலையங்களையும் கொண்டுள்ளதால், இறக்குமதி வரியின் தாக்கத்திலிருந்து ஒப்பீட்ளவிலான பாதுகாப்பை பெற்றுள்ளது எனலாம்.

சோனா பிஎல்டபிள்யூ (சோனா காம்ஸ்டார்- Sona Comstar)

காரின் சக்கரங்கள் திறம்பட இயங்குவதற்கு பயன்படுத்தப்படும் டிஃபரன்ஷியல் கியர்கள்(Differential gears), கார் எஞ்சீனை துவக்கவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்டார்டர் மோட்டார்கள்(Starter motors) போன்ற அமைப்புகளையும் உதிரிபாகங்களையும் சோனா காம்ஸ்டார் நிறுவனம்  உற்பத்தி செய்கிறது. அதன் வருவாயில் ஏறத்தாழ 66 சதவீதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்தே கிடைக்கிறது.

தற்போது ஏற்பட்டுள்ள இடரைக் குறைக்கும் பொருட்டு, இந்நிறுவனம் சீனா, ஜப்பான், மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்குத் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அதன் மொத்த வருவாயில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இந்தச் சந்தைகளிலிருந்து ஈட்டுவதே அதன் இலக்காக உள்ளது.

பிற இந்திய வாகன உதிரிபாக நிறுவனங்கள்

பாரத் ஃபோர்ஜ், சன்செரா இன்ஜினியரிங் லிமிடெட்(Sansera Engineering Ltd), சுப்ராஜித் இன்ஜினியரிங்(Suprajit Engineering), மற்றும் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்(Balkrishna Industries) ஆகிய நிறுவனங்களும் ஏற்றுமதியைச் சார்ந்துள்ள பிற முக்கிய உதிரிபாக உற்பத்தியாளர்களாக விளங்குகின்றன.

உலகளாவிய வாகன உதிரிபாகச் சந்தையின் மொத்த மதிப்பு 1.2 டிரில்லியன் டாலராக இருக்கும் நிலையில், 2024ம் நிதியாண்டில், இந்தியா 21.2 பில்லியன் டாலர் மதிப்பிலான வாகன உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்தது.  

அதேசமயம், உலகிலேயே வாகன உதிரிபாகங்களை மிக அதிகமாகக் கொள்முதல் செய்யும் நாடுகளாக அமெரிக்காவும் ஐரோப்பாவும் இருந்தாலும், இத்துறையின் மொத்த உலகளாவிய வர்த்தகத்தில் அவற்றிற்கான கொள்முதல் பங்கு வெறும் 4.5% அளவே இருந்தன என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.hindustantimes.com/india-news/which-indian-companies-will-be-affected-by-donald-trumps-25-auto-tariff-know-all-details-101743046192268.html

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு